”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

தோழர் லெனின்

 


மார்க்சையும், ஏங்கெல்சையும் மனமார விரும்பியவர் அறிவுப்பூர்வமாகப் புரிந்தவர், புரிந்து கொண்டதை உழைக்கும் மக்களுக்கு விளக்கியவர்.

“கற்க கசடற  கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத்  தக”


என்ற குறளுக்கேற்ப மார்க்சியத்தை கசடின்றிக் கற்று அதன்படி வாழ்வையும் நெறிப்படுத்திக் கொண்ட தலைவர் தோழர் லெனின் அவர்கள் 1924 ஜனவரி 21 அன்று மாலை மாஸ்கோ அருகில் உள்ள கோர்க்கி என்ற கிராமத்தில் காலமானார். அவரது உடல் மாஸ்கோ கொண்டு வரப்பட்டது.

லெனினுக்கு மரியாதை:

நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. லெனினை வணங்க மக்கள் சாரைசாரையாக அணி வகுத்தனர். அவரது உடலைப் புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம் பாதுகாப்போம் என்ற முடிவு கட்சியில் எடுக்கப்பட்டது. லெனினது துணைவியார் குரூப்கயா கூட இதனை விரும்பவில்லை. சோவியத் யூனியனில் இருந்த மக்களின் அன்றைய நிலை, உணர்வு இவற்றைக் கணக்கிலெடுத்து தோழர் ஸ்டாலினின் வற்புறுத்தல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டது.


ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்புடன் கண்ணாடிப் பேழையில் பாதுகாக்கப்பட்டிருந்த லெனினை வணங்கினர். இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்களும் தொலை தூரத்தில் இருந்து வந்து லெனினை வணங்கினர். அப்போது பிறக்காதவர்களும் பல ஆண்டுகள் கழித்து அவரைக் கண்டனர். மரியாதை செலுத்தினர் (இந்தக் கட்டுரையாளர் உட்பட)

1924 ஜனவரி 21 அன்று சோவியத்துக்களின் மாநாடு நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் ஆற்றிய உரை மகத்தானது.

தோழர்களே!

கம்யூனிஸ்ட்களாகிய நாம் தனிச் சிறப்பு மிக்க வார்ப்புகள். தோழர் லெனின் அவர்களது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். தோழர் லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் அங்கத்தினர்கள். இதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருந்து நெருக்கடிகள், தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்வது எல்லோராலும் முடியாது. உழைக்கும் வர்க்கத்தின் புதல்வர்களாலும், ஏழ்மை அதிலும் போராட்ட உணர்வு கொண்டவர்களால் தான் முடியும்.


இதனால் தான் லெனினிய வாதிகளாக உள்ள நம் கட்சி கம்யூனிஸ்ட்களின் கட்சி, உழைக்கும் வர்க்கத்தின் கட்சி என அழைக்கப்படுகிறது. நம்மிடமிருந்து நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள தோழர் லெனின் கட்சியின் உறுப்பினர் என்ற பெரும் பொறுப்பை தூய்மையுடன் பாதுகாக்க நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.


இம்மாநாட்டின் மூலம் அவருக்கு நாம் கூறுகிறோம். தோழர் லெனின்! உங்களது கட்டளையை நிறைவேற்றுவோம். நேர்மையுடன் நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம். கண்ணின் மணிபோல் கட்சி ஒற்றுமையைக் காக்கக் கோரி இருக்கிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாக்க வலுப்படுத்தக் கோரி இருக்கிறார்.


தொழிலாளர், விவசாயிகள் அணிவகுப்பை முழு ஆற்றலுடன் வலுப்படுத்தக் கோரி உள்ளார். சோவியத் ஒன்றியங்களின் குடியரசுகளை வலிமைப்படுத்தக் கோரி உள்ளார்.


கம்யூனிஸ்ட் அகிலத்தின் கோட்பாடுகளுக்கு உண்மையுடன் நடந்து கொள்ளக் கோரியுள்ளார்.


தோழர். லெனின் அவர்களே! இக்கடமைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம்.


