”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சேதுவை அகழ்ந்து கப்பல் விடுவோம்!



தமிழகத்தின் 160 ஆண்டுகால கனவு திட்டமாக உள்ள சேது கால்வாய்திட் டத்தை உடன் அமலாக்கிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் கால் நுாற்றாண்டுகளாய் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள் ளோம். தென் மாவட்டங்களில் போதிய தொழிற்சாலைகள் இல்லை, இயற்கை ஏமாற்றுவதால் விவசாயம் பொய்த்துக் கொண்டே இருக்கிறது, வேலைவாய்ப்பு கள் அருகிக் கொண்டே வருகிறது, வாழ வழியில்லாமல் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், தேசங்களுக்கும் சென்று கொண்டிருப் போர் அரை நுாற்றாண்டுகளாய் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப் பட்டால் தென்மாவட்டங்களில் உள்ள கனிம மற்றும் நில வளங்களை முழுமை யாக பயன்படுத்தி புதிய தொழிற்சாலை களும், அதன் சார்பு தொழில்களும், ஏற் கனவே உள்ள பாரம்பரிய தொழில்களான பஞ்சாலை, பவர்லுாம், தீப்பெட்டி, பட்டாசு உள்ளிட்டு வர்த்தகத்திற்கு முழுமையாக பயன்படும். சேது கால்வாய்த்திட்டத்தை உடன் அமலாக்கிடுவது தென் தமிழகத் தின் தொழில்வளர்ச்சி, பாரம்பரிய தொழில் களின் வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப் புகளை உருவாக்கிடவும் உதவிடும். இதன் மூலம் ஏறத்தாழ 780 கிலோமீட்டர்( 424 கடல் மைல்) துாரமும், 30 மணி நேரமும் மிச்சமாகும். துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 434 கி.மீ, விசாகப்பட் டினத்திற்கு 304 கி.மீ, கொல்கத்தாவிற்கு 265 கி.மீ, சிட்டகாங் 220 கி.மீ, இரங்கூன் 119 கி.மீ, சிங்கப்பூர் 42 கி.மீ என பயணத் துாரங்கள் மிச்சமாகும்.

7517 கிலோமீட்டர் நீளமும், 12 பெரிய மற் றும் 185 சிறிய துறைமுகங்களை கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அற்புதமான கடற்கரை வளத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மேற்கு கடற்கரையை போல் கிழக்கு கடற்கரை யையொட்டிய பகுதி ஆழம் அதிகமில்லை.பாம்பனுக்கும், தலைமன்னாருக்கும் இடையே ஆழம் குறைவாக உள்ளதால் மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இருந்து கடல் வழியில் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கு பெரிய அள விலான கப்பல்கள் வர வேண்டுமென்றால் கூட இலங்கையின் கொழும்பு துறை முகத்தை சுற்றியே வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்திய நாட்டின் கடல் வழி வர்த்தகத்தில் நடைபெறும் மொத்த மதிப்பில் 70 சதவீதம் கொழும்பு துறை முகம் வாயிலாக நடக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, இறக்குமதி துறையில் துாத்துக்குடி துறைமுகம் மூன் றாவது இடத்தை வகிக்கிறது. ஆனால் இங்கு அதிகமான எடையுள்ள ( 50000, 70000 டன்) கப்பல்கள் வந்தால் தரைதட் டிடும் நிலை உள்ளதால் பெரிய கப்பல்கள் கூட குறைவான எடையளவோடே வரக் கூடிய சூழல் உள்ளது. துறைமுகத்தை விரிவு படுத்தும் பணி மட்டுமே முடிந்துள்ளது.

துாத்துக்குடி துறைமுகம் உருவாக்கப் பட்ட பிறகே துாத்துக்குடியை சுற்றி பல புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட் டன. குறிப்பாக ஸ்பிக், அனல் மின் நிலை யம், கனநீர் தொழிற்சாலை, டாக் உள் ளிட்டு நுாற்றுக்கணக்கான கடல்வழி ஏற்றுமதி நிறுவனங்கள் உருவாயின. இந் தியாவிற்குள்ளேயே உள்நாட்டு வர்த்தகத் திற்கு குறிப்பாக நிலக்கரி, சிமெண்ட், உரங் கள், கடல் உணவு வகைகள், துணிகள், எந்திரங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல சாலைப்போக்குவரத்து நீர்வழி போக்குவரத்தைவிட கூடுதலாக உள்ளது. சிறு துறைமுகங்களாக உள்ள முட்டம், இராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக் கால், கடலுார், பாண்டிசேரி ஆகியவை வளர்ச்சியும். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட இரப்பர் தொழில், இராமேஸ்வரத் தின் மீன்பிடி தொழில், சிவகங்கை மாவட் டத்தின் கிராபைட் தொழில், திருநெல் வேலி, விருதுநகர் மாவட்டத்தின் வர்த் தகங்கள் கூடுதலான வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் பெறும். கடல் ஆழப்படுத்தப் படுவதால் மீன்வளமும் அதிகரிக்கும். இதனால் மீன் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

இந்த பகுதியில் தான் இயற்கையி லேயே அமைந்துள்ள மணல்திட்டுகள் ஏராளமாக உள்ளன.இதனைதான் ஆதம் பாலம் என்கின்றனர். சில நேரங்களில் கடல் மட்டத்தின் உயர்வு தாழ்வை பொறுத்து இது தரைப்பகுதியாக உயர் வதும், கடலில் அமிழ்ந்து போவதும் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற மணல் திட்டுக்கள் உலகம் முழு வதும் ஏராளமான இடங்களில் உள்ளன.

