காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் மொத்தம் உள்ள 1750 தொழிலாளர்களில் சுமார் 1450 தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள ஆட்சியாளர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி அதிக லாபம் ஈட்ட ஆதரவு அளித்து வருகின்றனர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் அதற்கு எதிராகத்தான் தங்களது உரிமைகளை பாதுகாக்க போராடி வருகிறார்கள்..
நியாயத்தின் பக்கமா மாநில அரசு ?
கடந்த 17 ஆண்டுகளில் ஊதிய உயர்வு, பேருந்துவசதி, கழிப்பறை, கேண்டீன், திருமண, பேறுகால விடுப்புகள் என அடிப்படை கோரிக்கைகளோடு சங்கம் சேரும் உரிமை. இவையே சாம்சங் தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகள். இதற்காக 32 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டிய மாநில அரசு சாம்சங் முதலாளிகள் பக்கம் நிற்கிறதா ? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
தொழிற்சங்கத்தோடு பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு, தொழிற்சங்க தலைவர்களையும் வைத்துக்கொண்டு ஊடகங்களை சந்திக்க வேண்டிய மாநில அரசின் அமைச்சர் பெருமக்கள் சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்க கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணத்தை சாம்சங் தொழிற்சாலையில் இருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட சில நிறுவன ஆதரவு தொழிலாளர் களை கையில் வைத்துக்கொண்டு சாம்சங் நிறுவனமும், அமைச்சர்களும் ஒரு உடன்பாடு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிடுவது கண்டனத்துக்குரியது, நாட்டுமக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது ஆகும். உரிமைக்காக போராடும் தொழிலாளர்களை ஏமாற்றும் சூழ்ச்சியும், துரோகமும் ஆகும்.
அதுமட்டுமின்றி, சாம்சங் நிர்வாக அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று தொழிலாளர்கள் குடும்பங் களின் பெண்களிடம், உங்கள் கணவரை, மகனை, சகோதரனை சங்கத்தில் இருந்து விலகச் சொல்லுங்கள், இல்லையேல் பணிநீக்கம் செய்து விடுவோம் என மிரட்டி இருப்பதும், இதற்கு காவல்துறை துணை போவதும் ஜனநாயக விரோதப் போக்கு ஆகும்.
நோ யூனியன் உண்மையா ?
தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் என்பது கொரியாவில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் சங்கம். கடந்த 70 நாட்களுக்கு மேலாக ஊதிய உயர்வு கேட்டு போராடுகிறார்கள்.. கொரியாவின் பெரிய தொழிற்சங்கமாக 30000 பேர் இதில் உள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக பல நாடுகளில் ஆதரவு இயக்கங்களும் நடந்துள்ளது. கொரியாவில் எப்படி சாம்சங்கில் தொழிற்சங்கம் உள்ளது.
No union என்பது சாம்சங்கின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் அது ஐக்கிய நாடுகள் வரையறுத்த மனித உரிமை சார்ந்த, சர்வதேச தொழிலாளர் அமைப்பு ( ILO) வகுத்த தொழிலாளர் நல சட்டங்களை மதித்து நடப்போம் என உறுதி கூறிவிட்டு, அதற்கு மாறாக சாம்சங் நிறுவனம் உலகம் முழுவதும் பல நாடுகளில் பல கார்ப்ரேட் நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்களை பிளவுப்படுத்துவது, அதற்காக சட்டத்திற்கு புறம்பான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுவது வருவது கடும் எதிர்ப்புக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. தற்போது சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர் லீ ஜே யங் ( Lee jae yong ) இதற்காக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்..
நிறுவனத்தின் மூதலீட்டில் மட.டும் ஒரு நிறுவனம் வளர்ச்சி பெற முடியாது. மகத்தான தொழிலாளர்களின் உழைப்பு சக்தி, மண்வளம், இதர இயற்கை ஆதார வளம், அரசின் சலுகைகள் அனைத்தும் உள்ளடக்கியது தான் வளர்ச்சிக்கான ஆதாரம். இந்தியாவில் உள்ள நிறுவனம் எனில் அது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டது தான்.. சாம்சங்கிற்கான தனிசலுகையல்ல..