மேற்கண்ட நோக்கங்களை வலிமைப்படுத்த விரிவாக்கம் செய்திட எம் உறிரைத் துச்சமெனக் கருதிடுவோம் !


என்று சூளுரை செய்தார். சோகம் கப்பிய சூழலில் இது வேகம் ஊட்டுவதாக இருந்தது. இன்றளவும் உலக கம்யூனிஸ்ட்களால் ஏற்கப்பட்டு மதிக்கப்பட்டு வருகிறது.

லெனினது சடலம் தாங்கிய பெட்டியைத் தூக்கிச் செல்வதிலும் ஸ்டாலின் இருந்தார்.

 

“சிவம் பேசினால் சவம் எழும்”

 1884 ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த சிவா ( இயற்பெயர் : சுப்பராமன் ) தனது சிறுவயதில் மதுரையில் இருந்து வறுமையின் காரணமாக  திருவனந்தபுரம் சென்று அங்குள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் ( ஊட்டுப்புறையில் ) தங்கி படித்தார். தனது 15 ஆவது வயதில் மீனாட்சி என்பவரை திருமணம் செய்து மீண்டும் திருவனந்தபுரத்தில் வசித்த காலத்தில் ஆன்மிக நடவடிக்கைகளில் நாட்டம் கொண்டார். 1906ல் சிவாவின் தந்தை காலமானார்.  அந்த காலக் கட்டத்தில் தான் வங்கத்தை இரண்டாக கர்சன் பிரபு பிரிக்க அதற்கு எதிராக தேசம் முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற துவங்கின. சுதேச உணர்வின் வெளிப்பாடாய் வந்தே மாதர முழக்கம் வெளிப்பட ஆரம்பித்த தருணம்.

1907 ல் திருவனந்தபுரத்தில் தர்ம பரிபாலன சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி இளைஞர்களுக்கு தேச நலன் குறித்த அக்கறையை உருவாக்க முயற்சி மேற்கொண்டார். அரசுக்கு எதிரான நடவடிக்கை என அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கால்நடையாகவே துhத்துக்குடிக்கு வந்து சேர்ந்தார். அப்போது ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழில் செய்து வந்த வ.உ.சிக்கும் இவருக்கும் இடையே உளமார்ந்த நட்பு ஏற்பட்டது.  ஒட்டப்பிடாரத்தின் அருகில் தான் எட்டையபுரம். சொல்லவா வேண்டும் பாட்டை கட்டி எரிதழல் ஏந்திய பாரதியின் நட்பும் சேர சுதந்திர தனல் சுடர் விட்டு எழுந்தது. 

1908ல் வ.உ.சியும், சிவாவும் சேர்ந்து நெல்லை ஜில்லா முழுவதும் சுதேசி யாத்திரையும், பரப்புரையும் மேற்கொண்டு சுதந்திர கனலை மூட்டினார்கள். நெல்லை மாவட்டத்தின் இரட்டை குழல் துப்பாக்கி ஆனார்கள். சுப்பிரமணிய சிவாவின் பேச்சை கேட்டவர்கள்,.“ சிவம் பேசினால் சவம் எழும்’’ என்று சொல்லும் அளவிற்கு மிக சிறந்த மேடை பேச்சாளர். மார்ச் 12, 1908ல் இருவரும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டு கடும் காவல் தண்டனை பெற்று 1912ல் விடுதலை செய்யப்பட்ட பின்னணியில் சென்னையில் குடியேறினார்.

சென்னையில் இருந்த காலத்தில் மெரினா கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டத்தை பார்த்தால் சிறு நாற்காலி போட்டு அதில் ஏறி நின்று கொண்டு பாரதியின் சுதேசி பாடல்களை பாட ஆரம்பித்துவிடுவார். கூட்டம் நன்கு சேர்ந்தவுடன் சொற்பொழிவு ஆற்ற துவங்கி விடுவார். அந்தளவு தேச பக்த கனலை மூட்டியவர் சிவா. சென்னையில் ஞானபானு என்ற மாத இதழை துவங்கி எழுத ஆரம்பித்தார். 1915ல் சிவாவின் துணைவியார் மீனாட்சியின் மரணத்தினை தொடர்ந்து ஞானபானு நிற்க, 1916ல் பிரபஞ்ச மித்திரன் என்ற வார இதழை துவங்கி நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுத்தி வந்தார். இக்காலத்தில் 20 நூல்கள் வரை எழுதி வெளியிட்டார். 

