”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

உரிமையை வென்றெடுக்கும் நாள்


உழைக்கும் மக்களின் உரிமைக் குரலை ஒலிக்கும் நாள்

உழைக்கும் வர்க்கம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை உரக்க சொல்லும் நாள் தான் மேதினம், “அதிக ஊதியம் வேண்டும்“ என்பதற்கான கோரிக்கையோடு துவங்கிய போராட்டங்கள் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை என ஒவ்வொரு போராட்டத்திலும் கோரிக்கைகள் வகுக்கப்பட்டது. அதிகாலை முதல் அந்தி சாயும் வரை வேலை செய்ய வேண்டும் நாளொன்றுக்கு 16 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வேலை செய்த தொழிலாளர் கூட்டத்தின் ஆரம்ப கால கோரிக்கையே அதிக ஊதியம் வேண்டுமென அறிவிக்க வேண்டும் என்பது தான். செய்யும் வேலைக்கு அதிக ஊதியம் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் கூட குழி தோண்டி புதைக்கப்பட்டது முதலாளிகளால்.
1806 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்திற்கு தலைமையேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற போது நாளொன்றுக்கு 19 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் வெளியானது.

1820 முதல் 1830 களில் பில்டெல்பியா நகர இயந்திர தொழிலாளர் சங்கம் தான் முதன் முதலில் 10 மணி நேர வேலை என்ற கோஷத்தை முன் வைத்தது, அதே நகரில் 1827ல் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் இந்த கோரிக்கைக்காக வேலைநிறுத்தத்தை நடத்தியது. இதன்பின்பு தான் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் பிரதானமாக பார்க்கப்பட்டது.

நியூயார்க் நகரில் ரொட்டி தொழிலாளர்கள் இதே காலத்தில் சுமார் 20 மணி நேரம் எகிப்திய அடிமைகளை விட கேவலமான முறையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். 1837ல் வேன்பியுரன் தலைமையிலான அரசாங்கம் பத்து மணி நேர வேலைநாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது போராடிய தொழிலாளர்களின் மத்தியில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய தொழிலாளர்கள் உடனே 8 மணி நேர வேலை கோஷத்தை முன் வைத்தனர்.

8 மணி நேர வேலைக்கான கோஷத்தை முன் வைத்து வளரும் நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன் வைத்து 1858ல் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். 1884 களில் அமெரிக்காவில் உருவான 8 மணி நேர இயக்கம் தான் மேதினம் உருவாக காரணமாக அமைந்தது. இதற்கு ஒரு தலைமுறை முன்பே இக்கோரிக்கைக்காக அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடைபெற்ற 1861-62 காலத்தில் தேசிய தொழிற்சங்கம் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க ஸ்தாபனமாக போராடியது.

1866ல் தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மகாநாடு ”அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து நாட்டின் உழைப்பு சக்தியை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனை அடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி போராட தீர்மானிக்கிறோம்” என தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்த 8 மணி நேர இயக்கத்தை பற்றி மாமேதை காரல் மார்க்ஸ் கூறும் போது ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் எனன முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளை தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலையை தேடிக் கொள்ள முடியாது” எனவே அனைத்து பகுதி தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என மார்க்ஸ் முழக்கமிட்டார்.

அவர் முழங்கி 150 ஆண்டுகளுக்கு பின் இன்றும் ஒரு பகுதி தொழிலாளர்களை அடையாளங்களின் பின்னணியில் ஒழிய வைத்து முதலாளித்துவம் கடும் சுரண்டலை நடத்திக் கொண்டு இருக்கிறது. இதன் பின்னணியில் பார்த்தால் மேதினம் என்பது கொண்டாட்டத்திற்கான தினம் மட்டுமல்ல.. தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகள் மட்டுமல்லாது, சமூகத்தின் மேம்பாடு மற்றும் தொழிலாளி வர்க்க அரசியலோடு இணைந்தது ஆகும்.