மேலும் சந்தையில் போட்டியை சமாளிக்க தனது லாபத்தை குறைப்பதற்கு பதில் உற்பத்தி செலவை குறைக்க நினைக்கிறார்கள்.. அதன் துவக்கமே தொழிலாளர்களின் ஊதிய உயர்வை வெட்டி சுருக்குவது, இதர பணப்பயன்களை குறைப்பது, உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது என்ற வர்க்கச் சுரண்டலை தீவிரமாக்குகிறார்கள்.. இதனை பல காலம் பொறுத்திருந்து கஷ்டப்பட்டு நொந்து நூலாகி வேதனைப்பட்ட தொழிலாளர் கூட்டம் விழிப்புணர்வு பெற்று தனக்கான சங்கம் வேண்டுமென கருதுகிறார்கள். தற்போது சங்கம் வேண்டும் என கோருகிறார்கள்.. இதில் என்ன தவறு. காஞ்சிபுரம் உள்ளிட்டு நாட்டில் உள்ள ஏராளமான கார்ப்ரேட் நிறுவனங்களில் தொழிற் சங்கங்கள் உள்ளன. இதனால் கார்ப்ரேட் நிறுவனங்கள் வேறுபகுதிக்காக சென்று விட்டன. இல்லை இன்றும் திருபெரும்புதூரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சர்வதேச சட்டங்களானாலும், இந்திய சட்டத்தின் படியும் தொழிலாளர்களை கட்டுபடுத்த முடியாது. சங்கம் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமை.. அது சலுகையோ, பிச்சையோ அல்ல.. கார்ப்ரேட் முதலாளிமார்கள் துவங்கி உள்ளூர் முதலாளிமார்கள் வரை சங்கம் வைத்துக் கொண்டு அரசிடம் கோரிக்கை வைக்க உரிமை உள்ளது. ஆனால் தொழிலாளிக்கு இல்லையா ? அரசை நடத்தும் அதிகார வர்க்கங்களில் ஆட்சிப்பணி, காவல்பணி அதிகாரிகள் சங்கம் வைக்கலாம்.. உழைக்கும் மக்களுக்கு இல்லையா ? தற்போதைய பிரச்சனை என்ன ?
கார்ப்ரேட் இடப் பெயர்வு எதனால்* ?
பாக்ஸ்கானும், நோக்கியோவும் ஓடி போனது தொழிலாளர்களின் போராட்டத்தால் அல்ல, அரசுக்கு கட்ட வேண்டிய வரியை கட்டாமல் ஏமாற்றி ஓடியது. கார்பரேட் கூட்டு களவாணி ஒன்றிய அரசின் கையாலகாத நடவடிக்கையால் கட்டுப்படுத்தி நிறுத்தி வைக்க முடியாத கையறு நிலையால். எங்கள் நாட்டின் சலுகைகளை, வளங்களை அனுபவிப்பாய், ஆனால் தொழிலாளிக்கு உரிய பயனை தரமாட்டாயா ? என கேட்க திரணியற்று தேர்தல் பத்திரங்களில் நிதியை பெற்றுக் கொண்டு அரசுக்கு கட்டவேண்டிய வரியை கட்டாமல் பின் வாசல் வழியாக ஒடிய நிறுவனங்களை தொழிலாளர்களின் போராட்டத்தின் மூலம் போய்விட்டது என்ற கார்ப்ரேட் அடிவருடிகளின் விஷமப்பிரச்சாரம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்.. நீரவ் மோடி துவங்கி விஜய்மல்லையாவரை அரசையும், வங்கிகளையும் ஏமாற்றி ஓடினார்களே தொழிலாளிகளின் போராட்டத்தாலா?
வேடந்தாங்கல் பறவைகளை போல கார்ப்ரேட்டுகள் இந்திய வளங்களையும், உழைப்பு சக்திகளையும் சுரண்டி கொழுத்த தனது லாப பெருக்கத்திற்காகத் தான் வருகிறார்கள்.. அது குறையும் போது வேறு இடத்திற்கு செல்ல நினைக்கிறார்கள்.
இந்திய வளங்களில் லாபத்தை பெருக்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தங்களுடைய முதலீட்டிற்கு மேல் லாபத்தை பெருக்கியவர்கள் இந்திய அரசிடம் அந்த நிறுவனங் களை ஒப்படைத்து விட வேண்டும் அது இந்திய உடைமையாக்கப்பட வேண்டும் என்று இந்திய தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
சங்கம் வைத்தால் தொழில் அழியுமா ?
தொழிற்சங்கம் வைத்தால் தொழில் அழிந்துவிடும் என பரப்பப்படும் அவதூறு -?
உண்மையில் உதாரணத்திற்கு, இந்திய பஞ்சாலைகளின் நெருக்கடிக்கு காரணம் அரசின் கொள்கைளே காரணம். மூலப் பொருட்களின் விலை உயர்வு, நிரந்தரமற்ற தன்மை, அரசின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வரிக் கொள்கை, சந்தை, மின்கட்டணங்கள் உயர்வு, சொத்துவரி உள்ளிட்டு காரணங்களால் மூடப்பட்டன. உற்பத்தி செலவை குறைக்க தொழிலாளர்கள் ஊதியத்தை குறைத்து பின் கட்டாய பணி ஒய்வு கொடுத்து வெளியேற்றி நிறுவனத்தை மூடினார்கள் என்பதே உண்மை..
