”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

காற்றின் வேகத்தோடு வருகிறோம்
ஏழையென்றும் அடிமையென்றும் 
எவனும் இல்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் 
சமானமாக வாழ்வமே .,. 

என்றார் மகாகவி பாரதி,..  அவன் பிறந்த பூமிக்கு அருகில்  அவன் கனவு கண்ட ஊரை சிருஷ்டிக்க போராடியவர் கோவில்பட்டி அமல்ராஜ்,. இரத்தமும், சதையுமாக அந்த மக்களோடு இரண்டற கலந்து அவர்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக போராடி சாதிய தீயை அணைக்க போராடியவன். இறுதியில் அதற்கே பலியானான். இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வேள்விக்கு அடிஉரமாகிப்போன அமல்ராஜ் இதோ ஆயிரமாயிரம் போராளிகளை மந்திப்பட்டியில் மட்டுமல்ல,  தமிழகம் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக களத்தில் நிற்கிறார்கள்..  

துhத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி நகராட்சிக்கு அருகிலுள்ள கிராமம் மந்திப்பட்டி. இங்கே பலத்தரப்பட்ட சமூகத்தினை சார்ந்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் அனைத்து அரசியல் இயக்கங்களும் இருந்தன. இடதுசாரிகளை தவிர,.. ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்கு மட்டுமே அந்த மக்களை பயன்படுத்தினார்கள்,. அவர்களின் அடிப்படை வாழ்க்கையை தீர்க்க எதுவும் செய்யவில்லை,. 

இந்த நிலையில் 1990ல் இடது சாரி இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை அந்த மண்ணில் வேர்விட ஆரம்பித்தது. இளைஞர்கள் ஒன்றிணைந்தனர். 1993க்குள் மக்களின் பிரச்சனைகளை பட்டியலிட்டு கையில் எடுத்து போராட்டத்தை துவக்கினார்கள் வாலிபர் சங்க தோழர்கள். சாலைவசதி கேட்ட போராட்டம் மக்களை  திரட்டி நடைபெற்றது. சாலை மட்டுமல்ல மக்கள் சக்திக்கு கழிவு நீர் செல்ல சாக்கடை வசதியும் செய்யப்பட்டது. நம்பிக்கையின் நாற்றங்காலை வாலிபர் இயக்கம் வளர்ந்தது. 

இதன் ஒப்பற்ற தலைவர்களாக அன்று அந்தபகுதியில் பாலமுருகனும், மாரிமுத்துவும், அமல்ராஜ்ம் மாறினார்கள்,.1994ல் குடும்ப அட்டைக்காகவும், சுடுகாட்டுப்பாதைக்காகவும், 1995ல் பேருந்து வசதிக்காகவும் , 1996ல் காவல் துறை அடக்குமுறைக்கு எதிராகவும் என போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர் வாலிபர் சங்க தோழர்கள்,.. அப்போது ஆட்சியில் இருந்தது அதிமுக அரசு காவல் துறை கொண்டு போராடுபவர்களை அடக்கிக் கொண்டு இருந்தது. உள்ளூர் காவல்துறையும் தோழர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தது. 

இத்தருணத்தில் சாதிக்கலவரம் வெடிக்க மந்திதோப்பில் நடைபெற்ற கொலைகள் காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தை காரணம் காட்டி காவல்துறை வாலிபர் சங்க தோழர்களை பழிவாங்க கைது செய்து பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது. சம்மந்தப்பட்ட கொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு நீதிபதி மோகன் கமிஷனிடம் கொடுத்து அவரின் விசாரணைக்கு பின் குற்றவாளி அல்ல என சொல்லி தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தீப்பெட்டி தொழிலாளர்கள் நிறைந்த அப்பகுதியில் தீப்பெட்டி தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க 1998ல் வரலாற்றுசிறப்புமிக்க போராட்டம் துவங்கியது. தீப்பெட்டியில் நவீன இயந்திரங்களை புகுத்தி வேலைவாய்ப்பை, வாழ்க்கையை பறிக்காதே என்ற முழக்கம் நகரமெங்கும் எதிரொலித்தது. பல ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட போராட்டங்களை பல வடிவங்களில் வாலிபர் இயக்கம் நடத்தியது. அரண்டது அரசு,. இதனைதொடர்ந்து மாநில அரசு பஸ்°கட்டண அறிவிப்பை வெளியிட்டது. அதற்கெதிரான போராட்டம் தாலுhகா செயலாளர் அமல்ராஜ் தலைமையில் வீரியத்தோடு நடைபெற்றது. 

