”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வீரத்தின் விளைநிலம் கேப்டன் லட்சுமி


“உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்“.

என்ற மகாகவி பாரதியின் அக்கினி பிரவாகத்திற்கு அடையாளமாய் வாழ்ந்து காட்டியவர் கேப்டன் லட்சுமி அவர்கள். தனது 87 வது வயதில் நாட்டின் குடியரசு தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக இடதுசாரி கட்சியினரால் முன்மொழியப்பட்ட தருணத்தில், அந்த வயதிலும் நாள் தவறாது காலை 9 மணிக்கு கான்பூரில் உள்ள தனது மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்க வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கண்களில் அன்பு ஒளியும், பாசமும், நேசமும், மனிதநேயத்தையும் காட்டும் பரந்த உள்ளம் படைத்த கேப்டன் லட்சுமி அவர்களுக்கு இருதய அடைப்பு காரணமாக 97 வயதில் தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். தோழர் கேப்டன் லட்சுமி தனது இறப்புக்கு பின் தனது உடலை “மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும்“ என்று விரும்பியதால் அவரது உடல் கான்பூரில் உள்ள ஜி.எஸ்.வி.எம்.மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

1914ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி சென்னையின் பிரபலமான வழக்கறிஞராக பணியாற்றிய சுவாமிநாதன், சமூக சேவகியாக இருந்த அம்மு ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவரது குடும்பம் நாட்டுபற்று மிக்க குடும்பமாக இருந்ததால் இளம் வயதிலேயே லட்சுமி சாதிய பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாட்டுவிடுதலை, சமத்துவம், அநீதிக்கு எதிராக போராடுவது என்ற இலட்சியங்களை தாங்கி வளர ஆரம்பித்தார். தனது பள்ளி பருவத்திலேயே மருத்துவம் பயின்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார். விரும்பியபடி அவர் இடைநிலை கல்வியை இராணிமேரி கல்லூரியிலும், மருத்துவப்படிப்பை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் 1938ல் முடித்து மருத்துவரானார்.

இராணி மேரி கல்லூரியில் படித்த 1930களில், தமிழகத்தில் தோழர் பி.ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய தீவிர காங்கிரசு இளைஞர் அணியில் உறுப்பினராக சேர்ந்த லட்சுமி, பகத்சிங் வழக்கிற்காக கல்லூரியில் நிதி வசூல் இயக்கத்தில் ஈடுபட்டார். அதே ஆண்டு நடைபெற்ற சத்தியகிரக போராட்டத்தில் பங்கேற்று ஒரு நாள் சிறையும் சென்றார். கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களின் சகோதரி சுகாசினி நம்பியார் பொதுவுடைமை இயக்கத்தின் மூலம் சுதந்திரப்போரில் ஈடுபட்டதால் மீரட் சதி வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாக லட்சுமி வீட்டில் தங்கியிருந்தார். அக்காலத்தில் அவரிடமிருந்து  மார்க்சியத் தத்துவம், ரஷ்ய புரட்சி குறித்த புத்தகங்களை பெற்று படித்து தெரிந்துகொண்டார். சீனவானில் சிவப்பு நட்சத்திரம் என்ற சீனப்புரட்சி குறித்த புத்தகம் அவரை பெரிதும் ஈர்த்த்து, எனினும் தோழர்.லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்ய புரட்சியின் தாக்கத்தில் இந்திய சமூகத்தில் மாற்றம் ஏற்படவும், வெள்ளை ஏகாதிபத்தியம் வெளியேற்றப்படவும் வேண்டுமென்றால் ஆயுதம் தாங்கிய வெகுமக்கள் புரட்சியே தேசத்தின் அரசியல் விடுதலைக்கு சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தார்.

குடும்ப சூழ்நிலையையொட்டி 1940களில் சிங்கப்பூர் சென்ற லட்சுமி அங்கு தென்னிந்திய பெண் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் வாழ்ந்தார். அங்கு பெண்கள் மருத்துவ வசதி இல்லாமல் அல்லலுறுவதை கண்டு மனம் வெம்பி அவர்களுக்காக அங்கேயே தங்கி தனது மருத்துவ சேவையை துவங்கினார். வெகுவிரைவில் புகழ்பெற்ற மருத்துவராக அந்த பகுதி மக்களால் பேசப்படலானார்.

1941ம் ஆண்டு ஜப்பான்-பிரிட்டனுக்கிடையேயான யுத்த்த்தில் பஞ்சாப் ரெஜிமெண்ட் ஜப்பான் இராணுவத்திடம் சரணடைந்தது. இந்த படையில் இருந்த எஞ்சிய வீரர்களை கொண்டு .உருவானதே இந்திய தேசிய இராணுவம். இதில் பொதுமக்களின் பங்கேற்பு இல்லாததால் ராஷ்பிகாரி போஸ் “இந்திய சுதந்திர கழகத்தை“ உருவாக்கி செயல்படுத்தி வந்தார். இதன் கிளை சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த போது அதன் தீவிர உறுப்பினராகவும் லட்சுமி செயல்பட்டார். 

இக்காலத்தில் சிங்கப்பூரில் போரில் காயமடைந்த போர்வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொறுப்பை லட்சுமி ஏற்றதோடு அகதிகளையும், நோயாளிகளையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். மேலும் இந்திய சுதந்திர கழகத்தின் பிரச்சாரப்பிரிவின் பணியையும், அதற்கான கட்டுரைகளையும் எழுதினார். பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் பிரிவையும் செயல்படுத்தினார். இந்த சூழலில் 1943ல் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திர கழகத்தின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்த போது இந்திய சுதந்திரப் போரில் நேரடியாக ஈடுபடும் தனது விருப்பதை லட்சுமி தெரிவிக்க அதன் பின்னணியில் நேதாஜியும் ஜான்சி ராணி படை என்ற பெயரில் பெண்களும் சுதந்திரப்போரில் ஆயுதம் தரித்து ஆண்களுக்கு நிகராக களம் இறங்கலாம் என்று தெரிவித்தவுடன் பெண்களுக்கான ஜான்சி ராணி படையில் 1000க்கும் மேற்பட்ட பெண்களை கொண்டு உருவாக்கி தானே தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். ஆசியாவின் முதல் பெண்கள் படையாகும்.

