”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

லோக்பால்


நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழனன்று (டிசம்பர் 29) லோக்பால் சட்டமுன்வடிவு பரிசீலனைக்காகவும், விவாதத்திற்குப் பின் நிறைவேற்று வதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘லோக்பால் சட்டமும் லோக் அயுக்தா சட்டமும் வலுவானதாக அமைந்திட வேண்டும். நான் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல நாம் ஒரு பக்குவமான ஜனநாயக அமைப்பைக் கொண்டிருக்கிறோம். அதனை உறுதி செய்யக்கூடிய விதத்தில் அவை அமைந்திட வேண்டும். அரசாங்கம் கொண்டு வந்திருக்கிற சட்டமுன்வடிவிலும், அன்னா ஹசாரே குழுவினர் கொண்டுவந்துள்ள ஜன்லோக்பால் சட்டமுன்வடிவிலும் உள்ள நல்ல அம்சங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு புதியதொரு சட்டமுன் வடிவை உருவாக்கிட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடி உயர்த்திப்பிடிக்கப்படக்கூடிய வகையில் அது அமைந்திட வேண்டும்.

நம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை என்ன கூறுகிறது? ‘‘பாரத் எனப்படும் இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும். அதாவது இந்தியாவின் எல்லை என்பது அனைத்து மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியதாகும். பின்னர் இதனுடன் யூனியன் பிரதேசங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறு மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. தயவுசெய்து நினைவில் கொள்க. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. எனவே மாநிலங்களின் நலன்களைப் பாதிக்கக்கூடிய விதத்தில், மாநிலங்களுக்கு எதிராக ஒரு சட்டம் உருவாக்க முயற்சித்தீர்களானால், அது இந்தியாவின் நலனுக்கே எதிரானதாகப் போகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, நாட்டின் நலன்களைப் பாதிக்கும் எதையும் செய்யாதீர்கள். நம் அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடிக்கு எதிராக - அதாவது இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மறுதலிக்கக்கூடிய வகையில் - எதையும் செய்யாதீர்கள்.

நாம் ஓர் உயர்ந்த அரசமைப்புச் சட்டத் தைப் பெற்றிருக்கிறோம். அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கே வந்து நம் நாடாளுமன்றத்தில் பராமரிக்கப்படும் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திடும்போது, ‘‘உலகின் மாபெரும் நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய ஜனநாயக நாட்டின் வாழ்த்துக்கள்’’ என்று எழுதி கையொப்பமிட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அமெரிக்காவில், அவர் பிறந்த பின்னர்தான் அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது என்பதை அப்போது அவருக்கு நாம் நினைவுபடுத்த முயற்சித்தோம். ஆனால், நாம் சுதந்திரம் பெற்ற உடனேயே நாட்டில் வயது வந்த அனைவருக்கும் ‘‘ஒருவர் - ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு’’ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நம் அரசமைப்புச்சட்டத்தின் தந்தை அம்பேத்கார் கூறினார்.

ஆனாலும் அவர், ‘‘ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு’’ இன்னும் கொடுக்கவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறிப் புலம்பினார். நாட்டில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வசதிகளை அளிக்காதவரை நாம் நம் அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடியை முழுமையாக நிறை வேற்றியதாகக் கூறுவதற்கில்லை.

இந்தியா என்பது மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஒன்றியமாகும். எனவே இச்சட்டமுன்வடிவின் கூட்டாட்சித் தன்மை முதலில் சரிப்படுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கு லோக் அயுக்தா சட்டம் தேவை என்று நாம் கூறுகிறோம். இது தொடர்பாக இச்சட்டமுன்வடிவில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில சட்ட மன்றப் பேரவை பரிசீலிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதனைச் செய்திட வேண்டும். இது தொடர்பாக தரப்பட்டிருக்கும் திருத்தங்களை முறையாக அரசு இணைத்திட வேண்டும்.

இதற்காக ஒரு முன்மாதிரி சட்ட முன்வடிவை உருவாக்குங்கள். அவற்றை மாநிலங்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வையுங்கள். அவர்கள் லோக் அயுக்தா சட்டமுன்வடிவை உருவாக்கிக் கொள்ளட்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் அயுக்தா சட்டம் இருக்க வேண்டும் என் பதைக் கட்டாயமாக்கிட வேண்டும். ஆனால் எப்படி? என்ன முறையில்?

மத்திய-மாநில உறவுகள் சீர்கேடு அடையாதவிதத்தில், மாநில சட்டமன் றங்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய விதத்தில் அது அமைந்திட வேண்டும். நம் அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு அளித்துள்ள உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்தில் அது அமைந்திட வேண்டும்.

