”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

ஊழலின் ராஜாக்கள்


ஊழல்களின் ராஜாக்கள்

``ராசா கல்லுல கத்திரிக்கா காய்க்குமுனுன்னா

கொத்து ஆயிரம், கொல ஆயிரம்னுன்னா’’

என்கிற பல சொலவடைக்கு ஏற்ப இந்த நாட்டின் செல்வம் சில நபர்களால் கோடி

கோடியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரு மந்திரி கொள்ளையடித்தார் என்றால் கூட இருக்கும் பலரும் அதைவிட கூடுதலாக கொள்ளையடித்துள்ளனர்.

இந்தியாவின் தொலைதொடர்பு துறையில் நிகழ்ந்துள்ள ஊழலான 2 ஜி ஸ்பெட்ரம் அலை வரிசையில் ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் (1,75,000,00,000,000) நடந்துள்ளது என தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை கொடுத்த பின்னணியில் இதுவரை இந்தியாவில் நடந்துள்ள ஊழல்களில் மிகப்பெரிய ஊழலாக இது இருக்கும் என்று இந்தியாவின் உச்சநீதிமன்றம், அரசு ஏன் தூங்கி கொண்டு இருக்கிறது என தலையில் கொட்டியபோது சிபிஐ விசாரணைகள் துவங்கி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ராசா கைது.. கனிமொழி கைதுஆவாரா? என பத்திரிக்கைகள் விவாதம் நடத்தி கொண்டு இருக்கும் போது கொள்ளை போன பணத்தை எப்படி திரும்ப கைப்பற்றி மக்கள் பணமாக மாற்றுவது என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் இளைஞர் கூட்டத்திடையே இன்று ஏற்பட்டுள்ளது.

நவீன விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியால், வளர்ச்சி பெற்றுள்ள தொலைத் தொடர்புத் துறை மூலம் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பு தொலைபேசிகள், கட்டுப்பாட்டு அறையிலிருந்து நுகர்வோர் இடம் வரை கேபிள்கள் மூலம் இயக்கப்பட்டன. தற்போது கேபிள்கள் இல்லாமலே ( Wireless Telephony ) தொலைபேசி சேவை நடைமுறைக்கு வந்ததள்ளது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் அலைபேசிகள் ( Cell Phones ) வந்துவிட்டன. செய்திகள் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு ( Electromagnetic Waves ) அவை கடத்திகள் மூலம் ( Transmitter ) அனுப்பப்படுகி

ன்றன. மின்காந்த அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் கருவிகளை ( Receiver ) பயன்படுத்தி அலைபேசிகளுக்கு ( Cell Phones ) தகவல்கள் போய்ச் சேருகின்றன. இவ்வாறு தகவல் தொடர்புகளுக்குப் பயன்படும் மின்காந்த அலைகளின் தொகுப்புகளுக்கு அலைக் கற்றைகள் ( Spectrum ) என்று பெயர். செயற்கைக் கோள் உதவியுடன் தகவல் தொடர்புக்கு பயன்படும் இந்த அலைக்கற்றைகள் (ஸ்பெக்ட்ரம்) இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

செல்போன் சேவைக்காக அலைகற்றைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டுக்காக அந்நிறுவனங்கள் அரசுக்கு உரிமம் கட்டணம் ( License Fee ) செலுத்த வேண்டும். இவ்வாறு அலை

க்கற்றை ஒதுக்கீடு செய்ததில்தான் பெரும் ஊழல் நடைபெற்று இருக்கின்றது. இரண்டாவது தலைமுறை அலைவரிசையை ( 2G Second Generation Wireless Telephony ) தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியத்தில் தா

ன் இந்திய அரசுக்கு வரவேண்டிய ரூ. 1லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் கீழ்கண்ட நிறுவனங்கள் பெருமளவில் சதி செயலில் ஈடுபட்டு இந்திய அரசுக்கு வரவேண்டிய வருவாயை சூறையாடியுள்ளன.

