”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்

“வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்களல்ல.. வெகுமக்களே” என்ற உண்மையை உலகுக்கு பறைசாற்றிய தீரமிகு வியட்நாம். பிரெஞ்சு, அமெரிக்க ஆதிக்கத்திற்கெதிராக போராடிய வியட்நாமியர்களை “யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர் ’’ என்று சொன்னவர்களை பார்த்து வியட்நாமின் தலைவர் ஹோசிமின் “விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளை தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது,. ஆனால் மார்க்சியம், லெனினியம் என்ற வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல,.. எதிர்காலத்தையும் பார்க்க முடிகிறது’’.  “இன்று வெட்டுக்கிளிகள் யானையுடம் சண்டைபோடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல,.. உண்மையில் நடந்தேறியது.
தனது வல்லமையை காட்ட வேண்டும் என்பதற்காக சரணாகதி அடைந்த ஜப்பானின் மீது 1945ல் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளை போட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ரத்தவெறி பிடித்த ட்ரூமன் வழியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் யுத்தத்தின் போது  பல மடங்கு நாசகரமான நாபாம் குண்டுகளை வியட்நாம் மீது வீசி வியட்நாமிய மக்களை அடி பணிய முயற்சி செய்த ஆணவத்திற்கும், அடங்காபிடாரிதனத்திற்கும் மொத்தமாக ஆப்பு வைத்து, வெறும் முங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும், விமானங்களையும், நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவை புறமுதுகிட்டு ஒட வைத்தனர். வீர வியட்நாம் மக்கள்,..  

வியட்நாம் - இந்திய 6 வது நட்புறவு விழா:
வியட்நாம் மக்கள் 1954 வரை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதன்பின் அமெரிக்க ஏகாபத்தியத்திற்கு எதிராகவும் போராடி தங்களது நாட்டின் சுதந்திரத்தை பாதுகாத்தனர். அன்று இந்தியாவின்  பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லாலும், வியட்நாமின் அதிபர் ஹோசிமினும் உருவாக்கிய நட்புறவும், சகோதரத்துவம், ஒருமைப்பாடும் இன்று வரை தொடர்கிறது.  அதன் தொடர்ச்சியே வியட்நாம் இந்திய 6 வது நட்புறவு விழாவாகும்.
2013 அக்டோபர் 20 முதல் 26 வரை வியட்நாமின் தலைநகரான ஹனாய், டானாங், ஹோசிமின் சிட்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு ஏஐபிஎஸ்ஓ-வின் துணைத்தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. தேவிபிரசாத் திரிபாதி அவர்கள் தலைமையில் 19 பேர் கொண்ட பிரதிநிதிகளும், 10 பேர் கொண்ட கலைக்குழுவுமென 29  பேர் கொண்ட குழு பயணம் செய்தது.
அக்டோபர் 20ம் மாலையில் இந்தியா, வியட்நாம் நாடுகளின் பராம்பரிய கலைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 21ம் தேதி வியட்நாமின் தலைநகர் ஹனாயில் துவக்கவிழா நடைபெற்றது. அதற்கு முன் உலக உழைப்பாளி மக்களின் உன்னத தலைவர்களில் ஒருவரான ஹோசிமின் நினைவிடத்தில் அஞ்சலியும், மரியாதையும் செலுத்தப்பட்டது.
துவக்கநிகழ்வில் இந்திய பயணக்குழுவின் தலைவர் தேவி பிரசாத் திரிபாதி எம்.பி., ஏஐபிஎ°ஓ-வின் பொதுச் செயாளர் பல்லக்சென்குப்தா, வியட்நாம் நட்புறவு கழகத்தின் தலைவர் ஹா மிங்யூ, வியட்நாமிற்கான இந்திய துhதர் திருமதி ப்ரீதி சரண் ஆகியோர் உரையாற்றினார்கள். ஹனாய், டனாங், ஹோசிமின் சிட்டி ஆகிய மூன்று வட, மத்திய, தென் வியட்நாமின் நகரங்களுக்கு பயணம் செய்தோம்.

தோழர் ஹோசிமின் நினைவாக
வியட்நாமின் தலைநகர் ஹனாயில் ஹோசிமின் அவர்கள் வாழ்ந்த வீடும், அவர் பணியாற்றிய அரசு மாளிகையும், கண்காட்சியகம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தோழர் ஹோசிமின் உடல் வைக்கப்பட்டுள்ள அறை பராமரிப்பு பணிக்காக நவம்பர் முதல்வாரம் வரை மூடப்பட்டிருந்ததால் அந்த அறைக்கு முன்பே அஞ்சலியும், மரியாதையும் செலுத்தப்பட்டது. அவரின் இறுதி நிமிட வாழ்க்கை குறித்த ஒளிப்பதிவு காட்சிகள் நினைவகத்தின் உள்ளரங்கில் திரைப்படமாக காட்டப்பட்டது.