இந்த மணல் திட்டுக்களை அகற்றி விட்டு பாம்பனுக்கும், தலைமன்னாருக் கும் இடையே கால்வாய் தோண்டினால் அதில் கப்பல் போக்குவரத்தை நடத்திட முடியும் என 1860ம் ஆண்டு இந்திய கடற்படையின் கமாண்டராக இருந்த ஏ.டி. டெய்லர் திட்டத்திற்கான பரிந்து ரையை வழங்கினார்.அதற்கு பின் 1922ம் ஆண்டு வரை 7 குழுக்களும், சுதந்திர இந்தியாவில் 7க்கும் மேற்பட்ட குழுக் களும் பரிந்துரைகளை வழங்கி இந்த திட் டம் நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்தின. 1955ம் ஆண்டு ஜவகர்லால் நேரு, இராமசாமி முதலியார் தலைமையில் ஒரு குழு அமைத்து அன்று 998 லட்சம் ரூபாய்க் கான ( சுமார் 10 கோடி ரூபாய்) திட்ட மதிப் பீட்டை சமர்ப்பித்தது. அதன் பின்பு 1983ம் ஆண்டு இந்திராகாந்தி, லெட்சுமி நாரா யணன் தலைமையில் ஒரு குழு நியமித்து அக்குழு ரூ.282 கோடி மதிப்பீட்டில் திட் டத்திற்கான பரிந்துரையை வழங்கியது.

தமிழகத்தில் இருந்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் போன்ற இளைஞர் அமைப்புகள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்தின் விளைவாக 2000ம் ஆண்டு நவம்பர் 28 அன்று தலைநகர் தில்லியில் நாடாளுமன்றத்தின் முன்பு தமிழக இளைஞர்கள் ஆயிரக்கணக்கா னோரை திரட்டி பெரும் திரள் ஆர்ப்பாட் டம் நடத்தி அன்றைய தினம் பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் மனு கொடுத்து இத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டிய தன் அவசியம் குறித்து வற்புறுத்தப்பட் டது. தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத் தில் இடதுசாரிகட்சி நாடாளுமன்ற உறுப் பினர்களின் வற்புறுத்தலுக்குபின் 2002 ம் ஆண்டு வாஜ்பாய் அரசு இத்திட்டத்திற் கான ஒப்புதலை அளித்தது.அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெய லலிதா தலைமையிலான அரசு இதற் கான எந்த ஆட்சேபணையும் தெரிவிக் கவோ, எதிர்க்கவோ இல்லை. இந்து மத அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவிக்க வில்லை.

இதன் பின்னணியில் 2004ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு-1, இடதுசாரி களின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்த போது இந்த திட்டத்தை அமலாக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக திட்டத்திற்கான அனைத்து வரைவுகளும் இறுதிப்படுத் தப்பட்டு 07.09.2004 முதல் 02.02.2005 வரை தமிழக கடற்கரையோர மாவட்டங் களான கடலுார், நாகப்பட்டினம், திரு வாரூர், இராமநாதபுரம், துாத்துக்குடி, கன் னியாகுமரி ஆகியவற்றில் பொதுமக் களை நேரில் சந்தித்து கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களது சந்தேகங்களுக்கு உரிய தெளிவான விளக்கங்களை அளித்த பின்னணியில் எந்தவித எதிர்ப்பில்லாமல் அனைவ ராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இறுதியாக தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு மையம் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, மீன்வள பாதிப்பு, பவளப்பாறை பாதிப்பு குறித்து முன்னுக்கு வந்த அனைத்து கேள்விகளுக்கும் உரிய ஆய்வை நடத்தி அது குறித்த அறிக்கையை அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் அளித்தது. மேலும் இந்த திட்டத்தில் பொருளாதார பலன், 50000 டன் எடையுள்ள கப்பல்கள் செல்ல ஏற்பாடு என்ன என்பது குறித் தெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கும் சேதுகால்வாய்த்திட்ட நிறு வனம் உரிய பதிலை அளித்தது

2005ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி மன்மோகன் சிங்கால் ரூ.2427 கோடி செலவில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி மதுரையில் துவக்கி வைக்கப்பட்டது. 60 சதவீதத்திற்கும் மேலாக மணல் துார் வாரும் பணிகள் முடிந்தும், மொத்த திட் டத்தில் 80 சதவீதமான பணிகள் நிறைவு பெற்று முடிந்தது.

இதன் பின்னணில் சேது கால்வாய்த் திட்ட பணிகளை துரிதப்படுத்த வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சார்பில் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர், மதுரை, துாத்துக்குடி ஆகிய மையங்களில் இருந்து நுாற்றுக் கணக்கான டிஒய்எப்ஐ தொண்டர்கள் சைக்கிளில் ஆயிரக்கணக்கான கிராம மக்களை, நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்து, இராமேஸ்வரத்தில் பொதுக்கூட் டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. மீன்வளம் பாதிக்கப்படும் என மீனவர்கள் அச்சப்பட்டதாக சொல்லப்பட்ட நேரத் தில் பல்வேறு மீனவர் அமைப்புகளும் இந்த இயக்கத்தை ஆதரித்தன. அன் றைய தினம் மதத்தின் பெயரால் வளர்ச்சி திட்டத்தை தடுத்து நிறுத்தும் மத அமைப்புகளை இராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என டிஒய்எப்ஐ நடத்திய இயக்கத்தோடு ஒன்றுபட்டு இராமேஸ்வரம் மக்கள் உடன் நின்றது வர லாறாகும்.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 தேதி முதல் 29ம் தேதிவரை கோவை, கன்னியாகுமரி, இராமேஸ்வரம் ஆகிய மூன்று முனைகளில் இருந்து சைக்கி ளில் நுாற்றுக்கும் மேற்பட்டடோர் 3300 கிலோ மீட்டர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் கடந்து சென்னை யில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் களை திரட்டி சேது திட்டத்தை நிறை வேற்றக்கோரி பிரம்மாண்ட பொதுக்கூட் டமும் நடத்தி அன்றைய ஆட்சியாளர் களிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2009 பிப்ரவரியில் தலைநகர் தில்லியில் தமிழக இளைஞர் கள் 500க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரம் கொட்டும் மழையில் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டமும்.அதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் டிஒய்எப்ஐ சார்பில் மகஜர் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கான நிதியை முழுமை யாக ஒதுக்கி அமலாக்க உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த சூழலில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆதம் பாலம் குறித்து புகைப்படங்களை 2002ல் வெளி யிட்டதை 2008ல் அமெரிக்காவில் உள்ள இந்து மத அமைப்புகள் இணையதள மான இந்தோலிங் கடலுக்கடியில் உள்ள மணல் திட்டு இராமர் கட்டிய பாலம் என பொய் செய்தியை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு ஊடகங் கள் இந்த செய்திகளை வெளியிட்டு புதிய சர்ச்சைகளை கிளப்பிவிட்டன. 2002ல் அமெரிக்க நாசா நிறுவன அதிகாரிகள் இதனை மறுத்து இராமேஸ்வரப் பகுதி யில் எடுக்கப்பட்ட புகைப்படம் உலகின் இதர பகுதியில் உள்ள மணல்திட்டை போன்றதே என தெளிவுபடுத்திவிட்டது. இதன்பின்னணியில் தமிழகத்தில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா போன்றோர் உச்சநீதிமன்றத்தில் இது ராமர் கட்டிய பாலம் என கால்வாய்திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும் என வழக்கு தொடுத்து, தமிழகத்தின் தொழில் வளர்ச் சியிலும், இளைஞர்களின் வேலைவாய்ப் பிலும் மண்ணை அள்ளிப்போட்டனர்.

1996,2001,2006 தேர்தல்களில் எல் லாம் சேது கால்வாய்த்திட்டத்தை அம லாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து பேசிய அதிமுக, பகுத்தறிவு தந்தை பெரி யார் பிறந்த மண்ணில் அவர் உருவாக்கிய திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா போன்றோர் இன்று ’நம்பிக்கை’ என்ற பெய ரால் உண்மைக்கு புறம்பாக, இயற்கை யில் உருவான மணல் திட்டை இராமர் கட்டிய பாலம், அதை நினைவுசின்னமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைப் பது தமிழக மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

மேற்படி திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும், தென் தமிழகத்தின் பல்வேறு தருணங்களில் நடைபெற்ற சாதிக் கல வரங்களில் இளைஞர்கள் பங்கேற்றது குறித்தும் கவலையோடு சுட்டிக்காட்டி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை யும், தொழில் வளர்ச்சியையும் உறுதிப் படுத்தினால் சாதிக் கலவரங்களை கட் டுக்குள் கொண்டு வர முடியும் என நீதிபதி மோகன் தலைமையில் அமைக் கப்பட்ட கமிஷன் வற்புறுத்தியது நடை முறைப்படுத்தப்பட வேண்டுமானால் சேது கால்வாய்த்திட்டத்தை உறுதியாக அமலாக்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சேது கால்வாய்திட்டத்தை நிறை வேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொட்டும் மழையில் தில்லியில் நடைபெற்ற 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி பேசிய சீத்தா ராம் யெச்சூரி, “மூடநம்பிக்கைகள், மத வெறி போன்றவற்றை எதிர்த்துப் போராடு வதற்கான ஒரு ஊடகமாக கலாச்சார மாக திகழ வேண்டும். இலக்கிய நயத்தை ரசித்துப் போற்றுகிற அதே நேரத்தில் புரா ணக் கற்பனையையும் வரலாற்று உண் மையையும் பாகுபடுத்தி பார்க்க வேண் டும்.இன்றைய இலங்கை, இந்தியா உட்பட ஒரேநிலப்பகுதியாக இருந்த கால கட்டம் உண்டு. கடல் மட்டம் உயர்ந்த தைத் தொடர்ந்துதான் இலங்கை தனித் தீவானது. அதற்கு இடையே ஒரு பாலம் இருந்ததாகச் சொல்வது இனிய புராணக் கற்பனையே. அதை வரலாற்று உண்மை யாக கூறி சேது கால்வாய்திட்டம் போன் றவற்றை முடக்க முயல்வார்களானால் அதை எதிர்த்துப் போராட வேண்டும்’’ என்றார். டிஒய்எப்ஐ வரும் ஏப்ரல் 16ம் தேதி துாத்துக்குடியில் தமிழகத்தின் கனவுத்திட்டமான சேது கால்வாய்த் திட்டத்தை விரைந்து முடிக்க நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி தென்மண் டல இளைஞர்களின் பேரணி, பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. அணி திரண்டு வாருங்கள்... தேசம் காக்க...

