”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

சாத்திரம் அன்று, சதி என்று கண்டோம்


நாடு விடுதலையடைந்து 70 ஆவது சுதந்திரத்தினத்தை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்கள், தங்களுடைய அறியாமையில் இருந்து விடுதலைபெறாமல் மூடநம்பிக்கைகளிலும், மூடப்பழக்க வழக்கங்களிலும், சாதி மத பேதங்களிலும் மூழ்கி தங்களுடைய வர்க்க உணர்வை இழக்கிறார்கள். இதனை திட்டமிட்டு ஆளும் வர்க்கங்களும், மத நிறுவனங் களும், சாதிய அமைப்பு களும் துhண்டிவிட்டு ஆதாயம் அடைந்து வருகிறார்கள்.



உணவு, உடை, இருப்பிடம், நியாயம், அமைதி, சமாதானம், அன்பு, மனிதநேயம் அனைத்தும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டு பெரும் கூட்டம் கேட்பாறற்று வீதிகளில் நல்லொதொரு வீணையாக கிடக்கின்றனர். இந்த மக்களை பார்த்து பிரான்சு புரட்சியின் குழந்தையான ஷெல்லி கோபப்படுகிறான்.

 “ உங்களது வியர்வையை வற்றவடிக்கும்- இல்லை, உங்கள் ரத்தத்தை பருகும் அந்த நன்றி கெட்ட சோம்பேறித் தேனீகளுக்குத் தொட்டிலிலிருந்து சுடுகாடு மட்டும் எதற்காக உணவும், உடையும் அளித்து காப்பாற்றுகிறீர்கள்? நீங்கள் விதைக்கிறீர்கள், இன்னொருவன் அறுக்கிறான், நீங்கள் செல்வத்தை கண்டெடுக்கிறீர்கள், இன்னொருவன் அதை வைத்துக்கொள்கிறான். நீங்கள் நெய்யும் உடைகளை வேறெருவன் தாங்குகிறான்.

விதைகளை விதையுங்கள், ஆனால் எந்தக்கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள், செல்வத்தைத் தேடுங்கள், ஆனால் எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்கவிடாதீர்கள், ஆடைகளை நெய்யுங்கள், ஆனால் சோம்பேறிகளை அவற்றை அணிய விடாதீர்கள், ஆயுதங்களை செய்யுங்கள் ஆனால் அதனை உங்கள் தற்காப்புக்காகவே தாங்கி நில்லுங்கள்” என்று சுதந்திர  தாகத்தையும், முழங்ககங்களையும், அடக்கு முறைக்கு எதிரான கிளர்ச்சியையும், சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் எதிர்த்து புரட்சிகர மனப்பான்மையை வளர்த்தெடுத்தவன் ஷெல்லி. அவனின் தாசனாக தன்னை அறிவித்துக்கொண்ட மகாகவி பாரதி சற்றும் குறைவில்லாமல் இந்திய சூழலில் புரட்சிக்கனலை மூட்டியவன்.


ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்,  மனிதர் யாரும் ஒரு நிகர் சமானமாக வாழ்வமே என்று விடுதலை சிந்து பாடியவன் மகாகவி பாரதி.. இன்றைய நிலையில் திரும்பி பார்த்தால் தேசத்தில் நடக்கும் சம்பவங்கள் எதை சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்தில் குஜராத்தின் உனா நகர் எழுச்சி எதை அடையாளப்படுத்துகிறது.

இனியும் நாங்கள் அடிமைகளல்ல,. மலக்குழிக்குள் இறங்க மாட்டோம்,  பறையடிக்க மாட்டோம், செத்தமாட்டை  அப்புறப்படுத்த மாட்டோம். நாங்கள் மனிதர்கள், எங்களுக்கும் உழைக்கத் தெரியும் கொடு நிலத்தை என்று போர் முழக்கம் செய்தார்களே பல்லாயிரக்கணக்கன தலித் மக்கள் அவர்களின் முழக்கங்களில் இன்று பாரதி தெரிகிறான்.

மகாகவி பாரதி கடவுளை நம்பியவன், ஆனால் மூட நம்பிக்கையில் ஊறி திளைத்தவன் அல்ல. அதனால்தான் ஒருவேளை பின்னால் வரும் இந்தியாவின் ஆட்சியாளர்களில் மதம் மற்றும் வருணாசிரம நம்பிக்கையின் பெயரால் மக்களை பிரிக்க ஒரு கூட்டம் தலைதூக்கும் என்று கருதித்தான் அன்றே சொல்லி வைத்தான்.

