”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
“கங்கையிலே மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?’’

காங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்றவுடன் “கங்கையிலே மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?’’ என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தானே ஆகிறது. அதற்குள் இப்படியெல்லாம் பேசலாமா? சும்மா ஆறு மாதம் விட்டுதான் பார்க்கலாமே? எதற்கு எடுத்தாலும் இப்படிதான் குத்தம் சொல்லிக்கொண்டே அலைகிறாதா? டிவி பெட்டியிலே மெத்த படித்த இரண்டு மேதாவிகள் கேள்வி எழுப்பி சென்று கொண்டே இருந்தனர். ஆமா இவங்க பேசறதா பார்த்தா சரியாத்தானே இருக்கு என்று டிவி பார்த்துக்கொண்டு இருந்த ராமரும், குமாரும் தலையை ஆட்ட ? அடுத்த பத்துநிமிசத்திலா 8 மணி செய்திகள் என்று செய்திகள் வாசிக்க வந்துட்டாங்க,..

அப்ப பாருங்க செய்தி வாசிப்பவர் சொன்னதை கேட்ட ராமருக்கும், குமாருக்கும் முக போன போக்க,.சும்மா இஞ்சி தின்ன அதுவாட்ட மாறிடுச்சு,.. சும்மா மோடி வந்தா எல்லாம் மாறிடுனும் எல்லா டிவிக்காரனும் சொன்னான்னு நம்பி ஓட்டப்போட்டோம். இப்ப பார்த்த ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள தலையில இந்த போடு போட்டுடாங்களே,. இந்த பொழப்புல இன்னும் ஆறு மாதம் கழித்து பார்க்குறதாம். யாரு அந்த ஆளு இப்படி பேசிக்கிட்டே இருக்கிறான் என்று வாயிக்கு வந்த வார்த்தைகளில் வைய ஆரம்பிக்க,.. ஆமா, உண்மையில் நடந்தது என்ன என்று திரும்பி பார்க்க ஆரம்பித்தேன் மோடியின் ஒரு மாத ஆட்சியை,.

மே 26ம் தேதி திரு. நரேந்திர மோடி பதவியேற்ற  அன்று தமிழர்களின் குறை தீர்க்கும் நாயகன் அவர்தான் அவர் வந்தால் இலங்கை தமிழருக்கு விடிவுகாலம், ராஜபக்சேவை மிரட்டி எடுதது அடிமையாக்கிவிடுவார் என்றெல்லாம் பீலா விட்டு பிரச்சாரம் செய்த வைகோ போன்றவர்களே அரண்டு போகும் அளவிற்கு ராஜபக்சேவை பதவியேற்பு விழாவுக்கு வரவைத்து கூட்டணி கட்சியினருக்கே முதல் ஷாக்கை கொடுத்து அசர வைத்தார் நரேந்திர மோடி. அடுத்த நாட்களில் மோடி தர்பார் ஆரம்பமானது. ஆட்சியின் 2 வது நாளில் காஷ்மீருக்கு 370 சிறப்பு அந்த°து எதற்கு தேவையில்லை, ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் நாட்டையே அதிர வைத்தார். 


5 வது நாளில் ஐம்பது காசு டீசலுக்கு விலையேற்றம் என அறிவித்து நாட்டு மக்களுக்கு  ஷாக் கொடுத்தார் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.  கைய உதறி ஷாக் அடித்த இடத்தினை தடவிக் கொடுப்பதற்குள் அடுத்த ஷாக் என்று ஒவ்வொரு அமைச்சராக கொடுக்க ஆரம்பித்தார்கள். நஜ்மா ஹெப்துல்லா புதியதாக ஒரு குண்டை துhக்கி போட்டார். பார்சி இனத்தை தவிர இந்தியாவில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை என்று இ°லாமியர்களை, கிறி°தவர்களை, சீக்கியர்களை அந்த பட்டியலில் இருந்தே விட்டுவிட்டு பேசி அவர் முடிக்கும், ராமருக்கு கோவிலை உடனே கட்டிவிட முயற்சிகள் துவங்க வேண்டும் என்று ஆர்எ°எ° ன் தலைவர்கள் சொல்ல, அட கொஞ்சாமாவது கேப் விடுங்க என்று சொல்லாம் என்று வாயத்திறக்கும் முன்பே பொது சிவில் சட்டம் கொண்டு வந்துறனும் என்று இன்னொரு தரப்பு சொல்ல,. அனைத்து மட்டத்திலும் இந்தி மொழிதான் இனிமேல் என்று அணுகுண்டை துhக்கி போட்டார்கள். 