தோழர் ஹோசிமின் வாழ்ந்த அந்த மூங்கில் வீடு பார்க்க மிகவும் எளிமையாக உள்ளது. தென்னைமரங்களும், மூங்கில்களும், வாழைமரங்களும் அருகில் ஒரு சிறு குளமும் உள்ள ரம்மியமான இயற்கை கொஞ்சுமிடம். எங்கும் பறவைகளின் கொஞ்சும் ஒலிகள், காற்றின் சலசலப்பில் எழும் இசையில் அமைந்த இடம். செய்தி தாள்களும், புத்தகங்களும், ஒரு தட்டச்சு எந்திரமும், படுக்கைக்கு பதிலாக பாய் விரிக்கப்பட்டுள்ளது. இதுதான் அவரின் வாழிடம். எந்த நேரமும் உழைப்பும், படிப்புமாக செயலாக்கத்தின் முன்மாதிரியாக இருந்துள்ளார்.
இது குறித்து சோவியத்தின் நிருபர் ஒருவர் பேட்டி கண்டபோது கேட்டதற்கு “ நான் அதற்கு பழகிவிட்டேன், எப்போது வேண்டுமானாலும் எழுந்து கிளம்பி விடலாம், புரட்சியின் போதும், தலை மறைவு வாழ்க்கையின் போதும் இதனை கற்றுக் கொண்டேன்.  எழுந்து புறப்பட ஐந்து நிமிடங்களே போதுமானது’’.  
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள் என்று கேட்ட போது “ பறவைகளோடு நான் எழுகிறேன், வானில் நட்சத்திரங்கள் தோன்றும் போது உறங்கச் செல்கிறேன்’’ என்றார்.
தோழர் ஹோசிமின் மிகக்கடுமையான உழைப்பாளி. சிறு வயது முதல் அவர் படிக்கும் காலத்தில் ரூசோவை கற்றபோது பிரெஞ்சு புரட்சியின் முழக்கமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை எப்படி முழங்கினார். இந்த கோஷங்களின் பின்னுள்ள வரலாறு என்ன என்பதை தெரிந்துகொள்ள சிறுவயதிலேயே பிரான்சை நோக்கி சென்றார் கப்பலில். அப்போது எதுவும் தெரியாமல், உணவுக்கும், தங்கவும் என்ன செய்வாய் என்று நண்பர் கேட்டபோது “இரண்டு கைகளையும் உயர்த்தி பத்து விரல்களை காண்பித்து இது தான் மூலதனம்’’ என்றார்.
கால்சட்டையும், சுருட்டி விடப்பட்ட மேற்சட்டையும் அணிந்து கொண்டு எங்கு போக வேண்டுமென்றாலும் நடந்தே செல்லும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார். மலைகளா? செங்குத்தான சிகரமா? வனம் அடர்ந்த காட்டுப்பாதையா ? அனைத்திலும் நடந்தே சென்றார். கேட்டபோது சொன்னார், நாளை புரட்சியின் போது பயன்படும் என்று பதிலளிப்பார்.
1930ல் வியட்நாம் கம்யூனி°ட் கட்சியை உருவாக்கியது முதல் தனது இறுதி நாள் வரை மார்க்சிய லெனினிய பாதையில் உறுதியாக நின்று அதுதான் அத்தனை செயல்களுக்கும் அடிப்படையான தத்துவம், வளரும் சமூக விஞ்ஞானம், பிரச்சனைகளின் தீர்வு அதில் தான் உள்ளது என்பதை உரக்க சொல்லி அதன் அடிப்படையில் புரட்சியின் பாதை என்ற புத்தகத்தை வியட்நாமின் புரட்சிக்கான கட்டமைப்பு குறித்து எழுதினார். அது தான் இன்று வரை வியட்நாம் கம்யூனி°ட்களின் அடிப்படையான நுhலாக போற்றப்படுகிறது.

இந்திய வரலாற்றோடு இணைந்த செம்பா பண்பாட்டு மையம்
வரலாற்று சிறப்புமிக்க டனாங் செம்பா பண்பாட்டு கலை மையத்தினையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கொரில்லா யுத்தத்தை நடத்திய குச்சி பகுதியையும் நேரில் பார்த்த போது வியட்நாமின் பல நுhறு ஆண்டுகளின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய வியட்நாமிற்கான தொடர்ப்பு என்பது 1012 முதல் 1044 வரை சோழர்கள் காலத்தில் கடாரத்தை வென்ற ராஜேந்திரசோழன் காலத்தில் கடற்கரை பகுதிகளான தென் மற்றும் மத்திய வியட்நாமின் துறைமுகப்பகுதிகளை கைப்பற்றினான்.
