”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

பொழுதெல்லாம் உழைத்த செல்வம் கொள்ளை கொண்டு போகவோ

பொழுதெல்லாம் உழைத்த செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, ஆண் பிள்ளை அல்லவோ, உயிர் என்ன வெல்லமோ, கண் துஞ்சுமோ? என்று இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் சுதேசி கப்பலை, வெள்ளையனுக்கு எதிராக ஓட்டிதோடு, தொழிலாளர்களின் உரிமைக்காக சங்கம் அமைத்து போராட்டம் நடத்திய காரணத்திற்காக பிரிட்டீஸ் அரசினால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற மாமனிதன் வ.உ.சியை சந்தித்துவிட்டு மகாகவி பாரதி கர்ஜித்த கர்ஜனையே., மேற்கண்ட வார்த்தைகள். இந்த நாட்டின் வளங்கள் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளையனிடம் விடுதலைப்பெற்று கொள்ளையர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டோமா? என்று அச்சப்படும் அளவிற்கு நாளுக்கு நாள் அந்நியர்களிடம் இந்திய நாட்டை வேட்டையாட அனுமதித்து வருகின்றனர்.

அரேபிய சிவப்பு கம்பளம்
இன்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்திருக்கும் நரேந்திர மோடியும் ஏகபோக நிறுவனங்களின் பிரதிதியாகவே காட்சி அளிக்கிறார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்என்றார் மகாகவி பாரதி., ஆனால் இந்தியா நாட்டின் உழவையும், தொழிலையும் அழித்துவிட்டு நிதியை மட்டும் மூலதனமாக போட்டு குறுகிய காலத்தில் எப்படி பணத்தை அள்ளிச் செல்வது என்பதே இன்றைய கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்கையாக மாறியுள்ளது. இந்திய நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் 2014 மார்ச் இறுதி வரை ரூ 9,61,522,00 கோடி ரூபாய்கள் முதலீடுகள் செய்ய இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ 65,406 கோடி ரூபாய்( 13197 மில்லியன் டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 68 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம்-2023 மூலம் வளமையும், வளர்ச்சியும் இருக்கும். இல்லாமையும், வறுமையும் இல்லாமல் போகும் என்று இலக்கு வைத்து அரேபிய சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர் பல பன்னாட்டு கம்பெனிகளை.,


உலகின் மிகப்பெரிய கார் கம்பெனிகளில் ஏழு கம்பெனிகளையும், உலக மொபைல் சந்தையில் பெரும் போட்டியாளராக உள்ள நோக்கியா கம்பெனி போன்றவற்றையும் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விட்டோம். இனி அனைத்து வளங்களும் தானாக வந்து விழும் என்று கனவு கண்டு அள்ளி கொடுத்தார்கள் சலுகைகளை.,, அதற்கு பல பெயர்களை வைத்தார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள் என ஏராளம்,. இவற்றிற்கான அடிப்படை கட்டமைப்பு களுக்கு படு பந்தவான அறிவிப்புகள்., கடந்த காங்கிரஸ் அரசும் சரி, தற்போதைய பிஜேபி அரசும் சரி., அதற்கு ஒத்து ஊதும் அரசுகளாக தமிழ்நாட்டை ஆண்ட திமுகவும் சரி, தற்போதைய அதிமுகவும் சரி,. தமிழ்நாட்டில் மட்டும் 29500 ஏக்கர் நிலம் இதுவரை 12 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி ஏக்கர் ரூ 8 லட்சத்திற்கு வாங்கி நோக்கியா போன்ற நிறுவனங்களுக்கு ரூ 4.5 லட்சத்திற்கு 210 ஏக்கர் வரை கொடுத்துள்ளது. தென்மாவட்டங்களில் சுமார் 20,650 ஏக்கர் வரை நிலங்கள் எடுக்கப்பட உள்ளன.

அதிகாரத்தில் கை வைக்காதே
தற்போதைய மத்திய அரசின் 2014-2015 ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அருகில் 100 ஸ்மாட் நகரங்கள் அமைப்பது, மூன்றாம், இரண்டாம் கட்ட நகரங்களில் விமான நிலையம் அமைப்பது, 16 புதிய துறைமுகங்களை உருவாக்குவது, 5000 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன கிடங்குகளை அமைப்பது என எல்லாம் பிபிபி திட்டத்தில் அறிவித்து ஆடு மேய்த மாறியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு., என்ற பழமொழிக்கு ஏற்ப பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்ய அவர்களிடமே காசு பார்க்க சொல்லும் ஏற்பாடு., கேட்டால் பில்ட், ஆப்ரேட், டிரன்ஸ்பர் ( நிர்மாணி, இயக்கு, மாற்று ) திட்டத்தில் இந்தியாவின் மனித வள மேம்பாடு தாரை வார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய நாட்டில் அதிகப்படியான அந்நிய மூலதனம்  அடிப்படைக்கட்டமைப்பு, சேவை, கல்வி, வர்த்தகம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் அனுமதிக்கப்படுகிறது, பெரும் பகுதி மொரிசீயஸ் நாட்டின் வழியாக நிதி சார்ந்த மூலதனமாக அனுமதிக்கப் படுகிறது. 24 முதல் 61 சதவீதம் வரை இந்த வழியில் வருவதால் கறுப்புப்பணம் அதிகரிப்பும் நடைபெறுகிறது. இத்தகைய நிறுவனங்களுக்கு ஏராளமான வரி சலுகைகள், ஊக்குவிப்புகள் 2008-2014 காலத்தில் மட்டும் 30 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


மதுரை ஜிகர்தண்டான்னா சும்மாவா?
முதலீட்டை விட 10 மடங்கு சலுகைகள் வழங்கப்பட்டன, 50 சதவீத மானிய விலையில் நிலம், 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்ட பத்திர பதிவு, 99 ஆண்டுகளுக்கு குத்தகை, கணக்கின்றி நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்ளலாம், தடையில்லா மின்சாரம், அதற்காக துணை மின் நிலையம் அமைத்து உற்பத்தி செய்து கொள்ளலாம், மிச்சமானால் விற்றுக் கொள்ளலாம், அதற்கு வரி கிடையாது, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தனியான சாலை வசதி, அருகாமை துறைமுகம், விமான நிலையம், பறக்கும் மேம்பாலம், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு வாட் வரி, சுங்க வரி கிடையாது, விற்பனை வரியை அரசே திருப்பி கொடுக்கும், வருமான வரியில் 20 சதவீதம் விலக்கு என்று கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாய் வாரி வாரி கொடுத்தால் எந்த நிறுவனம் தான் வரமாட்டேன் என்று சொல்லும்? வெயிலில் சுத்துனவனுக்கு மதுரை ஜிகர்தண்டா கொடுத்த வேண்டம்னா சொல்வான்? இன்னும் இரண்டு கொடு என்றுதானே கேட்பான்,.,

அதனால் தான் போர்டும், ஹீண்டாயும், போர்டு, பிஎம்டபிள்யூ, ரெனால்ட், நிசான், டேம்லர், செய்ண்ட் கோபைன், டெல், அசோக் லேலண்ட், யமஹா, நோக்கியா போன்ற நிறுவனங்கள் சென்னையை சுற்றிய பகுதியை தென்னிந்தியாவின் டெட்ராய்ட்என்கிறார்கள். இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் 30 சதவீதம் சென்னையில் உற்பத்தியாகிறது. சென்னையில் நிமிடத்திற்கு 3 கார்களும், 75 விநாடிக்கு ஒரு சரக்கு வாகனமும் உற்பத்தியாகிறது என பெருமை பொங்க பேசியவர் முதல்வர் ஜெயல்லிதா.

வேலையில்லா பட்டதாரி
இந்த நிறுவனங்கள் எல்லாம் வந்தால் வேலைவாய்ப்பு கூடுதலாகும், வேலைவாய்ப்பு நிரம்பி வழியும் என்றார்கள், ஆனால் உண்மையில் இந்த நிறுவனங்களின் பித்தலாட்டம் ஒவ்வொன்றாக வெடித்து கிளம்ப ஆரம்பித்துள்ளன, 2013-2014 ஆண்டில் மட்டும் பல்வேறு துறைகளில் 5 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2005 முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் இந்தியாவில் 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆனால் இதே காலத்தில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் இழந்திருக்கிறது என்று திட்டகமிஷனின் அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

நெய்டா, குர்க்கான் பகுதிகளில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன, மாருதி நிறுவனத்தின் அத்துமீறல்கள் எப்படி என்பது உலகம் அறிந்த செய்தியாகும், 2005-2006 நிதியாண்டில் மட்டும் 1915 பன்னாட்டு நிறுவனங்களில் 411 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட உண்மையை அன்றைய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மக்களவையில் போட்டு உடைத்தார். தற்போது தமிழ்நாட்டிலும் 99 ஆண்டுகள் இருந்து வேலைவாய்ப்பை பெருக்குவேன் என்று சொன்ன நோக்கியா, 9 ஆண்டுக்குள் கடையை மூடி நடையை சொந்த ஊருக்கு 25000 கோடி ரூபாய் லாபத்தோடு சுமார் ரூ 21000 கோடியை வரி ஏய்ப்பு செய்துவிட்டு போகிறது. இதில் பணியாற்றிய 22000 தொழிலாளிகளை நடுத்தெரு நாராயணர்களாக மாற்றி உள்ளது., 25, 26 வயதில் விஆர்எஸ் பெறுவது என்பது யோசிக்கவே முடியாத விசயம், இனி எந்த நிறுவனத்திற்கு போனாலும் மீண்டும் 4000, 5000 என குறைந்த சம்பளத்தில்தான் வாழ்க்கையை தேடும் நிலை உருவாகும்.

இது 5 ஆண்டுகள் வேலை செய்தால் கிராஜுட்டி கிடைக்கும், இஎஸ்ஐ, பிஎப் போன்ற சமூக பாதுகாப்பும், சம்பள உயர்வும் இனி மீண்டும் 5 ஆண்டுகள் கிடைத்தாலே புதிய நிறுவனத்தில் பிடிக்கப்படும் என்றால் எங்கே உள்ளது சமூக பாதுகாப்பான வேலை,. இதில் இன்னொரு உண்மையும் ஒளிந்துள்ளது, பொருளாதார நிபுணர் திரு.சி.பி.சந்திரசேகர் அவர்கள் தனது ஆய்வில் கடந்த 30 ஆண்டுகளில் ஊதிய விகிதம் என்பது தொழிலாளர்களுக்கு 30.3 சதவீதத்திலிருந்து 11.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் முதலாளிகளின் லாபவிகிதம் 23.4 சதவீதத்திலிருந்து 56.2 சதவீதமாக அதிகரித்துள்ளது, இதனாலேயே தற்காலிக பணியாளர்கள் பெருகி வருவதும், மருத்துவ பலன்கள், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் இல்லாதது போன்றவைகளுக்கு காரணமாக அமைகிறது,

இரும்புக்கோட்டை ஓநாய்கள்
தனக்கு எங்கு பாதுகாப்பில்லையோ அங்கிருந்து கிளம்பி பாதுகாப்பான இடத்தை நோக்கி மூலதனம் பயணப்படும்என்றார் மார்க்ஸ். பெரும் பகுதி பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்தை அனுபவித்து விட்டு வேறு இடங்களுக்கு லாபம் தேடி மூலதனத்தை அப்படியே பெயர்த்தெடுத்து சென்று கொண்டு இருக்கின்றன. இப்படிதான் படிக்கிறது ராமயாணம், இடிக்கிறது பெருமாள் கோவில் என்ற கதையாய் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று ஒரு புறம் சொல்லி வெளிநாட்டு கம்பெனிகளை அழைத்து வந்தால் மறுபுறம் இருக்கறது சுருட்டிக்கிட்டு வந்தவரை லாபம் என்று அடுத்த இடத்திற்கு நடையை கட்டுகிறது. 

மத்திய அரசு தற்போது வரை 577 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி கொடுத்துள்ளது, இதில் 177 இடங்களில் செயல்படுகிறது, 389 இடங்களில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தான் இவர்கள் வரும்போதே புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன சலுகை, உதவுவதற்கான அரசின் கடமைகள், உரிமைகளற்ற தொழிலாளர்கள், நுழைய முடியாத தொழிற்சங்கங்கள், கவச குண்டலமாய் அரசின் அடக்குமுறை உத்தரவாதம் என்ற இரும்புக்கோட்டைகளாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகிறது, இதில் சொகுசாய் வாழும் ஓநாய்கள், அம்பிகாவதி போன்ற பெண்ணின் உயிர் முக்கியமல்ல இரண்டு கோடி ரூபாய் மிஷின் உடைந்துவிடக்கூடாது, 15 நிமிடம் இயந்திரம் நின்றால் லாபம் கெட்டுவிடும் என்று மனித ரத்தத்தை, உயிரை விலை கேட்டுக்கும் முரட்டு மிருகங்களாய் அலைந்து கொண்டு இருக்கிறது.

சதுரங்க வேட்டை
ஏமாறும் வரை ஏமாற்றலாம் என பன்னாட்டு நிறுவனங்கள் மக்களை மூடர் கூட்டமாய் நினைத்து ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் கண்ணுக்கு தெரியாமல் ஒரு கூத்து நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீர் மாசுபடும் போது, 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீரை அதற்காக செலவழிக்க வேண்டியுள்ளது. மேற்படி கார் கம்பெனிகள் தயாரிக்கும் அந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கணக்கின்றி தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக இருங்காட்டுக்கோட்டை, திருபெரும்புதூர், ஒரகடம் தொழில் பூங்காக்களுக்காக செம்பரம்பாக்கம் ஏரியில்இருந்து நாளொன்றுக்கு 50 லட்சம் காலன் தண்ணீர் வழங்கப்படுகிறது, இது 100 லட்சம் காலனாக உயர்த்தப்படவிருக்கிறது. இதற்காக 35 முதல் 40 சதவீதம் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.


எங்கு, தவித்த வாயிக்கு தண்ணீர் கொடுத்த தமிழ்நாட்டில், 10 ஆண்டுகளில் தண்ணீர் பாக்கெட்-3 ரூ, தண்ணீர் பாட்டில்-10ரூ, 15ரூ, 20ரூ, 25ரூ, தண்ணீர் கேன்-40ரூ, 50ரூ என சாதாரண மக்கள் காசு கொடுத்து வாங்கும் நீரை, இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுப்பது, குறைந்த விலையில் லிட்டர் 37 பைசாவிற்கு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பது பார்த்தாலே புரியும். 

இதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் 72 சதவீதம் குடிப்பதற்கு பயனற்றதாக உள்ளது. மேலும் 21 மாவட்டங்கள் நிலத்தடி நீர் அபாய கட்டத்தை நோக்கி சென்றுவிட்டது என பொதுப் பணித்துறையில் நீர்ப்பிரிவு கூறுகிறது.  இந்த லட்சணத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகருக்கு குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு என்று பவானி ஆற்றில் இருந்து மூன்றாவது குடிநீர் திட்டத்தை புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்படுத்தியது, இதன் பின்னணியில்  யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் என்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. தற்போது தமிழக அரசு சட்டமன்றத்தில் நான்காவது குடிநீர் திட்டத்தை இந்த நிறுவனத்திடமே வழங்கலாம் என்று முன்மொழிந்துள்ளது.

பாலாற்றின் கரையோரங்களில் மட்டும் நாளொன்றுக்கு 4 கோடி லிட்டர் உறிஞ்சப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இன்றைய நிலையில் உலகில் தண்ணீர் வியாபாரம் பெட்ரோலிய எண்ணெய் வியாபாரத்திற்கு அடுத்தப்படியாக ரூ 40 லட்சம் கோடிக்கு நடைபெறுகிறது. இந்தியாவிலும் கணிசமாக தண்ணீர் வியாபாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது, கங்கைகொண்டானில் கொக்கோலா நிறுவனம் 37 பைசாவிற்கு ஒரு லிட்டர் தண்ணீர் வாங்கி, 18 ரூபாய்க்கு பாட்டிலில் அடைத்து லாபம் பார்க்கிறது. தமிழக அரசே அம்மா தண்ணீர் என்று 10 ரூபாயில் வியாபாரம் பார்க்கிறது,

சென்னையில் மாசுபடுதலின் அளவு அதிகரித்து கொண்டே வருவதை தடுக்க ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 2013ல் ஆகஸ்டில் சிஎஸ்சி என்ற அமைப்பின் ஆய்வில், 10 மைக்ரோ மீட்டருக்கு குறைவான துகள்களின் அளவு 2007ல் 32 மைக்ரோ கிராமாக இருந்தது, 2011ல் 94 மைக்ரோ கிராமாக உயர்ந்துள்ளது. இதனால் மூச்சுவிடுதல், நுரையீரல் தொடர்பான வியாதிகள் அதிகரித்துள்ளது. இது சென்னையை சுற்றியுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், சிப்காட், சிட்கோ, தாட்கோ போன்ற நிறுவனங்களில் இருந்து வெளியேறும் புகைகளால் மேலும் காற்றுமண்டலம் மாசடைந்து வருவது, அமில மழை போன்ற ஆபத்தை நோக்கி தள்ளி விடுகிறது. இவற்றை சரிசெய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் எந்த மறு முதலீட்டையும் செய்வதில்லை. தண்ணீரை கெடுத்ததுடன் தற்போது காற்றையும் கெடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

காவேரி படுகையில் 6.25 கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் எரிவாயு எடுக்க, 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்களில் எரிவாயுகுழாய் அமைக்க, அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்ட ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்ரேஷன் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனம் சிபிஎம் என்ற பெயரில் ஹரியானாவில் பதிவு செய்து, காவேரி படுகையில் ஒஎன்ஜிசி நிறுவனத்தோடு இணைந்து 100 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் விவசாயத்துறையில் 35 ஆண்டுகளில் 35 லட்சம் கோடி ரூபாய் இழந்து 6.25 கோடி ரூபாய் மீத்தேன் வாயு எடுக்க அனுமதிக்கிறது மத்திய அரசாங்கம். இந்த நிறுவனம் 1993ல் இந்திய நிலக்கரி நிறுவனத்தோடும், 2001ல் ரானிகஞ்சில் எரிவாயு கிணறு தோண்ட மத்திய அமைச்சகத்தோடும் ஒப்பந்தம் செய்து கொண்டது. இப்படி இந்தியாவின் இயற்கை வளங்களை தங்களது லாப வெறிக்காக கார்ப்ரேட் நிறுவனங்களும், அரசியல் சூதாடிகளும், அதிகாரிகளும், மாபியா கும்பல்களும் இணைந்த இந்த சதுரங்க கூட்டணியின் வேட்டைக்காடாய் இந்தியா மாறிக் கொண்டு இருக்கிறது.

தேசம் என்பது மண் மட்டுமல்ல மக்களும்தான்.,
கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, இன்சூரன்ஸ், வங்கி, பாதுகாப்பு போன்றவைகளில் இந்த அந்நிய நிறுவனங்களின் வருகையும், முதலீடும் தேசத்தின் உடைமைகள் களவு போகவே பயன்படும். இதற்கு மாற்றாக களவு போகும் தேசத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள் நம்மை தவிர என்றுரைத்தானே மாவீரன் பகத்சிங்.,,  அவன் வழியில் தேசம் காப்போம்.,
நன்றி -
 இளைஞர் முழக்கம்
செப் 2014

No comments:

Post a Comment