”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!


ஒரு நாட்டின் வளர்ச்சி குறியீடு அதன் மனிதவள மேம்பாட்டில் தான் இருக்கிறது.வளர்ச்சிக்கான தரமான கல்வியும், சுகாதாரமுமே மனிதவள மேம்பாடு ஆகும். சுகாதாரம் என்கிற போது ஊட்டச்சத்து மிக்க சத்தான உணவு, பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர், ஆரோக்கியமான சுற்றுப்புற சூழல் மிகுந்த வாழிடம் அவசியமான அடிப்படை தேவைகளாகும்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் (5.96 சதம்) 7.21 கோடி மக்களை கொண்டு 7வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம், 97 லட்சங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் என்கிற எண்ணிக்கையில் 11.59 சதவீதமாக இருந்தது. தற்போதைய 2011ல் கணக்கெடுப்பின்படி 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 குழந்தைகள் தான் இருக்கின்றனர். அதாவது 11.59 சதவீதத்தில் இருந்து 9.56 சதவீதமாக குறைந்துள்ளது.

சுகாதார நலத்திட்டங்கள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..என்ற முது மொழிக்கேற்ப அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை எய்தும் நோக்குடன் தேசிய ஊரக சுகாதார நலத்திட்டம், தமிழ்நாடு சுகாதார நலத்திட்டம் என்ற இரண்டு மாபெரும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றது பாராட்டுக்குரியது.பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 50ம் இறப்பும், பேறு காலத்தில் பெண்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 212 என்பதும் உள்ள நிலையில் தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் இறப்பு 28 ஆகவும், பேறு கால பெண்கள் இறப்பு 80 ஆகவும் உள்ளது..தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மகப்பேறுக்கு பயன்படுத்தும் சதவீதம் 25 சதத்திற்கு மேல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு தமிழக மருத்துவமனைகளை தரம் உயர்த்துவது குறித்து ஆழமான நடவடிக்கைகளுக்கு செல்வதே அனைவருக்கும் சுகாதாரம் என்ற நோக்கத்தை அடைய உதவிடும்..

தற்போது தமிழக அரசு 2011-2012 நிதி நிலை அறிக்கையில் தேசிய ஊரக சுகாதார நலத்திட்டத்திற்கு 900 கோடி ரூபாய் நிதியை செலவிடும் என கூறியுள்ளது. இது இன்று தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களை வாரத்தின் எல்லா நாட்களும், 24 மணி நேரமும் மகப்பேறு வசதிகளை அளிக்க கூடுதலாக 3 செவிலியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களை 30 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைகளாக தரம் உயர்த்துவ்து, ரத்த சோகையை தடுக்க கூடுதல் ஊட்டச் சத்து மேலாண்மை, ரத்த சேமிப்பு மையங்களை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாடு சுகாதார நலத்திட்டத்திற்கு 194 கோடி ரூபாய்கள் ஒதுக்கியுள்ளது. இவற்றில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவமனைகளுக்கு இடையேயான சேவையாக அதிகப்படுத்துவதும், மலைவாழ்மக்கள் வாழிடங்களுக்கு சிறப்பு ஊர்திகளையும், பச்சிளங்குழந்தைகளின் அவசர கால தேவைகளுக்கு மாவட்டந்தோறும் ஒரு ஊர்தி தனியாக இயக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கதக்கதாக இருந்தாலும், மருத்துவர்களை கூடுதல் படுத்துவதும், தரமான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடின்றி கிடைக்க செய்வதும் முக்கியமானது. அதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் அழுத்தம் தேவைப்படுகிறது.

ரத்த சுத்திகரிப்பு அலகு, மின் ஒலி இதய வரைவு, டிஜிட்டல் எக்ஸ்ரே, மார்பக ஊடுகதிர்பட சோதனை, மோடுலர் வகை மல்டிபேரா மானிட்டர்கள், வெண்டிலேட்டர், விஷ முறிவு சிகிச்சைக்கான உயிர் காக்கும் உபகரணங்கள் ஆகியவை தமிழ்நாடு சுகாதார நலத்திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் ஒதுக்கி தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளே பலவற்றில் மேற்கண்ட எந்தவகையான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் வட இல்லாமல் பல்லை இழித்துக் கொண்டு உள்ளது. இருக்கும் இடத்திலும் அதற்கான போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாத நிலையும் உள்ளது. இதனை போக்குவதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லை.. குறிப்பாக அரசு - தனியார் கூட்டு முயற்சியில் அதி நவீன ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும் என்பது மருத்துவம் காசு உள்ளவர்களுக்கே என்ற நிலையை நோக்கியே செல்லும். எனவே அரசு இதில் கூடுதல் நிதி ஒதுக்கி செய்திட வேண்டும்.

