”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

இந்திய வரலாற்றில் இளைஞர்கள்



ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும், நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும், என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன் என்றார்  1915 நவம்பர் 15ம் தேதி துக்கு கயிற்றை முத்தமிட்ட  வீர இளைஞன் கர்த்தார் சிங்..  இந்தியாவின் விடுதலைக்கான வரலாறு மட்டுமல்ல.. மாவீரன் பகத்சிங் வார்த்தைகளில் சொன்னால்  மனித குல வரலாறு அனைத்துமே இளைஞர்கள், இளம்பெண்களின் இரத்ததால் எழுதப்பட்டது.  அந்த இளைஞர் கூட்டம் தான் இந்திய விடுதலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தினார். ஆம் பாலுக்கு அழும் குழந்தையும், கல்விக்கு ஏங்கும் மாணவனும், வேலை தேடும் இளைஞனும், வறுமையில் வாடும் மக்களும் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா என போர் பிரகடனம் செய்தனர். அப்படிப்பட்ட மகத்தான தியாகபுருஷர்களின் வழியில் நடைபோடும் அமைப்பே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 



இந்திய வரலாற்றில் இளைஞர்களின் பங்கு மகத்தானது  என்றால் அதில் நமது டிஒய்எப்ஐக்கும் தனிஇடம் உண்டு. இளைஞனின் அடையாளம் தனித்திருப்பதல்ல.. கூட்டமாக இருப்பது.  சாதனைகளின் மையமாக இருப்பது.. தியாகம் என்று சொன்னால் முன்னணியில் நிற்பது இளைஞர்களே.. கட்டுப்பாடற்ற, பொறுமையற்ற ஆனால் சமூக மாற்றத்தின் அச்சாணியாக இருந்து போராடும் திறன் மிக்க மனிதகுலத்தின் ஆயுதம் இளைஞர் பட்டாளமாகும். கி.பி. 1498 மே 20ம் தேதி மாலைப்பொழுதில் கள்ளிக்கோட்டையில் வாகோடகாமா கால்பதிக்க துவங்கியதன் பின்னணியில் சமுத்திரிகா மன்னன் எழுதிய அடிமை சாசனமும், அதற்கெதிராக குஞ்ஞாலி மரைகாயர்களின் வீரமிகு எதிர்ப்பும் என அரை நுற்றாண்டு போராட்டத்திற்கு பின் ஐரோப்பியர்களின் வணிக ஆக்கிரமிப்பும், அத்துமீறலும் என துவங்கிய அடிமைப்படுத்தும் நடவடிக்கை 4 நுற்றாண்டுகள் நீடித்தது.

தென்இந்தியாவில் கும்பினி படைகளுக்கு எதிராக தொடர் கிளர்ச்சி என்பது பரவலாக நடைபெற்று வந்தது. அதற்கு தலைமையேற்றவர்களில் 1750களில் இருந்து 1810 வரையான காலத்தில் கான்சாகிப், வீரன்வேலுத்தம்பி, தீரன்சின்னமலை, திப்பு சுல்தான், ஹைதர்அலி, புலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், இராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி, 1806ல்  வேலுர் புரட்சி, கன்னடத்தில் 1829 கிட்டூர் ராணி சென்னம்மா ஏராளமான வீரர்கள், தீரர்கள் தலைமையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். வீழ்வது நாமாயினும், வாழ்வது தேசமாக இருக்கட்டும் என போர் முழக்கமிட்டனர்.

குறிப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற வெகுஜன போராட்டமாக சிவகங்கை, இராமநாதபுரம் பகுதியில் 1790-1810வரை மருது சகோதரர்கள் தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சி  முதல் சுதந்திரப்போருக்கு கட்டியம் கூறியது என்றால் மிகையல்ல. இதன் தொடர்ச்சியே  1806ல்  வேலுர் கோட்டையில் நடைபெற்ற புரட்சி. இவை அனைத்தும் வெள்ளையனை துக்கமில்லாமல் செய்தது.  பிரித்தாளும் சூழ்ச்சியில் குளிர்காய்ந்த வெள்ளையனுக்கு எதிராக ஒரு பட்டாளம் கிளர்ந்தெழுந்தது. 1857ல் நடைபெற்ற முதலாம் சுதந்திரப் போரும், அதற்கு முன்பிருந்த தமிழகத்தில் நடைபெற்ற வெள்ளையர்கள் எதிர்ப்புப் போர்களும் தீவிரமடையத் தொடங்கின. பல தளங்களில் கருத்து மோதல்களும், போராட்டங்களும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான களத்தை சூடக்கின.



வெள்ளையர்களின் தாசர்களாக சாதிய ஆதிக்கம் செலுத்திய சமூகத்தினரில் படித்த வர்க்கமாக மாறிக் கொண்டிருந்த நேரத்தில் அதே சமூகத்திலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலும் எதிர்ப்பு குரலும் ஒலித்துக் கொண்டேதான் இருந்தது. அதன் தொடர்ச்சியாக 19ம் நுற்றாண்டின் துவக்கத்தில் பிராமண ஆதிக்கம் பண்பாட்டுதளத்திலும், அரசு பணிகளிலும் அதிகரித்தது. இதை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஜோதிபா பூலே  1873ல்  சத்ய  ஷோதக் சமாஜ் அமைப்பை நிறுவினார். விவசாயிகளை அதிகம் கொண்ட மராத்தா சாதித் தொகுப்பினரை கவ்வி பிடித்தது. 

கேரளத்தில் ஈழவ மக்கள் நானு ஆசான் என அழைக்கும் ஸ்ரீ நாராயணகுருவின் (1854-1928)  போதனைகளால் எழுச்சி பெற்றனர். இவர்கள் பிற்காலத்தில் கம்யூனிச ஆதரவாளர்களாக  மாறினர். வங்காளத்தில் பிறந்த சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு பங்கு, விதவை மறுமணத்துக்கான தடை, உடன்கட்டை ஏறுதல், பலதாரமண முறை, பெண்கல்விக்கு எதிரான கட்டுப்பாடு, பர்தா அணிவித்து வீட்டில் பூட்டி வைப்பது போன்றவற்றை எதிர்த்து போராடியதோடு இவைகளை சட்டபூர்வமான முறையில் தடைசெய்ய வேண்டும் என்று போராடினார். 

கிழக்கிந்திய கம்பெனியின் லாப வேட்கை, அடக்குமுறையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகளின் கிளர்ச்சி நடைபெற்று வந்தது. 18ம் நுற்றாண்டில் நடைபெற்ற சன்யாசிகள் மற்றும் பக்கிரிகளின் கலகங்கள்(1776), கிழக்கிந்தியாவில் பழங்குடியினர் நடத்திய சுவார் கலகம்(1799). இந்த போராட்டங்களுக்கு அடிப்படை பஞ்சமும் அதையொட்டி மக்கள் இறந்ததும், ஆனால் கொள்ளைக்கார ஆட்சியாளர்கள் வரி வசூலில் மும்மரமாக இருந்தனர். இப்படி மக்கள் ஆங்காங்கே பல நேரங்களில் உடனடி கோரிக்கைக்காக நடத்திய போராட்டங்கள் பரிணாமம் பெற்று நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களாக மாறின. இவைகள் தெளிவான மாற்று இலக்கிலாமல் நடத்தப்பட்டன. குறிப்பிட்ட எல்லை, மொழி, மற்றும் சமூகப் பிரிவினாரால் நடத்தப்பட்டது.


இந்த போராட்டங்கள் சில வெற்றிகளையும் பெற்றுத்தந்தன. 1859-1860 அவுரி விவசாயிகள் கிளர்ச்சி, பம்பாய் தக்காண கலவரங்கள் காரணமாக விவசாயிகளின் நிலையை மேம்படுத்த திட்டமிட வேண்டிய நிர்பந்தத்தை பிரிட்டிஸாருக்கு ஏற்படுத்தியது. 1857 ல் நடைபெற்ற எழுச்சி என்பது இந்தியாவின் பிரிந்து கிடந்த பல்வேறு சமதானங்களை எழுச்சியுறச் செய்து ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தது. முதல் முறையாக விவசாயிகள், கூலி விவசாயிகள், பட்டறை கொல்லர்கள்  என ஒருங்கிணைத்தது. முக்கியமாக 1857 வரை இந்திய கம்பெனி படையில் இந்து - முஸ்லீம்கள் நடத்தப்பட்ட விதம்  அதற்கெதிரான கோரிக்கைகளோடு கூடிய கொந்தளிப்புகள்  கிளர்ச்சியுற்ற இந்திய இளைஞர்களை எழுச்சியுற செய்தது. இரண்டாம் பகதுர் ஷாவை ஆட்சியில் அமர்த்தி 10 பேர் கொண்ட ஜல்சா கமிட்டியை அமைத்து உழுபவனுக்கு நிலம் சொந்தம், நியாயவிலையில் பொருட்கள் கிடைக்கும், கந்துவட்டிகாரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பன போன்ற அறிவிப்புகளோடு டில்லியில் இந்தியர்களின் ஆட்சி பிரகடணம் செய்யப்பட்டது.

கான்பூரில் நானாசாகிப், தாந்தியாதோப்பே, ஜான்சியில் ராணி லட்சுமிபாய், லக்னோவில் அகமதுல்லாஷா போன்ற இளம்புயல்கள் எழுச்சிக்கு தலைமையேற்றன. 1857 மே 10ம் தேதி துவங்கிய சிப்பாய்களின் புரட்சி 1857 செப் -19 அன்று முறியடிக்கப்பட்டது.  டில்லியில் மட்டும் 27000 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஜான்சி , கான்பூர், லக்னோ, கல்கத்தா உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து டில்லி செல்லும் பாதையெல்லாம் இருந்த மரங்களில் துக்கு கயிறுகளும், பாதையெல்லாம் பள்ளங்கள் வெட்டப்பட்டு புரட்சிப்படை வீரர்களை கொன்று குவித்தது வெள்ளை பரங்கியர் படை. இதற்கு தலைமையேற்றவர்களில் முக்கியமானவர்கள், ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் மற்றும் வெட்டர்பன் பிரபு என்ற ஆங்கிலேய அதிகாரிகள் ஆவர். இவர்கள் தான் பின்னர் 1885ல் காங்கிர கட்சியை துவக்க காரணமாக இருந்தவர்கள். தொடர்ந்து 30 ஆண்டுகளாக மனுப்போட்டே காங்கிரசை வளர்த்தனர்.



1895 ஆண்டு வெளியிட்ட தீர்மானத்தில் மகாராணியின் அனுகூலமான என்றும் மறப்பதற்கு அரிய கீர்த்திமிக்க ஆட்சியில் ஐம்பது வருஷம் முடிவு பெற்றதைக் குறித்து சக்ரவர்த்தினியார் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வந்த இந்த பிரதிநிதிகள் அடங்கிய மகாசபை அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆள வேண்டுமென்றும் காங்கிர மகாசபை வாழ்த்துகிறது.  (இரண்டாவது காங்கிர அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்)  ஆனால் உள்ளே ஏற்பட்ட தீவிரமான முரண்பாடுகள் ஒரு புறம் சுதந்திரத்தின் உடனடி தேவை, போராட்டத்தன்மை குறித்து புதிய புதிய சிந்தனைகளையும், இயக்கங்களையும் உருவாக்கிய வண்ணம் இருந்தது. 




கத்தார் கட்சி, அனுசீலன் சமிதி, நவஜவான்பாரத் சபா போன்று ஏராளமான அமைப்புகள் உருவாகியது. அதே நேரத்தில் 1917 ரஷ்ய புரட்சியின் வெற்றி சோசலிசத்தின் மீதான தாக்கத்தையும், போராட்டத்தின் தன்மையையும் திசை திருப்பியது என்றால் மிகையானது. இதன் வெளிச்சத்தில் புதிய கட்டத்தை அடைந்த இந்தியவிடுதலைப் போரில் பங்கேற்க அறைகூவல் விடுத்த தலைவர்கள் பல அறிவிப்புகளை சுதந்திர இந்தியா குறித்து வெளியிட்டனர். ஆனால் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளில் இந்தியாவில் அடைந்த உரிமைகள், மக்களின் வாழ்வதாரம், தேச வளர்ச்சி குறித்து பார்த்தால் சிந்தனைக்கும், அறிவிப்புக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல் உள்ளது. இந்த தேவைகளில் இருந்துதான் சுதந்திர இந்தியாவின் நலனை பாதுகாக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.




