”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
நுகர்வு வெறியை வளர்க்கும் வகுப்புவாதம்

இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மனிதர்கள் அனைவரையும் தனியர்களாக மாற்றி வருகிறது. தனது நுகர்வு என்ற ஒற்றை கலாச்சாரத்திற்கு  தேவையான சந்தை மனிதர்களை உருவாக்குகிறது. நுகர்வு என்பதை தாண்டி நுகர்வு வெறியை ஊக்குவுக்கிறது. இதற்கு மத்தியதர மற்றும் உயர்தர வர்க்க மக்கள் பலிகடாவாகி வருகிறார்கள்.


இந்த நுகர்விற்கு வளர்ச்சி என்று பெயர் சூட்டி. வளர்ச்சிக்கான அடித்தளத்தை யாருக்கு அமைத்து கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் பெரும் பகுதி நடுத்தர மற்றும் உயர்தர வர்க்கத்தினரையே சார்ந்து ஒரு முக்கோண படிநிலையை  உருவாக்குகிறார்கள். இந்த வளர்ச்சி என்ற சொல்லாடலின் மீது ஒரு கருத்தியல் கட்டியமைக்கப்படுகிறது.  இந்த கருத்தியலை நோக்கி பொதுவெளியில் ஈர்ப்பை உருவாக்க ஒரு கலாச்சாரம் தேவைப்படுகிறது. ஒரு துருவத்தை நோக்கிய சிந்தனைகளின் தொகுப்பாக மாற்றப் படுவதால் கேட்கும் நிலையும், விமர்சன நிலையும், எதிர்வினையாற்றும் நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக  மந்தமாக்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான தடையாகவும் இந்த கருத்தியலை நிலை நிறுத்தும் பிற்போக்கான பண்பாட்டையும் வடிவமைக்கிறது.

ஏகாதிபத்திய உலகமயமாக்கல் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு நாடகங்களை நடத்துகிறது. இதனை உதாரணத்தின் மூலம் பார்க்க முடியும். மிக சமீபத்திய உதாரணம் சிரியா. 2001 செப் 11 அமெரிக்காவின் இரட்டை கோபுரம் உள்ளிட்டு அல்கொய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதை நாமறிவோம். இந்த அல்கொய்தாவும், பின்லாடனும் யாருடைய வார்ப்புகள் என்பதை உலகறியும்.  அல்கொய்தாவை அமெரிக்காவே உருவாக்கி ஊட்டி வளர்த்து பல நாடுகளில் உள்நாட்டு கலகத்தை உருவாக்கிட பயன்படுத்தி தனது ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் போல் அதே அல்கொய்தாவின் பின்லாடன் அமெரிக்காவை தாக்கிய போது அலறியது. அல்கொய்தாவை அழிக்கிறேன் என ஆசிய நாடான ஆப்கானை நாசப்படுத்தி தனது மேற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்த துருப்பு சீட்டை பெற்றது.  அல்கொய்தாவை தேடுகிறேன் என பல நாடுகளை விட்டுவைக்கவில்லை.

இதன் பின்னணில் ஒரு கருத்துப்பிரச்சாரத்தை தனது சக்தி வாய்ந்த ஊடகங்கள் மூலம் பயங்கரவாத்திற்கு எதிரான போர், தீயசக்திகளுக்கு எதிரான போர், இஸ்லாமிய பயங்கரவாத்திற்கு எதிரான போர் என தீய சக்தி நாடுகள் என்று பட்டியலிட்டு அதில் சோசலிச நாடுகளையும் சேர்த்து தனது மிரட்டலை தொடங்கி தொடர்ந்து மிரட்டி வருகிறது.  இப்படி கடந்த பத்தாண்டுகளாக அல்கொய்தாவை ஒழிப்பேன் என்று கிளம்பிய அமெரிக்கா, சிரியாவில் அரசுக்கு எதிரான கலக கும்பலுக்கு  ஆயுத உதவிகளை முழுமையாக செய்து வருகிறது. அந்த கலக கும்பலின் பெயர் அல்கொய்தா.. ஒரு புறம் அழிப்பேன் என ஆப்கானிலும், சிரியாவில் ஆதரவளிப்பது என இரட்டை நிலையை அல்கொய்தா விசயத்தில் எடுப்பதும் மேலாதிக்கம் சார்ந்தே,.கேட்டால் ஜனநாயகத்தை பாதுகாக்க என்று கதை விடுகிறது,. சிரியாவை மிரட்டுவதன் மூலம் ஈரானை பணிய வைக்க முடியும். 