நேதாஜியின் டெல்லி சலோ முழக்கத்தை முன்னிட்டு இந்த படைப்பிரிவு சிங்கப்பூரில் இருந்து பர்மா நோக்கியும் பின்னர் டெல்லி நோக்கியும் முன்னேறியது. இந்திய-பர்மா எல்லையில் நிறுத்தப்பட்ட இப்படை யுத்தகளத்தில் தீரத்துடன் போராடியது. யுத்த முனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லட்சுமி மருத்துவ சிகிச்சையை செய்து வந்தார். அங்கிருந்த மருத்துவமனையை பிரிட்டிஷ் இராணுவம் விமான தாக்குதலில் தரைமட்டமாக்கிய போது மயிரிழையில் உயிர் தப்பினார் கேப்டன் லட்சுமி.  படைத்தளபதி லட்சுமி போர் கைதியாக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டார். இவர் மீது எந்த பிரிவின் மீது குற்றம் சாட்டுவது என திணறிய வெள்ளை அரசு, இவர் நேதாஜி உருவாக்கிய இந்திய சுதந்திர அரசின் ஓர் அங்கமான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என குற்றம் சாட்டி ரங்கூனில் வீட்டுச்சிறையில் வைத்த்து.

1945ம் ஆண்டு “இந்திய இராணுவ வீரர்கள் இந்தியாவில் போர் இன்னும் முடிவடையவில்லை. ஆகவே இந்தியாவிற்கு சென்று விடுதலைக்காக போராடுவோம்“ என சபதமேற்று அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்த வெள்ளை அரசு அவர்களை கைது செய்த்து. லட்சுமியை நேரடியாக கல்கத்தாவிற்கு கொண்டு சென்று நேதாஜியின் சகோதரி மகள் வீட்டிலிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வர வேண்டுமென உத்தரவிட்டனர். இந்திய விடுதலைக்கு பின் தன்னுடைய சக போராளியாக தன்னோடு பணியாற்றி கர்னல் பிரேம் ஷெகாலை திருமணம் செய்து கொண்டார். சுபாஷினி அலி மற்றும் அனுசியா பூரி ஆகிய மகள்களும், பேரன் பேத்திகளும் உள்ளனர், இவர்களில் தோழர் சுபாஷினி அலி மாதர் அமைப்பின் அகில இந்திய தலைவராக உள்ளார்.

தன்னுடைய இறுதி காலம் வரை மக்களுக்காக அரசியல் களத்தில், சேவைக்காக மருத்துவராகவும் ஒய்வறிய உழைப்பாளியாக பணியாற்றிய கேப்டன் லட்சுமி அவர்கள் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டு அந்த கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், 1971ல் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

1972ல் பங்களாதேஷ் யுத்த்த்தின் போது அகதிகளுக்கும், போரில் காயமடைந்தவர்களுக்கும் சிகிக்சை செய்ய தோழர் ஜோதிபாசு அழைத்தன்பேரில் நேரில் சென்றதோடு நிவாரணநிதியும் திரட்டிக்கொடுத்தார். இந்திராகாந்தி படுகொலையின் போது கான்பூரில் சீக்கியர்களின் மீதான தாக்குதலுக்கு எதிராக சீக்கிய மக்களை தனது மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று ஏராளமான சீக்கியர்களின் உயிரை காப்பாற்றினார்.

குஜராத் கலவரம் நடைபெற்ற தருணத்தின் போதுதான் கடுமையாக மதவாத்த்தை கண்டித்தார், அது மட்டுமல்லாது மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் முன்மொழியப்படும் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற தனது நிலையை கம்பீரமாக வெளிப்படுத்தினார், காஷ்மீர் உள்ளிட்ட தனி நாடு கோரிக்கைகளை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி, மத்திய, மாநில உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கைகளோடு இருந்த லட்சுமி, இடதுசாரி கட்சிகளால் குடியரசு தலைவர் தேர்தலுக்கு 2002ல் வேட்பாளராக முன்மொழியப்பட்ட போது தெளிவாக கூறினார்.“ வெற்றி பெறுவோம் என்ற பிரமையோ, அதீத நம்பிக்கையோ கொள்ளவில்லை, இந்த குடியரசு தலைவர் தேர்வுகான களத்தில் இந்திய அரசியலின் மேன்மையை, இறையாண்மையை, மக்களின் நலனை கருத்தில் கொண்டு போராடும் இடதுசாரிகளின் அரசியலை பிரச்சாரம் செய்யும் வாய்ப்பாக கருதுகிறேன். இப்பதவிக்காக எந்த குறுக்குவழியையும், கட்சிகளிடம் யாசகம் கேட்பதை செய்ய மாட்டேன் என் தெளிந்த ஞானத்தோடு, அரசியல் உறுதியோடு“ பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார்.

பெண்களுக்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னின்ற அவர் அதற்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக இந்திய முழுவதும் அமைப்பை வளர்ப்பதில் தனது வயதான காலத்தில் பயணம் மேற்கொண்ட அற்புத தலைவர். இளமைப்பருவத்தில் தான் கற்ற்றிந்த மார்க்சிய தத்துவத்தின் வழியில் உறுதியாக நின்று சோசலிசப் புரட்சிக்கான தனது போராட்டத்தை விடாப் பிடியாக நடத்தியவர், அதற்காகவே வாழ்ந்தார். இளம் தலைமுறையை பாசத்தோடு நேசித்த அவர் இளைஞர்களே மாற்றத்தை சாத்தியப்படுத்தக்கூடியவர்கள், அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும், மக்களுக்கான மாற்று சமூகத்தினை உருவாக்கிட போராடும் அமைப்புகளுக்கு தலைமையேற்க வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர், இளைஞர்களின் ஆகர்ச சக்தியாக திகழ்ந்தவர்.