அதனால் தான் இரண்டாவது இன்டர் நேஷனல் 1889ல் பாரிஸில் நடைபெற்ற போது ”மே முதல் நாள் என்பது தொழிலாளர்கள் தங்கள் அரசியல் மற்றும் தொழிற்சங்கத்தின் மூலம் கொடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கோரிக்கை 8 மணி நேர வேலைக்கான போர் குரலாக ஒலிக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது”. இதற்கு முன்பு 1884 சிக்காகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர் மகாநாட்டில் 1886 மே முதல் நாளை 8 மணி நேர வேலைக்கான தினமாக அறிவிக்க தயாரிப்பு பணிகளை துவக்கிடுவது என்ற அறைகூவலுக்கு இணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அந்த மூன்றாண்டுகளும் போராட்ட களமாக காட்சி அளித்தது. சாலை, ரயில்வே, நகராட்சி, இயந்திரத் தொழிலாளர்கள், பென்சில்வேனியா சுரங்க தொழிலாளர்கள் என பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

1873 களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவும், வேலை இல்லா திண்டாட்டமும், மக்களின் துன்பமும் குறைவான வேலைநாளுக்கான போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. 1881ல் 500 வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது 1886ல் 11562 ஆக உயர்ந்தது. வேலைநிறுத்தத்தின் மையமாக சிக்காகோ நகரமும், இதர பகுதிகளில் குறிப்பாக நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயிண்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் அதிக அளவில் பங்கேற்றது.

1886 மே 1ம் தேதியன்று சிக்காகோ நகரம் தனது வரலாற்றில் ”ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கி தங்களது மாபெரும் வர்க்க ஒற்றுமையை காட்டிய காட்சியை” கண்டது. சிக்காகோ நகரம் மட்டுமல்ல உலகமே கண்டது. தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகள் மற்றும் அரசு எந்திரம் இணைந்து தொழிலாளர்களை கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியது. அமைதியான முறையில் போராட்ட களத்தில் நின்ற தொழிலாளர்களை காவல்துறை சுற்றி வளைத்து தாக்கியது. அதில் ஏற்பட்ட கலவரத்தையொட்டி பல தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு தங்களது உயிரையும், குருதியையும் தந்தனர். தொழிற்சங்க தலைவர்கள் பலர் தூக்கு கயிற்றை முத்தமிட்டனர். அவர்களின் அந்த மகத்தான தியாகமே மேதினத்தை தொழிலாளர்களின் உரிமை தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டித்து வருகிறது,

மேதினம் குறித்து மாமேதை ஏங்கல்ஸ் கூறும் போது ”உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மேதின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலை நாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விசயங்களுக்கும் பயன்பட வேண்டும்”,

மேதினத்தை லெனின் ஓர் ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஷ்ய தொழிலாளர்களுக்கு தன்னுடைய ஆரம்ப கால ரஷ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார். ரஷ்ய புரட்சி இயக்கம் மேதினத்தை பெரும் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது. மேதினத்தை அனுஷ்டிக்க 6 மாதத்திற்கு முன்பிருந்தே ரஷ்ய தொழிலாளி வர்க்கம் தயாரிப்புகளில் ஈடுபட்டது என்றால் அந்த தினத்தின் மகோனதத்தை அறிந்து கொள்ள முடியும். ”ரஷ்ய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்க முடியாத போராட்டத்திற்கும் பாட்டாளிவர்க்க மேம்பாட்டிற்கும், சோஷலிஸ்த்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் ஆகும்” என்றார்.

இன்றைய இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய ஆதரவு, ஏகபோக ஆதரவு, நிலபிரபுத்துவ ஆதரவு கொள்கைகளோடு உழைக்கும் மக்களின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. தொழிற் சங்க உரிமைகளை முடமாக்கும் நடவடிக்கைகளில் படிப்படியாக ஈடுபட்டு வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் தாசர்களாக ஆளும் வர்க்கம் தன்னை மாற்றி வருகிறது.

