”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

2008 நினைவுகளிலிருந்து

2008 நினைவுகளிலிருந்து
அரவிந்தன்

உலக அரங்கில்
“ மரணித்த ஒவ்வொரு குழந்தைகளிடமிருந்தும்
விழிகளுடன்
ஒரு துப்பாக்கி பிறக்கிறது
செய்த ஒவ்வொரு குற்றத்திலிருந்தும்
துப்பாக்கி ரவைகள் பிறக்கின்றன
ஒரு நாளில் அவை உமது
இதயத்தின் மையத்தை கண்டடையும்” என்ற பாப்லோ நெரூடாவின் வரிகள் இன்று அமெரிக்காவின் கோர முகத்தால் பாதிக்கப்பட்ட தேசங்களில் எழுந்து வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் சர்வாதிகாரிகளை உருவாக்கி அவர்களை வளர்த்தெடுத்து 132 நாடுகளில் 700க்கும் மேற்பட்ட இராணுவ கேந்திரங்களையும், 8000 க்கும் மேற்பட்ட அணுஆயுதங்களையும் வைத்துள்ள வல்லரசாக தனது ஆக்டோபஸ் கரத்தை அமெரிக்கா வலைப்பின்னலாக விரித்துள்ளது.
அந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை பாதுகாக்க வளர்த்தெடுத்த உலகமயமாக்கல் சர்வதேச அளவில் தாராளமயக் கொள்கைக்கு கிடைத்த பெரிய அடி அமெரிக்க பொருளாதார நெருக்கடியாகும். அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையினால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வீடு இழந்து கார் வீடுகளை கொண்டு குடும்பம் நடத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் 20 லட்சம் பேர் வீதிக்கு வருவார்கள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2008 ல் 8 லட்சம் பேர் 10 மாதத்தில் அமெரிக்காவில் வேலை இழந்துள்ளனர். லேமென் பிரதர்ஸ், பேர்ஸ் டெர்ன்ஸ், ஃபரெட்மேக், வாஷிங்டன் ம்யுச்சுவல், இண்டி மேக் பேங்க் கார்ப் போன்ற உலகின் மிகப் பெரிய அமெரிக்கா வங்கிகள் திவாலாகி மஞ்சள் கடிதம் கொடுத்து விட்டன.
உலகின் விலைவாசி உயர்வுக்கு காரணம் இந்தியர்களின் உணவுப்பழக்கம், பெட்ரோல் விலையுயர்வுக்கு காரணம் இந்தியாதான் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அமெரிக்க அரசு இந்தாண்டின் காமெடியன் விருதைப் பெற்றது.
“புதிய சோசலிசக் கிராமப்புறம்” என்ற முழக்கத்துடன் சீனா தனது பொருளாதாரத்தை இதே நேரத்தில் பலப்படுத்தி வருகிறது. இப்போது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீர்க்க மீண்டும் காரல் மார்க்ஸ் நினைக்கப்படுகிறார். ஆம் 2008ன் இறுதிகளில் உலகம் முழுவதும் காரல் மார்க்ஸ், ஏங்கல்சின் புத்தகங்கள் அதிவேகமாக விற்பனையாக துவங்கியுள்ளன. ஆம்,. காத்து மாறி அடிக்க துவங்கி விட்டது.
ஏகாதிபத்திய பாதுகாவலான அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ் க்கு டிசம்பர் 14 அன்று இராக்கில் முண்டார்சு அல்சைதி என்ற பத்திரிக்கையாளர் கொடுத்த வரலாற்று சிறப்புமிக்க கௌரவம் (செருப்பு என்கிற ஆயுதத்தை கண்டறிந்து அறிமுகப்படுத்தியது). இந்த சம்பவம் புஷ்சின் 8 ஆண்டு பதவிக்காலத்தில் கரும்புள்ளியாகவே அமைந்தது என தினமலர் பத்திரிக்கை கூறியது.
வெள்ளையர் குடியேற்றத்தின் போது பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின்ரூட் பிப்ரவரியில் மன்னிப்பு கேட்டார். மார்ச் 2ம் தேதி நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் ஆதரவாளர் திம்த்ரி மெட்வேடாவ் வெற்றி பெற்றார். மே மாதம் மியான்மர் நர்கீஸ் புயலில் 90 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். ஆனால் கியூபாவில் புயல் தாக்கிய போது ஒருவர் கூட உயிரி இழக்கவில்லை. காரணம் இயற்கை பேரிடர் குறித்து முன்கூட்டியே அறிந்து கியூப அரசு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றது. ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிடல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. ரால் காஸ்ட்ரோ அதிபரானார். நேபாள பிரதமராக பிரசந்தாவும், சைப்ரஸ் நாட்டு அதிபர் தேர்தலில் கம்யூனிஸ்ட் தலைவர் கிறிஸ்டோபியஸ் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக சர்வதேச போலீஸ்காரன் அமெரிக்கா அறிவித்தது. ஒன்னரை ஆண்டுகள் படாத பாடுபட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 4ம் தேதி முடிவுக்கு வந்தது மாற்றத்தை நிகழ்த்துவேன் என்ற ஜனநாயக கட்சியின் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். அவரது முதல் வார்த்தை சிதறலே இந்தியாவுக்கான பிபிஓ பணியை நிறுத்த வேண்டும், காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுவோம் என்பது தான்.. அமெரிக்க பொருளாதார நிபுணரும், அறிஞருமான நோம் சாம்ஸ்கி சரியாகவே சொன்னார். ஜனநாயக கட்சியோ, குடியரசு கட்சியோ ஆட்சியில் இருப்பது பொருட்டல்ல. எந்த தத்துவத்தை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள் என்பதே முக்கியம். இப்போதும் முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியே ஆட்சியில் அமர்ந்துள்ளார் என்றார்..
சுவிட்சர்லாந்தில் பிக் பேங் என்ற பிரமாண்ட சோதனை அணுவை பற்றிய அடுத்த கட்ட வளர்ச்சியை வெள்ளோட்டமிட்டது. ஈராக் முன்னாள் அதிபர் சதாமின் ஆதரவாளர்களை தேடி சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 9 தொழிலாளர்களை பலி கொடுக்க நேரிட்டது.
சீனாவின் சோகம் மே மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 ஆயிரம் பேர் பலியானார்கள். அதையும் தாண்டி சீனா தனது சாதனையை மீண்டும் ஒரு முறை பீஜிங் ஒலிம்பிக் போட்டி நடத்தியதும், பதக்கப்பட்டிலில் முதலிடத்தை தக்க வைத்ததன் மூலம் நிரூபித்தது. லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சிமெண்ட் ஆலைகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
2008ம் ஆண்டில் பயங்கரவாத நடவடிக்கை பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் தொடர் தற்கொலைப்படை தாக்குதல், இலங்கையில் அரசுக்கும் எல்டிடிஇக்கும் இடையேயான போர், ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகளின் அத்துமீறியத் தாக்குதல், லெபனான், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதல், ஆப்கான் தலைநகர் காபூலில் இந்திய துhதரகம் தாக்கப்பட்டது,
இந்தியா சந்திரனுக்கு சந்திராயனை அனுப்பி சாதனை படைத்தது. அதே இந்தியா தனது அயல்துறை கொள்கையை தனது பராம்பரியத்தில் இருந்து விலகி ஏகாதிபத்திய ஆதரவு கொள்கையை எடுத்து அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது அமெரிக்காவின் இளைய இராணுவகேந்திர பங்காளியாக மாற்றி உலக பாதுகாப்பு மற்றும் போர் நடவடிக்கையின் ஒர் அங்கமாக காங்கிரஸ் அரசு மாற்றிவிட்டது இடது சாரிகளின் எதிர்ப்பை மீறி.. அதனால் இந்தியா ஒரு கருப்பு தினத்தினை சந்தித்தது.

தேசிய அளவில்
2008ம் ஆண்டில் ஜூலை 22 என்ற கருப்பு தினத்தை இந்திய நாடாளுமன்றம் சந்தித்தது. அன்றுதான் கோடிகள் நாடாளுமன்றத்தில் கொட்டப்பட்டது அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பட்டது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட குதிரை வியாபாரத்தை கண்டு மக்கள் எள்ளி நகையாடினார்கள். 2008 ம் ஆண்டு ஒளிர்ந்த இந்தியனையும், ஒழிந்த இந்தியனையும் பார்க்க முடிந்தது. 83.77 கோடி இந்தியர்கள் 20ரூபாய் வருமானத்தில் வாழ்வதாக அர்ஜூன் சென் குப்தா கமிட்டி ரிப்போர்ட் கூறுகிறது.