அடுத்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பது தடை செய்யப்பட வேண்டும். அரசியலில் ஊழல் உருவாவதற்கான மூலக் காரணம் இதுதான். எனவே கார்ப்பரேட்டுகளையும் அந்நிய நாடுகளிலிருந்து உதவி பெறும் அரசு சாரா நிறுவனங்களையும் இதன் அதிகாரவரம்பெல்லைக்குள் கொண்டு வர வேண்டும். இதனை நீங்கள் செய்யவில்லை என்றால், இந்தச் சட்டமுன் வடிவை உங்களால் வலுவான ஒன்றாக மாற்றிட முடியாது.

அடுத்து ஒரு முக்கியமான அம்சம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தொடர்பானதாகும். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். சுதந்திரம் என்றால், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரம். அதே சமயத்தில் அது பதில்சொல்லக்கூடிய விதத்திலும் அமைந்தி ருக்க வேண்டும். அது தன் இஷ்டத்திற்கு செயல்படலாம் என்று நாங்கள் எப்போதுமே சொன்னதில்லை. எனவே அதன் இயக்குநர்கள் ஓர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட நடவடிக்கை எடுத்திட முன்வருவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

நாட்டின் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல்கள் குறித்துப் புலனாய்வு செய்திட லோக்பால் அமைப்பே முன்வருவது என்பது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் எந்தப் புலனாய்வு அமைப்பையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. லோக்பால் அமைப்பே புலனாய்வும் மேற்கொள்ளும் என்பது சரியல்ல. இது சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிடில் லோக்பால் என்னும் அமைப்பே வலுவற்றதாகிவிடும்.

மத்தியப் புலனாய்வுக் கழகம் எப்படியெல்லாம் அரசாங்கத்தால் துஷ்பிரயோகமாக உபயோகப்படுத்தப்பட்டன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும்.

சிபிஐ, ஊழல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களும் லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள்ளும், கண்காணிப்பிற்குள்ளும் கொண்டுவரப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் துல்லியமான திருத்தங்களைக் கொடுத்திருக்கிறோம்.

லோக்பால் சட்டம் வலுவானதாக அமைந்திட நாங்கள் முன்வைத்துள்ள திருத்தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்திருத்தங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு ஒரு வலு வான லோக்பால் சட்டத்தை நிறை வேற்றி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ள அனைவருக்கும் இப்பிரச்சனையில் நாடாளுமன்றம் தன் பொறுப்பை செம்மையாக நிறைவேற்றி இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும்.

‘சோசலிசத்திற்கு மட்டுமே எதிர்காலம் உண்டு’.

சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு, கீரிஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டின் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

"உலகில், முதலாளித்துவமுறைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் அல்லாத மக்களும்கூட கிளர்ந்தெழுந்து உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கக்கூடிய தருணத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிரீஸ் நாட்டிலும் அத்தகைய போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு போராடும் கிரீஸ் நாட்டின் தோழர்களுக்கும் மக்களுக்கும் நம் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

கிரீஸில் மக்களின் போராட்டங்கள் வீச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய இத்தருணத்தில் நாம் இங்கே இம்மாநாட்டை நடத்திக்கொண்டிருப் பதன் மூலம் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

இம்மாநாட்டின் கருப்பொருள் மூன்று முக்கிய அம்சங்களை முன்வைத்தது. முதலாவது, சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சிக்குப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்பட்ட அனுபவம். சோவியத் யூனியனில் நடைபெற்ற எதிர்ப் புரட்சியானது, மார்க்சிச-லெனினிசத்தின் புரட்சிகர அறிவியலையோ அல்லது சோசலிசக் கொள்கைகளைப் பின்பற்றுவதையோ எவ்விதத்திலும் மறுதலிக்கவில்லை.

சோசலிசத்தைக் கட்டுவதில் ஏற்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள், ஏகாதிபத்தியம் / முதலாளித்துவத்தைக் குறைத்து மதிப்பிடல், சோசலிசம் குறித்து அதீதமான மதிப்பீடு மற்றும் மார்க்சிச-லெனினிசத்தின் அறிவியல் பூர்வமான மற்றும் புரட்சிகரக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றமை ஆகியவையே சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சி உருவானதற்குக் காரணங்களாகும்.

இம்மாநாட்டுக் கருப்பொருளின் இரண்டாவது அம்சத்தை பொறுத்த வரையில், மேலே கூறியவாறு நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகள் ஏகாதிபத்தியமானது உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் தன்னுடைய மேலாதிக்கத்தை வலுப்படுத்திட மூர்க்கத்தனமாகத் தாக்குதலைத் தொடுத்திட வழிவகுத்தது. ஆயினும், முதலாளித்துவம் அபரிமிதமான முறையில் வளர்ச்சி அடைந்திருந்தபோதிலும் கூட, அதனால் தன்னை ஒரு சுரண்ட லற்ற அமைப்பாகவோ அல்லது நெருக்கடியற்ற அமைப்பாகவோ நிறுவ முடியவில்லை என்பது மீண்டும் வலுவாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, உலகில் உள்ள பல கட்சிகள் இத்தகைய முடிவுகளுக்கு வந்திருந்தன. அவை இன்றையதினம் எவ்விதப் பிசிறுமின்றி சரியானவையே என்று மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

உலக முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எடுத்திடும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் ஓர் ஆழமான புதிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

உற்பத்தி உறவுகளை அழித்திடுவதையே தன் ஒவ்வொரு முயற்சியின் போதும் உலக முதலாளித்துவம் கைக் கொள்கிறது. இதன் காரணமாக அது மக்கள் மீதான சுரண்டலை மேலும் உக்கிரப்படுத்துகிறது. சமீபத்தில் உலகின் பல நாடுகளில் கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு ஏற்பட்ட திவால் நிலையை அந்தந்த நாட்டு அரசுகளின் திவால் நிலையாக மாற்றியதிலிருந்து இக்கொடூரத்தை நம்மால் பார்க்க முடிந்தது. அதன் காரணமாக அந்த அரசுகள் மக்களுக்கு அளித்து வந்த பல்வேறு நலத் திட்டங்களை வெட்டிக்குறைத்தன. இவ்வாறு அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்தோங்கி வருகின்றன. இதனை லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் நம்மால் பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில் நடை பெறும் ‘‘வால் ஸ்ட்ரீட் எதிர்ப்பு’ கிளர்ச்சிகள் முதலாளித்துவ முறையையே கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இன்றைய கடும் நெருக்கடிக்குக் காரணங்கள், முதலாளித்துவ முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளால் அல்ல, இம்முறையே தவறு என்று அவை உரக்கக் கூறத் தொடங்கியுள்ளன.

முதலாளித்துவத்தைத் தூக்கி எறியவும், சோசலிசத்தைக் கட்டிடவும் வலுவான முறையில் தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியையும் கட்டவேண் டியது இன்றைய அவசியத் தேவையாகும். இதற்கு இங்கு குழுமியுள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளும் தங்கள் நாடுகளில் நடை பெறும் வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தும் அதே சமயத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தையும், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்கிற அரசியல் மாற்றுக்கான போராட்டத்தையும் வலுப்படுத்திட வேண்டும். இத்தகைய போராட்டங்களை அந்தந்த நாடுகளில் உள்ள துல்லியமான நிலைமைகளைத் துல்லியமாக பகுப் பாய்வு செய்து, அதற்கேற்ற வகையில் நம் போராட்ட வடிவங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

இதற்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் நான் ஓர் உதாரணத்தை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இந்திய அரசு, சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திட முடிவு செய்திருந்தது. அதனை அது கொண்டு வரமுடியாமல் அதற்கு நிர்ப்பந்தம் கொடுத்து அதனைத் திரும்பப் பெற வைத்த பின்னரே நான் இங்கே வந்திருக்கிறேன். இந்தத் துறையில் இந்தியாவில் சுமார் 5 கோடி மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் குடும்பத்தாரையும் சேர்த்தால் இது சுமார் 25 கோடி பேர்களாகும். எனவே, வால்மார்ட் இப்போதைக்கு இந்தியாவுக்குள் நுழைய முடியாது.

சோசலிசம் என்கிற நம் அரசியல் மாற்றை வலுப்படுத்திடக் கூடிய வகையில் மக்களை அணிதிரட்டிட வேண்டும். வளர்ந்து வரும் மக்கள் போராட்டங்கள், நிச்சயமாக முதலாளித்துவ அமைப்பு முறையை ஒருநாள் தூக்கி எறியும்.

முதலாளித்துவத்திற்கு எதிரான புறச் சூழ்நிலைகள் வேகமாகவும் நமக்குச் சாதகமாகவும் வளர்ந்து வருகின்றன. ஆயினும் மாமேதை லெனின் எச்சரித்தது போல அதற்கேற்ற வகையில் நம் அகக்காரணிகளையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். மார்க்சிசம்-லெனினிசம் என்கிற புரட்சிகரத் தத்துவத்தினை ஏற்றுக்கொண்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.



வரலாற்றுத் தொலைநோக்கில் நிச்சயம் சோசலிசம் தவிர்க்க முடியாதது. அது தாமதப்படலாம், ஆயினும் அது வருவதை எவரும் தடுத்திட முடியாது. எவ்வளவு விரைவாக அது வரும் என்பது நம்மையே சார்ந்திருக்கிறது. அதனை விரைவுபடுத்தும் பணியில் நம் பணிகளை நாம் முடுக்கி விடுவோம்.

‘‘சோசலிசத்திற்கு எதிர்காலம் உண்டா?’’ என்று இனியும் எவரும் கேட் கக் கூடாது. ‘சோசலிசத்திற்கு மட்டுமே எதிர்காலம் உண்டு’.

இவ்வாறு தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.