”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சோசலிசம் அல்லது வீரமரணம்

  கடைசித் துளி  இரத்தமும் 

இரண்டு மணி நேரம் மின்வெட்டு, ஐயோ என்ன அரசு? இது மின்வெட்டு அரசா ? என கடுமையாக பேசுகிறோம். ஆனால் ஒரு தேசத்தின் மின் உற்பத்தியை முடக்கி, மின்சாரம் இல்லாமல் நாள்கணக்கில் மக்களை இருட்டில் வைத்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். 

ஆம், அதன் கொடூரமான பொருளாதார தடை, கியுப வர்த்தகத்தை முடக்கியது, இராணுவத்தை கொண்டு  அச்சுறுத்துவது, இதர நாடுகளின் உடனான அரசியல், சமூக, கலாச்சார தொடர்புகளுக்கு  தடை என்றும், தனக்கு கீழ்படிய வேண்டும் என்று 1959 முதல் 2026 வரை அமெரிக்க கழுகுகளால்  நார் நாராய் கியூப மக்களின் வாழ்க்கை கிழித்துப் போடப்பட்டு கொண்டே வந்தது. சோசலிச நாடுகள் உள்ளிட்டு இதர நாடுகளின்  உதவியுடன் ஐநா சபையிலும், சர்வதேச அளவிலும் தொடர் உதவிகளை பெற்று இதுவரை சமாளித்த கியூபா. அமெரிக்க பொருளாதார தடையால் தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 

கடைசி  கியூபா குடிமகனும், கடைசி சொட்டு இரத்தமும் இருக்கும் வரை போராடுவோம், ஒருபோதும்  சரணடைய மாட்டோம் " என  சிம்ம கர்ஜனையாய் கியூபா அறிவித்து போராடி வருகிறது. இந்த நிலையில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாய்  மாறிப்போன தோழர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி கியூபா ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையை ஜூன் 14 அன்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. 

 தீ பற்றவை மக்கள்  நெருப்பென எழுவார்கள் 

1929 ஜூன் 14ல் பிறந்த சேகுவேரா இரண்டறை வயதிலேயே ஆஸ்துமா நோய்க்கு ஆட்பட்டு தனது இறுதி நாட்கள் வரை அத்தோடு போராடியவர். பள்ளி  பருவம் தொட்டு இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டாக தன்னை செதுக்கிக் கொண்டவர். பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயுதம்  ஏந்தி ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்காக போராடியவர். 

”தீ பற்றவை மக்கள் நெருப்பான எழுவார்கள்” என்ற சேவின்  முழக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதிரொலித்துக் கொண்டு  இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் காட்டுமிராண்டிதனமான கொள்ளை லாப வேட்டைக்கு எதிராக இன்றும் கியூபாவில் மக்கள்  லட்சக்கணக்கில் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள். ஏனென்றால், அவர்களின் இதயங்களில் தாங்கி நிற்கும் மகத்தான சோசலிச உணர்வு.. தத்துவத்தின் பின்னால் நிற்கிறார்கள். மரணத்தை கண்டு அச்சமில்லையென லட்சம் சேகுவேராக்களாய் களத்தில் போராடுகிறார்கள். சே புரட்சியின் அடையாளமாக மாறிவிடக்கூடாது என ஏகாதிபத்தியத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய உலகில் நிலைமை வேறுவிதமாக மாறியுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பின்  அடையாளமாக மாறியுள்ளார். 

 அச்சுறுத்தும் ஏகாதிபத்திய கழுகு 

அனைத்து வளங்களையும் கைப்பற்றும் நோக்கோடு, கியூபாவை கைப்பற்றுவோம், அதற்காக அமெரிக்க நாசகாரி போர் கப்பல் நிமிட்ஸ் கரிபீயன் கடலில் நிறுத்தியுள்ளது. மேலும் ஆப்ரகாம்  லிங்கனை அனுப்பி வைப்போம் என மிரட்டுகிறது. பொருளாதார தடைகளை தேசத்தின்  மீது மட்டுமல்ல தனிநபரின்  மீதும்  போடுவோம் என அமெரிக்கா தாக்குதலை துவங்கியுள்ளது. இராணுவத்தை பயன்படுத்துவோம். ட்ரோன்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை இறையாண்மை மிக்க கியூப எல்லைக்குள் அனுப்பி அச்சுறுத்த அத்துமீறுகிறது. 

