”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வீரத்தின் விளைநிலம் கேப்டன் லட்சுமி


“உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்“.

என்ற மகாகவி பாரதியின் அக்கினி பிரவாகத்திற்கு அடையாளமாய் வாழ்ந்து காட்டியவர் கேப்டன் லட்சுமி அவர்கள். தனது 87 வது வயதில் நாட்டின் குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக இடதுசாரி கட்சியினரால் முன்மொழியப்பட்ட தருணத்தில், அந்த வயதிலும் நாள் தவறாது காலை 9 மணிக்கு கான்பூரில் உள்ள தனது மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்க வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கண்களில் அன்பு ஒளியும், பாசமும், நேசமும், மனிதநேயத்தையும் காட்டும் பரந்த உள்ளம் படைத்த கேப்டன் லட்சுமி அவர்களுக்கு இருதய அடைப்பு காரணமாக 97 வயதில் தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். தோழர் கேப்டன் லட்சுமி தனது இறப்புக்கு பின் தனது உடலை “மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும்“ என்று விரும்பியதால் அவரது உடல் கான்பூரில் உள்ள ஜி.எஸ்.வி.எம்.மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

1914ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி சென்னையின் பிரபலமான வழக்கறிஞராக பணியாற்றிய சுவாமிநாதன், சமூக சேவகியாக இருந்த அம்மு ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவரது குடும்பம் நாட்டுபற்று மிக்க குடும்பமாக இருந்ததால் இளம் வயதிலேயே லட்சுமி சாதிய பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டுவிடுதலை, சமத்துவம், அநீதிக்கு எதிராக போராடுவது என்ற இலட்சியங்களை தாங்கி வளர ஆரம்பித்தார். தனது பள்ளி பருவத்திலேயே மருத்துவம் பயின்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார். விரும்பியபடி அவர் இடைநிலை கல்வியை இராணிமேரி கல்லூரியிலும், மருத்துவப்படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் 1938ல் முடித்து மருத்துவரானார்.

இராணி மேரி கல்லூரியில் படித்த 1930களில், தமிழகத்தில் தோழர் பி.ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய தீவிர காங்கிரசு இளைஞர் அணியில் உறுப்பினராக சேர்ந்த லட்சுமி, பகத்சிங் வழக்கிற்காக கல்லூரியில் நிதி வசூல் இயக்கத்தில் ஈடுபட்டார். அதே ஆண்டு நடைபெற்ற சத்தியகிரக போராட்டத்தில் பங்கேற்று ஒரு நாள் சிறையும் சென்றார். கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களின் சகோதரி சுகாசினி நம்பியார் பொதுவுடைமை இயக்கத்தின் மூலம் சுதந்திரப்போரில் ஈடுபட்டதால் மீரட் சதி வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக லட்சுமி வீட்டில் தங்கியிருந்தார். அக்காலத்தில் அவரிடமிருந்து  மார்க்சியத் தத்துவம், ரஷ்ய புரட்சி குறித்த புத்தகங்களை பெற்று படித்து தெரிந்துகொண்டார். சீனவானில் சிவப்பு நட்சத்திரம் என்ற சீனப்புரட்சி குறித்த புத்தகம் அவரை பெரிதும் ஈர்த்த்து, எனினும் தோழர்.லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்ய புரட்சியின் தாக்கத்தில் இந்திய சமூகத்தில் மாற்றம் ஏற்படவும், வெள்ளை ஏகாதிபத்தியம் வெளியேற்றப்படவும் வேண்டுமென்றால் ஆயுதம் தாங்கிய வெகுமக்கள் புரட்சியே தேசத்தின் அரசியல் விடுதலைக்கு சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தார்.

குடும்ப சூழ்நிலையையொட்டி 1940களில் சிங்கப்பூர் சென்ற லட்சுமி அங்கு தென்னிந்திய பெண் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் வாழ்ந்தார். அங்கு பெண்கள் மருத்துவ வசதி இல்லாமல் அல்லலுறுவதை கண்டு மனம் வெம்பி அவர்களுக்காக அங்கேயே தங்கி தனது மருத்துவ சேவையை துவங்கினார். வெகுவிரைவில் புகழ்பெற்ற மருத்துவராக அந்த பகுதி மக்களால் பேசப்படலானார்.

