”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

குடி அரசியல்


போதை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடானது என ஆளும் அரசுகள் ஒருபுறம் விளம்பரங்களை செய்து கொண்டே மறுபுறம் அரசுகளே மது விற்பனை செய்யும் அவல நிலைநீடித்து வருகிறது. இது இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல. இந்தியாவில் இனக்குழு காலம் தொட்டே உணவு பழக்கவழக்கத்தின் ஒரு பகுதியாக பழங்களால் உருவாக்கப்பட்ட மதுபானங்களும், போதை வஸ்துக்களும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வேத காலத்தில் சுராபானம், சோமபானம் என்ற குடி முறையும் இருந்துள்ளது. சொத்து, அரசு, மதம் என்பது எப்போது தோன்றியதோ அப்போதிருந்தே மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் கருவியாக மதுவும் உற்பத்தி செய்யப்பட்டது.

மது பானம் மட்டுமல்லாது, கஞ்சா, புகையிலை, அபின், ஹெராயின், கசகசா, பாக்கு போன்றவைகளில் இருந்தும் பெறப்பட்டது. உயரமான  தென்னை, பனை, ஈச்சை போன்ற ஒற்றைத்தடி புல்வகை மரங்களில் இருந்து கள் வடிக்கும் முறையும் கண்டறியப்பட்டது மட்டுமல்ல, அதனை செய்வதற்கு என்று சமூகத்தில் சாணார், ஈழவர், நளவர் என சாதிகளையும் உருவாக்கியது, இந்தியாவில் குப்த மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த சாணக்கியர் மதுவை விற்பது அரசின் செயல்களில் ஒன்றாக அறிவித்தார்.

உழைக்கும் மக்களிடம் இருந்து விசுவாசத்தையும், உழைப்பையும் அரசு நிரந்தரமாக பெற வேண்டுமானால் கட்டுப்பாட்டோடு கூடிய மது பழக்கத்தை அரசே பொறுப்பேற்று செய்திட வேண்டும் என அதற்கான விதிமுறைகளை உருவாக்கியவர் (அர்த்தசாஸ்திரம் 2.25 ஆம் அத்தியாயம் 17 முதல் 34 வரை ). கின்வா, மேதகம், ப்ரசன்னா என்று மூன்றுவகையான மதுபானங்களையும் குறிப்பிட்டுள்ளார். இவைகள் அரிசிமாவு, க்ரமுகா பட்டைகள், பழங்கள், பதா, லோதா, தெஜூவாதி, ஏலம், வலுகம், அதிமதுரம், திரட்சைச்சாறு, பிரியங்கு, மஞ்சள், கருமிளகு, வெல்லம் போன்றவைகளில் இருந்து மதுபான உற்பத்தி  செய்யும் முறை குறித்து சொல்லப்பட்டுள்ளது.

அதில் ஈடுபடும் மாந்தர்கள் குறித்தும், அவர்களின் வாழிடம் குறித்தும், மதுவிற்பனைக்ன மையங்கள் குறித்தும் அன்றைய காலத்தில் நிலவரிக்கு அடுத்து அதிகமான வருமானத்தை மதுவிற்பனை வரியின் மூலம் கிடைத்தது..  மது அருந்துவதற்கான குடி சாலைகள் சொகுசாகவும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், வாசைன திரவியங்கள் தெளிக்கப்பட்டும அமைக்கப்பட வேண்டும் என்றார் கௌடில்யன். அரசாங்கமே குடிசாலைகளை கட்டி பராமரிக்க வேண்டும் என்ற அர்த்த சாஸ்திரம், வேறெங்கும் மக்கள் குடிக்ககூடாது. 
குடிசாலைகளில் அதிக மதுவை சேகரித்து வைக்க அனுமதியில்லை. இங்கே சூத்திரர்களும், பஞ்சமர்களும் செல்ல முடியாத நிலையும் இருந்தது. வருணாசிரமக் கோட்பாட்டை தயாரித்த மனுவும் கூட போதை குறித்து பேசியுள்ளான். மதிரா, மத்யா என்ற சாராயவகைகளை குறிப்பிடுகிறான். இந்த குடி கலாச்சாரத்தில் இன பெருமை கொள்ளப்படுவதுதான் வேதனைக்குரியது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்த குடி, தமிழ் குடி என்ற வாசகம் மட்டுமல்ல.. சங்க இலக்கிய காலத்திலேயே சிறியகட் பெறினே எமக்கீயும், மன்னே பெரியகட் பெறினே யாம் பாடத் தாம் மகிழ்ந்துண்ணும் மன்னே என்று அவ்வை அதியமானை புகழ்ந்து பாடியுள்ளதாக (புறநானுற்று 235) குறிப்பிடுகிறது.

தற்போதைய மொழியில் சொல்வதென்றால் குவட்டர் இருந்தால் எனக்கு கொடுத்துவிடுவான், புல் இருந்தால் சேர்ந்து அடிப்போம் என்பான் அதியமான்.. என பெண்களும் குடிப்பழக்கம் பெற்றிருந்தனர். எனவே ஆண்கள் குடிப்பது மட்டும் எப்படி தவறாகும் என்ற கேள்வியை முன்வைத்து அதிபுத்திசாலிகள் குடிமக்கள் குடியை நியாயப்படுத்தும் நடவடிக்கை அன்றிலிருந்து இன்று வரை செய்து வருகின்றனர்.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு பின் அயல்நாட்டு மதுபான வகைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. காலனிய ஆட்சியினரால் 1906ம் ஆண்டு மதுவகைகள் குறித்து ஒரு அரசாணையை வெளியிட்டனர். அதில் மிதமாக குடிப்பவர்கள் பழக்கத்தில் தலையிட இந்திய சர்க்காருக்கு எவ்வகை விருப்பமுமில்லை. அதே நேரத்தில் குடிப்பதற்கான துண்டுதலை குறைப்பதும், அதீதமாகக் குடிப்பதை தடுப்பதும் சர்க்காரின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. 

இது ஒருவகையில் வர்ணசிரமக் கோட்பாட்டை தனது தேவைக்காக காலனிய ஆட்சியினர் பயன்படுத்திக் கொண்டனர். வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது நில வருவாய்க்கு அடுத்தப்படியாக குடிவரி இருந்தது. இந்த வரிச்சுமை அனைத்தும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையே தாக்கியது.
பலாத்காரத்தை செலுத்தி அதிகாரத்தில் இருந்தவர்கள் பொழுதுபோக்கிற்கு மதுவை பயன்படுத்தினர். ஆனால் இதரர்கள் உடல் உழைப்பை செலுத்துபவர்கள் சோர்வை மறந்து தங்களை புதுப்பித்துக்கொள்ள மது அருந்தலாம் என்றனர். ஆனால் அடுத்தநாள் உடலுழைப்பில் ஈடுபட வேண்டும். எனவேதான் இந்த கட்டுப்பாடுகளை வெள்ளையர்களும் சரி, சாணக்கியர் காலத்திலும் சரி எப்போதும் உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தங்களது நலனை பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து உடலுழைப்பினரை கேள்வி கேட்கும் மனோபவத்திற்கு வராமல் இருக்கும் நிலைக்கு பல காரணிகளை உருவாக்கினார்கள். அதில் மதுவும் ஒன்று என்றால் மிகையாகாது. 

ஆம் இங்கிலாந்தில் கூட தொழில் முதலாளிவர்க்கம் தோன்றிய போது, உடலுழைப்பு தொழிலாளர்களை சாராய கடைகளில் இருந்து தொழிற்சாலையை நோக்கி விரட்டியடிக்க பெரும்பாடாய் இருந்தது என்று குறிப்பிடுகின்றனர். இத்தருணங்களில் ஆளும் வர்க்கத்தின் உபரிக்கும். லாபத்திற்கும் பொருளியல் ரீதியாக நெருக்கடி வரும் போது அறவழி கோட்பாடுகளின் மூலம் குடிக்கு எதிரான கருத்தியலையும் முன்வைத்தனர். அதே நேரத்தில் ஆளும் அரசுகள் போதை பழக்கத்தை தங்களது வர்க்க நலனுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். 

இதன் நீண்ட கால பின்விளைவுகளையும், அதற்கு சமூகம் கொடுக்கும் விலையை பற்றி கவலைப்படுவதில்லை. தங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகத்தின் பொதுப்புத்தியை திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகின்றன. இப்படி முரண்பட்ட நிலையை கள் பயன்படுத்திய கல் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடி மட்டுமல்லாது இதர குடிகளும் குடி குறித்த கோட்பாடுகளையும், குடிவிலக்கு குறித்த கோட்பாடுகளையும் அவ்வப்போது முரண்பட்ட நிலையில் எடுத்து வந்துள்ளன.

தமிழகத்தில் மதுவிலக்கு இந்திய விடுதலைப் போரில் அனைவரையும் இணைப்பதற்கு குடிப்பழக்கம் ஒரு தடையாக இருந்த போது அதற்கு எதிராக அன்று பெரும் பகுதி பயன்படுத்தி வந்த கள்ளுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் மதுவிலக்கு என்பதை அமுலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 
தமிழகத்திலும் 1937ல் ராஜாஜி தலைமையில் இருந்த அரசு மதுவிலக்கை அமுலாக்கியது. அப்போது பிரிட்டிஸ் கவர்னர் அரசின் வருவாய் இதனால் பாதிக்கப்படும் என்ற போது வேறு வருவாய்களின்மூலம் நிதியை திரட்டமுடியும் என்றார். ராஜாஜிக்கு பின் ஆட்சிக்கு வந்த ஓமந்துரர் இராமசாமி ரெட்டியார், காமராஜ், பக்தவசலம் வரை மதுவிலக்கு சட்டம் நீட்டிக்கப்பட்டது. 

1967ல் ஆட்சியில் அமர்ந்த அறிஞர் அண்ணாவும் மதுவிலக்கை அமலாக்கினார்.  மதுவிலக்கை அமலாக்கினால் கிடைக்கும் வருவாய் ஒரு நொடி எனது மனக்கண்ணின் முன் தோன்றி மறைந்தது. ஆனால் அதன் பின்னணியில் அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், தன் அறிவை இழந்த மனித முகமும் என் கண்முன்னால் நிற்கிறது. எனவே நிதி கிடைக்கும் என்பதற்காக மதுவிலக்கை ரத்து செய்ய மாட்டேன் எனக்கு பின்னால் வரும் இளைய சமூதாயத்தினரும் குடி என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பார்கள் என்று 1968 ஏப்ரல் 28 மதுவிலக்கு மாநாட்டில் அண்ணா உரையாற்றினார்.

1950ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியல் சாசனம் மதுவிலக்கு குறித்துஉணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படைவாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சட்டத்தின் வழி ஆட்சி நடைபெறுவதாக சொல்லும் தேசத்தில் தான் மதுவிலக்கை அமல்படுத்துவது மட்டுமல்ல, மதுவிற்பனையை கூட அரசாங்கத்திற்கு மிகுதியான வருவாய் ஈட்டும் என்பதற்காக சாராயக்கடைகளை திறப்பதை என்னவென்று சொல்வது. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் என்றான் வள்ளுவ பெருந்தகை.
அண்ணாவின் தம்பி என்று தன்னை சொல்லிக்கொள்பவரும், தமிழினத்தின் தலைவர் என்று தன்னை சொல்லி கொள்பவருமான கருணாநிதி அவர்கள் 1971ல் முதலமைச்சராக இருந்த போது மதுவிலக்கை ரத்து செய்ததோடு 7395 கள்ளுக்கடைகளும், 3512 சாராயகடைகளும் திறக்க அனுமதி அளித்து குடிமக்களை வளர்தெடுக்கும் பணியை மீண்டும் துவக்கி வைத்தார். பின்னால் வந்த எம்ஜிஆர் 1973ல் மதுவிலக்கை அமலாக்கி மதுக்கடைகளை 3 ஆண்டுகளுக்கு மூடினார். பின்னர் 1981ல் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்து கொள்ளலாம் என்றார். 