இதன் மூலம் ஒரு புறம் மேலாதிக்கம் செய்திட ஆப்கானில் அழிப்பும், சிரியாவில் உதவியும்  என்ற இரட்டை குணத்தை கொண்டுள்ள ஏகாதிபத்தியத்தின் கலாச்சாரம் தெளிவாக வெளிப்படுகிறது.  மேற்கண்ட பிரச்சனையில் அது முன்வைக்கும் கருத்தியல் பயங்கரவாத எதிர்ப்பு ஜனநாயகத்தை பாதுகாப்பது என தனது ஆக்டோப° ஊடகங்கள் மூலம் கிராம்சி சொன்ன குடிமக்கள் சமூகத்தில் பொதுபுத்தியை உருவாக்குகிறது. சிறுபான்மை பயங்கரவாதத்தை  எதிர்க்க பெரும் பகுதி மக்களின் ஒப்புதல் தேவை.. அதற்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு தேவை என்பதை அடையாளங்களுக்குள் நின்று கத்துகிறது.

மற்றொரு  உதாரணத்தை பார்க்க முடியும். ஜார்ஜ்புஷ் காலத்தில் துவங்கி ஈராக்கில் அணு மற்றும் ரசாயன ஆயுதங்கள் உள்ளது அதற்கெதிரான யுத்த முஸ்தீப்பை துவங்கியது. ஷியா. சன்னி பிரிவினரிடையே இருந்த மோதலை பயன்படுத்தி சதாம் உசேன் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக இருக்கிறார் என்று சொல்லி அதற்கு எதிரான பெரும்பான்மை கருத்தியலை உருவாக்கியதும், அவர் ஏராளமான பேரை கொன்று குவித்தார் என்ற காரணத்தையும் சொல்லி அவரைஆட்சியில் இருந்து மட்டுமல்ல உயிரையும் பறித்தது அமெரிக்கா.. அதற்கு பயன்படுத்தியது பெரும்பான்மையான கருத்தியலை அவருக்கு எதிராக  அமெரிக்கா உருவாக்கியது தான்.  

இதன் விளைவு ஈராகிற்கு எதிரான அமெரிக்க நேட்டோ படைகளின் தாக்குதல் துவங்கும் சமயம் தொலைகாட்சிகளில் எல்லாம் யுத்தம் குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டபோது  யுத்த எதிர்ப்புணர்வு உருவாவதற்கு பதில் தொலைகாட்சியை பார்த்த அப்பாவி மக்கள் கூட எப்போது யுத்தம் துவங்கும் என்று கேட்கும் நிலைக்கு அவர்களின் பொதுசிந்தனையில் நச்சு விதைகள் ஏற்றப்பட்டது. யுத்தவெறிக்கு எதிரான கருத்தியலை கொண்டு இருந்தாலும் பொதுவெளியில் அதற்கு எதிரான நேரடி போராட்டங்களில் பங்கேற்பதில் உள்ள இடைவெளிதான் இத்தகைய ஏகாதிபத்திய நச்சுவிதைகள் துவப்படுவதற்கான புள்ளியின் துவக்கமாக அமைகிறது.

இதன் தொடர்ச்சிதான் இன்றைய ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் உலகமயமாக்கல் கொள்கைக்கு தடையாக உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை எல்லாம் கூறுபோட பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கருத்தியலையும், நிறம், இனம், மொழி, எல்லை போன்ற அடையாளங்களையும் பயன்படுத்து கிறது. 1990 களுக்கு பின் யுகோஸ்லோவாக்கியா, செக்கோஸ்லோவாக்கியா துவங்கி இன்று வரை ஏராளமான தேச பிரிவினைகளுக்கு இன அடிப்படையிலான கருத்தியலை அது பயன்படுத்தி தனது பொம்மை அரசுகளை அங்கே  ஆட்சிகட்டிலில்  அமர்த்தியுள்ளது.