1921ல் மீண்டும் தேச துரோக குற்றம் சாட்டப்பட்ட சிவா இரண்டறை ஆண்டு கடுங்காவல் தண்டனைக்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தான் தண்டணையின் கோர வடிவம் காரணமாக தொழுநோய் ஏற்பட்டு சிறையில் இருந்து விடுதலை அடையும் போது தொழுநோயாளியாக வெளியே வந்தார். தொழுநோயின் தீவிரத்தை சொல்லும் போது “கொடியதோர் வியாதி கொல்லுது என்னை’’ என்றார். இதே காலத்தில் வஉசி கைது செய்யப்பட்டு கண்ணனுர், கோவை சிறைகளில் அடைக்கப்பட்டார். 

சிவாவின் தொழுநோயை காரணம் காட்டி ஆங்கிலேய அரசு அவருக்கு இரயிலில், பேருந்தில் பயணம் செய்ய தடைவிதித்தது. அந்த நிலையிலும் அவர் தொழுநோய் பாதித்த பகுதிகளை வெள்ளை துணியால் சுற்றி தெரியாத வண்ணம் நடைபயணமாகவே பயணம் செய்து விடுதலை வேட்கையை ஊட்டினார். அவர் ஆந்திர மாநிலத்தில் சிறையில் இருந்த காலத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்களோடு ஏற்பட்ட நட்பு காரணமாக விடுதலைக்கு பின்பு பாரத மாதாவிற்கு கோவில் கட்ட நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பரபட்டியில் பாரதபுரத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தனது 41 வயதில் 23-7-1925ல் தனது இறுதி மூச்சை நிறுத்தினார் சிவா. 

சிவாவும், வ.உ.சியும் சுதேசி கப்பலை ஒட்டும் நிகழ்வையொட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தருணத்தில் வஉசி பேசும் போது இனிமேல் நாமே கப்பல் ஓட்டுவோம். வெள்ளைக்காரன் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஒடிவிட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்ட சிவா இடையில் தலையிட்டு மைக்கை வாங்கி “அவர்கள் வைத்துள்ள மூட்டை முடிச்சுகள்இந்தியர்களை சுரண்டியது. அதை இங்கேயே போட்டு விட்டு வெறும் கையோடு வெளியேறட்டும்என்றுசொன்னார்அந்தளவுக்கு அவர் இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்டவர். 

·                     தென்னிந்தியாவின் முதல் வேலைநிறுத்தப் போராட்டமான தூத்துக்குடி கோரல் மில் வேலைநிறுத்தம்  வெற்றி பெற கடும் முயற்சியை இரட்டையர்கள் இருவரும் மேற்கொண்டனர். 

·                     சிவாவின் நடவடிக்கைகள் அனைத்தும் அளப்பரியது. தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிட்டார். 

·                     அந்த காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திதொடர்ந்த முழங்கியவர்.

·                     பொதுக்கூட்ட மேடைகளில் வந்தேமாதரம், அல்லாஹீ அக்பர் என்று முழங்கித்தான் பேச்சை துவக்குவார். 

·                     மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தியவர். வடக்கில் திலகரைப்போல், தெற்கில் சிவா திகழ்ந்தார்.

இன்றையநவீனதாராளமயகாலத்தில்உலகஏகாதிபத்தியம்நிதிமூலதனம்என்கிறகார்ப்ரேட்வடிவத்தில்உலகவளங்களையும், மக்களின்உழைப்பையும்கொள்ளையடிக்கபல்வேறுஅடையாளங்களைமுன்வைத்துவேட்டையாடுகிறது. இந்தியாவில்சாதிய, மதஅடையாளங்களையும், திரட்டல்களைசெய்யும்வலதுசாரிகளோடுகைகோர்த்துகூட்டுகளவாணிகொள்ளையில்ஈடுபடுவதுஅம்பலமாகிவருகிறது.  சுப்பிரமணியசிவாபோன்றமகத்தானபோராளிகளின்தியாகங்கள்மக்களைதட்டிஎழுப்பும். கோடிகால்பூதமாய்இந்தியாவின்தொழிலாளிவர்க்கமும், விவசாயவா்க்கமும்போராட்டகளத்தில்புதியஇந்தியாவிற்காய்போராடிவருவதுநம்பிக்கைஅளிக்கிறது.. சுப்பிரமணியசிவாபோன்றதீர்ர்களின்தியாகங்கள்வீண்போகாது

தீக்கதிர் அக்டோபர் 4, 2021

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.தங்கவேல் Ex.M.L.A., வாழ்வும் பணியும்

 


‘’சிலருடைய  வாழ்வும் பணியும் மற்றவர்களுக்கு  வழிகாட்டுபவையாக விளங்கும் போதிலும் அவர்களுடைய பணிகளை மற்றவர்கள் தொடர்ந்து செய்து வரும் போதும் அவர்களுக்கு மரணமில்லை’’ - அலெய்டா குவேரா கூறியது.  ஒவ்வொரு உண்மையான கம்யூனிஸ்ட் பணியும் இவ்வாறு தான்  துவங்குகிறது. 

திருப்பூர் முருங்கப்பாளையத்தில் பிறந்து வளர்ந்து  பள்ளியில் படிக்கும் போதே அப்பகுதியில் இருந்த மில் தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் பாரதி படிப்பகத்தில் நாளிதழ்கள் படிப்பதையும், ஒரங்க நாடகங்கள் நடிப்பதை பார்த்தும் ஆர்வம் கொண்ட தோழர் கே.டி, கைத்தறி துண்டு நெய்யும் தொழிலும் பின்னர் பனியன் கம்பெனியிலும் வேலைக்கு சென்றார்.

1971ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து 1974ல் முழுநேர ஊழியராகி, 1975ல் பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க செயலாள ராகவும் தேர்வு செய்யப்படுகிறார்.  1978களில் நடைபெற்ற விசைத்தறிப் போராட்டத்திற்கும், 1984ல் பனியன் பஞ்சப்படி போராட்டத்திற்கும் தலைமை யேற்று நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தோழர் கே.தங்கவேல். 

இன்றைய இந்திய சூழலில் வேலையின்மை, பட்டினி, வறுமை அதிகரிப்பின் காரணமாக வேலையை தேடி உழைப்பு சந்தையை நோக்கிய இடப்பெயர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பூரின் பனியன் தொழிலில் ஏற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சியின் காரணமாக வெளி மாநில, மாவட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வருகை என்பது அதிக எண்ணிக் கையில் அதிகரித்துள்ளது.

ஆனால் தொழிலாளர்களுக்கு உரிய நியாயமான சம்பளமோ, சட்ட சலுகைகளோ கிடைப்பதில்லை. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கும் போது வேலை வாய்ப்பு அதிகரிப்பும்,  நெருக்கடியின் போது வேலை இழப்பும்  தொழிலாளர்களை மட்டுமல்ல அவர்களது குடும்பங்களையே கடுமையாக பாதிக்கிறது. இது இந்த கொரோனா காலத்தில் கடும் பாதிப்பை தொழிலாளர்களுக்கு உருவாக்கியுள்ளது. 

உலகமயச் சூழலில் தங்களுடைய வர்க்க நலனுக்காக இன்று இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் நெகிழ்வு தன்மையற்றவையாக உள்ளன என்று ஏற்றுமதியாளர் சங்கம் தலைவர் சொல்வது, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதால் மோசமான நிலைக்கு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சென்று கொண்டு இருக்கிறது. இது குறித்து தோழர் கே.தங்கவேல் நீண்ட நாட்களுக்கு முன்பே  தெளிந்த பார்வையோடு தொழிலாளி வர்க்கத்தின் பணி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை கண்டுணர்ந்து சொன்னவர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில்  தொழிலாளர்களை பாதுகாப்பது என்பது அவர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை, தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு, போக்குவரத்து,  குழந்தைகளின் கல்வி, வாழ்வதார சூழல் ஆகியவற்றை உறுதி படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கான தீர்வை முன்னெடுக்க இன்றைய தொழிலாளர்களை விழிப்புணர்வு பெறச் செய்வது அவசியமாகிறது. இதனை நிதானமாகவும், பொறுமை உணர்வோடும் ஆழமான பார்வையோடு தெளிந்த சிந்தனையோடு அமைதியான வார்த்தைகளில் அழுத்தமாக சொல்லும் உறுதியான தலைவராக இருந்தவர் தோழர் கே.தங்கவேல் அவர்கள்.

கவிதை, கதை,  நாடாகம் உள்ளிட்ட இலக்கியத்தின் மீதும், வாசிப்பின் மீதும், வரலாற்றின் மீதும், அகழ்வாய்வின் மீதும்  ஆழ்ந்த நாட்டம் கொண்டவர். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எப்படி நேரநிர்வாகம், ஆளுமைப்பண்பு, மனிதவளம் தேவையோ அதே போல தொழிலாளர் வர்க்க அமைப்புக்கும், கட்சிக்கும் நேர நிர்வாகமும், ஆளுமைப் பண்பும், மனிதவளமும் அவசியம் என்று அதனை தனது வாழ்வாக மாற்றிக் கொண்டவர்.

பேரரசிரியர்களை, பல்துறை நிபுணர்களை, பல்வேறு அரசியல் இயக்கங்களை சார்ந்தவர் களை தனது தேடுதலின் மூலம் நண்பர்களாக பெற்றவர் தோழர் கே.தங்கவேல் அவர்கள். பல்வேறு சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிமையான வாழ்வியல் உதாரணங்களில் இருந்தும், சொலவடை களின் மூலம்  விளங்க வைப்பார்.  மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

தமிழகத்தில் புத்தகக் கண்காட்சி என்ற வடிவம் வந்தபின்பு தொடர்ந்து அவைகளுக்கு சென்று புத்தகங்களின் பிரியா காதலரானவர். வாங்கிய புத்தகங்களை பலரும் வாசித்து செல்கின்றனர். தோழர் கே.தங்கவேல் அவர்களோ கற்பது என்று மூன்று வகைகளில் மாற்றங்களை கொண்டு வரும் என்று சொல்வார்.                 

1.மனநிலையில் மாற்றம், 2. அறிவுநிலையில் உயர்வு. 3, திறனில் மேம்பாடு என ஆழமாக கற்றல் குறித்து அறிந்து அதன்படி நடந்தவர்.

படிப்பது கூட பலருக்கு மனதில் நிற்காது. மறந்துவிட்டேன் என சொல்பவர்கள் உண்டு.  அதற்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்திட முயற்சிகள் மேற்கொண்டே வாசிக்க வேண்டும் என்று சொல்வார். பதற்றம், விருப்பமின்மை, பயம், பயிற்சியின்மை, புரிந்து கொள்ளாமை, திருப்புதலற்ற படிப்பு, குருட்டு மனப்பாடம், கவனச் சிதறல், விழிப்புணர்வு இல்லாமல், இயந்திரத் தனமாக படித்தல் போன்ற அம்சங்கள் வாசித்ததை மனத்தில் நிறுத்த முடியாமல் மறந்து கொண்டே இருக்கும் என்று சொல்வார்.

கூட்டங்களுக்கு செல்வது என்றாலும், கலந்து கொண்டாலும் எதையும் முழுமையாக குறிப்பு எடுத்து அதன் அடிப்படையில் விடுபடாமல் ரத்தின சுருக்கமாக சொல்லுவார்.  பத்தாம் வகுப்பை தாண்டாத தோழர் கே.தங்கவேல், ஆட்சிப்பணி தேர்வுக்கான பயிற்சி மாணவர் களுக்கும், ஆசிரியர், பேராசிரியர், சமூக செயல் பாட்டாளர்களுக்கு தலைமைப் பண்பு, நேர நிர்வாகம் குறித்து வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ஆனார்.

மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாக, கட்சித் தலைவராக, வழிகாட்டியாக இருந்தவர். பதவிகளை கூட பொறுப்புகளாக உணர்ந்தவர். கம்யூனிஸ்ட்களின் அடிப்படை கோட்பாட்டிற்கு இலக்கணமாகவும், எளிமை, உண்மை, நேர்மை, மனிதாபிமானி என்ற நடைமுறைக்கு உதாரணமாக இருந்தவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் எந்த ஆடம்பரமற்று, மேற்படி இலட்சியத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டவர். பிரச்சனைகளை களத்தில் நின்று சந்தித்தவர்.

``வாழ்நாளில் பெரும்பாலும் மனித குலத்திற்காக சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால்  எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது'' -என்ற காரல் மார்க்சின் வார்த்தைக்கு வடிவம் கொடுத்து சம காலத்தில் வாழ்ந்தவர் தோழர் கே.தங்கவேல். அவர் விட்டு சென்ற பணியை தொடருவோம்.

தோழர் கே.தங்கவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்  - செப் 13

                                              செ.முத்துக்கண்ணன்


இரத்தத் தான படையாக மாறுங்கள் !

 

 “நாம் மக்களிடம் போவோம், நோயுற்றவரின் ஒவ்வொரு வீட்டுக்கும் போக வேண்டும், நகரத்திலிருந்து கிராமத்துக்கு, ஒரு கதவிலிருந்து இன்னொரு கதவுக்கு.’’ என்ற தனது  திட்டத்தை அவர் மனைவியிடம் சொல்ல அவரது மனைவியோ அவருக்கு எதோ ஆகி விட்டது போல் பார்க்கிறார். 

அவரது செயல்களை பார்த்த நண்பர்கள் ’நீங்கள் கம்யூனிஸ்டா?’ என்று அவரிடம் கேட்க அப்படினா என்ன என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை.. ஆனால் என்னை சிகப்பின் சிகப்பு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.  பணக்காரர்கள் தங்களை தாங்களே கவனித்துக் கொள்வார்கள் ஆனால் ஏழைகளை யார் கவனிப்பது?  அது அரசாங்கத்தின் கடமையில்லையா? ஏழைகள் என்னை தோழர் பெத் என்று அழைக் கிறார்கள். மாளிகைகளில் புகுந்து வேலை செய்வதைவிட ஏழைக்களுக்காக நான் தெருவில் இறங்கி வேலை செய்வதே எனக்கு பிடித்துள்ளது.’’

தோழர் நார்மன் பெத்யூனின் சிந்தனையையும், கனவையும் நனவாக்கிய தேசமாக அன்று சோவியத் யூனியன் இருந்தது. 1935ல் சோவியத் சென்ற பெத்யூன் நேரில் கண்டார். அன்று உலகின் பெரும்பகுதி நாடுகளை அச்சுறுத்திய காசநோய் சோவியத்தில் பாதியாக குறைக்கப்பட்டிருந்தது. அனைத்து சுகாதார கடட்மைப்புகளிலும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமையும், கட்டணமின்றி சிகிச்சையும், அதைவிட காச நோய் இருக்கிறதா என்று இளம் வயதினர் கட்டாய பரிசோதனை செய்துக் கொள்வதை  உறுதி செய்து சோவியத் அரசு  பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தியிருந்தது.

நான் நினைப்பது போலவே சோவியத் இருக்கிறதே ! அதனால் தான் அவர்கள் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்கிறார்களா.. அப்படியானால் நான் கம்யூனிஸ்ட்தான்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லிக் கொண்டாராம் நார்மன் பெத்யூன். ரஷ்யாவில் தான் கண்ட சானடோரியங்கள் உலக தரம் வாய்ந்தவை என அறிவித்தார்.

ஜப்பானுக்கு எதிரான சீன யுத்த களத்தில் பெரும் காயங்களால் ரத்த இழப்பு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வந்த தருணத்தில், இரத்த இழப்பு ஏற்பட்ட வீரனுக்கு  உடனே ரத்தம் வேண்டும்,  அதே ரத்த வகையுள்ள மருத்துவ ஊழியரின் ரத்தத்தை தானமாக கேட்க அந்த ஊழியர் தயங்குகிறார். அந்த நேரம் பெத்தயூனின் நண்பர் துங் தன் உடலிலிருத்து ரத்தம் வடித்து தருகிறார்.