ஸ்வான் நிறுவனம் 2G ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரூ.1,537 கோடிக்கு வாங்கியது. அதேபோல யூனிடெக் நிறுவனம் ரூ. 1,651 கோடிக்கு வாங்கி உள்ளது. ஸ்வான் நிறுவனம் நாடெங்கும் 13 பகுதிகளுக்கும் யூனிடெக் நிறுவனம் 23 பகுதிகளுக்கும் செல்போன் சேவை வழங்குவதற்கான உரிமங்களைப் பெற்றன. 2G அலைவரிசை கட்டணமாக ரூ.1,537 கோடி அரசுக்கு செலுத்திய ஸ்வான் நிறுவனம், ஒரே ஒரு பைசா கூட செலவழித்து, மக்களுக்கு செல்போன் சேவையைத் தொடங்கவில்லை. மாறாக ஸ்வான், தனது 45% பங்குகளை, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ( UAE ) எடிசலாட் ( Etisalat ) என்ற நிறுவனத்திற்கு ரூ. 4,500 கோடிக்கு விற்பனை செய்து விட்டது. இதுபோன்றே யூனிடெக் நிறுவனமும் ஒரு பைசா கூட செலவழிக்காமல், தனது 60% பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் ( Telenor ) என்ற நிறுவனத்துக்கு ரூ.6,120 கோடிக்கு விற்றுவிட்டது.

நீதிமன்ற கண்காணிப்பில் ஸ்பெக்ட்ரம்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், 'முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா உள்பட 11 பேர் மீது மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

10 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மத்திய அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் குலாம் இ வாஹன்வதி, அதிகாரத் தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முதலில் கடந்த பிப்ரவரியில் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹுரியா, ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் கைது

செய்யப்பட்டனர்.


2
ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து தில்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறையினர் கூட்டாக நடத்தி வரும் இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் காண்காணிக்கிறது. அதன்படி, தில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நேற்று (ஏப்.2) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 30,984 கோடி ரூபாய் மட்டுமே என்று முதல் தகவல் அறிக்

கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மே 31-ம் தேதிக்குள் இந்த வழக்கில் விசாரணையை முடித்துவிடுவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யூனிடெக் வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் ஆகியவை அந்த 3 நிறுவனங்கள்.
ஏமாற்றுதல், கையெழுத்து மோசடி, கிரிமினல் சதித்திட்டம், ஊழல் ஆகிய குற்றங்களைச் செய்திருப்பதாக ஆ. ராசா, அவருடைய தனிச் செயலர் ஆர்.கே. சண்டோ லியா, பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன ஊக்குவிப்பாளர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருக்கிறது.

ஐக்கியப்படுத்தப்பட்ட தொடர்பு சேவைக்கான உரிமங்களும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்தால் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் பிரிவுகளின்படி குற்றங்கள் நடந்திருப்பதபாக சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநர் வினோத் கோயங்கா, குடுகாமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் யூனிடெக், தமிழ்நாட்டில் உள்ள யூனிடெக் வயர்லெஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குநர் கெற்தம் தோஷி, 2 மூத்த துணைத் தலைவர்கள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.


இந்த முறைகேடு காரணமாக மிக அதிக அளவுக்குப் பணப் பயன் அடைந்த நிறுவனம் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம் என்றும், யூனிடெக் வயர்லெஸ் நிறுவனமும் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும்தான் இந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளைப் பெறும் தகுதி (திறன், அனுபவம் போன்றவை) இல்லாதவை என்றும், மேலும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் களப்பணிகளைச் செய்தது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட், சினியுக் பிலிம்ஸ், கிரீன் அவுஸ் பிரைவேட் லிமிடெட், குசேகாவோன் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து சிபிஐ ஆல் கண்காணிக்கப்படுகின்றன என நீதிபதியிடம் சிபிஐ கூறியுள்ளது..

கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு முறையே 20, 60, 20 சதவீதப் பங்குகள் இருப்பதும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் தொடர்புள்ள சட்டவிரோதப் பணம் பல்வாவின் நிறுவனத்திலிருந்து சினியுக் பிலிம்ஸ், குசேகாவோன் நிறுவனம் மூலமாக கலைஞர் டி.வி.க்குக் கிடைத்தது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டுகிறது.

குசேகாவோன் புரூட்ஸ், வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் மார்ச் 29-ம் தேதி கைது செய்யப்பட்டனர். சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்

நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.200 கோடியை கலைஞர் டி.வி.க்கு அனுப்பிவைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. கிரீன் அவுஸ் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் ஆ. ராசாவின் நண்பருமான சாதிக் பாட்சாவிடம் சி.பி.ஐ. போலீஸப்ர் சென்னையில் விசாரணை நடத்தினர். அவர் கடந்த மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார். டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் கிரீன் அவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த மர்மமமான பணப்பரிமாற்றத்துக்கும் பாட்சா மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருத்து தெரிவித்தது.
2
ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக 2009 அக்டோபர் 21-ம் தேதி சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. தொலைத் தொடர்புத் துறையின் பெயர் தெரியாத அதிகாரிகள், தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆகியோரை எதிரிகளாகக் குறிப்பிட்டு அந்த அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணை வேகமாக நடைபெறவில்லை. பொதுநலன் கோரி சிலர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீவிரம் காட்டத் தொடங்கியதால் இந்த விசாரணை வேகம் பிடித்தது.