இந்திய சுதந்திரப்போரின் மகத்தான வீராங்கனைகளில் ஒருவரும், அர்ப்பணிப்பும், தியாகமும் கொண்டு வாழ்ந்த போது தேசத்திற்காக தனது வாழ்நாளையும், உழைப்பையும் செலுத்திய அந்த ஒப்பற்ற மனிதர் வாழ்வுக்கு பின் தனது உடலையும் தான் நேசித்து, சுவாசித்து மக்களுக்காக அர்ப்பணித்த அந்த மருத்துவ சேவைக்கு அதன் வளர்ச்சிக்கு தனது உடலை தானமாக தந்த தோழர் கேப்டன் லட்சுமி அவர்களின் புகழ் ஓங்கட்டும்,. அவரது வாழ்வும் பணியும் இளம் தலைமுறைக்கு உத்வேகமளிக்கட்டும்,.. இன்குலாப் ஜிந்தாபாத்..

- அரவிந்தன்
நன்றி / இளைஞர் முழக்கம்

புவிவெப்பமயமாதல்



ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் லாப வெறியும் பற்றி எரியும் புவியும்
இப்புவிமண்டலம் தோன்றி 450 கோடி ஆண்டுகள் கடந்துவிட்டது. உயிர்களின் தோற்றத்தின் பின்னணியில்உயிரணு கூட்டமைப்பு கண்டறிதலும், டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவமும், மார்க்கனின் சமுதாய வளர்ச்சி குறித்த ஆய்வும், ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாது போன்ற கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மனித குலத்தை ஆய்வு செய்தனர் மாமேதைகள் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ்.
அவர்கள் உலக முதலாளித்துவம் மனிதர்களுக்கான சந்தையை உருவாக்குவதற்கு பதில் சந்தைக்கான மனிதர்களை உருவாக்கும் என வரலாற்றியல் பார்வையோடு முதலாளித்துவ லாபவெறி குறித்து அறிவித்தார்கள். அந்த சுரண்டும் வர்க்கத்தின் லாபவெறியே இன்றைய சுற்றுசூழல் மாசுகேட்டிற்கும், புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாக  அமைந்துள்ளது. சுற்றுப்புற சுழல், மாசு படும் கற்று, குறையும் நிலத்தடி நீர், அழிந்துவரும் விளைநிலங்கள், அழிக்கப்பட்டுவரும் காடுகள்......நமது பூமியின்,  மனித இனத்தின் மிகப்பெரும் எதிரிகள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளமல் உள்ளனர்.
2030ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமயத்தால் ஏற்படும் பேரழிவுகளால் இறப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன்படி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 லட்சமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. பருவநிலை மாற்றத்தால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு பொருளாதார  இழப்பு ஏற்படுகிறது என்றும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. மேலும் 2000 - 2007 ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி வளிமண்டலத்தில் நிகர அளவில் அதிகரித்து வரும் கார்பன்டைஆக்சைடு மற்றும் மீதேன் வாயு அதிகரிப்பால் இந்நிலை ஏற்பட்டுள்ளது,
குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட  இந்தியா, சீனா போன்ற நாடுகள் பெருமளவு நிலக்கரியை மின்சாரத் தேவைக்காக எரித்து வருகின்றன. இச்செயற்பாடு அதிகளவு  கார்பன்டைஆக்சைடு  வளிமண்டலத்துக்குள் வெளித்தள்ளுக்கின்றது. அயனமண்டலக் காடுகள் உலர்ந்து வருகின்றன என்றும் இதனால் காட்டுத்தீ போன்றவை ஏற்பட்டு பெருமளவு தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.
பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்படிவுகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
வெப்பமடைவதால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்பு மையம் எச்சரித்துள்ளது. வறட்சியைச் சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பல நாடுகள் இப்போதிருந்தே எடுக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும். வறட்சி மற்றும் நீராதாரத்தை திறம்பட நிர்வகிக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணிகளாகும். இதிலும் குறிப்பாக வறட்சியை சமாளிக்க நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும். சுற்றுசூழல் பாதிப்பு, உணவு நெருக்கடிக்கு காரணமான அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய நாடுகள் தங்களுடைய எரிசக்தி சேமிப்பை அதிகரிக்க இன்று 500 மில்லியன் ஏக்கர் நிலங்களை வளர்முக ஏழை எளிய நாடுகளில் மிரட்டி வாங்கி குவித்து மக்காசோளத்தை பயோ டீசலுக்காக பயிரிட்டு வருகிறது. இதனால் மேலும் உணவு நெருக்கடி ஏற்படவே வழி வகுக்கும்.
இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நதி நீர் ஆதாரம் இல்லாத நிலையில் மன்னர்கள் ஏராளமான ஏரிகள், குளங்களை அமைத்தனர். அவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்து வந்தது. அப்போது இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால், தண்ணீரின் தேவையும் குறைவாக இருந்தது. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் நிலம் பாழ்பட்டது. நீரின் தேவையும் அதிகரித்தது. பராமரிப்பின்றி ஏரிகளும் குளங்களும் தூர்ந்துபோனதால், விவசாயமும் அழிந்து வருகிறது. நமது விவசாயிகள் 120 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தி வந்தனர். அவற்றில் 90 வகை நெல் ரகங்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. இவை எல்லாமே வறட்சியைத் தாங்கும் திறன் கொண்டவை. இந்திய போன்ற வளரும் நாடுகளில் நானோ தொழில்நுட்பம் மூலம் புவிவெப்பமயமாக்கலை தடுக்க பல கட்ட ஆராய்ச்சிகளை மேற் கொண்டு வருகிறது.
பருவநிலை மாற்றங்களால், பூமியின் இயற்கை படைப்புகளில் பெரும்பாதிப்புகள் ஏற்படுகின்றன. பூமியின் தட்பவெப்ப வேறுபாடு, மழைபொழியும் காலநிலையில் மாற்றம், கடலின் நீர்மட்டம் உயர்வு, பனிமலை உருகும் அபாயம், சுனாமி, ஆழி பேரலைகள், ஒருபகுதியில் வறட்சி, இன்னொரு பகுதியில் வெள்ளம், விவசாயத்தில் வீழ்ச்சி, நோய்கள் பரவும் ஆபத்து, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் காடுகள் அழிந்துபோகும் சூழல், மொத்தத்தில் இயற்கையின் சமன்பாடு அடியோடு சீரழிதல் போன்ற விளைவுகள் பருவநிலை மாற்றங்களால் உருவாகின்றது. புவிவெப்பமயமாதலும் அதன்விளைவாக பருவநிலை மாற்றமும்தான்,  இன்று மனித சமூகத்தின் முன் உள்ள மாபெரும் சவால் ஆகும்.
பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும். பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் கூடுதலாகவும், துருவப் பகுதிகளில் குறைவாகவும் இருந்தாலும் ஒட்டுமொத்த சராசரி வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த வெப்பநிலை கூடினாலும் குறைந்தாலும் பூமிக்கு ஆபத்தாகப் போய்விடும்.
பூமி வெப்பம் அடைவதற்கு சூரியன் மட்டும் காரணம் அல்ல. கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரா புளோரா கார்பன் போன்ற வெப்ப வாயுக்களை நாம் அதிக அளவு இயற்கைக்கு மாறாக உற்பத்தி செய்து வளிமண்டலத்திற்கு அனுப்பிக் கொண்டே இருப்பதால். பூமி சூடாகிறது.
பூமிக்கு சூரியனிடம் இருந்து வெப்பம் வருகிறது. வெப்பத்தை முதலில் பூமி உள் வாங்குகிறது. பிறகு வெளிவிடுகிறது. வெப்பத்தை BMT (Billion Metric Tonne ) என்ற அலகில் அளவிடப்படுகிறது. பூமியில் வெப்பம் உள்வாங்கும் அளவு எவ்வளவு என்று கணக்கிட்டால், தோராயமாக, கடல்மூலம் 93 BMT, காடுகள் மற்றும் நிலத்தின் மூலம் 110 BMT ஆக மொத்தம்,  203 BMT வெப்பத்தை சூரியனிடம் இருந்து பூமி உள்வாங்கிக் கொள்கிறது.
கடல் மூலம் 90 BMT, மனிதன் விலங்குகள் மூலம் 55 BMT, பெட்ரோல், எரிபொருள்கள் வகை மூலம் 50 BMT, காட்டுத் தீ மற்றும் தாவரங்களால் 3 BMT மற்றும் இதரவகைகளில் 1 BMT ஆக மொத்தம் பூமி வெளியிடும் வெப்பத்தின் அளவு 207 BMT.
பூமி உள்வாங்கும் வெப்பத்தின் அளவு 203 BMT, அதேநேரத்தில் பூமிவெளியேற்றும் வெப்பம் 207 BMT, பூமியில் இருந்து வெளியேற்றப்படும் இந்த அதிகப்படியான 4 BMT வெப்பம், வளி மண்டலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விண்வெளிக்குக் கடத்தப்பட்டு விட்டால் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால், இந்த 4 BMT, வெப்பம், பசுங்குடில் வாயுக்களால் தடுக்கப்பட்டு மீண்டும் பூமியை நோக்கி அனுப்பப்படுகிறது. இதனால்தான் புவியின் வெப்பநிலை அதிகமாகி சூடேறுகிறது.
        நம் புவிக் கோளிலுள்ள வளிமண்டலத்தின் உயரம் சுமார் 80 கி.மீ. இதனை வெப்பநிலைக்குத் தகுந்தபடி 5 பகுதிகளாகப் பிரிக்கின்றனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ வரை வளிமண்டலத்தின் 80% என்பது அடிவளி மண்டலத்திற்குள் உள்ளது. அடிவளி மண்டலம் என்று அழைக்கின்றோம். இதற்கு மேலே 10, 50 கி.மீ  உயரம் வரை காணப்படுவது அடுக்கு கோளம் நண்பா! இந்த இரண்டுப் பகுதிக்கும் இடையே டிரோபாபாஸ் என்ற இடம் உள்ளது. அடுக்ககு கோளம் வளிமண்டத்தில் 19.9% பகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் உள்ளது. இந்த ஓசோன் படலம் இல்லாவிட்டால் நாமனைவரும் கருகி செத்திருப்போம். ஏராளமான தோல் வியாதிகள் வந்து மடிந்திருப்போம்! ஆம் நண்பா! சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில் 93, 99% அளவுக்கு, ஓசோன் தன் வசம் ஈர்த்து வைத்துக்கொள்கிறது. எனவேதான் நாம் புறஊதாக்கதிர்களின் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம்.
        ஓசோன் படலம், அடுக்கு வளிமண்டலத்தில் அடுக்குக் கோளத்தில் உள்ளது என்ற உண்மையைக் கண்டறிந்தவர்கள் சார்லஸ் பாப்ரி மற்றும் ஹென்ரி புய்ல்ஸன் என்ற விஞ்ஞானிகள்தான். 1913இல் தான் இப்படி ஒரு பகுதி இருப்பதைக் கண்டறிந்தனர். ஓசோன் என்பது, மூன்று  ஆக்ஸிஜன் தனிமங்களின் இணைப்புதான். புறஊதாக்கதிர்கள் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் மோதி, ராதனை ஆக்ஸிஜனாக உடைக்கிறது. பின் அந்த ஆக்ஸிஜன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஓசோன் ஆகிறது. இந்த ஓசோன் அடுக்குக் கோளம் முழுவதும் பரவியுள்ளது. ஆனால் 20 ,40 கி.மீ உயரத்தில் மட்டும் ஓசோனின் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதன் பரவல் தன்மை நிலையற்றதும் கூட தொடர்ந்து ஆக்ஸிஜன் பிரிவதும், இணைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. இதனை ஆக்ஸிஜன் ஓசோன் சுழற்சி என்கின்றனர். இந்த அடுக்கு கோளத்திலுள்ள ஓசோன் முழுவதையும், ஒரே அமுக்காக அமுக்கினால். முன்கனம் ஒரு சில மி.மீ மட்டுமே ஓசோன் சந்திக்கும்.
        அண்டார்டிகா, அலாஸ்கா, கிரீன்லாந்து பகுதிகளில் பயங்கரவாதிகள் இதுவரை நடத்திய அதி பயங்கர தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. ஆளே இல்லாத நாட்டுல யாருக்குடா குண்டு வைக்கிறாய்ங்க என்று வியக்கும் நல்லுள்ளம் கொண்டோர்களுக்கான விளக்கம் வருமாறு.
        நாசா என்கிற அமெரிக்க ஆய்வு கூடம் நடத்திய ஆய்வில் இதுவரை அண்டார்டிக, அலாஸ்கா, கிரீன்லாந்து பகுதிகளில் 2003லிருந்து 2 டிரில்லியன் டன் ஐஸ் கட்டி உருகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனை குலோபல் வார்மிங் என்று சொல்கிறார்கள். நமக்கென்னவோ குலோபல் வார்னிங் என்றே காதில் விழுகிறது. 2 டிரில்லியன் டன் என்பது 2 லட்சம் கோடியே ஆயிரம் கிலோ பனிக்கட்டி உருகியுள்ளது. இப்படி நடைபெறும் பணிக்கட்டி உருகல் குறித்து பல வருடங்களாகவே மிக கடுமையான எச்சரிக்கைகளை ஆய்வாளர்கள் அறிவித்து வந்துள்ளனர். இது குறித்து முன்னாள் அமெரிக்க குடியரசு பதவி போட்டியாளர் அல் கோர் எடுத்த ஆவணப் படமான 'குலோபல் வார்மிங் - தி இன்கண்வீனியண்ட் ட்ரூத்' பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. (The Hindu - Dec 17 2008 - Newscape - 2 Trillion tonnes of ice have melted since 2003: NASA) (Ice melting across globe at accelerating rate, NASA says - CNN) குலோபல் வார்மிங் பிரச்சினையால்தான் மாலத்தீவு மூழ்கும் அபாயம் ஏற்பட்டு அந்த நாட்டு பிரஜைகள் உலகில் எங்கு வேண்டுமானலும் குடியேறும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
மனிதனோ, விலங்குகளோ அல்லது தாவரங்களோ மண்ணில் உற்பத்தியாகி முடிவில் மீண்டும் மண்ணிலேயே சிதைந்து பல மூலக்கூறுகளாக மாறுவது இயற்கையின் சுழற்சியாக உள்ளது.  கோடிக்கணக்கான ஆண்டுகளாக புவியில் உயிரினங்கள் உற்பத்தியாவதும் மடிவதும் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளது.
ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக், பாலிதின் பொருட்களுக்கு அழிவே இல்லை. அவை மக்குவதும் இல்லை; எரித்தால் அதன் மூலக்கூறுகள் சிதைவதும் இல்லை. ஏனெனில், அவை கார்பன் மூலக் கூறுகளால் ஆன பொருட்கள். பிளாஸ்டிக், பாலிதின் பொருட்கள் எரிக்கப்படும் போது அதனால் உருவாக்கப் படும் கார்பன் டை ஆக்சைட்தான் வளிமண்டலத்திற்கு சென்று பசுங்குடில் வாயுக்களில் முதலிடம் பிடித்துக் கொள்கிறது.
அதனால்தான் பிளாஸ்டிக், பாலிதின் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற கோசம் வலுத்துக் கொண்டே இருக்கிறது. கப்பல், விமானம், ரயில், பேருந்துகள், மகிழ்உந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என்று மனித வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துவிட்ட பெட்ரோலிய வாகனங்களால் வெளியேற்றப்படும் புகை தான் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, காரீய ஆக்சைடு போன்ற ஏராளமான வெப்ப வாயுக்களாக மாறி, புவிமண்டலத்தைச் சூடேற்றுவதில் முக்கியபங்கு வகிக்கின்றன. அணு மற்றும் அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. நகராட்சிக் கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் 80%க்கும் மேல் நச்சு இரசாயனங்கள், கனஉலோகங்கள், திட உயிர்க் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டது. சூடான தொழிற்சாலைக் கழிவுகளும் கடல் நீரில் கலக்கப்படுகிறது. இந்த அனைத்து கழிவுகளும், கடற்கரை நீரோட்டத்தின் மூலம் பரவலாக்கப்படுகிறது. இத்தகைய அழிவினைத் தரும் தொழில் நுட்ப நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகளே  இவ்வளவு காலம் முன்னணியில் இருந்து வந்தன.
நாடுகள் தொழில்மயமாகத் தொடங்கிய 1750 ஆம் ஆண்டுகளில் இந்த வெப்பவாயுக்களின் அளவு 330 ppm ஆக இருந்தது. 2005 ஆம் ஆண்டில் 425 ppm ஆக உயர்ந்து விட்டன. 1750 இல் இருந்ததை விட 2005 இல் பூமியின் சராசரி வெப்பம் ஒரு டிகிரி உயர்ந்து உள்ளது. இதேநிலை தொடருமானால், 2030 இல் வெப்பவாயுக்களான பசுங்குடில் வாயுக்களின் அளவு 470 முதல் 490 ppm ஆக உயரும். அந்நிலையில் புவியின் வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை உயர்ந்துவிடும் அபாயம் உள்ளது.
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட், மீத்தேன், குளோரா புளோரா கார்பன் ஆகிய பசுங்குடில் வாயுக்கள்தான் காரணமாகும்.
மீத்தேன் (CH4) தற்போது காற்றுமண்டலத்தில் மீத்தேனின் அளவு 1783 PPM உள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 PPM அதிகம். வெப்பத்தை உண்டாக்குவதில், இது கரியமிலவாயுவை விட இருமடங்கு சக்தி கொண்டதாகும். 60 விழுக்காடு, மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும், நெல்வயல்களில் இருந்தும், கால்நடைகளின் கழிவுகளில் இருந்தும், அழுகிய நிலையில் இருக்கின்ற குப்பைக்கூளங்களில் இருந்தும் உற்பத்தி ஆகின்றது. மீதமுள்ள 40 விழுக்காடு, சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கிய ஈரமான நிலத்தில் இருந்தும், கரையான்களில் இருந்தும் உற்பத்தியாகின்றது. காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை மீத்தேன் தங்கியிருக்கும்.
நைட்ரஸ் ஆக்சைடு (N2O) காற்று மண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடின் அளவு 318.6 ppm உள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளைக் காட்டிலும் 9 ppm அதிகமாகும். கரியமில வாயுவைவிட 200 மடங்கு, வெப்பத்தை உண்டாக்கும் தன்மை நைட்ரஸ் ஆக்சைடுக்கு உண்டு. வாயுமண்டலத்தில் இதன் ஆயுட்காலம் சுமார் 150 ஆண்டுகளாகும்.
குளோரா புளோரா கார்பன் (CFC) குளேரா புளோரா கார்பன் என்பது ஒரு வகையான வேதியியல் பொருளாகும். இதில் பலவகை உண்டு. இருப்பினும் CFC11 மற்றும் CFC12 ஆகியவைக் குறிப்பிடத்தக்கவை.
குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி வெப்பத்தை உண்டாக்கக்கூடியன. இது கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும் ஓசோன் படலத்தை அழித்து, புற ஊதாக் கதிர்களை பூமியின் மீது விழச்செய்து உயிரினங்களுக்கு அதிக பாதிப்பை  உண்டாக்குகிறது.
ஓசோன் பகுதியில் ஓட்டைகள் உள்ளதாகவும், அதனால் சூரிய வெப்பம் பூமியைத் தாக்குவதாகவும் சொல்கின்றனர்.சிரபுஞ்சியில்கூட வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
உலகம் முழுவதும், கடற்கரைப் பகுதிகளே மக்கள் குடியிருக்க விரும்பும் பகுதியாகும். இந்தியா அதிலிருந்து மாறுபட்டதல்ல. இந்தியாவின் கடலோர மாவட்டங்களில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 455 நபர்கள் குடியிருக்கின்றனர். இது தேசிய சராசரியான, 324ஐவிட (2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) 1.5 மடங்கு அதிகமானது. அனைத்துப் பெரு நகரங்களும் கடலோரப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்தியாவின் 8118 கிலோமீட்டர் தொலைவுள்ள கடற்கரை எல்லை பலவகையான வாழிடங்களைக் கொண்டது. மேற்கு கடற்கரைப் பகுதி பரந்த நிலத்தட்டினைக் கொண்டு, பின் நீர் இணைப்புகளாலும், சேறு, சகதி கொண்ட சமதளத்துடனும் உள்ளது. கிழக்கு கடற்கரை, தாழ்ந்த நிலப் பகுதியைக் கொண்ட காயல்கள், சதுப்பு நிலங்கள், கடற்கரைகள் மற்றும் மாங்குரோவ் அதிகமுள்ள டெல்டாப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள சிறு தீவுகளிலும், தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் லட்சத் தீவுகள், அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் பவளப் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. மன்னார் வளைகுடாப் பகுதி, கடல் பன்முகத்தன்மை பாதுகாப்பு பகுதியாகும். இந்தியாவில் 31 கடல் பாதுகாப்பு பகுதிகள் சுமார் 2,305,413 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள கடல் பகுதி தனித்த பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள கடல்வளங்களை கண்டறியவும் பயன்படுத்தவுமான சிறப்பு உரிமைகளை இந்தியா கொண்டிருக்கிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக கடலினுடைய சீற்றம் அதிகரித்து வருகிறது.
1980களில் தான், அறிவியல் சான்றுகள், மனித செயல்களால் ஏற்படும் பசுமைக் குடில் வாயுக்களின் வெப்ப உமிழ்வை, புவியின் தட்ப வெப்ப மாறுதல் குறித்த ஆபத்துடன் இணைத்து ஒரு பொதுப் பிரச்சனையாகப் தொடர்புபடுத்த ஆரம்பித்தது. 1988-ல், உலக வானிலை மையமும் (WMO) ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டமும் (UNEP) இணைந்து மனித செயல்களினால் உண்டாக்கப்படும், தட்ப வெப்ப நிலை மாறுபாடுகள் குறித்த ஆபத்தினை ஆய்வு செய்வதற்கு தட்ப வெப்ப நிலை மாற்றம் மீதான அரசாங்கங்களுக் கிடையேயான குழுமத்தை ஏற்படுத்தியது. 1990-ல், ஐக்கிய நாடுகள் சபை, தட்ப வெப்ப நிலை மாறுபாடு குறித்த உடன்படிக்கை வடிவத்திற்கான சர்வதேச குழுவை (UNFCCC) உருவாக்கியது. இந்த உடன்படிக்கைக்கான வரையறையானது, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டுக்கு மனிதனால் ஏற்படும் மாற்றமே காரணம் என்று விளக்குகிறது. இதன் பின்னணியில் ரியோடி ஜெனீரோ, தோகா, கோபன்கென் சுற்று என பல உச்சி மாநாடுகள் நடத்தப்பட்ட பின்னணியில் வளர்ந்த நாடுகளின் நடவடிக்கையே இதற்குகாரணமாகஉள்ளது.
        1990 களில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிக்கும் தன்மையுடைய மின்ஆற்றல் தொழில் நுட்பத்தினை மேம்படுத்துவதற்கான திட்டங்களும், கொள்கைகளும் 111 மில்லியன் டன் வெப்ப உமிழ்வுகள் குறைப்பதற்கு பேருதவியாக இருந்தது. இதனடிப்படையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட 7300 க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம், 3600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகின்றது ( தேவையில் 40% ) ஆனால், இதே கடலோரப் பகுதிகளில் அணு மற்றும் அனல் மின் நிலையத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, மேற்படி சேமித்த வெப்ப உமிழ்வு அளவை விட பல மடங்கு அதிகமான அளவை வெளியேற்றி வருகின்றன.
        1999ல் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்ட புதிய கண்டறிதல்களுக்கான அனுமதிக் கொள்கை (Exploration Licensing Policy) இந்தியக் கடல் பகுதியில் குறிப்பாக கிழக்கு கடலோரப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்களை தனியார் பெரு நிறுவனங்கள் வளத்தை கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒருபுறம் தேசிய சுற்றுச் சூழல் கொள்கையில் (2006) கடலோர வளங்கள், உயிர்ச்சூழலைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மையை அறிவித்துவிட்டு, மறுபுறம் அதனை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது என்பது இந்திய அரசின் பெரு முதலாளித்துவ ஆதரவு கொள்கையையே காட்டுகிறது.
இதில் பலியாவது நமது இயற்கை வளங்களும் அதன் விளைவாக நிகழும் வெப்ப நிலை மாறுபாடுகளும் தான். மேலும், இத்தகைய திட்டங்களின் நெருக்கடியால், பேரழிவுகள் நிகழும் போது 2% அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் இதனால் பாதிப்படை பதில் பெரும் பகுதி கடலோரப் பகுதிகளிலில் வாழும் மக்களே.
தமிழகத்தில்
மொத்த மக்கள் தொகையில், 7 சத மக்கள் தொகையும், 4 சத பரப்பினையும், 3 சத நீர் ஆதாரங்களையும், ஆண்டுக்கு சராசரி 930 மில்லிமீட்டர் மழையளவு கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.அகில இந்திய சராசரியைவிட 270 மி.மீட்டர் குறைவான மழைவளத்தை கொண்டுள்ளது. தமிழகத்தில் 2239 கால்வாய்களும், 41260 ஏரிகளும், 18,32,154 கிணறுகளும், 78 நீர் தேக்கங்களும் உள்ளன. தமிழகத்தில் 385 வட்டாரங்களில் 97ல் மட்டுமே முழுமையான நீர் ஆதாரம் உள்ளதாக அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. எனில் சுற்றுசூழல் மாசுப்பாடும், புவி வெப்பமயமடைதலால் ஏற்படும் பாதிப்பும் பளிச்சென தெரிகிறது, மேலும்...
தமிழகத்தின் 1976ல் 1.25 எக்டராக இருந்த பயன்பாட்டுநிலப்பரப்பு 2005ல் 0.83 எக்டராக குறைந்துள்ளது. இது இந்திய சராசரியான 1.33 யை விட .50 எக்டர் குறைவாகும். தமிழகத்தின் 1,30,058 சதுர கி.மீ நிலப்பரப்பளவில் 22,877 சதுர கி.மீ பதிவு செய்யப்பட்ட வனபகுதியாக உள்ளது. இது மொத்த நிலப்பரப்பில் 17.59 விழுக்காடு ஆகும். இதில் சாகுபடி நிலங்களாக 51 லட்சம் எக்டரும், பாசன பரப்பாக 28.63 லட்சம் எக்டரும், மானவாரி சாகுபடியில் 22.37 எக்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1.10 லட்சம் எக்டர் நிலம் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட விபரங்களில் இருந்து தெரிந்து கொள்வது பெரும்பகுதி உணவு தானியம், மற்றும் மானவாரி, கால்நடை வளர்ப்பிற்கு என்று வனங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. மறுபுறம் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் தற்போது கிராமப்புறங்கள் குறைந்து கொண்டே வருகிறது.,
நகரமயமாதல் என்பது தமிழகத்தின் சராசரி 43.9 சதமாக உள்ளது. 2001ம் ஆண்டு கணக்குப்படி 832 நகர மையங்களில் 2.72 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உதாரணத்திற்கு  சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் கட்டுப்பாட்டில் சென்னை மாநகரம், 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள், 214 கிராமங்கள் உள்ளடக்கி 1189 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது என்பது எந்தளவு நகரமயமாதல் நடைபெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் தினசரி 930 டன் திட கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன என்ற தகவல் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது,
        பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது. காரணம் நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் நெட்வொர்க்கையும் பாதிக்கிறது. இந்த வகையில் கேரிபேக் எனும் பாலிதீன் பைகள், யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் கப்புகள், இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு கேரி பேக் மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகுமாம். மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.
        சமீபகாலமாக, கேரிபேக்கில் சுடச்சுட உணவுகளை பார்சல் பண்ணி கொடுக்கின்றனர். சாம்பார் போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணித்து, இயற்கை வளங்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து இல்லாத, மட்கும் தன்மையுடைய, துணிப்பைகள், பேப்பர் பைகளை பயன்படுத்த இப்போதே உறுதிக்கொள்வோம்.
        அரசு மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தால் வரையறுக்கப்பட்ட, காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் 200 மைக்ரோகிராம் அளவுடையது. ஆனால் மதுரையில் 700 மைக்ரோகிராமாக உள்ளது. புழுதியால் உடல் பழுது :அதேபோல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வரையறுக்கப்பட்ட நுகரும் மிக நுண்ணிய துகள்கள் 100 மைக்ரோகிராம் என்பது நகரில் 300 மைக்ரோகிராமாக இருக்கிறது. இப்படி மாசு சூழ்ந்து, சுற்றுச்சூழல் மாசுப்படுவதோடு, உடல்நலமும் பாதிக்கிறது. வாகனங்கள் வெளியிடும் புகையில், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைட், ஓசோன், பி.எம்-10, பி.எம்.25 போன்ற நச்சுக்கள் உள்ளதால் புதுப்புது வியாதிகள் உருவாகின்றன.
தமிழகத்தில் மேற்படி விபர அடிப்படையில் காடுகள் ஒரு பகுதி அழிக்கப்பட்டு வரும் சூழலில் சுற்றுசூழல் மாசுபாட்டிற்கு காரணமான கழிவுகள் ஏராளமான வகையில் வெளியேற்றப்படுகிறது. வாகனப்புகை, பிளாஸ்டிக் உபயோகம், மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், சிமெண்ட்ஆலை, சாய ஆலை, தோல் ஆலைகள் என பல வகைகளில் ஏற்படுகிறது. மணலி, கடலுர், துத்துக்குடி, மேட்டூர், இராணிப்பேட்டை, ஸ்ரீபெரும்புதுர்ர், பெருங்குடி, பெருந்துறை, கும்மிடிப்பூண்டி, திருப்பூர் ஆகிய பகுதிகள் மிகுதியான அளவில் நச்சுத்தன்மை மற்றும் மாசுப்படுத்துதலை கூடுதலாக செய்யும் பகுதிகள் என தமிழகத்தில் கண்டறியப்படுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக கடலினுடைய சீற்றம் அதிகரித்து வருகிறது. சென்னை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் நீர் கரையை தாண்டி உள் புகுந்த நிகழ்வு ஏற்பட்டது. சுனாமிக்குப் பிறகு நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் தட்பவெப்ப நிலைகளிலும், பருவங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. .
குமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் பகுதியில் உள்ள ராமன் துறை, புத்தன் துறை, கடியப்பட்டினம், குளச்சல், பூத்துறை போன்ற பகுதிகளில் கடல் உள்வந்து வீடுகளும், கிறிஸ்தவ தேவாலயங்களும் சேதமடைந்துள்ளன. தேங்காப்பட்டினத்தில் உள்ள கடற்கரை பொழிமுகம் என்பது ஆறும் கடலும் சங்கமிக்கும் இடமாகும். இங்குள்ள படகு சவாரிக்காக சுற்றுலாப் பயணிகள் பெரிதும் வருவதுண்டு. அங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கடல் உள் வந்துவிட்டது. நாளுக்கு நாள் தேங்காப்பட்டினத்தின் பரப்பு குறைந்து வருகிறது. மேலும் வள்ளவிளை, தூத்தூர், முள்ளூர், இனயம்புத்தன் துறை, ராஜாக்கமங்கலம் போன்ற கடலோரப் பகுதிகளிலும் கடல் அலைகள் பேரிரைச்சலோடு 25 மீட்டருக்கு மேல் சீறிவந்து அங்குள்ள வீடுகளைத் தரைமட்டமாக்கியது. பல இடங்களில் கடற்கரை சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே முட்டம், குமரி முனை போன்ற கடற்கரைப் பகுதிகள் மட்டும் அல்லாமல் நெல்லை மாவட்டத்தின் உவரி போன்ற பகுதிகளிலும் கடலின் சீற்றம் அவ்வப்போது ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளான ராமேசுவரம், வாலிநோக்கம், நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளிலும் இதே பாதிப்பு ஏற்படுகிறது. அலைகள் சீறிவரும் கடலை "கத்தும் தரங்கம்' என்று அழைத்தனர். எனவே, கடல் அருகில் இருந்த ஊர் தரங்கம்பாடி என்று மாறியதாகச் செய்திகள் உள்ளன. பூம்புகார் நகரம், மாமல்லபுரம், 1964-ல் தனுஷ்கோடி ஆகிய நகரங்களும் கடலின் சீற்றத்தால் அழிந்தன என்பது வரலாற்றுச் செய்திகள். இந்தக் கடல் அரிப்பைத் தடுக்க தாற்காலிக நடவடிக்கை இல்லாமல் நிரந்தரமாகக் கடல் அரிப்பு தடுப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தாக வேண்டும்.
2004-ல் ஏற்பட்ட சுனாமிக்குப் பின் கிழக்குக் கடற்கரை ஓரங்களில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், ஒரிசா எல்லை வரை இதேபோல இயற்கையின் சீற்றங்கள் நிறையவே ஏற்பட்டுள்ளன. மெரினாவுக்கு அடுத்த நீண்ட கடற்கரையான கடலூர் கடற்கரையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தாழங்குடாவிலிருந்து கடலூர் வரை உள்ள 3 கி.மீ. நீண்ட கடற்கரையை "சில்வர் பீச்' என்று அழைப்பார்கள். இந்த மணற்பரப்பும் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. நமது பாதுகாப்புக்காக ஆய்வுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மீனவர்களும் கடலுக்குச் செல்ல முடியவில்லை. மீன் வளமும் குறைந்துவிட்டது.
ஆற்றுநீர் கடலுக்குச் செல்வதால் மீன் வளம் பெருகுகிறது. கடல் அரிப்பைத் தடுக்கவும், கட்டுமரங்களை நிறுத்தவும், கடல் ஆழமுள்ள பகுதிகளில் தூண்டில் வளைவுகள் என்ற அமைப்பைக் கட்ட 1999-ம் ஆண்டில் தமிழகத்திலும், கேரளத்தைப் பின்பற்றி திட்டமிடப்பட்டது. கற்களைப் போட்டு கடல் அரிப்பைத் தடுக்க சுழி உள்ள பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படுகின்றன. காற்று வேகமாக உள்ள பகுதிகளில்தான் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். ஆனால், ஆழமில்லாத, அவசியமற்ற பகுதிகளிலும் தூண்டில் வளைவுகள் அமைப்பதும் கடல் சீற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. ஏற்கெனவே பூமத்திய ரேகைக்கு தென் பகுதியில் உள்ள குறிப்பாக தென் மாநிலங்களில் இதுவரை பூகம்பங்கள் ஏற்படவில்லை. ஆனால் நில அதிர்வுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
இதற்கு காரணமான அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள்  மொத்த பாதிப்பில் 75 சதத்திற்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் இந்த நாடுகள் புவி வெப்பமயமாக்கலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மூன்றாம் உலக நாடுகளின்  மீது தடுப்பு நடவடிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் என இலவச ஆலோசனைகளை அள்ளி தெரிக்கிறது. இந்த ஏகாதிபத்திய உலகமயமாக்கல் காலத்தில் அனைத்து விதமான பருவ நிலை மாற்ற நடவடிக்கைக்கும் மாற்று நடவடிக்கையில் ஈடுபட மூன்றாம் உலக நாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி, நிதி உதவி, பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றுவதில் கட்டுப்பாடு என்பதை கறராக அமுலாக்க உலக மக்களோடு இணைந்து போராடவேண்டிய அவசியமுள்ளது.
மாற்று நடவடிக்கைகள்
1, காடுகள் அழிவதை தடுக்க உரிய திட்டங்களை மேற்கொள்வது, இக்காடுகளினை நீண்ட காலம் பாதுகாத்து வந்த வனங்களில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை செய்து கொடுத்து மேலும் சூழலியல் நிலைநிறுத்தல் மற்றும் வனங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
2, 20 மைக்ரான் அளவு கீழான பிளாஸ்டிக் பொருள் உபயோகத்தை தடை செய்வது.
3, நீர்வளத்தினை மேம்படுத்திட உரிய பாசன மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளை தூர்வாரி முறையாக பாரமரித்தல்.
4, நகர்புறங்களில் மரம் வளர்ப்பை உறுதி செய்வது,
5, தனிநபர் வாகன பயன்பாட்டை குறைத்து குழுவாக மற்றும் பொதுப்பயன்பாட்டை அதிகப்படுத்துவது,
6, தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றுவதை கண்காணித்து சுத்திகரித்து வெளியேற்றுவது.