அப்போது தென்னிந்திய கட்டட மற்றும் சிற்பக்கலைகளையும், கோவில்களையும் அங்கே உருவாக்கினான். அது இன்று சம்பா என்றழைக்கப்படும் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு மிகப் பெரிய கலைகாட்சியகமாக டனாங் நகரில் பாதுகாக்கப்படுகிறது. சிவன், இந்திரன், விஷ்ணு, பிரம்மா, கணேசா, நவகிரகங்கள் மற்றும் லிங்க வழிபாடு என ஏராளமான இந்திய தெய்வ வழிபாட்டு சிலைகளின் சிதையா மற்றும் சிதைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கலைகாட்சியகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இது குறித்து இரண்டு வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதே போல் ஹோசிமின் சிட்டி, டனாங் நகரில் உள்ள பல்வேறு கலை பண்பாட்டு மற்றும் நட்புறவு கழகங்களின் மூலம் கருத்தரங்கம், கலைப்பரிமாற்றம், உரையாடல்கள் என நடைபெற்றது. அனைத்திலும் இரண்டு நாடுகளிடையேயான உறவுகளும், மக்களின் ஒருமைப்பாடும், சுற்றுலா,  சகோதர உதவிகள் என பல தளங்களில் விவாதங்கள் நடைபெற்றது.
அமெரிக்காவை விரட்டியடித்த குச்சி
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1975 வரை நடத்திய கொரில்லா யுத்தத்தின் வீர நினைவுகளை இன்றும் பாதுகாத்து வைத்து வருகின்றனர். குச்சி என்ற பகுதியில் ஆண்களும், பெண்களும் 4, 6, 10 மீட்டர் ஆழத்தில் பூமியில் குழிகளையும், பட்டறைகளையும் உருவாக்கி அதன் பதுங்கி இருந்து போரை நடத்தினார்கள். கையில் வெறும் கட்டைதுப்பாக்கியும், மூங்கில் குச்சிகளை வைத்துக் கொண்டு நவீன விமானங்களையும், பீரங்கிகளையும் வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திய அமெரிக்காவை மண்ணை கவ்வ வைத்தது.  அந்த மகத்தான சாதனை செய்த வீரர்களின் நினைவுகள் இன்று அங்கு போற்றப்படுகிறது. தொடர்ந்து அந்த வரலாறு இளம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து தேச இறையாண்மை கட்டியமைக்கப்படுகிறது.

வளர்ச்சியடைந்த நாகரிகம்
டனாங் நகரில் உள்ள ஆற்றுக்கு செல்ல பாதை தெரியவில்லை என்று ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் இருந்தவரிடம் கேட்டபோது அவருக்கு சரியாக புரியவில்லை. நாங்களும் அருகில் இருந்த கடையில் கேட்டு பாதையை தெரிந்து நகர்ந்தோம். 300 மீட்டர் சென்றிருப்போம். அந்த வாகன ஒட்டி தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு வந்து எங்களை வழிமறித்து நீங்கள் கேட்டது எனக்கு புரியவில்லை. எனது மனைவிக்கு பாதை தெரியும் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என சொல்ல அவரது மனைவியும் ஆற்றுக்கு செல்லும் பாதையை சொன்னார். எங்களை தேடி கண்டுபிடித்து வழியை காட்டிய இந்த உயர்ந்த பண்பாட்டை  எப்படிச் சொல்வது என தெரியவில்லை.
நாங்கள் பார்த்த ஹனாய், டனாங், ஹோசிமின் சிட்டி ஆகிய பெரு நகரங்களில் சாலையின் இரு மங்கும் லட்சக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களின் அணிவகுப்பாக ஆண்களும் பெண்களும் சரிசமமாக ஓட்டி செல்வதை பார்க்க முடிகிறது. முக்கியமாக குழந்தையோடு செல்லும் பெற்றோர் உட்பட  மூவரும் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். ஹெல்மெட் இல்லாமல் யாரையும் பார்க்க முடியவில்லை. இரவு 11 மணிக்குக்கூட சாலைகளில் போக்குவரத்து சிக்கனலை மதித்து நின்று செல்வதை பார்க்க முடிந்தது.  
தென் வியாட்நாமில்  16, 17ம் நுhற்றாண்டுகளில் சர்வதேச வர்த்தக தளமாக திகழ்ந்த  ஹய்அன் ஆற்றுப்படுகை அருகில் உள்ள பழங்கால நகரம் பார்ப்பவர்களை பரவசப் படுத்தும் விதமாக இருந்தது. இங்கு வியட்நாம் பல தருணங்களில் ஆட்சி செய்த சீன, ஜப்பானிய, டச்சு, இந்திய கட்டடக்கலைகளின் தொன்மங்கள் பாதுகாக்கப்படுகிறது.  மிகப் பெரிய சுற்றுத்தளமாகவும் இன்று காட்சி அளிக்கிறது.

வியட்நாம் கம்யூனி°ட் கட்சித்தலைவர்களோடு சந்திப்பு
அன்று மதியம் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், மத்திய நிலைக்குழுவின் செயற்குழு உறுப்பினருமான லீ ஹங் அன் அவர்களை கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். இரு நாடுகளிடையே நம்ப தகுந்த கூட்டாளியாக அனைத்து விதத்திலும் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளில் பராமரிக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்திய வியட்நாம் நாடுகளிடையே உறவு என்பது ஆயிரம் ஆண்டுகளை தாண்டியது என்றாலும் ராஜீய ரீதியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வியட்நாமில் இருந்து விரட்டி அடித்து சுதந்திரம் பெற்ற 1954மாண்டு முதல் இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் வியட்நாம் தலைவர் ஹோசிமின் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்ட இந்த நட்புறவு ஜோதி அணையாமல் பாதுகாக்கப்படும் என்று இரண்டு நாடுகளின் தலைவர்களின் உரையாடலில் உறுதியேற்றனர். 1969களில் “நமது பாவேந்தரும் அன்று அமெரிக்காவை பார்த்து எச்சரித்தார் இந்திய மக்களின் சார்பாக, ஆம் “அமெரிக்காவே எச்சரிக்கை உனது இடுப்பை உடைத்து நெறித்துவிடும் வீர வியட்நாம்’’ என்று..
சோசலிச பாதையில் 50 ஆண்டுகளை கடந்து
கடந்த 50 ஆண்டுகளில் உலக அளவில் நாடுகளின் உறவுகளில், முதலாளித்துவ மற்றும் சோசலிச முகாம்களில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.  ஆனால் 1917ல் சோவியத் உருவான முதல் சோசலிச அரசும் அதனைத் தொடர்ந்து சீனா, கியூபா, வியட்நாம், கொரியா, சிலி உள்ளிட்டு ஏராளமான நாடுகளில் சோசலிச அரசுகளும் உருவானதும், உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு சோசலிச முகாமின் கீழ் வந்ததும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
1930 பிப்ரவரி 3ம் தேதி வியட்நாம் கம்யூனி°ட் கட்சி உருவாக்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் வியட்நாமிய விடுதலைக்கான போராட்டத்தையும், மேற்கத்திய காலனிய ஆதிக்கத்திற்கெதிராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் வீரமிகு போராட்டத்தை நடத்தியவர்கள்.  இதன் பின்னணியிலேயே வியட்நாமிய கம்யூனி°ட் கட்சி (சிபிவி) தேச மறு கட்டுமானம், நவீனமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் வழியில் அரசும் வீறுநடை போடுகிறது.
சோவியத்நாட்டில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் தாக்கமே வியட்நாமிய புரட்சியின் அடிநாதமாகும். தோழர் ஹோசிமின் ஒவ்வொரு நிமிடமும் மார்க்சிய லெனினிய பாதையில் செல்வதன் அவசியம் குறித்து தெளிவான பார்வையோடும், சொல்லிருந்து செயலை நோக்கி ஒவ்வொரு படியாக வியட்நாமின் வளர்ச்சி வித்திட்டவர். அவரின் வழியில் இன்று வியட்நாமின் சோசலிச அரசு 2020க்குள் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் வியட்நாமும் வந்துவிடும் என்று உறுதியாக அறிவித்து அதற்கான திட்டங்களை அமுலாக்குவதில் உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இன்று வரை வியட்நாமிய மக்களுக்கு தேச நிர்மாணம் குறித்த புரிதலையும், தேச விடுதலைப் போர் குறித்தும், ஜனநாயகம், சமூக முன்னேற்றம் பற்றியும் தொடர்ந்து மக்களுக்கு போதித்து வருகிறது. “அனைத்து மக்களும் நாகரிகமான வாழ்க்கை வாழ ஒன்றிணந்த கட்டுமானத்தை உருவாக்குவது’’ என்ற முழக்கதோடு குடிமக்கள் சமூகத்தின் ஜனநாயகமும், சமத்துவமுமான வாழ்க்கையும், பலமான தேசம், உயர்தரமான வாழ்க்கை என்பதே குறிக்கோள் என்ற அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டு நிர்வாக மற்றும் அரசியல் முறை உருவாக்கப்பட்டு அனைத்து மக்களின் பங்கேற்போடு திட்டங்கள் தீட்டப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி, சுகாதாரம்
வியட்நாமில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆரம்பக்கல்வி முழுமையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இன்றைய தினம் வரை மேல்நிலைக் கல்வி வரை 95 சதத்திற்கும் அதிகமான கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே பராமரிக்கப்படுவதால் ஏற்றத்தாழ்வற்று சமத்துவமான கல்வி வழங்கப்படுகிறது. உயர் கல்வி கற்க வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசப்பற்று, சுதந்திரப்போராட்ட வரலாறு, லெனினியம், மார்க்சியம் குறித்தும் கற்பிக்கப்படுகின்றன.  
