”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மோடியின் வாக்குறுதியும், வாய் ஜாலமும்



ராஜா வேஷம் போடும் மோடி
ஆட்சிக்கு வந்தால் குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவேன். இவர்கள் குறித்து காங்கிர° அரசு கவலை கொள்ளாமல் உள்ளது என்று தனது பிரதம வேட்பாளருக்கான முதல் பொதுக்கூட்டம் 2013 ஆக°ட் 11 ம் தேதி ஹைதாரபாத்தில் நடைபெற்ற போது மோடி பேசினார். ஆட்சிக்கும் வந்தார். 365 நாட்களை நாடகமாகவே நடத்தியும் காட்டிவிட்டார்.  இப்போது கரடி விடுகிறார். எனது ஆட்சிக்கு முன் இந்தியா சூனியமாகவே இருந்தது. இனி பிரளயமாக மாறும். ஆம் அவரின் ஒராண்டு ஆட்சிக்கால சாதனைகள் பத்திரிக்கைகளில் பட்டியல் இடும் போது ஏராளமான கருத்துப்படங்களும், காட்சிப்படங்களும் ஊலா வருகின்றன. இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களின் முதல் ஆண்டு ஆட்சி குறித்து இல்லாத அவ்வளவு விமர்சனங்கள் இவரின் மீது வைக்கப்பட்டுள்ளது. 

கருத்து கண்ணாயிரம்
தனது நாடாளுமன்ற உரையில் “இந்தியாவே முதன்மையானது என்பதே அரசின் மதம், அரசியல் சாசனமே அரசின் புனித நுhல், தேச பக்தியே அரசின் பக்தி, அனைவரின் நலன் என்பதே அரசின் பிராத்தனை, மத ரீதியில் அபத்தமான கருத்துக்களை தெரிவிப்பதை பிரதமர் என்கிற முறையில் என்னால் அனுமதிக்க முடியாது, மத ரீதியில் பாகுபாடு காட்டுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்க அதிகாரம் கிடையாது. வேற்றுமையில் நாடு உள்ளது. அதுதான் தனிமையும் கூட, தேசிய கொடியில் உள்ள மூன்று நிறமும் மட்டுமே தெரிகிறது. வேறு சிந்தனைகள் தெரிவதில்லை. ஆம் இப்படித்தான் உணர்ச்சிகரமாக இத்தாலியின் முசோலினியும், ஜெர்மனியின் ஹிட்லரும் பேசினார்கள். ஏன் ஹிட்லர் தன்னை சோசலி°ட் என்றும் கூட சொல்லிக் கொண்டார். இவர்களை அனைத்து கார்ப்ரேட்களும் ஆதரித்தார்கள். துதித்தார்கள், இவர்கள் தான் மாற்றத்தின் திறவுகோல் என்றார்கள்.  ஆனால் உழைக்கும் மக்களுக்கு ஒரு நாளும் விசுவாசமாக இருந்ததில்லை. பெரும் பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கையை இழப்பதற்கே காரணமானார்கள். 


இந்தியாவில் இருந்த போது காந்தி தேசதுரோகி, சுட்டுக்கொன்றது சரி என்று சொன்னால் கோபம் வராது. தனது கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த மாட்டார். வெளிநாடுகளில் காந்திய கொள்கைகளை உபதேசம் செய்து பசுந்தோல் போர்த்திக்கொள்வார். லவ் ஜிகாத் என்பார்கள், கப்வார்சி என்பார்கள், பொதுசிவில் சட்டம், அரசியல் சட்டபிரிவு 370 நீக்கம், காசி, மதுரா, அயோத்தியில் இந்து கோவில் மசூதியின் அடியில் உள்ளது. கோவில்களை மீட்க வேண்டும் என்பார்கள். ராமனுக்கு கோவில் கட்ட வேண்டும். மாட்டுக்கறி கூடாது. பசுவதை தடுப்பு, இந்த உடை அணியாதே, இந்த கடவுளை மட்டும் கூம்பிட்டால் இந்து. பகவத் கீதையை புனித நுhலாக ஆக்கி அரசியல் சட்டத்தை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்பார்கள். இந்த சர்ச்சைகள் அனைத்தும் எதற்காக ?.. ஒற்றை வரியில் சொன்னால் அது தான் அடையாளத்தின் பெயரால் உழைக்கும் மக்களை கூறு போடும் முழக்கங்கள்,. உழைக்கும் வர்க்கத்தை சீர்குலைக்கும் நடடிவக்கை,. 

வார்த்தைகளின் மன்னர் மோடி
°கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மே இன் இந்தியா, மேட் இன் இந்தியா, கிளீன் இந்தியா என வார்த்தைகள் மட்டும் புதிது புதிதாக வந்து விழுகிறது. இவற்றால் இந்திய நாட்டின் உழைப்பாளிகள் வயிறு நிறைகிறதா? கௌரவமான வாழ்க்கை கிடைத்தா? என்றால், வாமன அவதார கேள்வியாக விரிகிறது.  மோடியின் ஆட்சி வயதுக்கு வந்து ஒராண்டு ஆகிவிட்டது.  
ஒராண்டில் 18 வெளிநாடுகள் பயணம், பல லட்சம் கோடி அன்னிய மூதலிட்டை கொண்டு வந்துவிட்டேன் என்று சந்தோஷ பட்டுக்கொள்கிறார். தன்னை ஒரு ராஜா போல போகும் இடங்களில் எல்லாம் வேஷம் கட்டிக்கொண்டு பத்திரிக்கைகளுக்கு புகைப்படம் கொடுக்கும் நபராகவே காட்சி அளிக்கிறார் மோடி. 


குடிமக்கள் சமூகத்தில் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. இவர்களின் வர்த்ததைகள் அனைத்தும் 3ல் 2 பங்குள்ள இளைஞர்களை ஏமாற்ற பயன்படுத்துகிறார்கள். சரித்திரம் தேர்ச்சிகொள் என்ற பாரதி ரௌத்திர பழகு என்றார். இவர்கள் நடவடிக்கையை பார்த்தால் ரௌதிரம் பழக வேண்டியுள்ளது. ஆம், 

உள்ளதும் போச்சு
இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்கள், இளம்பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை போதுமான அளவு உருவாக்குவோம், அவர்கள் உழைப்பு சந்தையில் இணைய வேண்டும் என்றார். ஆனால் 1951ல் 29 கோடி ரூபாய் முதலீட்டில் 5 தொழில்கள் அரசுத்துறையில் துவங்கப்பட்டு அதன் இன்றைய மதிப்பு 239 நிறுவனங்களாக 4 லட்சம் கோடி ரூபாயாக விரிந்து பரந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 


குறிப்பாக ( BHEL, BSNL, RAILWAY, COAL INDIA, ONGC, SAIL, NTPC, GAIL, HCL, IOC, MTNL ) ஆகிய 12 துறைகளில் மட்டும் 22 லட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்புகள் உள்ளன. இவற்றில் பிரதானமாக  ( BSNL, COAL INDIA, RAILWAY )  3 துறைளில் மட்டும் 
17 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் மோடி இந்த ஓராண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை எம்டிஎன்எல் இணைப்பது, பொது ஏலங்களில் பங்கேற்க கூடாது, ரயில்வேயை தனியார்மயமாக்குவது, நிலக்கரி சுரங்கங்களை அவசர சட்டங்கள் மூலம் தனியாருக்கு கொடுத்தது என முடிவு எடுத்ததன் விளைவாக இந்த 17 லட்சம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. 

தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகள் நலனுக்காக மாற்றியதன் விளைவு ஏற்கனவே பணிநிரந்தர தன்மையற்ற நிலையில் இருந்தவர்கள் இன்று மேலும் பணிபாதுகாப்பற்ற, நிரந்தரதன்மையற்ற, உரிமைகளற்ற நிலையை நோக்கி, நித்திய ஆயுசு பூரண கண்டம் என்ற நிலையை நோக்கி செல்கின்றனர். மே இன் இந்தியாவின் முதல் இலக்கே நிரந்தர வேலைவாய்ப்புகளை அழிப்பது, ஒப்பந்த முறையில் பணியாற்ற வைப்பது, அத்துக்கூலி முறையை உருவாக்குவது, சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒழிப்பது என்பதே, இது தான் பெரும் முதலாளிகளும், கார்ப்ரேடுகளும் சொல்லும் முதல் உத்தரவு,. ஒப்பந்தம்.

வேலை தருவோம் மோ(ச)டி
ஆனால் மோடி மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கிறார். உற்பத்தி சார்ந்த வேலைகள், தொழிற்சாலை உற்பத்தி, ஏற்றுமதி, அந்நிற மூதலிடு இந்த வார்த்தைக்கு பின்னால் உள்ள மோ(ச)டி என்ன? 2013ல் ஜவுளி மற்றும் அது சார்ந்த, தோல், உலோகம், ஆட்டோமொபைல்°, நகைகள், போக்குவரத்து, ஐடி/பிபிஓ, கைத்தறி, விசைத்தறி ஆகிய தொழில்களில் மட்டும் 4.19 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தது. 2014ல் மோடி பேசி உற்பத்தி சார்ந்த இந்த துறைகளில் மட்டும் 4.2 லட்சம் வேலைவாய்ப்புகளாக குறைந்துள்ளது. ஆம் எப்போதும் உண்மை கசக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடி பேர் உழைப்பு சந்தைக்கு வந்துக்கொண்டே இருக்கிறார்கள். 4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது போதுமானது தானா மோடி அவர்களே,. 10சதம் வளர்ச்சியை தருவோம் என்ற மோடியின் தொழில் உற்பத்தி துறையில் 2.3 சதமும், நிலக்கரியில் 1.4 சதமும், மின் உற்பத்தியில் 8 சதமும் என்ற அளவு இவர்கள் சொன்னதற்கு நேர்மாறான வளர்ச்சியாகும்.

இவர் சொன்ன அன்னிய முதலீடும் 75 பில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பங்கு சந்தைக்கு வந்தது. அதே நேரத்தில் 40பில்லியன் டாலர் அளவு ( 54 சதம்) வெளியேறியுள்ளது. இந்த வர்த்தகம் எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்காத வேலைவாய்பற்ற வளர்ச்சியாகும். 


