”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சோசலிசம் அல்லது வீரமரணம்

  கடைசித் துளி  இரத்தமும் 

இரண்டு மணி நேரம் மின்வெட்டு, ஐயோ என்ன அரசு? இது மின்வெட்டு அரசா ? என கடுமையாக பேசுகிறோம். ஆனால் ஒரு தேசத்தின் மின் உற்பத்தியை முடக்கி, மின்சாரம் இல்லாமல் நாள்கணக்கில் மக்களை இருட்டில் வைத்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். 

ஆம், அதன் கொடூரமான பொருளாதார தடை, கியுப வர்த்தகத்தை முடக்கியது, இராணுவத்தை கொண்டு  அச்சுறுத்துவது, இதர நாடுகளின் உடனான அரசியல், சமூக, கலாச்சார தொடர்புகளுக்கு  தடை என்றும், தனக்கு கீழ்படிய வேண்டும் என்று 1959 முதல் 2026 வரை அமெரிக்க கழுகுகளால்  நார் நாராய் கியூப மக்களின் வாழ்க்கை கிழித்துப் போடப்பட்டு கொண்டே வந்தது. சோசலிச நாடுகள் உள்ளிட்டு இதர நாடுகளின்  உதவியுடன் ஐநா சபையிலும், சர்வதேச அளவிலும் தொடர் உதவிகளை பெற்று இதுவரை சமாளித்த கியூபா. அமெரிக்க பொருளாதார தடையால் தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 

கடைசி  கியூபா குடிமகனும், கடைசி சொட்டு இரத்தமும் இருக்கும் வரை போராடுவோம், ஒருபோதும்  சரணடைய மாட்டோம் " என  சிம்ம கர்ஜனையாய் கியூபா அறிவித்து போராடி வருகிறது. இந்த நிலையில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாய்  மாறிப்போன தோழர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி கியூபா ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையை ஜூன் 14 அன்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. 

 தீ பற்றவை மக்கள்  நெருப்பென எழுவார்கள் 

1929 ஜூன் 14ல் பிறந்த சேகுவேரா இரண்டறை வயதிலேயே ஆஸ்துமா நோய்க்கு ஆட்பட்டு தனது இறுதி நாட்கள் வரை அத்தோடு போராடியவர். பள்ளி  பருவம் தொட்டு இடதுசாரி கருத்துகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டாக தன்னை செதுக்கிக் கொண்டவர். பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயுதம்  ஏந்தி ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்காக போராடியவர். 

”தீ பற்றவை மக்கள் நெருப்பான எழுவார்கள்” என்ற சேவின்  முழக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதிரொலித்துக் கொண்டு  இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் காட்டுமிராண்டிதனமான கொள்ளை லாப வேட்டைக்கு எதிராக இன்றும் கியூபாவில் மக்கள்  லட்சக்கணக்கில் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள். ஏனென்றால், அவர்களின் இதயங்களில் தாங்கி நிற்கும் மகத்தான சோசலிச உணர்வு.. தத்துவத்தின் பின்னால் நிற்கிறார்கள். மரணத்தை கண்டு அச்சமில்லையென லட்சம் சேகுவேராக்களாய் களத்தில் போராடுகிறார்கள். சே புரட்சியின் அடையாளமாக மாறிவிடக்கூடாது என ஏகாதிபத்தியத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய உலகில் நிலைமை வேறுவிதமாக மாறியுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பின்  அடையாளமாக மாறியுள்ளார். 

 அச்சுறுத்தும் ஏகாதிபத்திய கழுகு 

அனைத்து வளங்களையும் கைப்பற்றும் நோக்கோடு, கியூபாவை கைப்பற்றுவோம், அதற்காக அமெரிக்க நாசகாரி போர் கப்பல் நிமிட்ஸ் கரிபீயன் கடலில் நிறுத்தியுள்ளது. மேலும் ஆப்ரகாம்  லிங்கனை அனுப்பி வைப்போம் என மிரட்டுகிறது. பொருளாதார தடைகளை தேசத்தின்  மீது மட்டுமல்ல தனிநபரின்  மீதும்  போடுவோம் என அமெரிக்கா தாக்குதலை துவங்கியுள்ளது. இராணுவத்தை பயன்படுத்துவோம். ட்ரோன்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை இறையாண்மை மிக்க கியூப எல்லைக்குள் அனுப்பி அச்சுறுத்த அத்துமீறுகிறது. 

ஏற்கனவே நவீன அறிவியல் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஈரானின் தலைவர் கொமேனியை கொன்றது. வெனிசூலாவில் அதிபர் நிக்லோஸ் மதுராவை நள்ளிரவில் ராணுவ நடவடிக்கை மூலம்  தாக்கி கடத்தி சென்று தனது அமெரிக்க  சிறையில் அடைத்து வைத்துள்ளது. தற்போது  கியூபாவின்  முன்னால் அதிபர் ராவுல் காஸ்ட்ரோ மீது 30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்சனையை குற்றசாட்டாக்கி, குற்றவாளி என அறிவித்து கைது செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்காக எத்தகைய ராணுவ நடவடிக்கையை எடுப்போம் என டிரம்ப் மிரட்டுகிறார். 

இதன் பகுதியாக கடந்த மே 1 ஆம் தேதி கியூப நிறுவனங்களோடு, வணிகம் செய்யும் எந்தவொரு அயல்நாட்டு நிறுவனங்களின் மீது கட்டாய இரண்டாம் நிலை பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்கள். இது இறையாண்மை மிக்க நாடுகளின் மீது நோடியான தாக்குதலாகும்.  கச்சா எண்ணெய், மின்உற்பத்திக்கான சூரிய சக்தி தகடுகள், மனிதாபிமான முறையிலான உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் இதர நாடுகளில் இருந்து கியூபா பெறுவதையும் தடைசெய்கிறது. உதவிடும் நாடுகளின் மீது பொருளாதாரத்தடை என மிரட்டுகிறது. அமெரிக்காவின்  இந்த செயலை சீனா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்டு பல நாடுகள் கண்டனத்தை தெரிவித்ததோடு அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. ஆனால் இந்திய அரசும் நீண்டநாள் இந்திய பிரதமரும் மவுனம் காப்பது இந்திய நடுநிலைக் கொள்கைக்கு எதிரானது.  

 ரௌத்திரம் பழகும் கியூபா 

சுமார் 1.25 கோடி மக்களை கொண்டுள்ள நாடான கியூபா 1959 முதல் கடும் பொருளாதார தடையையும், அமெரிக்க  அரசின் கொலைபாதக செயலை எதிர்த்து நின்றும் போராடுகிறது. உலகின் கல்வித்தரத்திற்கும் குறிப்பாக  மருத்துவ கல்விக்கும், சர்க்கரை உற்பத்தியிலும், உலக ஒலிம்பிக்கில் குத்துச்சடையிலும்  சாம்பியன்களாக வளம் வருபவர்கள் கியூப தேசத்தினர். இன்றும் உலகின் அனைவருக்குமான மருத்துவம் என்பதில்  படிநிலையில் அமெரிக்கா உள்ளிட்டு அனைத்து நாடுகளையும்  பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ள நாடு கியூபா. புற்றுநோயுக்கான மருத்துவத்தில் இரண்டாம் கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக அறிவித்து உள்ளது. 

அத்தகைய கியூபாவில் இன்று கடும் மருந்து பொருட்கள், உணவு பண்டங்கள், எரிபொருட்கள், எரிசாதனங்கள் கடும் தட்டுப்பாடாய் உள்ளது. காரணம் அமெரிக்கா வின் அத்துமிறிய அராஜகமே. நாளொன்றுக்கு 3100 மெ.வாட் தேவை என்ற  நிலையில் 1800-1900 மெ.வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நாளின் பெரும் பகுதி நேரம்  மின் தட்டுப்பாடும், மின்வெட்டுமென கடும் நெருக்கடியை கியூபர்கள் மீது திணிக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா தடைசெய்த காரணத்தினால் மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து உள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனம் குபெட் பல பத்தாண்டுகளாக எந்த மூதலிடும் செய்யப்பட்டாமல் பாதிக்கப்பட்டுள்ளது. 

1960 முதல் 1980 வரை சோவியத், ஜப்பான் நாடுகளின் உதவியால் கட்டப்பட்ட அனல் மின்நிலையங்கள் முடங்கி போயுள்ளன. மேலும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டதும், குடிநீர் பற்றாகுறையும் மக்களை கடும் பாதிப்புக்குள்ளகியுள்ளது. மறுபுறம் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. அதிகளவில் ரேசன் முறை மூலமே மானிய விலையில் உணவுப்பொருட்கள்  விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இருப்பு இல்லாத சூழலில் கடும் வறுமையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நாளின் மிக குறைவான தேவையை பூர்த்தி செய்வதாகவே நிலைமை உள்ளது. 

உலகில் 1000 மக்களுக்கு 8.5 மருத்துவர்கள் கொண்ட தேசமாக கியூபாதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 5 மருத்துவர்களை கொண்டுள்ளது. இச்சூழலில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போதியளவு இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சை வாரக்கணக்கில் தள்ளி போகும் கடும் நிலைமைகளை உருவாக்கியுள்ளது. 

கியூப பொருளாதாரம் 1959 புரட்சிக்கு பிந்தைய காலத்தை விட கடும் நெருக்கடியில் உள்ளது. ஏகாதிபத்தியங்களின் புவிசார் அரசியல் அழுத்தங்களும் கியூபாவை நெருக்கி வருகிறது. கியூபாவின் அதிக லாபம் ஈட்டும் துறைகளான சுற்றுலாத் துறையான கவியோட்டா, நிதி பராமரிப்பு துறையான சிமெக்ஸ் மற்றும் ஃபின்சிமெக்ஸ் போன்றவையும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. 50 சதவீதம் வரை சுற்றுலா துறை வருவாய் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசின் வருவாய் பெருக்கத்திற்கு வேறு உதவிகள் இல்லாத நிலையில் இந்த துறைகளிலேயே மறு முதலீடு நடைபெறுவதால், பொது உள்கட்டமைப்புகள், மருத்துவமனைகள், உணவு விநியோகத்தில்  மூதலிடுகளை அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க  இரண்டாம் கட்ட பொருளாதார தடை காரணமாக வெளிமூதலிடுகள் வேகமாக கியூபாவை விட்டு வெளியேறி வருகிறது. மேலும் நிதிச் சேவைகள், கனிமங்கள் மற்றும் சுரங்கம் போன்றவற்றிலும், பாதுகாப்பு காவல் ஆகியவற்றினை முடக்கும் நிலையை மே 7 ஆம் தேதி அமெரிக்க அரசின் உத்தரவு அமல்படுத்துவதோடு குறிப்பாக கியூபாவின் மாபெரும் இராணுவ கூட்டமைப்பான GAESA மீது அதிகாரபூர்வமாக இலக்கு வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

தன்னார்வ உழைப்பு

இந்த சூழலில் தான் பிடலும், சேவும், ராவுலும்  கட்டியெழுப்பிய மார்க்சிய லெனினிய  அம்சங்களின் அடிப்படையை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் போராடி வருகிறார்கள் கியூப மக்கள்.  சோசலிசத்தை கட்டமைப்பதில் தன்னார்வ உழைப்பை முக்கிய அம்சமாக  சே முன்வைத்தார். சோசலிச உணர்வையும், கூட்டுப் பொறுப்புணர்வையும் வளர்க்க அது உதவும் என நம்பினார். சோசலிசத்தை கட்டமைப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.  அது லாபத்தை விட சமூக தேவைகளால் இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

வறிய மனிதனின்  நிலையை கண்டு இரக்கம் கொள்வதல்ல, தேவை நிலைமையை மாற்றுவது. அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது.  பகுதியிலிருந்து முழுமை பார்ப்பது என்ற இயக்கவியல் அடிப்படையில் சர்வதேச உணர்வோடு முழு உலகையும் மாற்றியமைப்பதை பற்றிய கனவே அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவில் புரட்சி செய்து காங்கோ, பெரு, பொலிவியா விடுதலை என பயணித்தவர். ஏகாதிபத்தியத்தின் பிடறியை அதன் குகைக்குள் ( நியூயார்க்கில் உள்ள ஐநா. சபையில் ) உலுக்கி எடுத்தவர். அதனால் தான் ”அவர்கள் நினைத்தது போலின்றி நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்-சே” என்ற முழக்கம் பல்வேறு நகரங்களின் தெருக்களில் எதிரொலிக்கிறது. டில்லியின் ஜந்தர்மந்தர் வீதியில் கரப்பான்  பூச்சிகளின் போராட்டத்தில் உயர்ந்து நின்றது. எனவே கியூபாவை பாதுகாப்போம், உடன் சேர்ந்து நிற்போம். அமெரிக்க கழுதைப்புலியை அதன் மண்ணிலேயே வீழ்த்துவோம் – தோழன்  சே பெயரால் சபதமேற்போம். ஏகாதிபத்தியம் ஓழியட்டும் – சோசலிசம் வெல்லட்டும். 

செ.முத்துக்கண்ணன்

நன்றி - தீக்கதிர் நாளிதழ், ஜூன் 14, 2026



வயிறுகளில் அதிகரிக்கும் வரிக்கோடுகள்.

 யாருக்கு உபதேசம் பிரதமர் அவர்களே ? 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு திடீரென நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும், வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் இணையவழி மூலம்  வகுப்புகளை நடத்த வேண்டும், வாகனம் வைத்திருப்போர் வீடுகளில் நிறுத்திவிட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும், எரிபொருள்  சிக்கனத்தை கடைபிடிக்க  வேண்டும் என சொல்லிவிட்டு அரபு நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு சென்றுவிட்டார். எதற்கு இந்த பில்டப் ? ஏன் இந்த உபதேசம் என பார்த்தால் ஒரிரு நாளில் இந்தியாவில் பெட்ரோலிய எரிபொருள் விலையை உயர்த்தி விட்டார்கள். இதற்கு தான் இந்த உபதேசம்.

கார்ப்ரேட் பாசத்தின் விளைவு

இன்று கடும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. காரணம் ஒன்றிய பிஜேபி அரசின்  கார்ப்ரேட் ஆதரவுக் கொள்கையும், நவீன தாராளமய கொள்கையின் தாக்கமும், அவர்களின் நலன்கள் சார்ந்த முன்னெடுப்பும் பெரும் நெருக்கடியை இந்தியாவில் உருவாக்கி வருகிறது. இதனை மறைக்க ஈரான்அமெரிக்காஇஸ்ரேலிய போரை பயன்படுத்தி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணமாக கூறுகிறது. இது உண்மையா?  வெனிசுலா, ரஷ்யா உள்ளிட்டு பல நாடுகளில் இருந்து இந்தியா 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்திய அரசின் உறுதியற்ற அரசியல் நிலையும், அமெரிக்க சார்பு தன்மையுமே இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.

குறிப்பாக அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அடியாளாக உள்ள இஸ்ரேலுடன் தனது நண்பர் அதானிக்காக இந்தியா பிரதமரின் நெருக்கமும், இந்திய வெளியுறவுக் கொள்கையின் உறவும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு தனது ஆதரவையும், நம்பிக்கையையும் தெரிவித்த மோடியின் பாசத்திற்கு அரபு நாடுகளின் மத்தியில் கடும் எரிச்சலையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. கூட்டுச் சேர நாடுகளினை வழிநடத்திய இந்தியா அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியதன் காரணமாக இந்தியாவின் மீதான மதிப்பும், மரியாதையும், இறையாண்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துள்ளது.

மூலதன குவிப்பு

150 கோடி மக்களை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாகவும், பொருளாதார சந்தையும் உள்ள இந்தியாவை புறக்கணிக்க எந்த நாடும் துணியாது.  அந்நிய மூலதன குவிப்பு குவிந்த வண்ணம் இருந்தது. அது இந்திய வளங்களின் மீதான  லாப பங்கீட்டை மேலும்  மேலும் தீவிரப்படுத்தியது. 1991 ல் உலக வர்த்தக அமைப்பு, ஐஎம்எப், உலகவங்கியின் நிர்பந்தத்தில் இந்தியாவியல் நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னணியில், இன்று இந்திய மொத்த வருமான பங்கீட்டில் ஒரு சதவீதம் பணக்காரர்களிடம் 70 சதவீதமான சொத்துக்கள் குவியும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 

இதனுடைய வெளிப்பாடே பெரும் பகுதி விவசாயிகளை கொண்டுள்ள தேசத்தில்  விவசாய நலன்களுக்கு எதிராக வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட தொகுப்புகளையும் முதலாளிகள் நலனுக்காகவும் என மாற்றி அமைத்துள்ளது. இந்திய வளங்களை  குறிப்பாக வனங்கள், கனிம சுரங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், தேச உடைமையாக்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், துறைமுகங்கள் உட்பட அனைத்தையும் தாரை வார்க்கும் நிலையே உள்ளது. அதற்கு பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் கார்ப்ரேடுகளுக்கு கொடுத்து தேர்தல் பத்திரங்கள் பெயரில் நிதியை பெற்றுக் கொள்ளும் மோசடித்தனம் அரங்கேறுகிறது. பெரும் முதலாளிகள் நலனுக்காக உழைப்பாளிகளின் வியர்வையில் உருவான கட்டமைப்புகளை பலி கொடுக்கிறது. 

கார்ப்ரேட் நலனும், சிறுகுறு தொழில் அழிப்பும்

இதனால் கார்ப்ரேட்டுகள் தேசம் விட்டு தேசம் தாண்டி மூலதன வேட்டைக்கு நகருகிறார்கள். தற்போது 2.01 லட்சம்  கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள்  நாட்டைவிட்டு வெளியேறியுள்ளது. இதற்கு தேவையான நிதி மூலதனத்தை இந்திய பொதுத்துறை வங்கிகள் மூலம் பெற்று தங்களுடைய லாப குவிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்கள். நாட்டின் செல்வ வளங்களை ஒரு பகுதியினர் அனுபவிக்கவும், அள்ளிச் செல்லவும் அனுமதித்தன் விளைவால் ஏற்பட்டுள்ள வருமானப் பற்றாக்குறையை நாட்டு மக்களின்  மீது திணிக்க மோடி அரசு நினைக்கிறது. ( உதாரணம்  கார்ப்ரேட்டுகள், பெருமுதலாளிகளுக்கான வங்கிகள் வழங்கிய வராக் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, வரி சலுகை, கார்ப்ரேட் வரி குறைப்பு  என இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டில் 50 சதவீதம் அளவு அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் மோடி அரசு யாருக்கானது என புலப்படும். மொத்த தேசத்தின் சிக்கனம் சிலரின் நன்மைக்காகவா என்ற கேள்வி எழுகிறது. கார்ப்ரேட்டுகளுக்கு அள்ளி கொடுக்கும் மோடி அரசு ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்கு கிள்ளிக் கொடுக்க கூட மனமில்லாத நிலை உள்ளது.

ஏற்கனவே மோடி அரசு பதவியேற்றபின் தொடர்சியாக கார்ப்ரேட்கள் ஆதரவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்கள். உதாரணத்திற்கு உயிர் பயத்தில் மக்கள்  வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 2020-2021 கோவிட் ஊரடங்கு காலத்தில் மட்டும்  ஐடி நிறுவனங்கள் 10-15 சதவீதமும் ( டிசிஎஸ் நிறுவனம் ரூ 32562 கோடி லாபம் அடைந்தது), மருந்து கம்பெனிகள் 15-20 சதவீதமும்( சில நிறுவனங்கள் 40 முதல் 50 சதவீதமும் ), வங்கித்துறையில் தனியார் வங்கிகள் ( 2021ல் HDFC  ரூ 31116 கோடி 18 சதவீதம், ICICI ரூ 16193 கோடி 50 சதவீதமும் முந்தைய ஆண்டை விட  லாபத்தை அடைந்தது. ஆன் லைன் கேமிங் நிறுவனங்கள், காமர்ஸ் நிறுவனங்கள், தொலைத் தொடர்பு துறை, சிமெண்ட் மற்றும் ஸ்டீல் நிறுவனங்கள் கடும் லாபத்தை பெற்றது.

இதே காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் உற்பத்திக்கு எந்த ஊக்குவிப்பும் இல்லாத நிலையில், அரசுகளின் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, இறக்குமதி ஏற்றுமதி குறித்தான அரசின் வரிகள் கடும் பாதிப்பை உருவாக்கியது. அந்த கோவிட் ஊரடங்கு கால அனுபவத்தை கணக்கில் கொள்ளாமலும், தனது பொருளாதார கொள்கைகளின் விளைவாக பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், திட்டமிடாத லாக்டவுன் என அதலபாதாளத்தில் இந்திய தொழில், விவசாய மற்றும் சேவை துறையை தள்ளிவிட்டு சிக்கனத்தை பற்றி பேசுகிறார். “குப்புற தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்தற்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு குறைந்து வருவது ( டாலருக்கு நிகராக 96 ரூபாய் என்ற வீழ்ச்சி ) பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறதுது.

லாக்டவுன் ஆன உழைப்பாளிகள் வாழ்க்கை

அதே நேரத்தில் இந்தியா முழுவதும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 30 சதவீதம் தாக்குபிடிக்க முடியாமல் மூடப்பட்டன. அவர்களை நடுத்தெருவில் மோடி அரசு நிறுத்தியது. இதில் பணிபுரிந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் நாடு முழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலத்தை பார்த்தோம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உறங்க இடமில்லாமல் ரயில் தண்டவாளத்தில் உறங்கி ரயில் மோதி பலியான சம்பவங்களையும் பார்த்தோம்.

பெரும் நிறுவனங்களின் லாபத்திற்கு அடிப்படை, அதன் நிர்வாகதிறனே காரணம்  என சொல்லப்படுகிறது. உண்மையில் அது நிர்வாக திறனல்ல, உழைப்பாளி களின் மீதான உழைப்புச் சுரண்டல், ஊழியர்கள், தொழிலாளிகள், உழைப்பாளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் பறித்து மூலதன செலவில் உழைப்பின் பங்கிற்கான நிதி ஆதாரங்களை வெட்டியதே காரணம். போனஸ் குறைப்பு, ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பெரும் பகுதி மாற்றியது, வீட்டிலிருந்து பணி, நிர்வாக செலவினங்களில் கட்டிட வாடகை, போக்குவரத்து செலவு, உணவுக்கூட செலவு, மின்சாரம், பராமரிப்பு செலவினங்கள் அனைத்தும் குறைந்ததும், வங்கிகளில் கடனுக்கான வட்டிகள் நிறுத்தி வைப்பு, வட்டிவிகிதங்கள்  குறைக்கப்பட்டது இந்நிறுவனங்களின் லாபத்திற்கு வழி வகை செய்தது. ஆனால் தொழிலாளர்கள்  வாழ்வில் மண்ணை அள்ளிப்போட்டது.

 மோடியின்  சிக்கனம் யாருக்கு ?

ஒரு தேசத்தின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு சந்தையின் தேவையை பூர்த்தி செய்வது என்பது விலைவாசி உயர்வை கட்டுபடுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவிடும். அதே நேரத்தில் இறக்குமதி அதிகரிக்கும் எனில் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும். இதனை அமலாக்க மக்கள்  நலன்  சார்ந்த முன்னெடுப்புகளே அவசியம். ஆனால் மோடி அரசு கார்ப்பேரட் நலன்  அரசாக இருப்பதால் மக்களுக்கே மீண்டும் மீண்டும் சுமையை  கூட்டுகிறது.

2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பான முக்கிய தரவுகள், மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 மாத மத்திய அரசின் வெளியீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின்  அறிக்கைகளின் படி சில்லறை பணவீக்கம் (Retail Inflation): ஏப்ரல் 2026-ல்,3.48% ஆகப் பதிவாகியுள்ளது. மார்ச் 2026-ல் இது 3.40% ஆக இருந்தது. பணவீக்க விகிதங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கான 4% என்ற வரம்பிற்குள்ளேயே உள்ளதாக கூறினாலும், உண்மையில் ஏப்ரல் 2026-ல், கிராமப்புற பணவீக்கம் 4.26% ஆகவும், நகர்ப்புற பணவீக்கம் 4.10% ஆகவும் இருந்தது. இதனால் கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வு சற்று அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு 4.20% (Consumer Food Price Index - CFPI) ஆக இருந்தது.

தற்போது பெட்ரோலிய  பொருட்கள் விலை ரூ 3 முதல் எரிவாயு சிலிண்டர் வீட்டுக்கு ரூ 50ம், வர்த்தக சிலிண்டர் ரூ 993 ம் உயர்த்தப்ட்டுள்ளது. உழைப்பாளிகளின் மீது பெரும் சுமையை ஏற்றி உள்ளது. இத்தருணத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உழைப்பாளிகளுக்கு சம்பள உயர்வு இல்லை என வட இந்தியாவில் தொழிலாளர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். சாமான்ய மக்கள்  அன்றாடம் பயன்படுத்தும் உணவு கூடங்கள், சிறு உணவகங்கள், பேக்கரிகள், சாலையோர கடைகளில் பொருளின் விலை கடுமையாக ஏறியுள்ளது. பொருளின்  அளவு குறைந்துள்ளது. 4 இட்லி சாப்பிட்ட இடத்தில் 3 இட்லியாக மாறியுள்ளது. ஒரு கப் தேநீர் விலை ரூ 20 – ரூ 25  என  பேக்கரிகளில் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கப்பில் தேநீர் அளவு குறைந்துவிட்டது.  வடையின் விலை உயர்வு, அளவு சிறிதாகிவிட்டது.  சிலிண்டர் விலையை காரணம் காட்டி உணவு வகைகளின் எண்ணிக்கை அளவை குறைத்துவிட்டனர். இது உழைப்பாளி மக்களின்  உணவு தேவையினை வெட்டி சுருக்குகிறது.  விலைவாசி உயர்வு உண்டியை சுருக்கிறது. வயிறுகளில் வரிக்கோடுகள் அதிகரிக்கிறது. போக்குவரத்து கட்டணங்கள் கூட்டப்படும் என நிறுவனங்கள், தனியார் வாகன உரிமையாளர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். 

 எரிபொருட்கள் விலையுயர்வு யாரின் நலனுக்காக

எதார்த்ததில் இடதுசாரிகள் ஆதரவோடு  மன்மோகன்  சிங் பிரதமராக இருந்த போது சர்வதேச சந்தையில் 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (Barrel) $147.27 என்ற உச்ச விலையைத் தொட்டது. அதே காலகட்டத்தில் ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $147.50 வரை விற்பனையானது. அன்று இந்தியாவில்  பெட்ரோலின் விலை ரூ 45 முதல் 51 ரூபாயாகவும், டீசல் விலை ரூ 31 முதல் 35 ஆகவும் முக்கிய நகரங்களில் விற்பனை ஆனது.

இது 2017 வரை சர்வதேச சந்தையில் ஏறினாலும் விலையை இந்திய பெட்ரோலிய ஆணையமும், அரசும்  தீர்மானிக்கும் நிலை இருந்தது. 2017ல் பெட்ரோல் ரூ 63-70ம், டீசல் ரூ 53-58 ம் என இருந்த நிலையில்  இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என அறிவித்த பின்னணியில் தினமும் விலை மாறும் முறை  ( Daily Dynamic Pricing)   அறிவிக்கப்பட்டது. இது இந்திய மக்களின் கடும் தாக்கத்தை உருவாக்கியது.

இதன் வெளிப்பாடே இன்று வெனிசுலா நாட்டில் உலக கச்சா எண்ணெய் வளத்தில் 17 சதவீதம் கிடைக்கிறது என்ற நிலையில் அந்நாட்டின் அதிபரை கடத்தி தனது நாட்டின் சிறையில் அடைத்து வைத்து, அந்நாட்டின் எண்ணெய் கிணறுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் உலகின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ரூ 27 லட்சம் கோடி செலவில் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுவும் என டிரம்ப் அறிவிக்கிறார். இதற்கான பணம் இந்திய வங்கிகளில் இருந்தே சூறையாடப்படும். அதுதான் கடந்த கால வரலாறு. இந்த கார்ப்ரேட்களின் நலனுக்காக இந்திய மக்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதலை எதிர்த்துதான் இடதுசாரிகள் போராடி வருகிறார்கள். இந்த உண்மையை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பேசாத ஊடங்கங்கள் உண்மையை பேச வேண்டும்.  சமூக வலைதளவாசிகள் இந்த உண்மையை உரசி பார்க்க வேண்டும்.

 செ.முத்துக்கண்ணன்.

thanks to theekkathir daily 2026 may 17