நடமாடும் மருத்துவமனை

எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனை என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது நல்ல முயற்சி.. சுற்று முறையில் சென்று சிசிக்சை அளிப்பதோடு நில்லாமல், அவசர காலத்தில அழைப்புகளுக்கு செவி சாய்த்து உடன் செல்லும் மருத்துவக்குழுவாக இதன் செயல்பாட்டை உருவாக்க வேண்டும். மலை வாழ் மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடமாடும் மருத்துவமனையை கூடுதல் படுத்த வேண்டும்..

சுகாதார மையங்கள் மேம்பாடு

ஆரம்ப சுகாதார மையங்கள், துணைசுகாதார மையங்கள், தாலூக்கா மருத்துவமனைகள் மற்றும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவித்த அதிமுக அரசு தற்போது ஒரு சில அறிவிப்புகளோடு நின்றுவிட்டது. அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், காலியாக உள்ள அனைத்துப்பிரிவு பணியிடங்களை நிரப்ப எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது பெருத்த குறைபாடே ஆகும். கடந்த திமுக ஆட்சியில் 2010-2011 ஆம் ஆண்டுக்கு 5.83 ( 3888 கோடி ரூபாய் ) விழுக்காடு நிதி சுகாதாரத்துறைக்கு அரசு ஒதுக்கியது. 2011-2012 ஆம் ஆண்டுக்கு 4761 கோடி ரூபாய் நிதி சுகாதாரத்துறைக்கு அதிமுக அரசு ஒதுக்கியது. இதனை கூடுதல் படுத்திட வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள பெரும் பகுதி மக்கள் இன்றும் ஆரம்ப சுகாதார மையங்களையும், அரசு மருத்துவமனைகளையும் நம்பியே உள்ளனர். அந்த மருத்துவமனைகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தரமான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கிட முடியும். தற்போதும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் மருத்துவர்களோ, ஊழியர்களோ, அடிப்படைக்கட்டமைப்புகளோ இல்லாத நிலையில் உயிரை பாதுக்காக்க தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் தினமும் ஒட வேண்டிய அவல நிலை உள்ளது.

சமவெளிப்பகுதியில் 30000 மக்களுக்கும், மலைப்பிரதேசங்களில் 20000 மக்களுக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், சமவெளிப்பகுதியில் 5000 மக்களுக்கும், மலைப்பிரதேசங்களில் 3000 மக்களுக்கும் ஒரு துணை சுகாதார மையங்களும் என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரைகள் உள்ளது. தமிழகத்தில் 1539 ஆரம்ப சுகாதார நிலையங்களே உள்ளது. ஆனால் 30000 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் என்றால் 2403 மையங்கள் இருக்க வேண்டும். 864 ஆரம்ப சுகாதார மையங்கள் பற்றாகுறையாக உள்ளது. அதேபோல் துணை சுகாதார மையம் 5000 பேருக்கு ஒன்று என்றால் இன்று 14420 மையங்கள் இருக்க வேண்டும். தற்போது 8706 துணை சுகாதார மையங்களே உள்ளன. இதிலும் 5714 மையங்கள் பற்றாகுறையாக உள்ளன.

ஆகவே நடைமுறையில் தமிழகத்தில் இன்றும் நடந்து செல்ல சாலை வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மலைகிராமங்களும், வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு கிராமங்களும் உள்ளது. இதிலும் 5,000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் இருக்க வேண்டுமென்பது கூட பல இடங்களில் 30 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகைக்குத்தான் ஒரு சுகாதார நிலையம் இயங்குகிறது. அதிலும் போதிய ஊழியர்கள் இல்லாத நிலைமை. 7 படுக்கைக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும். அதுவும் பின்பற்றப்படுவதில்லை.

எனவே 40000க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டுள்ள தமிழகத்தில் ஊராட்சிக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் என்கிற அடிப்படையில் துவங்கிட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மலைப்பகுதிகளில் 500 மக்களை உள்ளடக்கிய அருகாமை கிராமங்களை கொண்ட பகுதிகளில் துணை சுகாதார மையங்களை அமைத்திட வேண்டும்.

