கப்பற்படை எழுச்சியின் பின்னணி்:
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் இருந்த பிரிட்டிஸ் அரசும், காங்கிரஸ், முஸ்லீம் லீக் அமைப்புகள் தங்களது கோரிக்கைகளில் வெற்றி பெறுவதற்காக முதலாளித்துவ நலனுக்காக பேச்சுவார்த்தை மூலம் சமரச முயற்சி செய்து வந்தனர். ஆனால் மக்களின் உணர்வுகள் இதற்கு எதிராக சமரசமற்ற முறையில் போராட்டங்களின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்டும் அணுகுமுறையாக இருந்தது.
யுத்தகாலத்தின் பொருளாதார நெருக்கடி, உணவுப் பஞ்சத்திற்கும், வேலையின்மை, வாழ்க்கை நெருக்கடிக்கும் இட்டுச் சென்றது. இதற்கு எதிராக இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட்டு போராடினார்கள்.
ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு நீறுபூத்த நெருப்பாக எழுந்து கொண்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இந்திய விடுதலையை தீவிரப்படுத்த முன்னின்றன. குறிப்பாக இந்திய தேசிய ராணுவத்தின் (ஐஎன்ஏ) மீதான விசாரணையும், இந்தோனேசியா, இந்தோசீனா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா நாடுகளுக்கு இந்திய படைவீரர்களை அனுப்புவது என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருமுகப்படுத்துவதில் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சி அணிகள் முக்கிய பங்கை வகித்தன.
பிரிட்டிஷ் அரசை தோற்கடிக்க முடியும் என்று ஜப்பானோடு சேர்ந்து ஐஎன்ஏ போராடிய நிலையில், ஜப்பானின் தோல்வி, சரணகதிக்கு பின் ஐஎன்ஏ படைவீரர்கள் 20000 பேரும், பிரிட்டிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். பிரிட்டீஸ் அரசு அவர்களின் மீது குற்றம் சுமத்தி விசாரணை நடத்தியது. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஐஎன்ஏவில் சிறப்பாக செயல்பட்ட கர்னல் ஷாநவாஸ், கேப்டன் தில்லான், கேப்டன் சீகல் ஆகியோர் நீண்டகால சிறைத்தண்டனை பெற்றனர். இதனை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக மக்கள் கருதி ஐஎன்ஏ தலைவர்களை விடுதலை செய்ய கோரி நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அன்றைய வாரணாசி உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பம்பாய், மதுரா, டெல்லி, மீரட், பெஷாவர் போன்ற இடங்களிலும் ஏராளமான பேர் கொல்லப்பட்டு பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இதே நிலை நீடித்தது.
கப்பற்படைவீரர்களின் எழுச்சி:
ஐஎன்ஏ வீரர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக இந்திய ராணுவத்திற்குள்ளும் வீரர்கள், இளம் அதிகாரிகள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கியது. 1945 ல் ஜனவரியில் இந்திய விமானப்படைக்குள் பிரிட்டிஷ் கடைபிடித்துவந்த இன பாகுபாட்டிற்கு எதிராக வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இது அனைத்து பிரிவினர் மத்தியிலும் வெளிப்பட்டது. அதே நேரத்தில் கப்பற்படை வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட வீரசெறிந்த எழுச்சியை போல் அமையவில்லை. ஆதரவு மட்டும் இருந்தது.
இரண்டாம் உலகப் போரில் நேசநாடுகளுடன் குறிப்பாக சோவியத் படைகளுடன் பிரிட்டீஷ் இந்திய ராணுவப் படை போரில் இணைந்து ஈடுபட்டதில் நெருக்கம் அதிகமானது. இதன் காரணமாக ஏற்பட்ட பரந்துபட்ட உலகப் பார்வையும், வர்க்கப் பார்வையும் சேர்ந்து பல்வேறு சாதி, மதங்களை சார்ந்தவர்களாக இருந்த போதும், இன, நிற, பொருளாதார மற்றும் அடிப்படை உரிமைகளில் இருந்த பாகுபாடுகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்ற சிந்தனை உருவாகியது.