1983ல் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் ( டாஸ்மாக் ) நிறுவனம் உருவாக்கப்பட்டு அயல்நாட்டு மதுபானங்களை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. 2003ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அரசே மதுவை சில்லறை விற்பனையில் விற்கலாம் என்றார். இதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கங்களின் ஆட்சியில் மாறி மாறி இலக்கு என்பது கல்விக்காகவோ, வேலைக்காகவோ, சுகாதாரத்திற்காகவோ, ஊட்டச்சத்துக்காகவோ, இரத்த சோகைக்கு எதிராகவோ தீர்மானித்து மாற்றம் கொண்டு வர வேண்டும் என முயற்சிக்கவில்லை.

மாறாக ஒவ்வொரு முக்கிய பண்டிகை தினங்களிலும் எவ்வளவு பேரை புதிய குடிகாரர்களாக மாற்றுவது, எவ்வளவு சாராயம் விற்பது என்ற கொள்கையோடு செயலாற்றினால் இவர்களை என்னவென்று சொல்வது,. பாரதி சொல்வனே படித்தவன் சூது வாது செய்தால் போவான், போவான் அய்யோ என்று அதனைப் போல இவர்கள் நிலை மாறும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இவர்கள் வினையாற்றும் அரசியலின் பின்புலம் என்ன ? இந்த போதை அரசியல் யாருக்காக நிகழ்த்தப்படுகிறது. எதை மையமாக வைத்து செய்யப்படுகிறது. எதற்காக செய்யப்படுகிறது?
  • உழைக்கும் மக்களின் அரசியலை பேசாமல் போதையில் கணிசமான மக்கள் ஆழ்ந்திருக்க வேண்டும். சாதிய பெருமைகளை பேசுபவர்களாகவே இருக்க வேண்டும், அடிமைப்புத்தியுடனேயே இருக்க வேண்டும் என்பதற்கானதாக இருக்கும்.
  • குடிபழக்கத்தால் ஏற்பாடும் சமூக விளைவுகள்  பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் பெரும் பகுதி குடும்பத்தை அமைதியற்ற சூழலுக்கு தள்ளுகிறது. இதனால் எந்த நேரமும் குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படுவதும், இதன் மூலம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளுமே. இளம் வயது குடிப்பழக்கம் வேகமான உடல்சீர்கேட்டை, உயிரிழப்பை உருவாக்குகிறது. 
  • இதனால் தனித்துவிடப்படும் குடும்ப உறவுகளில் பாதிக்கப்படுவதும் பெண்களும், குழந்தைகளுமே. மேலும் இதனால் குடும்பத்தின் அனைத்து சுமைகளும் பெண்கள் மீதே விழுகிறது. குடிப்பழக்கத்தில் ஊறிப்போன ஆண்களால் பொது இடங்களில் பெண்கள் அவமானப்படுத்தப் படுவதும், அச்சுறுத்தப்படுவதும் நடைபெறுகிறது. இது தவிர்த்து குடி போதையை சாதகமாக வைத்துக் கொண்டு பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்த வண்ணமுள்ளது.
  • இப்படிப்பட்ட ஆண்களுக்கு பாலியல் வன்முறையின் போது குடிபழக்கம் வாளாகவும், அதனை எதிர்த்த தாக்குதலில் குடித்திருக்கிறான் அடித்தால் தாங்குவானா? என்ற கேள்விகளை கேடயமாக வைத்துக் கொண்டு தப்பிப்பதும் நிகழ்ந்து வருகிறது. 
  • குடும்பங்களில் குறிப்பாக 10*10 க்கு அளவுள்ள வீடுகளில் உள்ள ஆண்கள் பெண்களை பாலியல் உறவிற்கு அழைப்பதும், அத்துமீறுவதும் குடிப்போதையின் போது வன்முறையில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. 
  • இது குடும்பங்களில் குழந்தைகளின் மனநிலையை பாதிக்க செய்கிறது. மேலும் சிறுவயது குடிகாரர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதால் பெரும் பகுதி பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு பெண்கள் மீது சந்தேகக் கண் கொண்டு தினந்தோறும் தாக்குதல் தொடுக்கும் நிலையும் உள்ளது. 
  • இப்படி குடும்பத்தின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வேலையில் போதை தினந்தோறும் செய்து வருவது மன அழுத்தத்தையும், தற்கொலை சாவுகளை அதிகரிக்க செய்கிறது.