2001ல் ஊரில் இருந்த புறம்போக்கு நிலத்தில் மக்கள் செல்லும் பாதையில் அலங்காரம் பிள்ளை என்பவரின் மகன் முருகன் என்பவனால் சாலையை மறித்து சுவர் எழுப்பி மக்களுக்கு நடந்து செல்லும் வழியை மறிக்கிறான். இதற்கு எதிராக ஏராளமான போராட்டங்களை அனைத்து அரசியல் இயக்கங்களை இணைத்து தலைமைதாங்கி நடத்தியது வாலிபர் இயக்கம். இதற்கு முன்னின்றது அமல்ராஜ். சுவர் இடிக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு காரணம் அமல்ராஜ் என சாதிய வன்மத்தோடும், தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லியும் ஊருக்கு அநியாயம் செய்த அந்த சமூகவிரோதிகள்  மார்ச் 17ம் தேதி இரவு பாலமுருகன், மைக்கேல்ராஜ் இருவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த அமல்ராஜை வழிமறித்து துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார்கள் பாவிகள்,. 

வறுமையில் வாழ்ந்தாலும், சுண்ணாம்பு சூளையில் அரை வேலை, கால் வேலை செய்து தனது தாயையும், தம்பியையும் காப்பாற்றிக்கொண்டே, வழக்கறிஞராகவேண்டும் என சட்டக் கல்லுhரியில் படித்துக் கொண்டே மக்களுக்கு சமூக சேவை செய்து வந்த அமல்ராஜ்க்கு பலமுறை கொலைமிரட்டல் வந்த போது உள்ளூர் காவல்துறையில் புகார் கொடுத்தும், காவல்துறை ஆதிக்க சாதி வெறியர்களோடும், சமூக விரோதிகளோடும் சேர்ந்து கொண்டு குற்றவாளிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்தன் விளைவு தோழர் அமல்ராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்,.

அவர் இறந்து பல ஆண்டுகளை கடந்திருக்கலாம் ஆனால் அவரின் வழியில் இதோ கோவில்பட்டி ஹாக்கி கிராவுண்ட் பாதுகாத்திருக்கிறது இடதுசாரி இயக்கம், புறம்போக்கில் குடியிருப்ப வர்களுக்கு பட்டா கேட்ட போராட்டம், முன்னைவிட இன்னும் வீரியமாய் இதோ நாங்கள் போராடுகிறோம்,. நீங்கள் வீழ்ந்த விதைகளல்ல,.. விதைக்கப்பட்ட வீரிய விதைகள் உங்களில் இருந்து ஆயிரமாயிரமாய் நாங்கள் வருகிறோம்,..  

காற்றின் வேகத்தோடு, நீரின் வலிமையோடு, நெருப்பின் ஆற்றலோடு பூமிப் பந்தை மாற்றிப்போடும் வல்லமையோடு வருகிறோம். ஆம் சாதிவெறி, மதவெறி, இனவெறி, போதைவெறி போன்ற கொலைவெறியை இந்த மண்ணில் அடியோடு அழித்தொழிக்க போர் தழும்புகளோடு வருகிறோம்,.. உழைக்கும் மக்களின் கேடயமாய், வாளாய்,.. வருகிறோம்,

நன்றி
இளைஞர் முழக்கம்



No comments:

Post a Comment