மோடியை விழுந்து விழுந்து ஆதரித்த அம்பானி வகையறாக்கள் ஊடகங்களில் ஆருடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ஈராக்கில் உள்நாட்டு யுத்தம் எனவே நமது நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று தன்னுடைய லாப கணக்கை அதிகப்படுத்த சங்கை ஆரம்பத்திலேயே ஊதிவிட்டார். பொதுத்துறை வங்கி பங்குகளை எல்லாம் அந்நிய மூதலீட்டிற்கு திறந்துவிடு, பல வங்கிகளை ஒன்றாக இணைத்திடு, பாதுகாப்பு துறையில் 100 சதம் அந்நிய முதலீடு, என அதானியும், அம்பானியும் அமைத்த கார்ப்ரேடுகளின் கூட்டணி அரசை நிர்பந்திக்க அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. 
இதற்கு தகுந்த மோடி ம°தானாக தினமலர் போன்ற ஊடகங்கள் ஆமாம்ம் சாமி என்று கச்சேரி நடத்த ஆரம்பிக்க, எரிவாயுவிற்கு, ரசாயன உரங்களுக்கு, மண்ணெண்ணெய்க்கு, பெட்ரோலிய பொருட்கள், உணவு தானியங்களுக்கு என்று மானியங்களாக நிறைய கொட்டி கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே மானியங்களை ரத்து செய்யுங்கள் என்று இந்தியாவின் ஏகபோக பெரு முதலாளிகள் கூப்பாடு போட 30 நாள் ஆட்சிக்குள் மோடி அடித்தார் பாருங்கள் பல்டி,..
குஜராத் மாடலை தேசிய மாடலாக்குவோம் என்று  ஊடகங்களில் தன்னை வளர்ச்சி நாயகன் என தம்பட்டம் அடித்து ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு, ஏழை எளிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட அரசு ஜனாதிபதி உரையின் மீது பதிலளித்து உரையாற்றிய மோடி எளிய வார்த்தைகளை உணர்ச்சிப்பூர்வமாக கொட்டித் தீர்த்தார்,. பேசுவதற்கு முன் டீசல்விலையை உயர்த்தினார். “சாப்பிட்ட கை காயவில்லை’’, என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள்,. அதற்குள் மோடி அவர்களின் பிஜேபி அரசு சாமான்யப்பட்ட உழைப்பாளி மக்களின் இடியாய் ரயில்கட்டண உயர்வு, சீசன் கட்டணம் இருமடங்கு உயர்வு, சரக்கு கட்டணம் உயர்வு என அடிமேல் அடியாய் பட்ஜெட்டிற்கு முன்பே வெள்ளோட்டம் விட்டு தாக்குதலை துவக்கியுள்ளது.
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், ரயில் கட்டணதை கடுமையாக உயர்த்தி இருப்பது மேலும் விலைவாசி உயர்வுக்கே வழிவகுக்கும். மோடி அரசு பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே டீசல்விலையை உயர்த்தினார்கள். தற்போது பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதமும், மாதாந்திர சீசன் கட்டணத்தை இருமடங்கும், சரக்கு கட்டணத்தை 6.5 சதமும் உயர்த்தி இருப்பது எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் நடவடிக்கையாகும். 
முந்தைய காங்கிர° அரசின் இத்தகைய மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை மேலும் தீவிரமாக அமலாக்க கார்ப்ரேட்களின் செல்லபிள்ளையான மோடியின் அரசு செயல்படுகிறது என்பதையே இந்த கட்டண உயர்வுகள் காட்டுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும். மேலும் ரயில் போக்குவரத்தை நம்பி 40 சதமான பெட்ரோலிய மற்றும் எரிவாயு பரிவர்த்தனையும், நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, உணவு தானியங்கள் அதிகளவில் ரயிலின் மூலமே நாடு முழுவதும் பரிவர்த்தனையாகிறது. இந்த கட்டண உயர்வுகள் கடும் தாக்குதலை தொழில் மற்றும் விவசாயத்துறையின் மீது நிகழ்த்தும். ஏற்கனவே கடுமையான பணவீக்கத்தில் உள்ள இந்தியாவில் இது மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் நெருக்கடிக் குள்ளாக்கும்.
இதற்கு பின்னால் உள்ள அரசியல் தான் என்ன? மோடி யை வரிந்து கட்டிக்கொண்டு இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆதரிக்க காரணம் என்ன ? தேர்தல் நேரத்தில் மோடி கட்சிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு கோடி கோடியாய் கொட்டி செலவு செய்தார்கள். ஏனென்றால் கார்ப்ரேட்களின் மீட்பாளாராக மோடி இருப்பார், அதற்காக திட்டங்களை வகுப்பார். தேர்தலில் போட்ட காசை மீண்டும் எடுப்பதற்கான நல்ல காலம் மோடியின் ஆட்சிக்காலம் என்று இன்று இந்திய பெரு முதலாளிகள் கொக்கரித்து கொண்டு இருக்கிறார்கள்.