(கட்டுரையாளர், 
(செ. முத்துக்கண்ணன்) மாநிலத்தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்)

வேலை இனியும் கனவல்ல, உரிமை

வேலை அனைவருக்கும் சாத்தியமா? பன்னாட்டு நிறுவன்ங்கள் இந்திய அரசுக்கு கட்டுப்படுமா? கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி ஓடுவதன் பின்னணி என்ன? உழைப்புசந்தையில் பெண்களின் நிலை என்ன ? புதிய தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த அரசின் பார்வை என்ன? உரிமைகளோடு கூடிய வேலைவாய்ப்பு எப்போது என வேலை குறித்தான கேள்விகளும், வேலை என்றால் என்ன என்ற அடிப்படையான கேள்வியும் பதிலும் கேட்க வேண்டிய தருணமாக இந்த தருணம் அமைந்துள்ளது.

தற்போதை உலகமயமாக்கலின் தீவிர கட்டத்தில் 15 வயது துவங்கி 35 வயது வரை உள்ளவர்களே திறமையான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனுடையவர்கள் என்ற கோட்பாட்டை முன்வைத்து அதில் உண்மை இருந்தாலும் உழைப்புக்கான காலத்தை நிர்ணயம் செய்யாமல் காலவரையற்ற உழைப்பு என்கிற கோட்பாடு முன்வைக்கப்பட்டு பணியமர்வு குறித்த அனைத்து விதிகளும் தகர்க்கப்படுகிறது. எனவே வேலை குறித்தான நமது பார்வையும் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

வேலை என்பது குறித்து பல்வேறு சொல்லாடல்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டான் அடிமை சமூக அமைப்பு முறைக்கு பின் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு முறையான மன்னராட்சி காலம் முதல் இன்றைய முதலாளித்துவ அமைப்புமுறை வரை தொடர்ந்து வேலை என்பது ஆளும் வர்க்கத்தின் வளர்ச்சிக்கான, மாறுதல்களுக்கான உழைப்பாக மட்டுமே பாவித்து வரப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற அமர்த்யசென் அவர்கள் வேலை என்பது வருமானத்தையும், உற்பத்தியையும், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறார். ஐஎல்ஓ கௌரவான வேலை என வரையறுக்கிறது.

இவை தான் வேலை என்பதற்கான அடையாளம் என்றால் ஒரு தனிநபரின் வருமானம், சமூகத்திற்கான உற்பத்தி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கௌரவமான வேலையாகவும், தனிமனித மற்றும் சமூக வளர்ச்சியை மையமாக கொண்டும் வழங்கப்பட வேண்டும், அது தான் உண்மையான பணியமர்வு தரத்தோடு கூடிய உரிமைகளை உள்ளடக்கிய வேலையாக இருக்கும்.

இன்றைக்கும் இப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் என்றால் அது அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் அணிதிரட்ட தொழில்களில் பணிபுரிபவர்கள் ஆகியோரை மட்டுமே குறிக்கும் சொல்லாக (நிரந்தர தொழிலாளர்கள்) உள்ளது. அமைப்பு சாரா தொழில்களிலும், சுய தொழில்களிலும், விவசாயத்துறையிலும் நிரந்தர தன்மை இருக்கிறதா? என்றால் அது அரசின் கொள்கை சார்ந்தே உள்ளது. எனவேதான் வேலைக்கான முழக்கம் என்பது தனிநபர் வாழ்வதற்கான முழக்கமாக மட்டும் பார்க்கப்படாமல் அது ஒட்டு மொத்த சமூகத்தின் உற்பத்தி, சமமான பகிர்வு, வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அனைத்து தரப்பினாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் வேலை வேண்டுமென கோரிக்கை வைத்தால் அனைவருக்கும் வேலை சாத்தியம் தானா? என என்ற எதிர்கேள்வி கேட்கப்படுகிறது. கேள்வி கேட்பவர்கள் பெரும் பகுதி அரசுத்துறை வேலைவாய்ப்பை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு கேட்கிறார்கள். ஒரு மக்கள் நல அரசு அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்குவது என்றால் மக்கள் வாழுமிடங்களில் அவர்களின் தேவைக்கும், உழைப்புக்கும் ஏற்றாற் போல் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியா போன்று பெரும்பகுதி விவசாயத்தை சார்ந்துள்ள நாட்டில் கிராமப்புறத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உப தொழில்களை உருவாக்காமல், மேம்படுத்தாமல் எப்படிவேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அப்படியென்றால் கிராமப்புறத்தில் விவசாயம் மட்டுமே செய்ய முடியும் வேறு தொழிற்சாலைகள் வரக்கூடாதா? என்றால் நிலத்தில் கிடைக்கும் கனிம, நீர்ம, வாயு போன்ற இயற்கை வளங்களை விவசாயத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய தொழிற்சாலைகளை எவ்வாறு உருவாக்குவது என்பது அரசின் வேலையாகவும், கொள்கையாகவும் இருக்க வேண்டும்.