வேலையின்மையின் கொடுமை கொத்தடிமைகளை போல தொழிலாளர்கள் உழைப்புச் சந்தைக்கு தள்ளப்பட்டனர். இதில் வாய்ப்புள்ள முதலாளிகள் நிலைமைக்கேற்ப பஞ்சாலைகளை நவீனப்படுத்திக் கொண்டார்கள். உழைப்புசந்தையில் தொழிலாளர்களை சரக்குகளை போல எடுத்து வந்து குறைந்த ஊதியத்தில் வேலை வாங்குகிறார்கள். விலைவாசி உயர்வும், வாழ்வியல் நெருக்கடியும் கூட்டு சேர்ந்து பேரம் பேசும் உரிமைக்கு தள்ளுகிறது. அதற்கான வடிவமாய் சங்கத்தை பார்க்கிறார்கள். தொழிலாளி சங்கம் வைத்ததால் தொழிற்சாலை அழிந்தது என்றால் இல்லாத தொழிலுக்கு பஞ்சாலை உற்பத்தியாளர்கள் சங்கம் எதற்கு ?
சங்கமே துணை ! பொதுத்துறையை பாதுகாக்கிறது !
தற்போதுகூட இந்திய உழைப்பாளி மக்களின் பொருளாதார சேமிப்புகளை கார்ப்ரேட் லாபநலனுக்காக பங்கு சந்தையில் முதலீடு செய்வதும், உழைத்து ஒய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளிக்கு 100 மாதம் ஆனாலும் அவர்களின் பணப்பயணை மறுப்பதும், எல்ஐசி நிறுவனம் தனது வர்த்தகத்தின் மையமான முகவர்களின் கமிஷன் தொகையை குறைத்து நிறுவன லாபத்தொகையை உயர்த்தி கார்ப்ரேட் நலனுக்காக பங்கு சந்தையில் முதலீடு செய்வதும் எந்த ஊர் நியாயம். இதே எல்ஐசி ரூ 5 கோடியில் 1956 ல் ஆரம்பித்து இன்று ரூ 52 லட்சம் கோடியில் உள்ளதென்றால் ஊழியர்களும், முகவர்களும் காரணம்.. வலுவான சங்க கட்ட அமைப்பே இன்றும் அதன் பணி கலாச்சாரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.. பிஎஸ்என்எல் உள்ளிட்டு ஏராளமான பொதுத் துறைகள் இன்றும் பாதுகாக்கப்பட்டது. எனவே தொழிற்சங்கம் என்பது வஉசியும், திலகரும், சிங்காரவேலரும் கட்டி எழுப்பியது..அதன் வழியில் இந்தியாவில் சங்கம் சேரும் உரிமையை நிலை நிறுத்த போராடுகிறோம்..
இப்படி சாதி, மதம், மொழி, வர்ணம் என அடையாளங்களை கொண்டு வெறுப்பு அரசியல் செய்யும் வலதுசாரி கூட்டம் தொழிலாளர்கள் உரிமைக்கு, தேச கட்டுமானத்திற்கு, மக்களின் உயரிய வளர்ச்சிக்கு போராடுபவர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது.. சீப்பை ஒழித்து வைத்து திருமணத்தை நிறுத்த நினைக்கும் அடிமுட்டாள் வேலையை வலதுசாரி ஆதரவு சக்திகளும், ஊடகங்களும் செய்கிறார்கள்.. பொய்கள் அலங்காரமாக பவனிவரும் போது உண்மை உறங்கிக் கிடக்காது. எரிமலையாய் வெடித்துக் கிளம்பும்..
ஒன்று சேர்வோம்..
எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக்குது.அதை எண்ணி எண்ணி தொழிலாளர் நெஞ்சு கொதிக்குது. பட்டினிக்கும் அஞ்சிடோம், பஞ்ச நோயுக்கும் அஞ்சிடோம், நெஞ்சினை பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்.. என்று கூறுவோமடா, ஒன்று சேருவோமடா. என்ற பாடல் வரிகளே உந்தித் தள்ளுகிறது.. அவதூறுகளை அழித்தொழித்து சங்கம் காணுவோமடா..
காடுவெட்டி மலை உடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்.. கவலையற்ற சுகவாழ்வை அனைவருக்கும் உரிமையாக்குவோம்.. என்ற சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் முழக்கத்தை உறுதி செய்வோம்..
- செ.முத்துக்கண்ணன்
No comments:
Post a Comment