”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

“கால்கள் தான் என் உலகம்”


இளைஞர் முழக்கம் 
அக்டோபர் 2015

“நான் அர்ஜெண்டினாவில் பிறந்தேன், அது ஒன்றும் ரகசியமல்ல, நான் ஒரு அர்ஜெண்டினன், ஒரு கியூபன்,  அதே சமயம் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேச பக்தனாகவும் உணர்கிறேன். தேவைப்பட்டால் யாருடைய வேண்டுகோளும் இன்றி,இதில் எந்த வொரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் உயிரை தரவும் சித்தமாக இருக்கிறேன்”. 

இறுதியாக கியூபாவைவிட்டு கிளம்புவதற்கு முன்பு சேகுவேராவின் வார்த்தைகள், இந்த உலகின் கோடிக்கணக்கான இளைஞர்களின் அடையாளமாக மாறிப்போனவன் சேகுவேரா. வாழ்ந்த காலம் சொற்பாக இருந்தாலும்  தனக்கான நிலைபாட்டில் உறுதியாக திகழ்ந்தவன்.

1929 ஜூன் 14ல் பிறந்த சேகுவேரா  இரண்டறை வயதிலேயே ஆஸ்துமா நோய்க்கு ஆட்பட்டு தனது இறுதி நாட்கள் வரை அத்தோடு போராடியவர். 3000 கிலோமீட்டருக்கு மேல் தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனாவுடன் லத்தீன் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது தான் பெருவில் தொழுநோய் முகாமை கண்டறிந்து அங்கு சேவை செய்கிறார். இதன் பின்னணியில் மருத்துவர் பட்டத்தை 1953ல் ஜூனில் பெற்ற கையோடு அமெரிக்காவிற்கு ஜூலையில் பயணம் மேற்கொள்கிறார். 1955ல் மெக்சிகோவில் வைத்து பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார். அங்கு கியூபா புரட்சிக்கான போராளிக் குழுவோடு மருத்துவப்பணியாற்ற சென்று தன்னை போராளியாக மாற்றிக்கொள்கிறார். 

1948ல் தனது பள்ளி பருவத்தின் முதலாண்டு மருத்துவ பிரதிநிதியாக மாணவர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து அவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டதாக சே பதிவு செய்கிறார். ( அந்த சங்கம் இரு பிரிவாக இருந்தது. ஒன்று சீர்திருத்தவாதிகள் தரப்பும், மற்றொன்று  கம்யூனிச சார்புடையதாகவும் இருந்தது. சே கம்யூனிஸ்டாக இல்லையென்றாலும் இடதுசாரியாக, சோசலிசடாக இருந்தேன் என அவரே கூறியுள்ளார்.  இயல்பாக அன்றைய நிலையில் பெரோனிச எதிர்ப்பு, நாசிச எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றில் ஒன்றாய் இருந்தோம் என்று கூறுகிறார். அன்று ஜப்பானின் நாகசாகி, ஹிரோசிமா நகரங்களின் மீது அமெரிக்கா குண்டு வீசியதை கண்டித்து பிரகடனத்தில் கையெழுத்திட்டதில் எனக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. 

1955ல் ஆகஸ்டில் பெரு நாட்டை சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை சே திருமணம் செய்து கொண்டார். 1958ல் கியூபா சர்வாதிகாரி பாடிஸ்டா படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது புரட்சிப்படை. போரில் இறுதியாக பிடலின் தலைமையில் பல்வேறு வேலைநிறுத்தங்கள், மக்கள் பங்கேற்பு, கொரில்லா யுத்தம் என தோழர்களின் முயற்சியில் கியூபா யுத்தம் வெற்றிபெறுகிறது. பின்னணியில் நின்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் மூக்குடைந்து மண்ணை கவ்வுகிறது. அனைத்திற்கும் உடன் நின்றவர் சேகுவேரா. 

வெற்றி பெற்ற மண்ணில் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. புரட்சியின் போது விதைத்த கனவுகளில் இருந்து அறுவடை செய்ய நிஜத்தை தேடினார்.  கியூபாவின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த பறந்தார் பல நாடுகளுக்கு, உதவி கோரினார். இந்தியாவிற்கும் வந்தார். ஐ.நாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீர உரையாற்றினார்.  முக்கால் நூற்றாண்டு தாண்டி இன்று கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நல்லெண்ண துhதராக வெள்ளைபுற ஏந்தி போப் பிரான்சிஸ் வாடிகனில் இருந்து வந்து சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறார். அதை தொடர்ந்து நடைமுறை படுத்திக்காட்டியவர்கள் கியூபர்கள் என்பதில் பெருமைப்பட முடியும். 

ஒருமுறை சே தனது நண்பரிடம் சொன்னார். “கால்கள்தான் என் உலகம், என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது. அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்”. அதனால் தான் உலகில் எங்கு அநீதி நடைபெற்றாலும் அதை நோக்கி பயணித்தால் நீயும் நானும் தோழர்களே என்று பிரகடனத்தை வெளியிட்டவர் சேகுவேரா.  அதனால் தான் என்னவோ லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் கால்பந்து போட்டியில் ஆர்வத்தோடு இருக்கின்றனவோ? எனவேதான் காஸ்ட்ரோவிடம், கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை  நான் உங்களுடன் இருப்பேன். அதன் பின்பு நான் என் பயணத்தை தொடர்ந்து வெவ்வேறு இடங்கங்களுக்கு சென்றுவிடுவேன் என்று அழுத்தமாக கூறினார். 