இதில்தான் கருத்து வேறுபாடு அரசுக்கும், அனைவருக்கும் வேலைவாய்ப்பை தர முடியுமா? என கேட்பவர்களுக்கும், அனைவருக்கும் வேலை வேண்டும் என கேட்பவர்களுக்கும் இடையே தர்க்கமாக, கோஷமாக, போராட்டமாக இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறது. நீராவியை வைத்து இயந்திரங்களை இயக்கி இயற்கை வளங்களை மனிதன் தனது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்து மூலதனத்தை முதலீடாக்கி உற்பத்தியில் ஈடுபட்ட முதலீட்டார்களின் தேவைக்கேற்பவே வேலைவாய்ப்பு என்பது உருவாக்கப்பட்டது. மூலதனத்தின் லாபத்திற்கேற்றவாறு உற்பத்தியும், பகிர்ந்தளித்தலும், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டது. ஆளும் அரசுகளும் இவர்களின் நலன்சார்ந்த அரசுகளாக கட்டமைக்கப்பட்டது. எனவே மூலதன முதலீட்டார்களின் லாபவெறிக்கேற்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. வளர்ந்து வரும் மக்கள் தொகையின் விகிதத்திற்கேற்ப உற்பத்தியும், அளிப்பும் உறுதி செய்யப்படுவதற்கு பதில் லாபத்தை அடிப்படையாக கொண்டு இருப்பு மற்றும் அளிப்பு மேலும் லாபத்தை நோக்கி இவர்கள் நடைபோட ஆரம்பித்ததால் வேலைவாய்ப்பு குறித்து அனைத்து அம்சங்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு இந்தியா போன்ற பின்தங்கிய நாட்டில் ஆளும் ஆட்சியாளர்களே நகர்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாய், கிராமப்புறத்தில் 26 ரூபாய் தனிநபர் வருமானம் இருந்தால் அவர் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளார் என கூறுகிறார்கள். ஆனால் இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு இன்றைய நிலையில் வாழ முடியுமா? என்றால் முடியாது என்ற பதிலை அனைத்து தரப்பினரும் தெளிவாகவே சொல்கின்றனர். இதற்கான மாற்று என்றால் வருமானம் கூடுதலாக கிடைக்கும் இடத்தை நோக்கி ஓடு என உபதேசிக்கப்படுகின்றனர். இது இடபெயர்வு அடைமொழியிட்டு அழைக்கப்பட்டு அதற்கான ஆய்வுகளையும் ஆட்சியாளர்களே நடத்துகின்றனர். ஆனால் உண்மையில் அந்த மக்கள் வாழும் இடத்திலேயே வாழ்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்க முடியாதா? என்றால் முடியும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 83.31 கோடி மக்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவில் இன்று 320 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உள்ளதில் இன்று வரை 165 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரம் குறைந்த தரிசு நிலங்களாக, கோவில் நிலங்களாக, மடங்களின் சொத்துக்களாக, குறிப்பிட்ட சில நபர்களின் சொத்துகளாக இருந்து வருகிறது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் இந்திய சுதந்திரப்போரில் புரட்சிவீரர்கள் டெல்லியை வெற்றி கொண்டபின் அமைக்கப்பட்ட ஜல்சா கமிட்டி உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என அறிவித்தது.

அதன் பின் நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின் கிராமப்புற வேலைவாய்ப்பையும், மக்களின் வாழ்வதாரத்தை பாதுகாக்க, சுதந்திர இந்தியாவில் ஆவடி சோசலிசம் பேசிய ஆட்சியாளர்கள், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது போக மீதி நிலங்களை கையகப்படுத்தினால் எவ்வுளவு நிலம் மிச்சமாகும் என்பதை கண்டறிய மகாலானோபிஸ் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

1969 இல் நில உச்சவரம்பு சட்டம் அமலானால் 6 கோடியே 30 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாய் கிடைக்கும் என அறிக்கை தாக்கல் செய்தது. 1970 இல் மத்திய வேளாண்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் 4 கோடி ஏக்கர் நிலங்களை வினியோகிக்க முடியும் என்றார்.

