”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
ஊழல் பிசாசுகளும், பேய்களும்,..

அலிபாபாவும், நாற்பது திருடர்களும் போல இந்தியாவில் இன்று மத்திய அரசில் இருக்கும் அலிபாபா பிரதமரும், நாற்பது திருடர்களாய் இந்திய நாட்டில் உள்ள பெரு முதலாளிகளாகிய கார்ப்ரேட்களும் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து வருகிறார்கள். இன்று உலகளவில் உள்ள 179 நாடுகளில் 85 வது இடத்தில் இந்தியா உள்ளது. 2002ல் 2.7 சதமாக இருந்த ஊழலின் வளர்ச்சி 2008ல் 3.4 சதமாக உயர்ந்தது. இத்தகைய ஊழலுக்கு காரணம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளின் லாப வேட்கையும், பிறரின் மீதான ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற தன்மையுமே பெரும் பகுதி முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு பிறகு மிகவேகமாக ஊழல் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது. இது அனைத்து பொதுத்துறை, இயற்கை, மனிதவள மேம்பாடு அனைத்தையும் சீரழித்து வருகிறது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலத்தில் நடைபெற்ற மாருதி ஊழல், ராஜீவ் காந்தி காலத்தில் போபர்ஸ் ஊழல், நரசிம்மராவ் காலத்தில் தொலை தொடர்புதுறை ஊழல், வாஜ்பாய் காலத்தில் சவபெட்டி, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல், மன்மோகன்சிங் காலத்தில் மருத்துவ கவுன்சில் ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் ஊழல், பாராளுமன்றத்தில் எம்,பிக்கள் வாக்களிக்க லஞ்சம், காமன்வெல்த் போட்டியில் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என ஊழல்களின் தேசமாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது, கண்ணுக்கு தெரிந்து பத்திரிக்கைகளில் விவாதப் பொருளாக மாறிப் போன ஊழல்கள் இவைமறைக்கப்பட்ட, தெரியாத ஊழல்கள் எத்தனை எத்தனையோ,.. பறி போன இந்திய உழைப்பாளி மக்களின் செல்வங்கள் எவ்வளவோ,


வீட்டில் உட்கார நினைக்கும் பிசாசு
இன்றைய நிலையில் இயற்கை வளங்களையும், கனிமங்களையும் கொள்ளையடிப்பதில் யார் பெரியவன் என்ற பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கும், அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் இடையே உள்ள உறவின் போட்டிகளின் உச்சகட்டம்தான் இதுவரை இல்லாத அளவிற்கு பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழல் இந்திய நாட்டில் நடைபெற காரணமாக அமைந்தது. இதற்கு காங்கிரஸ், பிஜேபி என்ற ஏதாவது ஒரு சேவகம் செய்யும் அடிமையும், முகமூடியும் தேவை., அதன் ஒரு பகுதியாகதான் காங்கிரஸ் என்ற முகமூடி பொதுமக்களிடம் அனைத்து விதங்களிலும் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் அளவிற்கு கேவலப்பட்டு நிற்கிறது., கால் உடைந்த இந்த குதிரையின் மீது இனி சவாரி செய்தால் தாங்களும் குழியில் விழுந்துவிடுவோம், என்று தனக்கான இன்னொரு குதிரையாக பிஜேபி என்ற முகமூடியை அணிவதற்கு இன்றைய கார்ப்ரேட் நிறுவனங்கள் தயாராகி விட்டன. அதனால் தான் இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்களில் 100க்கு 76 பேர் மோடியையும், 24 பேர் ராகுலையும் ஆதரித்துள்ளார்கள். ஆகவே ஊழலுக்கு மாற்றாக, இன்னொரு ஊழலை நாம் ஆதரிக்க முடியாது,. “காங்கிரஸ் என்ற பேயை ஓட்ட, பிஜேபி என்ற பிசாசை வீட்டில் உட்கார வைக்க முடியாது“,.   