1979 ஜூலை 22ம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு மாநில வாலிபர் அமைப்புகள் ஒருங்கிணைந்து டெல்லியில் நடத்திய கூட்டத்தின் இறுதியில் அகில இந்திய இளைஞர் அமைப்பு குழு உருவாக்க 33 பேர் கொண்ட அமைப்புக்குழு அமைக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து என்.நன்மாறன், கே.சி.கருணாகரன், ஆர்.கிருஷ்ணன் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து 1980 நவம்பர் 1,2,3 தேதிகளில் பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது தமிழகத்தில் இருந்து தோழர்கள் கே.சி.கருணாகரன் அகில இந்திய துணைத்தலைவராகவும், மத்திய நிர்வாகக்குழுவிற்கு தோழர்கள் என்.நன்மாறன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  

1980ல் உருவாக்கப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற கோஷத்தோடு சுரண்டலற்ற சமூக அமைப்பு முறையை உருவாக்க இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து கொள்கை, நோக்கம், இலக்கு, முழக்கங்களை வெளியிட்டு இந்தியா முழுவதும் இளைஞர்களை திரட்ட ஆரம்பித்தது. அதன் பகுதி தமிழகத்தில் அன்று 10000 இளைஞர்களை உறுப்பினராக கொண்டு திருப்பூரில் முதல் மாநில மாநாட்டை 1979 ஜனவரி  26ம் தேதி நடத்தி தமிழக இளைஞர்களின் நலனை பாதுகாக்க கோரிக்கைகளை வெளியிட்டது. இன்று வரை 32 ஆண்டுகளில் 13 மாநில மாநாடுகளை நடத்தி தமிழக மக்களின், இளைஞர்களின் நலனை மேம்படுத்த, பாதுகாக்க திட்டங்களையும், போராட்டங்களையும் அறிவித்து பெற்ற வெற்றிகள் ஏராளம். 

வேலை அல்லது நிவாரணம், வேலைக்கு உணவுத்திட்டம், 18 வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை, அரசியல் சட்டத்தில் வேலை செய்வதை அடிப்படை உரிமையாக்கு  என்ற முழக்கங்களை முன்னுக்கு வைத்து சைக்கிள் பேரணி, தர்ணா, ஆர்ப்பாட்டம், மறியல், தந்திகொடுக்கும் போர் என 1980களில் தமிழகத்தில் புதிய வெளிச்சத்தோடு பிறந்தது டிஒய்எப்ஐ. ஆம் முதல் கட்ட மறியல் போராட்டத்தில் அன்று சங்கம் ஆரம்பித்த 12 மாவட்டங்களில் 114 மையங்களில் 4598 தோழர்கள் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் முதல் 22 நாள், 26 நாள், 30 நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதன் தொடர்ச்சியான போராட்ட வேகமே அன்று தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களை வேலையில்லா கால நிவாரணநிதி அறிவிக்க வைத்தது.

தொடர்ச்சியாக வேலையின்மைக்கு எதிராக, கல்வியின்மைக்கு, சுகாதாரமின்மைக்கு எதிராகவும், தமிழக மக்களின் அடிப்படை வாழ்வதாரக் கோரிக்கைகளான உணவு, நிலம், இருப்பிட கோரிக்கை களுக்காகவும், அடிப்படை கட்டமைப்பு, பொதுபோக்குவரத்து, பொதுவிநியோகம் போன்ற கோரிக்கை களையும் முன்வைத்தும் பல்வேறு தரப்பினரின் போராட்டங்களில் ஆதரவு இயக்கமும், சிறை செல்லுதலும் என ஏராளமான போராட்டங்களையும் இடையே இடையே தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்று வருகிறோம்.



சென்னை மின்சார ரயில் அதிகரிக்க, ஊரப்பாக்கம் கெமிக்கல் கம்பெனி கழிவுநீர் நிலங்களை களர்நிலமாக்குவதற்க எதிராக, சேலம் மண்ணெண்ணெய் பதுக்கலை எதிர்த்து, நாமக்கல் காட்டிலக்கா ஊழியர்களுக்கு சங்கம் அமைக்க, காவல்துறையினர் சங்கம் கேட்டு நடத்திய இயக்கத்திற்கு ஆதரவாக, மதுரை ராஜாஜி அரசினர் மருத்துவமனையை பாதுகாக்க, என்.எல்.சியில் ஒப்பந்தமுறையை ஒழிக்கக் கோரி,. ஊட்டி கலர் பிலிம் தொழிற்சாலை விரிவுபடுத்தி பாதுகாக்க கோரி, மேட்டூர் அனல்மின்நிலைய சாம்பல், சேலம் சூப்பர் ஸ்பெசலிட்டி மருத்துவனை, டெல்டா பகுதியில் விவசாய கழிவுகளிலிருந்து காகித உற்பத்தி தொழிற்சாலை, பள்ளி,கல்லுரிகள், மருத்துவமனைகள் கேட்டு ரேசன் கார்டு கேட்டு களத்தில் நின்று போராடி பெரும்பகுதி வெற்றியை உறுதியாக்கிய அமைப்பாக, ஏகபோக கம்பெனிகளின் இயற்கைவள கொள்ளைக்கு எதிராக, மதவெறி, சாதி வெறிக்கு எதிராக சமூக ஒற்றுமை காக்க களத்தில் நின்ற அமைப்பாக டிஒய்எப்ஐ பணியாற்றி வருகிறது. 