1960-61 ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் 16 வது சுற்று மதிப்பீடானது 2 கோடியே 25 லட்சம் ஏக்கர்களை கையகபடுத்தி வினியோகிக்க முடியும் என்றது. 1971-72 தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் 26 வது சுற்று 1 கோடியே 22 லட்சம் என்று கணக்கிட்டது. 1970-71 வேளாண்மை துறை 3 கோடியே 7 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் என்றது. பிறகு 1976-77 வேளாண் கணக் கெடுப்பானது இதனை 2 கோடியே 26 லட்சம் ஏக்கர் என்றது.

2004 ஆகஸ்ட் 19 அன்று நாடாளுமன்ற மக்களவையில் அரசு வெளியிட்டுள்ள கணக்கின்படி, நாட்டில் 73 லட்சத்து 35 ஆயிரத்து 937 ஏக்கர் உபரி நிலம் உள்ளது என இறுதியாக அறிவிக்கப்பட்டது. இதில் 64 லட்சத்து 96 ஆயிரத்து 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதில் 54 லட்சத்து 2 ஆயிரத்து 102 ஏக்கர் விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்காளத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்து 88 ஆயிரத்து 445 ஏக்கர் நிலம் ( 20 சதம்) விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான நில விநியோகம் நடந்துள்ளது. உண்மையில் இந்தியாவில் 6 சதம் நிலம் மட்டுமே பிரித்துக்கொடுக்கப்பட்டது, இது சீனாவில் 43 சதவீதமும், ஜப்பானில் 33 சதமும் ஆகும்.

இந்த நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படையில் கிராமப்புற பொருளாதாரம், வாங்கும் சக்தி என்பது கணிசமாக அதிகரித்தது. அதே நேரத்தில் நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளிகளாக இருப்பது விவசாய வளர்ச்சிக்கு ஒரு தடையாகவும் இருக்கிறது. ஏறத்தாழ 42 சதம் பேர் நிலமற்ற விவசாயத்தொழிலாளிகளாக உள்ளனர். இதனால் ஏற்படும் வேலையின்மை, வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் பாலின வேறுப்பாட்டையொட்டிய கூலி முறைகள் அவர்களை இடப்பெயர்வை நோக்கி தள்ளுகிறது, கடந்த 2004-2010 வரை 21 மில்லியன் பேர் விவசாயத் தொழிலில் இருந்து விடுபட்டுள்ளனர். இவர்கள் பெரும் பகுதி நகர்புறங்களை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக தொழில் உற்பத்தித் துறைக்கு செல்கின்றனரா என்றால் கணிசமாக செல்கின்றனர். பெரும் பகுதி கட்டிட தொழில்களில் ஈடுபடுகின்றனர். 2004-2005 முதல் 2009-2010 வரையான காலத்தில் 4.9 சத்த்தில் இருந்து 9.4 சதமாக அதிகரித்துள்ளனர்.

இன்று வேளாண்துறையில் 42 சதமும், தொழில்துறையில் 29.6 சதமும், சேவைத்துறையில் 28.4 சதமும் என உள்ளது. இது 1970 களில் வேளாண்துறை 73.4 சதம், தொழில் துறை 11.3சதம், சேவைத்துறை 14.9 சதமும் என உற்பத்தியில் ஈடுபட்டனர், இதில் பெரும் பகுதி தற்போது சேவைத்துறை மையமாக வைத்த வேலைவாய்ப்பே உருவாக்கப்படுகிறது. வேளாண் துறையில் ஏற்ப்ட்ட நிலசீர்திருத்த தோல்வி, லெவதேவிகார்ர்களின் சுரண்டல், கந்து வட்டிகார்ர்களின் கொடும் கொள்ளை, சீரற்ற வேளாண் வளர்ச்சி, நீர்பாசன வளர்ச்சி பெருகாதது, உற்பத்திக்கான விலையில்லாதது போன்ற அம்சங்கள் கிராமப்புறத்தில் விவசாயத்துறையில் வேலையின்மையை அதிகரித்து. கடந்த 10 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டைக்காடாக கிராமப்புறங்கள் மாற்றப்பட்டது மேலும் மேலும் கிராமப்புற வாங்கும் சக்தியை குறைத்துள்ளது.

உலகமயமாக்கலின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக மூலதனம் இன்று விவசாயம், தொழில் துறைகளை காட்டிலும் ஊக வாணிபத்தில் கொடி கட்டிபறப்பதால் அது இன்று சேவைத்துறைகளை மட்டும் ஊக்குவிக்கிறது, ஆளும் ஆட்சியாளர்களை பிபிபி முறையில் இயங்க அழைக்கிறது. இன்று அனைத்திலும் பிரைவேட், ப்பளிக் பாட்னர்சிப் என தனியார் மய நடவடிக்கையையே ஊக்குவிக்கிறது. இது வேலைவாய்ப்பற்ற வளர்ச்சிக்கான ஆலோசனைகளையே உருவாக்கிறது, உதாரணத்திற்கு அம்பத்தூர், கிண்டி போன்ற இடங்களில் கடந்த காலத்தில் இருந்த தொழிற்பேட்டைகளின் அனுபவங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். அசோக் லைலேண்ட் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு முன்னால் அதிகப்படியான தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்த மோட்டார் வாகனங்களை இன்று குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டு கூடுதலான எண்ணிக்கையில் வாகனங்களை உற்பத்தி செய்கிறது. காரணம் நவீன தொழில்நுட்பம்.