நில எடுப்பு சட்டத்தின் படி புதிய வேலைவாய்ப்புகளாக 30கோடி பேர் பயன்பெறுவர் என்று ஜெட்லி கலாய்கிறார். ஆனால் வேறாக உள்ளது. கிராமப்புற வேலை உறுதிச்சட்ட அடிப்படையில் 2.27 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற மோடி ஆட்சியில் 1.1 கோடி பேர் 50 நாட்கள் மட்டுமே சராசரியாக வேலையை பெற்றுள்ளனர் என்பது மோடி என்ற மோசடி ஆட்சியை அம்பலமாக்கிறது.  விவசாயத்துறையிலும் சரிவே ஏற்பட்டுள்ளது. 2014ல் 3.7 சதமாக இருந்தது 2015ல் 1.1 சதமாக சரிந்துள்ளது. இதனால் கணிசமான கிராமப்புற ஏழைவிவசாயிகள், விவசாயத்தொழிலாளிகள் கட்டுமானம் உள்ளிட்ட இதர தொழில்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் 5 கோடிக்கும் மேற்பட்டோர் விவசாய நிலங்களை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 


இன்றைக்கு சகோதரர்களும், சகோதரிகளும் மிகக்குறைந்த சொற்ப சம்பளத்திற்கும், இடப்பெயர்வுக்கும் ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தேர்வு செய்யும் வாழிடம் மிக மோசமான நிலையிலேயே இருந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் வயிறுகள் பெரும் பகுதி காய்ந்து கொண்டே இருக்கிறது. மோடி சொல்கிறார். நிறைய கார்ப்ரேட்கள் வந்து சம்பாதித்தால் அவர்கள் சிந்தும் ஏராளமான பொருட்கள் நமது மக்களுக்கு பயன்படும். அவர்களாலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற கருத்தாக்கம் என்பதே,. 

தேம° நதிக்கரையில் உள்ள முதலைகள் தங்கள் தின்றுகொழுத்த மாமிச இறைச்சிகளின் துணுக்குகள் பல்லிடுக்குகளில் சிக்கி இருக்கும் போது அவற்றை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக நதிக்கரையின் ஒரத்தில் வாயை திறந்து வைத்திருக்குமாம். அங்கிருக்கும் பறவைகள் அந்த மாமிச துணுக்குகளை கொத்திதின்ணும். அப்போது முதலை வாயை முடினால் பறவைகள் கதி அதோ கதிதான். அந்த மாமிச துணுக்குக்களை உண்ணும் கூட்டமாக இந்திய உழைப்பாளி மக்களை மோடி சித்தரித்துக் கொண்டு இருக்கிறார்.  

மோடியின் 2015ல் கார்ப்ரேட்களில் பில்லியனர்கள் 55ல் இருந்து 100 ஆக உயர்ந்துள்ளனர். இக்காலத்தல் மட்டும் 34600 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளனர். முதல் 10 பத்து பணக்காரர்கள் 49 சதம் வளர்ச்சியை அடைந்துள்ளனர். மோடி ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு 2014 மே மாதம் பெட்ரோலிய எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 108 டாலருக்கு விற்ற போது இந்தியாவில் 64 ரூபாய் ஒருலிட்டர் பெட்ரோல். ஆனால் 2015 மே மாதம் 60 டாலர் ஒரு பேரல், ஆனால் இந்தியாவில் 70 ரூபாய்க்கு ஒரு லிட்டர் என்றால் இதன் லாபம் அனைத்தும் அம்பானி போன்ற பெரிய புள்ளிகளுக்கே செல்கிறது. 

 அனைத்திற்கும் மேல் ஒராண்டில் 18 லட்சம் கோடிரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் தேங்கி இருக்கிறது. கையெழுத்திற்காக,. தான் கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுகிறார். இவர் உண்மைக்கு நேர் எதிர் திசையில் பயணப்பட்டுக் கொண்டு உணர்ச்சிப் பூர்வமாக வார்த்தைகளை கொட்டி கொண்டுகிறார். இப்படி வாக்குறுதிகளை மறந்த மோடி ஆடை நெய்யும் கம்பெனிகளின் விளம்பரதராகவே இப்போதும் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறார். மேற்கண்ட விசயங்கள் புலம்பலுக்கு அல்ல,. புரிதலுக்காக, இதற்கு மாற்றே இல்லையா? ஏன் இல்லை உழைக்கும் மக்களின் அரசியலை முன்னெடுக்கும் அரசியலும் இங்கு உண்டு, அதை ஆளும் வர்க்கத்திற்கு பிடிக்காது. ஆனால் சுரண்டப்படும் வர்க்கத்திற்கு பிடிக்கவேண்டும், சுரண்டலற்ற சமூகத்தைப்பற்றி பேசும் இடதுசாரி அரசியலை பற்றி புரிந்து கொள்வது இன்றைய தேவை.

நன்றி - இளைஞர் முழக்கம் ஜூன் , 2015