அதே போல் சுகாதாரம் முழுமையாக கிடைப்பதாற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்தின் கூறுகளான  குடிநீர், ஊட்டச்சத்துமிக்க உணவு,  மருத்துவம், கழிப்பறை, துhய்மையான வீடு, குப்பைகளற்ற சுற்றுப்புறச்சூழல் இவைகளை வரும் 2017க்குள் அனைவருக்கும் வழங்கிடுவோம் என்று நம்பிக்கையோடு அரசு அதிகாரிகள் மட்டுமல்ல மக்களும், கல்லுhரி மாணவர்களும் நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சாதனங்களை பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் முழுமையாக கொண்டு சேர்ப்பதற்கு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 50 சதமாக இருந்த வறுமைக்கோடு அளவு இன்று 10 சதத்திற்கும் கீழாக குறைக்கப்பட்டு மிக வேகமாக வறுமை ஒழிப்புத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.  குறிப்பாக 2010ம் ஆண்டு 14.2 சதமாக இருந்த வறுமையின் அளவு 2012ல் 9.6 சதமாகவும்,  2013ல் 7.8 சதமாக குறைந்துள்ளது.
வரும் 2017க்குள் வறுமைக்கோடு என்கிற வரையறையே இல்லாமல் வறுமையை முற்றிலும் அகற்றிடுவோம் என்று  மார்தட்டி பெருமை பொங்க வியட்நாமிய அதிகாரிகளும், பல்கலைகழக மாணவ மாணவியர்களும் சொல்வதை கேட்டால் இனம் புரிய உணர்வு மேலோங்குகிறது. இது தான் பூமியில் படைக்கப்பட்ட சொர்க்கலோகமா? என்னா ஒரு பெருமிதஉணர்வு!. ஹோசிமின் நாட்டில் அனை வருக்கும் அனைத்தையும் பகிர்ந்தளிப்போம் என்ற நம்பிக்கை,..குழந்தை முதல் பெரியவர் வரை...
சராசரியான வாழ்க்கைநிலைக்கு மேலாக 98 சதமான குடும்பங்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கான வாழ்நிலைச்சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மகத்தான சாதனையாகும்.  அதே போல் சமூக பாதுகாப்பு திட்டத்தன் மூலம் 25 மில்லியன் பேர் வழக்கமாக பயனடைகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முதியோர் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது மிகக் குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.
அதே போல் நாடு முழுவதும் இன்னும் முழுமையான முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க துவங்காத 5000 கிராமங்கள் தேர்வுசெய்யப்பட்டு கிராமத்தின் வாழ்க்கைதரத்தினை மேம்படுத்திட,  முதல்கட்டமாக 500 படித்த அறிவுஜீவி களப்பணியாளர்களை தேர்வு செய்து அந்த கிராமங்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த அனுப்பியுள்ளது. இதற்கு வியட்நாமின் உள்துறையும், இளைஞர் நலத்துறையும் 30 வயதிற்குட்பட்ட கல்வி ஞானமுள்ள இளைஞர்களை 5 ஆண்டுகாலம் கிராமங்களில் தங்கி பணியாற்ற பணித்துள்ளது.  வரும் ஆண்டில் 300 பேர் என விஞ்ஞானப் பூர்வமான திட்டமிடலோடு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த திட்டமிட்டு பணியாற்றுகிறது.
அதனால் தான் எங்களால் ஹனாய், டனாங் ஆகிய நகரங்களில் தங்கி இருந்த 5 நாட்களிலும் ஒரு பிச்சைக்காரரைக்கூடவும், சாலையோர வாசிகளையும் பார்க்க முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அப்படி இருந்தவர்களையும் அரசு கண்டறிந்து அவர்களுக்கான மறு குடிஅமர்வு திட்டங்களையும், குடியிருப்பு வசதிகளையும், வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்து மாற்றி இருக்கிறது.

வேலையின்மைக்கு எதிராக
உலகிலுள்ள ஏகாதிபத்திய நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏராளமான போராட்டங்கள் வேலையின்மைக்கெதிராக நடைபெற்று வருகிறது. ஆனால் வியட்நாமில் இதே காலத்தில் சோசலிச அரசின் சாதனையாக புதிய வேலைவாய்ப்புகள் திட்டமிட்ட இலக்கினை நோக்கி எட்டி வருகிறது.  இதற்கான அரசியல் திறத்தோடு அந்நாட்டின் அரசு செயல்படுகிறது.
1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு 5.5 சதம் இலக்கு தீர்மானிக்கப் பட்டு 5.4 சதம் அடையப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் 1.54 மில்லியன் வேலை வாய்ப்புகளும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிகக்குறிப்பிடதகுந்த அம்சமாகும். .
2. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2010ல் 40 சதமிருந்து 2013ல் 49 சதமாக உயர்ந்துள்ளது. இது 2015க்குள் 55 சதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
3. வேலையிழப்பு காலத்திற்கான இன்சூரன்° திட்டம் உருவாக்கப்பட்டு சமூக பாதுகாப்போடு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதற்காக உருவாகக்கப்பட்ட திட்டத்தில் இதுவரை 21.4 சதம் அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.
4. ஹனாய் நகரத்தில் மட்டும் வளர்ச்சி விகிதம் 8.9 சதம் திட்டமிடப்பட்டு இந்தாண்டின் முதல் 9 மாதத்தில் 7.88சதம் அளவிற்கு எட்டப்பட்டுள்ளது.  இதில் சேவைத்துறையில் 8.9 சதமும், தொழில் மற்றும் கட்டுமானத்துறையில் 7.42 சதமும், வேளாண்துறையில் 2.35 சதமும் வளர்ச்சி கிடைத்துள்ளது.
5. பணியிடங்களில் வேலையின் பணி அமர்வு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்தகராறு தாவாக்கள் சுமூகமான முறையில் பேசி தீர்க்கப்படுகிறது. இதனால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட இதர நடவடிக்கைகள் குறைந்துள்ளன.

ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சி விகிதம்
கட்சியின் 11 வது காங்கிரசும், 4 வது பிளீனமும் “நிகழ்கால அவசர பிரச்சனைகளும், கட்சி கட்டும் பணியும்’’ என்ற தீர்மானத்தை வெளியிட்டது. இதன் அடிப்படையில் 2006 - 2010 கால ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7 சதம் என்ற சாதனையை படைத்தது.  தற்போது 2011-2015 காலத்திற்கான ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான திட்டமிடலில் 2011- 2013 காலத்தில் இலக்கினை நோக்கி கணிசமாக முன்னேறியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் நிலைநிறுத்தப்பட்டு, பணவீக்கம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக நுகர்வோர் குறியீட்டு எண் இந்தாண்டு முதல் 9 மாதத்தில் 4.63 சதமாக உள்ளது. 2012ம் ஆண்டைவிட 6.81 சதம் குறைந்துள்ளது.  இந்தாண்டு 8 சதத்திற்குள் நிறுத்துவது என்பதில் 7சதமாக குறைத்துவிட முடியும் என்ற சாதனையை நோக்கி செல்கிறது.
வருடத்திற்கு 10 சதம் ஏற்றுமதியை அதிகரிப்பது என்பதில் 14.4 சதம் அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் இறக்குமதி 8 சதம் தீர்மானிக்கப்பட்டு 15.6 சதமாக உள்ளது. இதனால் டாலர்மயமும், தங்கமயத்திற்கும் எதிரான வியட்நாமின் டாங் மதிப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த 5 ஆண்டு திட்ட காலத்தில் 12 சதம் ஏற்றுமதிக்கு திட்டமிடப்பட்டு கடந்த மூன்றாண்டுகளில் 22 சதம் அளவிற்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது மிகப் பெரிய சாதனையாகும். அதேபோல் அந்நிய முதலீடும் 29.1 சதம் என்கிற அளவில் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு சந்தை என்பது தொடர்ந்து வளர்முகமாக உள்ளது. உழைப்பாளி மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி, மருத்துவம் ஆகியவைகளின் விலைஉயர்வு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
நகரமயமாதல் என்பது 2010ல் 30.5 சதத்திலிருந்து 2013ல் 33.4 சதமாக உயர்ந்துள்ளது.  இதற்கு காரணம் உற்பத்தி சார்ந்த தொழில்மய நடவடிக்கை என்பது 2010ல் 60.2 சதமாக இருந்தது 2013ல் 78 சதம் வேகமாக உயர்ந்தது.
இக்காலத்தில் 11,410 புதிய நிறுவனங்கள் மூலம் 69.3 டிரில்லியன் வியட்நாம் டாங்          (3.26 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரேசில், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், தென் அமெரிக்கா போன்ற நாடுகள் பல ஒப்பந்தங்களை உருவாக்க முன்வந்துள்ளன.
எலக்ட்ரானிக் துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக  மொபைல் போன் துறையில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் இந்த ஆண்டின் இறுதிக்குள் வர்த்தகம் நடைபெறும். 15.5 பில்லியன் டாலர் முதல் 9 மாதத்தில் ஏற்றுமதியாகியுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்தகராறு மற்றும் தொழிற்சாலை சட்டங்களுக்கு உட்பட்டு ஏராளமாக தொழிற்சாலைகளை சாம்சங்,  இன்டெல், கேனான், நீடெக், ஃபியூட்சூ, பிரதர், பனாசோனிக், ரெனிச°, பாக்°கான் மற்றும் பா°க் போன்ற நிறுவனங்கள் துவக்கி வருகின்றன. இதற்கு தேவையான உதிரி பாகங்களை ஏராளமான வியட்நாமிய சிறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. உதாரணத்திற்கு நோக்கியா நிறுவனத்திற்கு 10 உள்ளூர் தொழிற்சாலைகள் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து தருகின்றன.
இந்த தொழிற்சாலை மண்டலங்களில் குறிப்பாக 61 நகரங்களில் பணியாற்றும் 21 லட்சம் தொழிலாளர் களுக்கு  குடியிருப்பதற்கான வீடுகளை அரசே கட்டி தர முடிவெடுத்து முதல் கட்டமாக 2009 முதல் 2012 வரையான காலத்தில் 85. 7 மில்லியன் யுஎ° டாலர் செலவிடப்பட்டு 1 லட்சம் தொழிலாளர் களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண்துறையை பலப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பமும், வேளாண் மண்டலங்களும், அது சார்ந்த தொழிற்சாலைகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் உற்பத்தியாகும் பொருட்களை சேதராமில்லாமல் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்படுகிறது.