இதற்காகவே காத்து கொண்டிருந்தைப்போல் இந்தியாவின் பங்கு சந்தைப் புள்ளிகள் அனைத்தும் மோடியின் பதவியேற்ப்பை ஒட்டி வெகு வேகமாக உயர்ந்தது. அதானி குழுமத்தின் புள்ளிகள் விண்ணை முட்டும் வேகத்தில் சென்றது. இவர்களின் லாபவெறிக்கு இந்த ஏற்றம் போதாதது தான். இப்போது இறங்க ஆரம்பித்துவிட்டது. பட்ஜெட்டிற்கு முன் நேரடி தாக்குதலை தொடுத்த மோடி அரசு பட்ஜெட்டில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கையை மேற்கொள்வார். குறிப்பாக நிதி மூலதனம் சார்ந்த தாராளமயக் கொள்கைகள் குறித்த சீர்திருத்தங்கள் தொடங்கும் என  கார்ப்ரேட் முதலாளிகள் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். பணவீக்கம்  ஏறத் தொடங்கிவிட்டது.
 2014 ஏப்ரலில் 5.2 சதமாக இருந்தது மே மாதத்தில் 6.01 சதமாகவும், தற்போது 7 சதத்தினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மறுபுறம் நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் வளர்ச்சி அதிகரித்ததன் விளைவு விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.  குறிப்பாக பழங்கள், முட்டை, மீன், இறைச்சி, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன். மீண்டும் வெங்காயம் டில்லியை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கம் 3.6 சதவீதம் வரை உயர்ந்து மொத்தமாக 9.5 சதத்தினை தாண்டி விட்டது. 
இந்த பணவீக்கம் கடுமையாக ஏழை எளிய சாமான்யப்பட்ட மக்களை கடுமையாக பாதிப்பதால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான கிராக்கி அழியாமல் தேக்கத்தை நோக்கி செல்லும் நிலையும், விவசாய உற்பத்தித்துறை கடும் பாதிப்பை நோக்கி செல்வதால் பணபுழக்கம் சுத்தமாக நின்றுபோகும் அபாயமும் உருவாகிவிடும் என்று தங்கள் லாப விகிதம் குறைந்துவிடுமோ என இந்திய கார்ப்ரேட்கள் கவலை கொள்ள துவங்கியுள்ளனர். இதனால் நிதி சீர்திருத்தம் தங்களுக்கு சாதகமாக செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் நிதி அமைச்சர் இப்போதே நுகர்வோருக்கு சலுகை கொடுப்பதாக சொல்லி மொத்த ஆட்டோ மொபைல் துறைக்கும் சலுகையை பட்ஜெட்டிற்கு முன்பே அறிவித்துவிட்டார். 
இத்தகைய நிலையில்தான் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மோடி அறிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிர° ஆட்சிக்காலத்தில் மன்மோகன் சிங் காலத்தின் கடைசி மூன்றாண்டுகளில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் நிதிப்பற்றாகுறை என அறிவித்தார்கள். ஆனால் அந்த பணம் முழுவதும் இந்தியாவின் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகையின் அளவைவிட குறைவான தொகையே ஆகும். அவர்களுக்கு வழங்காமல் இருந்திருந்தால் இந்த பற்றாகுறையே வந்திருக்காது. பிஜேபி, காங்கிர° இரண்டும் சேர்ந்துதான் இந்த நிதி சலுகையை கார்ப்ரேட்களுக்கு வழங்கியது. தற்போது மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பலம் இல்லை என்ற காரணத்தினால் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை நடத்தி அதில் ஒப்புதல் பெற்றுவிடலாம் என குறுக்குவழியை மோடி அரசிற்கு அம்பானி வகையறாக்கள் போதனை செய்ய துவங்கிவிட்டார்கள். 

நிதி நிலையை சரி செய்ய வேண்டும் என்றால் இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பும், உலக வங்கியும் பல பரிந்துரைகளை மோடி அரசுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக  டீசலுக்கான மானியம், சமையல் எரிவாயு மானியம், மண்ணெண்ணெய் மானியங்களை குறைத்து மாத மாதம் விலையேற்றுவது, உணவு பாதுகாப்பிற்கான சேமிப்பு கிடங்குகளை முழுமையாக தனியார் வசம் ஒப்படைப்பது,
 உணவு பாதுகாப்பை ஒழிப்பது, நில கையகப்படுத்தும் சட்டத்தினை திருத்துவது, 100 நாள் வேலைதிட்டத்தை சீரழிப்பது,  வேளாண் பொருட்கள் மானியத்தை குறைப்பது, வங்கிகளை இணைத்து மையவங்கிகளாக மாற்றி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, எல்ஐசி போன்ற நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்பது, ரசாயன உர மானியங்களை வெட்டுவது என ஏராளமான பரிந்துரைகளை வாரி வழங்கியுள்ளன.
இதற்காக மோடியின் வாயின் மூலம் “ ஊழல், திறமையற்ற நிர்வாகம்,  முடிவவெடுப்பதில் நிச்சயமற்ற நிலை’’ என மன்மோகன் சிங்கின் ஆட்சி இருந்தது. இதற்கு மாற்றாக ஊழலற்ற, திறமையான, முடிவெடுப்பதில் பிஜேபி மோடி அரசு இருக்கும் என பிரச்சாரம் செய்து, 99 சதம் ஏழை மக்களை நம்பவைத்தனர். மயங்கியதில் கணிசமாக மத்தியதரவர்க்கத்தினரும், இளைஞர்களுமே ஆகும். இவர்களின் வாயை அடைக்க வேண்டும் என்றால் ஆட்சிக்கு வந்து 30நாள் தானே ஆச்சு,.. அதற்குள் என்ன அவசரம் என்று பல்லவியை பாட ஆரம்பித்துள்ளனர்.
 மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கிவிட்டு இதில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேறு பிரச்சனைகளை கிளப்பிவிட்டு அதில் குளிர்காயும் நடவடிக்கையாக இந்தித் திணிப்பு, காஷ்மீருக்கான 370 சரத்து, பொது சிவில் சட்டம், சிறுபான்மையினர் குறித்து, ராமருக்கு கோவில் கட்டுவது என அறிவித்து மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த பிரச்சனைகளை திசைதிருப்பும் நடவடிக்கை தங்களது வகுப்புவாத நிகழ்ச்சிநிரலோடு  இணைந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
16 மக்களவையில் தேர்வு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 442 பேர் கோடீ°வரர் களாகவும், பிஜேபி உறுப்பினர்களில் 282 பேரில் 230க்கும் மேற்பட்டோர் கோடீ°வரர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு இந்த பாதிப்பு எப்படி தெரியும். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் செல்லபிள்ளைகளாக இருப்பதால் ஏழைகளின் அவல நிலை புரியாது. 
இன்றும் நாடு முழுவதும் 96 சதம் பேர் முறைசாரா தொழிலாளர்களாக எந்தவித சமூகபாதுகாப்பும், ஊதிய உயர்வும் இல்லாமல் 78 சதம் பேர் இந்தியாவில் மருத்துவத்திற்கு கூட கடன் வாங்கி வைத்தியம் பார்க்கும் நிலையே உள்ளது. எனவே அரசியலாக ஆர்எ°எ° என்ற மதவெறி அமைப்பின் உறுப்பாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடியின் அரசியல் ஒருசதம் இந்திய ஏகபோக முதலாளிகளின் ஆட்சியாகவே இருக்கப் போகிறது. அவர்களின் பொருளாதாரக் கொள்கை எந்த விதத்திலும் காங்கிர° கடைபிடித்த நவீன தாராளமயக் கொள்கைக்கு மாற்றாக இல்லை. 
எனவே இந்தியாவிலும் இந்த வலதுசாரி ஆட்சியாளர்களின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 99 சதம் மக்களின் உரிமைகளை பாதுகாக்க கருத்தியல் ரீதியான பிரச்சாரங்களும், இயக்கங்களுமே இன்று வார்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான திசை வழியில் செல்ல வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வது அவசியமாகும். இப்போதே தமிழகத்தின் தந்தி டிவியில் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் 30 நாள் மோடி அரசிற்கு சான்று கொடுத்துவிட்டனர். 61 சதம் பேர் மோடியின் ஆட்சி கடுமையான அதிருப்தியை உருவாக்கி விட்டது. எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று,. 


எனது வேலை வாழ்வது, சும்மா உயிரோடு இருப்பதல்ல,.


எனது வேலை வாழ்வது சும்மா உயிரோடு இருப்பதில்லை என்றான் மகத்தான எழுத்தாளனும், புரட்சியாளனுமான ஜாக் லண்டன். ஆம் அவன் வழியில் வாழ்க்கையின் அர்த்தங்களை சுமந்து வாழ்பவர்களே வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்,. தன்பிள்ளை, தன்பெண்டு, தன் குடும்பம் என வாழாமல் பிறருக்காக, ஊருக்காக, நாட்டின் நலனுக்காக வாழ்பவர்களே என்றென்றும் நினைக்கப்படுகிறார்கள்,.  போட்ட  சாப்பாட்டை முழுமையாக சாப்பிட்டு முடியவில்லை, இன்னும் இரண்டு நாட்களில் நீ காவல்துறையில் வந்து சேர்ந்து விடு என்று அரசாங்கம் அனுப்பிய கடிதாசி என்று இரண்டு இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை பற்றி மட்டும் கவலைப்படாமல் நிகழ்கால மனிதர்களுக்காக போராடினார்கள்,. அதற்காக வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
ஒரு சதத்தினர் வாழ 99 சதத்தினர் தங்கள் உழைப்பை கொடுக்க வேண்டும் என்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈனபிறவினரை எதிர்த்து சாமான்யப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக போராடினார்கள். பேட்டரியும், கஞ்சாவும், கண்ட குப்பைகளையும் போட்டு கள்ளதனமாக காய்ச்சிய சாரயத்தை உழைப்பாளி மக்களுக்கு உற்றிக் கொடுத்து அதில் அதிக வருமானத்தையும், லாபத்தையும் கண்ட வெறி கண்ட வியாபாரக்கூட்டம் அதற்கு எதிராக இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள் என்ற விசயத்தை கேட்டவுடன் தலையில் விழந்த இடியாக நினைத்து உடன் அந்த இளைஞர்களை திரட்டிய, தலைமை தாங்கியவர்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்கள்,. 

அப்படிப்பட்ட நிலையில் தான் கடலுhர் மாவட்ட புதுப்பாளையத்தில் வாலிபர் சங்க கிளை அமைத்து கள்ள சாரயத்திற்கு எதிராக, அந்த பகுதியில் நடைபெற்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக கோபப்பட்ட இளைஞர்கள் இருவர் ஆனந்தனும், குமாரும், அப்பகுதி இளைஞர்களை திரட்டி போராடுகிறார்கள் சமூக அவலத்திற்கு எதிராக, இதனால் ஊரைகெடுக்கும் தங்கள் பிழைப்பில் மண் விழுகிறது என்று நினைத்த அந்த கயவாளி கூட்டத்தினர் தோழர் குமாரையும், ஆனந்தனையும் கண்டம் துண்டமாக துடிக்க துடிக்க வெட்டி கொல்கின்றனர். இயற்கையின் முரண் அன்றுதான் வெளிப்பட்டது.  உலக முழுவதும் போதை எதிர்ப்புதினம் அன்றுதான் கொண்டாடப்படுகிறது. புதுப்பாளையத்தின் இரட்டையர்களாய் மக்களுக்கான போராட்டங்களில் முன்னின்று கள்ளசாராயத்தை ஒழிக்க பாடுபட்ட அந்த இளம் குருத்துக்கள் ஆனந்தனும், குமார் ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்டனர். 
இவர்கள் மட்டுமல்ல கள்ளக்கடத்தல், போதைபொருள், கள்ளச்சாராயத்திற்கு எதிராக மட்டுமல்லாது மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக போராடிய மண்டபம் முத்து, விருதுநகர் சந்துரு, தேன்கனிகோட்டை ஆதித்தவர்த்தன்ஸ்ரீ, சேலம் சீனிவாசன் ஆகியோரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வளவு இழப்புகளும், பலிகளும் எதற்காக, போதையை குறைக்கவேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக,. ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் போர்வாள்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன.
ஊரோத்தில் யாருக்கும் தெரியாத இடத்தில் சாராய கடையை நடத்தியவர்களை பார்த்து உங்களுக்கு வியாபாரம் சரியாக செய்ய தெரியவில்லை, எனவே நீங்கள் எல்லாம் கல்வி வியாபாரம் செய்யுங்கள், இல்லையென்றால் மருத்துவ வியாபாரம் செய்யுங்கள் அதற்கு கல்விநிலையம், மருத்துவமனைகள் கட்டி வியாபாரம் செய்யுங்கள்,. நாங்கள் சாராயத்தினை விற்றுக்கொள்கிறோம்,. என்று ஊரை கொள்ளையடிக்க அரசே கிளம்பியது தான் விநோதங்களின் உச்ச கட்டம். 
போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடானது என ஆளும் அரசுகள் ஒருபுறம் விளம்பரங்களை செய்து கொண்டே மறுபுறம் அரசுகளே மது விற்பனை செய்யும் அவலத்தை செய்து வருகிறது. இது இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல. இந்தியாவில் இனக்குழு காலம் தொட்டே உணவு பழக்கவழக்கத்தின் ஒரு பகுதியாக பழங்களால் உருவாக்கப்பட்ட மதுபானங்களும், போதை வ°துக்களும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வேத காலத்தில் சுராபானம், சோமபானம் என்ற குடி முறையும் இருந்துள்ளது. 
தனிச்சொத்து, அரசு, மதம் என்பது எப்போது தோன்றியதோ அப்போதிருந்தே மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் கருவியாக மதுவும் உற்பத்தி செய்யப்பட்டது. மதுபானம் மட்டுமல்லாது, கஞ்சா, புகையிலை, அபின், ஹெராயின், கசகசா, பாக்கு போன்றவைகளில் இருந்தும் பெறப்பட்டது
. உயரமான  தென்னை, பனை, ஈச்சை போன்ற ஒற்றைத்தடி புல்வகை மரங்களில் இருந்து கள் வடிக்கும் முறையும் கண்டறியப்பட்டது மட்டுமல்ல, அதனை செய்வதற்கு என்று சமூகத்தில் சாணார், ஈழவர், நளவர் என சாதிகளையும் உருவாக்கியது.
இந்தியாவில் குப்த மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த சாணக்கியர் மதுவை விற்பது அரசின் செயல்களில் ஒன்றாக அறிவித்தார். உழைக்கும் மக்களிடம் இருந்து விசுவாசத்தையும், உழைப்பையும் அரசு நிரந்தரமாக பெற வேண்டுமானால் கட்டுப்பாட்டோடு கூடிய மது பழக்கத்தை அரசே பொறுப்பேற்று செய்திட வேண்டும் என அதற்கான விதிமுறைகளை உருவாக்கியவர் (அர்த்தசா°திரம் 2.25 ஆம் அத்தியாயம் 17 முதல் 34 வரை ). கின்வா, மேதகம், ப்ரசன்னா என்று மூன்றுவகையான மதுபானங்களையும் குறிப்பிட்டுள்ளார். இவைகள் அரிசிமாவு, க்ரமுகா பட்டைகள், பழங்கள், பதா, லோதா, தெஜூவாதி, ஏலம், வலுகம், அதிமதுரம், திரட்சைச்சாறு, பிரியங்கு, மஞ்சள், கருமிளகு, வெல்லம் போன்றவைகளில் இருந்து மதுபான உற்பத்தி  செய்யும் முறை குறித்தும், மதுவிற்பனைக்கான மையங்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. 
அன்றைய காலத்தில் நிலவரிக்கு அடுத்து அதிகமான வருமானத்தை மதுவிற்பனை வரியின் மூலம் கிடைத்ததுள்ளது.  மது அருந்துவதற்கான குடி சாலைகள் சொகுசாகவும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டும் அமைக்கப்பட வேண்டும், மேலும் நடன மங்கைகளை கொண்டு நடனங்கள் நடத்தப்பட வேண்டும் என்று எழுதியுள்ளார் சாணக்கியர். அரசாங்கமே குடிசாலைகளை கட்டி பராமரிக்க வேண்டும் என்ற அர்த்த சா°திரம், மக்கள் வேறெங்கும் குடிக்கக்கூடாது. குடிசாலைகளில் அதிக மதுவை சேகரித்து வைக்கவும்  கூடாது என பெரிய பட்டியலை போட்டவர்கள். சூத்திரர்களும், தீண்டதகாதவர்களும் மதுபானக்கடைக்குள் வரக்கூடாது என உத்தரவு போட்டு அதிலும் தீண்டாமையை கடைபிடித்தனர் அன்றே,.
வருணாசிரமக் கோட்பாட்டை தயாரித்த மனுவும் கூட போதை குறித்து பேசியுள்ளான். மதிரா, மத்யா என்ற சாராய வகைகளை குறிப்பிடுகிறான். இந்த குடி கலாச்சாரத்தில் இன பெருமை கொள்ளப்படுவதுதான் வேதனைக்குரியது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்த குடி, தமிழ் குடி என்ற வாசகம் மட்டுமல்ல.. சங்க இலக்கிய காலத்திலேயே “சிறியகட் பெறினே எமக்கீயும், மன்னே பெரியகட் பெறினே யாம் பாடத்தாம் மகிழ்ந்துண்ணும் மன்னே’’ என்று அவ்வை அதியமானை புகழ்ந்து பாடியுள்ளதாக (புறநானுhற்று 235) குறிப்பிடுகிறது. தற்போதைய மொழியில் சொல்வதென்றால் குவட்டர் இருந்தால் எனக்கு கொடுத்துவிடுவான், புல் இருந்தால் சேர்ந்து அடிப்போம் என்பான் அதியமான்.. என புளித்த பழரசத்தை  கொடுத்த அதியமானை பார்த்து அவ்வை சொன்னதை தங்களின் தேவைக்கேற்ப அன்றே பெண்களும் குடிப்பழக்கம் பெற்றிருந்தனர். எனவே ஆண்கள் குடிப்பது மட்டும் எப்படி தவறாகும் என்ற கேள்வியை முன்வைத்து அதிபுத்திசாலிகள் குடிமக்கள் குடியை நியாயப்படுத்தும் நடவடிக்கை அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகின்றனர்.
கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு பின் அயல்நாட்டு மதுபான வகைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காலனிய ஆட்சியினரால் 1906ம் ஆண்டு மதுவகைகள் குறித்து ஒரு அரசாணையை வெளியிட்டனர். அதில் மிதமாக குடிப்பவர்கள் பழக்கத்தில் தலையிட இந்திய சர்க்காருக்கு எவ்வகை விருப்பமுமில்லை. அதே நேரத்தில் குடிப்பதற்கான துhண்டுதலை குறைப்பதும், அதீதமாகக் குடிப்பதை தடுப்பதும் சர்க்காரின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. இது ஒருவகையில் வர்ணசிரமக் கோட்பாட்டை தனது தேவைக்காக காலனிய ஆட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது நில வருவாய்க்கு அடுத்தப்படியாக குடிவரி இருந்தது. இந்த வரிச்சுமை அனைத்தும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையே தாக்கியது.

பலாத்காரத்தை செலுத்தி அதிகாரத்தில் இருந்தவர்கள் பொழுதுபோக்கிற்கு மதுவை பயன்படுத்தினர். ஆனால் இதரர்கள் உடல் உழைப்பை செலுத்துபவர்கள் சோர்வை மறந்து தங்களை புதுப்பித்துக்கொள்ள மது அருந்தலாம் என்றனர். ஆனால் அடுத்தநாள் உடலுழைப்பில் ஈடுபட வேண்டும். எனவேதான் இந்த கட்டுப்பாடுகளை வெள்ளையர்களும் சரி, சாணக்கியர் காலத்திலும் சரி எப்போதும் உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தங்களது நலனை பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து உடலுழைப்பினரை கேள்வி கேட்கும் மனோபவத்திற்கு வராமல் இருக்கும் நிலைக்கு பல காரணிகளை உருவாக்கினார்கள்.
அதில் மதுவும் ஒன்று என்றால் மிகையாகாது. ஆம் இங்கிலாந்தில் கூட தொழில் முதலாளிவர்க்கம் தோன்றிய போது, உடலுழைப்பு தொழிலாளர்களை சாராய கடைகளில் இருந்து தொழிற்சாலையை நோக்கி விரட்டியடிக்க பெரும்பாடாய் இருந்தது என்று குறிப்பிடுகின்றனர். இத்தருணங்களில் ஆளும் வர்க்கத்தின் உபரிக்கும். லாபத்திற்கும் பொருளியல் ரீதியாக நெருக்கடி வரும் போது அறவழி கோட்பாடுகளின் மூலம் குடிக்கு எதிரான கருத்தியலையும் முன்வைத்தனர். அதே நேரத்தில் ஆளும் அரசுகள் போதை பழக்கத்தை தங்களது வர்க்க நலனுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இதன் நீண்ட கால பின்விளைவுகளையும், அதற்கு சமூகம் கொடுக்கும் விலையை பற்றி கவலைப்படுவதில்லை. 
இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகத்தின் பொதுப்புத்தியை திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகின்றன. இப்படி முரண்பட்ட நிலையை கள் பயன்படுத்திய கல் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடி மட்டுமல்லாது இதர குடிகளும் குடி குறித்த கோட்பாடுகளையும், குடிவிலக்கு குறித்த கோட்பாடுகளையும் அவ்வப்போது முரண்பட்ட நிலையில் எடுத்து வந்துள்ளன. 
1950ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியல் சாசனம் மதுவிலக்கு குறித்து “உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படைவாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறது. 
மதுவிலக்கை அமலாக்கி அனைத்து உழைப்பாளி மக்களையும் காப்பாற்றிய கடவுள் நரேந்திர மோடி என்று தமிழ்நாட்டில் பலர் கூப்பாட்டை இந்ததேர்தலின் போது போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் இருக்கிறது, பெட்டி கடைகளில் கூட சாராயம் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையமே இந்தியாவில் பிடிபட்ட மதுவில் அதிகளவு கைப்பற்றப்பட்டது குஜராத்தில் தான் (1.16 கோடி மது பாட்டில்கள்) என்று அறிவித்தது.  அந்த அளவிற்கு சுத்த சுயம்புகள் தான் நாட்டில் உளாவி வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தமிழகத்தில் 23000 கோடி ரூபாயும். கேரளாவில் 8000கோடி, கர்நாடகாவில் 10,500 கோடி என தென்மாநிலங்களிலேயே ஆண்டுக்கு சுமார் 40000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடப்பதாக சொல்லப்படுகிறது.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் இன்று கேட்க ஆரம்பித்துள்ள நிலையில், கள்ளசாராயம் பெருகிவிடும் அதனால் தான் மதுவிலக்கை அமுல்படுத்தவில்லை என்று ஆட்சியாளர்கள் சொத்தை காரணங்களை சொல்லி வருகிறார்கள். ஆனால் உண்மையில் 2011ம் ஆண்டு மட்டும் மதுவிலக்கு சோதனையில் 1057 வழக்குகள் பதியப்பட்டுள்ளது கள்ள சாராயம் காய்ச்சியதாக.. இது டா°மாக் கடைகள் வந்ததால் கள்ளசாராயம் ஒழிக்கப்பெறும் என்று அமைச்சர்கள் சொன்ன காலத்தில் தான் இத்தகைய கள்ளச்சாராய காய்ச்சலும் நடந்துள்ளது. சாலை விபத்துக்களின்  மூலம் மது அருந்தி வாகனம் ஒட்டியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. 60 சதம் விபத்துகள் இதனால் நிகழ்கிறது. 
உலக சுகாதார நிறுவனம் குடிப்பழக்கம் உடையவர்கள், குடி அடிமைகள் என்று இரண்டு வகையாக குடியர்களை பிரிக்கிறது. உடல் உணர்வுகளை மரத்துப் போகச்செய்து உறக்கத்தை உண்டு பண்ணக்கூடிய தன்மையுடைய பொருள்களையே போதை மருந்துகள் என்று அழைக்கின்றனர். இவை மூளைச் செல்களுக்குள் சென்று சிந்தனை, உணர்வு, சொல், செயல் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் படைத்தன. இது  மூளையின் பணியை துhண்டுவது (துhண்டிகள்), தாமதப்படுத்துவது ( சோர்வூட்டிகள்), கற்பனை மற்றும் மாயத் தோற்றங்களை உருவாக்குவது (தொடு உணர்வோ, கேட்பதோ, பார்ப்பதோ இல்லாமல்  உணர்வது).
இப்படி தேவையில்லாத ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது அது குறிப்பிட்ட நாட்களில் தேவையுள்ள ஒன்றாக மாறிவிடுகிறது.  போதையுணர்வும் காலப்போக்கில் தேவையான ஒன்றாக பயன்படுத்துவர்களுக்கு மாறிவிடுகிறது. இதனால் தன்னிலை மறந்து தவறுகளையும், குற்றங்களையும் செய்ய ஆரம்பிக்கின்றனர். இதனால் ஏற்பட்ட சமூக தீமைகள் ஏராளம், ஏராளம்.  
இன்று இளைஞர்களை கவ்விப்பிடிக்கும் இதர அம்சங்களாக திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள், விளம்பரங்கள், ஐபிஎல் கிரிக்கெட், நுகர்வு வெறி அனைத்தும் ஒருவித போதையை ஏற்படுத்தும் கூறுகளாக வளர்ந்து வருகிறது. இது தேசத்தின் வளர்ச்சியையோ, தனி மனிதன் வளர்ச்சியையோ மையப்படுத்துவதில்லை. அத நேரத்தில் அவனின் தன்னம்பிக்கை, போர்குணம், சுயமரியாதையை கைவிட செய்கிறது. இவைகளில் இருந்து மீள மது அருந்துதல் என்பது பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வாக கருதலாம்.  நிரந்தரமாக மீளமுடியாத ஆழ்கடல் பிரச்சனைக்குள் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.    
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள மற்றொரு புள்ளி விபரத்தின் படி உலகில் 200 கோடிகக்கும் (2 பில்லியன்) அதிகமானவர்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். அவர்களில் 750 லட்சம் பேர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 2.5 கோடி பேர் மது சார்ந்த நோய்களால் இறக்கின்றனர். இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோரில் 9 சதம் பேர் நேரிடையாக மதுவால் இறக்கின்றனர்.  மாறிவரும் சமூக கட்டுப்பாடுகள், நகரமயமாக்கல், மது எளிதாக கிடைத்தல், ஏற்றுமதி இறக்குமதியில் வெளிநாட்டு மதுக்கள் தாராளமாக கிடைத்தல், வணிக காரணங்களுக்காக அரசே நடத்துதல் போன்றவை வேகமாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மதுப்பழக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 1950 களில் மது அருந்துவோரின் சராசரி வயது 23 ஆக இருந்தது. 1990 களில் 19 வயதாக இருந்தது. தற்போது 13 வயதாக குறைந்துள்ளது. இது மேலும் குறைந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனென்றால் பேய்கள் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றார் பாரதி,. அரசே மக்களை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவு இன்று தமிழ்நாட்டில் ஆறில் ஒருவர் மது அருந்துகிறார். 
சுதந்திரப்போராட்ட காலத்தில் கள்ளுக்கெதிரான போராட்டம் மக்களை ஒன்று திரட்ட பயன்பட்டது என்றால் இன்றைய டா°மாக் கலாச்சாரத்திற்கு எதிராக தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்களும் கொள்கை ரீதியாக தங்களை அறிவித்துக் கொண்டு களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வார்கள் என்றால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கதவுகள் திறக்க வாய்ப்புள்ளது. இதை அவர்கள் சமூக சார்ந்த பிரச்சனையாக பார்த்தார்கள் என்றால் நாட்டுக்கு நல்லது. மக்களுக்கும் நல்லது. வாக்கு வங்கி சார்ந்து பார்த்தால் ? மக்களின் கதியும், தேசத்தின் கதியும் அதோ கதிதான்,. எனவே  வரும் ஆண்டுகளில் உலக போதை எதிர்ப்பு தினத்திற்கு சம்பிரதாய அறிவிப்புகளையும், உறுதி மொழிகளையும் ஏற்பதை விட்டு தேசம் காக்க கடலுhர் குமார், ஆனந்தனை போல் களத்தில் இறங்கி போராடுவோம். ஏனெனில் இது காத்திருக்கும் தருணமல்ல,.. களத்தில் இறங்கி போராடும் தருணமிது,. வாருங்கள், களமிறங்குவோம் போதைக்கு எதிராக !!!