சேவை என்றால் தமிழகத்தில் டிஒய்எப்ஐ என்று சொல்லுமளவுக்கு இயற்கை சீற்றம், பேரிடர் காலத்தில் களத்தில் நின்ற அமைப்பாக சுனாமியில் தமிழகமே பாராட்டும் அமைப்பாக, ரத்ததானம் செய்வதில் தனிப்பட்ட பெரும் அமைப்பாக                      ( சாம்பியனாக) இதுவரை 13 லட்சம் யூனிட் இரத்தங்களை தானமாக கொடுத்து மனித உயிர்களை காப்பாற்றி வருகிறது. திருப்பூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்டு ஏராளமான இடங்களில் அரசுமருத்துவமனைகளில் உழைப்புதானம் நடத்தி அரசை திரும்பி பார்க்க வைத்தது. சாலைகள், பாலங்கள், பள்ளிகள், கல்லுரிகள், மயானங்கள், சமூக நலக்கூடங்கள், பால்வாடிகள், அங்கன்வாடிகள் துய்மைப்பணி என பன்முக தன்மையான பணிகளில் கணிசமான இளைஞர்கள் அமைப்பிற்குள் ஈர்க்கப்பட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

அவிநாசி புதுப்பாளையத்தில் 500 வண்டி மண்கொட்டி  3 கி.மீ நீளத்திற்கு சாலை அமைத்து பேருந்து போக்குவரத்து வர உறுதியான நேரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர்  பேருந்துகள் ஊருக்குள் வருவதை தடுத்தது. ஏனென்றால் 2 ரூ, 3ரூபாய் குறைந்த கூலி கொடுத்து விவசாய தொழிலாளர்களை ஆதிக்கம் செய்து விவசாய வேலைகளில் ஈடுபட வைத்து வந்தனர். ஊருக்குள் பஸ் வந்தவுடன் தொழிலாளிகள் வெளியே வேலைக்கு சென்று விடுவார்கள் என காரணம் சொன்னார்கள். இப்படி ஏராளமான ஸ்தல இயக்கங்களை தமிழகத்தில் நடத்தி  லட்சக்கணக்கான மக்களின் வாழ்வதாரத்தை பாதுகாத்த அமைப்பாக வளம் வருகிறது. 

இக்காலத்தில் ஏராளமான பிரச்சார பயணங்கள் நடையாய், சைக்கிளில், வாகனத்தில் என பல்லாயிரக்கணக்கான கி.மீட்டர் துரத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கில் அமைப்பின் கோஷத்தையும், கோரிக்கைகளையும் கொண்டு சேர்த்தோம். இதில் கிடைத்த தொடர்பில் இன்று 10.50 லட்சம் இளைஞர்களையும், 4800 கிளைகளையும், 375 இடைகமிட்டிகளையும், 10000க்கும் மேல் இளைஞர் முழக்க விற்பனை என வளர்ந்து வந்திருக்கிறோம். ஏராளமான படிப்பினைகளும், பலம், பலகீனங்களும் கற்று தேர்ந்து அமைப்பை முன்னேற்றபாதையில் அழைத்து வந்துள்ளோம். 

