”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மோடிகளின் ராஜியத்தில் உய்யலலா-?


 அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தல் அத்தனையும் புழு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இன்று மத்தியில் ஆளும் பிஜேபி அரசை புட்டுபார்த்தல் அத்தனையும் புழுக்களாகத்தான் உள்ளது. இந்த நிமிடம் வரை தினமும் ஒரு அதிரடி குண்டை நாட்டை திசை திருப்பியவர்களுக்கு அவர்கள் கட்சிக்குள்ளேயே பட்டாசு வெடித்த வண்ணம் உள்ளது. ஆமாம் சோட்டா மோடியான ( லலித் மோடி ) உதவியதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே  என பாம்பின் வாலை பிடிக்க அது தலை வரை சென்று கொண்டே இருக்கிறது.

சரி யார் இந்த லலித் மோடி என்று பார்த்தால் அவர் ஒன்றும் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய ஆளா? இந்தியாவின் வரலாற்று ஆசிரியாரா-? இந்திய நாட்டின் மந்திரியா-? விடுதலைப்போராட்ட வீரரா? அறிவியல் விஞ்ஞானியா-? விவசாயா-? இராணுவ வீரரா-? யார் அவர் என்றால் இந்தியாவின் விளையாட்டுத்துறையில் ஒன்றான கிரிக்கெட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து 1700 கோடி ரூபாய் வரை ஊழல் செய்தவர் தான் இந்த லலித் மோடி.,


உபியை சேர்ந்த லலித் மோடி சிறுவயதில் இருந்தே விளையாட்டுதுறையின் மீது அமெரிக்கா செல்வதற்கான மோகம் கொண்டவராக இருந்தவர், பின்னர் அமெரிக்காவின் டர்ஹாம் நகரில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவருடைய இளம்வயதில் பலவிதமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் லலித் மோடி. கல்லூரி படிப்பின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும். ஆயுதம் வைத்திருந்ததாகவும் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். மன்னிப்பு கேட்டுக்கொண்டதை அடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தியா திரும்பியதும் அப்பாவின் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய மோடி விரைவிலேயே மோடி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் பதவிக்கு உயர்ந்தார். 1992-ல் முன்னணிப் புகையிலை நிறுவனமானகாட்ஃபிரே பிலிப்ஸ்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகத் தேர்வுசெய்யப்பட்டார். சேட்டிலைட்களின் வளர்ச்சிக்காலமான 1990 களில் சர்வதேச கம்பெனியான வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மோடி எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க்ஸ் என்ற பெயரில் 1993ல் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவில் தனது ஒளிபரப்பை துவக்கினார்.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தந்து கொண்டு இருந்த லலித்மோடிதான் வயது வந்தவர்களுக்கான எஃப் டிவியையும் பத்தாண்டுகளுக்கு ஒளிப்பரப்பு உரிமத்தை பெற்று  கல்லாவை நன்றாகவே கட்டினார். இளம் வயதிலிருந்தே தனக்கு பிடித்த விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்ப ஈ.எஸ்.பி.என் சேனலுடன் பத்தாண்டுக்கு ஒப்பந்தம் செய்து தனது பிடியை ஊடகத்துறையில் ஒரு படி உயர்த்திக் கொண்டார். 975 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் தனது பயணத்தை அடுத்த தளத்திற்கு விரிவுபடுத்தினார்.