இன்றும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சேகுவேரா யார் என்று தெரியாமலேயே பனியன்களில் அவரது புகைப்படத்தை தாங்கி வலம் வருகின்றனர். அவர்களிடம் கேட்டால் தெரியாது. ஈர்க்கும் முகமாக இருந்தது. பேன்சியாக இருந்தது அதனால் உடுத்தினோம் என்கிறார்கள். தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். எனது அனைத்திலும் சே தான் இனி இருப்பார் என்று அப்படி என்ன சே சாதித்தார்.  மேலே சொன்னது தான். பிறந்தது ஒன்று, வளர்ந்தது ஒன்று. இறந்தது ஒன்று ஆனால் அனைத்திற்கும் அர்த்தம் கண்டவன் சே. அதனால் தான் வரலாறாகிப்போனான்.

இன்றைக்கு தமிழகத்திலும் பல எழுத்தாளர்கள் வரலாற்றை மாற்றி சேற்றை வாரி பூசுபவர்கள் உள்ளனர். ஜெயமோகன் போன்ற அறிவாளிகள் என தன்னை சொல்லிக் கொள்பவர்கள் கூட மிக மோசமான செயலையே மேற்கொள்கின்றனர். சேவை போன்ற புரட்சியாளர்களின் வழியில் சென்றால் மனிதர்களை கொன்றழிக்கும் வேலையே நடைபெறும். புரட்சி என்பது வன்முறை என்று எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். லெனினை இழுக்கிறார். ருஷ்யபுரட்சி என்பது கூட தற்செயல் நிகழ்வுதான் அத விபத்துதான். அது திட்டமிட்ட நிகழ்வல்ல என்று ஜார் மன்னனுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களின், விவசாயிகளின் உழைப்பை, தியாகத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார். இப்படிப்பட்ட அரைவேக்காடுகளுக்கு உரக்க சொல்வோம். உண்மை ஒரு போதும் சாகாது. 

சேகுவேரா தனிநபர் சாகசத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. “ சாவைப் பற்றி எனக்கு கவலை இல்லை என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் என்று உரைத்த உரையே மின்சாரமாய் போராளிகள் கைகளில் பாய்ந்தது”  கொரில்லா யுத்தத்தின் சிற்பியாக சொல்லப்பட்ட சேதான் யுத்த களத்தில் எதிரிக்கும் வைத்தியம் பார்த்தார். யுத்தகளத்தில் தோட்டா சத்தங்களுக்கு இடையே புத்தங்களை கையில் ஏந்தி வாசித்தார். ஏகாதிபத்திய ஏதிர்ப்பு போரை உறுதியான முறையில் நடத்தியவர். சிபிஎன் தொலைக்காட்சிக்கு நியூயார்கில் வைத்து பேட்டியளித்த சேகுவேரா மிக தைரியமாக அமெரிக்க மண்ணிலேயே “ அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன் ” என பேட்டியளித்து அமெரிக்க ஆட்சியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தார். 

கியூபாவின் பல்வேறு அரசு பதவிகளை வகித்த போதும் சாதாரண மனிதனாகவே வாழ்க்கை நடத்தினார். உயர் பொறுப்புகளில் இருந்த போதும் விவசாயிகள், தொழிலாளிகளோடு களத்தில் பணியாற்றினார். அதனால் தான் அவரால் காங்கோ, பொலிவியா நாடுகளில் அடக்குமுறைக்கு எதிராக புரட்சியை உருவாக்க ஏகாதிபத்திய சக்திகளை வேரறுக்க புரட்சிப்படைகளுக்கு பயிற்சியளிக்க கிளம்பினார் சே. காங்கோவில் பணியை வெற்றிகரமாகக்கிய சே பொலிவியாவில் ஆரம்ப வெற்றிபெற்றாலும் இறுதியில் சிக்குண்டார் ஏகாதிபத்திய கூலிப்படைகளிடம். குண்டடிப்பட்டு கைது செய்யப்பட்டு அவரை கொல்ல அமெரிக்க சிஐஏ முடிவெடுத்த பின்னணியில் அவரது இறுதி நிமிடங்களில்,

நண்பகல் 1 மணிக்கு கைகள் கட்டப்பட்ட நிலையில் சேவை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் சென்று கொல்ல முயற்சி செய்து முட்டி போட்டு நிற்கசெல்வான். அதற்கு சே “ முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்” என கர்ஜித்தார்.  தன்னை நிற்க வைத்து சுடு என்பார். அந்த கோரிக்கையை அலட்சியப்படுத்தும் போது சே புன்னகைத்து சொல்வார். “ கோழையே சுடு! நீ சுடுவது சேவையல்ல, சாதாரண மனிதனைநோக்கித்தான், உனது கைகள் நடுங்காமல்  துப்பாக்கியை உயர்த்தி எனது நெஞ்சைப்பார்த்து சுடு,. என சாகும் தருவாயில் எதிரிக்கும் யுத்தகள வகுப்பெடுத்தவர்,” 

சாவைப்பற்றி பயம் கொள்ளாத அந்த துணிவும் அவரின் சோலிச கனவும் தான் இன்று இளைஞர்களை ஈர்த்து வருகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடைளயாள சின்னமாய் மாறிப்போனவன் சேகுவேரா. அக்டோபர் 9 சே நினைவுதினம்.  

No comments:

Post a Comment