”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

அன்பின் வழியில் இவ் வையகம் செழிக்கட்டும்,.


இன்றைய சூழலில் இந்தியாவில் மதத்தின்பெயரில் மக்களை பிளவுபடுத்துவதும், சாதிய ஏற்றத்தாழ்களின் மூலமும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் மூலமும் மக்களை பிரித்து வைக்கும் நிகழ்ச்சிகளை முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் செய்து வருகிறது. தற்போதைய மத்திய அரசு கார்ப்ரேட், ஆர்எஸ்எஸ் கால்களில் ஆட்சி செய்கிறது. எனவே கார்ப்ரேட் சுரண்டலுக்கு அடையாளத்தின் பெயரால் மக்கள் பிரிக்கப் படுவதும், அதன் மூலம் கேள்விக் குள்ளாகாத சுரண்டலை நடத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

மக்களை பிரிக்க பெரும்பான்மை, சிறுபான்மைவாதத்தை கையில் எடுத்துள்ளது மதவாதம், ஆண்ட சாதி, ஆளப்படும் சாதி என்ற சாதிய பெருமையை சாதியவாதம் கையில் எடுத்துள்ளது. இதற்காக தங்களது மதம், சாதிக்கு எதிரான எதிரியை வரையறுப்பதன் மூலம் தனது மதத்தினரையும், சாதியினரையும், இனத்தவரையும் தக்க வைப்பது. இந்த நடவடிக்கையை இந்து மதத்தின் பிரதான தோற்றுவாயான இந்து மகாசபை 1920ல் துவங்கிய போதே ஆரம்பித்து விட்டனர். 1925ல் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பையும், 1964ல் விஸ்வஹிந்து பரிசத் அமைப்பையும்,  1977ல் ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சியாகவும் துவங்கப்பட்டது. 

இதன் துவக்கக் கால தலைவர்களில் வி.டி. சாவர்க்கர் “இந்துக்களை இராணுவமயமாக்கு, இராணுவத்தை இந்துமயமாக்கு” என்றார். இந்தியாவில் நடைபெற்ற பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்து மத சாமியார்களும் அவர்களுக்கு பின்னணியில் இந்திய இராணுவத்தை சேர்ந்த அதிகாரிகளும் இருந்தது விசாரணையில் வெளிவந்தது. அன்றைய விதைப்பின் தொடர்ச்சிதான் இத்தகைய அறுவடைகள்,.

இந்துக்களை திரட்ட அவர்கள் முன்வைத்த கோஷம் யார் இந்து? என்ற கேள்வியை முன்வைத்து “ தந்தை ( பித்ரு ) பூமியை புனிதமாக கருதுகிறவன் யாரோ அவனே இந்து என்ற” பதத்தை முன் வைத்து தந்தையர் நாடு என்ற கோட்பாட்டை ஆரம்பத்திலேயே உருவாக்கி விட்டார்கள். ஏற்கனவே சமூக அமைப்பு முறைக்குள் உள்ள ஆணாதிக்க சிந்தனைக்கு வலுவான தீனிபோடும் ஏற்பாட்டை இன்றைய மத பழமை வாத கருத்துக்கள் வலுப்படுத்தி வருகின்றன. இந்த அமைப்புகளின் தோற்றங்களின் பின்னணியில் ஆட்சி அதிகாரத்தில் கிடைத்த வாய்ப்புகளை பிஜேபி மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டது.

இன்று மோடி ஆட்சியில் நடைபெறும் மத துவேசம் மட்டுமல்ல,. வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே அதற்கான திட்டங்களை துவக்கி விட்டார்கள். 1995ல் வாஜ்பாய் இந்துக்களைஅமைப்பாக்குவது (organizing), இசுலாமியரைஉட்கொள்வது (assimilation) அல்லது அவர்களை செறித்துக்கொள்வது அல்லது அவர்களை விரட்டுவது, மறுப்பது, ஒதுக்குவது இல்லையென்றால் சலுகைகள் வழங்கி திருப்திப் படுத்துவது என்பதே வாஜ்பாயின் வழிமுறையாக இருந்தது.  இசுலாமா? இந்தியாவா ? என்ற கேள்விக்கு இறுதியில் இந்தியாவை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான காரண காரியங்களை உருவாக்குவது. 

மோடியின் இன்றைய ஆட்சிக்காலத்தில் ஆர்எஸ்எஸ் மேற்கண்ட திட்டத்திற்கான முழக்கங்களில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள்,  பெண்கள் குறித்து தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் கதைசொல்லி மோகன்பகவத் : முஸ்லீம், கிறிஸ்தவர்கள் இந்துக்களின் வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். ஏன்னா இந்தியா ஒரு இந்து நாடு,. அதேபோல் கோட்சே காந்தியை கொல்லாமல் நேருவை கொன்றிருக்க வேண்டும் என்கிறார். அன்னை தெரசா சேவை செய்தே மதம் மாத்தறதுக்குதான் ! இப்படி மோகன் பகவத் துவக்கி வைக்க பிஜேபி கட்சியினரும், இந்து மத சாமியார்கள் போர்வையில் உள்ள இந்து மதவெறியர்களும் ஆளாளுக்கு சில விஷக் கருத்துக்களை கக்க ஆரம்பித்துவிட்டனர். அவற்றில் சில,.
பொன்னுங்க வீட்ல இருந்தா பிரச்சனையே கிடையாது. எதுக்குமா வெளியே வந்துட்டு ? அதனால்தான் பிரச்சனை எல்லாம் - மோகன்பகவத்
வேலைக்கு போற பெண்கள் எல்லாம் மோசம் - சங்காரசாரியார்
இந்து பெண்களை பத்திரமா பாத்துங்க! வேற மதத்துப் பசங்களை லவ் பன்ற இந்து பொண்ணுங்க சரியா வளர்க்கப்படலைனு அர்த்தம்,. 
ஒரு இந்து பெண்ணை முஸ்லீமா மாத்துனா ? 100 இஸ்லாமிய பெண்களை இந்துவாக மாற்ற வேண்டும் !
பாகிஸ்தானே இந்து நாடுதானே. நம்ம பீஷ்மரே அங்கே சுத்திக்கிட்டு இருந்தாரு அதனால அதை இந்து நாடாக மாத்தியிருந்தால் அப்பதான் அமைதி திரும்பும்.
மாட்டுக்கறி திங்கறதுனாலதான் பூகம்பம் வருதாம்!
ராகுல் காந்தி மாட்டுக்கறி தின்னுட்டு கேதார்நாத் போனதாலதான் நேபாளில் பூகம்பம் வந்தது- சாக்பஷிமகராஜ்
கிருஷ்ணர் தான் மோடி அவதாரம் எடுத்து நேபாளுக்கு சென்று உதவினார். இராமர் தான் மோடி அவதாரம் எடுத்துள்ளார் - சாத்வி நிரஞ்சன் ஜோதி.
அதிக குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இராமரோட ஆட்சி வேணுமா? முறை தவறி பிறந்தவங்க ஆட்சி வேணுமா ?
கான் நடிகர்களை புறக்கணிப்போம் - சாமியார் சாத்வி பிராச்சி
ரஜினிகாந்த் திப்புசுல்தான் படத்தில் நடிக்கக்கூடாது.
காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப் மசூதி கட்டினார். அனுமதி கொடுத்தா அனைத்து மசூதியிலும் பிள்ளையார், கௌரி, நந்திக்கு சிலைகளை வைப்பேன். தாஜ்மகால் இந்து கோவில் தெரியும்ல ?
புகையிலையால் கேன்சர் வராது. டெய்லி சரக்கை போட்டு 60 சிகரெட் குடிச்சாலும் ஒன்று ஆகாது. சர்க்கரை நோய்க்கு சர்க்கரையை தடை செய்ய முடியுமா? நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் தீலிப்காந்தி.
மோடியை ஆதரிக்காதவங்க பாகி°தான் கிளம்புங்க - கிரிராஜ் சிங்.
டெல்லி நிருபயா பாலியல் வன்முறை கொலை குறித்து “அந்த பொண்ணு அண்ணான்னு அழுதுக்கிட்டே அவங்க கால்ல விழுந்திருந்தா இப்படி நடந்திருக்குமா ? - ஆசாராம் பாபு,. 
மசூதிகள் வெறும் கட்டிடங்களே,. அவைகள் வழிபாட்டுதலங்களல்ல - சுப்பிரமணிய சுவாமி.
370 சட்டபிரிவு நீக்கம், பொதுசிவில் சட்டம் அமலாக்கம், ராமர் கோவில் கட்டுவது, தாய்மதம் திரும்புதல் ( கப்வார்சி), பகவத்கீதை புனித தேசிய நுhல், மாட்டுக்கறிக்கு தடை,  லவ்ஜிகாத், கோட்சேவிற்கு சிலை வைப்பது, காந்தி தேசவிரோதி, மோடிக்கு கோவில் என்று  மத ரீதியான இத்தகைய  கருத்துக்களும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக  சிறுபான்மை மக்களையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை பற்றி  மோசமான கருத்துக்களை உருவாக்குவதும், நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பதட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 
இவற்றோடு இந்து வர்ணாசிரமம் சொல்லும் சடங்குகளையும், பழமைவாத கருத்துக்களையும் கடைபிடிக்க வேண்டும் என்ற பிரச்சாரமும், அதற்காக அவர்கள் உருவாக்கி வைத்துள்ள நூற்றுக்கணக்கான அமைப்புகளும் தினமும் ஒரு வெடியை போட்டுக்கொண்டே இருக்கிறது. பாபர் மசூதியில் ராமர் சிலை வைத்தது முதல் கோத்ரா ரயிலில் கொண்டு வைத்தது வரை ஏராளமான நிகழ்வுகளை பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக ஆரம்ப காலம் தொட்டு  இந்து மதத்திற்குள்ளேயே ஏராளமான சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள். அவர்கள் தொடர்ச்சியாக சித்தர்கள் துவங்கி சைவ, வைணவத்திற்கான போராட்டத்தை நடத்திய ஆதிசங்கர் துவங்கி ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, புத்தர், விவேகானந்தர், ரானடே, அய்யன்காளி, நாரயணகுரு, வைகுந்தர், வள்ளலார், காந்தி, அம்பேத்கார் வரை ஏராளமான பேர் இந்து மதத்திற்குள் நடைபெற வேண்டிய சீர்திருத்தம் குறித்து வலுவாக பேசியுள்ளனர். அதற்காக போராடி சில மாற்றங்களையும் கொண்டு வந்தனர். 

குழந்தை திருமண ஒழிப்பு, விதவை மறுமணம், கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல், சதிக் கொடுமை, பெண்ணை வீட்டில் வைத்து பூட்டி வைப்பது, மொட்டையடிப்பது, கலராடை உடுத்த தடை, வேலைக்கு போகக்கூடாது, மேலாடை அணியக்கூடாது என ஏராளமான கட்டுப் பாடுகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டது. இந்த நடைமுறைக்கு எதிராகவும் சீர்திருத்தவாதிகள் போராட்டங்களை நடத்தினர்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தான் சாதி, சமயம் பொய் என சாடினார். பசித்தவனுக்கு உணவை கொடுத்தால் கடவுளை காண்பாய் என்றார். விவேகானந்தரும் கூட பசித்தவனுக்கு உணவுக் கொடுக்காமல் பகவத்கீதையை கொடுக்காதே, பசித்தவனுக்கு உணவை கொடு என்றார்.  
ஊரெல்லாம் அன்பு செழிக்க வேண்டும், 
உயிரெல்லாம் அதனால் களிக்க வேண்டும்,
நேரிலாப் புதுமைவளம் பெருகி நிற்கும்,
அன்பு சமுதாயம் வளர்க்க வேண்டும். - நாமக்கல் கவிஞர்.

இதனைதான் பாரதியும் தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார். பகத்சிங் கூட தான் வாழ்ந்த 23 வயதிற்குள் ஒரு புரட்சியாளனுக்குள் இருக்கும் அன்பை, நேசத்தை, பாசத்தினை மிகச்சரியாக வெளிப்படுத்தினான். சுகதேவ்க்கு கடிதம் எழுதிய போது “நான் எல்லா ஆசைகளும், நம்பிக்கைகளும் உடையவன் தான் அதனை தேவையான நேரத்தில் உதறித்தள்ளிவிட முடியும். அதுதான் உண்மையான தியாகமும் கூட என்று உரைத்தான். மேலும் மாஜினிக்கு ஏற்பட்ட காதல் உணர்வே அவனின் புரட்சிகர உணர்வை காப்பாற்றி அவனை போராளியாக மாற்றியது. இல்லையென்றால் அவன் சிந்தனை  இழந்த மனிதனாக மாறியிருப்பான் என்று காதல் உணர்வு குறித்து சரியான புரிதலை உருவாக்கியவன் பகத்சிங். 

ஜென்னியின் காதல் இல்லையென்றால் மார்க்சினால் நிலைத்து வாழ்ந்திருக்க முடியாது. மூலதனத்தை படைப்பதற்கு அவன் இழந்த காலத்தையும், குடும்பத்தையும் தாங்கி உறுதுணையாக ஜென்னி நின்றதில் தான் இந்த உலகம் இன்றும் உய்ந்து கொண்டே இருக்கிறது.

செல்லாமாவின் காதலில் தான் பாரதியின் வெற்றி அடங்கியிருந்தது. குரூப்ஸ்கயாவின் காதலில் தான் லெனினின் உழைப்புக்கு உரம் சேர்த்தது. மேடம் கியூரியின் காதலிலும், உழைப்பிலும் தான் பியூரி கியூரி, மேடம் கியூரி இருவரும் நோபல்பரிசு பெற காரணமான ரேடியம் கண்டுபிடிப்பு சாத்தியமானது. 

உலகை மாற்றிய புரட்சியாளர்களின் தேசப்பற்றும், மக்கள் மீது வைத்திருந்த காதலும், அன்புணர்ச்சியும் தான் மாற்றங்களின் அடிப்படையாக மாறியது. 
கடைசி மரத்தையும் வெட்டினார்கள்
கடைசி மீனையும் பிடித்தார்கள்
காற்றின் கடைசித்துளியையும் மாசுபடுத்திய பின்னர்
ஆற்றின் கடைசி சொட்டு நீரை விஷமாக்கிய பின்னர்தான் 
தெரியவரும் 
இந்த பணத்தை வைத்து தின்ன முடியாது என்று - அமெரிக்க செவ்விந்தியர்கள் கவிதை பறை சாற்றினார்கள். இதைத்தான் “ காக்கை குருவி எங்கள் சாதி, நீழ்கடலும் மலையும் எங்கள் கூட்டமென்று” பாரதியும் அழகுப்பட சொன்னான். மானுட மாண்புகளை மேம்படுத்திட “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை, மானிட சமுத்திரம் நானென்று கூவு, புவியை நடத்து, பொதுவில் நடத்து” என்றானே பாவேந்தர் பாரதிதாசன்,. யாரு மேல கீறினாலும் இரத்தம் ஒன்னுதான், ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தா மாதம் தான் என்று ஊருக்கு நூறு சாதிகளாய் ஒருதாய் மக்கள் சாவது ஏன் கேட்டானே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இத்தகைய சமூக ஒற்றுமை, இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுத்தவர்கள் நம்முடைய முன்னோர்கள். 

புறாக்கள் கோவிலில் அமர்ந்தாலும், தர்காவிற்கு சென்றாலும், தேவலாயத்திற்கு சென்றாலும் எல்லா இடங்களிலும் அழைக்கப்படுவது புறா என்று தான். ஆனால் மனிதன் மட்டும் கோவிலுக்கு சென்றால் இந்து, மசூதிக்கு சென்றால் இஸ்லாமியன், சர்சுக்கு சென்றால் கிறிஸ்தவன், பௌத்த பிட்சுக்கு சென்றால் பௌத்தன் என்றும், குருத்வாராவிற்கு சென்றால் சீக்கியன் என்று பல மதங்களின் பெயரில், சாதியின் பெயரில் அழைக்கப்படுகிறான். 

வைரமுத்து ஐந்தறிவுக்கும், ஆறறிவுக்கும் இடையே பட்டிமன்றம் நடத்தியபோது குருவிகள் கூடுகளை கட்டி ஒருபோதும் வாடகைக்கு விடுவதில்லை, ஆனால் மனிதர்கள் வீடுகளை கட்டினால் வாடகைக்கு விடுகிறான் என ஏராளமாக இயற்கையின் படைப்பு குறித்து பேசினான். அவைகள் அன்பாக இருந்தன. அவர்கள் அன்பற்று இருக்க கற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் மனிதத்தை எங்கே தேடுவது. கடவுள் இருந்தால் அன்பின் வடிவில் இருப்பான்.  அன்பே சிவம் என்று மதம் போதிக்கிறது. போதிக்கும் மதத்திற்குள் 3200 சாதிகளால் அன்பிற்கு எதிரியாய் நடந்துகொள்கிறார்கள். 

ஒரு பேனா, ஒரு புத்தகம், ஒரு ஆசிரியர் கேட்ட யூசப் மலாலாவைத்தான் இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி ஏன் வேண்டும் என்று சுட்டார்கள் இ°லாமிய மதவெறியர்கள். இப்போதும் உலகின் பல்வேறு பகுதிகளில் மத தீவிரவாதம் மக்களை கொன்று குவித்து வருகிறது. சிலுவைப் போர் காலம் தொட்டு இன்று வரை உலகில் மக்கள் அதிகம் இறந்தது மதங்களுக்கான போரில் தான்.  மனிதம் எங்கே போனது.

இந்து மன்னனாக காட்டப்படும் வீர சிவாஜி இஸ்லாமியர்களின் நண்பனாக, 33 படைப்பிரிவுகளில் இஸ்லாமியர்களை கொண்டு, விவசாயிகளின் தோழனாக வாழ்ந்தவன் சிவாஜி. இந்து மத அமைப்புகள் சொல்வதைப்போல் அல்ல சிவாஜி.

இஸ்லாமிய மன்னர்களில் திப்புசுல்தான், அக்பர், பாபர், ஹிமாயூன் எல்லோரும் இந்துக்களின் நண்பர்களாக மனிதநேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் போற்றியவர்கள் என்பதில் ஏராளமான சான்றுகள் இன்றும் உள்ளன. ஏராளமான இந்து கோவில்களுக்கு உதவி செய்ததில் இருந்து, இந்து பெண்களை பாதுகாத்தது வரை உதாரணங்கள் ஏராளம். ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில்தான் குமரகுருபர் வாரணசியில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்து மத சமயசொற்பொழிவை நடத்தினார்.  மாலிகாபூர் என்ற மன்னனின் படையெடுப்பின் போது இராமேஸ்வரம் கோவில் சிலையை, நகையை பாதுகாத்ததில் இராமேஸ்வரம் மீனவர்களுக்கு பங்கு இருந்தது.

இத்தகைய மனித நேயத்தை, மாண்புகளை பாதுகாத்த மதசார்பற்ற தன்மையின் வேர்கள் நமது மண்ணிலே ஆழ வேறுன்றி உள்ளது.  அதன் வழியில் இந்தியாவின் வானவில் பண்பாட்டை பாதுகாக்க அன்புதனில் வையகமும், இந்தியாவும் செழிக்க முழுமையான இளைஞர்களை உருவாக்குவோம். அதற்கு தேவை இளைஞர்களால், இளைஞர்களுக்காக, இளைஞர்களுடைய அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 15 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு திண்டுக்கல் நோக்கி அறைகூவி அழைக்கிறது. 

நன்றி 
இளைஞர் முழக்கம் டிசம்பர் 2015

வெற்றுக் கோஷம் போதும் மோடி அவர்களே

வார்த்தைகள், வலுவானது முதல் உருக்கமானது வரை மிக எளிதாக உங்கள் வசப்படுகின்றன. ஆனால், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட ஒரு மனிதருக்காக குரல் கொடுங்கள் என உங்களிடம் இருந்து ஒரு சில வார்த்தைகளைப் பெற நாங்கள் ஏன் மன்றாட வேண்டியிருக்கிறது?
டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைப் பாடகர்எழுத்தாளர்

மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே,பீகார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நீங்கள் பேசியதைக் கேட்டேன். உங்கள் பேச்சு நான் இக்கடிதத்தை எழுதுவதை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்! ஆனால், மாறாக அந்தப் பேச்சு இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியே ஆக வேண்டும் என்ற உறுதியை என்னுள் மேலும் வலுப்படுத்தியது.கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நாம் ஒரு காட்சியை கண்டு வருகிறோம். அக்காட்சியை `மனித சோகத்தின் மானபங்கம் என்றே வர்ணிக்க முடியும். குற்றத்தை செய்தவர்கள் காவி, பச்சை இல்லை.. வேறு ஏதோ நிறம் சார்ந்த அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எந்த களங்கமும் இல்லை. தனி மனிதர்களாக, கட்சித் தொண்டர்களாக, ஆளுங்கட்சி உறுப்பினர்களாக, எதிர்கட்சியினராக அனைவரும் இணைந்து இரக்கம், பரிவு போன்ற உணர்வுகளின் ஆன்மாவை சிதைத்துவிட்டனர். இருந்தாலும், இவை, முற்றிலும் புதிதான நிகழ்வு அல்ல. நாம் யார் என்பதை உணர்த்தும் மற்றுமொரு அடையாளம். அவ்வளவே.பிரதமர் அவர்களே! உங்கள்மீது நான் உரிய மரியாதை கொண்டுள்ளேன். இவ்விவகாரத்தில் உங்கள் மவுனம் மட்டுமே என்னை வியப்படையச் செய்யவில்லை. எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்பிரதிநிதிகளாகிய உங்களைப் போன்றோரிடம் இப்பிரச்சனையில் மவுனம் கலைக்குமாறு கேட்டதாலேயே நாங்கள் கிண்டல் செய்யப்பட்ட விதமும், சிறுமைபடுத்தப்பட்ட விதமும்தான் என்னை பன்மடங்கு வியப்படையச் செய்துள்ளது.ஒரு மிகப்பெரிய துயரச் சம்பவத்தில் மக்கள் பிரதிநிதிகள் மவுனம்கலைக்க வேண்டும் என்ற இந்தகோரிக்கை ஏதோ அரசியல் அமைப்பினால் முன்வைக்கப்பட்டது அல்ல.
சாமானிய மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கை. அது அவ்வளவு பெரிய நியாயமற்ற கோரிக்கையா என்ன? எங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லையா? சமூக-கலாச்சார ரீதியாக மிக முக்கியமான பிரச்சனையை உங்களிடம் நேரடியாக எடுத்துரைத்து விளக்க முயற்சித்ததால் எங்களை குற்றவாளிகளாக பார்ப்பது நியாயமா?இத்தகைய சூழலில், உங்களுக்கு நான் தேர்தலில் வாக்கு அளிக்காமல் இருக்க அனைத்து உரிமையும் எனக்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன். அதேவேளையில், ஒரு பிரதமராக நீங்கள் என் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
இன்றளவில் கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதில் பிரளயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சை என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா?- அது வேறு எதுவுமில்லைஇந்திய தேசத்தின் பன் முகத்தன்மையின் எதிர்காலம் என்னவாகும்என்பதே அது. ‘அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம்என்பதே உங்கள் நிலைப்பாடு என நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இதை ஒரு தாரக மந்திரம் போல நீங்களும், உங்களைச் சேர்ந்தவர்களும் பலமுறை பயன்படுத்துகிறீர்கள். ஆனால், பிரதமர் அவர்களே தாரகமந்திரத்தை சொற்பிரயோகம் செய்தால் மட்டும்போதாது.உங்களிடம் நேரடியாக, தெளிவுபட கேட்பதற்கு எங்களிடம் பலகேள்விகள் இருக்கின்றன. கடந்தசில மாதங்களாக நிறைய துக்கசம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அவற்றின் பின்னணியிலேயே நாங்கள் இந்தக் கேள்வியைகேட்கிறோம். நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறப்பட்டாலும், தபோல்கர்,பன்சாரே, கல்புர்கி கொலைகளுக்கும், முகமது இக்லாக் அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை எங்களால் உணர முடியாமல்இல்லை. இந்நிலையில், இவ்விவகாரத்தில் உங்கள் நேரடியான பதில் வெளிவர வேண்டும். நேற்று நீங்கள்பேசியதில் ஒரு தெளிவற்ற நிலைநிலவியதால் இக்கடிதத்தை நான்எழுதுகிறேன். இது வெற்றுரைகளுக்கான நேரமல்ல. உங்களது கண்டனம் எந்தவகையில் இருக்க வேண்டும் என்றால், அதை கேட்கும் பொதுமக்களுக்கு இனி இந்திய தேசத்தில் யாரும் அவரது நம்பிக்கைக்காக, அவரது பார்வைகளுக்காக, அவரது உணவு பழக்கவழக்கங்களுக்காக கொல்லப்படமாட்டார்கள் என்ற தீர்க்கமான நம்பிக்கையை விதைப்பதாக இருக்க வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி தடையும், அதை துஷ்பிரயோகம் செய்ததுமே தாத்ரியில் நடந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறினால் அதில் என்ன தவறு? இத்தகைய சூழலில், இந்து அடிப்படைவாத சக்திகள் சில, ‘இந்துக்களே தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்என்ற வாதத்தை முன்வைப்பது சலிப்படையச் செய்கிறது. கடும்கண்டனத்துக்குள்ளாக வேண்டிய ஒரு சம்பவம், இனிமேல் நடைபெறவிடாமல் தடுக்கப்பட வேண்டிய ஒரு சம்பவம்தான் தாத்ரியில் நடந்துள்ளது என்பதே நிதர்சனம். ஆனால்,அதை எங்கேயாவது எப்போதாவது எதேச்சையாக நடைபெற்ற சம்பவம்போல் சித்தரிக்கும் முயற்சி நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டும் அல்லாமல், ஊடகங்களேதாத்ரி சம்பவத்தை மிகைப்படுத்திவிட்டன என்ற விமர்சனம் வெறுக்கத்தக்கது.குடியரசுத் தலைவர் நம் நாட்டின் அடையாளம். அவரது வார்த்தைகள் நம்மை வழிநடத்திச் செல்கின்றன.
ஆனால், உண்மையில் தேசத்தை செலுத்துவது நீங்களே.எனவே தேசத்தில் நிகழும் எல்லாவினைகளுக்கு, எதிர்வினைகளுக்கும், நல்லிணக்கத்துக்கும், மேம்பாட்டுக்கும், வலிமைக்கும் நீங்களே காரணமாக இருக்க முடியும்.முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நீங்கள் எதையெல்லாம் தீமை எனப் பார்த்தீர்களோ அதை எல்லாம் அழித்தொழிப்பதே உங்கள்ஆட்சியின் கடமையாக இருக்கும்என்றீர்கள். அது உண்மையென்றால், குழப்பவாதிகளிடம் தெளிவாகப் பேசுங்கள். அவர்களிடம் கோரிக்கைகளை வையுங்கள், இல்லையேல் அவர்களை கட்டுப்படுத்தவாவது செய்யுங்கள். ஆனால், தயவுசெய்து வாக்குவங்கியை வைத்துவிளையாடாதீர்கள். நீங்கள் அத்தகைய அரசியல் விளையாட்டை விளையாடுவதாகவே தெரிகிறது.அதுமட்டுமல்ல பிரதமர் அவர்களே, முந்தைய பிரதமரைப் போல் நீங்கள் மவுனப் பார்வையாளர் அல்ல. நீங்கள் பேசவும், பேச்சு மூலம்வசீகரிக்கவும் விரும்புகிறீர்கள். லால் கிலா, மேடிசன் சதுக்கம், துபாய், சிலிகான் வேலி, கூகுள், ஃபேஸ்புக் தலைமையகம் என நீங்கள் பல இடங்களிலும் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். உங்கள் தாய்சந்தித்த துன்பங்களை பகிர்ந்துகொண்டு நீங்கள் கலங்கியதைப் பார்த்திருக்கிறோம்.வார்த்தைகள், வலுவானது முதல் உருக்கமானதுவரை மிக எளிதாக உங்கள் வசப்படுகின்றன. எனவே, மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட ஒரு மனிதருக்காக குரல் கொடுங்கள் என உங்களிடம் இருந்து ஒரு சில வார்த்தைகளைப் பெற நாங்கள் ஏன் கோஷமிட வேண்டியிருக்கிறது?ஒரு துக்க சம்பவம் நடந்த பிறகும்கூட உங்கள் ஆட்சியின் மூத்த அமைச்சர்களும், சிலமுக்கியப் பிரமுகர்களும் மனிதநேயமற்ற வார்த்தைகளை சர்வ சாதாரணமாக கூறிவருகின்றனர். தாத்ரி சோக சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்காக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் நீங்கள் பேசிவிட்டதாக அவரே கூறுகிறார். ஆனால், மோடி அவர்களே, இது உங்கள் இருவர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நீங்கள் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்வதற்கு. இது இந்தியர்கள் அனைவர் சார்ந்தவிஷயம். எனவே நீங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரடியாக கண்டிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் விமர்சிக்கும்போது நீங்கள் அஞ்சானாக இருக்கிறீர்கள். அதே அஞ்சாமையையும், அது போன்ற வார்த்தை ஜாலத்தையும் உங்கள் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களை கண்டிக்கநீங்கள் ஏன் பயன்படுத்துவதில்லை?ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து மக்களை அந்நியப்படுத்திவருகின்றன. இந்நிலையில், பிரதமராகவும், பாஜக-வை இயக்கும் மாபெரும்சக்தியாகவும் இருக்கும் மோடி அவர்களே, இந்துத்துவா அமைப்புகளுக்கும், கட்சிக்கும் நீங்களே பொறுப்பு. அதற்குமட்டுமல்ல சங்பரிவார் அமைப்புகள் தூண்டிவிடும் சில அநாகரிக நிகழ்வுகளுக்கும்தான்.நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பதில் எப்போதுமே பகிரங்கமாக பெருமைப்பட்டுள்ளீர்கள். சங்பரிவார் அக்குடும்பத்தின் ஓர் அங்கம். எனவே, அந்த அமைப்பை எப்போது கொண்டாட வேண்டும்; அதிலிருந்து எப்போது விலகி நிற்க வேண்டும் என்ற முடிவை நீங்கள் எடுக்க முடியாது. இரண்டுவிதமான நிலைப்பாடுகளுக்கு இங்கு இடமில்லை.உங்கள் கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள், “எதைப்பற்றி பகிரங்கமாக பேச வேண்டும். அதை எங்கு பேச வேண்டும் என்ற முடிவு முற்றிலும் உங்களுடையதுஎன்று. அதில்மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால்,அதேவேளையில் மக்களின் மகிழ்ச்சிக்கு உலைவைக்கும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து பேசுவது அவசியம் என உங்களுக்கு தோன்றவில்லை என்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கூட கடவுளிடம் நீதி கேட்டு முறையிடும் சூழல் உருவாகும்.ஏனெனில், இது மதுச்சார்பின்மை பற்றிய விவகாரம் அல்ல, இது மனிதம் சார்ந்த விவகாரம். உண்மையான, உணர்வுப்பூர்வமான விவகாரம்.
நீங்கள் சமூகவலைதளங்களை கையாள்வதில் தேர்ந்தவர். அதைமார்க் ஸக்கர்பக்கரிடம் பகட்டாக காட்டியிருக்கிறீர்கள். எனவே, நடைபெற்ற பல்வேறு துயர சம்பவங்கள் தொடர்பாக இணைய உலகில் பதிவான கருத்துகளை நிச்சயமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைக்கண்ட பிறகுகூட அவற்றிற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றவில்லையா?இறுதியாக ஒரு கேள்வி. “இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளவிரும்புகிறார்களா? அல்ல இருவரும்இணைந்து வறுமைக்கு எதிராக சண்டையிட விரும்புகிறார்கள் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இது என்னைப் பொருத்தவரை உங்களிடம் இருந்து வந்த மற்றுமொரு வெற்றுக் கோஷம்.ஏனெனில், வறுமை என்பது மதம், இனம் ஆகியவற்றில் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு பிரச்சனை. எனவே, இந்த சவால்களை நாம் மிகுந்த நேர்மையோடும், உள்ளத் துணிவோடும் அணுகாவிட்டால், வறுமை மட்டுமல்ல நமது தேக்கநிலையும் என்றைக்குமே குணமாகப்போவதில்லை.-