ஐஎன்ஏ வீர்ர்கள் மீதான விசாரணைக்கு எதிராக 1946 பிப்ரவரி 17ம் தேதி பம்பாயில் கப்பற்படை மாலுமிகள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் போது பிரிட்டிஷ் துருப்புகள் தாக்குதல் தொடுத்ததை தொடர்ந்து கிளர்ச்சி பல்வேறு துறைமுகங்களுக்கு பரவியது.
அடுத்தநாள் 18ம் தேதி “ தல்வார்” என்னும் பயிற்சி கப்பலில் புரட்சி தீ மூண்டது. சில மணி நேரத்தில் ராயல் இந்திய கப்பற்படை முழுவதிலும் காட்டுத் தீ போல் பரவியது. 80க்கும் மேற்பட்ட கப்பற்படை கப்பல்களில் 20000க்கும் மேற்பட்ட மாலுமிகள் வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்ததை துவக்கினார்கள்.
போராட்டகுழுவும் - கோரிக்கைகளும்:
36 பேர் கொண்ட போராட்டக்குழு தேர்வு செய்யப்பட்டு எம்.எஸ்.கான் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அமைதியான முறையில் தானா ரயில் நிலையத்தினை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினார்கள். அவர்கள் அமெரிக்க செய்தி ஒலிபரப்பு நிறுவனத்தை கடந்த போது அமெரிக்க கொடிகளை கிழித்தெறிந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக என்ற கோசங்களோடு நடந்து சென்றனர்.
மாலுமிகள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
1.ஐ.என்.ஏ வீரர்கள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
2.மாலுமிகளிடம் நாகரிமற்ற முறையில் பேசி அவமானப்படுத்திய “தல்வாரின்” கமாண்டிங் அதிகாரி கிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.சமாதான காலத்தில் ( யுத்த காலத்தில் ) வேலை நீக்கம் செய்யப்படக் கூடிய மாலுமிகளுக்கு புனர் வாழ்வளிக்கவும் வேலை வாய்ப்பளிக்கவும், தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற் கொள்ள வேண்டும்.
4.ராயல் நேவியின் மாலுமிகளுக்கு வெள்ளையர்களுக்கு அளிக்கப்படும் சம்பள விகிதமும் பஞ்சப்படியும் இதர சலுகைகளும் ராயல் இந்தியன் நேவியின் இந்திய மாலுமிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
5.அனைத்து உணவகங்களுக்கும் இந்திய மாலுமிகள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
6.நல்ல உணவு அளிக்க வேண்டும்.
7.வேலை நீக்கம் செய்து அனுப்புகிற போது துணிகளையும், பெட்டிகளையும் திருப்பி ஒப்படைக்கும் படி கட்டாயப்படுத்தக் கூடாது.
8.இந்தோனேஷியாவிலுள்ள இந்தியப் படைகளை வாபஸ் பெற வேண்டும்.
சிங்கத்தின் பிடறியை பிடித்து உலுக்கிய தருணம் :
கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே மாலுமிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து வேலைநிறுத்தங்களின் மூலமும், இதர வடிவ போராட்டங்களின் மூலமும் ஆதரவை தர தொழிலாளி வர்க்கத்தை கேட்டுக் கொண்டது. பம்பாய் தொழிற்சாலைகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து சாலைகளில் பேரணி நடத்தினர். மாணவர்கள் கல்வி நிறுவனங்களை புறக்கணித்தனர். பெண்கள் உட்பட பொதுமக்கள் கப்பற்படை வீரர்களுக்கு தேவையான உணவுகளை படகுகளில், வண்டிகளில், வேன்களில் கொண்டு சென்று கொடுத்தனர். தல்வாரும், கத்திவாரும், இந்துஸ்தான், எச்.எம்.ஐ.எஸ் பஞ்சாப் கப்பல்களில் நடைபெற்ற போராட்டம் இளைஞர்களை எழுச்சிக் கொள்ள செய்தது.
பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் அதற்கெதிரான போராட்டங்கள் பல நடந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறை சென்றனர். தடியடி, துப்பாக்கி சூடு, உயிர் பலி என தியாகம் செய்தனர். அப்போது ஆட்சி மாற்றத்தை பற்றி சிந்திக்காத வெள்ளை அரசு கப்பற்படை எழுச்சியை கண்டு பயந்தது.
ஏனெனில் சம காலத்தில் வெள்ளை அரசின் முக்கியமான கேந்திர துறைகளில் இரயில்வேயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், சுரங்கத் தொழிலாளர்களின் எழுச்சிகரமான வேலைநிறுத்த இயக்கம், விளைச்சலில் முக்கால் பங்கு விவசாயிகளுக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்காக வங்கத்தில் நடந்த “தெபாகா போராட்டம்”, தெலுங்கானாப் போராட்டம், மாராட்டியத்தில் நடைபெற்ற “வார்லிஆதிவாசிகள்” போராட்டம், திருவாங்கூர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவு மன்னனையும் திவானையும் எதிர்த்த புன்னப் புரா வயலார் மக்களின் ஆயுத மேந்திய எழுச்சியும் இக்காலத்தில் நடைபெற்றது.
இந்த தருணத்தில்தான் கப்பற்படை வீரர்களின் புரட்சி நடைபெற்றது. புரட்சி செய்த கப்பற்படையினரைச் சுட தரைப்படையினர் மறுத்தனர். விமானப்படையினர் மறுத்தனர். மராட்டிய காவல்படை, கூர்க்கா படைகள் மறுத்தது. இப்படி வெள்ளை அரசுக்கு ஆதரவாக இருக்கும் என நம்பிய இராணுவத்தின் பல பிரிவுகள் கப்பற்படைக்கு ஆதரவாக மாறியது மக்களும், ஆயுதப்படையினரும் இணைந்த புரட்சி இந்தியாவில் ஏற்படும் என்றால் இந்தியாவை அடிமைப்படுத்தி மக்களை சுரண்டிக் கொழுத்தவர்களை எவ்வித சலுகையும் அளிக்காமல் மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்திய தேசிய தலைமைக்கும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது.
பெருமுதலாளித்துவ-நிலபிரபுத்துவ பிரதிநிதிகளின் துரோகம் :
மாலுமிகளின் கோரிக்கைகளும், தேசத்தின் அரசியல் கோரிக்கைகளும் இணைந்து அனைத்து பகுதி மாலுமிகளையும் ஒன்றுபடுத்தியது. இக்கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு மாலுமிகளின் போராட்டக்குழு காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டது.
வல்லபாய் பட்டேல் அறிக்கை இவ்வாறு வெளியிட்டார். “ கப்பற்படை வீரர்கள் ஆயுதக் கலகம் செய்திருக்ககூடாது என்றும் கப்பற்படையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் வேண்டுமென்னும் கடற்படைதளபதியின் கூற்றை ஆதரிப்பதாகவும் கூறினார்”.
பிரிட்டிஷ் படையினர் புரிந்த படுகொலையை கண்டித்து பிப்-22 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துமாறு போராட்டக்குழு தேசிய இயக்கங்களை, மக்களை கேட்டுக் கொண்ட போது கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை நடத்த தூண்டியது. பங்கேற்றது.. இந்த நிலையில் கப்பற்படை மாலுமிகளின் போராட்டக்குழு “நாங்கள் மக்களிடம் சரணடைகிறோம், நாங்கள் தோற்றுவிட்டதாக கருதவில்லை, ஒரு நாளும் தோற்கப் போவதுமில்லை. பிரிட்டிஷ் இராணுவம் எங்களை எங்கே கொண்டு போகிறது என்பது எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்ற அறிவிப்போடு போராட்டக் குழு சரணடைந்தது. இந்திய விடுதலைக்கு பின்னரும் நீண்ட காலம் நூற்றுக் கணக்கான படைவீரர்கள் சிறைகளில் வாடினார்கள்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அச்சம் :
1942களில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மணி மகுடத்தை அலங்கரிகும் வைரக்கற்களே இந்தியா. சாம்ராஜ்யத்தின் எந்த பகுதியையும் நாம் இழக்கலாம். ஆனால் இந்தியாவை இழந்தால் சாம்ராஜ்யமே அழிந்து விடும் என்று பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் அலறிக் கொண்டிருந்தார். “நான் பிரதமராக இருப்பது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கலைப்பிற்கு தலைமை தாங்குவதற்கு அல்ல என்று 1942ல் ஆணவத்தோடு சர்ச்சில் அலறினார். அதுவும்.. வெள்ளையனே வெளியேறு என காந்தியும், இந்திய தேசிய காங்கிரசும் குமுறிக் கொண்டிருந்த நேரத்தில் தான் உலக ஏகாதிபத்தியத்தின் தலைவனாக அன்று வீற்றிருந்த சர்ச்சில் கொக்கரித்தார்.
இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் வெற்றிக்கு பின்னர், “பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசும் போது 1920-லோ, 1930-லோ, 1940-லோ இருந்த தட்ப வெப்பநிலை இப்போது இந்தியாவில் இல்லை. இன்று முற்றிலும் மாறுப்பட்ட நிலை உள்ளது. எனவே மாறுபட்ட அணுகுமுறை தேவை” என்று பிரிட்டிஷ் பிரதமர் அட்லி இறங்கி வந்து அதிகார மாற்றம் பற்றிப் பேச ஒரு குழுவை அனுப்பினர். அந்த அளவிற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மிரட்டி பணிய வைத்த இயக்கம் கப்பற்படை எழுச்சி ஆகும். இந்திய ராணுவத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு இருந்த நம்பிக்கையை தகர்த்தது. இது பிரிட்டிஷாருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி, இந்தியாவிலிருந்து வெளியேறும் முடிவை வேகப்படுத்தியது.
ஏகாதிபத்திய எதிர்ப்பை தீவிரப்படுத்துவோம் :
இத்தருணத்தில் இன்றைய ஒன்றிய பிஜேபி ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் நாட்டின் இறையாண்மையை அடமானம் வைத்து வருகிறார்கள். இந்தியா என்கிற மண்ணும், மனித உறவுகளும் நிறைந்த பகுதியை ஏகாதிபத்திய கழுகுகளுக்கு ஒவ்வொரு வளங்களையும் விருந்து வைத்து தாரை வார்த்து வருகிறார்கள். பஞ்ச பூத வளங்களையும், நிதிசார், வேளாண் சார், வர்த்தகம் சார், பாதுகாப்பு சார், விண்வெளி, நிதி, தொழில், வேளாண், பாதுகாப்பு, விண்வெளி, கடல், இணையவழி உள்ளிட்டு அனைத்து வளங்களையும் அமெரிக்க ஏகாதிபத்திய கழுகு டொனால்ட் ட்ரம்ப் தீர்மானிப்பார் என்றால் இந்திய ஆட்சியாளர்களின் அடிமைத்தனத்தைத என்னவென்று சொல்வது ?
“மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு -அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது நமது கடமை”
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த புல்புல் குருவியில் பறந்த சாவர்க்கரின் வாரிசுகளை அம்பலப்படுத்துவதும், அவர்களின் நவீனதாராளமயக் கொள்கை, வகுப்புவாத கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதுமே இந்திய கப்பற்படை எழுச்சியின் நாயகர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக, மத நல்லிணக்க ஒற்றுமை ஒங்கட்டும்.
- செ.முத்துக்கண்ணன்
#independence #socialism #antiimperialism



No comments:
Post a Comment