இதனால் கிராம மற்றும் புறநகர் பகுதிகளின் அடிப்படையாக இருந்த மீன்பிடி, வனம், விவசாயம் ஆகியவை 2010ல் 49.5 சதமாக இருந்தது 2013ல் 47 சதமாக குறைந்துள்ளது. நாட்டின் நிலையான வளர்ச்சியில் முக்கிய பங்கை ஆற்றும் கிராமப்பகுதிகளின் கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கிராமப்புற கட்டுமானத் திட்டத்தை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்திய  வியட்நாம் நட்புறவு
இந்திய வியட்நாம் நாடுகளிடையே வர்த்தக ரீதியான உறவுகளில் 2012ல் 3.94 பில்லியன் யுஎ° டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. இதில் இந்தியா 2.15 பில்லியன் டாலர் அளவும், வியட்நாம் 1.78 பில்லியன் டாலர் அளவும் ஏற்றுமதியில் பரிமாறிக் கொண்டன. இது 2015க்குள் 7 பில்லியன் டாலர் அளவுக்கு உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிழக்காசிய நாடுகளில் நம்பதகுந்த கூட்டாளியாக அனைத்து துறைகளில் வியட்நாம் திகழ்கிறது.  இக்காலத்தில் 86 திட்டங்களில் இந்திய கம்பெனிகள் குறிப்பாக எண்ணெய், எரிவாயு, தாதுக்கள், சர்க்கரை உற்பத்தி, விவசாய ரசாயன மற்றும் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவைகளில் முதலீடு செய்துள்ளன.  
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்சிஜி ஹோசிமின் சிட்டியின் 25 சத மின்சார தேவையை எரிவாயு மூலம் உற்பத்தி செய்து கொடுத்து சாதனை படைத்து வருகிறது. கியூபாவில் கூட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ஓஎன்சிஜி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் தான் தனியார் கையில் அனைத்து கொடுத்துவிட்டு போக அரசுகள் முயற்சி செய்கின்றது.
நாம்சியன் நீர்மின் திட்டத்திற்கு 45 மில்லியன் டாலர் செலவில் உதவி வருகிறது இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஹெச்இஎல்( பாரதமின்மிகு நிறுவனம்).
வியட்நாமின் தலைநகரான ஹனாயில் இந்திய “நிரந்தர பண்பாட்டு மையத்தை’’ அமைக்க விருக்கிறது. அதேபோல் நேரடியாக வியட்நாமிற்கு விமான சேவை துவக்க இரண்டு நாடுகளில் அரசு மட்ட அளவில் 2011ல் ஒப்பந்தம் போடப்பட்டு இந்தாண்டு இறுதிககுள் துவங்கும் என் எதிர்பார்க்கின்றனர்.

அனுபவங்களிலிருந்து படிப்பினை கற்றுக்கொள்ளுதல்
அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டிய அம்சங்கள் குறித்து வியட்நாமிய பிரதமர் நீயூன் டான் டங் கூறும் போது,.. மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்னும் மக்களுக்கு கூடுதலான முறையில் கொண்டு சேர்ப்பதில் முன்னேற வேண்டியுள்ளது. குறிப்பாக சந்தை விலையேற்றத்தை கட்டுக்கொள் கொண்டு வர நடவடிக்கை தேவைப்  படுகிறது.
அதேபோல்  சமூக வளர்ச்சிக்கான மொத்த முதலீடு இன்னும் அதிகரிக்க வேண்டி யுள்ளது. தொழில் வளர்ச்சியும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியும் மெதுவான வேகத்தி லேயே முன்னேறுகிறது. 5.5 சதம் இலக்கு தீர்மானித்து 5.4 சதமே எட்டப்பட்டுள்ளது.  அதே பண்பாட்டின் இடையூறாக நவீன சாதனமான இணையதளங்கள், ஊடகங்கள் வேறுவிதமான வாழ்வியல் முறையை கற்றுத்தருகின்றன. இதனை எதிர்த்த போராட்டத்தையும் வலுவாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  
நவீன தாராள உலகமயமாக்கல் கொள்கைகளும், விரிவடைந்து வரும் உலக சந்தையும்,  புதிய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பல்வேறு மாற்றங்களை நாடுகளின் மீது திணித்து வருகிறது. அது வளர்ச்சியையும் உருவாக்குகிறது. பல தீமைகளையும் விளைவிக்கிறது.  இந்த விளைவுகளை சரியான முறையில் உள்வாங்கிக் கொண்டு தேச கட்டுமானத்திலும்,  மக்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதிலும் மாற்றம் காண வேண்டிய மிகப் பெரிய படிப்பினை கண் முன்னே உள்ளது.
