”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
வைரமுத்துவை வசப்படுத்திய வெண்பா

திண்டுக்கல் நகரில் இயங்கி வருகிறது ‘இலக்கியக் களம்’ அமைப்பு. மக்களின் வாழ்க் கையோடு இயைந்ததே இலக்கியங்கள் எனும் புரித லுடன் செயல்பட்டு வரும் இலக்கியக்களத்தின் ஒரு மாலைநேரச் சந்திப்பில் பெருந் திரளான மக்களோடு கல்லூரி மாணவ-மாணவி கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட் சியர் மா.வள்ளலார், ஐ. லியோனி, பேராசிரியர் குரு வம்மாள் உள்ளிட்டோர் பங் கேற்ற இந்நிகழ்வில் ‘இலக்கி யத்தின் இலக்கு’ எனும் தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை யாற்றி னார். அதிலிருந்து சில துளி கள் இங்கே:

காதலைப் பாடுவதுதான் இலக் கியத்தின் இலக்கு என்று நான்கூட நினைத்துக்கொண்டிருந்தேன். சின்ன வயதில் குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? இந்த உல கைவிடப் பெரியது தாயின் மார் பகம்தான் என்று நினைக்கும். வயது வரவர இந்த உலகம் அதனி னும் பெரிதென்று தெரியவரும். நண்பர்களே, நீங்கள் தமிழ் இலக் கியத்தோடு உலக இலக்கியப் பரிச்சயமும் பெற வேண்டும்.

கலீல் கிப்ரானின் ‘புரோக்கன் விங்க்ஸி’ல் காதலன் சொல்கிறான், “என் காதலியின் கல்லறையைக் கடந்துசெல்கிறவர்கள் சருகுகளின் மேல் சப்தமில்லாமல் நடந்துசெல் லுங்கள். என் காதலியின் உறக்கம் கலைந்துவிடப்போகிறது” -என் பான். இலக்கியம் என்ன செய்கிறது தெரியுமா? யாருக்காகவோ அழுத அழுகையை உனக்குக் கொண்டு வந்து சேர்க்கிறதல்லவா? அதுதான் இலக்கியம். யாருக்கோ நேர்ந்த அனுபவத்தை, யாருக்கோ சிந்தப் பட்ட கண்ணீரை உன் கண்ணில் வாங்கி அழுவதுதான் இலக்கியம். யாருக்கோ ஏற்பட்ட வலியை உன் மேனி வாங்கிக்கொள்வதுதான் இலக்கியம். யாரோ பட்ட துயரை உன் உடம்பில், மனதில் உணர வைப்பது இலக்கியம். அவள் யார்? செல்மா கராமி என்ற அந்த லெப னானில் பிறந்த அந்தக் காதலி நாம் அறியாத பாத்திரம். லெபனானில் பிறந்த அந்த ஒருத்திக்காக வடுக பட்டியில் பிறந்த ஒருவன் சென் னையில் அழுதான் என்றால் அது இலக்கியம். வால்மீகியின் சீதைக் காக நான் அழுகிறேன். அதில் என் தாயின் துயரம், என் தந்தையின் துய ரம், எனது துயரம், என் மனைவி யின் துயரம், என் பிள்ளைகளின் துயரம் வருகிறது. எல்லா மனித னும் எல்லா அனுபவங்களையும் ஒரு பிறவியில் பெற முடியாது. எல்லா அனுபவத்தையும் ஒரே பிறவி யில் நீங்கள் பெறவேண்டுமென் றால் நீங்கள் இலக்கியவாதியாக மாறவேண்டும்.

தமிழில் மூன்று வெண்பாக் களைச் சொல்வதன் மூலமாக இலக் கியத்தின் இலக்கு எது என்று நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் தோழர்களே. ஒரு வெண்பா சிலப் பதிகாரத்திலிருந்து, ஒன்று தனிப் பாடலிலிருந்து, மற்றொன்று என் சமகாலத்திலிருந்து. சிலப்பதி காரத்தில் கண்ணகியும் கோவல னும் கூடிக்களிக்கிறார்கள். எப்படி? இரண்டு பாம்புகள் ஒன்றை யொன்று பின்னிக்கொள்ளுதல் போலவும், உலகம் நாளை அழிந்து விடும் என்று கருதிக்கொண்டவர் கள்போலவும், உலக இன்பங் களையெல்லாம் இந்த இரவே துய்த்துவிடவேண்டும் என்று கருதுபவர்கள்போலவும் அவர்கள் இருந்தார்கள் என்று இளங் கோவடிகள் சொல்கிறார். இதில் என் சுய இன்பம் தெரிகிறது. இது முழுக்க முழுக்க எனக்கான ஒரு அறம்சார்ந்த அன்பு. காளமேகப் புலவர் பனைமரத்துக்கும் விலை மகளுக்கும் ஒரு சிலேடையை வெண்பாவில் சொன்னார், அதில் புலவனின் சாமர்த்தியம் தெரிகிறது. ஒரு சமூக அழுக்குவேறு தெரி கிறது. இரண்டுமே வெண்பா தான். அது ஆணுக்கும் பெண்ணுக்கு மான முறையான இன்பம், இது முறையற்ற இன்பம். இது அற வழிக்கு வெளியே இருக்கிறது.

கவியரசர் கண்ணதாசன் தென் றல் பத்திரிகையில் ஒரு வெண்பாப் போட்டி நடத்தினார். அதில் ஈற்றடி கொடுத்துவிடுவார்கள். அது ‘பூவைமேல் எத்தனை பூ’ என்ற ஈற்றடி. இது காலங்காலமாக தமி ழில் சொல்லப்பட்ட வழக்கமான செய்திதான். மரபுவழியாகச் சிந் திக்கிறவர்கள் பெண்ணின் கண் களைக் குவளைப்பூ, காது வள் ளைப்பூ, தனங்கள் தாமரைப்பூ, கழுத்து சங்குப்புஷ்பம், விரல்கள் செங்காந்தள் மலர்கள், எனவே பூவைமேல் எத்தனைப்பூ என்று தொன்னூற்று ஒன்பது புலவர் களும் இப்படித்தான் எழுதினார் கள். இலக்கியத்தின் நோக்கம் அது அல்ல... இலக்கியத்தின் நோக்கம் வேறு. இலக்கியத்தின் நோக்கம் மக்கள். இலக்கியத்தின் நோக்கம் சமூகச் சீர்திருத்தம். இலக்கியத்தின் நோக்கம் பகுத்தறிவு என்று புரிந்து கொண்ட ஒரு புலவன் மட்டும் வேறுபட்டு எழுதினான். எல்லோ ரும் காதலியின் அழகை வர்ணித்த போது ஒரு விதவையைப்பற்றி இவன் பாட்டெழுதினான்,

“எண்ணெய் இல்லை ஏற்றபூச் சூடவகை ஏதுமில்லை

பெண்கூந்தல் இந்நிலையில் பேன்பிடிக்க பின்னொருநாள்

சாவை அவள் அண்டிச்சாய்ந்து விட்டாள் பின் அந்தப்

பூவைமேல் எத்தனைப்பூ?’”

- என்று எழுதினான் அந்தக் கவிஞன்.

அவள் உயிரோடு இருக்கையில் பூச்சூட அனுமதிக்காத இந்தச் சமூ கம், பூ வாசனையைக் காட்டாத இந்தச் சமூகம், பூப்போட்ட புட வையைக்கூட அணியவிடாத இந்தச் சமூகம் அவள் இறந்துபோன பிறகு பூவிலே பல்லக்கு, பூப்பாடை, பூத்தோரணங்கள், புதைகுழியில் பூக்கள், புதைகுழியில் பூச்செடி கள்... என்னடா இது? செத்துப் போனபிறகு என்ன சிங்காரம்? பிணத்திற்கு எதற்கு ரத்த தானம்? உயிருடனிருந்தபோது வாழ விடாத நீ பிணத்திற்கு எதற்கு சிங் காரம் செய்ய வருகிறாய்? என்று கேட்டானே, இதுதான் இலக்கி யம். இலக்கியத்தின் நோக்கம் இதுதான்.

இலக்கியத்தின் நோக்கம் போன பரம்பரையைப்பற்றிப் பாடுவது மட்டுமல்ல. நிகழ்கால மனிதனின் கண்ணீருக்கு ஆறுதல் சொல்வது இலக்கியம். அவனது துன்பத் திற்குத் தோள்கொடுப்பது இலக்கி யம். புதிய தலைமுறையைத் தூக்கிச் சுமப்பது இலக்கியம். தன்னம் பிக்கை ஊட்டுவது இலக்கியம். இலக்கியத்தின் நோக்கம் மனிதம் என்று சொல்லுங்கள். இலக்கியத் தின் நோக்கம் அறம் என்று சொல் லுங்கள். இலக்கியத்தின் நோக்கம் போரற்ற உலகம் என்று சொல் லுங்கள். இலக்கியத்தின் நோக்கம் பகுத்தறிவு என்று சொல்லுங்கள். இலக்கியத்தின் நோக்கம் முன்னேற் றம் என்று சொல்லுங்கள். இலக்கி யத்தின் நோக்கம் மனிதம், மனிதம், மனிதம் என்றே முழங்குங்கள்.”
நன்றி
தீக்கதிர், இலக்கியச் சோலை

No comments:

Post a Comment