”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

ஜந்தர் மந்தர் ஜென்சியின் புதிய பாடம்

 


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டம், இந்தியாவிற்கு புதிய செய்தியை சொல்லிக்கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு, தீவிர உழைப்பு சுரண்டல் இளைஞர்களை கொந்தளிக்க செய்துள்ளது. மறுபுறம் படிக்கும் மாணவர்களின் நியாயமான கோபம் தங்களது கனவைச் சிதைக்கும் போட்டித் தேர்வுகள் அதில் நடக்கும் திருட்டுத்தனம், மோசடிகள், பணக் கொள்ளை, நம்பிக்கை துரோகம் இவைகளினால் அதிருப்தியுற்று நாடு முழுவதும் போராட்டக்களத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். நீட் தேர்வின் தவறுகளை திருத்த போராடவில்லை நீட் தேர்வே தவறானது.எனவே நீட்டை ஓழித்திடு என போராடுகிறார்கள்.


எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது ! 

மாணவர்களின் தன்னம்பிக்கையை, எதிர்காலத்தை நாசப்படுத்தும்  நீட் அரக்கனின் உயிர் குடிப்பு நடவடிக்கையை எதிர்த்தே, இந்தியா போராடிக்கொண்டு இருக்கிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை வினாத்தாள்கள் 150 முறைக்கு மேல் கசிந்துள்ளது. ஒவ்வொருமுறை கசிவின்போதும் மாணவர்கள் ஏமாற்றத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள் . தற்போது நீட் மட்டுமல்லாது பல்வேறு போட்டித் தேர்வும், நுழைவுத்தேர்வுகளிலும் வினாத்தாள் கசிவுகள், CBSE விடைத்தாள் கசிவு என ஏராளமான குளறுபடிகள் வந்துக் கொண்டே இருக்கிறது. 

இதை எதிர்கொள்ள முடியாத மாணவ, மாணவிகள் பலர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது  இதனை தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் செய்யாத ஒன்றிய பிஜேபி அரசு கண்துடைப்பு நடவடிக்கையில் மட்டும் ஈடுபடுகிறது. தனது மாணவர் விரோத நடவடிக்கையை நியாயப்படுத்தி வருகிறது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா காரணமோ, பாஜக தலைவர்களின் உரைகள் அனைத்தும் அவதூறுகளை போராடும் மாணவர், இளைஞர்கள் மீது அள்ளி தெளித்தது. தேச துரோகிகள், பாகிஸ்தான், சீனா தூண்டுதல், கைக் கூலிகள் என பிரச்சாரம் செய்தனர். இது தவிடு பொடியாகியுள்ளது.


நீட்தேர்வு நோக்கம் என்ன ?

நீட் (NEET) தேர்வின் அதிகாரபூர்வ நோக்கம் எனு்உறு NTA ( தேசிய தேர்வு முகமை ) இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவக் கல்விக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடத்துவதாக அறிவித்தது.  இது பன்முக தன்மை கொண்ட தேசத்தில் பல்வேறு கல்வி முறைகள், பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் அநீதியானது.

• மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு

• மருத்துவச் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை

• நன்கொடை / பணம் கொடுத்து சீட்  பெறுவதை தடுப்பது

• திறமை மற்றும் தர வரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை 

போன்ற அம்சங்களை நோக்கமாக கொண்டு அறிவித்தார்கள். நடைமுறை இதற்கு நேர்மாறாக உள்ளது.. காசு உள்ளவர்களின் வாய்ப்பாக நீட் மாறியுள்ளது.. 


நீட்  பணமயமும் -  தற்கொலை சாவுகளும் !

அரசின் நோக்கம் உண்மையில் கல்வி வணிகமயமாக்கலுக்கே உதவி செய்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 65000-90000 சிறிதும் பெரிதுமான நீட், கியூட், எக்சிட், JEE மற்றும் UPSC தேர்வுகளுக்கான மையங்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. இந்த மையங்களில் பயிற்சி பெற ரூ இரண்டு லட்சம் துவங்கி 10 லட்சங்கள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ 60000 கோடி மதிப்பீட்டில் செயல்படுகின்றன. 

இத்தகைய வருமானம் தவிர குறுகிய கால இடைவெளியில் வரையறுக்கப்பட்ட இணையவழி பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன ராஜஸ்தானில் இயங்கும் கோட்டா  NEET பயிற்சி மையம் மட்டும் ரூ 3500 கோடி வருவாயில் இயங்குகிறது. இதைபோல் இந்தியா முழுவதும் செயல்படும் மையங்களில்  ஏறத்தாழ 24 லட்சம் மாணவ,மாணவிகள் பயின்று வருகிறார்கள். 

அதிக அளவில் பணம் கட்டி  படிப்பதன் காரணமாக பெற்றோர்களின் அழுத்தமும், சுற்றுப்புற சமூக அழுத்தமும் மாணவர்கள் இரவு பகல் பாராது ஆண்டு முழுவதும் படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பயற்சி மையங்களில் அதிக எண்ணிக்கையில் வெற்றியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நிலையில் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. 

தொடர்ந்து கோழிப் பண்ணையில் கோழி வளர்ப்பை போல் இந்த மையங்களில் மாணவர்கள் வளர்க்கப்படுகின்றனர்.தனது குடும்பம், உறவினர்கள் சமூக உறவுகளில் தான் எப்படியும் வெற்றி பெறுவேன் என்ற நிலையில் இத்தகைய தேர்வு முறைகேடுகள் தேர்வு குறித்து உருவாக்கப்படும் பின்னணி செய்திகள் கடும் அதிர்ச்சியையும் மன சோர்வையும்  எல்லை மீறிய மன அழுத்தத்தையும் மாணவர்களுக்கு  உருவாக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் அனிதா துவங்கி  20க்கும் மேற்பட்ட மாணவி, மாணவர்கள் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் பார்த்தோம்.


வேலையின்மையும்  உழைப்பு  சுரண்டலும் 

இந்தியாவில் வேலையின்மை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஏறத்தாழ 15-23 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 9.3% பேர் வேலையற்று உள்ளனர். வேலையில் உள்ள இளைஞர்களும்,  இளம் பெண்களும் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற நிர்பந்திக்கப் படுகிறார்கள். குறிப்பாக உற்பத்தித் துறையில் குறைந்தபட்ச ஊதியம் ௹ 15000, சேவைத்துறையில் மருத்துவர் உட்பட ௹ 20000 - 25000 வரை ஆரம்ப ஊதியமாக வழங்கப்படுகிறது. அனைத்து சட்டதிட்டங்களும் இங்கே மீறப்படுகின்றன. மேலும் கூடுதல் உழைப்பு என்ற உழைப்புச் சுரண்டல் திணிக்கப்படுகிறது.  

இதன் காரணமாக 20-30 வயதிற்குட்பட்ட  இளைஞர்கள் 34% பேர் தூக்க குறைபாடு  பாதிப்புக்கு  உள்ளாகின்றனர் இந்தியர்களில் சுமார் 46%  பேர் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்குகின்றனர். இதனால் 51.4% பேருக்கு தூக்க கோளாறு நோய் உள்ளது. இந்தியாவில்  IT ஊழியர்களிடம் நீண்டநேர வேலை, திரைப்பயன்பாடு, மன அழுத்தம் ஆகியவை தூங்கும் தரத்தையும் நினைவாற்றலையும் பாதிக்கிறது. இத்தகைய இளைஞர்களை  உருவாக்கும் மையங்களாக NEET, JEE பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் உள்ளன. கார்ப்பரேட்டுகளின் வணிக சந்தைக்கான மனிதர்களையே இங்கே உருவாக்குகிறார்கள்.

இந்தியாவின் இளம் சக்தி 66 சதவீதம் எனில்,  அதில் ஜென் சி பிரிவு வயதினர் 37.7 கோடி பேர் உள்ளனர். இந்திய மொத்த நுகர்வில்  43%  பேர் ஜென்சி பிரிவினர் ஆவார்கள். இணைய வர்த்தகத்தில் 40-45 % வர்த்தகம் ஜென்சியின் பங்குள்ளது. இப்பெரும் பகுதி நுகர்வின் முக்கிய புள்ளியாக உள்ளனர்.

இந்த சூழலில் தங்களது வாழ்வியல் வளங்களையும், எதிர்காலத்தையும் தூக்கி எறிய ஆளும் பிஜேபி அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் திணிக்க முயற்சி செய்கிறது. வாழ்வை சீரழிக்கிறது. இதன் மேல்கொண்ட  கோபமும், வேலை யின்மையின் பெருவெடிப்பும் இளைஞர்களை வீதிக்கு தள்ளியுள்ளது. இந்த பெரும் கோபமே ஜந்தர் மந்தர் போராட்டம். 

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் செய்தார். இளைஞர்களை  ஒட்டுண்ணி - கரப்பான் பூச்சி வாழ்க்கை வாழுபவர்கள் என பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு  உருவாக காரணமாக அமைந்தது. ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலை தடுத்து நிறுத்தவும், தலையிடவும்  உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது பார்க்கவும், தலையிடவும் நேரமில்லை என சொன்னது ஆளும் வர்க்கத்தின் தலையீடு எந்தளவு இருந்தது  என்பதை பார்க்க முடிந்தது. இந்திய இளைஞர்களின் நியாயமான எதிர்பார்ப்பை, தேவையை கண்டு கொள்ளாமல் புறந்தள்ளும் ஆளும்வர்க்கத்தின் நடவடிக்கையாகும்.


பிரதம சேவகரின் வார்த்தை நம்பிக்கை தருகிறதா?

நீட் வினாத்தாள் இதுவரை 152 முறை கசிந்துள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சிதலைவர் குற்றம் சாட்டுகிறார். பிரதமரோ நள்ளிரவு வீடியோ வெளியிடுகிறார். அதில் நாங்கள் விரைவு நீதி மன்றம் அமைத்து குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் என்று கூறுகிறார். உண்மையில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற விசாரணைகளில் எந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை.

இறுதியாக 2024 ஆம் ஆண்டில் பீகாரில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகார் காவல் துறை சஞ்சீவ் குமார் (என்ற) சஞ்சீவ் முக்யா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தினர்  இந்த வழக்கு சிபிஐ வசம் வந்தது. இரண்டாண்டுகள் விசாரித்து 45 பேரை குற்றப்பத்திரிக்கையில் இணைத்தது. இறுதியில் அவர் மேல் குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றதால் அவருக்கு ஜாமீன் கிடைத்து இன்று வெளியில் உள்ளார். இதுதான் இவர்களின் விசாரணை லட்சணம்.  எப்படி ? நாடு முழுவதும் எதிர்கட்சிகளை மிரட்ட சிபிஐ, அமலாக்கதுறை, வருமான வரித்துறை அமைப்புகளை பயன்படுத்தி வழக்கு மட்டும் பதிந்து விசாரித்து இன்றுவரை ஓருவருக்கு கூட சட்டரீதியாக தண்டனை பெற்றுத்தரவில்லை. 

தற்போதும் இவர்களின் ஏமாற்று வித்தை நீட் தேர்வை நடத்தும் NTA அமைப்பை  கலைக்காமல் தீர்வு காண முடியாது.  ஏனெனில் கல்வி வியாபாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பை இந்த நிறுவனங்கள் அனுமதிக்குமா? இந்த நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும், அரசியல்வாதிகளும் இடையேயான தொடர்பு இவர்களை பாதுகாக்கிறது. இது தான் கடந்த பல ஆண்டுளாக வினாத்தாள் கசிவின் போது நடவடிக்கை இல்லாததிற்கு காரணமாக உள்ளது. மோடியின் நள்ளிரவு உரையை, போராடும் மாணவர்கள், இளைஞர்கள் நம்ப தயாராக இல்லை. தேவை நிரந்தர தீர்வு !


ஆஸாதியின் குரல் ! இன்குலாப் ஜிந்தாபாத் !

சமூக செயற்பாட்டாளர் சோனம் சுவாங்க் அவர்கள் சிஜேபி உடன் இணைந்து உண்ணாநிலை போராட்டம் நடத்தியது பெரும் தாக்கத்தின் துவக்கமாக அமைந்தது. டில்லி வீதிகளில் ஆஸாத்தி முழக்கமும், இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கமும்  எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.  இந்த ஒலியின் உண்மையை கோபத்தை எதிர்கொள்ள முடியாத ஆளும் வர்க்கம் அடக்குமுறையை ஏவுகிறது.

கம்பி வேலிகளை ஆணிகளை கைத்தடியில்  சுற்றி அடித்த போதும் பகத்சிங் உருவப்படத்தை உயர்த்தி பிடித்த  இளைஞர்களாக இருக்கலாம். பீகாரில் காவல்துறை நீர் பீய்ச்சி அடித்த  போது குற்றால அருவியின் காரலை ரசிக்கும் உற்சாகத்தோடு முழக்கமும் ஆட்டமுமாக போராடிய இளைஞர்களின் எழுச்சியாக இருக்கலாம். ஆஸாதி, ஆஸாதி நீட் அரக்கனிமிடருந்து ஆஸாதி என்ற முழக்கத்தின்  பின்னால் கோடி இளைஞர்களின் எதிர்கால கனவுகளே மிகுந்துள்ளது. 

மும்பையில்  காவல்துறை போராடிய இளைஞர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்ற போது அதற்கு எதிராக இளம் பெண் ஒருவர் தனியாக போலீஸ் வேனை ஒற்றை கையில் நின்று நிறுத்தியதும், தனது தோழர்களை விடுவித்து அழைத்துச் சென்றதும்,  ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் மீதரன தாக்குதலை இளம் பெண் தன் முதுகை காண்பித்து அடிக்க சொல்லி தடுத்து நிறுத்தியதாக இருக்கலாம்.

பல்வேறு பகுதியில் காவல்கறையின் கண்மூடித்தனமான ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமான தாக்குதலை நிறுத்த எதிர்த்து நின்று போராடிய போதும் தோழர்களை பாதுகாக்கும் தருணத்திலும் பெண்கள் காட்டிய வீரமும் துணிவும் பாசமும் அர்ப்பணிப்பும் அலாதியானது.  இன்று இந்தியாவின் காட்சியாக சர்வதேச சமூகம் பார்த்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஆதரவு போராட்டங்களும் மோடி அரசுக்கு எதிராக நடைபெற்றுள்ளது. 

தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற எஸ்.எப்.ஐ - டிஓய்எப்ஐ அமைப்பின் தோழர்களிடம் காவல்துறை நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தது. இதற்கு எதிரான தோழர்களின் உறுதியான எதிர்ப்புணர்வும்,  போராட்ட அணுகுமுறையும் மதிப்பிட முடியாத அளவு மகத்தானது. சென்னையில், மதுரையில், விழுப்புரத்தில்,  திருப்பரங்குன்றம்  போராட்டத்தில் காட்டிய வீரம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கிறது. 

குறிப்பாக இளம் தோழர்கள் பள்ளியில் பயிலும் மாணவன்  சபீர், இளைஞன் செந்தில் காட்டிய போராட்ட உணர்வும் ரயில் மறியல் போராட்டம் மெய் சிலிர்க்க வைக்கிறது. எதிர்காலம் நம்பிக்கைக்குரியது ஆம் அதனால்தான் ஜந்தர்மந்தர்  போராட்ட களத்திற்கு பல வடிவங்களில் உதவிகள், சேவை அடிப்படையிலும் மொபைல் சார்ஜ் செய்ய பவர் பேங்க் தினசரி சார்ஜ் செய்து கொடுப்பதில் இருந்து, பல்லாயிரக்கணக்கான உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டில்கள் சாரை சாரையாக மக்கள் வழி நெடுகிலும் வழங்கியது கண்கொள்ள காட்சியது. 

போராட்ட நிறைவில் அங்கே போடப்பட்டிருந்த குப்பைகள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், காவல்துறையின் தாக்குதலில் பிய்ந்துபோன செருப்பு குவியல்களை அப்புறப்படுத்த சினிமா நடிகர் முதல் இளைஞர்கள் வரை துப்புறவு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 


வரலாற்றின் சக்கரத்தில் !

1946 கப்பற்படை எழுச்சியின் போது மும்பை நகர உழைப்பாளி மக்கள் உணவுபொருட்களை மலையாக குவித்தனரே அந்த சுதந்திரப் போராட்ட வரலாறு திரும்பியதோ என எண்ண தோன்றியது. அதனால் தான் பயந்து நடுங்கிய  மோடி அரசு துணைராணுவ படையை அனுப்புகிறது தேசதுரோக சட்டத்தை பயன்படுத்த காவல் துறைக்கு அனுமதி அளிக்கிறது பெல்லட் குண்டுகளை பயன்படுத்துகிறது. கண்ணீர் புகை குண்டுகளை பொழிகிறது   மோடியின் இருண்ட கால ஆட்சியில் இந்தியாவின் நம்பிக்கை ஓளியாய் இளம் பெண்கள், இளைஞர்கள் போராட்டம்  நேபாள், பங்களாதேஷ், இலங்கை என பல நாடுகளில் மாற்றத்தை உருவாக்கிய போராட்டத்திற்கு இணையாக நடைபெறுள்ளது. 


“உங்கள் குண்டாந்தடியின் ஆணிகள் எங்கள் தசை நார்களை கிழிக்கலாம். மண்டைக் உடைக்கப்படலாம் எலும்புகளும், நரம்புகளும் முழிக்கப்படலாம் ஒருபோதும் எங்கள் உணர்வுகளை தடுத்து நிறுத்த முடியாது”.  

மாவீரன் பகத்சிங் வார்த்தைகளில் சொல்வதென்றால் “ நீங்கள் அமைதியாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தில் நாளை பெரும் புயல் ஒன்று விசப்போகிறது அதை எங்களால் முடிந்த அளவிற்கு சத்தமாக முன்னறிவித்து விட்டோம் கேளாச் செவிகள் கேட்கட்டும்”

மக்களின் காதலர்கள் மார்க்சிஸ்டுகள் !

யுத்தமில்ல உலகை கட்டுவோம்..


பூமிபந்தில் மனிதன் நலமாக வாழவேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. குறிப்பாக யுத்த வெறிக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. 1939 ஆம் ஆண்டு தொடங்கி 1945 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடந்த இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மன், இத்தாலி ஜப்பான் ஆகிய நாடுகள் சரணடையும் தருணத்தில் அமெரிக்கா தான் கண்டுபிடித்த அணுகுண்டுகளை பயன்படுத்த வேண்டும் என்ற வெறி இதற்கு என்ன காரணம்.மேலும்,  இரண்டாம் உலக போருக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகின் பெரும் பகுதி நாடுகளை ஆண்டது இவர்களது கட்டுப்பாட்டில் ஏராளமான நாடுகளை வைத்திருந்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விட நான் பெரிய ஆள் என்று அமெரிக்கா காண்பிக்க நினைத்தது.பதநாடுகளின  இரண்டாம் உலகப் போரை முழுமையாக நடத்தியவர் ஹிட்லர். இந்த ஹிட்லரை தோற்கடித்தது ஸ்டாலின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.  எனவே சோவியத்நாட்டை விட பெரியவன் என காட்டிக் கொள்ள

 நினைத்தது, ஜப்பான் நாடு சரணடையும்  சூழ்நிலையில், ஜப்பானிய முக்கிய நகரம் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது பேட்மேன் லிட்டில் பாய் என பெயர் வைத்த இரண்டு அணுகுண்டுகளை அமெரிக்கா வீசியது. ஒரு குண்டின் எடை 20 ஆயிரம் டன் இன்னொரு குண்டின் எடை 15 ஆயிரம் டன், போட்ட ஒரு நொடிக்குள் பல ஆயிரக்கணக்கான மனித உடல்கள் சாம்பலாகி காற்றில் கறைந்துவிட்டது. இன்று இது போன்று 5500 அணுகுண்டுகளை கையில் வைத்துகொண்டு அமெரிக்கா உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கின்றது.

மேலும் ஜப்பான் மீது அன்று போட்ட அணுகுண்டின் தாக்கம் இன்றும் ஜப்பானில் அணுகுண்டு கதிர் வீச்சு களால் பிறக்கும் குழந்தை மாற்றுத் திறனாளிகளுக்கான பிறக்கின்றது. 

1945 க்கு பிறகு 2500 அணுஆயுதப் பரிசோதனை பல நாடுகள் நடத்தியுள்ளனர். 1945 பிறகு ஏராளமான போர்கள் நடந்துள்ளது. கொரியா ஆப்கான், சிரியா, லெபனான், ஈரான், ஈராக், பல நாட்டின் மீது போர்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ஏகாதிபத்திய வெறியின் காரணமாக பல நாடுகளின் மீது ஏராளமான அனுகுண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக வியட்நாம் நாட்டின் மீது 75 இலட்சம் டன் குண்டுகள் வீசப்பட்டன. கட்டிடங்கள் விளைநிலங்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டன. 

இதே போன்று தான் அமெரிக்கா பல நாடுகளின் மீது குண்டு வீசியது. கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன்னுக்கும் ரஷ்யாவுக்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது. வருடத்திற்கு 20 இலட்சம் பீரங்கி குண்டுகளை ரஷ்யா உக்ரைன்மீது வீசுகிறது. இதன் விளைவு என்ன மக்களின் அற்புதமான கட்டிட கலை, வாழ்விடம், கல்விகூடம் , மருத்துவமனைகள்,  வீடுகள் அழிக்கப்பட்டது. இதனை மீட்டுருவாக்கம் செய்ய பல பத்தாண்டுகள் ஆகும். இதனை உருவாக்க பொருளாதரம் தேவை. 

உலகம் முழுவதும் போர் நடக்கும் பகுதிகளில் பதட்டத்தில் 45 கோடி குழந்தைகள் வாழ்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. ஈரான் பள்ளியில் 110 குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசுகிறது இந்த அடவாடியை இந்திய நாட்டின் பிரதமர் மோடி கண்டிக்கவில்லை. இஸ்ரேலின் அடவாடியை கண்டித்து இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் போராட்டம் நடத்துகின்றனர்.

உலக நாடுகளின்  சமீபத்தில் நடந்த யுத்தத்தில் மட்டும் 3 கோடி மக்கள் இறந்துள்ளனர். உலகம் முழுவதும் இராணுவத்திற்கு ஏராளமான செலவு செய்கின்றனர். ஒரு மனிதனுக்கு உணவு கல்வி மருத்துவம் தொழில்நுட்ப அறிவு சாதனங்களை மக்களிடம் கொண்று சென்று விட்டால் போர் நடத்த வேண்டிய அவசியமில்லை. ஈரானுக்கு அமெரிக்காவுக்கும் போர் நடந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது. தங்கம் விலை ஏறுகிறது. இதற்கு யார் காரணம். விவசாயிகள் விலை பொருட்களுக்கு கட்டுப் படியான விலை இல்லை. இதற்கு எல்லாம் என்ன காரணம் ஏகாதிபத்திய வெறியில் போர் நடந்தால் நம் நாட்டில விலைவாசி உயர்கிறது. எனவே தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இவர்களோடு கைகோர்க்கும் கார்பரேட் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்  போராட்டம் நடத்துகின்றனர். ஆகவே யுத்தவெறி என்பது எல்லோருக்கும் அபாயமானது. 

நம் வீடு குழந்தைகள் படித்து மருத்துவம் பொறியாளர் என படிக்க நினைக்கின்றனர். இந்த படிப்புகளை படிக்க நீட் க்யூட், க்ளாட், நெட், டெட் என பல்வேறு தகுதி என்ற பெயரில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று படிப்பில்சேர்கின்றனர். இந்த பட்டப் படிப்பு முடித்த பிறகு வேலை கேட்டால் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்கின்றனர் இதனை படித்து தேர்ச்சி பெற்ற பிறகும் வேலை கேட்டால் ஆட்சியாளரகள் வேலையை தேடி வருகிறோம் என்கின்றனர். வடநாட்டில் மட்டும் நீட் தேர்வால் தனது மருத்துவ படிப்பு கிடையாது என்ற சூழலில் 22 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்துகல்வியில் மாற்றம் வேண்டும் என்று சொல்லி டில்லியில் 50 இலட்சம் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் நடத்தினால் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வுகானாமல் சொந்த நாட்டு மக்கள் மீது பெல்ட் குண்டு, கண்ணீர் புகை குண்டு, போட்டது ஒன்றிய சுமூகமாக பேசி தீர்க்க கூடிய பிரச்சனையை போலீஸ் துணை ராணுவத்தை கொண்டு தாக்கியதற்கு உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. 

நமக்கு பெல்ட் குண்டு தேவை இல்லை நமக்கு தேவை பேனா , அடுத்தவர்களுக்கு உதவும் மனிதநேய சிந்தனை உருவாக்கவேண்டும் 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை . 

எனவே இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நடவடிக்கைகளை மாநில அரசும் மத்திய அரசும் எடுக்க வேண்டும் உலகம் அமைதிபூங்காவாக மாறவேண்டும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் யுத்தங்கள் போர்களை தொலைந்து போகட்டும் யுத்தத்தை நடத்துகின்ற ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தை தகர்த்தெறிவோம் !

செ.முத்துக்கண்ணன்

ஆகஸ்ட் -6 ஹிரோசிமா, ஆகஸ்ட்-9 நாகசாகி நினைவு தினங்கள் !

 கெட்ட போரிடும் உலகை சாய்த்திடுவோம்! 

- செ.முத்துக்கண்ணன்


உலகமே ஒரு குடையின் கீழ் சுருங்கிவிட்டது. ஏகாதிபத்திய நிதிமூலதனம் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டே வருகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் அதை மேலும் சுருங்க வைத்துள்ளன. ஏகாதிபத்தியங்கள் தங்களின் நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்ள, வர்த்தக-பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் நிர்பந்தம் செய்து கொள்ளையடித்துவருகின்றன. மறுக்கும் நாடுகளின் மீது யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பொய் பிரச்சாரங்கள், வதந்திகள், அவதூறுகளைக் கட்டமைத்துத் தங்களது ஊடக மேலாதிக்கம் மூலம் தாக்குதல் நடத்துகின்றனர்.தற்காலத்தில் ஆற்றல் சக்திகளை உற்பத்தி செய்யும் அரிதானதனிம வளங்களைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், தங்குதடையற்ற எரிசக்தி வளங்களுக்கும், சிப்-செமிகண்டக்டர் உற்பத்திக்காகவும், உலகின் சந்தைகளைத் தனதாக்கிக்கொள்ளவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் பகுதியாகவே இரண்டாம் உலகப் போருக்குப் பின் வியட்நாம், கொரியா, ஆப்கானிஸ்தான், இராக், வெனிசுலா ஜனாதிபதி நாடுகடத்தல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிகழ்த்தியுள்ளது. சோசலிச கியூபாவின் மீது பொருளாதார யுத்தத்தை 67 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.சாமானிய மக்களின் வாழ்வினை அழித்துச் சில ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய சக்திகள் நடத்திவரும் போர்களும் கொள்ளையடிப்பு திட்டங்களுமே மக்களின் பேரழிவுக்கு காரணமாக அமைகின்றன. 

1945 ஆகஸ்ட் 6 ஜப்பானின் ஹிரோசிமாவிலும், ஆகஸ்ட் 9 நாகசாகியிலும் அமெரிக்க அணுகுண்டின் பேரழிவுநிகழ்த்தப்பட்டு 81 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதை நினைவுகூரும் அதே தருணத்தில், இன்றைய அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் விளைவுகளை நாம் அறிய வேண்டியுள்ளது. நிதி மூலதன மேலாதிக்கம், ஊடக மேலாதிக்கம், அரசியல் மேலாதிக்கம், பண்பாட்டு மேலாதிக்கம் எனத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அது எத்தகைய கொடூரமான வழிகளையும் கையாண்டு வருகிறது.


அணுகுண்டின் அழிவை சந்தித்த ஜப்பான்

1945-ல், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் முக்கிய நகரமான ஹிரோசிமா மீது ஆகஸ்ட் 6-ம் தேதி அமெரிக்காவின் ‘எனோலாகே’ போர் விமானம் மூலம் “லிட்டில்பாய்” (Little Boy) என்ற யுரேனியம் அணுகுண்டு காலை 8:15 மணிக்கு வீசப்பட்டது. விநாடிப் பொழுதில் 70,000-க்கும்மேற்பட்ட மக்கள் சாம்பலாகிப் போனார்கள். மரண ஓலங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும் போதே, ஆகஸ்ட் 9-ம் தேதி ‘பாக்ஸ்கார்’ விமானம் மூலம் “ஃபேட் மேன்” (Fat Man) என்ற புளுட்டோனியம் அணுகுண்டு நாகசாகி மீது வீசப்பட்டது. இதில் 40,000 பேர் விநாடிப் பொழுதில் காற்றில் கரைந்தார்கள்.

இந்த அணுவெடிப்பின் வெப்பநிலை 4,000°C வரை உயர்ந்து, அங்கிருந்த கட்டடங்களையும் மனித உடல்களையும் கரியாக்கியது. அணுவெடிப்பின் கதிர்வீச்சுப் பாதிப்பு புற்றுநோய், மரபணு கோளாறுகள், பிறவி ஊனங்கள் என இன்று வரை தொடர்கிறது. இத்தகைய பேரழிவைக் கண்முன்னே கண்ட இந்த பூமியில், தற்போதும்யுத்தத்தின் பெயரால் ஏராளமான அழிவுகளை ஏகாதிபத்திய சக்திகளும் இனவெறி, மதவெறி சக்திகளும் நடத்திவருகின்றன.

இஸ்ரேல் - அமெரிக்கப் போர்வெறியும் உலக நெருக்கடியும்

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் - அமெரிக்க நாடுகளின் போர்வெறி காரணமாக ஏற்பட்ட போர், பூமிப் பந்தின் மீது கடும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 3.5 டிரில்லியன் டாலர் வரை கூடுதலாகச் செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான், ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் ஆண்டில் மட்டும் 493 பில்லியன் டாலர் உற்பத்தி இழப்பு ஏற்படும். ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கத்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 120 டாலர் வரை உயர்ந்தது. உலக வங்கியின் கணிப்புப்படி, உலகளாவிய பணவீக்கம் உயர்ந்துள்ளதுடன், செங்கடல் வழியான வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்துக் கட்டணம் 300% உயர்ந்துள்ளது. 2030-க்குள் இந்த போர்கள் மொத்தம் 15 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தும். இது உலக ஜிடிபியில் 8% ஆகும். உடனடி போர் நிறுத்தமும், சர்வதேச நிதி மறுசீரமைப்புமே உலகைக் காப்பாற்ற உதவும்.


பாலஸ்தீன - உக்ரைன் போர் இழப்புகள்

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்கட்டமைப்பு சேதம் 18.5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது; வேலையின்மை 80% ஆக உயர்ந்தது. இஸ்ரேல் பொருளாதாரம் ஜிடிபியில் 19.4%சரிந்தது. ஈரானின் தினசரி எண்ணெய் ஏற்றுமதி 50% குறைந்து, ஆண்டுக்கு 15–20 பில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் நான்குஆண்டுகளைக் கடந்து செல்கிறது. உக்ரைனில் அடுத்த பத்தாண்டுகளுக்கு மறுகட்டுமானச் செலவு 558 பில்லியன் டாலர் ஆகும். உக்ரைனின் உள்கட்டமைப்பு 30% அழிந்துள்ளது. ரஷ்யாவிலும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதுடன், 565-க்கும் மேற்பட்ட மேற்கத்திய நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன. இந்த அழிவுகள் ஐரோப்பிய நாடுகளை எரிசக்தி மற்றும் உணவு தானியப் பற்றாக்குறையில் ஆழ்த்தியுள்ளது. எரிசக்தி விலை உயர்வால் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் பல நூறு பில்லியன் டாலர்கள்கூடுதல் செலவாகின்றன.

வறுமையும் பசியுமா எதிர்காலம்?

உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் உணவு தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் 35-50% வரை உயர்ந்துள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் தீவிர பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பசியால் வாடுபவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் மற்றும் வன்முறை பாதித்த பகுதிகளில் வாழ்கின்றனர். சக மனிதர்களைப் பட்டினியிலும் வறுமையிலும் வாழவைத்துவிட்டு, யுத்தங்களுக்காக இவ்வளவு பெரிய செலவுகளை செய்வது நியாயமா? உணவுப் பாதுகாப்பு இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படும் சூழலில் கார்ப்பரேட் ஆயுத வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

இந்தப் போர்கள் நாடுகளின் வளர்ச்சியை பத்தாண்டுகளுக்குப் பின்னுக்குத் தள்ளுகின்றன. காசாவின் ஜிடிபி 60% குறைந்துள்ளது; குழந்தைகளின் கல்வியும் உளவியலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் போர் மேகங்கள் நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். 2030-க்குள்இளமையைத் தொலைத்த ஒரு “இழந்த தலைமுறை” உருவாகும் அபாயம் உள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு இதுவரை நடைபெற்ற போர்களில் சுமார் 3 கோடிப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பண்பாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஹிரோசிமாவும் நாகசாகியும் உலகின் பேரழிவின் அடையாளமாக நிற்கும் போது, மீண்டும் இன்றைய யுத்தங்கள் தேவையா? ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்திடுவோம்! 

இரத்தக் கறை படிந்த நிலத்தில் எந்த விதையும் முளைப்பதில்லை; எரிந்த பிணங்களின் சாம்பலில் எந்த எதிர்காலமும் உருவாவதில்லை. அமைதிப் புறாவின் சிறகுகளில் அன்பின் ஒளியைப் பரப்புவோம், போரற்ற உலகைப் படைப்பதற்கே பூமியில் விதைகளை விதைத்திடுவோம்!


சோசலிசம் அல்லது வீரமரணம்

  கடைசித் துளி  இரத்தமும் 

இரண்டு மணி நேரம் மின்வெட்டு, ஐயோ என்ன அரசு? இது மின்வெட்டு அரசா ? என கடுமையாக பேசுகிறோம். ஆனால் ஒரு தேசத்தின் மின் உற்பத்தியை முடக்கி, மின்சாரம் இல்லாமல் நாள்கணக்கில் மக்களை இருட்டில் வைத்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். 

ஆம், அதன் கொடூரமான பொருளாதார தடை, கியுப வர்த்தகத்தை முடக்கியது, இராணுவத்தை கொண்டு  அச்சுறுத்துவது, இதர நாடுகளின் உடனான அரசியல், சமூக, கலாச்சார தொடர்புகளுக்கு  தடை என்றும், தனக்கு கீழ்படிய வேண்டும் என்று 1959 முதல் 2026 வரை அமெரிக்க கழுகுகளால்  நார் நாராய் கியூப மக்களின் வாழ்க்கை கிழித்துப் போடப்பட்டு கொண்டே வந்தது. சோசலிச நாடுகள் உள்ளிட்டு இதர நாடுகளின்  உதவியுடன் ஐநா சபையிலும், சர்வதேச அளவிலும் தொடர் உதவிகளை பெற்று இதுவரை சமாளித்த கியூபா. அமெரிக்க பொருளாதார தடையால் தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 

” கடைசி  கியூபா குடிமகனும், கடைசி சொட்டு இரத்தமும் இருக்கும் வரை போராடுவோம், ஒருபோதும்  சரணடைய மாட்டோம் " என  சிம்ம கர்ஜனையாய் கியூபா அறிவித்து போராடி வருகிறது. இந்த நிலையில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாய்  மாறிப்போன தோழர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி கியூபா ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையை ஜூன் 14 அன்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. 

 தீ பற்றவை மக்கள்  நெருப்பென எழுவார்கள் 

1929 ஜூன் 14ல் பிறந்த சேகுவேரா இரண்டறை வயதிலேயே ஆஸ்துமா நோய்க்கு ஆட்பட்டு தனது இறுதி நாட்கள் வரை அத்தோடு போராடியவர். பள்ளி  பருவம் தொட்டு இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டாக தன்னை செதுக்கிக் கொண்டவர். பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயுதம்  ஏந்தி ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்காக போராடியவர். 

”தீ பற்றவை மக்கள் நெருப்பான எழுவார்கள்” என்ற சேவின்  முழக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதிரொலித்துக் கொண்டு  இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் காட்டுமிராண்டிதனமான கொள்ளை லாப வேட்டைக்கு எதிராக இன்றும் கியூபாவில் மக்கள்  லட்சக்கணக்கில் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள். ஏனென்றால், அவர்களின் இதயங்களில் தாங்கி நிற்கும் மகத்தான சோசலிச உணர்வு.. தத்துவத்தின் பின்னால் நிற்கிறார்கள். மரணத்தை கண்டு அச்சமில்லையென லட்சம் சேகுவேராக்களாய் களத்தில் போராடுகிறார்கள். சே புரட்சியின் அடையாளமாக மாறிவிடக்கூடாது என ஏகாதிபத்தியத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய உலகில் நிலைமை வேறுவிதமாக மாறியுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பின்  அடையாளமாக மாறியுள்ளார். 

 அச்சுறுத்தும் ஏகாதிபத்திய கழுகு 

அனைத்து வளங்களையும் கைப்பற்றும் நோக்கோடு, கியூபாவை கைப்பற்றுவோம், அதற்காக அமெரிக்க நாசகாரி போர் கப்பல் நிமிட்ஸ் கரிபீயன் கடலில் நிறுத்தியுள்ளது. மேலும் ஆப்ரகாம்  லிங்கனை அனுப்பி வைப்போம் என மிரட்டுகிறது. பொருளாதார தடைகளை தேசத்தின்  மீது மட்டுமல்ல தனிநபரின்  மீதும்  போடுவோம் என அமெரிக்கா தாக்குதலை துவங்கியுள்ளது. இராணுவத்தை பயன்படுத்துவோம். ட்ரோன்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை இறையாண்மை மிக்க கியூப எல்லைக்குள் அனுப்பி அச்சுறுத்த அத்துமீறுகிறது. 

ஏற்கனவே நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஈரானின் தலைவர் கொமேனியை கொன்றது. வெனிசூலாவில் அதிபர் நிக்லோஸ் மதுராவை நள்ளிரவில் ராணுவ நடவடிக்கை மூலம்  தாக்கி கடத்தி சென்று தனது அமெரிக்க  சிறையில் அடைத்து வைத்துள்ளது. தற்போது  கியூபாவின்  முன்னால் அதிபர் ராவுல் காஸ்ட்ரோ மீது 30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்சனையை குற்றசாட்டாக்கி, குற்றவாளி என அறிவித்து கைது செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்காக எத்தகைய ராணுவ நடவடிக்கையை எடுப்போம் என டிரம்ப் மிரட்டுகிறார். 

இதன் பகுதியாக கடந்த மே 1 ஆம் தேதி கியூப நிறுவனங்களோடு, வணிகம் செய்யும் எந்தவொரு அயல்நாட்டு நிறுவனங்களின் மீது கட்டாய இரண்டாம் நிலை பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்கள். இது இறையாண்மை மிக்க நாடுகளின் மீது நோடியான தாக்குதலாகும்.  கச்சா எண்ணெய், மின்உற்பத்திக்கான சூரிய சக்தி தகடுகள், மனிதாபிமான முறையிலான உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் இதர நாடுகளில் இருந்து கியூபா பெறுவதையும் தடைசெய்கிறது. உதவிடும் நாடுகளின் மீது பொருளாதாரத்தடை என மிரட்டுகிறது. அமெரிக்காவின்  இந்த செயலை சீனா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்டு பல நாடுகள் கண்டனத்தை தெரிவித்ததோடு அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. ஆனால் இந்திய அரசும் நீண்டநாள் இந்திய பிரதமரும் மவுனம் காப்பது இந்திய நடுநிலைக் கொள்கைக்கு எதிரானது.  

 ரௌத்திரம் பழகும் கியூபா 

சுமார் 1.25 கோடி மக்களை கொண்டுள்ள நாடான கியூபா 1959 முதல் கடும் பொருளாதார தடையையும், அமெரிக்க  அரசின் கொலைபாதக செயலை எதிர்த்து நின்றும் போராடுகிறது. உலகின் கல்வித்தரத்திற்கும் குறிப்பாக  மருத்துவ கல்விக்கும், சர்க்கரை உற்பத்தியிலும், உலக ஒலிம்பிக்கில் குத்துச்சடையிலும்  சாம்பியன்களாக வளம் வருபவர்கள் கியூப தேசத்தினர். இன்றும் உலகின் அனைவருக்குமான மருத்துவம் என்பதில்  படிநிலையில் அமெரிக்கா உள்ளிட்டு அனைத்து நாடுகளையும்  பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ள நாடு கியூபா. புற்றுநோயுக்கான மருத்துவத்தில் இரண்டாம் கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அறிவித்து உள்ளது. 

அத்தகைய கியூபாவில் இன்று கடும் மருந்து பொருட்கள், உணவு பண்டங்கள், எரிபொருட்கள், எரிசாதனங்கள் கடும் தட்டுப்பாடாய் உள்ளது. காரணம் அமெரிக்கா வின் அத்துமிறிய அராஜகமே. நாளொன்றுக்கு 3100 மெ.வாட் தேவை என்ற  நிலையில் 1800-1900 மெ.வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நாளின் பெரும் பகுதி நேரம்  மின் தட்டுப்பாடும், மின்வெட்டுமென கடும் நெருக்கடியை கியூபர்கள் மீது திணிக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா தடைசெய்த காரணத்தினால் மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து உள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனம் குபெட் பல பத்தாண்டுகளாக எந்த மூதலிடும் செய்யப்பட்டாமல் பாதிக்கப்பட்டுள்ளது. 

1960 முதல் 1980 வரை சோவியத், ஜப்பான் நாடுகளின் உதவியால் கட்டப்பட்ட அனல் மின்நிலையங்கள் முடங்கி போயுள்ளன. மேலும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டதும், குடிநீர் பற்றாகுறையும் மக்களை கடும் பாதிப்புக்குள்ளகியுள்ளது. மறுபுறம் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. அதிகளவில் ரேசன் முறை மூலமே மானிய விலையில் உணவுப்பொருட்கள்  விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இருப்பு இல்லாத சூழலில் கடும் வறுமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நாளின் மிக குறைவான தேவையை பூர்த்தி செய்வதாகவே நிலைமை உள்ளது. 

உலகில் 1000 மக்களுக்கு 8.5 மருத்துவர்கள் கொண்ட தேசமாக கியூபாதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 5 மருத்துவர்களை கொண்டுள்ளது. இச்சூழலில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போதியளவு இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சை வாரக்கணக்கில் தள்ளி போகும் கடும் நிலைமைகளை உருவாக்கியுள்ளது. 

கியூப பொருளாதாரம் 1959 புரட்சிக்கு பிந்தைய காலத்தை விட கடும் நெருக்கடியில் உள்ளது. ஏகாதிபத்தியங்களின் புவிசார் அரசியல் அழுத்தங்களும் கியூபாவை நெருக்கி வருகிறது. கியூபாவின் அதிக லாபம் ஈட்டும் துறைகளான சுற்றுலாத் துறையான கவியோட்டா, நிதி பராமரிப்பு துறையான சிமெக்ஸ் மற்றும் ஃபின்சிமெக்ஸ் போன்றவையும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. 50 சதவீதம் வரை சுற்றுலா துறை வருவாய் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசின் வருவாய் பெருக்கத்திற்கு வேறு உதவிகள் இல்லாத நிலையில் இந்த துறைகளிலேயே மறு முதலீடு நடைபெறுவதால், பொது உள்கட்டமைப்புகள், மருத்துவமனைகள், உணவு விநியோகத்தில்  மூதலிடுகளை அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க  இரண்டாம் கட்ட பொருளாதார தடை காரணமாக வெளிமூதலிடுகள் வேகமாக கியூபாவை விட்டு வெளியேறி வருகிறது. மேலும் நிதிச் சேவைகள், கனிமங்கள் மற்றும் சுரங்கம் போன்றவற்றிலும், பாதுகாப்பு காவல் ஆகியவற்றினை முடக்கும் நிலையை மே 7 ஆம் தேதி அமெரிக்க அரசின் உத்தரவு அமல்படுத்துவதோடு குறிப்பாக கியூபாவின் மாபெரும் இராணுவ கூட்டமைப்பான GAESA மீது அதிகாரபூர்வமாக இலக்கு வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

தன்னார்வ உழைப்பு

இந்த சூழலில் தான் பிடலும், சேவும், ராவுலும்  கட்டியெழுப்பிய மார்க்சிய லெனினிய  அம்சங்களின் அடிப்படையை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் போராடி வருகிறார்கள் கியூப மக்கள்.  சோசலிசத்தை கட்டமைப்பதில் தன்னார்வ உழைப்பை முக்கிய அம்சமாக  சே முன்வைத்தார். சோசலிச உணர்வையும், கூட்டுப் பொறுப்புணர்வையும் வளர்க்க அது உதவும் என நம்பினார். சோசலிசத்தை கட்டமைப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.  அது லாபத்தை விட சமூக தேவைகளால் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

வறிய மனிதனின்  நிலையை கண்டு இரக்கம் கொள்வதல்ல, தேவை நிலைமையை மாற்றுவது. அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது.  பகுதியிலிருந்து முழுமை பார்ப்பது என்ற இயக்கவியல் அடிப்படையில் சர்வதேச உணர்வோடு முழு உலகையும் மாற்றியமைப்பதை பற்றிய கனவே அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவில் புரட்சி செய்து காங்கோ, பெரு, பொலிவியா விடுதலை என பயணித்தவர். ஏகாதிபத்தியத்தின் பிடறியை அதன் குகைக்குள் ( நியூயார்க்கில் உள்ள ஐநா. சபையில் ) உலுக்கி எடுத்தவர். அதனால் தான் ”அவர்கள் நினைத்தது போலின்றி நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்-சே” என்ற முழக்கம் பல்வேறு நகரங்களின் தெருக்களில் எதிரொலிக்கிறது. டில்லியின் ஜந்தர்மந்தர் வீதியில் கரப்பான்  பூச்சிகளின் போராட்டத்தில் உயர்ந்து நின்றது. எனவே கியூபாவை பாதுகாப்போம், உடன் சேர்ந்து நிற்போம். அமெரிக்க கழுதைப்புலியை அதன் மண்ணிலேயே வீழ்த்துவோம் – தோழன்  சே பெயரால் சபதமேற்போம். ஏகாதிபத்தியம் ஓழியட்டும் – சோசலிசம் வெல்லட்டும். 

செ.முத்துக்கண்ணன்

நன்றி - தீக்கதிர் நாளிதழ், ஜூன் 14, 2026



வயிறுகளில் அதிகரிக்கும் வரிக்கோடுகள்.

 யாருக்கு உபதேசம் பிரதமர் அவர்களே ? 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு திடீரென நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும், வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் இணையவழி மூலம்  வகுப்புகளை நடத்த வேண்டும், வாகனம் வைத்திருப்போர் வீடுகளில் நிறுத்திவிட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும், எரிபொருள்  சிக்கனத்தை கடைபிடிக்க  வேண்டும் என சொல்லிவிட்டு அரபு நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு சென்றுவிட்டார். எதற்கு இந்த பில்டப் ? ஏன் இந்த உபதேசம் என பார்த்தால் ஒரிரு நாளில் இந்தியாவில் பெட்ரோலிய எரிபொருள் விலையை உயர்த்தி விட்டார்கள். இதற்கு தான் இந்த உபதேசம்.

கார்ப்ரேட் பாசத்தின் விளைவு

இன்று கடும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. காரணம் ஒன்றிய பிஜேபி அரசின்  கார்ப்ரேட் ஆதரவுக் கொள்கையும், நவீன தாராளமய கொள்கையின் தாக்கமும், அவர்களின் நலன்கள் சார்ந்த முன்னெடுப்பும் பெரும் நெருக்கடியை இந்தியாவில் உருவாக்கி வருகிறது. இதனை மறைக்க ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேலிய போரை பயன்படுத்தி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணமாக கூறுகிறது. இது உண்மையா?  வெனிசுலா, ரஷ்யா உள்ளிட்டு பல நாடுகளில் இருந்து இந்தியா 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்திய அரசின் உறுதியற்ற அரசியல் நிலையும், அமெரிக்க சார்பு தன்மையுமே இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.

குறிப்பாக அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அடியாளாக உள்ள இஸ்ரேலுடன் தனது நண்பர் அதானிக்காக இந்தியா பிரதமரின் நெருக்கமும், இந்திய வெளியுறவுக் கொள்கையின் உறவும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு தனது ஆதரவையும், நம்பிக்கையையும் தெரிவித்த மோடியின் பாசத்திற்கு அரபு நாடுகளின் மத்தியில் கடும் எரிச்சலையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. கூட்டுச் சேர நாடுகளினை வழிநடத்திய இந்தியா அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியதன் காரணமாக இந்தியாவின் மீதான மதிப்பும், மரியாதையும், இறையாண்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துள்ளது.

மூலதன குவிப்பு

150 கோடி மக்களை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாகவும், பொருளாதார சந்தையும் உள்ள இந்தியாவை புறக்கணிக்க எந்த நாடும் துணியாது.  அந்நிய மூலதன குவிப்பு குவிந்த வண்ணம் இருந்தது. அது இந்திய வளங்களின் மீதான  லாப பங்கீட்டை மேலும்  மேலும் தீவிரப்படுத்தியது. 1991 ல் உலக வர்த்தக அமைப்பு, ஐஎம்எப், உலகவங்கியின் நிர்பந்தத்தில் இந்தியாவியல் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னணியில், இன்று இந்திய மொத்த வருமான பங்கீட்டில் ஒரு சதவீதம் பணக்காரர்களிடம் 70 சதவீதமான சொத்துக்கள் குவியும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 

இதனுடைய வெளிப்பாடே பெரும் பகுதி விவசாயிகளை கொண்டுள்ள தேசத்தில்  விவசாய நலன்களுக்கு எதிராக வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட தொகுப்புகளையும் முதலாளிகள் நலனுக்காகவும் என மாற்றி அமைத்துள்ளது. இந்திய வளங்களை  குறிப்பாக வனங்கள், கனிம சுரங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், தேச உடைமையாக்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், துறைமுகங்கள் உட்பட அனைத்தையும் தாரை வார்க்கும் நிலையே உள்ளது. அதற்கு பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் கார்ப்ரேடுகளுக்கு கொடுத்து தேர்தல் பத்திரங்கள் பெயரில் நிதியை பெற்றுக் கொள்ளும் மோசடித்தனம் அரங்கேறுகிறது. பெரும் முதலாளிகள் நலனுக்காக உழைப்பாளிகளின் வியர்வையில் உருவான கட்டமைப்புகளை பலி கொடுக்கிறது. 

கார்ப்ரேட் நலனும், சிறுகுறு தொழில் அழிப்பும்

இதனால் கார்ப்ரேட்டுகள் தேசம் விட்டு தேசம் தாண்டி மூலதன வேட்டைக்கு நகருகிறார்கள். தற்போது 2.01 லட்சம்  கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள்  நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது. இதற்கு தேவையான நிதி மூலதனத்தை இந்திய பொதுத்துறை வங்கிகள் மூலம் பெற்று தங்களுடைய லாப குவிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்கள். நாட்டின் செல்வ வளங்களை ஒரு பகுதியினர் அனுபவிக்கவும், அள்ளிச் செல்லவும் அனுமதித்தன் விளைவால் ஏற்பட்டுள்ள வருமானப் பற்றாக்குறையை நாட்டு மக்களின்  மீது திணிக்க மோடி அரசு நினைக்கிறது. ( உதாரணம்  கார்ப்ரேட்டுகள், பெருமுதலாளிகளுக்கான வங்கிகள் வழங்கிய வராக் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, வரி சலுகை, கார்ப்ரேட் வரி குறைப்பு  என இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டில் 50 சதவீதம் அளவு அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் மோடி அரசு யாருக்கானது என புலப்படும். மொத்த தேசத்தின் சிக்கனம் சிலரின் நன்மைக்காகவா என்ற கேள்வி எழுகிறது. கார்ப்ரேட்டுகளுக்கு அள்ளி கொடுக்கும் மோடி அரசு ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்கு கிள்ளிக் கொடுக்க கூட மனமில்லாத நிலை உள்ளது.

ஏற்கனவே மோடி அரசு பதவியேற்றபின் தொடர்சியாக கார்ப்ரேட்கள் ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்கள். உதாரணத்திற்கு உயிர் பயத்தில் மக்கள்  வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 2020-2021 கோவிட் ஊரடங்கு காலத்தில் மட்டும்  ஐடி நிறுவனங்கள் 10-15 சதவீதமும் ( டிசிஎஸ் நிறுவனம் ரூ 32562 கோடி லாபம் அடைந்தது), மருந்து கம்பெனிகள் 15-20 சதவீதமும்( சில நிறுவனங்கள் 40 முதல் 50 சதவீதமும் ), வங்கித்துறையில் தனியார் வங்கிகள் ( 2021ல் HDFC  ரூ 31116 கோடி 18 சதவீதம், ICICI ரூ 16193 கோடி 50 சதவீதமும் முந்தைய ஆண்டை விட  லாபத்தை அடைந்தது. ஆன் லைன் கேமிங் நிறுவனங்கள், ஈ காமர்ஸ் நிறுவனங்கள், தொலைத் தொடர்பு துறை, சிமெண்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்கள் கடும் லாபத்தை பெற்றது.

இதே காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் உற்பத்திக்கு எந்த ஊக்குவிப்பும் இல்லாத நிலையில், அரசுகளின் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, இறக்குமதி ஏற்றுமதி குறித்தான அரசின் வரிகள் கடும் பாதிப்பை உருவாக்கியது. அந்த கோவிட் ஊரடங்கு கால அனுபவத்தை கணக்கில் கொள்ளாமலும், தனது பொருளாதார கொள்கைகளின் விளைவாக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், திட்டமிடாத லாக்டவுன் என அதலபாதாளத்தில் இந்திய தொழில், விவசாய மற்றும் சேவை துறையை தள்ளிவிட்டு சிக்கனத்தை பற்றி பேசுகிறார். “குப்புற தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்“ தற்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு குறைந்து வருவது ( டாலருக்கு நிகராக 96 ரூபாய் என்ற வீழ்ச்சி ) பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறதுது.