பலத்த காயத்துடன் வந்த இன்னொரு வீரருக்கு ரத்தம் தேவைப்பட அவருக்கு பெத்யூன் தன் இரத்தத்தை தருகிறார். அதைப் பார்த்த செவிலியர், அந்த ஊரின் வயதான பெண்மணி உட்பட என் ரத்தத்தை எடுத்து மற்றவர்களை காப்பாற்றுங்கள் என்று அவர்கள் சொல்லியதை பார்த்த அந்த கிராமமே இரத்ததானம் செய்ய முன் வருகிறது.

நீங்கள் ரத்தம் தருவதை விட ரத்தம் கொடையாக பெறுவதற்கான ஒரு படையாக மாறுங்கள் நாட்டிலுள்ள கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் ரத்தத்தானம் செய்பவர்களின் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என அவர்களை பயிற்றுவித்தார்.

நார்மன் பெத்யூனுக்கு ஊதியமாக 100 டாலர் தர முன்வந்த போது அதை கண்டு கடுமையாக கோபம் கொண்டு அப்படியெல்லாம் எந்த ஊதியமும் எனக்கு வேண்டாம், உணவும் மற்ற தேவை களையும்  நிறைவாக நீங்கள் செய்கிறீர்கள் அது போதும் எனக்கு” என கூறுகிறார்.

            “ஒரு மருத்துவருக்கு சிங்கத்தின் இதயமும், பெண்களுக்கான கைகளும் இருக்கவேண்டும்” என்று தனக்கு பிடித்த பழமொழியை எப்போதும் நார்மன் பெத்யூன் கூறுவார்.

 மருத்துவர் நார்மன் பெத்யூன் நடமாடும் அறுவை சிகிச்சை அரங்கு, இரத்த தானம், காச நோய் உள்ளிட்டு பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளை கண்டறிந்தார். இது நவீன மருத்துவ உலகின் அச்சாரமாக திகழ்கிறது.

ஸ்பெயின் நாட்டு யுத்தத்தில் கிடைத்த அனுபவங்களை அவர் மாவோவிடம் எடுத்துக்கூறினார். மாவோ, உடனடியாக ஒரு நடமாடும் அறுவைச்சிகிச்சை அமைப்பை உருவாக்கும்படி பெத்யூனைக் கேட்டுக் கொண்டார். அது முதல் வடக்கு சீனாவின் உட்பகுதியில் அமைந்த யுத்தமையத்தில் மையத்திற்கே சென்றார்.

அங்கே அவர் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். சில நேரங்களில் நாற்பது மணி நேரம் கூடத் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் அறுவைச்சிகிச்சை செய்தார். இந்த அசாதாரணமான அர்ப்பணிப்புத் திறனால் அவருடைய புகழ் சீனா முழுவதும் சென்று அடைந்தது.

கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். ஓவியராக, கவிஞராக, ராணுவ வீராக, விமர்சகராக, ஆசிரியராக, விரிவுரையாளராக, மருத்துவ எழுத்தாளராக மற்றும் கோட்பாட்டாளராகவும் மருத்துவர் நார்மன் பெத்யூன் விளங்கினார். அவர் 1930களில் கொள்கைப்பிடிப்புள்ள கம்யூனிஸ்டாக உருவெடுத்தார்.

யுத்த களத்தில் இருந்த வீரர்கள் இப்படி முழக்கமிட்டார்கள்.  நம்மோடு பெத்யூன் இருக்கிறார். தைரியமாக போராடுங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாய் போர்களத்தில் நின்றார்.
தாக்குங்கள் ! நமது காயப்பட்டவர்களைப் பராமரிக்கப் பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் !  தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் ! தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் !

மருத்துவர் பெத்யூனின் வாரிசாய் சீன மருத்துவக்குழுவுக்கு தலைமையேற்று 5 ஆண்டுகளே பணியாற்றினாலும் சீனாவின் அழிக்க முடியாத அடையாளங்களில் ஒருவராய் மாறிப் போனவர் மருத்துவர் கோட்னிக்ஸ்.