கடவுளின் பெயரால் நடைபெறும் எந்த விதமான மனிதத்தன்மையற்ற கொடுமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், சுரண்டல்களையும், சூழ்ச்சிகளையும் அடித்து நொறுக்கினான் மகாகவி பாரதி,. பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்றதோடு, வர்ணசிரமத்தின் அடிப்படையான சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்ட சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம் என சாட்டை சுழற்றி அடித்தவன் மகாகவி பாரதி..

ஆற்றுமணலையும், நீர்வளங்களையும், கனிமவளங்களையும் கொள்ளையடித்து, கார்ப்ரேட் வள்ளல்களாக, ஜகத்குருக்களாக ஊரை ஏமாற்றும் வித்தைக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை மகாகவி பாரதி,. “சகல ஜனங்களுக்கும் வயிறு நிறைய உணவு கிடைக்காத ஊரில் வாழும் செல்வரெல்லாம் திருடர், அங்கே குருக்களெல்லாம் பொய்யர் ” பொய் பூசையும், காசை பெரிதாக நினைத்து செய்யும் ஞான உபதேசமும் மிகவும் இழிந்த தொழில்களாகும். பல இடங்களில் கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிக்குள்ள மதிப்புக்கூட பூசாரிக்கும், குருக்களுக்கும் இல்லாதிருக்க காண்கிறோம். இதற்கு உண்மை குறைவு தவிர வேறொன்றும் இல்லை.

பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போல நடித்து ஜனங்களை வஞ்சித்து பணம் பறிக்கிறார்கள். கெட்டி காரன் புளுகு எட்டுநாளைக்குதான். நிற்பதுவே, நடப்பதுவே என்ற தனது பாடலின் மூலம் இந்த மாயவதங்களை சுக்கு நுhறாக உடைக்கிறான் பாரதி,. காண்பதுவே உறுதி கண்டோம், காண்பதல்லால் உறுதியில்லை என்று விஞ்ஞான உண்மையை பேசுகிறான். செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்,  பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாம் என்றிங்கு ஊதேடா சங்கம், என மறுமை, சொர்க்கம், நரகம் என்பதை இல்லையென்று உரக்க முழங்குகிறான்.

“உண்மையின் பெயர் தெய்வம் என்போம், அன்றி ஒதிடும் தெய்வங்கள் பொய்யென கண்டோம்” இது இன்றைய சனதானவாதிகளுக்கும், மோடி வகையறாக்களும் விழுந்த நெத்தியடி. அதனால் தான் அவர்களால் பாரதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


கலியை விரட்டி கிருதாயுகத்தை படைக்க வேண்டும் என்ற பாரதி அதற்கு பெண்விடுதலை அவசியம் என்றான். பாரதி எழுதிய பதிவிரதை கட்டுரையில் சொல்கிறார்.  இந்த காலத்தில் யாருக்கும் பயந்து நாம் நமக்கு தோன்றுகின்ற உண்மைகளை மறைக்கூடாது, ஆணும், பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருந்தால் நன்மை உண்டாகும். கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்றார். இந்த உபதேசத்தை ஆண்களுக்கு சொன்னதோடு நிற்கவில்லை பாரதி. பெண்களுக்கு இன்னும் தைரியத்தை கொடுக்கிறான்.

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டிவிட்டோமென்று கும்மியடி என புதுமைப்பெண்கள் குறித்து பேசுகிறான். சாதி ஆணவத்தின் பெயரால் இங்கே நடைபெறும் ஆணவக்கொலைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று போர் செய்தவன் மகாகவி பாரதி,..

நூற்றிரண்டு மலைகளை சாடுவோம்,. நுண்ணிடைப் பெண்ணொருத்தி பணியிலே, காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம், காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே என்று காதலின் வீரத்தை புதுமொழியில் பாடியவன்.  இப்படி தேசத்தை பற்றி, வாழும் மக்களை பற்றி, இயற்கையை பற்றி பாடிய, மகாகவி பாரதி உலகம் பொதுவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டவன். அதனால்தான் முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்திற்கொரு புதுமை.,.என புது உலகை படைத்தவன் மகாகவி பாரதி அவனது நினைவுநாள் செப்-11.

“அனைவரும் ஒரு சாதி, அனைவரும் ஒரினம், சாதி என்பதில்லை அதன்பேரால் பாகுபாடு பாவம்” என்று சுயமரியாதை ஏடான குடியரசு பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் சில காலம் பாரதியின் வரிகளை தாங்கி வந்தது மட்டுமல்ல சுயமரியாதை இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் எழுத்தில், பேச்சில், தீர்மானங்களில் என சாதி ஒழிப்பை மையமாக வைத்து முன்மொழிந்தார்கள். அதற்கு தலைமை தாங்கியவர் ஈ.வெ.ராமசாமி என்ற வெண்தாடிக்கு சொந்தகாரான தந்தை பெரியார்.

சாதியின் அடிப்படை வர்ணம்தான். அந்த வர்ண தருமத்தை ஒழிக்க வேண்டும் என முழங்கியவர் பெரியார். இன்றைய ஆர்.எஸ்எஸ், பிஜேபி போன்ற இந்துத்துவாதிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் இந்து சனதானக் கருத்துக்களை அன்றே பலரும் முன் வைத்தனர். 1927ல் மைசூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் காந்திக்கும், ஈ.வெ.ராவுக்கும் பெரிய தர்க்கப்போரே நடந்துள்ளது.

 காந்தி சாதி முறையானது ஒரு சுமூகமான சமூக ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தேவை என்றார். எனினும் ஒருவரது சமூக அந்த°தை பிறப்பால் தீர்மானிப்பதை எதிர்த்தார். ஒருவர் தனது விருப்படி எந்த சாதியையும் தேர்ந்தெடுக்கலாம் என்றார். ஆனால் ஈவெரா சாதிமுறையை ஒழிப்பது என்பது வர்ணாசிரமத்தினை ஒழிப்பதில்தான் அடங்கியுள்ளது என்றார். சாதி வேறுபாடுகளே சாதிய வேறுபாட்டை ஒழிப்பதற்கான காரணத்தை ஏற்படுத்தியுள்ளன என்று முழங்கினார்.

இன்றைக்கும் வருணசிரமத் தருமப்படி உழைப்பவர்களின் உடம்பில் துர்வாடை அடிக்கிறது, °நானம் செய்வதில்லை, துணி துவைப்பதில்லை, மாட்டுமாமிசம் சாப்பிடுகிறார்கள், காலையில் வேலையை துவக்கும் முன் குளிப்பதில்லை என்று உபதேசம் செய்கிறார்கள். இன்றைய இந்தியாவில் குடிநீர் பற்றாகுறையால் 40 சதத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் அல்லாடிக் கொண்டு இருக்கின்றன. 70 சதம் மக்கள் இன்றும் பொது குடிநீர் குழாய் மூலமே குடிப்பதற்கு நீரை பெறுகிறார்கள்.

குடிப்பதற்கே நீர் இல்லாத போது குளிப்பதெப்படி, இதனை அன்றே பெரியார் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
“அழுக்கும் நாற்றமும் உங்கள் கூட பிறந்தவையா என்று கேட்கிறேன். குளிக்கவும், வேட்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டில் அடைத்து வைத்துவிட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா ? உடம்பும், வாயும் நாற்றமடிக்காமலிருக்குமா என்று சிந்துத்து பாருங்கள்.

ஒரே மதம், ஒரே சட்டம் என்று கூப்பாடு போடும் இந்து மத அமைப்புகள், இந்துக்களின் பிரிவாக உள்ள ஆதிதிராவிடர்கள், ஆதி பழங்குடிகளை வழிபட மட்டும் அனுமதிக்கமாட்டோம் என்று இன்றும் சாதி ஆணவத்தில் தீண்டாமையை கடைபிடித்து வருகிறார்கள். நந்தன் சென்ற பாதை இருந்தால் மூடு என்று இன்றும் திறக்காமல் சிதம்பரம் நடராஜர் கோவில் அக்கிரமாக நடந்து கொள்கிறார்கள்.  கோவிலை கட்டியவர்கள், சிலையை வடித்தவர்கள், கோவிலுக்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லாம் கோவிலுக்கு வெளியே. கோவிலில் மணியடிக்க வந்தவர்கள் கோவிலுக்கு உள்ளே,. இந்த பார்ப்பனிய கலாச்சாரத்தைத்தான் தந்தை பெரியார். சுக்கு நூறாக போட்டு உடைக்க வேண்டும் என்றார்.

 “பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை” என்பது போல், நாம் கட்டின கோயிலைக்கொண்டு வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளிக் கதவைச் சாத்துவதென்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் ?” என்று சாமிகள் இல்லை என்று நாத்திக கருத்துக்களை பேசினாலும், வழிப்பாட்டில் ஏன் வேற்றுமை, ஒடுக்குமுறை என்பதற்கான உரிமைப்போரை நடத்தியவர் ஈவெரா.


நாமே ஒருவனை பட்டினி போட்டு வைத்துவிட்டு அவன் இறந்தபிறகு பட்டினியால் இறந்துவிட்டான் பாவி என்று சொன்னால் யார் பாவி என்பதை நினைத்து பாருங்கள் என்று கேட்டார் பெரியார். இந்த பட்டினியை போக்க குறைந்த விலையில் கிடைக்கும் புஷ்டியான உணவான மாட்டுக்கறியை இன்று வைத்திருந்தால், சாப்பிட்டால் கொல்வேன் என்று இந்துத்துவ சக்திகளான ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், விஎச்பி, பசுபாதுகாப்புக்குழு என பெயரை கொண்டு ஓலமிடுகின்றன. அன்றே பெரியார் இவர்களை பார்த்து நாக்கை பிடுங்கும் அளவிற்கு கேட்டார்.

மாட்டு மாமிசம் சாப்பிடுபவர்களை பார்த்து சொன்னார், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களை சார்ந்ததல்ல, உங்களை, மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சம்பாதிக்கவும், வழியில்லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப்ப பணத்தில் அதிக ஆகாரம் ஆகக்கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று.  மாட்டு மாமிசத்தை அனுமதிக்கும் மதத்தைச் சார்ந்த கிறிஸ்தவ, முகமதிய மதத்தில் உள்ள கொஞ்சம் காசு படைத்தவர்கள் கூட நாங்கள் மாட்டு மாமிசம் சாப்பிடும் வழக்கம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். மாட்டு இறைச்சி சாப்பிட காரணம் தரித்தரம் தான் முக்கியகாரணமாகும்.

கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சி புழுக்களையும், அழுக்குகளையும் மலத்தையும் தின்கின்றன. இப்படி இருக்கிற இதைச் சாப்பிடுகிற வடநாட்டு பிராமணர் முதல் தென்னாட்டு சூத்திரர்கள் வரை நல்ல சாதியும் தொடக்கூடியவர்களாக இருக்கும் போது, புல்லும், பருத்திக்கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் தின்கிற மாட்டின் இறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழந்தவன் ஆவான் என்ற இந்த கேள்விக்குள் தீண்டாமைக்கொடுமையின் உச்சக்காட்ட தாக்குதலான உணவு அரசியலை போட்டு உடைத்து எது சிறந்த உணவு, இதில் என்ன தீட்டு என்று அதில் உள்ள அயோக்கியதனமான காரணத்தைத்தான் ஏற்க முடியாது என்று கர்ஜித்தார் பெரியார்.

பெண்ணடிமைத்தனத்தை கடுமையாக எதிர்த்த ஈ.வெ.ரா. “தங்கள் வீட்டுப் பெண்களை படுதாவுக்குள் வைத்துக்கொண்டும், விதவை விவாகத்தை பேசுவோர் தங்கள் குடும்பங்களில் உள்ள விதவைகளை காவல்போட்டு விதவை தன்மையை காப்பாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

பெண்மக்கள் என்று நினைக்கும் போதே அவர்கள் அடிமை, நமக்கடங்கினவர்கள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது. இதனாலேயே அவர்களை விலங்குபோல் நடத்தி வருகிறோம். மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கை கொண்ட பெண்களுக்கு பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பது தானே இதன் பொருள்.


உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் முளை முளைக்கும் இடமாகும் என்று பெண்ணடிமைத்திற்கு எதிராக போராடியவர் தந்தைப் பெரியார். அத்தோடு நிற்கவில்லை. கல்விக்கற்பிக்கும் நடைமுறைகளில் ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை நமது தாய்மார்களுக்கே வழங்க வேண்டும். அக்குழந்தைகளுக்கு 6 வயது வரை ஆசிரியர்களாக பெரும்பகுதி தாய்மார்களே இருக்கிறார்கள். மேல்நாடுகளில் இந்த பழக்கம் தான் காணப்படுகிறது.

இன்றும் நாட்டில் பிரதானமாக நடைபெறும் வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். குறிப்பாக சமூக ஒடுக்குமுறையின் பிரதான அம்சங்களாக சாதி, பாலினம், நிறம், இனம், மதம் இவைகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக பாரதியும், ஈ.வெ.ராமசாமியும் இன்றும் தேவைப்படுகிறார்கள். மகாகவி பாரதியின் நினைவு தினம் செப் 11, தந்தை பெரியாரின் பிறந்த தினம் செப்-17 இவர்களது வாழ்வும், செயலும் நமக்கு உரமாகட்டும்,. போராட்டங்கள் கிளர்ந்தெழட்டும். வெண்மணியின் தீயாய் அநீதிகளை சுட்டெரிப்போம்.

நன்றி .- இளைஞர்முழக்கம் மாத இதழ்

1 comment:

  1. வணக்கம். மிக அருமையான கட்டுரை. என் வாழ்த்துகள்.
    இதை எழுதியவர் நீங்கள்தானா? கட்டுரையை எழுதியவர் பெயர் இல்லையே அதனால் கேட்கிறேன். நீங்கள்தான் எனில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete