”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

என்றும் நாங்கள் கம்யூனிஸ்ட்களே !



மார்ச்  13 - இடுவாய் தியாகி ரத்தினசாமி 18 ஆவது நினைவுதினம்...


ஏழையென்றும் அடிமையென்றும் 

எவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் 
சமானமாக வாழ்வமே .,. 
என்றார் மகாகவி பாரதி,..  
அவரது வைர வரிகளுக்கு உயிர் கொடுத்த மகத்தான மனிதரே தோழர் இரத்தினசாமி.  1996ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தன்னை ஒருசேர எதிர்த்து அனைத்து கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை  791 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும், ரத்தினசாமியின் பணியும் வெற்றிக்கு பின்னர் மக்கள் சேவையை இரட்டிப்பாக்கியது. விவசாயக் கிணறுகளில் தண்ணீர் விற்பனையை தடுத்து விவசாயத்தை பாதுகாத்தது. ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை எடுத்து 1200 ஏழை எளிய குடும்பங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து மகாகவி பாரதியின் மீது கொண்ட அன்பால் அந்த ஊருக்கு பாரதிபுரம் என பெயரிட்டு மகிழ்ந்தார்.  
பட்டியலின மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, தெருவிளக்கு, தொகுப்பு வீடு கட்டி சமத்துவ வாழ்க்கையை உறுதி செய்தார். தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்கள் உரிமையை பாதுகாத்தார். பாழ்பட்டிருந்த இடுவாய் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை புனரமைத்து பள்ளிக்காக குழு அமைத்து பேணி காத்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினார். கட்சியின் செல்வாக்கும், இரத்தினசாமியின் பணியும் ஓங்கி வளர்வதை பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவில் எழுத்துப்பணி செய்து கொண்டு இருந்த  தருணத்தில் ஆதிக்க வெறியர்களின் கத்திக்குத்துக்கு ஆளாக்கப்பட்டு நீண்ட நெடிய மருத்துவசிசிக்சைப் போராட்டத்திற்கு பின் உயிர் காப்பற்றப்பட்டு அதன் பின்னரும் ஊராட்சி மன்ற தொடந்தார்.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், மக்கள் செல்வாக்கின் காரணமாக இரண்டாம் முறையும் ஒரு சேர எதிர்த்து நின்ற மக்கள் முன்னணியை தோற்கடித்தார். முன்னிலும் ஆழமாக மக்கள் சேவையும், பணியும் தொடர்ந்தது. அயராது பாடுபட்ட அவரை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்தியினர் 2002 மார்ச் 12ம் தேதி இரவு தோழர் இரத்தினசாமி அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தார்கள். அவரது கழுத்தில் கொன்றதற்கான  8 காரணங்களை கொலைகார பாவிகள் எழுதி வைத்துச் சென்றார்கள். 

அதில் நீ கம்யூனிஸ்டாக இருப்பது, சக்கியலிர்களுக்கு சப்போர்ட் செய்தது, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்தது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது. மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது உள்ளிட்டு 8 காரணங்களை எழுதி வைத்தனர். 
அவரை கொலை செய்தவர்களுக்கு இப்போதும் புரிந்திருக்கும். மீண்டும் 18 ஆண்டுகள் கழித்து 2019ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரத்தினசாமியின் வாரிசுகளாக கம்யூனிஸ்ட்கள் 1008 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் தோழர் கே.கணேசன் வெற்றி பெற்றது கம்யூனிஸ்டுகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் கட்டி யெழுப்ப துவங்கியுள்ளனர். 
ஆம் தற்போதும் மத்திய அரசு மதத்தின் பெயரால் குடியுரிமை திருத்த சட்டத்தை முன்வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருவதில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பும் உள்ளடக்கியதே.. 
45 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் இடப் பெயர்வும், நிரந்தரமற்றத்தன்மையும் வேலைவாய்ப்புகளில் அதிகரித்துள்ளது. வேலைக்காக இளைஞர்கள் சொந்த கிராமங்களை விட்டு இடம்பெயரும் நிலை அதிகரித்து வருகிறது. 
அணி திரட்டப் பட்ட தொழில்களில் கூட இன்று ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்கள் எந்த விதமான சட்ட சலுகையும், உரிமைகளும் அற்று பணியாற்றுகின்றனர். தொழிற்சங்க உரிமைகள்  மறுக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் உரிமை மீறல்களும், சுரண்டல்களும் அதிகரித்து வருகின்றன.  
முறைசாரத் தொழிலாளர்களை அதிகளவில் திரட்ட வேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை உயர்த்தி பிடிக்கும் மகத்தான பணியை முன்னை விட கூடுதல் படுத்த வேண்டிய தருணமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம் உள்ளிட்டு தொழில் நகரங்களில் தொழிலாளர்களின் வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க தியாகிகளின் இரத்தங்கள் உரமாகட்டும்.  
தொழிலாளி வர்க்கத்தின் நேச வர்க்கமான விவசாய, விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வதாரங்கள் கேள்விக்குள்ளக்கப் பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அதற்கு எதிரான போராட்டங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது.  இந்த நிலையில் சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் பெண்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளுக்கு வர்க்க ஒற்றுமையோடு திரட்டி போராட வேண்டியுள்ளது. அதற்கு தடையாக மதவாதம், சாதியவாதம், இனவாதம், பழமைவாதக் கருத்துக்களும், சித்தாந்தங்களும்  முன்வைக்கப்படுகிறது. இதனை எதிர்த்த போராட்டத்தில் உறுதியாக களம் கண்ட போராளியே தோழர் இரத்தினசாமி ஆவார். 
உழைக்கும் மக்களின் வாழ்வியல் கோரிக்கைக்களுக்கான போராட்டங்களையும், அதற்கு தலைமை தாங்கும் தளகர்த்தாக்களையும் உருவாக்குவதில் தோழர் இரத்தினசாமி போன்ற தியாகிகளின் தியாகங்கள் உரமாகும். ஒரு போதும் வீணாகாது.  நெஞ்சில் உரத்தை ஏற்றி சனதான ஆதிக்கத்தை வேரறுக்க, கம்யூனிச கருத்துக்களை ஏந்திட செம்மலர்களாகிய நாங்கள் பறிக்க பறிக்க பூத்துக் கொண்டே இருப்போம்...