1941ம் ஆண்டு ஜப்பான்-பிரிட்டனுக்கிடையேயான யுத்த்த்தில் பஞ்சாப் ரெஜிமெண்ட் ஜப்பான் இராணுவத்திடம் சரணடைந்தது. இந்த படையில் இருந்த எஞ்சிய வீரர்களை கொண்டு .உருவானதே இந்திய தேசிய இராணுவம். இதில் பொதுமக்களின் பங்கேற்பு இல்லாததால் ராஷ்பிகாரி போஸ் “இந்திய சுதந்திர கழகத்தை“ உருவாக்கி செயல்படுத்தி வந்தார். இதன் கிளை சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த போது அதன் தீவிர உறுப்பினராகவும் லட்சுமி செயல்பட்டார். 

இக்காலத்தில் சிங்கப்பூரில் போரில் காயமடைந்த போர்வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொறுப்பை லட்சுமி ஏற்றதோடு அகதிகளையும், நோயாளிகளையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். மேலும் இந்திய சுதந்திர கழகத்தின் பிரச்சாரப்பிரிவின் பணியையும், அதற்கான கட்டுரைகளையும் எழுதினார். பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் பிரிவையும் செயல்படுத்தினார். இந்த சூழலில் 1943ல் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திர கழகத்தின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்த போது இந்திய சுதந்திரப் போரில் நேரடியாக ஈடுபடும் தனது விருப்பதை லட்சுமி தெரிவிக்க அதன் பின்னணியில் நேதாஜியும் ஜான்சி ராணி படை என்ற பெயரில் பெண்களும் சுதந்திரப்போரில் ஆயுதம் தரித்து ஆண்களுக்கு நிகராக களம் இறங்கலாம் என்று தெரிவித்தவுடன் பெண்களுக்கான ஜான்சி ராணி படையில் 1000க்கும் மேற்பட்ட பெண்களை கொண்டு உருவாக்கி தானே தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். ஆசியாவின் முதல் பெண்கள் படையாகும்.

நேதாஜியின் டெல்லி சலோ முழக்கத்தை முன்னிட்டு இந்த படைப்பிரிவு சிங்கப்பூரில் இருந்து பர்மா நோக்கியும் பின்னர் டெல்லி நோக்கியும் முன்னேறியது. இந்திய-பர்மா எல்லையில் நிறுத்தப்பட்ட இப்படை யுத்தகளத்தில் தீரத்துடன் போராடியது. யுத்த முனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லட்சுமி மருத்துவ சிகிச்சையை செய்து வந்தார். அங்கிருந்த மருத்துவமனையை பிரிட்டிஷ் இராணுவம் விமான தாக்குதலில் தரைமட்டமாக்கிய போது மயிரிழையில் உயிர் தப்பினார் கேப்டன் லட்சுமி.  படைத்தளபதி லட்சுமி போர் கைதியாக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டார். இவர் மீது எந்த பிரிவின் மீது குற்றம் சாட்டுவது என திணறிய வெள்ளை அரசு, இவர் நேதாஜி உருவாக்கிய இந்திய சுதந்திர அரசின் ஓர் அங்கமான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என குற்றம் சாட்டி ரங்கூனில் வீட்டுச்சிறையில் வைத்த்து.

1945ம் ஆண்டு “இந்திய இராணுவ வீரர்கள் இந்தியாவில் போர் இன்னும் முடிவடையவில்லை. ஆகவே இந்தியாவிற்கு சென்று விடுதலைக்காக போராடுவோம்“ என சபதமேற்று அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்த வெள்ளை அரசு அவர்களை கைது செய்த்து. லட்சுமியை நேரடியாக கல்கத்தாவிற்கு கொண்டு சென்று நேதாஜியின் சகோதரி மகள் வீட்டிலிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வர வேண்டுமென உத்தரவிட்டனர். இந்திய விடுதலைக்கு பின் தன்னுடைய சக போராளியாக தன்னோடு பணியாற்றி கர்னல் பிரேம் ஷெகாலை திருமணம் செய்து கொண்டார். சுபாஷினி அலி மற்றும் அனுசியா பூரி ஆகிய மகள்களும், பேரன் பேத்திகளும் உள்ளனர், இவர்களில் தோழர் சுபாஷினி அலி மாதர் அமைப்பின் அகில இந்திய தலைவராக உள்ளார்.

தன்னுடைய இறுதி காலம் வரை மக்களுக்காக அரசியல் களத்தில், சேவைக்காக மருத்துவராகவும் ஒய்வறிய உழைப்பாளியாக பணியாற்றிய கேப்டன் லட்சுமி அவர்கள் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டு அந்த கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், 1971ல் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

1972ல் பங்களாதேஷ் யுத்த்த்தின் போது அகதிகளுக்கும், போரில் காயமடைந்தவர்களுக்கும் சிகிக்சை செய்ய தோழர் ஜோதிபாசு அழைத்தன்பேரில் நேரில் சென்றதோடு நிவாரணநிதியும் திரட்டிக்கொடுத்தார். இந்திராகாந்தி படுகொலையின் போது கான்பூரில் சீக்கியர்களின் மீதான தாக்குதலுக்கு எதிராக சீக்கிய மக்களை தனது மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று ஏராளமான சீக்கியர்களின் உயிரை காப்பாற்றினார்.

குஜராத் கலவரம் நடைபெற்ற தருணத்தின் போதுதான் கடுமையாக மதவாத்த்தை கண்டித்தார், அது மட்டுமல்லாது மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் முன்மொழியப்படும் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற தனது நிலையை கம்பீரமாக வெளிப்படுத்தினார், காஷ்மீர் உள்ளிட்ட தனி நாடு கோரிக்கைகளை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி, மத்திய, மாநில உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கைகளோடு இருந்த லட்சுமி, இடதுசாரி கட்சிகளால் குடியரசு தலைவர் தேர்தலுக்கு 2002ல் வேட்பாளராக முன்மொழியப்பட்ட போது தெளிவாக கூறினார்.“ வெற்றி பெறுவோம் என்ற பிரமையோ, அதீத நம்பிக்கையோ கொள்ளவில்லை, இந்த குடியரசு தலைவர் தேர்வுகான களத்தில் இந்திய அரசியலின் மேன்மையை, இறையாண்மையை, மக்களின் நலனை கருத்தில் கொண்டு போராடும் இடதுசாரிகளின் அரசியலை பிரச்சாரம் செய்யும் வாய்ப்பாக கருதுகிறேன். இப்பதவிக்காக எந்த குறுக்குவழியையும், கட்சிகளிடம் யாசகம் கேட்பதை செய்ய மாட்டேன் என் தெளிந்த ஞானத்தோடு, அரசியல் உறுதியோடு“ பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார்.

பெண்களுக்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னின்ற அவர் அதற்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக இந்திய முழுவதும் அமைப்பை வளர்ப்பதில் தனது வயதான காலத்தில் பயணம் மேற்கொண்ட அற்புத தலைவர். இளமைப்பருவத்தில் தான் கற்ற்றிந்த மார்க்சிய தத்துவத்தின் வழியில் உறுதியாக நின்று சோசலிசப் புரட்சிக்கான தனது போராட்டத்தை விடாப் பிடியாக நடத்தியவர், அதற்காகவே வாழ்ந்தார். இளம் தலைமுறையை பாசத்தோடு நேசித்த அவர் இளைஞர்களே மாற்றத்தை சாத்தியப்படுத்தக்கூடியவர்கள், அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும், மக்களுக்கான மாற்று சமூகத்தினை உருவாக்கிட போராடும் அமைப்புகளுக்கு தலைமையேற்க வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர், இளைஞர்களின் ஆகர்ச சக்தியாக திகழ்ந்தவர்.

இந்திய சுதந்திரப்போரின் மகத்தான வீராங்கனைகளில் ஒருவரும், அர்ப்பணிப்பும், தியாகமும் கொண்டு வாழ்ந்த போது தேசத்திற்காக தனது வாழ்நாளையும், உழைப்பையும் செலுத்திய அந்த ஒப்பற்ற மனிதர் வாழ்வுக்கு பின் தனது உடலையும் தான் நேசித்து, சுவாசித்து மக்களுக்காக அர்ப்பணித்த அந்த மருத்துவ சேவைக்கு அதன் வளர்ச்சிக்கு தனது உடலை தானமாக தந்த தோழர் கேப்டன் லட்சுமி அவர்களின் புகழ் ஓங்கட்டும்,. அவரது வாழ்வும் பணியும் இளம் தலைமுறைக்கு உத்வேகமளிக்கட்டும்,.. இன்குலாப் ஜிந்தாபாத்..

- அரவிந்தன்
நன்றி / இளைஞர் முழக்கம்