லாக்டவுன் ஆன உழைப்பாளிகள் வாழ்க்கை

அதே நேரத்தில் இந்தியா முழுவதும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 30 சதவீதம் தாக்குபிடிக்க முடியாமல் மூடப்பட்டன. அவர்களை நடுத்தெருவில் மோடி அரசு நிறுத்தியது. இதில் பணிபுரிந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் நாடு முழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலத்தை பார்த்தோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உறங்க இடமில்லாமல் ரயில் தண்டவாளத்தில் உறங்கி ரயில் மோதி பலியான சம்பவங்களையும் பார்த்தோம்.

பெரும் நிறுவனங்களின் லாபத்திற்கு அடிப்படை, அதன் நிர்வாகதிறனே காரணம்  என சொல்லப்படுகிறது. உண்மையில் அது நிர்வாக திறனல்ல, உழைப்பாளி களின் மீதான உழைப்புச் சுரண்டல், ஊழியர்கள், தொழிலாளிகள், உழைப்பாளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் பறித்து மூலதன செலவில் உழைப்பின் பங்கிற்கான நிதி ஆதாரங்களை வெட்டியதே காரணம். போனஸ் குறைப்பு, ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பெரும் பகுதி மாற்றியது, வீட்டிலிருந்து பணி, நிர்வாக செலவினங்களில் கட்டிட வாடகை, போக்குவரத்து செலவு, உணவுக்கூட செலவு, மின்சாரம், பராமரிப்பு செலவினங்கள் அனைத்தும் குறைந்ததும், வங்கிகளில் கடனுக்கான வட்டிகள் நிறுத்தி வைப்பு, வட்டிவிகிதங்கள்  குறைக்கப்பட்டது இந்நிறுவனங்களின் லாபத்திற்கு வழி வகை செய்தது. ஆனால் தொழிலாளர்கள்  வாழ்வில் மண்ணை அள்ளிப்போட்டது.

 மோடியின்  சிக்கனம் யாருக்கு ?

ஒரு தேசத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு சந்தையின் தேவையை பூர்த்தி செய்வது என்பது விலைவாசி உயர்வை கட்டுபடுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவிடும். அதே நேரத்தில் இறக்குமதி அதிகரிக்கும் எனில் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும். இதனை அமலாக்க மக்கள்  நலன்  சார்ந்த முன்னெடுப்புகளே அவசியம். ஆனால் மோடி அரசு கார்ப்பேரட் நலன்  அரசாக இருப்பதால் மக்களுக்கே மீண்டும் மீண்டும் சுமையை  கூட்டுகிறது.

2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பான முக்கிய தரவுகள், மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 மாத மத்திய அரசின் வெளியீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின்  அறிக்கைகளின் படி சில்லறை பணவீக்கம் (Retail Inflation): ஏப்ரல் 2026-ல்,3.48% ஆகப் பதிவாகியுள்ளது. மார்ச் 2026-ல் இது 3.40% ஆக இருந்தது. பணவீக்க விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கான 4% என்ற வரம்பிற்குள்ளேயே உள்ளதாக கூறினாலும், உண்மையில் ஏப்ரல் 2026-ல், கிராமப்புற பணவீக்கம் 4.26% ஆகவும், நகர்ப்புற பணவீக்கம் 4.10% ஆகவும் இருந்தது. இதனால் கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வு சற்று அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு 4.20% (Consumer Food Price Index - CFPI) ஆக இருந்தது.

தற்போது பெட்ரோலிய  பொருட்கள் விலை ரூ 3 முதல் எரிவாயு சிலிண்டர் வீட்டுக்கு ரூ 50ம், வர்த்தக சிலிண்டர் ரூ 993 ம் உயர்த்தப்ட்டுள்ளது. உழைப்பாளிகளின் மீது பெரும் சுமையை ஏற்றி உள்ளது. இத்தருணத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உழைப்பாளிகளுக்கு சம்பள உயர்வு இல்லை என வட இந்தியாவில் தொழிலாளர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். சாமான்ய மக்கள்  அன்றாடம் பயன்படுத்தும் உணவு கூடங்கள், சிறு உணவகங்கள், பேக்கரிகள், சாலையோர கடைகளில் பொருளின் விலை கடுமையாக ஏறியுள்ளது. பொருளின்  அளவு குறைந்துள்ளது. 4 இட்லி சாப்பிட்ட இடத்தில் 3 இட்லியாக மாறியுள்ளது. ஒரு கப் தேநீர் விலை ரூ 20 – ரூ 25  என  பேக்கரிகளில் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கப்பில் தேநீர் அளவு குறைந்துவிட்டது.  வடையின் விலை உயர்வு, அளவு சிறிதாகிவிட்டது.  சிலிண்டர் விலையை காரணம் காட்டி உணவு வகைகளின் எண்ணிக்கை அளவை குறைத்துவிட்டனர். இது உழைப்பாளி மக்களின்  உணவு தேவையினை வெட்டி சுருக்குகிறது.  விலைவாசி உயர்வு உண்டியை சுருக்கிறது. வயிறுகளில் வரிக்கோடுகள் அதிகரிக்கிறது. போக்குவரத்து கட்டணங்கள் கூட்டப்படும் என நிறுவனங்கள், தனியார் வாகன உரிமையாளர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். 

 எரிபொருட்கள் விலையுயர்வு யாரின் நலனுக்காக

எதார்த்ததில் இடதுசாரிகள் ஆதரவோடு  மன்மோகன்  சிங் பிரதமராக இருந்த போது சர்வதேச சந்தையில் 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (Barrel) $147.27 என்ற உச்ச விலையைத் தொட்டது. அதே காலகட்டத்தில் ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $147.50 வரை விற்பனையானது. அன்று இந்தியாவில்  பெட்ரோலின் விலை ரூ 45 முதல் 51 ரூபாயாகவும், டீசல் விலை ரூ 31 முதல் 35 ஆகவும் முக்கிய நகரங்களில் விற்பனை ஆனது.

இது 2017 வரை சர்வதேச சந்தையில் ஏறினாலும் விலையை இந்திய பெட்ரோலிய ஆணையமும், அரசும்  தீர்மானிக்கும் நிலை இருந்தது. 2017ல் பெட்ரோல் ரூ 63-70ம், டீசல் ரூ 53-58 ம் என இருந்த நிலையில்  இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என அறிவித்த பின்னணியில் தினமும் விலை மாறும் முறை  ( Daily Dynamic Pricing)   அறிவிக்கப்பட்டது. இது இந்திய மக்களின் கடும் தாக்கத்தை உருவாக்கியது.

இதன் வெளிப்பாடே இன்று வெனிசுலா நாட்டில் உலக கச்சா எண்ணெய் வளத்தில் 17 சதவீதம் கிடைக்கிறது என்ற நிலையில் அந்நாட்டின் அதிபரை கடத்தி தனது நாட்டின் சிறையில் அடைத்து வைத்து, அந்நாட்டின் எண்ணெய் கிணறுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் உலகின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ரூ 27 லட்சம் கோடி செலவில் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுவும் என டிரம்ப் அறிவிக்கிறார். இதற்கான பணம் இந்திய வங்கிகளில் இருந்தே சூறையாடப்படும். அதுதான் கடந்த கால வரலாறு. இந்த கார்ப்ரேட்களின் நலனுக்காக இந்திய மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை எதிர்த்துதான் இடதுசாரிகள் போராடி வருகிறார்கள். இந்த உண்மையை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பேசாத ஊடங்கங்கள் உண்மையை பேச வேண்டும்.  சமூக வலைதளவாசிகள் இந்த உண்மையை உரசி பார்க்க வேண்டும்.

 செ.முத்துக்கண்ணன்.

thanks to theekkathir daily 2026 may 17