இன்றைய சூழலில் நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்களிடம் பரவும் கருத்தியல் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகாரணமாக வேகமாக பரவும் கருத்தியலாக உள்ளது. நவீன அறிவியல் வளர்ச்சியில்  சாதனங்களின் முகவுரையை எழுதுபவர்களாக இந்த உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே முன்னணியல் உடனுக்குடன் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொண்டு அதன் தாக்கத்தை உள்வாங்குகின்றனர். இதனை உலகமயம் சாமார்த்தியமாக தனது சந்தைக்கு பயன்படுத்துகிறது. 

எனவே நுகர்வுக்கான மனிதர்களை உருவாக்க முயற்சி செய்கிறது. இதற்கு எதிரான மாற்று பண்பாட்டை உடைய மனிதர்களை, அமைப்புகளை, கட்சிகளை, அரசுகளை, நிறுவனங்களை முற்றாக அது நிராகரிக்கிறது. ( உதாரணம் வாழ்வியலின் அன்றாட தேவைகள் குறித்த விசயத்தில் கொள்கை முடிவு எடுப்பதில் உறுதியாக இருந்ததால் 2009 நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிகளை அதிக எண்ணிக்கையில் வரவிடாமல் செய்ததில் ஏகாதிபத்தியம், ஏகபோக, நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு பெரும் பங்கு இருந்ததல்லவா? ) சமூகத்தின் பொது சிந்தனையில் தனக்கான கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இது குறித்து கே.என். பணிக்கர் கூறும் போது,


  • தனிநபருக்கும் வெளி உலகத்திற்கும் இடையே உள்ள மாறிக்bகொண்டிருக்கும் உறவு,.
  • சந்தைப் பொருளதாரத்தின் தாக்கமும் அதனுடன் தொடர்பு கொண்ட நுகர்வு கலாச்சாரத்தின் பெருக்கம்
  • மதம் சார்ந்த உணர்வுகள் வகுப்புவாதத்தின் வளர்ச்சி


மேற்கண்ட அம்சங்கள் சமூக எதார்த்திற்கு விரோதமான கண்ணோட்டத்தை உருவாக்குகிறது. இது பொதுவெளியில் தனக்கான பங்களிப்பில் இடைவெளியை உருவாக்குகிறது. இதனால் தனிநபருக்கு உருவாகும் நெருக்கடியை தீர்ப்பதற்கான தேடலில் பொதுவெளியில் இருந்து தனிமைப்படும் நிலை கூடுதாகி வருகிறது. இந்த புள்ளியைதான் கலாச்சார காவலர்கள் என்று தங்களை சொல்லி கொள்ளும் வகுப்புவாத சக்திகள் பயன்படுத்திக்கொள்கிறது. 

இது ஏகாதிபத்தியத்தின் தேவைக்கான தாசர்களாகவும் செயல்படுகிறது. இது தான் இன்று நரேந்திர மோடியை கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆதரிப்பதன் மர்மம் ஆகும். இது இன்று நேற்றல்ல,.. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் கர்ணகொடூரமாக கொலைவெறியை குறிப்பிட்ட இனத்தின் மீது, உழைக்கும் மக்களின் மீதும் நடத்தினானே ஹிட்லர், முசோலினி இவர்களை முன்னிலைப்படுத்தி வளர்த்திவிட்டதும் ஜெர்மன், இத்தாலிய பெரும் முதலாளிகளே.

தங்களின் லாப நோக்கில் நின்று இந்த பாசிச வெறியர்களை வளர்த்ததன் விளைவுக்கு உலகம் 5 கோடி உயிர்களை பலிகொடுக்க வேண்டி வந்தது. இன்று இதே தன்மையில் இந்தியாவில் கார்ப்ரேட் நிறுவனங்களும், வகுப்புவாத சக்திகளும் மோடி என்ற ஒற்றை நபரை முன்னிறுத்துகிறது. இதற்கு பின்புலத்தில் மிகப்பெரும் சகுனியின் சதிராட்டம் உள்ளது என்பதை கண்டறிந்து கொள்ள வேண்டியுள்ளது.  

1 comment:

  1. TITAN ODDS, COCONUTS: A detailed recipe
    TITAN ODDS, COCONUTS: A detailed mens titanium braclets recipe. TITAN ODDS, COCONUTS: A detailed recipe. TITAN ODDS, titanium flat iron COCONUTS: A nano titanium flat iron detailed recipe. TITAN toaks titanium ODDS, COCONUTS: A detailed recipe. TITAN remmington titanium ODDS, COCONUTS: A

    ReplyDelete