பன்னாட்டு மற்றும் இந்திய ஏகபோக நிறுவனங்கள் சிறியளவிலான வேலைவாய்ப்புகளை அழித்து பெரும் உழைப்பு சுரண்டலில் ஈடுபடுவதோடு, ஏற்கனவே இதே துறைகளில் அதிகப்படியான தொழிலாளர்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்தி வந்த பல சிறு, குறு நிறுவனங்களை மட்டுமல்லாது வேலைவாய்ப்பையும் அழித்துவிட்டு வளர்ந்து வருகிறது. இங்கு எந்த தொழிலாளர்களின் நலன்களும் பேசப்படுவதில்லை, உரிமைகள் வழங்கப்படுவதில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் 1960களில் பெண்கள் வேலைவாய்ப்பிலும், அரசியலிலும் முன்னுக்கு வரவேண்டுமானால் அவர்களுக்கான குறைந்தபட்ச இட ஒதுக்கீட்டை 30சதமாவது அமுலாக்க வேண்டும் என்ற கருத்தை அன்று இந்திராகாந்தி போன்றவர்கள் முன்னுக்கு வைத்து, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் விவசாய உற்பத்திக்கு தேவையான நவீன சாதனங்களை உற்பத்தி செய்து கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என அறிவித்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொழிற்பேட்டைகளாக உருவெடுத்த்து. கணிசமான வேலைவாய்ப்பையும் உருவாக்கியது. ஆனால்

இன்றைய பொருளாதார மண்டலங்களில் வந்து குவியும் அன்னிய மற்றும் ஏக போக நிறுவனங்களின் மூலதன குவிப்பு லாபம் ஒன்றை மட்டும் மையமாக கொண்டு அடிப்படையான மனித உரிமைகளையே அப்பட்டமாக மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அத்தோடு பல பன்னாட்டு நிறுவனங்கள் உதாரணத்திற்கு போர்டு நிறுவனம் தனது கார் தயாரிப்பிற்கான சூத்திரத்தை மட்டும் கொண்டு வந்து அதற்கான மூலப்பொருட்கள், உபப்பொருட்கள் ஆகியவற்றை இங்கே தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்தால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆனால் அனைத்தையும் தங்களது சொந்த நாட்டில் இருந்தே கொண்டு வந்துவிட்டு அதை சேர்த்து பொருளாக வடிவம் கொடுத்து விற்பனை செய்யும் சந்தையாக பார்த்தால் எங்கே வேலைவாய்ப்பு உருவாகும்,

இன்றைய சூழலில் மூலதனம் போட்டு தொழிலில் மட்டும் லாபம் என்றில்லாமல், உபரியாக தொழிலாளர்களிடம் உள்ள வருமானத்தையும் சுரண்டும் ஏற்பாடாகத்தான் இன்று பொருளாதார மண்டல வளாகங்களில் தொழிற்சாலைகளை சுற்றி மால் சாப்பிங்குகளை திட்டமிட்டு உருவாக்கி இளைஞர்களுக்கான விளம்பரங்கள் மூலம் புதிய கருத்தாக்கத்தை உருவாக்கி கொள்ளையடிக்கும் நிலையை உருவாக்குகின்றனர். இந்த இடங்களில் சொற்பமான வேலைவாய்ப்பு உருவானாலும் நவீன கொத்தடிமைகளாகவே இளைஞர்கள் உருவாக்கப்படுகின்ற்னர். இந்த நிறுவனங்கள் பிபிபியை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு தங்களை மேலும் வளர்த்துக் கொள்கின்றனர். அதே நேரத்தில்

இந்த நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய கனிம வளங்களை மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை 1970களுக்கு பின்னால் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாத அரசு புதிய பொருளாதாரக்கொள்கையை காரணம் காட்டி படிப்படியாக விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது. அரசின் நிர்வாகச் செலவுகளை குறைக்க வேண்டுமானால் பொதுத்துறையை தனியார் துறையாக்க வேண்டும், ஊழியர்களின் ஊதியக்கொள்கை சீரமைக்கப்பட்டு ஊதிய குறைப்பு, சட்டரீதியான பாதுகாப்புகளை விலக்குவது, நிரந்தரமற்ற தன்மையை உருவாக்கி நிரந்தர ஊதியம் என்பதை அத்துக்கூலி, அவுட்சோர்சிங், ஒப்பந்த முறை ஊதியம் என நிரந்தர வேலைவாய்ப்புகளை பொதுத்துறை, அரசுத்துறையில் இல்லாமல் செய்வது என்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அரசு ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர், பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, உலகமயச்சூழலில் போட்டியை சமாளிக்க தனியார், பொதுத்துறை இணைந்தே செயல்பட வேண்டும், அதில் அரசின் பங்கை பெரும் பகுதி குறைப்பது நல்ல நிர்வாகத்தை உருவாக்கும் என சாதாரண மக்களின் பொதுப் புத்தியில் கருத்தாக்கத்தை அரசே ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு மின்சார வாரியம், சாலைப்போக்குவரத்து, தொலைதொடர்பு, வங்கி, மருத்துவம் போன்ற சேவைத்துறைகளில் ஊழியர் பற்றாகுறையை காரணம் காட்டி அடிப்படையான பணிகளை கூட நிறுத்தி வைத்து விட்டு, நிறுவனங்களை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களை நாள்கணக்கில் நோக வைப்பது அவர்களே தனியார்துறையாக இருந்தால் சிறப்பாக செயல்படும் என்ற கருதுகோளை நோக்கி செல்லும் மனநிலையை உருவாக்குவது. இதை வைத்துக்கொண்டு அரசு மற்றும் பொதுத்துறையில் நிர்வாகச் செலவை சீர் செய்ய ஆட்குறைப்பு, வேலைநியமனத்திற்கு தடை, வேலைப்பறிப்பு, கட்டாய ஓய்வு, ஓய்வுபெற்றவர்களை மீண்டும் வேலைக்கு குறைந்த ஊதியத்தில் நியமிப்பது என பல்வேறு தில்ல்லங்கடி வேலைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 வது நிதி ஆணையம் அரசுத்துறை பணிநியமனக்கொள்கையில், அரசு தனது மொத்த வருவாயில் 35 சதத்துக்குள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. மறுபுறம்

ஓரம் கிழிஞ்சாலும் ஒட்டுப்போட்டுக் கட்டிடலாம் - இது

நடுவே கிழிஞ்சதடி நாகரத்தினமே-அதுவும்

நாலுமுழ வேட்டியடி கனகரத்தினமே!

என்ற பழைய தமிழ் சினிமா படப்பாடலுக்கு ஏற்ப இன்றைய இந்தியாவின் நிலை என்பது பெரும் பகுதி உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலையாக மாறிக் கொண்டு வருகிறது. கல்வியையும், சுகாதாரத்தையும் மனிதவள மேம்பாட்டின் கூறுகள், அனைவருக்கும் வழங்குவது ஒரு சேம நல ( மக்கள் நல ) அரசின் கடமைகள் என கூறிக்கொண்டே அதை வணிகமயமாக்கும் நட்வடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இன்று காசிருந்தால் கல்வி, சுகாதாரம் என்கிற கோட்பாட்டை மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றுவதில் ஆளும் வர்க்கம் வெற்றி பெற்றுவிட்டது என்றே கருத வேண்டியுள்ளது. காரணம் இவற்றில் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு அது தனியார் துறையில் உள்ள கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் அரசுத்துறையை விட தனியார் துறை மேலானானது என்ற சிந்தனை படிப்படியாக கட்டமைக்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்து இந்தியாவில் சென்று கொண்டு வருகிறது. மனிதவாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்கஉணவு என்பது தினமும் 2500 கலோரி என்கிற நிலையில் கிடைக்கப் பெறாத மக்களே 90 சதம் உள்ளனர். போதிய ஊட்டச்சத்தும், சுகாதாரமான சுற்றுச்சூழல் நிலைகளும் இல்லாத நிலையில் மனித உழைப்பை சுருக்கி உழைப்பு சந்தையில் இருந்து வெளியே தூக்கி எறியும் நிலையே தற்போது நிலவுகிறது,

இப்படிப்பட்ட நிலையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களை வளர்த்தெடுப்பதும், மேம்படுத்துவதும் உரிமையோடு கூடிய சமூக பாதுகாப்பான புதிய வேலைவாய்ப்ப்புகளை உருவாக்குவதும் அவசியம். அதற்கு நாட்டில் உள்ள கனிம, நீர்ம வளங்களை கண்டறிவதும் அது சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை பெருக்குவதும், கிராமப்புற விவசாயத்தை மையமாக வைத்து அதன் உபபொருட்களில் இருந்து கிடைக்கும் பொருட்களுக்கான சந்தையை உருவாக்குவதும், அதனால் உருவாகும் வேலை வாய்ப்புகளை கூடுதலாக்குவதும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற் போல் உற்பத்தி, சேவைத்துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியது, அவசியம், அதற்கு நிலக்குவியலை உடைத்து நிலசீர்திருத்த்த்தின் மூலம் கிராமப்புற நிலமற்ற விவசாயிகளின் வேலைவாய்ப்பையும், வாழ்வதாரத்தையும், வாங்கும் சக்தியை உறுதிப்படுத்துவதுமே அடிப்படையான மாற்றமாக இருக்க முடியும். என்ற மாற்றுத்திட்டத்தை முன் வைத்து தமிழக தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை முன்னுக்கு வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 2012 மார்ச் 19 முதல் 21 வரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது.