”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

இலக்கியத்திற்கு ஏது எல்லை ?



கடைசி மரமும் வெட்டுண்டு
கடைசி நதியும் விஷமேறிக்
கடைசி மீனும் பிடிபட
அப்போதுதான் உறைக்கும்
நாம்
பணத்தை சாப்பிட முடியாது என்பது
- செவ்விந்தியப் பாடல்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.


இந்தியாவின் 12 வது ஐந்தாண்டுத் திட்டம் குறித்த திட்டமிடலுக்கான திட்டக்குழுவின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. அதில் 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து அறிக்கையை முன்மொழிந்து விவாதித்தனர். நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 8.2 சதம் அடைந்தது. இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 60 சதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மை சார்ந்த துறைகளில் இருந்தே தங்களது வருமானத்தை பெறுகின்றனர். 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வருடத்திற்கு வேளாண் துறையின் பங்கு 2 சதமாகவே வளர்ச்சி பெற்றது என்பது இந்தியாவின் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நெருக்கடியை மிகத் தெளிவாக காட்டுகிறது.

1990களுக்கு பின் மிக வேகமாக அமுலாக்கப்பட்ட உலகமய கொள்கையின் விளைவு இந்திய விவசாயத்தை மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால்தான் கடந்த இரு பத்தாண்டு களாகவே விவசாயத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் மிக வேகமாக குறைந்து வருகிறது. இயந்திரங்களை பயன்படுத்தி மனித உழைப்புத்திறனை குறைக்கிறோம், உற்பத்தித்திறனை அதிகரிக்கிறோம் என முழங்கிடும் ஆட்சியாளர்களின் கொள்கைகள் காரணமாக கிராமப்புறங்களை விட்டு கணிசமான விவசாயத் தொழிலாளிகளும், விவசாயிகளும் வெளியேறி வருவதை நாம் கண்முன்னே பார்த்து வருகிறோம். தமிழகத்திலும் டெல்டா மாவட்டப்பகுதிகள் ஒரு காலத்தில் மாடுகட்டி போராடித்தால் மாளாது செந்நெல்லென்று. ஆனை கட்டி போராடிக்கும் சோழவள நாடு புலவர்களால் பாடி புகழப்பட்ட பகுதி.. இன்று தங்களது சொந்த மண்னை விட்டு உறவுகளை விட்டு வாழ்க்கையின் மிச்ச சொச்சங்களுக்காக வருமானத்தையும், வாழ்க்கையையும் தேடி வெளியே சென்று கொண்டே இருக்கின்றனர்.
விவசாயம் சார்ந்த வேலைகளில் இருந்த வேளாண் மக்கள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவிற்குள் மூன்று கோடி பேர் தங்களது பூர்வீகங்களைவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர். விவசாயி என்ற தங்களது பண்பாட்டு அடையாளத்தை இழந்து கோவணமும் உருவப்பட்டவர்களாக நடுவீதியில் நிறுத்தப்பட்ட அவமானங்களை தாங்க முடியாத அந்த விவசாயிகள் 12 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரின் சொந்தமாநிலமான மகாராஷ்டிராவில் தான் அதிக தற்கொலை சாவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் வர்க்கத்தின் லாப வெறி சுரண்டல் காரணமாகவே இந்த தற்கொலை சாவுகள் துhண்டப்பட்டன. ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.
இந்திய விவசாயிகள் பெரும்பகுதியினர் வேளாண்மைக்கு என தங்களது வீடுகளில் உள்ள பொருட்கள், நிலப்பத்திரங்கள் உள்ளிடவைகளை அடமானங்களாக வைத்து கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் கடன் பெறுகின்றனர். விவசாய உற்பத்தியை பொறுத்து இதில் இருந்து மீள்கின்றனர். இன்று மாண்சாண்டோ போன்ற நிறுவனங்கள் நேரடியாக விதைள், பூச்சிக்கொல்லிமருந்துகள், உரங்கள், உழவடை கருவிகளை கடன் மூலம் கொடுத்துவிட்டு அறுவடை நேரத்தில் நேரடியாக களத்து மேட்டிலேயே கந்துவட்டிக்காரர்களாக உற்பத்திசெய்த தானியங்களை அள்ளி செல்பவர்களாக உள்ளனர். பல தருணங்களில் இயற்கை பொய்த்துபோவதும், இயற்கை சீற்றங்களின் காரணமாக விவசாயம் பாதிக்கும் போது மேலும் கடன்தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கௌரவான வாழ்க்கையை தொலைத்த அவலத்தில் இன்று தற்கொலையை நோக்கி செல்கின்றனர். 1999 ஆண்டை ஒப்பிடும் போது 2009ல் 15 சதம் விவசாயிகள் தற்கொலைசாவுகள் அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டில் 28 மாநிலங்களில் 18 மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை சாவுகள் நிகழ்ந்துள்ளதாக மத்திய குற்ற பதிவு ஆவணத்துறை தெரிவிக்கிறது.
இந்திய கார்ப்ரேட்நிறுவனங்கள் மட்டுமல்லாது அந்நிய நிறுவனங்களையும் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்புவிடுத்து மேலும் இந்திய விவசாயிகளை தாதுபஞ்ச வருசத்தின் அழிவுகளை நோக்கி தள்ளிவிடும் முயற்சியை ஆளும் அரசுகள் மேற்கொண்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் நிலத்தின் மீதான உரிமையை கொடுத்து நிலத்தையே தங்களது வாழ்க்கையாக கொண்ட மேற்குவங்க விவசாயிகள் தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இந்த 2012 ஜனவரியில் மட்டும் இதுவரை 24 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் இனி நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும். அதற்கான அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். இந்தியாவின் சட்டதிட்டங்களை திருத்த வேண்டும் என தொடர்ந்து மிரட்டிக் கொண்டு இருக்கின்றன. இதனால் அரசுக்கான பங்கு குறையும், விவசாயிகளின் கொள்முதல் குறித்த பேரம் பேசும் உரிமை படிப்படியாக குறைக்கப்படும் என்று அர்த்தம்.
வாழ்வியல் நெருக்கடியை உருவாக்கியது விவசாயி அல்ல. ஆளும் வர்க்கத்தின் மூலதன குவியலின் லாபவெறி தத்துவமே.. விவசாயிகளின் வாழ்க்கையை பகடையாக்கி ஆழி பேரலையில் ஏற்பட்ட அழிவை விட கொடுமையான அழிவாக இந்த தற்கொலை சாவுகள் உள்ளது. இவ்வளவிற்கும் பிறகு பசுமைபுரட்சி பற்றி வாய்கிழிய பேசும் இந்திய ஆளும் வர்க்கம் வேளாண் மக்களை பாதுகாக்க உருப்படியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. சமீபத்தில் கூட உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவின் திட்டக்குழு கிராமப்புற வறுமைக்கோடு குறித்து சொன்னது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாளொன்றுக்கு 29 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் எனச் சொல்லி தனது வர்க்கநலனை வெளிப்படுத்தியது. இவர்களுக்கு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் எந்த பொருட்களும் சலுகை விலையில் வழங்கப்பட மாட்டாது என சொல்வது, டெண்டுல்கர் கமிட்டி அறிக்கைப்படி 84 கோடிபேர் 20ரூபாய் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்றால் அவர்களின் எதிர்காலம் என்னாவது? ஆட்சியாளர்கள் யோசிப்பார்களா?
கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் கோடிகளை வரிசலுகைகளாக கொட்டிக் கொடுக்கும் இந்திய ஆட்சியாளர்கள் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள், உரங்கள், விதைகளுக்கான மானியங்கள், கொள்முதல் விலையை உயர்த்துவது என்றால் வேப்பங்காயாக கசக்கிறது. உடன் ஊரில் உள்ள பொருளாதார புண்ணியவான்கள் அனைவரும் ஒன்றும் சேர்ந்து இந்திய பொருளாதாரம் என்ன ஆவது,, மானியமா கூடவே கூடாது என ஒப்பாரி வைப்பதும், இந்தியாவின் அறிவுஜீவி பிரதமரும், திட்டகமிஷன் துணைத்தலைவரும், நிதி அமைச்சரும், வேளாண் அமைச்சரும் அதற்கு ஆமாம் சாமி போடுபவர்களாக அதே பல்லவியை திரும்ப பாடுகிறார்கள்..இந்த லட்சணத்தில் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் உற்பத்தி விகிதத்தை இரட்டிபாக்குவோம் என எரியும் குளத்தண்ணீரை வைக்கோல் போர் கொண்டு அணைத்தோம் என கிராமப் பழமொழியை பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்தியாவில் கொள்முதல் செய்யும் தானியங்களை பாதுகாக்க குடோன்கள் 95சதம் 4885 / 5381(மொத்த குடோன்) தனியார்கள் வசமே உள்ளது. அரசு மற்றும் கூட்டுறவு துறை மூலம் 496 மட்டுமே உள்ளது. இதே குடோன்கள் அமெரிக்காவில் 76 சதம் அரசு, கூட்டுறவு மற்றும் தனியார் கூட்டுத்துறை மூலமும் 24 சதம் மட்டுமே தனியார் பங்கேற்பாகவும் உள்ளது. ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா அரசு துறையில் தானிய கொள்முதல்களை வைத்துக் கொண்டு இந்திய போன்ற நாடுகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்பதை சொன்னால் அடி முட்டாளாக அதை ஏற்கும் தாசர்களாக இந்திய ஆளும் வர்க்கம் உள்ளது. இந்தியாவில் விவசாய உற்பத்தி திறன் என்பது ஏறத்தாழ 230 மில்லியன் டன்களாகும். ஆனால் 50 மில்லியன் டன்களே பாதுகாக்க குடோன்வசதி உள்ளது. ஆனால் அருகாமையில் உள்ள சீனாவில் 500 மில்லியன் டன் ஆண்டு உற்பத்தி திறன், 390 மில்லியன் டன் பாதுகாக்க வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒன்றே இந்திய ஆளும் வர்க்கம் யாருடைய நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தும்.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருத்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கார்கில் ஏடிஎம், பங்கி, பொட்டாஷ் கார்ப்ரேஷன், மொசைக் போன்ற நிறுவனங்களின் லாப விகிதம் என்பது நுhறு சதத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 2008ல் மொசைக் நிறுவனத்தின் லாப விகிதம் 1800 சதத்தை தொட்டது 2011 ல் 2.2 பில்லியன் டாலர் வருமானத்தை அடைந்தது. அதேபோல் மாண்சாண்டோ, டூபாண்ட், சைன்ஜெண்டா நிறுவனங்களின் லாப விகிதமும் இந்திய விவசாயிகளின் இரத்தத்தையும், உயிரையும் உறிஞ்சி அதிகரித்துக் கொண்டது.
இந்திய அரசின் விவசாயம் சார்ந்த கொள்கைகளில் குறிப்பாக ஏற்றுமதி செய்யும் கோதுமைக்கு 5.45 ரூபாய் கிலோவிற்கு தீர்மானிக்கும், ஏழைகளுக்கு பொதுவிநியோகத்தில் அளிக்கும் கோதுமைக்கு ரூ 6.15 ரூபாய் என விலை நிர்ணயம் தீர்மானிக்கிறது. இதில் எங்கே விவசாய பாதுகாப்பு, விவசாயி நலன் இருக்கிறது. அதே சமயம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலை என்பது மிகக் குறைவாகவே உள்ளது. விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் நித்தம் நித்தம் நடத்தும் நாடகங்களை பார்த்து புளித்துபோன விவசாய குடும்பங்களின் இளம் தலைமுறை அதன் மீது அதிருப்தி கொண்டு இன்று நகரங்களை நோக்கி செல்லும் நிலையே உள்ளது. விவசாயத் தொழிலாளிகளும் இடம் பெயர்கின்றனர். இப்படி செல்லும் பெரும் பகுதி மக்களின் உழைப்பு சந்தை என்பது அணிதிரட்டப்படாமல் எந்தவிதமான சமூக பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளது.
306 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் விவசாயத்திற்கு என்று 142.60 மில்லியன் நிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. மற்றவை வனங்களாகவும், தரிசு நிலங்களாகவும், நீர்பிடிப்பு பகுதிகளாகவும் உள்ளது. இவற்றில் 66 சதம் உணவுக்கான பயிர்வகைகளும், 34 சதம் வணிகப்பயிர்களும் பயிரிடப்படுகின்றன. ஏறத்தாழ 52 சதம் பேர் நேரடியாக விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் குறிப்பாக ஆ°திரேலியாவில் ஒரு ஹெக்டேரில் 10.8 டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 2.2 டன் மட்டுமே. நெதர்லாந்தில் ஒரு ஹெக்டேரில் 8.9 டன் கோதுமை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் 2.9 டன் மட்டுமே உற்பத்தியாகிறது எனில் வளர்ந்த நாடுகளில் எல்லாம் விவசாயத்திற்கான மானியம், கொள்முதல்விலை கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் மானியமும் குறைவு, கொள்முதல்விலையும் குறைவு, உழவு மற்றும் இடுப்பொருட்களுக்கான செலவு அதிகம். மேலும் நிலத்தின் மீதான உரிமை மிக சொற்பமாகவே இந்தியாவில் உள்ளது. தமிழகத்தில் கூட கொள்முதல் செய்யும் இடங்களில் விலைநிர்ணயிப்பதில் பிரச்சனை, கொள்முதல் செய்யும்போது மாதிரி அளவைக்கு எடுக்கும் நெல் அளவு 50 சிப்பத்திற்கு 2 கிலோ நெல் என்றால் 10கிலோ வரை எடுக்கும் நிலையும் உள்ளது. பரவலாக கொள்முதல் நிலையங்கள் திறந்து கொள்முதல் செய்வதற்கு பதில் குறைவான இடங்களில் என்கிறபோது ஊழலுக்கும், மோசடிக்குமான வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது.
இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம், ஆந்திர பிரதேசம், பீகார், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் அதிகளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. 1980 கணக்குப்படி 50 சதம் பேர் ஒரு ஹெக்டேரும், குறைவானவர்களாகவே உள்ளனர். 19 சதம் பேர் 1 முதல் 2 ஹெக்டேரும், 16 சதம் பேர் 2 முதல் 4 ஹெக்டேரும், 11 சதம் பேர் 4 முதல் 10 ஹெக்டேரும், 4 சதம் பேர் மட்டுமே 10 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்துள்ளனர். (ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர் ஆகும்). இந்தியாவில் பெரும் பகுதி விவசாயிகள் 2 ஏக்கருக்கும் குறைவான நிலங்களை உடையவர்களாகவே உள்ளநிலையில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான விலை நிர்ணயம் குறித்து மறு ஆய்வும், சீரமைப்பும் நிச்சயம் தேவை. எனவே ஆளும் ஆட்சியாளர்கள் இந்தியா விவசாய நாடு என்ற அடிப்படையில் விவசாயக் கொள்கைகளில் மாற்றம் காணவேண்டும். தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதை மேற்குவங்க இடது சாரி ஆட்சியாளர்களின் காலத்தில் நடைபெற்றதை போல் நில உச்சவரம்பு சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி செய்திடுவதும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் பன்னாட்டு மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான விளைநிலங்களை கொடுப்பதை நிறுத்துவதும், கிராமப்புற வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதும், உற்பத்தியாகும் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்துவதும், கிராமப்புற வாங்கும் சக்தியை பெருக்குவதும் உள்ளிட்ட கிராமப்புற பொருளாதாரத்தை பலப்படுத்தும் அனைத்து வித நடவடிக்கைகளை மேற்கொள்வதுமே இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க உதவிடும்.
தமிழ்குடியை பெருமையாக பேசும் மத்திய மாநில ஆட்சியில் உள்ள திராவிட இயக்கத்தினர் 2000 ஆண்டுகளுக்கு முன் குறுக தறித்து சொன்ன வள்ளுவனின் வார்த்தைகளில் சொன்னால்,
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு என்றானே..
இதை ஆளும் வர்க்க உணர மறுத்தால்.. இளைய இந்தியா, எதிர்கால இந்தியாவான இளைஞர் பட்டாளம் முன்னெடுக்க வேண்டியது
காடு வெட்டி மலையுடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்..
கவலையற்ற போகவாழ்வை அனைவருக்கும் உண்டாக்குவோம்..
என தொழிலாளர்களின் சர்வதேச முழக்கத்தை விவசாயிகளுக்காகவும் முழங்குவோம்.