தேசம் தழுவிய அளவில் எடுக்கப்படும் முன்முயற்சிகள் அமுலாக்கமும், உள்ளூர் மட்ட அளவிலும், மாகாண அளவிலும் அதே வேகத்தில் செயல்படுத்துவதில் பலகீனம் உள்ளது. இதனை கீழ்நிலை நிர்வாக அமைப்பு முறையும், கட்சியின் தலைவர்களும் கண்காணித்து முறைப்படுத்திட வேண்டும்.
இறுதியாக ஒரு சோசலிச அரசு தனது திட்டமிடலில் செயலாக்கம் குறித்து அவ்வப்போது அதன் உண்மை நிலை, புறச்சூழல், பயன்பாடு குறித்து கண்காணித்து செழுமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் ஐந்தாண்டு திட்டத்தன் வரும் ஆண்டுகளில் 2015க்குள் வியட்நாமிய அரசும், கம்யூனி°ட் கட்சியும் செய்ய வேண்டிய முக்கியமான இலக்கை  சுட்டிக்காட்டுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 2200-2300 யுஎஸ் டாலர் (4.6கோடி டாங்) தனிநபர் வருமானத்தை 2015க்குள் ஈட்டிவிடுவோம்.
நுகர்வோர் விலைகுறியிட்டென் ஆண்டுக்கு 7 சதமாக்கப்படும்.
ஏற்றுமதி அளவு ஆண்டுக்கு 10 சத வளர்ச்சியும்,  முதலீடு ஜிடிபியில் 32 சதமாக உயர்த்தப்படும்.
ஆண்டுக்கு  3 முதல் 3.2 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவது.  நகர்புற வேலையின்மை அளவை 4 சதத்திற்குள் குறைத்திடுவது. பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை 55 சதமாக உயர்த்திடுவது.
சாதாரண ஏழை எளிய மக்களின் அளவை 1.5 முதல் 2 சதத்திற்குள்ளாக குறைத்திடுவது. பின்தங்கிய மாவட்டங்களில் 4 சதம் என்ற அளவிற்கு குறைப்பது.
42 சதம் வனங்களை பாதுகாக்க கூடுதல் முயற்சி எடுப்பது.  
கம்யூன் கிளினிக் உள்ளிட்டு அனைத்து மருத்துவ வளாகங்களிலும் 10000 பேருக்கு 22.5 படுக்கைகள் என்ற அடிப்படையில் அனைவருக்கும் மருத்துவம் என்பதை உறுதிப்படுத்துவது.
பாதுகாக்கப்பட்ட துhய்மை குடிநீர் கிராமப்புறத்தில் 84 சதம் பேருக்கும்,  நகர் புறத்தல் 80 சதம் பேருக்கு கிடைத்து வருகிறது. இதனை இன்னும் கூடுதல் படுத்துவது. அதே நேரத்தில் வேகமாக சுற்றுப்புற சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது.  இதனை எதிர்கொள்ளும் விதத்தில் கழிவு நீரை சுத்தப்படுத்தி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் அளவை 80 சதத்திற்கு உயர்த்துவது.

சொல்லிருந்து செயலை நோக்கி
உண்மையாய் இருத்தல், போற்றுதல் என்ற இரண்டு நல்லொழுக்கங்களில் ஹோசிமின் உறுதியாக இருந்தார். அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றார்.  வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கோட்பாடுகளை தாங்கி நிற்கிறது. ஆம்  தொன்மையான முதாதையர்களின் வாரிசுகள், நான்காயிரம் ஆண்டுகளின் வரலாறு உடையது. அந்நிய படையெடுப்பாளர்களுக்கெதிராகவும், விடுதலைக்காகவும் போராடியவர்கள். எனவே தன் நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையுடனும் நடந்து கொள்வது முதல் கடமை,.. ஒவ்வொருவருக்கும் பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உண்டு. அவர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும், உயர்வாக மதிக்க வேண்டும், ஏனெனில் உங்களுக்கு வாழ்வு அமைத்துக் கொடுத்தவர்கள் அவர்கள். இது இரண்டாவது கடமை. இந்த இரண்டு கடமைகளான விசுவாசமும், போற்றுதலும் ஒன்றோடென்று இணைந்தவை. என்ற இந்த கோட்பாட்டை உறுதியாக பின்பற்றி நிற்கின்றன.  அதனால் தான் வெட்டுகிளிகளால் யானையின் குடலை  பிடுங்கி எறிய முடியும் என்று நம்பிக்கையோடு யுத்தகாலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் சேர்த்து சொன்னார். ஹோசிமின். ஆம்,..
“நம் மலைகள் எப்போதும் நம்மோடுதான்
நம் ஆறுகள் எப்போதும் நம்மோடுதான்
நம் மக்கள் எப்போதும் நம்மோடுதான்
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவர்
நம் நாட்டை நாம் மீண்டும் உருவாக்குவோம் புதிதாய்
இன்னும் பத்துமடங்கு அழகாக.,’’