”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

உண்மையை உரக்க சொல்லும் தருணமிது


கொரோனா இந்த நூற்றாண்டின் மனித குலம் சந்தித்து விடைத் தேடிக்கொண்டு இருக்கும் பெயர். விண்ணையும் சாடிய மனிதகுலம் ஒரு கிருமியோடு இன்று போராடிக் கொண்டு இருக்கிறது. மனிதத்திற்கான அர்த்தத்தை தேடிக் கொண்டு இருக்கிறது, வாழ்ந்தவனும், வாழ்ந்து கெட்டவனும் ஒரே தட்டில் இருக்கிறார்கள் என வேதாந்திகள் அரற்றிக் கொண்டு இருக்க வழக்கம் போல் கார்ப்ரேட்கள் இதிலும் லாபம் எத்தனை சதவீதம் கிடைக்கும் என கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரு உயரத்தில் இருக்கிறோம். கீழே விழுந்தால் பெரும் சேதாரம் ஏற்படும் என்று கோடிக்கணக்கான மக்களின் உழைப்பினை உறிஞ்சி மேலே சென்றவர்கள் அரசுகளை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 
வழக்கம் போல் உழைப்பவர்களின் குரல் ஒய்யாரத்தில் இருப்பவர்களுக்கு கேட்காது. கேட்டாலும் வரமாட்டார்கள் என்று தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள ஆயிரம் கிலோமீட்டரையும் மாதத்தில் கடந்துவிடுவோம் என்று குழந்தைகளுடன் பட்டினி பயத்தை வெற்றி கொள்ள நடையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என செய்திகள் வந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.  
சமூக விலகல், தனி மனித விலகல் இருந்தால் கொரோனோவை கட்டுப்படுத்தி விடலாம் என அரசுகள் அறிவித்தன. நம்பினோம். விழித்திருந்து, தனித்திருந்து விலகி இருக்கிறோம். கொரோனோவிற்கு நாடு. மதம், இனம் என பெயர்கள் வைத்த போது கூட அமைதியாக வீட்டில் முடங்கி கிடந்தோம். ஆள்வோர்கள் எங்களை பத்திரமாக காத்திடுவார்கள் என்று நம்பினோம். ஏதேதோ மருத்துவ கருவிகளை சொன்னார்கள். வரும் என்றார்கள், வந்துவிட்டது என்றார்கள், பரிசோதித்துவிட்டோம் கொரோனோவை தடுத்து விடலாம் என்றார்கள் நம்பினோம். இப்போது அவர்களே சொல்கிறார்கள். தப்புதப்பா ரிசல்ட் வருது. நாங்க என்ன செய்ய நம்பித்தான் வாங்கினோம், நம்பிக்கையை கொடுத்தது யாரு, இந்த நாட்டை ஆள்வோர் தானே., 
ஏராளமான உயர் கல்வி நிறுவனங்கள், அறிவியல் நிறுவனங்கள், பரிசோதனை மையங்கள் அப்படி., இப்படி என்று ஆயிரக்கணக்கில் கட்டி வைத்துள்ளார்களே அதெல்லாம் இப்போது செயல்படுத்தினால் வேகமாக நோயை கண்டுபிடிக்கலாமே, ஏம்பா நமக்கு தெரிந்த இந்த விசயம் கூட ஆட்சியில் இருப்பவர்களுக்கு தெரியாதா?  அப்படியெல்லாம் இருக்காது, கொரோனோ ஒழியறதுக்குள்ள அதெல்லாம் திறந்து மக்களுக்கு காட்டுவாங்க என்று உண்மையை சொல்கிறார்களா? நக்கல் அடிக்கிறார்களா ? ஏதோ சமூக வலைதளமாமே அதிலையும் இது மாதிரிதான் நிறைய பேரு சொல்லுறாங்க. 
கேட்ட கொஞ்ச நேரத்திலேயே இப்ப தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை நம்பூவுவதா--? இல்லை உண்மைய பொட்டுனு போட்டு உடைச்சி கேட்ட பாமர மக்கள நம்பறதா-? 
சரி விசயத்திற்கு வருவோம்., இந்த கொரோனா எங்கிருந்து வந்தது என்று பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது. சீனானு ஒரு குரூப், அமெரிக்கானு ஒரு குரூப், இத்தாலினு ஒரு குரூப் இப்படி குரூப் குரூப்பா? பேசிக்கிட்டு இருக்க, உலக நாடுகள் அனைத்திற்கும் இந்த வைரஸ் பரவியிருச்சு.. கொஞ்ச நாடுகளில் மட்டும் அதிக பாதிப்பு. பல நாடுகளில் கொஞ்ச பாதிப்பு.. இதுக்கு யாரு காரணம் என்று தேட உலக சுகாதார நிறுவனம் என்ற சர்வதேச அமைப்பு யாருக்கிட்ட இருந்து வந்தாலும் இது மனித குலத்திற்கு எதிரி அதை அழிக்கிற வழிய பாருங்கனு சொல்லிருச்சு.. 
அப்பதான் ஒரு நாடு பொசுக்குனு நான் இருக்குறேன். என்நாட்டுல அந்த வைரசின் தாண்டவத்தை நாங்கள் ரூத்ரதாண்டவம் ஆடி அழிச்சுட்டோம். எந்த ஊருக்கு வரணும் என்று சொல்லுங்க, நாங்க வரோம். அதன் வேர்காலையோ, மயிர்காலையோ பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி பாட்டிலில் போட்டு அடைத்து விடுகிறோம் என்று சொன்னது., நம்ம ஊரு டிவிலே கதைகளின் கதை என்று அந்த நாட்டை பற்றி போட்டார்கள்.. அப்போது தான் தெரிந்தது உலகை விழுங்க நினைக்கும் அந்த அரக்கனிடம் இருந்து ஒரு குட்டி பூதம் சண்டை போட்ட கதை. எங்க வீட்டுல வேற அப்பப்ப எங்க தாத்தா, பாட்டி, அப்பா எல்லாம் வீடு நிறைய புத்தகத்தை வைத்துக்கிட்டு படி படினு சொல்லுவாங்க. சின்ன பையன போட்டு இப்படி விரட்டுறீங்களேனு சொல்லுவேன்.  அந்த டிவிய பாத்து கதை கேட்டபின்னாடி தான் எங்க அப்பா சொன்ன கதை( உண்மைக்கதை ) பிடிச்சது..
ஆமாம், அந்த குட்டி பூதம் வேறு யாருமில்லை மார்த்தி, பிடல், சே என்ற மனிதர்கள் வளர்தெடுத்த கியூபா என்ற குட்டி நாடுதான். “சாட்டையின் வீச்சாகிலும் சரி, அவமானச் சொல்லானாலும் சரி, என்னை பிணைத்த சங்கிலிகள் எழுப்பிய ஓசையானாலும் சரி எதுவுமே எனக்கு வெறுக்க கற்றுக் கொடுக்கவில்லை,. உன்னை பொருட்படுத்த போவதில்லை, ஏனென்றால் என்னால் யாரையும் வெறுக்க முடியாது”. என தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் விடுதலைக்கும். சுதந்திரக் காற்றிற்காகவும் போராடிய அந்த மகத்தான மனிதன் ஜோஸ் மார்த்தியின் சிந்தனைகளை தாங்கி வளர்ந்த பூமி கியூபா. அதனால்தான் தனது நாட்டிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதார தடையை அமெரிக்க தேசம் கொண்டு வந்த போது அதற்கு முதல் ஆளாக கை தூக்கிய இத்தாலிக்கு பகை மறந்து தனது மருத்துவர்களை அனுப்பி கொரோனா வைத்தியம் பார்த்து வருகிறது.
கிராமங்களில் மருத்துவச்சி என்று பெண்களை அழைப்பார்கள். ஆமாம் நவீன தொழில்நுட்ப, மருத்துவ அறிவு வளர்வதற்கு முன்னால் கை வைத்தியம் பார்த்தவர்கள் பெரும் பகுதி பெண்களே. அவர்களை மருத்துவச்சி என்றே அழைத்தனர். அந்த மருத்துவச்சி ஒரு நாள் இறந்த போது அப்துல் ரகுமான் என்ற கவிஞர் சொன்னார். “பிரசவங்களை மட்டுமே பார்த்த மருத்துவச்சி இன்று பிற சவங்களை பார்க்க வந்துள்ளாள்” என்று, ஆனால் கியூபாவோ பிரசவங்கள் பிற சவங்கள் ஆகிவிடக்கூடாது என தனது நாட்டின் இராணுவத்தை விட மருத்துவத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவைகளை கொண்ட நாடாக வளர்ந்து வருகிறது. உலகின் மருத்துவத்துறையில் முன்னணி நாடாக போற்றப்படுகிறது.
அதனாலதான் கியூப அரசு தனது மருத்துவத்துறையை ” மருத்துவ சர்வதேசியம்” என அறிவித்து இந்த காலத்தில் 22 நாடுகளுக்கு தனது மருத்துவ பணியாளர்களை கொரோனா ஒழிப்பிற்கு அனுப்பி வைத்துள்ளது. 
இதற்கு முன்னும் பாடிஸ்டாவை விரட்டி புரட்சியின் மூலம் புதிய கியூபா அமைக்கப்பட்ட ஒராண்டடிற்குள் மருத்துவத்தை அனைவருக்குமானதாக மாற்ற அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 1960 ஆம் ஆண்டில் இருந்தே இதர நாடுகளுக்கான உதவியை செய்திட துவங்கிவிட்டது. 1960 ல் சிலியின் பூகம்ப பாதிப்பிற்கான மருத்துவ உதவியும் 1963ல் அல்ஜீரியாவிற்கும் உதவிகள் என செய்தது. 1960 களில் இருந்து ஆப்பிரிக்காவின் 39 நாடுகளில் கியூபாவின் 79000 மருத்துவ வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் உலகம் முழுவதும் 164 நாடுகளில் 4 லட்சம் கியூபா வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். 
2014ல் எப்லா வைரஸ் தாக்குதல் பரவிய காலத்தில் அமெரிக்கா அதிபராக இருந்த ஒபாமா “கியூபாவும், அமெரிக்காவும் இணைந்து ஒவ்வொரு பக்கமும் நோய் பரவலை தடுத்து நிறுத்து மக்களை காப்பாற்றும்” என கூறினார். கியூபாவின் இத்தகைய பணியின் காரணமாக உலகம் முழுவதும்  லட்சக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளது.  120 கோடி மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 22 லட்சம் குழந்தைகள் பிறப்பதற்கான பிரசவத்தை உறுதி செய்து பூமிப் பந்தில் ஆரோக்கியமாக வளர வழி வகுத்துள்ளது. ஏறத்தாழ 80 லட்சம் அறுவை சிகிச்சைகளை கியூப மருத்துவர்கள் செய்துள்ளனர்.  
கியூபா மருத்துவ சேவைகளை உலக நாடுகளுக்கு ஆற்றுவது மட்டுமல்ல, அந்த நாடுகளே மருத்துவத்துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று திட்டத்தை வகுத்தது கியூபா. அதற்கான உடனடி தேவையாக வந்த பேரிடர்தான் ஹரிகேன் புயல். மத்திய அமெரிக்காவை கடுமையாக தாக்கிய பின்ணணியில் 30000 பொதுமக்கள் இறந்ததும், 25 லட்சம் பேர் வீடிழந்து பாதிக்கப்பட்ட நிலையில்தான் நிரந்தரமாக மருத்துவபணியை செய்வதற்கான திட்டமிடலையும் கியூபா உருவாக்கியது.
கியூபாவின் தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ 1999ல் லத்தின் அமெரிக்காவிற்கான மருத்துவப் பயிற்சி மையத்தினை கியூபாவில் துவங்கினார். 1959 முதல் பொருளாதார தடையை விதித்து கியூபாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என துடித்து வரும் அமெரிக்கா உள்ளிட்டு 105 நாடுகளை சேர்ந்த 29000 பேர் கியூப பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவர்களாக படித்து பட்டம் பெற்று வெளி வந்தனர். இன்னும் சிறப்பாக சொல்கிறார்கள் அதில் பாதி பேர் பெண்கள், 75 சதவீதம் பேர் அந்த நாடுகளின் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள் என்பது முக்கியமானது. அது மட்டுமல்ல 100 பழங்குடியின பிரிவினர்கள் வீட்டுக் குழந்தைகள் என்பது மேலும் சிறப்பானது. பிடல் என்ற அந்த மகத்தான மனிதன் மருத்துவர்களை கூட பணக்கார வீடுகளில் இருந்து தேர்வு செய்யவில்லை, பெண்களாக, பழங்குடியினராக, விவசாயத் தொழிலாளியாக தேர்வு செய்து மருத்துவர்களாக உருவாக்கியதே இன்றும் எந்த நாடுகள் பாதிப்பு என்றால் முதல் வரிசையில் கியூபாவின் மருத்துவர்கள் நிற்பதன் பொருள் புரியும். 
பிடலின்  வார்த்தைகளில் சொல்வதென்றால் “புரட்சிகாரர்களும், சோசலிசவாதிகளும், மார்க்சிய-லெனினியவாதிகளுமாகிய நாங்கள் பகைமையை ஒரு கோட்பாடாக கற்பிப்பதில்லை. இப்படி சொல்வதால் எங்களுக்கு ஒடுக்குமுறை அமைப்போடு ஏதோவொரு இணக்க உணர்வு இருப்பதாலோ அதை எதிர்த்து எவ்வளவு வலுவாகப் போராட வேண்டுமோ அவ்வளவு வலுவாக நாங்கள் போராடவில்லை என்றோ அர்த்தமாகாது. ஏகாதிபத்தியத்தின் எல்லா கொடுஞ்செயல்களாலும் நாங்கள் பாதிக்கபட்டோம். ஆனாலும் ஒரு அமெரிக்கர் இந்த நாட்டுக்கு வருகிறார் என்றால் அவரை இங்கே ஒவ்வொருவரும் மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஏனென்றால் நாங்கள் அமெரிக்க மக்களை வெறுக்கவில்லை. நாங்கள் ஏற்க மறுப்பதும், வெறுப்பதும் எதுவென்றால் அந்த அமைப்பு முறையைதான். தனிப்பட்ட மனிதர்கள் மீது பகையில்லை. அநீதியான சுரண்டல் அமைப்பின் மீதுதான் பகை என்பதே உண்மை.” ஆம் மற்றொரு வார்த்தையில் சொல்வதென்றால் புரட்சி என்பதே அன்பு தான்., உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ள ஏகாதிபத்திய, முதலாளித்துவ அமைப்பின் மீதே பகை கொள்கிறோம். 
எனவே உலகிற்கு உரக்க சொல்லும் தருணமிது. ஒரு கடலின் அலைகள் நாம், ஒரு தோட்டத்தின் மரங்கள் நாம், ஒரு மரத்தின் பூக்கள் நாம் என்று சர்வதேசியம் சொல்லும் சோசலிசத்தின் புதல்வர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். பூமிபந்தில் உள்ள உயிர்களின் மீது பேரன்பு கொண்டுள்ளோம். எனவே வரும் முன் காப்போம், அச்சம் தவிர்ப்போம் என்ற சோசலிச நாடுகளின் மருத்துவ கட்டமைப்பு வழியில் நின்று ஒன்றுபட்டு கொரோனா வை ஒழிப்போம்
. அரவிந்தன்,  திருப்பூர்.

என்றும் நாங்கள் கம்யூனிஸ்ட்களே !



மார்ச்  13 - இடுவாய் தியாகி ரத்தினசாமி 18 ஆவது நினைவுதினம்...


ஏழையென்றும் அடிமையென்றும் 

எவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் 
சமானமாக வாழ்வமே .,. 
என்றார் மகாகவி பாரதி,..  
அவரது வைர வரிகளுக்கு உயிர் கொடுத்த மகத்தான மனிதரே தோழர் இரத்தினசாமி.  1996ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தன்னை ஒருசேர எதிர்த்து அனைத்து கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை  791 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும், ரத்தினசாமியின் பணியும் வெற்றிக்கு பின்னர் மக்கள் சேவையை இரட்டிப்பாக்கியது. விவசாயக் கிணறுகளில் தண்ணீர் விற்பனையை தடுத்து விவசாயத்தை பாதுகாத்தது. ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை எடுத்து 1200 ஏழை எளிய குடும்பங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து மகாகவி பாரதியின் மீது கொண்ட அன்பால் அந்த ஊருக்கு பாரதிபுரம் என பெயரிட்டு மகிழ்ந்தார்.  
பட்டியலின மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, தெருவிளக்கு, தொகுப்பு வீடு கட்டி சமத்துவ வாழ்க்கையை உறுதி செய்தார். தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்கள் உரிமையை பாதுகாத்தார். பாழ்பட்டிருந்த இடுவாய் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை புனரமைத்து பள்ளிக்காக குழு அமைத்து பேணி காத்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினார். கட்சியின் செல்வாக்கும், இரத்தினசாமியின் பணியும் ஓங்கி வளர்வதை பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவில் எழுத்துப்பணி செய்து கொண்டு இருந்த  தருணத்தில் ஆதிக்க வெறியர்களின் கத்திக்குத்துக்கு ஆளாக்கப்பட்டு நீண்ட நெடிய மருத்துவசிசிக்சைப் போராட்டத்திற்கு பின் உயிர் காப்பற்றப்பட்டு அதன் பின்னரும் ஊராட்சி மன்ற தொடந்தார்.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், மக்கள் செல்வாக்கின் காரணமாக இரண்டாம் முறையும் ஒரு சேர எதிர்த்து நின்ற மக்கள் முன்னணியை தோற்கடித்தார். முன்னிலும் ஆழமாக மக்கள் சேவையும், பணியும் தொடர்ந்தது. அயராது பாடுபட்ட அவரை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்தியினர் 2002 மார்ச் 12ம் தேதி இரவு தோழர் இரத்தினசாமி அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தார்கள். அவரது கழுத்தில் கொன்றதற்கான  8 காரணங்களை கொலைகார பாவிகள் எழுதி வைத்துச் சென்றார்கள். 

அதில் நீ கம்யூனிஸ்டாக இருப்பது, சக்கியலிர்களுக்கு சப்போர்ட் செய்தது, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்தது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது. மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது உள்ளிட்டு 8 காரணங்களை எழுதி வைத்தனர். 
அவரை கொலை செய்தவர்களுக்கு இப்போதும் புரிந்திருக்கும். மீண்டும் 18 ஆண்டுகள் கழித்து 2019ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரத்தினசாமியின் வாரிசுகளாக கம்யூனிஸ்ட்கள் 1008 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் தோழர் கே.கணேசன் வெற்றி பெற்றது கம்யூனிஸ்டுகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் கட்டி யெழுப்ப துவங்கியுள்ளனர். 
ஆம் தற்போதும் மத்திய அரசு மதத்தின் பெயரால் குடியுரிமை திருத்த சட்டத்தை முன்வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருவதில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பும் உள்ளடக்கியதே.. 
45 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் இடப் பெயர்வும், நிரந்தரமற்றத்தன்மையும் வேலைவாய்ப்புகளில் அதிகரித்துள்ளது. வேலைக்காக இளைஞர்கள் சொந்த கிராமங்களை விட்டு இடம்பெயரும் நிலை அதிகரித்து வருகிறது. 
அணி திரட்டப் பட்ட தொழில்களில் கூட இன்று ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்கள் எந்த விதமான சட்ட சலுகையும், உரிமைகளும் அற்று பணியாற்றுகின்றனர். தொழிற்சங்க உரிமைகள்  மறுக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் உரிமை மீறல்களும், சுரண்டல்களும் அதிகரித்து வருகின்றன.  
முறைசாரத் தொழிலாளர்களை அதிகளவில் திரட்ட வேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை உயர்த்தி பிடிக்கும் மகத்தான பணியை முன்னை விட கூடுதல் படுத்த வேண்டிய தருணமாக உள்ளது. திருப்பூர் மாவட்டம் உள்ளிட்டு தொழில் நகரங்களில் தொழிலாளர்களின் வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க தியாகிகளின் இரத்தங்கள் உரமாகட்டும்.  
தொழிலாளி வர்க்கத்தின் நேச வர்க்கமான விவசாய, விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வதாரங்கள் கேள்விக்குள்ளக்கப் பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அதற்கு எதிரான போராட்டங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது.  இந்த நிலையில் சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் பெண்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளுக்கு வர்க்க ஒற்றுமையோடு திரட்டி போராட வேண்டியுள்ளது. அதற்கு தடையாக மதவாதம், சாதியவாதம், இனவாதம், பழமைவாதக் கருத்துக்களும், சித்தாந்தங்களும்  முன்வைக்கப்படுகிறது. இதனை எதிர்த்த போராட்டத்தில் உறுதியாக களம் கண்ட போராளியே தோழர் இரத்தினசாமி ஆவார். 
உழைக்கும் மக்களின் வாழ்வியல் கோரிக்கைக்களுக்கான போராட்டங்களையும், அதற்கு தலைமை தாங்கும் தளகர்த்தாக்களையும் உருவாக்குவதில் தோழர் இரத்தினசாமி போன்ற தியாகிகளின் தியாகங்கள் உரமாகும். ஒரு போதும் வீணாகாது.  நெஞ்சில் உரத்தை ஏற்றி சனதான ஆதிக்கத்தை வேரறுக்க, கம்யூனிச கருத்துக்களை ஏந்திட செம்மலர்களாகிய நாங்கள் பறிக்க பறிக்க பூத்துக் கொண்டே இருப்போம்...