உழைப்புசக்தியின் மதிப்பை ஒட்ட சுரண்டும் இவர்கள்தான் மேதினத்திற்கு நாங்கள் விடுமுறை விட்டுவிட்டோம். தொழிலாளர்களின் மீதான எங்களது கரிசனத்தை பார்த்தீர்களா? என்கின்றனர். இவர்களின் கரிசனத்தின் காரணமாக உழைப்பாளி மக்கள் மேலும் மேலும் நடுத்தெரு நாராயணர்களாக மாற்றி வருகின்றனர். அதனால் தான் இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 84 கோடி மக்கள் 20ரூபாய் வருமானத்தில் வாழ்ந்து வரும் நேரத்தில் இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் 60 சதம் பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இந்தியாவின் டாப் டென் பணக்காரர்கள் எல்லாம் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்கு போட்டி போட்டு வளர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

கோடை காலத்தில் மின்வெட்டு வந்தால் ஏழை எளிய மக்கள், கிராமப்புற விவசாயிகள், நகர்புறத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் இரவு நேர ஆனந்த விளையாட்டுகளுக்கு ( ஐபிஎல் கிரிக்கெட் ) அளவற்ற மின்சாரம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளவற்ற சலுகைகள் என தங்களது வர்க்க பாசத்தை காண்பித்துக் கொண்டு இருக்கின்றனர். இரவு நேர விருந்துகளுக்கு பல லட்சங்கள் செலவு செய்து கொண்டு ஒரு கூட்டம் அலையும் போது தான் இந்தியாவின் 30 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இரவு உணவில்லாமல் பட்டினியில் படுக்கும் நிலை இருக்கிறது,.

ஒரு பவுன் தங்கம் இல்லாததால் திருமணங்களை தள்ளி வைத்துக்கொண்டு இருக்கும் கோடிக்கணக்கான பெண்கள் வாழும் தேசத்தில் தனி நபர் ஒருவர் தனக்கு 1,87,500 பவுன் (1500 கிலோ = 1.5 டன் ) தங்கத்தை கையூட்டாக பெற்று தனது வீட்டில் பதுக்கி வைத்ததும், 1801 கோடி ரூபாய் ( 1,80,000 லட்சங்கள் ) பணத்தை தனக்காக பதுக்கி வைத்துள்ளார். இது ஒரு மருத்துவ கவுன்சில் தலைவரின் வீட்டில் கைப்பற்றப்பட்டது. இன்றும் சுவிஸ் வங்கியில் 76 லட்சம் கோடி ரூபாய் பணத்தை கொண்டு போய் பதுக்கி வைத்துள்ள பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகளை என்ன செய்வது.



இந்த முதலாளித்துவ அரசியலின் நோக்கமே லாபம் மேலும் லாபம் என்ற லாபவெறியை தனிநபர்களுக்கு தூண்டி விடுவதாகவே இருக்கும். இதற்கு ஒட்டு மொத்த சமூகத்தின் சமமான வளர்ச்சியை பற்றி கவலை இருக்காது. எனவே தான் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் உள்ளிட்ட கம்யூனிச இயக்க மூலவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் தங்களது பொருளாதார கோரிக்கையோடு போராட்டத்தை நிறுத்திக் கொள்ளக் கூடாது. சமூக ஏற்றதாழ்வுக்கு எதிரான போராட்டத்தையும், சமாதான சகவாழ்வுக்கு எதிராக உள்ள அனைத்து அம்சங்களையும் தொழிலாளி வர்க்கம் கணக்கில் கொள்ள வேண்டும் என்றனர்.

எனவே தான் மேதின முழக்கங்களில் கூட 8 மணி நேர வேலைநாளுக்கான கோரிக்கை மட்டுமல்லாது ”உலகத் தொழிலாளர் ஒற்றுமை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓட்டுரிமை, ஏகாதிபத்திய போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு, தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனம் கட்டும் உரிமை போன்றவையும் இணைக்கப்பட வேண்டும்” என்றார் லெனின். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்ன அம்சங்கள் இன்றும் அப்படியே உலகமய சூழலுக்கு பின்னால் இந்திய தொழிலாளி வர்க்கமும் கடைபிடிக்க வேண்டிய கோஷங்களாக உள்ளது என்றால் மிகையாகாது.

தொழிலாளர்களின் கோரிக்கைகளோடு சோசலிசத்திற்கான போராட்டத்தையும் முன்னெடுத்து செல்ல இந்த மேதின தினத்தில் சபதமேற்போம்..


2 comments:

  1. கட்டுரைகளை இவ்வளவு பெரிதாக போட வேண்டாம். படிக்க கடினமாக இருக்கும். அதிகபட்சம் 5 பத்திகளுக்கு மேல் போட வேண்டாம். அதற்கு மேல் சென்றால் வெவ்வேறு தலைப்பிட்டு உடைத்து போடவும்

    ReplyDelete