இந்தியாவில் இருந்து நேருவும், சுபாஸ் சந்திரபோசும் இணைந்து அனுப்பிய மருத்துவக்குழுவில் ஒருவராக சென்றவர்  மருத்துவர் துவாரகநாத்  சாந்தாராம்  கோட்னிக்ஸ் ஆவார். மற்றவர்கள் நாடு திரும்பிய நிலையில் கோட்னிக்ஸ் மட்டும் முழுமையான வசதிகள் இல்லாத சூழல், கடுமையான தட்பவெப்பத்துக்கு இடையில் பணிபுரிந்தார்.

சில நேரங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்குத் தூங்காமலும் இடைவெளி இன்றியும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் கோட்னிஸுக்கு ஏற்பட்டது. 1940-ல் போர் கடுமையாக நடந்துகொண்டிருந்தபோது, தொடர்ச்சியாக 13 நாட்களுக்கு இடையில் 72 மணி நேரம் தூக்கம் இல்லாமல் 588 அறுவை சிகிச்சைகளை கோட்னிஸ் மேற்கொண்டிருக்கிறார்.

மருத்துவமே வணிகமாக இன்று மாறியுள்ள நிலையில் கொரோனா தடுப்பு என்கிற பெயரில் தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைகளை பலவிதங்களில் பார்த்து வருகிறோம். ஆனால் அன்று சேவை நோக்கத்தோடு போர் முனையில் படைவீரர்களுக்குச் சிக்கலான அறுவை சிகிச்சைகளை உடனுக்குடன் செய்து, உயிரைக் காப்பாற்றிய அவருடைய பணியை என்னவென்று சொல்வது?

ஓய்வற்று பணியாற்றிதோடு மட்டுமல்லாமல் தனது உடல்நிலையில் கவனம் செலுத்ததால்  உடல்நலம் குன்றிய அவர், 1942 டிசம்பர் 9-ம் தேதி 32 வயதிலேயே காலமானார். அவரின் மகத்தான பணியை பெருமையோடு சீனர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்தியா வரும் அந்த நாட்டின் அதிபர்கள், அமைச்சர்கள் உட்பட அனைவரும் கோட்னிக்ஸ் நினைவு கூறாமல் உரையாற்றியதில்லை. 

சீனாவில் மூதாதையருக்கு ஆண்டுதோறும் மரியாதை செய்யும் சிங்மிங் பண்டிகையின்போது, இன்றைக்கும் கோட்னிஸின் கல்லறையில் மலர்கள் குவிந்துவிடுகின்றன. சீனாவுக்குப் பங்களித்த அயல்நாட்டவர்களின் வரிசையில் முதல் 10 பேரில் கோட்னிஸுக்கு சீன மக்கள் இடமளித்துள்ளனர்.

இவர்களை போன்ற மருத்துவர்கள் இந்தியாவிலும் பணியாற்றியுள்ளார்கள். குறிப்பாக அரவிந்த் மருத்துவமனை கண்சிகிச்சை மருத்துவர் வெங்கடபதி, அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா, ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம், சென்னையில் 10 ரூபாய் மருத்துவர் கோபால், 5 ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன் போன்று பல மருத்துவமுறைகளில் உள்ள ஏராளமான மருத்துவர்கள் மக்களுக்கான மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். 

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இந்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து மக்களுக்கான மருத்துவத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்று கடமை ஆளும் அரசுகளுக்கு உள்ளது. இதனை  ஆளும் அரசுகள் செய்யுமா ? மக்கள் உயிர் காக்க செய்தே ஆக வேண்டும். இத்தகைய மருத்துவர்களை போல்  வளரும் மருத்துவர்களும் தேசம் என்பது மண் மட்டுமல்ல, மக்களும் கூடத் தான் என்ற புரிதலோடு சேவையாற்ற வேண்டும்..இன்றைய இளம் தலைமுறையின் ஆதர்ச சக்தியாக மாறுங்கள் மருத்துவர்களே !

இரா.மு. அரவிந்தன்.