எழும் கேள்விகள்

· மத்தியத் தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம், அரசுக்கு செலுத்தியது வெறும் ரூ 1,537 கோடி; ஸ்வான் தனது பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ 2,963 கோடி லாபம் அடைந்து இருக்கின்றது. யூனிடெக் நிறுவனம் செலுத்திய உரிமம் கட்டணம் ரூ 1,651 கோடி; தனது பங்குகளை வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் யூனிடெக் பெற்றுள்ள லாபம் ரூ 4,469 கோடி. மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் தொலை தொடர்பு துறை சார்ந்தவையே அல்ல. மாறாக இவை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்களாகும் என்பது பெரும் அதிர்ச்சிக்குரிய விசயமாகும். இதற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது.

· வெறும் லெட்டர் பேடை மட்டும் வைத்துக்கொண்டு, உரிமம் பெற்றுக் கொண்டு, அதை மாற்றிக் கொடுத்துவிட்டு உட்கார்ந்த இடத்திலேயே கடிதப் பரிமாற்றத்தின் மூலம் ஸ்வான் ரூ 2,963 கோடியும், யூனிடெக் ரூ 4,469 கோடியும் கொள்ளை அடித்து இருக்கின்றன.

· இந்திய அரசுக்கு குறைந்த தொகையினை உரிமம் கட்டணமாகச் செலுத்திவிட்டு, பலஆயிரம்கோடி ரூபாய் பகல் கொள்ளை அடித்த நிறுவனங்களை நடத்துவது யார் ?

· இந்த போலி கம்பெனிகளின் பங்குதாரர்கள் யார்?

· பொது ஏல முறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று செய்ததன் அவசியம் என்ன ?

· 2008 ஆம் ஆண்டு சந்தைவிலையைக் கணக்கில் கொள்ளாமல், 2001 ஆம் ஆண்டு விலையில் 2G அலைவரிசை வர்த்தகம் செய்தது ஏன்?

· இதனை தொலைதொடர்புத்துறை அமைச்சர் கண்டுகொள்ளாமல் விட்டதன் பின்னணி என்ன ?

முதலில் வருவபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது, இதற்கு தான் பொறுப்பல்ல ட்ராய் அமைப்பின் சட்டதிட்டப்படி தான் வழங்கினேன், அவர்கள்தான் ஆலோசனை சொன்னார்கள் என மத்திய அமைச்சர் ராசா கலாய்கிறார், எப்படி இருந்தாலும் அந்த துறையின் அமைச்சர் ராசா, நல்ல திட்டங்கள் அமுலானால் அதற்கு காரணம் நான் தான் என்றும். இது போன்ற ஊழல் பிரச்சனைகள் என்றால் அதிகாரிகள் தான் என்றால் பால்குடிக்கும் குழந்தை கூட நம்பாது,

முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிராய் ( Telecom Regulatory Authority of India -TRAI ) பரிந்துரையின் பேரில்தான், அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றதாக அமைச்சர் ராசா கூறி உள்ளார்.

ஆனால், இதனை டிராய் தலைவர் என்.மிஸ்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு (15.11.2008) அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ள கருத்துகள் பின்வருமாறு;

2007 இல் டிராய் செய்த பரிந்துரையில் இன்றைய இந்தியாவின் சுறுசுறுப்பான செயலாக்கம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும் போது 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் உரிமம் பெறுவதற்கு சரியானதாக இருக்காது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தக் கட்டணம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று சொல்லப்படவில்லை.

தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு 2007, அக்டோபர் 19 மற்றும் 2008, ஜனவரி 14 ஆகிய நாட்களில் இரு கடிதங்கள் எழுதி உள்ளேன். அமைச்சரவை எடுக்கும் முடிவு மற்றும் நடவடிக்கை களை இந்தப் பரிந்துரையில் இடம்பெறாதவற்றுடன் தொடர்பு படுத்துவது நியாயம் அல்ல. அது தவறாக வழிநடத்துவதாகும். டிராய் அமைப்பின் ஒட்டு மொத்த பரிந்துரை மீறப்படும்போது அதிகாரபூர்வமான முறையில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அப்படி இருந்தும் டிராய் அமைப்பை கலந்து ஆலோசிக்காமல் அதனுடைய பரிந்துரைகளுக்கு புறம்பாக தொலைத்தொடர்புத்துறை பல தடவை செயல்பட்டு உள்ளது. நிறுவனங்கள் இணைப்பு மற்றும் பங்குகள் கையகப்படுத்தும் நடைமுறையிலும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை;

மேலும் இந்த அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இப்படித்தான் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று உள்ளன

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மிஸ்ரா தெரிவித்துள்ள தகவல்கள் மூலம் மத்திய அமைச்சர் ஆ.ராசா அளித்துள்ள முரண்பாடான பதில்கள் அம்பலம் ஆகி உள்ளன.

