”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

உலகெங்கும் ஒரே மொழியில் பேசுபவை புத்தகங்கள் மட்டுமே!



நீதிபதி ராமசுப்பிரமணியம் இலக்கிய சொற்பொழிவு
திருப்பூர், ஜன.27-
உலகெங்கும் பல்வேறு வேறுபாடுகளைத் தாண்டி ஒரே மொழியில் பேசக்கூடிய சக்தி புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் கூறினார்.
9வது திருப்பூர் புத்தகக் கண்காட்சி - 2012ன் இரண்டாம் நாள் நிகழ்வாக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் 20வது இலக்கிய விருதுகள் வழங்கும் விழா வியாழனன்று நடைபெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் ஏ.முருகநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் 2010ம் ஆண்டுக்கு சிறந்த படைப்பாளிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி நீதிபதி ராமசுப்பிரமணியம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
நூல்களைத் தொடர்ந்து படிப்போருக்கு ஆண்டொன்று போனால் வயதொன்று குறையும்! அந்த அளவுக்கு மனதை இளமையாக வைத்திருக்க நூல்கள் துணை செய்யும். இலக்கியத் தாகம், இலக்கியத் தாக்கம், இலக்கிய நோக்கம் இல்லாமல் ஒரு மனிதன் இருக்க முடியாது. சில புத்தகங்கள் கடந்த கால வரலாற்றைப் பதிவு செய்கின்றன. ஆனால் சில புத்தகங்கள் எதிர்கால வரலாற்றை உருவாக்குகின்றன. நாடு, மதம், இனம், மொழி, நிறம், பண்பாடு என எல்லாவற்றையும் தாண்டி உலகெங்கும் ஒரே மொழியில் பேசக்கூடியவை புத்தகங்கள் மட்டுமே! ஜெர்மனியில் பிறந்து லண்டன் நூலகத்தில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் படித்து கார்ல் மார்க்ஸ் உருவாக்கிய மூலதனம் புத்தகம் ரஷ்யாவிலும், சீனாவிலும் புரட்சியை ஏற்படுத்தியது.
ஒரு கவிதையால் ஐம்பதாண்டு கால வரலாற்றைக் கூட நான்கே வரிகளில் பதிவு செய்ய முடியும். அமெரிக்காவில் 1960ம் ஆண்டு வரை இனஒதுக்கல் நடைமுறை இருந்தது. ரோசா பார்க் எனும் கருப்பினப் பெண் பேருந்தில் அமர்ந்து சென்றபோது வெள்ளையர்கள் இன ஒதுக்கலைக் கடைபிடித்ததால் அங்கே மார்டின் லூதர் கிங் தலைமையில் பெரும் போராட்டம் வெடித்தது. ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற போது, 19 வயதே ஆன பெண் ஒருவர், கருப்பின மக்கள் நடத்திய அந்தப் போராட்ட வரலாற்றைப் பற்றி அற்புதமாக கவிதை வடித்தார். "ரோசா பார்க் அமர்ந்தார், லூதர் கிங் நடந்தார், ஒபாமா ஓடினார், நாளை எங்கள் குழந்தைகள் பறப்பார்கள்!" என்ற அந்த கவிதை மிகவும் புகழ் பெற்றது.
சாதாரண கடிதங்களில் பிறக்காத இலக்கியம் உண்டா? ஒரு சம்பவத்தை நாம் பார்க்கும் பார்வையில் தான் இலக்கியத்தன்மை பொதிந்திருக்கிறது. நம் கடந்த கால வரலாற்றை நாம் என்றைக்கு மறந்த போகிறோமோ, அன்றைக்கு நமது எதிர்கால வரலாற்றைப் படைக்க முடியாதவர்களாக மாறிவிடுகிறோம். மிக உயர்ந்த கவிதை என்பது பாதியை கவிஞன் சொல்ல வேண்டும், மீதியை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகெங்கிலும் இந்தியாவைப் போல் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை பறைசாற்றி, ஏற்றுக் கொண்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு நாடு இருக்க முடியாது. நம் நாட்டைப் பாதுகாப்போம். இவ்வாறு நீதிபதி ராம சுப்பிரமணியம் கூறினார்.

No comments:

Post a Comment