ஊழலுக்கு உதவிடும் எந்திரங்கள்
உலகமயச்சூழலில் பெரும்பகுதி தனியார்மயப்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது, குறிப்பாக கிராம நிர்வாக அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது அனைவரும் அறிந்த்தே,. இதில் அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (இடதுசாரிகள் தவிர்த்து)., நீதிமன்றங்கள், ரியல் எஸ்டேட்நிறுவனங்கள், சாலை, கட்டிடங்கள் கட்டும் நிறுவனங்கள், மணல், தாதுப்பொருட்கள் அள்ளி வெட்டி எடுக்கும் நிறுவனங்கள், மாபியா கும்பல்கள், மருத்துவமனைகள், கல்விநிறுவனங்கள், காவல்துறை, ராணுவம் உள்ளிட்டு குடிநீர், மின்சாரம், சாலை, பொதுவிநியோகம், விவசாயத்துறை உள்ளிட்டு முக்கிய துறைகளில் நடைபெறும் அனைத்துவிதமான ஊழல்களும் நாட்டை கடுமையாக பாதித்துக் கொண்டு இருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் மக்களின் பொதுப்புத்தியில் தங்களின் அடிப்படை கடமைகளை செய்யக்கூட லஞ்சம் கொடுப்பதை ஒரு கலாச்சாரமாக மாற்றிவிட்டார்கள்,. இது அரசு துறைகளில் மட்டுமல்ல இன்று தனியார் துறையிலும் ஏறத்தாழ இதே நிலைதான்,. சமீபத்தில் 69 நாடுகளில் ஊழல், லஞ்ச முறைகேடுகள் குறித்து நடைபெற்ற (டி.ஐ) ஆய்வுகளில் இந்தியாவில் மக்களுக்கு சேவை செய்யும் கல்வி, மருத்துவம், நீதி, காவல்துறை போன்ற அடிப்படையான 11 துறைகளில் ஏறத்தாழ 21,068 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. இதனுடைய உச்சகட்டம் வட மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளிட்டு 80சதம் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கிராமப்புறத்தில் வழங்கும் மானிய விலையிலான உணவுப் பொருட்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
வேலையின்மையை பெருக்கும் ஊழல்கள்
ஊழல்கள் என்பது முதலாளி வர்க்கத்தின் லாபவெறியோடு சம்மந்தப்பட்டது என்ற அடிப்படையில் இயற்கை கனிமவளங்கள், தொழில் துறைகளில் அரசின் பங்களிப்பை தனியார்துறை நாளுக்குநாள் மிரட்டி குறைத்து வருகிறது, இதன் காரணமாக லாபத்தை அடிப்படையாக கொண்டு வெகுசில இளைஞர்களை வைத்துக் கொண்டு நவீன இயந்திரங்கள் மூலம் பல நூறு மடங்கு கொள்ளையடிக்கும் ஏற்பாட்டை செய்து வருகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்ற இந்த நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முழுமையான, கௌரவமான வேலை கிடைக்காமல் அரைவேலை, கால்வேலை என கிடைத்த வேலைகளை வயிற்றை கழுவ செய்து வருகின்றனர்,.

உதாரணத்திற்கு நெய்வேலி அனல் மின்நிலையத்தில் 2000ஆண்டுக்கு முன்பு 27000பேர் மூன்று சிப்டில் வேலை செய்த நிலை மாறி மிகச் சொற்ப அளவாக மாறியுள்ளனர்,. என்ன காரணம் அரசின் தனியார்மயக் கொள்கை அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கத்தடை, இருப்பவர்களை தற்காலிக தொழிலாளர் களாக மட்டும் வைத்துக் கொள்வது, அடிப்படையான சட்ட உரிமைகளை வழங்க மறுப்பது, போதிய சம்பளம் வழங்கிடாமல் ஏமாற்றுவது, குறைந்த கூலி என அரசுத்துறைகளின் மீது கடும் அதிருப்தியை உருவாக்குவது,, அதே நேரத்தில் தனியார் மின் உற்பத்தி மையங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் பின்னர் குறைந்த கூலியில் தனியார்துறையில் மிக்க் குறைந்த வேலைவாய்ப்பும், நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதும் வேலைவாய்ப்பை சுருக்குவது, அழிப்பது என்ற நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது., இதனை தற்போது அரசு பல துறைகளில் மேற்கொண்டு வருகிறது,. இதற்கு பின்னணியில் ஏராளமான தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஒளிந்துள்ளன,. மேலும் நீண்ட காலம் வேலைவாய்ப்பை வழங்கிடும் இயற்கை வளங்களை தங்களது லாப வேட்கைக்காக குறுகிய காலத்திற்குள் நவீன இயந்திரங்கள் மூல்ம் வெட்டி எடுப்பது வேலை வாய்ப்பின் கால அளவையும் குறைக்கின்றன,.

ஊழலை வளர்க்கும் முதலாளித்துவம்
இன்றைய தருணத்தில் இந்தியாவின் ஏராளமான தனியார் பெரு முதலாளிகளுக்கு ஆளும் அரசுகள் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வரிசலுகைகளாக அள்ளி வழங்குகின்றனர். லட்சுமி மித்தல், முகேஷ்அம்பானி, அஜீம் பிரேம்ஜி, சாசிரவிரூயி, சாவித்திரி ஜிண்டால் கௌதம் அட்டானி, குமார்மங்கலம் பிர்லா, அனில் அம்பானி, சுனில் மித்தல், ஆடிகோத்தாரி, குஷ்பால் சிங், அனில் அகர்வால், திலிப் சங்கவி, சிவ்நடார், மல்வீந்தர், சிவீந்தர் சிங் ஆகிய 15 நபர்களுக்கு மட்டும் கடந்த மார்ச் 2011 காலத்திய சொத்து மதிப்பு  7 லட்சத்து 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் (177 பில்லியன் டாலர்என உயர்ந்துள்ளது. இவற்றில் பால்வா, வினோத் கோயாங்கா உட்பட  8 நிறுவனங்கள் 2 ஜி அலைகற்றை ஊழல் விவகாரத்தில் சம்பந்தபட்டுள்ளதாக தெரிகிறது.

2011 ல் பில்லியனர்கள் எண்ணிக்கை  55 ஆக உயர்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு 55 பேரின் மொத்த சொத்த மதிப்பு 222.1பில்லியன் டாலராக ( 9 லட்சத்து 99 ஆயிரத்து 450 கோடி ரூபாயாக) இருந்தது.  2011ல் 246.5 பில்லியன் டாலராக ( 11 லட்சத்து 9 ஆயிரத்து 250 கோடி ரூபாய் )உயர்ந்துள்ளது. இது இலங்கை, பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை (ஜிடிபி) விட அதிகம் ஆகும். மேற்கண்ட விபரமே தெளிவாக சொல்லும் எப்படி ஒராண்டுக்குள் பெரும்பகுதி சொத்து சேர்ந்த்தன் பின்னணியை.இப்படி ஆளும் அரசுகள் பெரும் முதலாளிகளுக்கு சாதகமான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. மேலும் வரி ஏய்ப்பு, கறுப்புப்பணம் பதுக்கல் போன்றவைகளும் இவர்களை மேலும்பணக்காரர்களாகவும், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் மாற்றி வருகிறது.
ஈசன் திரைப்படத்தில் அரசியல்வாதிக்கும், பெரும் நிறுவன முதலாளிக்கும் சண்டை ஏற்பட்டு தொலைபேசியில் பேசிகொள்வார்கள்., யார் பெரியவன் என்று ? இறுதியில் முதலாளி சொல்வார், உன்னை போன்ற அரசியல்வாதிகளை உருவாக்குவதே என்னை போன்ற பெரும் முதலாளிகள்தான் என்று.,, அதைப்போல் இன்று நீக்கமற இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் இடத்தில் பெரும் முதலாளிகள் உள்ளனர்,. நாடாளுமன்றத்தில் 60 சதமான உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,.

ஊழலினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் நிலை
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41.6 சதவீதமான 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளதுகடந்த 2004–05ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு, டெண்டுல்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர், உடல் நலம், கல்வி, சுகாதாரம், சத்துணவு, வருமானம் ஆகியவற்றை அளவீடாக கொண்டு மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த 1972ம் ஆண்டில் நகரங்களில் 2100 கலோரி, கிராமங்களில் 2400 கலோரி உணவுப் பொருட்கள் வாங்கும் வருமான அளவை கொண்டு மக்களின் ஏழ்மை நிலை மதிப்பிடப்பட்டது.கடந்த 2006ம் ஆண்டில் திட்டக் கமிஷன் மதிப்பீடு படி ஏழை மக்களின் அளவு 28.5 சதவீதமாகும் என்று கூறியிருந்த நிலையில் சக்சேனா தலைமையில் மத்திய அரசு அமைத்த கமிட்டி இந்தியாவின் ஏழ்மை நிலை 50 சதவீதம் என்று கடந்த 2010 ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.

உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் இந்தியா உள்ளதெனவும், உலகின் அதிகளவாக 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு இங்கே உள்ளனர் ஆனால் இந்தியாவில் உணவு உற்பத்தியில் 2009-10ஆம் ஆண்டில் 218.20 மில்லியன் டன். 2008-09 ல் 237.47 மில்லியன் டன்னாகவும், 2013ல் தேவையைவிட 5 மடங்கு உற்பத்தி கூடியுள்ளது. அதேபோல் தென்மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 99.18 மில்லியன் டன்னாக இருந்தது 2010-11ல் 100 மில்லியன் டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இப்படி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நிலையிலும் 26 கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர். போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு கோடிக்கணக்கான டன் உணவுதானியங்கள் வீணாகி வருகிறது. இந்திய உணவுக்கழகத்தால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும், சேமிப்பு வசதி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மட்டுமே. உணவின்றி  மக்கள் ஒருபக்கம் வாடுவதைக் கண்ட உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து உணவுப்பொருள் ஏதும் வீணாகக் கூடாது, உடனடியாக இதனை பசியால் வாடுவோருக்கு வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுறுத்தியது,. ஆனால் மன்மோகன் அரசு  இலவசமாக இதை கொடுக்கமுடியாது என்பது அரசின் கொள்கை முடிவு என இரக்கமில்லாமல் அறிவிக்கிறார்.  அவரின் கருத்தை அம்பானி போன்ற பெரும் முதலாளிகள் ஆதரித்தனர். அதே நேரத்தில் நீதிபதி வாத்வா கமிட்டி அறிக்கையின்படி பொது விநியோகத் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் திருட்டுகள் நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றில் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம், குடிநீர், கழிப்பறை, சாலை, தெருவிளக்கு என அனைத்திலும் அரசின் திட்டங்கள் சாதாரண ஏழை எளிய மக்களை சென்றடையாமல் பெரு நிறுவனங்களின் லாபப் பசிக்காக வணிகமயமாக்கப்பட்டுவிட்டது,.
  
ஊழலுக்கு ஒப்புதல் பெறும் இடம்
இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என குடிமக்கள் பாடும் பாட்டாக  மக்களின் மனோநிலை மாற்றப்பட்டுள்ளது. இது வரை அவர்கள் பார்த்துவந்த சமூக அவலங்கள், கல்வியறிவு இல்லாத நிலை, ஊடகங்களின் கருத்து திணிப்புகள், நுகர்வு வெறி போன்ற பல்வேறு அம்சங்கள் மக்கள் மத்தியில் இயல்பாகவே மாற்றத்தை நோக்கிய பயணத்தை தடைசெய்யும் பொதுபுத்திகளை மக்கள் மத்தியில் திட்டமிட்டு ஏற்றிவந்துள்ளன.
வணிகமயச்சூழலில் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய சாதாரண உழைப்பாளி மக்கள் அனைத்து விசயங்களுக்கும் அரசின் திட்டங்களை எதிர்பார்த்து நிற்கும் நிலையே உள்ளது,. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அனைத்திலும் ஊழல் செய்து மக்களுக்கு சேர வேண்டியதில் சிறுபகுதியை இலவசங்கள் என அறிவித்துவிட்டு பெரும்பகுதியை கூட்டு கொள்ளையடிக்கும் நிலையையே செய்து வருகின்றன. இப்படி கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களும் ஊழல், லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசியல் வாதிகள், அதிகாரிகள், கார்ப்ரேட் நிறுவனங்கள் இவைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மக்களின் இயல்பான கோபமற்ற சூழலுக்கு காரணமாகும்.

இதனால் சாமான்யபட்ட ஏழைஎளிய மக்கள் இலவசங்களை பெற்றுக்கொண்டு தங்களது உரிமைகளை விற்கும் மனோநிலையை நோக்கி  தள்ளப்படுகின்றனர். இதனை கார்ப்ரேட் நிறுவனங்களும், பெரும் அரசியல் சூதாடிகளும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அதிகாரவர்க்கமும் பயன்படுத்திக் கொள்கின்றன. கொடுத்த பொருட்களை வைத்தே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வித்தை தெரிந்தவர்களாக உள்ளனர்.
இலவசம் என்றால் உயிரை கொடுத்தாவது பெற வேண்டிய சூழலை வறுமை உருவாக்கி வைத்துள்ளது. 1993ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு நிவாரணம் வாங்க வந்த மக்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் அநியாயமாக தங்களது உயிரை 2000 ரூபாய்க்காக கொடுத்தனர். இது கொடுமையிலும் கொடுமை. லஞ்சம், ஊழல் என்பதை பொதுபுத்தியாக மாற்றும் நடவடிக்கைகளில் காங்கிரஸ், பிஜேபி இரண்டு கட்சிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் வளம் வந்துக் கொண்டு இருக்கும் தேமுதிக, பாமக, மதிமுக, அதிமுக, திமுக போன்ற பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை, மருத்துவமனைக்களை நடத்தி வியாபாரத்தை அமோகமாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள், தலைவர்கள்தான் இன்றைய கனிமவள கொள்ளையர்களாகவும் உள்ளனர்,. இந்த நிலை மாற வேண்டும் என்றால் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்,. யார் மக்களுக்காக செயல்படுகிறார்கள், யார் தேசத்தை, மக்களை, இயற்கையை பாதுகாக்கிறார்கள் என்ற புரிதலை உருவாக்க வேண்டியுள்ளது,.

ஊழலுக்கு மாற்று
இன்றைய உலகமயச் சூழலில் இதனை எந்தவிதமான நீதிக்கும் கட்டுப்படாமல் ஊழலில் ஈடுபடும் அரசியல் வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள்,  விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்ற பிரிவினர் வாழ்க்கை தரம், ஆடம்பரம், புகழ், செல்வாக்கு, அதிகாரம் சார்ந்த பல்வேறு கூறுகளை கணக்கில் கொண்டு இதன் பின்னணியில் தொடர்ந்து ஊழல் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுத்து ஊழல் மூலம் சேர்த்த அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்க வேண்டும். அதற்கு தேவை உறுதியான மக்கள் நலன் பேணும் ஆட்சி அதிகாரமே. எனவே ஆளும் ஆட்சியாளர்கள் தேர்தல் சீர்திருத்ததை செய்வது, தேர்தலுக்கு அரசே செலவிடுவது, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அமுலாக்கிடுவது என ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்க உருப்படியாக ஏதாவது செய்தால் மட்டுமே முடியாட்சியாக உள்ள ஊழலின் ராஜாக்களை ஒழித்திட முடியும். குடியரசை மலர செய்ய முடியும். அசமத்துவத்தை நீக்கி அனைவருக்குமான சமத்துவ சமூகம் உருவாக்குவதும், அதற்கான திட்டங்களை உருவாக்குவதும் அவசியம். இந்தியாவின் அரசியல் சாசன முகவுரையில் கூறப்பட்டுள்ள இந்திய ஒரு மதசார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்கிற வாசகம் நிறைவு பெற வேண்டுமானால் அனைவருக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறச் சூழல் வழங்கப்பட வேண்டும். அந்த சமூகம் ஊழற்ற சமூகமாக பரிணமிக்கும்.


No comments:

Post a Comment