”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

வெற்றி வீரன் ஒண்டிப் பகடை



ஒண்டிவீரன் அருந்ததியர் குலத்தில் பிறந்தவன். அவன் ஒற்றர்படைக்குத் தலைவன். பூலித்தேவன் ஒற்றர் படையும் வைத்திருந்தார். அப்பொழுதுதான் தகவல் வருகிறது. தென்மலையில் வெள்ளைக்காரன் முகாம் அமைத்து இருக்கிறான். தென்மலை முகாமில் இருந்து கும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக்குத் தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள் எவனாவது நுழைந்து எங்கள் பட்டத்துக் குதிரையைக் கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்றதாக ஒத்துக் கொண்டு போய்விடுவதாக சவால் விடுகிறான்.

இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின் காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுது பக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்து வருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்றி வருகிறேன் என்று இவன் கும்பினியாரிடம் போகிறான். தந்திரமாகப் போகிறான். நயமாகப் பேசுகிறான். அங்கு சிலவேலைகளைச் செய்கிறான். அந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறார்கள். தக்க நேரம் பார்த்தான். பட்டத்து குதிரை கட்டப்பட்டு இருக்கிற இடத்தில் இருந்து அந்தக் கயிற்றை அவிழ்த்தான். குதிரையைக்கொண்டு அமாவாசை இருட்டில் இரவோடு இரவாக கொண்டுவந்துவிடலாம் நெற்கட்டுஞ்செவலுக்கு என்று கொண்டுவருகிற போது குதிரை மிரண்டுவிட்டது.

குதிரை மிரண்ட சத்தத்தைக்கேட்டு கும்பினிப் படையினர் ஓடிவந்துவிட்டார்கள். ஓடி வந்தவுடன் இவன் என்ன செய்தான் தெரியுமா? குதிரையை விட்டுவிட்டு அங்கே இருக்கக்கூடிய புல்லை எடுத்து மேலேபோட்டு அந்தப் புல்லுக்குள் படுத்துக் கொண்டான். தேடிவந்த காவலர்கள் என்ன குதிரை கட்டுத் தறியைவிட்டு ஓடிவந்து இருக்கிறதே என்று குதிரையின் கயிற்றைபிடித்து சரி இதைக்கொண்டுபோய் லாயத்தில் கட்டவேண்டாம். இங்கேயே கட்டிவிடுவோம் என்று அங்கே முளையை அடிக்கிறார்கள். முளை உள்ளே இறங்குகிறது. முளை அடிக்கிற இடத்தில் படுத்துக்கிடக்கின்றான் ஒண்டிவீரன்.

அவன் கையில்தான் முளையை அடிக்கிறார்கள். அவன் உள்ளங்கையைத் துளைத்துக் கொண்டு அந்த முளை இறங்குகிறது. அந்தக்கூரிய முளை உள்ளே நுழைகிறது கூச்சல் போடவில்லை. அலறவில்லை. சத்தம் போடவில்லை. இவையெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூடிய காட்சியா? அவன் கையைத் துளைத்துப் போகிறது. அவன் முனகவில்லை. அங்கே இருக்கின்றவர்களுக்கு அவன் உள்ளே இருப்பது தெரியவில்லை. போய்விட்டார்கள். அதன்பிறகு, ஒண்டிவீரன் எழுந்து துளைக்கப்பட்ட கையோடு இன்னொரு கையால் முளையைத் தூக்கிவிட்டு எறிந்துவிட்டு கயிற்றை எடுத்து குதிரையையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்துவிட்டான் ஒண்டிவீரன்.

இந்தக் கை சிதறியிருப்பதைக் கண்டு பதறியவராக மன்னர் பூலித்தேவன் என்ன நேர்ந்தது என்று கேட்கிறபோது, என் கரம் போனால் என்ன, மன்னா உங்கள் மனதில் எளியவனுக்கு ஒரு இடம் இருக்கிறதே! அது ஆயிரம்கோடி தங்கத்தைவிட உயர்ந்தது அல்லவா என்றான். பெயருக்குப் பொருத்தமாக ஒண்டிவீரன் ஒண்டியாக சென்று சாதித்துவிட்டு வந்திருக்கிறான். இறுதி வரை கும்பினிகளுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இந்த மண்ணின் வீரிய விதையாய் மாறிபோனான் ஒண்டிபகடை..

No comments:

Post a Comment