கிரிக்கெட் வாரியத்தில் தனது திருவிளையாடலை துவக்கிய லலித் மோடிக்கு அதிகார வர்க்கமும் பக்கவாத்தியம் இசைத்தது. ஆம் 2004ல் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சேர்ந்தவர் குறுகிய காலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்குள் ( பி.சி.சி.ஐ ) நுழைந்து அதன் துணைத்தலைவராக மாறிய 3 ஆண்டுக்குள் ஏழு மடங்கு பி.சி.சி.ஐ யின் வருமானத்தை வியாபாரத்தை பெருக்கி காட்டினார். 20 ஒவர் போட்டிகளை கண்டறிந்து ஜீ குழுமத்தின் மூலம் இந்தியன் கிரிக்கெட் லீக் எனும் பெயரில் கிரிக்கெட் வீர்ர் கபில்தேவ் உதவியுடன் ஒளிபரப்பப்பட்டது. இந்த போட்டிகளில் பல சர்வதேச ஆட்டகாரர்களும் பங்கேற்றனர். ஐ.சி.எல் தடையை தொடர்ந்து  ஐ.பி.எல் போட்டிகளை துவக்கி தனது நிலையை தக்க வைத்துக்கொண்டு 800 மில்லியன் டாலர் வருமானத்தை ஐபிஎல்க்கு உருவாக்கியதில் கிரிக்கெட் வாரியம், இந்திய நாட்டின் நடிகர்கள், தொழில் அதிபர்கன் போட்டி போட்டிக்கொண்டு அணிகளை ஏலம் எடுக்க ஆரம்பித்தனர். ஊடகங்கள் ஒளிபரப்பு உரிமைக்கு  பெரும் சூதாட்டைத்தையே நடத்தியது. இதன் உச்ச கட்டம்தான் சசிதரூர் கொச்சி அணியை ஏலம் எடுக்க 1200 கோடி வரை பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் வெளியே வர ஆரம்பித்தது.

2009-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த .பி.எல். போட்டிகளின்போது 27 வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதும். அது தெரிந்தும் முறைகேடுகளை லலித்மோடி தடுக்காமல் பணம் பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. அதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான ஒப்பந்தத்திற்கு சுமார் 500 கோடிரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. 2010 ஜூலையில் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஜோதிரா சிந்தியாவைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை பி.சி.சி.. அமைத்தது. அக்குழு ஜூலை, 2013ல்  தனது 134 பக்க அறிக்கையில் ஊழல், முறைகேடு, பி.சி.சி.-க்கு அவப்பெயர் தேடித் தரும் வகையில் நடந்துகொண்டது உட்பட 8 புகார்கள் லலித் மோடி மீது தெரிவிக்கப்பட்டன. இதன் பின்னணியில் லலித்மோடிக்கு வாழ்நாள் தடையை பிசிசிஐ விதித்தது. இவ்விவகாரத்தில், சசி தரூர், சுனந்தா புஷ்கர் போன்ற பெயர்கள் அடிபட்டன. இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியை சசி தரூர் இழந்தார். லலித் மோடி மீது அமலாக்கத் துறை 16 வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த வழக்குகள் அனைத்தும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்குகள்.

அமலாக்கத்துறையே 1700 கோடி ரூபாய் அபதாரம் விதிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது. மொரீஷியஸைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை போட்டு இருக்கிறார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேவின் மகனுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு, லண்டனில் தலைமறைவாக இருக்கும் லலித் மோடியின் நிறுவனம் ரூ11.63 கோடி கொடுத்திருப்பது தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வந்து கொண்டு இருக்கிறது.

3வது ஐபிஎல் தொடர் சீசன் முழுமைக்கும், மும்பையில் உள்ள ஃபோர் சீஸன்ஸ் ஓட்டலில் வசுந்தரா ராஜே, சசி தரூர், ராஜிவ் சுக்லா, சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் குஷால் போன்றோர் தங்கியதற்கு மட்டும் ரூ. 1.56 கோடி செலவு முழுமையும் லலித்மோடிதான் செய்திருக்கிறார். ஒருபுறம் கம்பெனிக்கு உதவி, மறுபுறம் ஒட்டல் வாடகை செலவு, 25 ஆண்டுகால நண்பர், குடும்ப உறுப்பினர் எல்லாம் தனிப்பட்ட முறையில் இருந்தால் கதை வேறு.  

ஆனால் அரசின் வெளியுறவு செயலாளருக்கு. வெளியுறவுத்துறைக்கு தெரியக்கூடாது என்று ரகசியமாக லலித்மோடியின் மனைவிக்கு நோய் என்றால் அவருக்கு உதவி செய்யட்டும். ஆனால் லலித்மோடி இந்தியா கொண்டுவரப்பட வேண்டும் என்றல்லாவா இந்த சுத்த சுயம்புகள் சொல்லியிருக்க வேண்டும். திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருடனுக்கு உதவப் போய் மாட்டிக் கொண்டு சுஷ்மா விழிக்க, இன்னொரு புறம் இந்திய அரசுக்கே தெரியாமல் உதவிடுங்கள் என வசுந்தரா ராஜே மெயில் அனுப்ப மோசடித்தனத்தின் உச்ச கட்டம். மனிதாபிமானத்தின் அடிப்படையில் என்று சொன்னதை குழந்தையும் நம்ப மறுக்கிறது. உலகம் உரக்க சிரிக்கிறது.

50000 கோடி ரூபாய் சுரண்டப்பட்ட ரெட்டி சகோதரர்கள் வழக்கில் கர்நாடகவில் லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ரூ.16,000 கோடி சுரங்க ஊழல் முறைகேடுகளை வெளியே கொண்டுவந்தார் இதில் படா மோடி பிரதமரின் நண்பர் அதானியும் சம்மந்தபட்டுள்ளார். சட்ட விரோதமான இரும்புத் தாதுவை பெலகரே துறைமுகத்தின் வழியே கையாள அனுமதி கேட்டு லஞ்சம் கொடுத்ததாக அதானி என்டர்பிரைசஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அத்தோடு அந்நிறுவனத்தைத் தடைப் பட்டியலில் சேர்க்குமாறும் கூறியிருந்தது அறிக்கை. அந்த ரெட்டி சகோதரர்களின் ஆஸ்தான குருவாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். அவர்கள் வீட்டின் மகாலட்சுமி பூஜையில் இருந்து அனைத்து விசேஷங்களிலும் பங்கேற்றவர்தான் உத்தமபுத்ரி சுஷ்மா.

சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் விரிவான பேட்டியை கொடுத்துள்ளார் லலித் மோடி அதில்சுஷ்மா என் குடும்ப நண்பர். அதைத் தாண்டி சட்டரீதியான (தொழில்ரீதியான) உறவும் எங்கள் குடும்பங்களுக்குள் இருக்கிறது. சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் 22 ஆண்டுகளாக எனக்குச் சட்ட ஆலோசனை வழங்கிவருகிறார். சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார்.” கூடவே, லலித் மோடி தனக்கும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் இடையேயுள்ள 30 ஆண்டு உறவைப் பற்றியும் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.


அந்த லலித்மோடிக்கு 2014 மார்சில் லண்டனில் தொடர்ந்து குடியிருக்க குடியுரிமை கிடைத்தது. வெளிநாடு செல்வதற்கு விண்ணப்பித்த லலித் மோடியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மறுநாளே லண்டனின் கெய்த்வாஸ் எம்.பியின் உதவியை நாடி பக்கதுணைக்கு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது சகோதரர் ஆண்ட்ரூ ஆகியோரிடம் பேசியதாக லலித்மோடியே தெரிவிக்கிறார். இதன் பின்னணியில் தன் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக போர்ச்சுகல் செல்ல பயண சான்றிதழ் கோரியுள்ளார். உண்மையில் பயண ஆவணங்களின்றி தன் சகோதரியின் திருமணத்தில் பங்கேற்க இயலாது. செஷ்ல்ஸ் தீவு அதிபர் உள்பட முக்கிய பிரமுகர்களை சந்திக்க முடியாது என இளவரசரிடம் தெரிவித்தற்கு அவர் உதவி செய்வதாக சொன்னதாக லலித் மோடி சொல்லி கெய்த் வாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனையில் இந்திய நீதிபதிகள் யுசி பானார்ஜி, ஜீவன் ரெட்டி, எஸ்.பி. சின்கா, முன்னாள் மும்பை கமிஷனர் தியாகி ஆகியோரும் உதவியுள்ளனர். இதனை தொடர்ந்து சுஷ்மா சுவராஜ் லலித்மோடிக்கு பயணச் சான்றிதழ் பரிந்துரையின் பேரில் 24 மணி நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது

வசுந்தராவிடம் உதவி கோரியதையும் குறிப்பிட்டிருக்கிறார். வசுந்தரா மகனும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் சிங் சார்ந்த நிறுவனத்தில் லலித் மோடி சார்ந்த நிறுவனத்திலிருந்து சென்ற பணமும் கை மாற்றப்பட்ட பங்குகளும் சொல்கின்றன. லலித் மோடி இங்கிலாந்திலிருந்து போர்ச்சுகலுக்குச் செல்ல சுஷ்மா உதவியது ஒரு தேடப்படும் குற்றவாளிக்கு என்பதை தாண்டி மனிதாபிமான உதவி என்று சமாளிக்கிறது அரசு.  இந்த விஷயத்தில் அரசும் எங்கள் கட்சியும் அவருக்கு முழு ஆதரவாக நிற்கின்றன. இதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லைஎன்று கூட்டுப் பேட்டி அளிக்கின்றனர் அருண் ஜேட்லியும். ராஜ்நாத் சிங்கும்.

கோழி முட்டைக்கு வக்கு இல்லாததால் தானே காக்கா முட்டையை எடுத்து குடிக்கிறோம் என்று சமீபத்தில் வந்த திரைப்படம் ஒளியிழந்த இந்தியாவை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது. இதே நேரத்தில் தான்   “சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு ரூ.12,615 கோடி ( 10.6%) குறைந்துவிட்டது.” அதாவது, பணம் போட்டிருந்தவர்கள் பாதுகாப்பாக எடுத்துவிட்டார்களாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்றும் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என்ற வாய் ஜால படா மோடியின் ஆட்சியில் தான் இந்த கொஞ்சலும். குழாவலும் வெட்கமே இல்லாமல் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு நிதி மந்திரியும், உள்துறை மந்திரியும் மட்டுமல்ல இவர்களின் தலைமை பீடமான ஆர்எஸ்எஸ்ம் வக்கலாத்து வாங்கி மனிதாபிமான உதவி என்று குட்டு உடைந்து பின்னரும் பியானாவை மொகாரி ராகத்தில் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்ப அடுத்த பட்டாசு வெடிச்சுருச்சு., மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சங் பரிவார் அமைப்பினர் பலருக்கு தொடர்பு உள்ளது. அந்த வழக்கை விசாரிக்கும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சலியன், மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் குற்றவாளிகள் மீது மென்மையான போக்கு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

குஜராத் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆதாரங்கள் இருப்பதாக சொல்லப்பட்ட அமித்ஷா தற்போது அந்த வழக்கில் ஆதாரம் இல்லை சிபிஐ யால் விடுவிக்கப்பட்டுள்ளார். கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு என அரசு அறிவிக்கிறது. ஆனால் பிரதமரின் மனைவியோ எனக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு படையில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்று புகார் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த பின்னணியில் தற்போது பிஜேபிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியும். குழிபறிக்கும் படலமும் இந்த சம்பவங்கள் வெளிவந்ததாக சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் பிஎம்ஓ அலுவலகத்திற்கு தெரியாமல் நடக்க சாத்தியமில்லை என்கிறது ஒரு கூட்டம். மற்றொரு புறம் அனைத்து அதிகாரங்களும் ஒரிடத்தில் குவிக்கப்படுவதும், மையப்படுத்தபடுவதும் பிரச்சனைகளை மூடி மறைக்கவே உதவிடுகிறது. குறிப்பாக தற்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வித்தகுதி குறித்த முறைகேடு., எல்லாவற்றையும் மறைக்க யோகாவை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார்.

அவசர கால பிரகடனம் செய்யப்பட்டதன் 40 ஆண்டு நினைவுகளை ஒட்டி மீண்டும் அப்படிப்பட்ட சூழல் வரலாம் என பிஜேபியின் பெரும் தலைவர் அத்வானி கூற, காரணம் கேட்க ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கப்படுகிறப்படுகிறது. எந்த மாற்றமும் இல்லை என சொல்கிறார். இப்படி அடுத்த தளத்தை நோக்கி செல்கிறது இந்திய மோடி அரசும். அதன் நடவடிக்கைகளும். கார்ப்ரேட் மயமும். வகுப்புவாதமும். ஊழலும், அதிகார குவியலும் எதேசதிகாரத்தினை நோக்கி செல்லும் என்பதே உலக அனுபவம். 

 நன்றி / இளைஞர் முழக்கம் ஜூலை 2015