”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

மறுக்கப்படும் மனித உரிமைகள்.

இந்தியாவில் 6 லட்சம் பேர் மனித மலத்தை அப்புறப்படுத்தும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 1993ல் நாடாளுமன்றம்இத்தொழிலைத் தடை செய்து சட்டம் இயற்றியது (கையால் மலம் அள்ளுவோர் பணிநியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள் (தடுப்பு) சட்டம்). 1994ல் பெங்களூரில்இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் அனைத்தும் தண்ணீர் விட்டுக்கழுவும் வகையில் மாற்றம் செய்யப்பட்டன.


அந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் வேறு பணியில் மாநகராட்சி அமர்த்திக்கொண்டது. 1993ல் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பொழுதும்கூட, அது 1997வரை இந்திய அரசிதழில் (Gazetter of India) அறிவிக்கப்படவில்லை.

மனித மாண்புகளை உயர்த்தி பிடிப்பதாக வாய்கிழிய பேசும் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் மம்தா மாவோயிஸ்ட் தீவிரவாதிகளோடு உரையாடவே நேரம் சரியாக இருக்கிறது. ரயில்வே துறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஈவு இரக்கமற்ற உழைப்பு சுரண்டல் மட்டுமல்லாது மலத்தை அள்ளும் பணியில் ஈடுபடுததப்படும் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலையை பற்றி எந்த அக்கறையும் கொண்டதாக தெரியவில்லை.

ரயில்வேயில் உள்ள 40,000 பெட்டிகளிலிருந்து தினந்தோறும் 2.74 லட்சம் லிட்டர் மலம் வெளியேறுகிறது. உ
ச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்டித்தும் ரயில்வே நிர்வாகம் செவிசாய்ப்பதாக இல்லை 40,000 பெட்டிகளில் இதுவரை 261 பெட்டிகளில் மட்டுமே கலன்கள்பொறுத்தப்பட்டுள்ளன. 5 ரயில் நிலையங்களில் மட்டுமே முற்றிலும் நீராலான கழுவும் (Aprons) வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் 6856 ரயில் நிலையங்களில்
145 ரயில் நிலையங்களில் தண்ணீரைப் பீச்சி அடித்து மலத்தை அகற்றி சாக்கடையில் தள்ளும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையை மாற்ற நிறைய செலவு ஆகும், ரயில்வேயிடம் அவ்வளவு பணம் இல்லை என்கின்றனர். இதை சொல்ல அரசு எதற்கு?. 2010ல் நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளை முன்னிட்டு தில்லியைச் சுற்றியுள்ள 18 ரயில் நிலையங்களை அழகுப்படுத்த 4000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கிறது. இதற்கு எங்கிருந்து பணம் வந்தது.

இந்தியாவில் மட்டும் பாதா சாக்கடைகளில் இறங்கி விஷ வாயுக்கள் தாக்கி இறப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொழில் சார் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 22,000 பேர் என ஒருஆய்வுகூறுகிறது..
சென்னையில் மட்டும் 2800 கிமீ நீளத்திற்கு பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி, கருவிகள் என எதுவும் இங்கு வழங்கப்படுவதில்லை.

1912ல் காலனிய முனிசிபாலிட்டி திட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒருவெள்ளைய அதிகாரி கூறினார், நமக்கு தேவை மிகவும் அருமையான சுகாதாரநடைமுறைகள் அல்ல, மாறாக குறைந்த செலவிலான திட்டங்களே. அந்தமனநிலைதான் இன்றும் நம் மத்தியில் புழங்குகிறது. மக்களுக்கான திட்டங்கள் என வரும் போது மனித மாண்புகளுக்கு மதிப்புடைய வழிமுறைகளைவிட, மலிவான நடைமுறைகளையே ஆளும் அரசுகள் தேர்வு செய்கிறது. ஆனால் இறந்து போனவர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதில் இருந்து கக்கூஸ் கட்டுவது வரை அனைத்திலும் கமிஷன் பார்க்கும் ஆட்சியாளர்கள் காலம் காலமாய் இந்த சிந்தனையோடே இருந்து வருகின்றனர்.

மலம் அள்ளுவதைவிடக் கொடுமையானது நிலத்தடி மலத்தொட்டிகளை(Septic Tank) அப்புறப்படுத்தும் பணி. நம் சுற்றத்தில் மிக சகஜமாக இந்தப் பணிநடைபெறுகிறது. விஷ வாயுக்கள் நிரம்பிய தொட்டிகளில் இறங்கி வாளியால் அள்ளி ட்ரம்களில் நிரப்பி ஊருக்கு வெளியே அப்புறப்படுத்தி வருவார்கள்.

ஹாங்காங்கில் பாதாள சாக்கடையில் இறங்கு பவர் 15 விதமான உரிமங்களை பெற்றிருக்க வேண்டும். அத்தோடு அவருக்கான பாதுகாப்பு கவசம் விண்வெளிக்கு செல்பவருக்கு ஒப்பான உடைகள் அளவுக்கு வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடை நன்கு ஒளியேற்றப்பட்டுள்ளன. காற்றோட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

மலம் அள்ளுதலை யாரும் விருப்பத்துடன் செய்ய இயலாது. சமீபத்தில் நரேந்திரமோடி மலம் அள்ளுதல் ஒரு ஆன்மீகத் தொண்டைப் போன்றது என்றார். ஏறக் குறைய காந்தியும் இதை ஒத்த கருத்தையே முன்வைத்தார். சுத்தம் செய்யும் பணி தெய்வீகமானது, ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்யும் சேவையைப் போன்றது என்றார். மனித தன்மையற்ற இந்த செயலுக்கு இது போன்ற வியாக்கினங்கள் தீர்வாக இருக்க முடியாது. சுகாதாரத்தை அனைவரும் கடைபிடிக்க அவரவர் வீடுகளில், குடியிருப்பு பகுதிகளில் போதுமான கழிப்பறை வசதிகளை உருவாக்கிட அரசே நிதி ஒதுக்கிட வேண்டும்.


மொத்தம் உள்ள 602 மாவட்டங்களில் தற்சமயம் 140 மாவட்டங்களில் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இழிவைப் போக்குவதற்கு அவர்களுக்கு சுயமரியதையுடன் கூடிய மாற்று வாழ்வுரிமைகளை பெற்றுத் தருவது. தில்லியில் இருக்கும் மைதானங்களை பராமரிக்கவே பலஆயிரம் கோடிகளை அடித்த வரலாறும் தற்போதைய இந்திய அரசியலை நாற்றெமெடுக்க செய்து வருகிறது. பிரதமரும் ஊழலும், லஞ்சமும் இந்தியாவின் புகழை மங்கச் செய்கிறது என ஆதங்கப்படுகிறார். அவர் வீடு இருக்கும் டில்லியில் இன்று மலம் அள்ளும் சக மனிதர்களின் வேதனையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வாழ்வுரிமை திட்டங்களுக்கு பணம் கூடுதலாக ஒதுக்க மறுக்கிறது. ஒதுக்கிய பணம் வேறு வகைகளுக்கே கூடுதலாக செல்கிறது.


இப்படிப்பட்ட மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக போராட வேண்டியது இன்றைய சமூகத்தின் கடமையாகும். அதற்கான அமைப்புகள் இன்றும் சமூக நீதி, அரசியல், சமூக, பொருளாதார தளத்தில் சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இடதுசாரி அமைப்புகள் போராடுகின்றன. அத்தோடு மனித உரிமைக்காக போராடுபவர்களும் கைகோர்த்து போராடுவதே மாற்றத்தை உறுதி செய்யும்.

No comments:

Post a Comment