”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மூடர் கூடாமா?

“மக்கு, மக்கு என்று சொல்லியே தலையில் கொட்டி வைத்து என்னை மக்கு பையனாய், உட்கார வைத்து விட்டீர்கள் ! இப்போதுதான் என்னை நம்பி ஒரு வேலையை பொறுப்பாய்  ஒப்படைத்துள்ளார்கள். அதனால்  நீங்க ஒரு அடி நகர்ந்தாலும் தலையில் கிரிக்கெட் மட்டையால் நச்சென்று போட்டு விடுவேன், என்று பெற்றோரையே நகரவிடாமல் நிறுத்தி வைத்து வீட்டை கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு, அந்த வீட்டின் பையனே உதவி செய்வான்.’’ இது மூடர் கூடம் என்ற திரைப்படத்தில் வரும் காட்சி,.. 

இது தான் இன்றைய இந்திய நாட்டின் நிலையும்., பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்தியாவின் ஒரு பகுதி அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகளை கூப்பிட்டு உங்கள் கையில் சாவியை தருகிறோம்,. நீங்களே எங்களை திறந்து விட்டு கூப்பிட்டால் அது மரியாதை, நீங்களே அள்ளிக் கொடுத்தால் அது அன்பளிப்பு,. நாங்களே வந்து திறந்து, நாங்களே எடுத்துக் கொண்டால் அதற்கு பெயர் திருட்டு என்று புதிய வியாக்கியானம் செய்து கொண்டு  அந்நிய மூதலிடாய் நாங்கள் வருகிறோம்,. அனைத்தையும் கொள்ளையடிக்க எங்களுக்கு அனுமதி கொடுங்கள்,. எதிர்த்து யாராவது கேட்டால் இந்தாருங்கள் கிரிக்கெட் பேட்( காவல்துறை, நீதிமன்றம் போன்ற அடக்குமுறை எந்திரம்), நீங்கள் மக்கு இல்லை, உங்களால் முடியும் மக்களை நசுக்க, இவைகளையும் வைத்துக் கொள்ளுங்கள், ஒருவரும் எதிர்த்து பேசமாட்டார்கள்,. என்று,

அந்நிய முதலீடு வரமா ? சாபமா ?


அந்நிய முதலீடு  என்பது ஒரு நாட்டின் கம்பெனி இன்னொரு நாட்டில் தனது லாப வேட்கைக்காக முதலீடு செய்வதேயாகும். இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் பாராம்பரிய, மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்பு, வளர்ச்சி, மக்களின் பாதுகாப்பு இவற்றை கணக்கில் கொண்டு சட்டத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றைத்தான் இப்போது உலக அளவில் உலக வர்த்தக அமைப்பு, ஐஎம்எப், உலகவங்கி, பல சுற்று பேச்சுவார்த்தை மாநாடுகள், காட், டங்கல், டிரிப்ஸ், டிரிம்ஸ் என பல பெயர்களில் ஒப்பந்தங்களை சொல்லி மாட்ட விடும் ஏற்பாட்டை 1990 களுக்கு பின் வேகமாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் செய்து வருகின்றன.

இதற்கு ஒத்து ஊதுவதற்கு வளர்முக நாடுகள் மற்றும் தங்களின் சந்தைக்கான நாடுகளின் ஆட்சியாளர்களை ஆதரவாளர்களாக மாற்ற எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். சமீபத்தில் மன்மோகன் சிங் அவர்களின் கடைசி கால ஆட்சியில் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி பிரமாண்டமாக வந்தது. வால்மார்ட் நிறுவனம் தனது சந்தையை இந்தியாவில் வி°தரிக்க இந்திய நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்களுக்கு ரூ 125 கோடி வரை லஞ்சமாக கொடுத்தோம், எதற்கு என்றால் எங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர என்று பகிரங்கமாக சொல்லும் வெட்கக் கேடு அளவிற்கு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அந்நிய முதலீட்டின் கை ஓங்கியுள்ளது.

இப்படி வரும் இந்த அன்னிய முதலீடு எப்படி நமக்கு வரமாக இருக்க முடியும்,. சாபமாகவே அமையும்,. 2010ம் ஆண்டு மட்டும் 44.8 பில்லியன் டாலர் அன்னிய முதலீடும், 2011ல் 50.8 பில்லியனாகவும்  13 சதவீதம் அதிகரித்தது. இவற்றில் மொரியஸ் நாட்டின் வழியாக வந்த முதலீடு மட்டும் 20 பில்லியன் டாலர் ( 46 சதவீதம்) நேரடியாக வந்துள்ளது.  இந்தியாவின் மிக பெரிய அந்நிய முதலீட்டாளராக அமெரிக்க கம்பெனிகளின் ஆதிக்கம் கொடி கட்ட துவங்கியுள்ளது.

ஏன் கொட்டி தீர்க்கிறார்கள் ?


ஏன் இப்படி தேடிப்பிடிச்சு நம்ம நாட்டுல கொண்டு வந்து அவங்க நாட்டு முதலீட்டை கொண்டாறங்கனு பார்ப்போம்,. இங்க பல துறைகளில் வந்து உற்பத்தி செய்த பொருட்களை இங்கேயே சந்தையும் படுத்த வேண்டும். ஆனால் முடியவில்லை. பல கார் கம்பெனிகள் இங்கே உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யகிறார்கள்,. உற்பத்தி இங்கே,. விற்பனை எங்கே,?,. 

இந்தியாவின் பொருளாதாரம் தற்போதைய சூழலில் நிலைநிறுத்தப்பட்ட பொருளாதாரமாக காட்சி அளிக்கிறது. ஏராளமான சேமிக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான மனிதவளத்தை கொண்ட நாடு, தொழில் வளர்ச்சியில் இன்னும் முன்னேற வேண்டிய தேசம்,. இங்கு குறைவான சம்பளத்திற்கு ஏராளமான தொழிலாளர்கள் கிடைப்பார்கள்,. கூலி வேலைக்கும் அதிகம் பேர் உள்ளனர். பெரியளவிலான தனியார் மூலதனமும் இங்கு ஏற்கனவே உள்ளது. நகரமயமாக்கல் வேகமாக நடைபெறும் இடமாக உள்ளது.

வேளாண் சார்ந்த உற்பத்தியில் உள்ள விவசாயிகளுக்கு 10 முதல் 15 சதவீத அளவிற்கான வருமானத்தை உறுதி செய்தால் அந்த சந்தையை பிடிக்க முடிக்க முடியும். தற்போது இதை விட குறைவான வருவாயே கிடைக்கிறது. மேலும் 3-4 இடைத்தரகர்கள் விவசாயிக்கும், நுகர்வோருக்கும் உள்ளனர்,  உற்பத்தியான பொருளை பாதுகாக்க போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை.  விநியோகத்தில் மிகப்பெரிய குறைபாடான முறையே இங்கு உள்ளது.

இந்த பிரச்சனைகளை அந்நிய முதலீட்டாளர்கள் நமக்கு சொல்கிறார்கள். உங்கள் ஊரில் உள்ள இந்த நிலைமைகளை மாற்ற வேண்டுமானால் நாங்கள் முதலீடு செய்தால் எல்லாம் மாறி விடும். ஆகவே, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, உணவு பற்றாக்குறையை போக்க, 5 ஆண்டுகளில் 15 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க, நுகர்வோருக்கு முழு பயனையும் அழிக்க, இடைத்தரகர்களை ஒழிக்க, விலைகளை குறைக்க என்று நாங்கள் முயற்சி செய்வோம்.

இதுவரை மனிதர்களுக்கான சந்தையாக இருந்தது. அதனால் உங்களுக்கு உற்பத்தியில் லாபம் குறைவாக இருந்தது. இப்போது நாங்கள் வருகிறோம் சந்தைக்கான மனிதர்களை விளம்பரங்கள் மூலம் உருவாக்கும். உற்பத்தியில் லாபம் அதிகரிக்கும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று குரங்கு அப்பத்தை இரண்டு நரிகளுக்கு பங்கு வைப்பதாக சொன்ன கதையை தான் நமக்கு செய்து காட்ட போகிறார்கள்.  

ஆடாமா ஜெயிச்சோமடா
?

இன்றைய நிலையில் 63 துறைகள் மூலம் நேரடியாக 2000-2014 ஆண்டு வரை ரூ 1,009,780.99 கோடி அந்நிய மூதலிடு இந்தியாவில் வந்திறங்கியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் சொன்னால் ஏறத்தாழ 212,030.72 மில்லியன் டாலர் பணங்கள் வந்துள்ளன. குறிப்பாக இந்திய நாட்டின் உணவுத்துறையில் மட்டும் 31,118.30 கோடி ரூபாய்கள் மூதலிடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தாவர எண்ணெய் மற்றும் வன°பதி போன்ற துறையில் மட்டும் 1,974 கோடி ரூபாயும், விவசாய தேவைப்பிரிவில் 8283.82 கோடி ரூபாயும் மூதலிடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்திய நாட்டின் சில்லறை வர்த்தகத்தில் 50 மில்லியன் பேர் ஈடுபட்டுள்ளனர். லாப பங்கீடும், முதலீட்டு விகிதமும் திட்டமிட்ட அடிப்படையில் இல்லாமல் ஒருவர் இந்த துறையில் சாலையோராத்தில் கடை போடுவதில் 100 ரூபாயில் துவங்கி சில கோடி போட்டு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வரை வைத்துள்ளவர்கள் ஈடுபட்டுள்ள துறையாகும். தற்போது இவற்றில் பெண்டாலுhன் என்ற நிறுவனம் 450 கடைகளோடு குடி புகுந்துள்ளது. தனது வர்த்தக நிறுவனமாக“பிக் பஜார்’’ என்ற பெயரில் மும்பையை தலைமையிடமாக கொண்டு சில்லறை வர்த்தகத்தில் தனது விற்பனை கடைகளை துவக்கியுள்ளது.

டாட்டா குழுமம் “ஸ்டார்இண்டியா பஜார்’’ என்ற பெயரிலும், ரிலையன்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ்பிரஸ் என்ற பெயரிலும், ஆர்பிஜி குழுமம், ஏவி பிர்லா குழுமம் ஆடை உற்பத்தியிலும் ( லுயிஸ்பிலிப், ஆலன்சோலே, வான்ஹீயூசன்,பீட்டர் இன்லாண்ட்), வால்மார்ட் வரை இந்த எல்லை அந்நிய, இந்திய நிறுவனங்களின் வலைத்தளமாக உள்நாட்டு சில்லறை வர்த்தகம் மாறியுள்ளது. இப்படி இந்திய நாட்டின் 63 மிக முக்கிய துறைகளை தங்களது சந்தைக்காடாக அன்னிய முலதனம் மாற்றியுள்ளது.
இதன் விளைவு தங்களது லாபவெறியின் உச்சகட்டமாய் இந்தியா நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்று என்று உத்தரவுகள் போட ஆரம்பித்து மோடி அவர்களும் இந்திய நாட்டின் தொழிலாளர் துறையை முதலாளிகள் நலத்துறையாகவும்,  தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யும் தொழிலாளர் நல ஆய்வாளர். முதலாளிகளுக்கான ஆய்வாளராக மாற்றப்படுவார்கள் என மோடி மேலும் அறிவித்துள்ளார். இப்படி திரைப்படத்தில் வருவதை போல் பல நாடுகளில் விளையாட்டை விளையாடித்தான் தோற்றார்கள், இங்கு தான் ஆடாமலேயே தோற்றுக் கொண்டிருக்கிறோம், முதலாளிகள் ஆடாமலே ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்கள்,  நாம் மூடர் கூடத்தில் இல்லாமல் சிந்திக்க தெரிந்தவர்களாக எதிர்ப்பை பதிவு செய்பவர்களாக நிலைகெட்ட இந்த மனிதரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின் வார்த்தைகளுக்கு ஏற்ப  ரௌத்திரம் பழகுவோம்., அநீதியை தகர்த்தெறிய.,,


பெங்களுர் எக்ஸ்பிரஸ்



“நீங்கள் எந்த பக்கத்தில்
இரு வேறு உலகங்கள்
இரு வேறு நீதிகள்
வாழ்வின் மதுரங்கள் அனைத்தும் ஒருபுறம்,
கசப்பும் தண்ணீரும் கலந்தொழுகும் இன்னொரு புறம் என்றான்“ மாக்சிம் கார்க்கி.,, ஆம், தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று தற்போது அவர் குற்றவாளி என தீர்ப்பும், தண்டனையும் வழங்கப்பட்டு மேல்முறையீட்டின் பேரில் உச்ச நீதிமன்றமும் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த இடைப்பட்ட 21 நாட்களில் தமிழகம் இதுவரை கண்டிராத விசித்திரங்களை கண்டு களித்தது. ஆம் சென்னைக்கும் பெங்களூருக்குமான எக்ஸ்பிரஸ் ரயில் இதுவரை இல்லாத அளவிற்கு 21 நாட்களும் கூட்டம் அலைமோதியது.

காவேரி வேண்டாம்
எந்த காவேரிக்காக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறதோ அந்த காவிரியை கர்நாடகமே வைத்துக் கொள்ளட்டும், எனக்கு அம்மாவை மட்டும் கொடுத்து விடுங்கள் என தமிழகத்தின் குழந்தைகள் எல்லாம் பால் குடிக்காமல் அழுது கொண்டிருப்பதாக ஒட்டிய போஸ்டர்கள் தான் எல்லாவற்றிலும் ஹைலைட் (ஆவினில் கலப்படம் நடந்து அதனால் குடிக்காதது தனிக்கதை), தீர்ப்பளித்த நீதிபதியை, கர்நாடக அரசை, தமிழகத்தின் எதிர்கட்சித்தலைவர்களை எல்லாம் அர்ச்சனை செய்து பேசிய பேச்சுக்கள் கொஞ்சமல்ல., கறுப்புக் கலருக்கு அங்கீகாரத்தை அளித்தவர்கள் என்றால் மிகையல்ல., அந்தளவுக்கு கறுப்பு ரூபாய் 200க்கும், 300க்கும் அல்லல்பட்டது.

தீர்ப்புக்கு நல்ல நேரம்
இதெல்லாம் எதற்காக? தேச நலனிற்காக, மக்கள் நலனிற்காக சிறை சென்ற தலைவருக்காகவா? இல்லை. 18 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியராக (தமிழக முதல்வராக) இருந்த போது வருமானத்தினைவிட கூடுதலாக சொத்து வாங்கினார் என்று தமிழக காவல்துறையே வழக்கை பதிவு செய்தது. அதன் பின் இரண்டு மாநில மாவட்ட, உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம், பின்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் என 18 ஆண்டுகளை கடந்தது. தீர்ப்புக்கான தேதிக்கு நல்ல நேரம் பார்த்து வாய்தா வாங்கியதாக ஒரு சேதி.,
தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் விவாத மேடைகள் பல பெயர்களில் அனல் பறந்தது. பத்திரிக்கைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக ஆளும் கட்சியினரின் நடவடிக்கைகளை காமிக்ஸ் கதையை விழுந்து படிக்கும் சிறுவர்களை போல, கார்டூன் சேனல்களை பார்க்கும் குழந்தைகள் வீட்டில் பெரியவர்களை எந்த சேனல்களையும் பார்க்க விடாது. அதைப்போன்று நடந்தேறியதுதான் தமிழகத்தின் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான தீர்ப்பும், தண்டனையும், அதற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டங்களும், இந்த சத்தத்தில் உழைக்கும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் வைத்த ஆப்பு கொஞ்சம் நஞ்சமல்ல ஏராளம்.,

ஊழலுக்கு ஒப்புதல் பெறும் இடம்
இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என குடிமக்கள் பாடும் பாட்டாக  மக்களின் மனோநிலை மாற்றப்பட்டுள்ளது. இது வரை அவர்கள் பார்த்துவந்த சமூக அவலங்கள், கல்வியறிவு இல்லாத நிலை, ஊடகங்களின் கருத்து திணிப்புகள், நுகர்வு வெறி போன்ற பல்வேறு அம்சங்கள் மக்கள் மத்தியில் இயல்பாகவே யார் நல்லவன், யார் கெட்டவன் என்ற நிலையை பார்ப்பது போய், யார் தான் ஊழல் செய்யவில்லை, யார் தான் குற்றம் செய்யவில்லை என்று நியாயத்திற்கு எதிர்வினையாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுருங்க சொன்னால் இன்றைய சமூகத்தையே ஊழல் நிறைந்த சமூக மாற்றும் நடவடிக்கையில் ஆளும் வர்க்கம் இறங்கியுள்ளது.  
வணிகமயச்சூழலில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய சாதாரண உழைப்பாளி மக்கள் அனைத்து விசயங்களுக்கும் அரசின் திட்டங்களை எதிர்பார்த்து நிற்கும் நிலையே உள்ளது,. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அனைத்திலும் ஊழல் செய்து மக்களுக்கு சேர வேண்டியதில் சிறுபகுதியை இலவசங்கள் என அறிவித்துவிட்டு பெரும்பகுதியை கூட்டு கொள்ளையடிக்கும் நிலையையே செய்து வருகின்றன. இப்படி கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களும் ஊழல், லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்ரேட் நிறுவனங்கள் இவைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மக்களின் இயல்பான கோபமற்ற சூழலுக்கு காரணமாகும்.
இதனால் சாமான்யபட்ட ஏழை எளிய மக்கள் இலவசங்களை பெற்றுக்கொண்டு தங்களது உரிமைகளை விற்கும் மனோநிலையை நோக்கி தள்ளப்படுகின்றனர். இதனை கார்ப்ரேட் நிறுவனங்களும், பெரும் அரசியல் சூதாடிகளும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அதிகாரவர்க்கமும் பயன்படுத்திக் கொள்கின்றன. கொடுத்த பொருட்களை வைத்தே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வித்தை தெரிந்தவர்களாக உள்ளனர்.

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
கேட்க நல்லதான் இருக்கு., அமலாக்கும் சில அதிகாரிகளும் 23 ஆண்டில் 24 இடமாற்றம் சந்திக்க வேண்டிய இடமாக தமிழ்நாடு இருக்கிறது., உண்மையில் அரசின் அனைத்து அலுவலகங்களிலும் அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய கடமைக்கே லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களின் கதவுகள் திறக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பட்டா வாங்க காசு, மின் இணைப்பு வாங்க காசு, மின் இணைப்பு மாற்ற காசு, வீடுகட்ட பிளான் அப்ரூவல் வாங்க காசு, மணலை, ஜல்லியை சாலையில் கொட்டினால் கவுன்சிலருக்கு காசு, தண்ணீர் குழாய் இணைப்புக்கு காசு, மாட்டுவதற்கு காசு, தண்ணீர் வீட்டுக்குள் முறையாக வர காசு, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள் வாங்க காசு, ரிஜிஸ்ட்டர் ஆபிசில் காசு, ரேசன் அட்டைவாங்க காசு, திருமண உதவித்திட்டம், கர்ப்பிணிப்பெண்கள் திட்டம், முதியோர் உதவித்திட்டம், விதவைகள், ஆதரவற்றோர், நலிந்தோர், வறுமையில் வாடுவோர் என எதற்கு உதவிநிதி என்றாலும் முதலில் காசு போனால்தான் அதற்கான உதவி அட்டை நம் கையிக்கு வந்து சேரும். 

வேடிக்கை மனிதர்களாய்
இதைவிட கொடுமை அரசாங்க ஆஸ்பத்திரியின் காம்பவுண்டுக்குள் போனால் சுவர் கூட காசு கேட்கும்., ஆண்குழந்தை பிறந்தா இவ்வளவு, பெண் குழந்தை பிறந்த இவ்வளவு என்று காசு கேட்பார்கள், கொடுக்கவில்லை என்றால் அங்கே உள்ள ஊழியக்ள் கேட்பார்கள் பாருங்க., பிள்ளை பிறந்த காசு கூட கொடுக்க முடியாத உனக்கு எதற்கு கல்யாணம், பெண்டாட்டி, பிள்ளையெல்லாம் என்று?. இப்படி நடந்தா காசு, உட்கார்ந்தா காசு, படுத்தா காசு, குடிக்க காசு, கழிக்க காசு, இதெல்லாம் என்ன பொழப்பு., என்று சுடுகாட்டிற்கு போய் படுத்தாலும் அங்கேயும் காசு., இப்படி பிறந்ததில் இருந்து இறப்பு வரை லஞ்சம் கொடுத்து பழகியவர்கள் ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை கேட்காமல் தெரிந்தே திருடுபவனுக்கு உதவிய அந்த மணித்துளிகள் தான் இன்று நம்முடைய உரிமைகளையே திருடுகிறார்கள், ஏன் என்று கேட்க நாதியில்லாமல் வேடிக்கை மனிதர்களாய் வேடிக்கை பார்க்கிறோம்.,
  
சொல் ஒன்று செயல் இரண்டு
இலவசம் என்றால் உயிரை கொடுத்தாவது பெற வேண்டிய சூழலை வறுமை உருவாக்கி வைத்துள்ளது. 1993ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு நிவாரணம் வாங்க வந்த மக்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 42பேர் அநியாயமாக தங்களது உயிரை 2000 ரூபாய்க்காக பறி கொடுத்தனர். இப்போதும் ஜெயலலிதா சிறைவாசம் சென்றதை ஏற்க முடியாமல் 193பேர் இறந்ததாக அதிமுக தலைமையே தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது,. வீட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் பலர் இறந்தவரை பார்த்து ஆஸ்பத்திரியில் போய் செத்திருந்தால் அதிர்ச்சியில் அம்மாவிற்காக இறந்தார் என்று நிதி உதவியை வாங்கியிருக்கலாம் அல்லவா? என்று புலம்புவது பேருந்திலும், ரயிலிலும் பார்க்க முடிகிறது.
இது லஞ்சம், ஊழல் என்பதை பொதுபுத்தியாக மாற்றும் நடவடிக்கைகளில் காங்கிரஸ், பிஜேபி இரண்டு கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் வளம் வந்துக் கொண்டு இருக்கும் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, மதிமுக போன்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கல்விநிறுவனங்களை, மருத்துவமனைக்களை நடத்தி கல்வி மற்றும் மருத்துவ வியாபாரத்தை அமோகமாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள், தலைவர்கள்தான் இன்றைய கனிமவளகொள்ளையர்களாகவும் உள்ளனர்,.

உழைத்த காசு வீடு திரும்பாதா?
பெய்யும் மழையை சேகரித்து கொடுத்த மக்களுக்கு குறைந்த விலையில் அம்மா தண்ணீர் 10 ரூபாயில் நாங்கள் தருகிறோம், ஏனென்றால் கோக்கும், பெப்சியும் 20 ரூபாயில் கொள்ளையடிக்கிறார்கள் என்றார்கள். அந்த நிறுவனங்களுக்கு லிட்டர் தண்ணீர் 37பைசாவில் கொடுத்தது யார்? ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லையா? கடந்த 10 ஆண்டுகளில் பேருந்துநிலையங்களில் தண்ணீர் தொட்டிகள், அலுமினிய டம்ளர், அதை கட்டி வைத்த இரும்புசங்கிலி காணவில்லை. தண்ணீர்பாக்கெட் 4ரூபாய், பாட்டில் 23ரூபாய், கேன் 40ரூபாய் என தண்ணீர் விநியோகம் அமோகமாய்ய் நடக்கிறதே? தமிழ்நாட்டில் கடந்த 47 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் தானே ஆட்சி செய்கிறது.

எதைஎதையோ விலையில்லாமல் கொடுக்கும் ஆட்சியாளர்கள் கழிப்பறையில் கட்டணவசூல் நடத்துகிறது. இதை என்னவென்று சொல்வது. நெஞ்சுபொறுக்கு தில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால் என்றான் பாரதி., 

அரசு மருத்துவமனைகளில் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலையில் இன்று தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கும் மையங்களாக மாறி வருகிறது. முக்கிய சிறப்பு பிரிவுகள் ஏதும் செயல்படுவதில்லை. நவீன கருவிகள் இல்லை. இல்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை அரசு மருத்துவமனையில் அந்த அளவிற்கு அவலநிலை. இந்தியாவில் 76சதவீதத்தினர் கடன் வாங்கிதான் மருத்துவம் பார்க்கும் நிலையுள்ளது.

கல்வியும் காசிருந்தால்தான், கடன் வாங்கி கழித்தலை பள்ளியில் ஆரம்பித்து கல்லூரியில் பட்டத்திற்கு பதில் கடனோடு வெளிவரும் மாணவர்களையே தமிழ்நாடு இன்று கண்டு வருகிறது. ஆம் முன்பெல்லாம் காவல்நிலையில் திருடர்களின் படம் ஒட்டப்பட்டிருக்கும். இன்றோ கல்விக்கடன் வாங்கி கட்ட முடியாத இளைஞர்களின் புகைப்படம் வங்கி வாசல்களில் ஒட்டப்படுகிறது. என்னகொடுமை சார் இது.,

இருக்கற சாலைகளை எல்லாம் ஒன்றாக்கி அனைத்தையும் தேசியநெடுஞ்சாலையாக மாற்றி அதையும் காசு பாக்குற இடமா மாத்திட்டாங்க., ஆஸ்பத்திரிக்கு அவசரமா கார் வைச்சு வந்தாலும் சுங்கக்கட்டணம், கட்டினாதான் போகமுடியும், இல்லை யென்றால் வந்தவழியில் ஊரின் சுடுகாட்டிற்குதான் போக வேண்டும்., இது ஒரு பொழப்பா? மகாகவி பாரதி கேட்டனே? சீ நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு என்று? 

காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி, வற்றாத பொருநை நதி என்று பெருமை பொங்கிய தமிழகத்தில் எல்லா ஆறும் வற்றி மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆற்றுமணல் அள்ளும் இடத்தில் யூனிட் 1450 ரூபாய் என்றாலும் லோடு 2900 ரூபாய், போக்குவரத்து செலவு சேர்த்தாலும் அடக்கவில்லை 5000, 6000 ரூபாயை தாண்டக்கூடாது. ஆனால் நிலையென்ன? ஒரு லோடு மணலிற்கு 11000 முதல் 25000 வரை சென்று இறங்கியது. நிலத்தடி நீரை பாதிக்கும் அளவிற்கு மணல் அள்ளப்பட்டது. பல ஆயிரம்கோடி இதில் கொள்ளையடிக்கப்பட்டது.

"உலகில் அதிகமான தாதுவளம் கொண்ட மணலும், கனிமங்களும் கிடைப்பதில் 46 கோடி டன் வள ஆதாரங்களில், இந்தியாவின் பங்கு 27.8 கோடி டன்கள். இவற்றில் உலகத்தரம் கொண்ட கனரக கனிமங்கள் 20 முதல் 30% இருப்பதாகவும் விவி மினரல்ஸ்' நிறுவனத்தின் இணைய தளம் சொல்லும் தகவல்கள்,. இவற்றில் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் கார்னெட் கற்கள் மற்றும் 2,25,000 மெட்ரிக் டன் இல்மினைட் ஆகியவற்றை, வி.வி.எம். நிறுவனம் உற்பத்திசெய்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரே நாளில் 4,700 மெட்ரிக் டன் இல்மினைட் கனிமத்தை ஏற்றுமதி செய்ததவி.வி.எம் நிறுவனத்தின் சாதனை

கலைஞர் டிவியும், ஜெயா டிவியும் மாறி மாறி சொத்துப்பட்டியல் போட்டு காட்டிக்கொண்டே இருக்கிறது. மக்களுக்கு கோபம் வர மறுக்கிறது. இது மக்களிடம் சுரண்டியது. மக்களை ஏமாற்றியது. மக்களின் சட்டைபையில் தினமும் சுரண்டிக் கொழுக்கும் ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும் அவ்வப்போது விலையில்லா பொருட்களை வழங்குவது என்பது, அழும் குழந்தைக்கு தேனை எடுத்து நாக்கில் தடவி விடுவது போல்தான். இன்று வேகமாக இன்னும் எல்லோரையும் ஒரு சேர நாக்கை வெளியே நீட்டச்சொல்லி ஒரே நேரத்தில் தடவி விடும் செயலை ஆளும் வர்க்கம் செய்து வருகிறது., இவர்கள் ஒரு குற்றத்தை மறைக்க மேலும் மேலும் தவறை செய்து கொண்டே இருக்கிறார்கள்., வீசும் காற்று ஒரு பக்கமே வீசுவதில்லை. மாறி அடிக்கும் போது இவர்கள் ஓட்டம் எடுப்பார்கள். 

இவர்களில் இருந்து மாறுபட்டு ஊழலுக்கு அப்பாற்பட்டு எளிமையான தியாகவாழ்க்கை வாழும் இடதுசாரிகளும் இந்த மண்ணில்தான் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்றால் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்,. யார் மக்களுக்காக செயல்படுகிறார்கள், யார் தேசத்தை, மக்களை, இயற்கையை பாதுகாக்கிறார்கள் என்ற புரிதலை இளைஞர் பட்டாளம் உருவாக்க வேண்டும்.

நன்றி
இளைஞர் முழக்கம்
2014-நவம்பர்