”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வீரன் அழகுமுத்துக்கோன்.

வரலாறு சில அதிசயங்கள் நிகழ்த்துவதுண்டு. துரோகத்திற்கு அடையாளமாக இன்றும் எட்டப்பனை கூறுகிறோம். ஆனால் கட்டபொம்மனின் பாட்டனார் பொல்லாப்பாண்டி பிரிட்டிஷ் கும்பினியாரிடம் சமரசமாக நடந்து கொண்டார். கப்பம் கட்டினார். அவருக்கு நேர் எதிராக எட்டப்பனின் மூதாதையர்கள் கும்பினியாரை எதிர்த்துள்ளனர். இந்த பாளையங்கள் எப்போதும் நேர்ரெதிர் நிலையையே மேற்கொண்டு வந்துள்ளன.

1759ல் எட்டயபுரம் பாளையம் வெள்ளை பரங்கியனுக்கு ஆதரவாக இல்லாமல் முறைத்தபோது

அன்றைய திருநெல்வேலி மாவட்டமே சின்னாபின்னப் படுத்தப்பட்டதாக கால்டுவெல் எழுதுகிறார். திருநெல்வேலி கெஜட் டியாரிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டயபுரம் ஜெகவீரராம எட்டப்பர் என்ற பாளையக்காரருக்காக தளபதியாக பொறுப்பேற்று வீரசமர் புரிந்தவன் அழகுமுத்து. 1757ல் இப்போரில் கும்பினிகளின் வெற்றியை தொடர்ந்து ஜெகவீரராம எட்டபரும், அழகுமுத்துவும் பெருநாழி காட்டில் தலை மறைவாகச் சென்றனர்.

தாய் ண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்து நேருக்கு நேர் சந்திக்க பயந்தது கும்பினியப்படை அதனால் கான்சாகிப் மூலம் அழகுமுத்துவை சந்திக்க நினைத்தது.இதற்கிடையில் பெருநாழி காட்டில் இருந்தே படை திரட்டி 1959ல் கான்சாகிப்போடு அழகுமுத்து போர் நடத்தி தோல்வியை சந்தித்தான்.

அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம் என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்தும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்க

மாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற வீரன் அழகுமுத்து கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.

ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.

வரலாற்றில் முகம் மறைக்கப்பட்ட வீரர்களில் அழகுமுத்துவும் ஒருவர். அவரை தமிழகத்துக்கு அடையாளம் காட்டிய பெருமை கம்யூனிஸ்ட்களின் தாமரை இலக்கிய ஏடே ஆகும். 1995ல் சென்னையில் அழகு முத்துவுக்கு சிலை அமைக்கப்பட்டது.

இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.

No comments:

Post a Comment