ஒவ்வொரு நாளும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரம் கூறுகிறது. மிகச் சிறந்த பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களான கிண்டி, குன்னுhர், காசோலியில் இருந்த நோய் தடுப்பு மருந்து நிறுவனங்கள் அன்பான மணியான அய்யாவால் மூடப்பட்டது. இந்தியாவில் போதிய சுகாதாரமின்மை காரணமாக கர்ப்பிணி பெண்கள் 4 நிமிடத்திற்கு ஒரு பெண் இறக்கின்றனர். 58 சதம் பெண் குழந்தைகள் ஊட்டசத்து இல்லாமல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி கவலைப்படாத இந்திய அரசு மின்சார தேவைக்காக என காரணம் கூறி 3.50 லட்சம் கோடி ரூபாயை அமெரிக்காவிற்கு கொடுக்க அணுசக்தி ஒப்பந்தத்தை போட்டுள்ளது.
2008ல் இந்தியாவின் நாடாளுமன்றம் 46 நாட்கள் மட்டுமே கூடி சாதனைப்படைத்தது. குளிர்கால, மழைக்கால கூட்ட தொடரே இல்லாத ஆண்டாக இந்தாண்டு அமைந்தது. சுமார் 8.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எல்ஐசியில் அந்நிய மூதலிட்டை 26 சதத்திலிருந்து 49 சதமாக அனுமதிப்பது என்ற அநியாயமான முடிவையும் இந்தாண்டு எடுத்தது.
2008ல் 27 சதவீத இடஒதுக்கீடு பிற்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கையை உருவாக்கியது. ஒரே நேரத்தில் இந்தியாவின் விண்வெளித்துறை 10 செயற்கை கோளை ஒரே ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தி தனது வரலாற்றை சாதனையை மீண்டும் பதிவு செய்தது.
பீகாரில் வெள்ளம் ஏற்படுத்திய வடு சோகமானதாக இருந்தது. திரிபுரா, மேகலாயா, நாகலாந்து, கர்நாடகா, டில்லி, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய சட்டமன்றங் களுக்கான தேர்தலும் இந்தாண்டு நடந்து முடிந்துள்ளது. திரிபுராவில் மீண்டும் மாணிக் சர்க்கார் 60க்கு 49 என்ற எண்ணிக்கையில் மக்களின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தார்.
மதவெறியர்களின் தாக்குதல் ஒரிசா, குஜராத், கர்நாடகா, கேரளா என தொடர்ந்தது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் ( மாலேகாவ், கான்பூர், ஐதாரபாத், தென்காசி) இந்து மதவெறி அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளது என தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் கார்க்ரே கண்டறிந்து சொன்னது இந்தியா முழுவதும் பெரும்பான்மை மதவெறியை அடையாள படுத்த உதவியது. அவரும் மும்பையில் நடைபெற்ற தாஜ் ஓட்டல் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க நடைபெற்ற சண்டையில் பலியானார்.
மத்திய அமைச்சர் அந்துலே அத்தாக்குதலின் பின்னணியும் கார்க்ரே பலியானது குறித்தும் கேள்வி எழுப்ப பிஜேபி, சிவசேனா போன்ற மதவெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, காங்கிரசும் சமாதானப்படுத்தும் விதத்தில் மதவெறியர்களுக்கு அடிபணிந்து அந்துலேவை ராஜீனமா செய்ய வைத்தது.
ஊடகத்தின் வளர்ச்சியில் வன்முறையினையும் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் வளர்த்தது. ஆமாம் மும்பை தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ, காவல்துறை நடவடிக்கையை காட்டுகிறோம் என்று பாருங்க, பாருங்க பாத்துக்கிட்டே இருங்க என 60 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்தது பயங்கரவாதிகளுக்கு இராணுவ, காவல்துறை நடவடிக்கையை கண்டு கொள்ள உதவியது. அந்தளவிற்கு அறிவாளிகளாக நமது ஊடகங்கள் இருந்தது. இதை அரசும் கண்டு கொள்ளவில்லை.
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லுhரியில் நடைபெற்ற மாணவர்களின் சண்டையை தமிழகத்தின் ஊடகங்களும் மனம் பதற ஒளிபரப்பின. நடைபெற்ற சம்பவத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஒளிபரப்பி சாதிய துவேசத்தை உருவாக்கிய அந்த ஊடகம் பிரச்சனையின் ஆணிவேரை ஒலிப்பரப்ப மறந்தது ஏனோ அல்லது மறுத்தது ஏனோ ? இதே ஊடகம் மே மாதம் 19 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சார்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரக்கூடாது என தீண்டாமைச்சுவரை கட்டி வைத்து கொடுமையை பற்றியோ, மே மாதம் 7ம் தேதி அச்சுவரை இடி அல்லது இடிப்போம் என மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத் தலைமையில் நடைபெற்ற சுவர் அகற்றும் நடவடிக்கையோ ஒளிப்பரப்பவில்லையே என்ன காரணமோ..
இந்தாண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ( அபினவ் பிந்தரா)தங்கம்,(சுசில்குமார், விஜேந்தர்சிங் ) வெண்கலம் என மூன்று பதக்கங்களை பெற்று இந்தியா தனது முத்திரையை பதித்தது. அமெரிக்க வீரர் மைக்கேல் பெலிப்ஸ் 8 தங்க பதக்கங்களை நீச்சல் போட்டியில் பெற்று சாதனை படைத்தார்.
தமிழ்நாட்டின் கேரம் வீராங்கனை இளவழகி உலக கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தியாவிற்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவ்ரவ் கங்குலி ஒய்வு பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 42 சதங்களோடு, 12 ஆயிரம் ரன்களை கடந்து சச்சின் புதிய உலக சாதனையை படைத்தார். அனில் கும்பளே டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

தமிழகத்தில்
தமிழகத்தில் தீண்டாமைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் உத்தபுரம் தீண்டாமைச்சுவர் அகற்றப்பட்டது. பந்தபுளியில் ஆலய நுழைவுப் போராட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் கல்கேரி ஆஞ்சனேயர் கோவில் உட்பட பல பகுதிகளில் தலித் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நடத்தியது. இதில் டிஒய்எப்ஐ உத்தரபுரம் மக்களுக்காக நீதி கேட்டு மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
மாநில அரசும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் என திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக துவங்கி வைத்தார். ஆனால் 100 நாள் வேலைத்திட்டத்தில் 80 ரூபாய் கூலிக்கு பதில் 45 ரூபாய் கொடுத்ததை கண்டித்து விழுப்புரம் ரெட்டணையில் போராடிய மக்களின் மீது காவல்துறை துப்பாக்கியால் சுட்டது. இ.கோட்டைப்பட்டியில் சுரேஷ் என்ற வாலிபர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானார். உளுந்துhர் பேட்டை அருகே ஆலய வழிபாட்டில் சம உரிமை கோரிய தலித் கிறிஸ்தவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
பன்னாட்டு தொழிற்சாலைகளில் சங்கம் வைக்க, கொடி கம்பம் போட முயன்ற தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி, கைது நடவடிக்கை என தொடர்ந்தது. மதவெறியர்கள் தமிழகத்திலும் தங்களது கைவரிசையை காட்டினர். சென்னை போரூரில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடிய தமுஎகச சங்கத்தினர் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தினார்கள். விழுப்புரம் அருகே கல்லறை தோட்டத்தை சூறையாடினார்கள்.
மணல் கொள்ளையை தடுக்க அரசே மணல் விற்பனை நடத்துவது என அறிவித்தது. சிறுதொழிலை பாதுகாக்க எண்ணற்ற பகுதிவாரியான வேலைநிறுத்தங்கள் பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழில் வர்த்தக அமைப்புகள் நடத்தியது.
2008ன் தமிழக ஸ்பெஷல் மின்வெட்டும், இலங்கை தமிழர் பிரச்சனையும் ஆகும். கடந்த 15 ஆண்டுகளில் புதிய மின்திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் துவக்கப்படாமல் மின்வெட்டை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு திணறியது, பல ஆயிரம் கோடி அந்நிய செலவாணி மற்றும் உற்பத்தியை தமிழகமும், தேசமும் இழந்தது. தமிழகத்த்து தலித் தமிழன் பாதிக்கப்பட்டு உரிமையற்று இருக்கும் போதும், இராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் போதும், வாழ வழியற்று தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் இலங்கை பிரச்சனையில் நமது தலையீடு நேரடியாக இருக்க வேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பியது. இலங்கை தமிழர் தாக்கப்படுவது வருந்ததக்கது. இந்திய அரசு ராஜதந்திர அடிப்படையில் இலங்கை அரசோடு பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய பிரச்சனைக்கு பதில் இன உணர்வை துhண்டியது ஒரு பகுதி. அதில் திரைப்பட துறை தனது பங்கிற்கு எண்ணெயை ஊற்றி வளர்த்தது. 2008ல் இவர்களின் அரசியலுக்கு பயன்பட்டது அப்பாவி இலங்கை தமிழர் பிரச்சனைதான்..
தமிழகத்தில் நடிகர் வடிவேலு வீடு தாக்கப்பட அவர் இதற்கான காரணகர்த்தாவை கண்டுபிடித்து அவரிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்க தானும் தேர்தலில் போட்டி தமிழகத்தின் 2011ல் முதல்வராவேன் என கிளம்பிவிட்டார். தமிழகத்தில் 119 நேரடி திரைப்படங்களும், 61 மொழி மாற்று படங்களும் என 180 படங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதலாக திரைக்கு வந்துள்ளன.இதில் ஒன்பது ரூபாய் நோட்டு, தசாவதாரம், சுப்ரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லும்படி வந்ததுள்ளது. இதில் சாரப்பாளையம் சாமுண்டி என்ற நாவல் ( உளியின் ஓசை ) திரைப்படமாகவும், வெயிலோடு போய் ( பூ ) திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவைகளுக்கு மத்தியில் மக்களின் கோரிக்கைகளுக்காக குறிப்பாக வீட்டுமனைப்பட்டா, மலைவாழ் மக்கள்உரிமை, தொழிலாளர் நலன், விவசாயிகள் கோரிக்கைக்காக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு இடது சாரி அமைப்புகள், வெகுஜன அமைப்புகள் தொடர்ந்து போராடியது ஒரளவு நம்பிக்கை விதையை துhவியது.
உடல்உறுப்புதான விழிப்புணர்வை இதயேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன் ஏற்படுத்த அங்கே உடல் உறுப்புதானங்கள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் தலைசிறந்த இரத்ததான கழகமாக டிஒய்எப்ஐ இரத்ததான கழகம் தேர்வு செய்யப்பட்டு தமிழக ஆளுனரால் விருது வழங்கப்பட்டது.
தமிழகம் பல இளைஞர் அமைப்புகளின் மாநாடுகளை கண்டதில் டிஒய்எப்ஐ விழுப்புரம் மாநாடு வித்தியசமாக அமைந்தது. தலைவர்கள் வாழ்க என்ற கோசமில்லாமல் இளைஞனின், மாணவனின், வறியவனின் கோரிக்கைக்கான கோசத்தோடு முடிந்தது. இந்த மாநாட்டு முடிவுப்படி தமிழக வரலாற்றில் டிஒய்எப்ஐ இளைஞர் அமைப்பு குமரி, ராமேஸ்வரம், கோயம்புத்துhர் ஆகிய மூன்று முனைகளில் இருந்து 3000 கி.மீட்டர்கள் துhரம் சென்னை வரை 14 நாட்கள் நுhற்றுக்கணக்கான தனது சக்திமிக்க ஊழியர்களோடு 10000க்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து சைக்கிள் பயணத்தை நடத்தி காட்டியது. இளைஞர்களுக்கான சமூக பாதுகாப்போடு கூடிய வேலை என்ற கோசத்தை முன்னிறுத்தி..
2007ம் ஆண்டு பல நிகழ்வுகளை சந்தித்து இருந்தாலும் மார்க்ஸ் நினைக்கப்படுவதும், இடது சாரி தலைவர்களின் புத்தகங்கள் உலக முழுவதும் நெருக்கடியை தீர்க்கும் ஆயுதங்களாக போப் ஆண்டவராலும், முதலாளித்துவ ஆட்சியாளர்களால் போற்றப்படுவதும் நம்பிக்கையை உருவாக்குகிறது. சரியான வழியில் இந்த பூகோளம் சுற்றிட வழிவகுக்கும்.. ஒரு கவிஞன் கூறியது போல “ இடது பக்கம் செல் என்பது சாலை விதி மட்டுமல்ல.. சமூக விதியும் கூடத் தான்” என்ற வரிகளுக்கு 2009ம் ஆண்டை வரவேற்போம்.
பயங்கரவாத, தீவிர வாத நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்க, வேலையின்மை, கல்வியின்மை, வறுமைக்கு, பசி, பட்டினிக்கு விடைக்கொடுக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு, தலித்விடுதலை, பெண்விடுதலை, பண்பாட்டு வளர்ச்சிக்காக முன்னிலும் வேகமான செயல்பாட்டை, போராட்டத்தை உக்கிரமாக, உறுதியாக நடத்திடுவோம்.. இனி நமது பயணம் சிரமத்தை நோக்கியல்ல.. சிகரங்களை நோக்கி என நடைபோடுவோம்..

No comments:

Post a Comment