எய்ம்ஸ் தரத்தில்

இன்றைய மக்கள் தொகை வளர்ச்சி, வேகமான நகரமயமாதல் சூழல், புவி வெப்பமயமாதலால் உருவாகும் புதிய புதிய நோய்களின் தாக்குதல், போதுமான வருமுன் காப்பு திட்டங்கள் என்றால் மேற்சொன்ன நிதி என்பது போதுமானதல்ல.. கட்டாயம் கூடுதல் படுத்தப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.. மேற்படி நிதி நிலையில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசின் கீழ் உள்ள பல்துறைகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

உதாரணத்திற்கு பல ஆரம்ப சுகாதார மையங்கள் கட்டப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அதை உடன் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதனை பயன்படுத்த உரிய அனுமதியும் ஆய்வும் நடத்தாமல் காலம் கடத்தியதை பார்க்க முடியும். சேலத்தில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெசலிட்டி மருத்துவமனை 146 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு கட்டி இன்றும் பயன்படுத்தப்படாமல் முட்புதர்கள் மண்டிகிடக்கும் அவலத்தை தற்போதும் பார்க்க முடியும்..

புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக்கழக ( எய்ம்ஸ் ) மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தினை நவீன வசதிகளோடு கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை போன்று மாற்றப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளதையும், திருச்சியிலும் 100 கோடி ரூபாய் செலவில் நவீன மருத்துவமனை கட்டப்படும் என நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அனைத்து அரசியல் கட்சிகளும் திமுக தவிர வரவேற்றுள்ளது. ஆனால் ஏற்கனவே இதே தரத்துடன் சேலத்தில் 11 மாவட்டங்களில் உள்ள மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை எய்ம்ஸ் தரத்தில் அமைக்கப்படும் என 146 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் உள்ளிட்டு அனுமதிக்கப்பட்டு அள்ளி தெளித்த அவசர கோலத்தில் கடந்த திமுக ஆட்சியாளர்களால் அவசர அவசரமாக திறக்கப்பட்டது. இன்றைய ஆட்சியாளர்கள் போதிய அளவு பணிகள் நிறைவு பெறவில்லை என மருத்துவமனையை பூட்டி விட்டார்கள். மூன்று மேல் தளங்களை கொண்ட இந்த மருத்துவனையில் 441 படுக்கை வசதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதில் 319 படுக்கைகள் சிறப்பு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம், கரூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1.1/2 கோடி மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தற்போது மூடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் பூர்த்தியடையாத பணிகளை உடன் நிறைவு செய்து அதனை மக்கள் பயன்படுத்திடும் வகையில் திறந்திட வேண்டும். மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, இராமநாபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையை மையப்படுத்தி தற்போது கட்டப்பட்டு வரும் அரசு இராஜாஜி மருத்துவமனையை எய்ம்ஸ் தரத்திற்கு உயர்த்திடுவது ஒட்டு மொத்த தமிழகத்தின் சென்னை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய நான்கு முனைகளில் தரமான மருத்துவ வசதி அனைத்துபிரிவினருக்கும் கிடைக்க வழி ஏற்படும்.

மாவட்ட மருத்துவமனைகளில் கட்டண பிரிவு, கட்டணமில்லாத பிரிவு என 2 பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது பொது சுகாதாரக் கோட்பாடிற்கு முரணானது. சமீபத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் விரிவுபடுத்தப்பட்ட கட்டடத்தில் அமையபெற்ற 300 படுக்கைகளில் 100 படுக்கைகள் கட்டண பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கைவிடப்பட்டு, அனைத்து படுக்கைகளையும் இலவச பிரிவாக அறிவித்து தரமான மருத்துவ சேவை வழங்கிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட மருத்துவமனைகள்

இன்று பெரும் பகுதி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இருதய சிகிச்சை பிரிவு, சிறுநீரகத்துறை, மகப்பேறு, நரம்பியல்துறை, விபத்து சிசிக்கைப்பிரிவு, எலும்பு முறிவு போன்ற பிரிவுகளுக்கு தேவையான நவீன உபகரணங்கள், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், மருந்துப் பொருட்கள், செவிலியர்கள், ஆய்வக நிபுணர்கள், உதவியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் அறுவை அரங்குகள் உள்ளனவா? என்றால் போதுமானஅளவு இல்லை. இதனால் பராமரிப்பும் போதிய செயலின்மை காரணமாக அரசு மருத்தவமனைகள் சுகாதார கேட்டில் சீரழிந்து வருகின்றன.

