”மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு,
அதை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதே நமது கடமையாகும்” சுதந்திரப்போராட்டம், சமூகசீர்திருத்தஇயக்கம், தொழிலாளிவர்க்க போராட்டம் மூன்றும் இணைந்த போராட்டங்களின்
களமே திருப்பூர் ஆகும். அப்படிப்பட்ட திருப்பூரின் வரலாற்றை சற்று திரும்பி பார்க்கும்
போது ஒன்று பட்ட கோவை மாவட்டத்தில் இருந்தே துவங்குகிறது.
சமூகத்தின் வளரும் சக்திகளில் பிரதானமான
சக்தி தொழிலாளி வர்க்கமாகும். கோவையின் பிரதான உற்பத்தி என்பது 1857க்கு முன்பு உணவு
தானிய உற்பத்தியே., அதற்கு பின்பு பருத்தி உற்பத்தியாகும். நூல் உற்பத்தியின் மூலப்
பொருளான தரமான பருத்தியை அன்று பிரிட்டிஸ் கம்பெனி இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்து
வந்தது. இதனை வேகமாக முன்னெடுத்து செல்ல புகைவண்டி
இருப்புப்பாதை சென்னையில் இருந்து மேட்டுபாளையத்திற்கு 1873ல் அமைக் கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஸ்டேன்ஸ் மில் என்று
அழைக்கப்பட்ட கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்டு விவிங் மில் 1888ல் துவங்கப்பட்டது. நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை கொடுக்க அரவைமில்களும்
படிப்படியாக துவங்கப்பட்டன. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் சுமார் 30 மில்கள் வரை துவக்கப்பட்டன. இதில்1937 வரை 10 மணி நேர வேலை என்பது கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கு எதிராகவும், கூலி உயர்வுக்காகவும்
விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்தது. இதன் பின்னணியில் “கோயமுத்தூர் மில்
தொழிலாளர்கள் சங்கம்” உருவானது. இதனை தொடர்ந்து இளைஞர் அமைப்பும் உருவாகத் தொடங்கியது.
இந்த சூழலில் இந்திய சுதந்திரப் போராட்ட
களத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுக்களின் செயல்பாடுகள் அதிக தாக்கத்தை உருவாக்கிய வண்ணம் இருந்தது. கோவையிலும், திருப்பூரிலும்
கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் 1940களில் உருவா னது. திருப்பூரில் தோழர்கள் ஆர்.கே.கண்ணன்,
சி.குப்புசாமி, சைமன்பால் கொண்ட கிளையாக உருவானது. உடுமலையில் ஆர்.ரத்தினம், பழனிசாமி,
நாச்சிமுத்து, எஸ்.ராமசாமி ஆகியோரை கொண்ட கிளையும் அதே காலத்தில் உருவானது.
தொடர்ச்சியாக தொழிலாளர்கள் உரிமை, கிராமப்புற
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கூலி பிரச்சனைகள் முன்னெடுத்த தருணத்தில் உலகளாவில்
பாசித்ததை எதிர்த்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்காகவும் போராட வேண்டிய
நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.
திருப்பூரில் 1932ல்
தனலட்சுமி மில் தொடங்கப்பட்ட பின் எஸ்ஆர்சி மில், ஆஷர் மில் துவங்கப்பட்டு வேலை
செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல் கோவை, மதுரை உள்ளிட்டு வெளிபகுதிகளில் இருந்து தொழிலாளர்கள்
பணியமர்த்தப்பட்டனர். அத்தருணத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய மேஸ்திரிகளால்
மிரட்டப்பட்டனர். கடிகாரத்தின் முள்ளை திருப்பி வைத்தனர். குறிப்பாக பெண் தொழிலாளிகள்
கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளானர்கள்.
இந்த கொடுமைக்கு எதிராக கோவை மில்தொழிலாளர்
சங்கத்தில் இருந்து தோழர் பி.ராமசாமி அனுப்பி வைக்கப்பட்டு திருப்பூர் பகுதியில் மில்
தொழிலாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
1940 ல் திருப்பூர் மில் தொழிலாளர் சங்கம், நகர சுகாதார தொழிலாளர்கள் சங்கம்
துவங்கப்பட்டன. 1942ல் 25 % யுத்தகால அலவன்ஸ் வேண்டி 39 நாட்கள் மில் தொழிலாளர்களின்
வேலை நிறுத்தப் போராட்டம் 12.5% யுத்த அலவன்ஸ்
பெற்று தந்தது. மில் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது பாதிக்கப் பட்டவர்களுக்கு பொதுமக்களிடம்
நிதி வசூலித்து நிவாரணம் வழங்கப்பட்டது.
100 பேர் சிறை சென்றதும், 200 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு பழிவாங்கப்பட்டனர்.
பழிவாங்கப்பட்ட தொழிலாளர்கள் சோர்ந்து வீடுகளில் அமர்ந்துவிடாமல் கலாஸ், ரைஸ்மில்,
பருத்தி அரவை தொழிலாளியாக சென்று வேலை செய்து கொண்டே சங்கம் குறித்த விழிப்புணர்வையும்,
ஒற்றுமையையும் கட்ட பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1942ல் சாக்கு தொழிலாளர் சங்கம், கலாஸ்
சங்கம், ரைஸ்மில் தொழிலாளர் சங்கம், பருத்தி அரவை மில் (ஜின்னிங் பேக்டரி) சங்கம், மக்கள் தொழிலாளர்கள் சங்கம், மளிகை தொழிலாளர், ஜவுளித்
தொழிலாளர், சோப்பு தொழிலாளர், தையல் தொழிலாளர், நெசவுத்தறி தொழிலாளர் என பல்வேறு பிரிவினருக்கான
சங்கங்கள் உருவானது. கூலி உயர்வும், வேலை நேரமும்
அடிப்படை பிரச்சனையானது. தையலில் கோட்டா மூலம் நூல் கிடைக்க ஏற்பாடும், நெசவாளர்களுக்கும் பெரும் முயற்சிக்கு
இடையே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வெளிச்சத்தில் தனலட்சுமி மில் தொழிலாளியும்,
ஊழியருமான சின்னசாமி அவர்கள் மீது காவல்துறை துப்பாக்கியால் சுட முயற்சித்தபோது அவரது
மனைவியும், தொழிலாளியுமான வள்ளியம்மாள் காவல்துறை அதிகாரியை சுட தடுத்ததால் நீதிமன்ற
விசாரணையில் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு மதுரை
சிறையில் 1946ல் அடைக்கப்பட்டு இருந்த போது தோழர் கே.பி.ஜானகி அம்மாள் அவரை சந்தித்து
எழுதப்படிக்க கற்றுக் கொடுத்து விடுதலைஅடைந்து வெளியே வரும் போது கம்யூனிஸ்டாக வெளியே
வந்தார். இது போன்று ஆண்களுக்கு இளைப்பில்லை பெண்கள் என்று கும்மி கொட்டு என சொன்ன
பாரதியின் வாரிசுகளால் ஏராளமான மில் பெண் தொழிலாளிகள் போராட்ட களத்தில் சிறைத்தண்டனை
பெற்ற வரலாறு திருப்பூரின் வரலாறு.
மில்களில் செங்கொடியின் செல்வாக்கை பொறுக்கமுடியாத
ஆளும் வர்க்கமும், முதலாளிகளும் செய்த சதியால் 1950 ஏப்ரல் 20 ஆஷர் மில்லில் 25 வயதே
நிரம்பிய தோழர் பழனிசாமி காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த காலகட்டத்தில்
தான் கம்யூனிஸ்ட்கள் மீதான நரவேட்டையை அன்றைய ஆளும் வர்க்கம் நடத்தியது.
1952ல் கோவை தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்களில்
ஒருவராக இருந்த தோழர் கே.எஸ்.கருப்பசாமி டெக்ஸ்டூல் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம்
செய்யப்பட்ட பின்னணியில் தொழிற்சங்க பணிக்காக திருப்பூரில் வந்து 1953 முதல் 57 வரை
அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்கம், சாயப்பட்டறை தொழிலாளர்கள் சங்கம், அச்சுப்பட்டறை
சங்கம், பருத்தி பொறுக்கும் தொழிலாளர்கள் சங்கம் போன்றவை துவங்கப்பட்டது.
1968ல் பனியன் தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்ட
பின்னணியில் 1969ல் 8 நாட்களும், 72ல் 40 நாட்களும், 74ல் 60 நாட்களும், 1984ல்
127 நாட்கள் என சம்பள உயர்வுக்கும், பஞ்சப்படிக்காகவும் நடத்தப்பட்ட போராட்டங்கள் தான்
திருப்பூரின் தொழிலாளி வர்க்கத்தின் முகத் தோற்றத்தை மாற்றி அமைத்தது மட்டுமல்ல. தொழிலாளி
வர்க்கத்தின் போராட்டத்தின் முன்பு ஒரு பகுதி முதலாளிகளின் கருங்காலித்தனம் எடுபடாது
என்பதை உணர்த்தியது.
கலையும், இலக்கியமும் மக்களுக்கே என்ற
லெனினின் வார்த்தைகளை பஞ்சப்படி என்ற நாடகமும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தை உரமேற்றி
மக்களிடம் வளர்தெடுத்தது.
எந்த முதலாளிகளை எதிர்த்து போராடியதோ
தொழிலாளிவர்க்கம் அதுதான் தொழிலுக்கு நெருக்கடி என்றவுடன் 1995ல் முதலில் களத்தில்
சிஐடியு இறங்கியது. பனியன் தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்தி தொழிலை பாதித்த பஞ்சு,
நூல் ஏற்றுமதியை தடைசெய் என்று ஒங்கி ஒலித்தது. இன்று வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி தொழிலாளர் நலனை முன்னிறுத்தி சமரசமில்லாமல் போராடும் அதே தருணத்தில் இன்று சாய
கழிவு நீர் பிரச்சனை துவங்கி ட்ராபேக், சிபார்ம், நூல் விலை உயர்வு, பெட்ரோல் டீசல்
விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி,
திட்டமிடாத கொரோனா ஊரடங்கு என மக்களை மட்டுமல்லாது தொழில் நிறுவனங்களை பாதித்த போது
முதலில் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
1970லிருந்து தொடர்ந்து கூலி உயர்வுக்கான போராட்டம் தொழிலாளி
வர்க்கம் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் விவசாய சங்கமும், விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும்
போராட்டங் களை நடத்தி வந்தது. பொள்ளாச்சியில்
1978ல் தோழர் கோபாலும், திருப்பூரில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு போராட்டத்தின்
போது முதலாளிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாக இளம் தோழன் சீராணம்பாளையம் பழனிச்சாமி
வெட்டிக் கொல்லப்பட்டார். 1981ல் உடுமலை வெள்ளியம்பாளையம் பகுதியில் விவசாய, விவசாய
தொழிலாளர்கள், வாலிபர்களை திரட்டி கிராமப்புற ஆதிக்கத்திற்கு எதிராகவும், கூலி உயர்வுக்காக
போராடிய தோழர் ஈஸ்வரன் கொல்லப்பட்டார்.
1998ல் தோழர் பன்னீர் செல்வம் ஜீனா கார்மென்ண்டஸ் நிறுவனத்தில் சங்கம் வைக்க
முயற்சித்தார் என்ற காரணத்திற்காக வெட்டிக் கொல்லப்பட்டார். 2002ல் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த தோழர்
கே.ரத்தினசாமி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்த காரணத்திற்காகவும்,
கம்யூனிஸ்டாக இருந்த காரணத்திற்காக என 8 காரணங்களை சொல்லி குத்தி கொன்று, தூக்கிலிட்டு
கொன்றனர் கம்யூனிச இயக்கத்தின் விரோதிகள்.
இந்த தியாகிகளின் செய்தி சொல்வது ஒன்றுதான்
மக்களின் அறியாமை விடியலுக்கு எதிராக உள்ள எதிரிகளை சரியாக இனம் கண்டு அவர்களுக்கு
எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இதோ இப்போதும் போராடிக் கொண்டு இருக்கிறோம்.
பெண்கள், பெண் குழந்தைகள் பாதிக்கப்படும் போதும், போதைக்கு எதிராகவும், கந்துவட்டிக்குஎதிராகவும்,
தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், மதவெறிக் எதிராகவும், அரசின் தவறான கொள்கைக்கு எதிராகவும்
களத்தில் நின்று போராடி பாதுகாத்து வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன்
அமைப்புகளும்., அதன் திருப்பூர் மாவட்ட 23 மாநாடு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்வைத்தும்,
திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான மாற்று திட்டங்களை முன்வைத்து டிசம்பர் 19,
20 தேதிகளில் நடைபெறுகிறது.
தகவல்கள்
உதவி தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய கோவை மாவட்ட கம்யூனிச இயக்க வரலாறு,
No comments:
Post a Comment