”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

எனது வேலை வாழ்வது, சும்மா உயிரோடு இருப்பதல்ல,.


எனது வேலை வாழ்வது சும்மா உயிரோடு இருப்பதில்லை என்றான் மகத்தான எழுத்தாளனும், புரட்சியாளனுமான ஜாக் லண்டன். ஆம் அவன் வழியில் வாழ்க்கையின் அர்த்தங்களை சுமந்து வாழ்பவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்,. தன்பிள்ளை, தன்பெண்டு, தன் குடும்பம் என வாழாமல் பிறருக்காக, ஊருக்காக, நாட்டின் நலனுக்காக வாழ்பவர்களே என்றென்றும் நினைக்கப்படுகிறார்கள்,.  போட்ட  சாப்பாட்டை முழுமையாக சாப்பிட்டு முடியவில்லை, இன்னும் இரண்டு நாட்களில் நீ காவல்துறையில் வந்து சேர்ந்து விடு என்று அரசாங்கம் அனுப்பிய கடிதாசி என்று இரண்டு இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை பற்றி மட்டும் கவலைப்படாமல் நிகழ்கால மனிதர்களுக்காக போராடினார்கள்,. அதற்காக வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
ஒரு சதத்தினர் வாழ 99 சதத்தினர் தங்கள் உழைப்பை கொடுக்க வேண்டும் என்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈனபிறவினரை எதிர்த்து சாமான்யப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக போராடினார்கள். பேட்டரியும், கஞ்சாவும், கண்ட குப்பைகளையும் போட்டு கள்ளதனமாக காய்ச்சிய சாரயத்தை உழைப்பாளி மக்களுக்கு உற்றிக் கொடுத்து அதில் அதிக வருமானத்தையும், லாபத்தையும் கண்ட வெறி கண்ட வியாபாரக்கூட்டம் அதற்கு எதிராக இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள் என்ற விசயத்தை கேட்டவுடன் தலையில் விழந்த இடியாக நினைத்து உடன் அந்த இளைஞர்களை திரட்டிய, தலைமை தாங்கியவர்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்,. 

அப்படிப்பட்ட நிலையில் தான் கடலுhர் மாவட்ட புதுப்பாளையத்தில் வாலிபர் சங்க கிளை அமைத்து கள்ள சாரயத்திற்கு எதிராக, அந்த பகுதியில் நடைபெற்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக கோபப்பட்ட இளைஞர்கள் இருவர் ஆனந்தனும், குமாரும், அப்பகுதி இளைஞர்களை திரட்டி போராடுகிறார்கள் சமூக அவலத்திற்கு எதிராக, இதனால் ஊரைகெடுக்கும் தங்கள் பிழைப்பில் மண் விழுகிறது என்று நினைத்த அந்த கயவாளி கூட்டத்தினர் தோழர் குமாரையும், ஆனந்தனையும் கண்டம் துண்டமாக துடிக்க துடிக்க வெட்டி கொல்கின்றனர். இயற்கையின் முரண் அன்றுதான் வெளிப்பட்டது.  உலக முழுவதும் போதை எதிர்ப்புதினம் அன்றுதான் கொண்டாடப்படுகிறது. புதுப்பாளையத்தின் இரட்டையர்களாய் மக்களுக்கான போராட்டங்களில் முன்னின்று கள்ளசாராயத்தை ஒழிக்க பாடுபட்ட அந்த இளம் குருத்துக்கள் ஆனந்தனும், குமார் ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்டனர். 
இவர்கள் மட்டுமல்ல கள்ளக்கடத்தல், போதைபொருள், கள்ளச்சாராயத்திற்கு எதிராக மட்டுமல்லாது மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக போராடிய மண்டபம் முத்து, விருதுநகர் சந்துரு, தேன்கனிகோட்டை ஆதித்தவர்த்தன்ஸ்ரீ, சேலம் சீனிவாசன் ஆகியோரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வளவு இழப்புகளும், பலிகளும் எதற்காக, போதையை குறைக்கவேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக,. ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் போர்வாள்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன.
ஊரோத்தில் யாருக்கும் தெரியாத இடத்தில் சாராய கடையை நடத்தியவர்களை பார்த்து உங்களுக்கு வியாபாரம் சரியாக செய்ய தெரியவில்லை, எனவே நீங்கள் எல்லாம் கல்வி வியாபாரம் செய்யுங்கள், இல்லையென்றால் மருத்துவ வியாபாரம் செய்யுங்கள் அதற்கு கல்விநிலையம், மருத்துவமனைகள் கட்டி வியாபாரம் செய்யுங்கள்,. நாங்கள் சாராயத்தினை விற்றுக்கொள்கிறோம்,. என்று ஊரை கொள்ளையடிக்க அரசே கிளம்பியது தான் விநோதங்களின் உச்ச கட்டம். 
போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடானது என ஆளும் அரசுகள் ஒருபுறம் விளம்பரங்களை செய்து கொண்டே மறுபுறம் அரசுகளே மது விற்பனை செய்யும் அவலத்தை செய்து வருகிறது. இது இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல. இந்தியாவில் இனக்குழு காலம் தொட்டே உணவு பழக்கவழக்கத்தின் ஒரு பகுதியாக பழங்களால் உருவாக்கப்பட்ட மதுபானங்களும், போதை வ°துக்களும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வேத காலத்தில் சுராபானம், சோமபானம் என்ற குடி முறையும் இருந்துள்ளது. 
தனிச்சொத்து, அரசு, மதம் என்பது எப்போது தோன்றியதோ அப்போதிருந்தே மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் கருவியாக மதுவும் உற்பத்தி செய்யப்பட்டது. மதுபானம் மட்டுமல்லாது, கஞ்சா, புகையிலை, அபின், ஹெராயின், கசகசா, பாக்கு போன்றவைகளில் இருந்தும் பெறப்பட்டது
. உயரமான  தென்னை, பனை, ஈச்சை போன்ற ஒற்றைத்தடி புல்வகை மரங்களில் இருந்து கள் வடிக்கும் முறையும் கண்டறியப்பட்டது மட்டுமல்ல, அதனை செய்வதற்கு என்று சமூகத்தில் சாணார், ஈழவர், நளவர் என சாதிகளையும் உருவாக்கியது.
இந்தியாவில் குப்த மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த சாணக்கியர் மதுவை விற்பது அரசின் செயல்களில் ஒன்றாக அறிவித்தார். உழைக்கும் மக்களிடம் இருந்து விசுவாசத்தையும், உழைப்பையும் அரசு நிரந்தரமாக பெற வேண்டுமானால் கட்டுப்பாட்டோடு கூடிய மது பழக்கத்தை அரசே பொறுப்பேற்று செய்திட வேண்டும் என அதற்கான விதிமுறைகளை உருவாக்கியவர் (அர்த்தசா°திரம் 2.25 ஆம் அத்தியாயம் 17 முதல் 34 வரை ). கின்வா, மேதகம், ப்ரசன்னா என்று மூன்றுவகையான மதுபானங்களையும் குறிப்பிட்டுள்ளார். இவைகள் அரிசிமாவு, க்ரமுகா பட்டைகள், பழங்கள், பதா, லோதா, தெஜூவாதி, ஏலம், வலுகம், அதிமதுரம், திரட்சைச்சாறு, பிரியங்கு, மஞ்சள், கருமிளகு, வெல்லம் போன்றவைகளில் இருந்து மதுபான உற்பத்தி  செய்யும் முறை குறித்தும், மதுவிற்பனைக்கான மையங்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. 
அன்றைய காலத்தில் நிலவரிக்கு அடுத்து அதிகமான வருமானத்தை மதுவிற்பனை வரியின் மூலம் கிடைத்ததுள்ளது.  மது அருந்துவதற்கான குடி சாலைகள் சொகுசாகவும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டும் அமைக்கப்பட வேண்டும், மேலும் நடன மங்கைகளை கொண்டு நடனங்கள் நடத்தப்பட வேண்டும் என்று எழுதியுள்ளார் சாணக்கியர். அரசாங்கமே குடிசாலைகளை கட்டி பராமரிக்க வேண்டும் என்ற அர்த்த சா°திரம், மக்கள் வேறெங்கும் குடிக்கக்கூடாது. குடிசாலைகளில் அதிக மதுவை சேகரித்து வைக்கவும்  கூடாது என பெரிய பட்டியலை போட்டவர்கள். சூத்திரர்களும், தீண்டதகாதவர்களும் மதுபானக்கடைக்குள் வரக்கூடாது என உத்தரவு போட்டு அதிலும் தீண்டாமையை கடைபிடித்தனர் அன்றே,.
வருணாசிரமக் கோட்பாட்டை தயாரித்த மனுவும் கூட போதை குறித்து பேசியுள்ளான். மதிரா, மத்யா என்ற சாராய வகைகளை குறிப்பிடுகிறான். இந்த குடி கலாச்சாரத்தில் இன பெருமை கொள்ளப்படுவதுதான் வேதனைக்குரியது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்த குடி, தமிழ் குடி என்ற வாசகம் மட்டுமல்ல.. சங்க இலக்கிய காலத்திலேயே “சிறியகட் பெறினே எமக்கீயும், மன்னே பெரியகட் பெறினே யாம் பாடத்தாம் மகிழ்ந்துண்ணும் மன்னே’’ என்று அவ்வை அதியமானை புகழ்ந்து பாடியுள்ளதாக (புறநானுhற்று 235) குறிப்பிடுகிறது. தற்போதைய மொழியில் சொல்வதென்றால் குவட்டர் இருந்தால் எனக்கு கொடுத்துவிடுவான், புல் இருந்தால் சேர்ந்து அடிப்போம் என்பான் அதியமான்.. என புளித்த பழரசத்தை  கொடுத்த அதியமானை பார்த்து அவ்வை சொன்னதை தங்களின் தேவைக்கேற்ப அன்றே பெண்களும் குடிப்பழக்கம் பெற்றிருந்தனர். எனவே ஆண்கள் குடிப்பது மட்டும் எப்படி தவறாகும் என்ற கேள்வியை முன்வைத்து அதிபுத்திசாலிகள் குடிமக்கள் குடியை நியாயப்படுத்தும் நடவடிக்கை அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகின்றனர்.
கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு பின் அயல்நாட்டு மதுபான வகைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காலனிய ஆட்சியினரால் 1906ம் ஆண்டு மதுவகைகள் குறித்து ஒரு அரசாணையை வெளியிட்டனர். அதில் மிதமாக குடிப்பவர்கள் பழக்கத்தில் தலையிட இந்திய சர்க்காருக்கு எவ்வகை விருப்பமுமில்லை. அதே நேரத்தில் குடிப்பதற்கான துhண்டுதலை குறைப்பதும், அதீதமாகக் குடிப்பதை தடுப்பதும் சர்க்காரின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. இது ஒருவகையில் வர்ணசிரமக் கோட்பாட்டை தனது தேவைக்காக காலனிய ஆட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது நில வருவாய்க்கு அடுத்தப்படியாக குடிவரி இருந்தது. இந்த வரிச்சுமை அனைத்தும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையே தாக்கியது.

பலாத்காரத்தை செலுத்தி அதிகாரத்தில் இருந்தவர்கள் பொழுதுபோக்கிற்கு மதுவை பயன்படுத்தினர். ஆனால் இதரர்கள் உடல் உழைப்பை செலுத்துபவர்கள் சோர்வை மறந்து தங்களை புதுப்பித்துக்கொள்ள மது அருந்தலாம் என்றனர். ஆனால் அடுத்தநாள் உடலுழைப்பில் ஈடுபட வேண்டும். எனவேதான் இந்த கட்டுப்பாடுகளை வெள்ளையர்களும் சரி, சாணக்கியர் காலத்திலும் சரி எப்போதும் உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தங்களது நலனை பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து உடலுழைப்பினரை கேள்வி கேட்கும் மனோபவத்திற்கு வராமல் இருக்கும் நிலைக்கு பல காரணிகளை உருவாக்கினார்கள்.
அதில் மதுவும் ஒன்று என்றால் மிகையாகாது. ஆம் இங்கிலாந்தில் கூட தொழில் முதலாளிவர்க்கம் தோன்றிய போது, உடலுழைப்பு தொழிலாளர்களை சாராய கடைகளில் இருந்து தொழிற்சாலையை நோக்கி விரட்டியடிக்க பெரும்பாடாய் இருந்தது என்று குறிப்பிடுகின்றனர். இத்தருணங்களில் ஆளும் வர்க்கத்தின் உபரிக்கும். லாபத்திற்கும் பொருளியல் ரீதியாக நெருக்கடி வரும் போது அறவழி கோட்பாடுகளின் மூலம் குடிக்கு எதிரான கருத்தியலையும் முன்வைத்தனர். அதே நேரத்தில் ஆளும் அரசுகள் போதை பழக்கத்தை தங்களது வர்க்க நலனுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இதன் நீண்ட கால பின்விளைவுகளையும், அதற்கு சமூகம் கொடுக்கும் விலையை பற்றி கவலைப்படுவதில்லை. 
இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகத்தின் பொதுப்புத்தியை திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகின்றன. இப்படி முரண்பட்ட நிலையை கள் பயன்படுத்திய கல் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடி மட்டுமல்லாது இதர குடிகளும் குடி குறித்த கோட்பாடுகளையும், குடிவிலக்கு குறித்த கோட்பாடுகளையும் அவ்வப்போது முரண்பட்ட நிலையில் எடுத்து வந்துள்ளன. 
1950ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியல் சாசனம் மதுவிலக்கு குறித்து “உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படைவாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறது. 
மதுவிலக்கை அமலாக்கி அனைத்து உழைப்பாளி மக்களையும் காப்பாற்றிய கடவுள் நரேந்திர மோடி என்று தமிழ்நாட்டில் பலர் கூப்பாட்டை இந்ததேர்தலின் போது போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் இருக்கிறது, பெட்டி கடைகளில் கூட சாராயம் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையமே இந்தியாவில் பிடிபட்ட மதுவில் அதிகளவு கைப்பற்றப்பட்டது குஜராத்தில் தான் (1.16 கோடி மது பாட்டில்கள்) என்று அறிவித்தது.  அந்த அளவிற்கு சுத்த சுயம்புகள் தான் நாட்டில் உளாவி வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தமிழகத்தில் 23000 கோடி ரூபாயும். கேரளாவில் 8000கோடி, கர்நாடகாவில் 10,500 கோடி என தென்மாநிலங்களிலேயே ஆண்டுக்கு சுமார் 40000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடப்பதாக சொல்லப்படுகிறது.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் இன்று கேட்க ஆரம்பித்துள்ள நிலையில், கள்ளசாராயம் பெருகிவிடும் அதனால் தான் மதுவிலக்கை அமுல்படுத்தவில்லை என்று ஆட்சியாளர்கள் சொத்தை காரணங்களை சொல்லி வருகிறார்கள். ஆனால் உண்மையில் 2011ம் ஆண்டு மட்டும் மதுவிலக்கு சோதனையில் 1057 வழக்குகள் பதியப்பட்டுள்ளது கள்ள சாராயம் காய்ச்சியதாக.. இது டா°மாக் கடைகள் வந்ததால் கள்ளசாராயம் ஒழிக்கப்பெறும் என்று அமைச்சர்கள் சொன்ன காலத்தில் தான் இத்தகைய கள்ளச்சாராய காய்ச்சலும் நடந்துள்ளது. சாலை விபத்துக்களின்  மூலம் மது அருந்தி வாகனம் ஒட்டியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. 60 சதம் விபத்துகள் இதனால் நிகழ்கிறது. 
உலக சுகாதார நிறுவனம் குடிப்பழக்கம் உடையவர்கள், குடி அடிமைகள் என்று இரண்டு வகையாக குடியர்களை பிரிக்கிறது. உடல் உணர்வுகளை மரத்துப் போகச்செய்து உறக்கத்தை உண்டு பண்ணக்கூடிய தன்மையுடைய பொருள்களையே போதை மருந்துகள் என்று அழைக்கின்றனர். இவை மூளைச் செல்களுக்குள் சென்று சிந்தனை, உணர்வு, சொல், செயல் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் படைத்தன. இது  மூளையின் பணியை துhண்டுவது (துhண்டிகள்), தாமதப்படுத்துவது ( சோர்வூட்டிகள்), கற்பனை மற்றும் மாயத் தோற்றங்களை உருவாக்குவது (தொடு உணர்வோ, கேட்பதோ, பார்ப்பதோ இல்லாமல்  உணர்வது).
இப்படி தேவையில்லாத ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது அது குறிப்பிட்ட நாட்களில் தேவையுள்ள ஒன்றாக மாறிவிடுகிறது.  போதையுணர்வும் காலப்போக்கில் தேவையான ஒன்றாக பயன்படுத்துவர்களுக்கு மாறிவிடுகிறது. இதனால் தன்னிலை மறந்து தவறுகளையும், குற்றங்களையும் செய்ய ஆரம்பிக்கின்றனர். இதனால் ஏற்பட்ட சமூக தீமைகள் ஏராளம், ஏராளம்.  
இன்று இளைஞர்களை கவ்விப்பிடிக்கும் இதர அம்சங்களாக திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள், விளம்பரங்கள், ஐபிஎல் கிரிக்கெட், நுகர்வு வெறி அனைத்தும் ஒருவித போதையை ஏற்படுத்தும் கூறுகளாக வளர்ந்து வருகிறது. இது தேசத்தின் வளர்ச்சியையோ, தனி மனிதன் வளர்ச்சியையோ மையப்படுத்துவதில்லை. அத நேரத்தில் அவனின் தன்னம்பிக்கை, போர்குணம், சுயமரியாதையை கைவிட செய்கிறது. இவைகளில் இருந்து மீள மது அருந்துதல் என்பது பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வாக கருதலாம்.  நிரந்தரமாக மீளமுடியாத ஆழ்கடல் பிரச்சனைக்குள் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.    
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள மற்றொரு புள்ளி விபரத்தின் படி உலகில் 200 கோடிகக்கும் (2 பில்லியன்) அதிகமானவர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். அவர்களில் 750 லட்சம் பேர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 2.5 கோடி பேர் மது சார்ந்த நோய்களால் இறக்கின்றனர். இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோரில் 9 சதம் பேர் நேரிடையாக மதுவால் இறக்கின்றனர்.  மாறிவரும் சமூக கட்டுப்பாடுகள், நகரமயமாக்கல், மது எளிதாக கிடைத்தல், ஏற்றுமதி இறக்குமதியில் வெளிநாட்டு மதுக்கள் தாராளமாக கிடைத்தல், வணிக காரணங்களுக்காக அரசே நடத்துதல் போன்றவை வேகமாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மதுப்பழக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 1950 களில் மது அருந்துவோரின் சராசரி வயது 23 ஆக இருந்தது. 1990 களில் 19 வயதாக இருந்தது. தற்போது 13 வயதாக குறைந்துள்ளது. இது மேலும் குறைந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனென்றால் பேய்கள் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றார் பாரதி,. அரசே மக்களை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவு இன்று தமிழ்நாட்டில் ஆறில் ஒருவர் மது அருந்துகிறார். 
சுதந்திரப்போராட்ட காலத்தில் கள்ளுக்கெதிரான போராட்டம் மக்களை ஒன்று திரட்ட பயன்பட்டது என்றால் இன்றைய டா°மாக் கலாச்சாரத்திற்கு எதிராக தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்களும் கொள்கை ரீதியாக தங்களை அறிவித்துக் கொண்டு களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வார்கள் என்றால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கதவுகள் திறக்க வாய்ப்புள்ளது. இதை அவர்கள் சமூக சார்ந்த பிரச்சனையாக பார்த்தார்கள் என்றால் நாட்டுக்கு நல்லது. மக்களுக்கும் நல்லது. வாக்கு வங்கி சார்ந்து பார்த்தால் ? மக்களின் கதியும், தேசத்தின் கதியும் அதோ கதிதான்,. எனவே  வரும் ஆண்டுகளில் உலக போதை எதிர்ப்பு தினத்திற்கு சம்பிரதாய அறிவிப்புகளையும், உறுதி மொழிகளையும் ஏற்பதை விட்டு தேசம் காக்க கடலுhர் குமார், ஆனந்தனை போல் களத்தில் இறங்கி போராடுவோம். ஏனெனில் இது காத்திருக்கும் தருணமல்ல,.. களத்தில் இறங்கி போராடும் தருணமிது,. வாருங்கள், களமிறங்குவோம் போதைக்கு எதிராக !!!

No comments:

Post a Comment