இன்றைய சூழலில் ஆளும் வர்க்கங்கள் தனது நலன்களுக்காக போதையை விரிவான அளவில் உழைக்கும் மக்களுக்கு ஏற்றி வருகிறார்கள். கேள்விகள் கேட்கக் கூடாது என்பதற்காக என்றால் மிகையாகாது. 

தமிழகத்தில் 23000 கோடி ரூபாயும். கேரளாவில் 8000கோடியும், கர்நாடகாவில் 10,500 கோடியும் என மதுவிற்பனை நடந்ததாக தகவல்கள் கூறுகிறது. தென்மாநிலங்களிலேயே சுமார் 40000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆண்டுக்கு நடக்கும் என்றால் எப்படிப்பட்ட சமூகத்தை இது உருவாக்கும் என்பதை நாம் கண்டறிய முடியும். கள்ளசாராயம் பெருகிவிடும் அதனால் தான் மதுவிலக்கை அமுல்படுத்தவில்லை என்று ஆட்சியாளர்கள் சொத்தை காரணங்களை சொல்லி வருகிறார்கள். 

ஆனால் உண்மையில் 2011ம் ஆண்டு மட்டும் மதுவிலக்கு சோதனையில் 1057 வழக்குகள் பதியப்பட்டுள்ளது கள்ள சாராயம் காய்ச்சியதாக.. இது டாஸ்மாக் கடைகள் வந்ததால் கள்ளசாராயம் ஒழிக்கப்பெறும் என்று அமைச்சர்கள் சொன்ன காலத்தில் தான் இத்தகைய கள்ளச்சாராய காய்ச்சலும் நடந்துள்ளது. 

சாலை விபத்துக்களின்  மூலம் மது அருந்தி வாகனம் ஒட்டியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. 60 சதம் விபத்துகள் இதனால் நிகழ்கிறது. தற்போதைய சூழலில் 13 முதல் 19 வயதுக்குள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
13 வயது குழந்தைகளை குடிகாரர்களாக மாற்றிய இந்த அரசுகள் இதை ஒரு சமூக அவமானமாக கருத வேண்டும்.

போதையால் ஏற்படும் உடல்நலக்கேடு
உலக சுகாதார நிறுவனம் மதுப்பழக்கம் உடையவர்களை குடிப்பழக்கம் உடையவர்கள், குடி அடிமைகள் என்று இரண்டு வகையாக பிரிக்கிறது. உடல் உணர்வுகளை மரத்துப் போகச்செய்து உறக்கத்தை உண்டு பண்ணக்கூடிய தன்மையுடைய பொருள்களையே போதை மருந்துகள் என்று அழைக்கின்றனர். 

இந்த மருந்துகள் மூளைச் செல்களுக்குள் சென்று சிந்தனை, உணர்வு, சொல், செயல் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் படைத்தன. இது  மூளையின் பணியை துண்டுவது    (துண்டிகள்), தாமதப்படுத்துவது   (சோர்வூட்டிகள்), கற்பனை மற்றும் மாயத் தோற்றங்களை உருவாக்குவது (தொடு உணர்வோ, கேட்பது, பார்ப்பது இல்லாமல்  உணர்வது). 

தேவையில்லாத ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது அது குறிப்பிட்ட நாட்களில் தேவையுள்ள ஒன்றாக மாறிவிடுகிறது.  இப்படி  போதையை உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளில் கணிசமாக வெளிப்புற தாக்கமும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள், விளம்பரங்கள், ஐபிஎல் கிரிக்கெட், நுகர்வு வெறி அனைத்தும் போதையை ஏற்படுத்தும் கூறுகளாக இன்று வளர்ந்து வருகிறது. இது தேசத்தின் வளர்ச்சியையோ, தனி மனிதன் வளர்ச்சியையோ மையப்படுத்துவதில்லை. 

அந்த நேரத்தில் அவனின் தன்னம்பிக்கை, போர்குணம், சுயமரியாதையை கைவிட செய்கிறது. மது அருந்துதல் என்பது குடும்ப பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வாக கருதலாம்.  நிரந்தரமாக மீளமுடியாத ஆழ்கடல் பிரச்சனைக்குள் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

போதைக்கு எதிரான சமூக நடவடிக்கை
போதைக்கு எதிராக குடி குடியை கெடுக்கும் என்று பள்ளிக் குழந்தைகளுக்கு பாடபுத்தகங்களில் கொடுத்த ஆட்சியாளர்கள் பள்ளி முடிந்து வெளியே வந்தால் பார்க்கும் முதல் கடையாக டாஸ்மாக் கடை பல்லை இளிக்கிறது. இப்படி எதிரும், புதிருமான வாழ்க்கை ஒட்டத்தில் சமூக அவலங்களுக்கு எதிரான போராட்டங்களும், இயக்கங்களும் நடந்த வண்ணமே உள்ளது. 

ஊடகங்களின் செய்திப்பக்கத்தை பார்த்தால் ஏராளமான மக்கள் வெள்ளம் கிளர்ந்தெழுந்து ஆட்சியாளர்களின் சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறது.. போதை என்பது ஒரு சமூக குற்றம், போதை என்பது ஒரு பாவச் செயல், போதை என்பது ஒரு மனித தன்மையற்ற செயல் என்று ஆட்சியாளர்களுக்கு எப்போது உறைக்கிறதோ,.. அப்போது மாற்றத்தின் முதல்படி தென்படும். இந்த மாற்றம் தானாக நிகழாது. 

முற்போக்கு ஜனநாயக எண்ணம் கொண்ட அமைப்புகளின் வீரமிகு போராட்டமே திறவுகோலாக இருக்க முடியும். அது தான் நமக்கு வரலாறு போதிக்கும் போதனையாகும். சமூக சீர்த்திருத்தங்களின் வரலாறாகட்டும், போதைக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும் அனைத்தும் உணர்த்தும் ஒரே உண்மை ஏன், எதற்கு, எப்படி? என்ற கேள்விகள் ஆட்சியாளர்களை பார்த்து கேட்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

போதையை கலாச்சாரமாக்கி இன்று நிறுவனப்படுத்தப்பட்ட சந்தையாக  போதைப் பொருட்களை மாற்றிய அரசுகள் கெட்டொழியட்டும்,.. ஆளும் அரசுகள் உடனடியாக செய்ய வேண்டியது. 

  1. குடியிருப்புபகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்துவது.
  2. டாஸ்மாக் வேலை நேரத்தினை குறைத்திடுவது.
  3. 21 வயதிற்குள்ளான இளைஞர்களுக்கு போதை வஸ்துகள் கிடைப்பதை தடை செய்வது. திரைப்படங்கள், ஊடகங்கள், தொலைகாட்சி தொடர்களில் போதை குறித்து காட்சிகளை தடை செய்வது.
  4. போதை வஸ்துகள் குறித்த விளம்பரங்களை தடைசெய்வது.
  5. அரசே மதுபானங்களை விற்பதை கைவிடுவது.
  6. மதுபான விற்பனை படிப்படியாக குறைக்கும் வகையில் மதுவிலக்கை அமலாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது.
  7. குடிபோதையில் பொது இடங்கள் தகராறு செய்யும் நபர்களின் மீதும், பெண்கள், குழந்தைகளின் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு உரிய தண்டனைகளை உறுதிப்படுத்துவது.
  8. குடி மற்றும் போதை பழக்க வழக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முற்போக்கு எண்ணம் கொண்ட இயக்கங்கள், தன்னார்வ நிறுவனங்களோடு இணைந்து அனைத்து மாவட்ட, வட்ட அளவில் பிரச்சாரங்களை அரசே முன்முயற்சி எடுத்து நடத்திட திட்டமிடல்களை உருவாக்கிட வேண்டும்.
நன்றி - செ.முத்துக்கண்ணன்
மகளிர்சிந்தனை

No comments:

Post a Comment