1990 களில் வரை இருந்த வேகமான வளர்ச்சியின் அடிநாதத்தை புரிந்து கொண்டு 90களுக்கு பின் உலகமய, தாராளமய சூழலில் இளைஞர்கள் சந்தித்த வாழ்வியல் தேடலுக்கான, வேலைநெருக்கடிக்கு எதிராக தொடர்ந்து இளைஞர்களை அமைப்பு ரீதியாக திரட்டுவதற்கு உள்ள சவால்களை தகர்தெறிந்து முன்னேறி வந்து கொண்டு இருக்கிறோம்.
மறந்து கொண்டே இருப்பது
மனித இயல்பு
அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது
நமது கடமை
என்ற மகத்தான நமது வரலாற்றை தெரிந்து கொள்வது எதிர்காலத்திற்கான சரியான பாதையை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில்  ஒவ்வொரு மாநாடுகளும் அந்தந்த கால சூழலுக்கு தகுந்தாற்போல் போராட்டங்களும், இயக்கங்களும், நடவடிக்கைகளுமாய் புதிய விதைகளை தமிழக மண்ணில் விதைத்தது. 

நம்முடைய ஏராளமான வெற்றிகளில் குறிப்பாக  வேலையில்லாகால நிவாரணம், 18 வயதில் வாக்குரிமை, தகவல்பெறும் உரிமைச் சட்டம், சமச்சீர்கல்வி, இலவச பேருந்து பயணம்,  மலைவாழ் மக்களின் உரிமைகள் வென்றெடுத்தை சுட்டிக்காட்டலாம். இதிலிருந்து அமைப்பின் செயல்பாட்டை விரிவுபடுத்த இரத்ததான கழகம், விளையாட்டு கழகம், பண்பாட்டு கழகம், இளம்பெணகள் அமைப்பு, மலைவாழ் இளைஞர் சங்கம் போன்ற உப அமைப்புகளை உருவாக்கி இளைஞர் அமைப்புகளில் சாதனைப்படைத்த அமைப்பாக வலம் வருகிறோம். 


டிஒய்எப்ஐ கடந்து வந்த பாதையொன்றும் வள்ளுவன் கண்டுசொன்ன மலரிலும் மென்மையான மலரான அனிச்சம் மலரும், அன்னத்தின் இறகும் நிறைந்து கிடந்த பாதையில் வந்தது அல்ல.. கல்லும், முல்லும் காலுக்கு மெத்தை என கரடு முரடான பாதைகளையும், ஏராளமான தியாகிகளை  சீராணம்பாளைய்ம பழனிசாமி துவங்கி, மதுரை குட்டி ஜெயபிரகாஷ், பெரம்பூர் ராஜூ, குமரி பாபு செல்லையன், கோபி, அரகநாடு சுதாகரன், விருதுநகர் சந்துரு, கோவில்பட்டி அமுல்ராஜ், சிங்கை குமார், சேலம் சீனிவாசன், மண்டபம் முத்து, அரசூர் சேட்டு, ஆதித்தவர்த்தனஸ்ரீ, கண்டமங்கலம் சுரேஷ், கடலுர் குமார் ஆனந்தன், வீரத்தாய் லீலாவதி, மாணவ தியாகிகள் சோமு, செம்பு, பட்டிவீரன்பட்டி பாண்டி, திருப்பூர் பன்னீர் செல்வம், இடுவாய் ரத்தினசாமி, பள்ளிபாளையம் வேலுச்சாமி, பலி கொடுத்து முன்னேறிய அமைப்பாக டிஒய்எப்ஐ தனி முத்திரையை தமிழத்தில் பதித்து வருகிறது. நாங்கள் செம்மலர்கள் பறிக்க பறிக்க பூத்துக்கொண்டே இருப்போம் என வளர்ந்த வருகிறோம். தேசம் காக்கும் படையாக முன்னேறி வருகிறோம்.


14 வது நாகர்கோவிலில் மே 9 முதல் 12 வரை சங்கமிக்க இருக்கிறோம்.. பொதுவுடை கொள்கை திசையெங்கும் சேர்போம், புனிதமோடு அதை எங்கள்  உயிரென்று காப்போம் என பாவேந்தரின் வார்த்தைகளோடு  தமிழகத்தில் மாற்றத்தின் உலைகலனாய் வீதிதோறும் வாலிபர் சங்கம், வீடு தோறும் நமது தோழன், நாடு முழுவதும் நமது முழக்கம், நாளைய பொழுது நமக்காய் விடியும் என்ற எங்கள் வீர முன்னோர்களின் கனவுகளை தாங்கி இதோ நாங்கள் வருகிறோம்,. அலைகடல் பரவிய குமரியில் சங்கமிக்க,.. புதிய பூபாளம் படைக்க..கொள்கை முழக்கங்களோடு புதிய விடியலுக்காய்.