டிராய் தலைவர் மிஸ்ரா தக்க பதிலடி கொடுத்தவுடன், இப்பொழுது அமைச்சர் கூறுகிறார், “பிரதமர் அனுமதியுடன்தான் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப் பட்டது என்று. இவ்வளவு பெரிய மோசடிக்கு மெகா ஊழலுக்கு பிரதமர் அனுமதி அளித்துள்ளார் என்று, அமைச்சர் ராசா மன்மோகன் சிங்கை துணைக்கு அழைத்து உள்ளார். ஆனால், இதுவரை பிரதமர் இந்தப் பிரச்சனை குறித்து வாய் திறக்கவில்லை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இரு கடிதங்களைப் பிரதமருக்கு எழுதி உள்ளார். அதில், “ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதைப்போன்று பல்வேறு கம்பெனிகளும் சொற்ப தொகையை அரசுக்கு செலுத்திவிட்டு உரிமம் பெற்று இருப்பதால், இந்திய அரசுக்கு ரூ 60,000 (அறுபது ஆயிரம்) கோடி நட்டம் ஏற்பட்டு உள்ளதாக சுட்டிக் காட்டி இருக்கின்றார். இது குறித்தும் பிரதமர் வாயே திறக்க வில்லை.

ஆனால் காங்கிரசின் பிரச்சார பீரங்கிகள் எது சொன்னாலும் மக்கள் இழிச்சவாயர்கள், தேர்தல் நேரத்தில் பணத்தை காட்டி வாக்கை வாங்கி விடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையில் தான் இன்று ஊழலை தேசிய கொள்கையாக மாற்றி விட்டார்கள்,

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் காலத்தில் நடைபெற்ற மாருதி ஊழல், ராஜீவ் காந்தி காலத்தில் போபர்ஸ் ஊழல், நரசிம்மராவ் காலத்தில் தொலை தொடர்புதுறை ஊழல், வாஜ்பாய் காலத்தில் சவபெட்டி, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல், மன்மோகன்சிங் காலத்தில் மருத்துவகவுன்சில் ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் ஊழல், பாராளுமன்றத்தில் எம்,பிக்கள் வாக்களிக்க லஞ்சம், காமன்வெல்த் போட்டியில் ஊழல் என ஊழல்களின் தேசமாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது, கண்ணுக்கு தெரிந்து பத்திரிக்கைகளில் விவாதப் பொருளாக மாறிப் போன ஊழல்கள் இவை, மறைக்கப்பட்ட, தெரியாத ஊழல்கள் எத்தனை எத்தனையோ,.. பறி போன இந்திய உழைப்பாளி மக்களின் செல்வங்கள் எவ்வளவோ,.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் என எம்ஜிஆர் கால பாடல் ஒன்று உள்ளது, ஆனால் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ரூபாய் கூலி உயர்வுக்கு 35 நாட்கள் போராட்டம் உயிரை பணயம் வைத்து நடத்த வேண்டும், பல அமைச்சர் பெருமக்கள் நோகமல் நொங்கு சாப்பிடுவது போல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிப்பார்கள், இந்தியாவில் உள்ள அமைச்சர்கள், பெரு முதலாளிகள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டுவீரர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை முறையாக செலுத்தாமல் பெயருக்கு கட்டிவிட்டு ஏமாற்றி வைத்திருக்கும் கருப்பு பணமே இந்தியாவிற்கான ஆண்டு பட்ஜெட் போடுமளவுக்கு உள்ளது, கருப்பு பணம் இந்திய பொருளாதாரத்தின் அளவீடான GDP-ல் 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. சந்தையில் கருப்பு பணம் பெரும்பாலும் தங்கமாகவும், நிலமாகவும், வீடாகவும் புழங்குகின்றது.

உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர். இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ள வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது, கறுப்புப் பணம் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் குறிப்பிடுவதாவது: "சுவிஸ் வங்கியில் இருக்கும் கள்ளப் பணத்தை வெளியே கொண்டு வர ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்தியா மட்டும் வாய் மூடி மெளனியாக இருக்கின்றது''.

அவர் மேலும் குறிப்பிடுகையில் " நமது வருமான வரி அதிகாரிகள் சுவிஸ் நாட்டின் ஜூரிச் நகரில் உள்ள இந்திய உணவகங்களுக்குச் சென்றாலே இந்தியாவின் எந்தெந்த பிரபலங்கள் அங்கு வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்பது தெரிந்துவிடும்'' என்று வேடிக்கையாகச் சொல்கிறார்.

""பிரிட்டீஷ்காரர்களால் 90 ஆண்டுகளில் 45 லட்சம் கோடி பணத்தைத்தான் சுவிஸ் வங்கிகளில் சேமிக்க முடிந்தது. ஆனால் நமது இந்தியப் பெருமக்கள் 30 ஆண்டுகளிலேயே 405 லட்சம் கோடி பணத்தை மிகவும் வேகமாக ஓடிச் சென்று சுவிஸ் வங்கியில் சேர்த்துவிட்டனர். எவ்வளவு பெரிய சாதனை'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த தொகையில் நாடு முழுவதும் தலா ரூ 25 லட்சத்தில் 558608 பள்ளிகளும், ரூ ஒரு கோடி வீதம் 139652 தரமான ஆரம்ப சுகாதார நிலையமும், ரூ 5 கோடியில் 27930 கல்லுரிகளும், 100 கோடியில் எல்லா வசதிகளும் கொண்ட 1396 மருத்துவமனைகளும், 1163766 கி,மீ தொலைவுக்கு சாலைகளும், 27930 கி.மீ புதிய மின்ரயில் பாதைகள் அமைத்திருக்கலாம்,

இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது புலனாய்வுத் துறை. மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களில், நான்கில் ஒன்று கள்ள நோட்டு.புலனாய்வுக் குழு (ஐ.பி.,) திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில், புழக்கத்தில் உள்ள பணத்தில் ரூ. 1.7 லட்சம் கோடி பணம், கள்ளநோட்டுக்கள். 2008, ஜூலை 18ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் மக்கள் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி. புலனாய்வுக் குழு வெளியிட்ட தகவலை ஒப்பிட்டால், புழக்கத்தில் ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள். கள்ளநோட்டுக்களின் பெருக்கம் அதிகமாவதால், ரூபாயின் மதிப்பு படுபாதாளத்துக்கு போவதுடன், பணவீக்கம் பெரிதும் அதிகரித்து, விலைவாசி கடுமையாக உயருமே தவிர குறையாது. அதேசமயம் கள்ள நோட்டு நடமாட்டத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே சிதைந்து போகும் அபாயம் காத்திருக்கிறது.

இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் என்று எடுத்தால், 1 சதவிகிதம் கூட இருக்காது, கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் போடக்கூடாது என இடதுசாரிகள் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ்பெற்ற போது கோடிக்கணக்கில் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டது காங்கிரஸ் அரசு, பணம் பெற்ற அரசியல் கட்சிகளின் எம்பிகள் பாராளுமன்றத்தில் வெளிப்படையாக பெறப்பட்ட பண கத்தைகளை காண்பித்ததை உலகமே கண்டுகளித்தது, ஒரு எம்பியின் விலை 25 கோடி என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. தற்போது, எடியூரப்பா அரசாங்கத்தை காப்பாற்றவும், ஒரு எம்எல்ஏவின் விலை 25 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் வந்துள்ளன.

தற்போதும் ஸ்பெக்ட்ரத்தில் லட்சகணக்கான கோடி ரூபாய்களை அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் செய்தது மட்டுமல்ல, தொடர்ந்து தானிய ஏற்றுமதி, உர இறக்குமதி, பெட்ரோல் விலை நிர்ணய அனுமதி, அணுசக்தி ஒப்பந்தம் என பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், மற்றும் இந்திய பெரு முதலாளிகளின் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள், வரிவிலக்குகள், தாராள அனுமதிகள் காரணமாக இந்திய அரசுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது, இந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரி, மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசின் அமைப்புகள் இந்த முறைகளை கண்டறிந்து சொன்னாலும், நடவடிக்கை என்பது காலவதியாகி போகிறது,

1984ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பலியான 25000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், ஊனமுற்று இன்றும் மாற்றுதிறனாளிகளாக உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உரிய நஷ்டஈடு, நிவாரணத் தொகை வழங்காமல் ஏமாற்றிவிட்டு அமெரிக்காவில் பதுங்கியுள்ள ஆண்டர்சனை பாதுகாப்பாக இந்தியாவில் அன்றைக்கே அனுப்பி வைத்த ஆட்சியாளர்கள், நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று வரை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கவே ஆட்சியாளர்களுக்கு நேரம் சரியாக உள்ளது,

இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள காமன்வெல்த் போட்டியில் பல்லாயிரம் கோடி ஊழல்கள் நடந்துள்ளதாக தினந்தோறும் விசாரணைகள், அறிக்கைகள் என பத்திரிக்கைகளின் பக்கங்கள் செய்திகளை நிறைத்துமட்டுமே வெளியிடுகின்றன. தற்போது உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் தொலைதொடர்புதுறையில் நடைபெற்ற ஊழல், காமன்வெல்த் ஊழல், ஐபிஎல் ஊழல் போன்றவற்றில் பெயர் போன அரசியல் வாதிகள், கார்ப்ரேட் நிறுவனங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ராஜாங்கவாதிகளின் இருப்பிடமாக திகார் சிறை இன்று மாறியுள்ளது. காங்கிரஸ், திமுக கட்சிகளின் பெரும் தலைவர்கள் ஊழலின் ராஜாக்களாக மாறியுள்ளனர். இதனை ஊக்குவிக்க தங்களின் லாபவெறியை பல கார்ப்ரேட் நிறுவனங்கள் குறிப்பாக டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

ஊழலின் ஊற்றுக்கண்னை அடைக்க எந்த நடவடிக்கையும் இல்லை, ஊழலில் ஈடுபடும் அரசியல் வாதிகள் பெரும் பணத்தையெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்களுக்கே செலவு செய்கிறோம் என வாதத்தை முன்வைத்து தப்பி விடுகின்றனர், 1983ம் ஆண்டு 36,768 கோடியாக இருந்த கருப்பு பணம், இன்று 9 இலட்சம் கோடியாக வந்து நிற்கின்றது. இந்த கறுப்பு பணங்கள் அனைத்தும் கூடுதலாக தேர்தல் நேரத்தில் வெளி வருகிறது, தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் கிட்டதட்ட 5 கோடி ரூபாய் செலவு செய்கிறாராம். இது கணக்கில் வராத பணமே. 542 தொகுதியை கணக்கில் எடுத்தால் மொத்த கருப்பு பண அளவு 10000 கோடி அளவுக்கு வெளி வருகின்றது. இது இல்லாமல் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலிலும் பண புழக்கம் உண்டு. அதனால் தான் அரசின் எந்த துறையாக இருந்தாலும் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை என வேதனைப்பட்டு நீதிமன்றங்களே ஆதங்கப்பட்டு கூறும் சூழல் உருவாகியுள்ளது.

பணக்காரர்களின் நிலை

லட்சுமி மித்தல், முகேஷ்அம்பானி, அஜீம் பிரேம்ஜி, சாசிரவிரூயி, சாவித்திரி ஜிண்டால் கௌதம் அட்டானி, குமார்மங்கலம் பிர்லா, அனில் அம்பானி, சுனில் மித்தல், ஆடிகோத்தாரி, குஷ்பால் சிங், அனில் அகர்வால், திலிப் சங்கவி, சிவ்நடார், மல்வீந்தர், சிவீந்தர் சிங் ஆகிய 15 நபர்களுக்கு மட்டும் கடந்த மார்ச் 2011 காலத்திய சொத்து மதிப்பு 7 லட்சத்து 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய்கள் (177 பில்லியன் டாலர்) என உயர்ந்துள்ளது. இவற்றில் பால்வா, வினோத் கோயாங்கா உட்பட 8 நிறுவனங்கள் 2 ஜி அலைகற்றை ஊழல் விவகாரத்தில் சம்பந்தபட்டுள்ளதாக தெரிகிறது.

2011 ல் பில்லியனர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு 55 பேரின் மொத்த சொத்த மதிப்பு 222.1பில்லியன் டாலராக ( 9 லட்சத்து 99 ஆயிரத்து 450 கோடி ரூபாயாக) இருந்தது. 2011ல் 246.5 பில்லியன் டாலராக ( 11 லட்சத்து 9 ஆயிரத்து 250 கோடி ரூபாய் )உயர்ந்துள்ளது. இது இலங்கை, பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை (ஜிடிபி) விட அதிகம் ஆகும்.

ஏழைகளின் நிலை

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சம் உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். என அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்களின் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41.6 சதவீதமான 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

கடந்த 2004 – 05ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு, டெண்டுல்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர், உடல் நலம், கல்வி, சுகாதாரம், சத்துணவு, வருமானம் ஆகியவற்றை அளவீடாக கொண்டு மதிப்பிட்டுள்ளனர்.கடந்த 1972ம் ஆண்டில் நகரங்களில் 2100 கலோரி, கிராமங்களில் 2400 கலோரி உணவுப் பொருட்கள் வாங்கும் வருமான அளவை கொண்டு மக்களின் ஏழ்மை நிலை மதிப்பிடப்பட்டது.கடந்த 2006ம் ஆண்டில் திட்டக் கமிஷன் மதிப்பீடு படி ஏழை மக்களின் அளவு 28.5 சதவீதமாகும் என்று கூறியிருந்த நிலையில் சக்சேனா தலைமையில் மத்திய அரசு அமைத்த கமிட்டி இந்தியாவின் ஏழ்மை நிலை 50 சதவீதம் என்று கடந்த 2010 ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.

இந்தியா உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் உள்ளதெனவும், 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு உள்ளனர் எனவும், இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பசி அட்டவணையில் 94வது இடத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு இந்தியாவில் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றதா என்றால் இல்லையென்பது தான் உண்மை. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 2009-10ஆம் ஆண்டில் 218.20 மில்லியன் டன். இது 2008-09 ஆம் ஆண்டில் 237.47 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. அதேபோல் தென்மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 99.18 மில்லியன் டன்னாக இருந்தது 2010-11ல் 100 மில்லியன் டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நிலையில் 36 கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர். போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு ஒரு கோடியே 69 லட்சம் டன் உணவு தானியம் வீணாவதாக இந்திய உணவுக்கழகம் தெரிவிக்கிறது. சுதந்திரமடைந்து 64 ஆண்டுகளுக்கு பின்பும் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகளில்லை. இந்திய உணவுக்கழகத்தால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும், சேமிப்பு வசதி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மட்டுமே. இதர உணவு தானியங்கள் அழுகி வீணாகி போகும் நிலையே ஏற்பட்டுள்ளது. உணவின்றி மக்கள் ஒருபக்கம் வாடுகையில், உணவுதானியங்கள் பாதுகாப்பின்றி கெட்டுப்போய் கீழே கொட்டும் நிலை உள்ளது. இதைத்தான் உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து உணவுப்பொருள் ஏதும் வீணாகக் கூடாது, உடனடியாக இதனை பசியால் வாடுவோருக்கு வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் மன்மோகன் அரசு இலவசமாக இதை கொடுக்கமுடியாது என்பது அரசின் கொள்கை முடிவு என இரக்கமில்லாமல் அறிவிக்கிறார். அதே நேரத்தில் நீதிபதி வாத்வா கமிட்டி அறிக்கையின்படி பொது விநியோகத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் திருட்டுகள் நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .

இந்திய கிராமப்புற விவசாயிகளுக்கு போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் 20 சதவீதம் முதல் 30 சதவீதமான உணவு தான்யங்களும். காய்கறிகளும் விளை நிலங்களிலிருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பே வீணாகிறது. இவை தடுக்கப்பட்டால் இந்தியாவின் உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னையும் தாண்டுமென ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. தங்க நாற்கர சாலைகள் போடும் அரசுகள் கிராமபுறச் சாலை வசதிகளை மேற்க்கொள்ளவும், விவசாயிகளுக்கான சிறப்பு விவசாய விற்பனை மண்டலங்களை அமைத்து இடைத்தரகர் இல்லாமல் நேரடி விற்பனையை ஊக்குவிப்பது, அரசே உரிய முறையில் கொள்முதல் செய்வது என்பதை செய்திட வேண்டியுள்ளது.

தீர்வு

* பொது விநியோகத்திட்டத்தை விரிவுபடுத்தி உணவுப்பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி எந்தவித கட்டுப்பாட்டின்றி வழங்குவது.

* ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தாலும் உணவுப்பொருள் வழங்குவது.

* குடும்ப நபர் எண்ணிக்கைக்கு இணங்க அதன் மடங்குகளில் உணவுப்பொருள் வழங்குவது.

* இந்தியா விவசாயிகள் அனைவருக்கும் 4 சதவீத வட்டியில் அனைத்து செயல்களுக்கும் (விதை, அறுவடை விற்பனை) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வங்கிக் கடன் வழங்குதல்.

* போதுமான சேமிப்புக் கிட்டங்கிகளை ஏற்படுத்தி உணவுப்பொருட்கள் வீணாவதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்துவது.

மக்களின் மனோநிலை

இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என குடிமக்கள் பாடும் பாட்டாக இன்றைய மக்களின் மனோநிலை மாறியுள்ளது. இது வரை அவர்கள் பார்த்துவந்த சமூக அவலங்கள், கல்வியறிவு இல்லாத நிலை, ஊடகங்களின் கருத்து திணிப்புகள், நுகர்வு வெறி போன்ற பல்வேறு அம்சங்கள் மக்கள் மத்தியில் இயல்பாகவே மாற்றத்தை நோக்கிய பயணத்தை தடைசெய்யும் பொதுபுத்திகளை மக்கள் மத்தியில் திட்டமிட்டு ஏற்றிவந்துள்ளன. அதேபோல் ஆட்சியாளர்களும் ஊழல், லஞ்ச வழக்குகளில் சிக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், கார்ப்ரேட் நிறுவனங்கள் இவைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மக்களின் இயல்பான கோபமற்ற சூழலுக்கு காரணமாகும்.

இதனால் காசு உள்ளவனும் சரி, இல்லாதவனும் சரி இலவசங்களை பெற்றுக்கொண்டு தங்களது உரிமைகளை விற்கும் மனோநிலையை நோக்கி தள்ள படுகின்றனர். இதனை கார்ப்ரேட் நிறுவனங்களும், பெரும் அரசியல் சூதாடிகளும், முதலாளித்துவ அரசியல்கட்சிகளும் பயன்படுத்திக் கொள்கின்றன. கொடுத்த பொருட்களை வைத்தே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வித்தை தெரிந்தவர்களாக உள்ளனர்.

இலவசம் என்றால் உயிரை கொடுத்தாவது பெற வேண்டிய சூழலை வறுமை உருவாக்கி வைத்துள்ளது. 1993ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு நிவாரணம் வழங்க சென்னை கே.கே. நகரில் அரசு ஏற்பாடு செய்தபோது மக்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் அநியாயமாக தங்களது உயிரை விட்டனர். 42 மனித உயிர்களின் விலை 2000 ரூபாய் என ஆகிப் போனது கொடுமையிலும் கொடுமை. லஞ்சம், ஊழல் என்பதை பொதுபுத்தியாக மாற்றும் நடவடிக்கைகளில் காங்கிரஸ், பிஜேபி இரண்டு கட்சிகளும், பல மாநில கட்சிகளும் வரிந்து கட்டி செய்து கொண்டு இருக்கின்றன. பேய்கள் அரசு செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்றான் பாரதி. சாத்திரங்கள் பிணந்தான் தின்று கொண்டிருக்கின்றன.

ஊழலுக்கு மாற்று

ஊழலின் ஊற்றுக்கண் முதலாளித்துவத்தின் அடிப்படை குணாம்சம். இன்றைய உலகமயச் சூழலில் இதனை எந்தவிதமான உறுத்தலுக்கும், குற்றசெயலாக கருதாமல் வாய்ப்பு கிடைக்கிறது என்ற அடிப்படையில் இப்படி ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களின் வாழ்க்கை தரம், ஆடம்பர தன்மை, புகழ், கௌரவம், அதிகாரம் சார்ந்த பல்வேறு கூறுகளை கணக்கில் கொண்டு இதன் பின்னணியில் தொடர்ந்து ஊழல் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுத்து ஊழல் மூலம் சேர்த்த அனைத்து சொத்துக்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும். அதற்கு தேவை உறுதியான மக்கள் நலன் பேணும் ஆட்சி அதிகாரமே. எனவே ஆளும் ஆட்சியாளர்கள் தேர்தல் சீர்திருத்ததை செய்வது, தேர்தலுக்கு அரசே செலவிடுவது, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அமுலாக்கிடுவது என ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்க உருப்படியாக ஏதாவது செய்தால் மட்டுமே முடியாட்சியாக உள்ள ஊழலின் ராஜாக்களை ஒழித்திட முடியும்.

அசமத்துவ நீங்கி அனைவருக்குமான சமத்துவ சமூகம் உருவாவதும், அதற்கான திட்டங்களை உருவாக்குவதும் அவசியம். இந்தியாவின் அரசியல் சாசன முகவுரையில் கூறப்பட்டுள்ள இந்திய ஒரு மதசார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்கிற வாசகம் நிறைவு பெற வேண்டுமானால் அனைவருக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறச் சூழல் வழங்கப்பட வேண்டும். அந்த சமூகம் ஊழற்ற சமூகமாக பரிணமிக்கும்.

புதியதோர் உலகு செய்வோம், அதை எந்தநாளும் காப்போம்.

No comments:

Post a Comment