துல்லியமான ஸ்கேன் கருவிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை எனவே வெளியே தனியார் ஸ்கேன் சென்டர்களில் எடுக்க சொல்வது ஏறத்தாழ 80 சதத்திற்கும் கூடுதலாக மேற்படி துறைகளில் உள்ளது. இது சாதாரண ஏழை எளிய மக்களுக்கு பல்லாயிரக்கணக்கான செலவுகளை அறுவைச் சிகிச்சைக்கு முன்பே ஏற்படுத்துகிறது.

உதாரணத்திற்கு சி.டி ஸ்கேன் அரசு மருத்துவமனையில் 300 முதல் 500ரூபாய்க்கு எடுக்கப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்களில் 1500 முதல் 2500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதே போல் எக்ஸ்ரே வசதி அரசு மருத்துவமனையில் இருந்தாலும் போதுமான அளவு அதற்கான தொழில்நுட்ப வல்லூனர்கள் மற்றும் புகைப்படச் சுருள்கள் இல்லாததால் கடுமையான சிரமத்தை பெரும் பகுதியினர் சந்திக்கும் நிலை உள்ளது.

32 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 7 மருத்துவமனைகளில் மட்டுமே எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல கூறு ( 64கூறு ) சி.டி ஸ்கேன் வசதியும் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலேயே செயல்படுகிறது. இதே போல் சிறுநீரக அறுவை சிகிக்சைக்கு பயன்படும் சிறு நீர் கல் உடைக்கும் `` லித்தோட்ரிப்சி '' கருவி மதுரை மற்றும் சென்னை அரசு மருதுவமனைகளில் மட்டும் கடந்த 2007ம் ஆண்டு தலா ரூ 1.5 கோடி மதிப்பில் 3கோடி ரூபாய்க்கு பொருத்தப்பட்டது. இந்த லித்தோட்ரிப்சி கருவி உள்ளிட்டு சிகிச்சை வசதி ஏற்படுத்த ஒரு மருத்துவமனைக்கு ரூ 1.5 கோடி மட்டுமே செலவு ஆகும என்றால் ரூ 80 கோடி நிதி ஒதுக்கினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய 32 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் இதற்கான வசதியை உருவாக்கிட முடியும்.

கூடுதலாக செய்ய வேண்டியது

· மருத்துவம் சார்ந்த அடிப்படை கல்வியையும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் கொண்டு செல்லும் வகையில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

· அனைத்து மாவட்டத்திலும் மருத்துவகல்லூரிகள் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

· இரத்த உறையாமையால் ( Haemophilia ) பாதிப்புக்குள்ளாகும் ஏழை நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருந்துகளை தொடர்ந்து வாங்கி பயன்படுத்த இயலாத நிலையில் அவர்களுக்கு அந்த மருந்துப்பொருட்களை இலவசமாக அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களிலேயே தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

· குறிப்பாக தமிழகத்தின் பெரும் பகுதி மருத்துவமனைகளில் ஆய்வக நிபுணர்கள், துப்புரவு பணியாளர்கள், உதவியாளர்கள் என்பது தற்காலிக பணியாளர்களாக மிகச் சொற்பான சம்பளத்தில் நியமிக்கப்படுகிறார்கள். துப்புரவு பணியாளர்களில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கபடுபவர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. இது அவர்களின் தினசரி வாழ்க்கையை நடத்த போதுமான ஊதியமல்ல. எனவே அவர்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் கையூட்டு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். எனவே மருத்தவமனைகள், சுகாதார மையங்களில் கூடுதலான ஊழியர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்.

· சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது "மக்கள் சுகாதார ஆய்வாளர்கள்'. "ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள்' எனப்படும் இந்த சுகாதார ஆய்வாளர்களின் பணியிடங்கள் 50 சதவீதம் மேல் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

· அவசர சிகிச்சையின் பெயரால் மனித உயிர்களோடு விளையாடும் தனியார் மருத்துவமனைகளின் தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அந்த மருத்துவமனையின் நிர்வாகிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும்.

· வெளிநாடுகளில் தடை செய்யப்பட் மருந்துப் பொருட்களை தமிழத்தில் விற்பனையாவது குறித்து ஆய்வு நடத்தி அந்த மருந்து பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பட்டியல் வெளிடுவதும், நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமானது.

No comments:

Post a Comment