ஏற்கனவே நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஈரானின் தலைவர் கொமேனியை கொன்றது. வெனிசூலாவில் அதிபர் நிக்லோஸ் மதுராவை நள்ளிரவில் ராணுவ நடவடிக்கை மூலம்  தாக்கி கடத்தி சென்று தனது அமெரிக்க  சிறையில் அடைத்து வைத்துள்ளது. தற்போது  கியூபாவின்  முன்னால் அதிபர் ராவுல் காஸ்ட்ரோ மீது 30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்சனையை குற்றசாட்டாக்கி, குற்றவாளி என அறிவித்து கைது செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்காக எத்தகைய ராணுவ நடவடிக்கையை எடுப்போம் என டிரம்ப் மிரட்டுகிறார். 

இதன் பகுதியாக கடந்த மே 1 ஆம் தேதி கியூப நிறுவனங்களோடு, வணிகம் செய்யும் எந்தவொரு அயல்நாட்டு நிறுவனங்களின் மீது கட்டாய இரண்டாம் நிலை பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்கள். இது இறையாண்மை மிக்க நாடுகளின் மீது நோடியான தாக்குதலாகும்.  கச்சா எண்ணெய், மின்உற்பத்திக்கான சூரிய சக்தி தகடுகள், மனிதாபிமான முறையிலான உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் இதர நாடுகளில் இருந்து கியூபா பெறுவதையும் தடைசெய்கிறது. உதவிடும் நாடுகளின் மீது பொருளாதாரத்தடை என மிரட்டுகிறது. அமெரிக்காவின்  இந்த செயலை சீனா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்டு பல நாடுகள் கண்டனத்தை தெரிவித்ததோடு அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. ஆனால் இந்திய அரசும் நீண்டநாள் இந்திய பிரதமரும் மவுனம் காப்பது இந்திய நடுநிலைக் கொள்கைக்கு எதிரானது.  

 ரௌத்திரம் பழகும் கியூபா 

சுமார் 1.25 கோடி மக்களை கொண்டுள்ள நாடான கியூபா 1959 முதல் கடும் பொருளாதார தடையையும், அமெரிக்க  அரசின் கொலைபாதக செயலை எதிர்த்து நின்றும் போராடுகிறது. உலகின் கல்வித்தரத்திற்கும் குறிப்பாக  மருத்துவ கல்விக்கும், சர்க்கரை உற்பத்தியிலும், உலக ஒலிம்பிக்கில் குத்துச்சடையிலும்  சாம்பியன்களாக வளம் வருபவர்கள் கியூப தேசத்தினர். இன்றும் உலகின் அனைவருக்குமான மருத்துவம் என்பதில்  படிநிலையில் அமெரிக்கா உள்ளிட்டு அனைத்து நாடுகளையும்  பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ள நாடு கியூபா. புற்றுநோயுக்கான மருத்துவத்தில் இரண்டாம் கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அறிவித்து உள்ளது. 

அத்தகைய கியூபாவில் இன்று கடும் மருந்து பொருட்கள், உணவு பண்டங்கள், எரிபொருட்கள், எரிசாதனங்கள் கடும் தட்டுப்பாடாய் உள்ளது. காரணம் அமெரிக்கா வின் அத்துமிறிய அராஜகமே. நாளொன்றுக்கு 3100 மெ.வாட் தேவை என்ற  நிலையில் 1800-1900 மெ.வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நாளின் பெரும் பகுதி நேரம்  மின் தட்டுப்பாடும், மின்வெட்டுமென கடும் நெருக்கடியை கியூபர்கள் மீது திணிக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா தடைசெய்த காரணத்தினால் மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து உள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனம் குபெட் பல பத்தாண்டுகளாக எந்த மூதலிடும் செய்யப்பட்டாமல் பாதிக்கப்பட்டுள்ளது. 

1960 முதல் 1980 வரை சோவியத், ஜப்பான் நாடுகளின் உதவியால் கட்டப்பட்ட அனல் மின்நிலையங்கள் முடங்கி போயுள்ளன. மேலும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டதும், குடிநீர் பற்றாகுறையும் மக்களை கடும் பாதிப்புக்குள்ளகியுள்ளது. மறுபுறம் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. அதிகளவில் ரேசன் முறை மூலமே மானிய விலையில் உணவுப்பொருட்கள்  விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இருப்பு இல்லாத சூழலில் கடும் வறுமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நாளின் மிக குறைவான தேவையை பூர்த்தி செய்வதாகவே நிலைமை உள்ளது. 

உலகில் 1000 மக்களுக்கு 8.5 மருத்துவர்கள் கொண்ட தேசமாக கியூபாதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 5 மருத்துவர்களை கொண்டுள்ளது. இச்சூழலில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போதியளவு இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சை வாரக்கணக்கில் தள்ளி போகும் கடும் நிலைமைகளை உருவாக்கியுள்ளது. 

கியூப பொருளாதாரம் 1959 புரட்சிக்கு பிந்தைய காலத்தை விட கடும் நெருக்கடியில் உள்ளது. ஏகாதிபத்தியங்களின் புவிசார் அரசியல் அழுத்தங்களும் கியூபாவை நெருக்கி வருகிறது. கியூபாவின் அதிக லாபம் ஈட்டும் துறைகளான சுற்றுலாத் துறையான கவியோட்டா, நிதி பராமரிப்பு துறையான சிமெக்ஸ் மற்றும் ஃபின்சிமெக்ஸ் போன்றவையும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. 50 சதவீதம் வரை சுற்றுலா துறை வருவாய் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசின் வருவாய் பெருக்கத்திற்கு வேறு உதவிகள் இல்லாத நிலையில் இந்த துறைகளிலேயே மறு முதலீடு நடைபெறுவதால், பொது உள்கட்டமைப்புகள், மருத்துவமனைகள், உணவு விநியோகத்தில்  மூதலிடுகளை அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க  இரண்டாம் கட்ட பொருளாதார தடை காரணமாக வெளிமூதலிடுகள் வேகமாக கியூபாவை விட்டு வெளியேறி வருகிறது. மேலும் நிதிச் சேவைகள், கனிமங்கள் மற்றும் சுரங்கம் போன்றவற்றிலும், பாதுகாப்பு காவல் ஆகியவற்றினை முடக்கும் நிலையை மே 7 ஆம் தேதி அமெரிக்க அரசின் உத்தரவு அமல்படுத்துவதோடு குறிப்பாக கியூபாவின் மாபெரும் இராணுவ கூட்டமைப்பான GAESA மீது அதிகாரபூர்வமாக இலக்கு வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

தன்னார்வ உழைப்பு

இந்த சூழலில் தான் பிடலும், சேவும், ராவுலும்  கட்டியெழுப்பிய மார்க்சிய லெனினிய  அம்சங்களின் அடிப்படையை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் போராடி வருகிறார்கள் கியூப மக்கள்.  சோசலிசத்தை கட்டமைப்பதில் தன்னார்வ உழைப்பை முக்கிய அம்சமாக  சே முன்வைத்தார். சோசலிச உணர்வையும், கூட்டுப் பொறுப்புணர்வையும் வளர்க்க அது உதவும் என நம்பினார். சோசலிசத்தை கட்டமைப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.  அது லாபத்தை விட சமூக தேவைகளால் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

வறிய மனிதனின்  நிலையை கண்டு இரக்கம் கொள்வதல்ல, தேவை நிலைமையை மாற்றுவது. அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது.  பகுதியிலிருந்து முழுமை பார்ப்பது என்ற இயக்கவியல் அடிப்படையில் சர்வதேச உணர்வோடு முழு உலகையும் மாற்றியமைப்பதை பற்றிய கனவே அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவில் புரட்சி செய்து காங்கோ, பெரு, பொலிவியா விடுதலை என பயணித்தவர். ஏகாதிபத்தியத்தின் பிடறியை அதன் குகைக்குள் ( நியூயார்க்கில் உள்ள ஐநா. சபையில் ) உலுக்கி எடுத்தவர். அதனால் தான் ”அவர்கள் நினைத்தது போலின்றி நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்-சே” என்ற முழக்கம் பல்வேறு நகரங்களின் தெருக்களில் எதிரொலிக்கிறது. டில்லியின் ஜந்தர்மந்தர் வீதியில் கரப்பான்  பூச்சிகளின் போராட்டத்தில் உயர்ந்து நின்றது. எனவே கியூபாவை பாதுகாப்போம், உடன் சேர்ந்து நிற்போம். அமெரிக்க கழுதைப்புலியை அதன் மண்ணிலேயே வீழ்த்துவோம் – தோழன்  சே பெயரால் சபதமேற்போம். ஏகாதிபத்தியம் ஓழியட்டும் – சோசலிசம் வெல்லட்டும். 

செ.முத்துக்கண்ணன்

நன்றி - தீக்கதிர் நாளிதழ், ஜூன் 14, 2026



No comments:

Post a Comment