”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.தங்கவேல் Ex.M.L.A., வாழ்வும் பணியும்

 


‘’சிலருடைய  வாழ்வும் பணியும் மற்றவர்களுக்கு  வழிகாட்டுபவையாக விளங்கும் போதிலும் அவர்களுடைய பணிகளை மற்றவர்கள் தொடர்ந்து செய்து வரும் போதும் அவர்களுக்கு மரணமில்லை’’ - அலெய்டா குவேரா கூறியது.  ஒவ்வொரு உண்மையான கம்யூனிஸ்ட் பணியும் இவ்வாறு தான்  துவங்குகிறது. 

திருப்பூர் முருங்கப்பாளையத்தில் பிறந்து வளர்ந்து  பள்ளியில் படிக்கும் போதே அப்பகுதியில் இருந்த மில் தொழிலாளர்கள், பனியன் தொழிலாளர்கள் பாரதி படிப்பகத்தில் நாளிதழ்கள் படிப்பதையும், ஒரங்க நாடகங்கள் நடிப்பதை பார்த்தும் ஆர்வம் கொண்ட தோழர் கே.டி, கைத்தறி துண்டு நெய்யும் தொழிலும் பின்னர் பனியன் கம்பெனியிலும் வேலைக்கு சென்றார்.

1971ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து 1974ல் முழுநேர ஊழியராகி, 1975ல் பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க செயலாள ராகவும் தேர்வு செய்யப்படுகிறார்.  1978களில் நடைபெற்ற விசைத்தறிப் போராட்டத்திற்கும், 1984ல் பனியன் பஞ்சப்படி போராட்டத்திற்கும் தலைமை யேற்று நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தோழர் கே.தங்கவேல். 

இன்றைய இந்திய சூழலில் வேலையின்மை, பட்டினி, வறுமை அதிகரிப்பின் காரணமாக வேலையை தேடி உழைப்பு சந்தையை நோக்கிய இடப்பெயர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பூரின் பனியன் தொழிலில் ஏற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சியின் காரணமாக வெளி மாநில, மாவட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வருகை என்பது அதிக எண்ணிக் கையில் அதிகரித்துள்ளது.

ஆனால் தொழிலாளர்களுக்கு உரிய நியாயமான சம்பளமோ, சட்ட சலுகைகளோ கிடைப்பதில்லை. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கும் போது வேலை வாய்ப்பு அதிகரிப்பும்,  நெருக்கடியின் போது வேலை இழப்பும்  தொழிலாளர்களை மட்டுமல்ல அவர்களது குடும்பங்களையே கடுமையாக பாதிக்கிறது. இது இந்த கொரோனா காலத்தில் கடும் பாதிப்பை தொழிலாளர்களுக்கு உருவாக்கியுள்ளது. 

உலகமயச் சூழலில் தங்களுடைய வர்க்க நலனுக்காக இன்று இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் நெகிழ்வு தன்மையற்றவையாக உள்ளன என்று ஏற்றுமதியாளர் சங்கம் தலைவர் சொல்வது, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதால் மோசமான நிலைக்கு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சென்று கொண்டு இருக்கிறது. இது குறித்து தோழர் கே.தங்கவேல் நீண்ட நாட்களுக்கு முன்பே  தெளிந்த பார்வையோடு தொழிலாளி வர்க்கத்தின் பணி எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை கண்டுணர்ந்து சொன்னவர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில்  தொழிலாளர்களை பாதுகாப்பது என்பது அவர்களுக்கான இ.எஸ்.ஐ மருத்துவமனை, தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு, போக்குவரத்து,  குழந்தைகளின் கல்வி, வாழ்வதார சூழல் ஆகியவற்றை உறுதி படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கான தீர்வை முன்னெடுக்க இன்றைய தொழிலாளர்களை விழிப்புணர்வு பெறச் செய்வது அவசியமாகிறது. இதனை நிதானமாகவும், பொறுமை உணர்வோடும் ஆழமான பார்வையோடு தெளிந்த சிந்தனையோடு அமைதியான வார்த்தைகளில் அழுத்தமாக சொல்லும் உறுதியான தலைவராக இருந்தவர் தோழர் கே.தங்கவேல் அவர்கள்.

கவிதை, கதை,  நாடாகம் உள்ளிட்ட இலக்கியத்தின் மீதும், வாசிப்பின் மீதும், வரலாற்றின் மீதும், அகழ்வாய்வின் மீதும்  ஆழ்ந்த நாட்டம் கொண்டவர். முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எப்படி நேரநிர்வாகம், ஆளுமைப்பண்பு, மனிதவளம் தேவையோ அதே போல தொழிலாளர் வர்க்க அமைப்புக்கும், கட்சிக்கும் நேர நிர்வாகமும், ஆளுமைப் பண்பும், மனிதவளமும் அவசியம் என்று அதனை தனது வாழ்வாக மாற்றிக் கொண்டவர்.

பேரரசிரியர்களை, பல்துறை நிபுணர்களை, பல்வேறு அரசியல் இயக்கங்களை சார்ந்தவர் களை தனது தேடுதலின் மூலம் நண்பர்களாக பெற்றவர் தோழர் கே.தங்கவேல் அவர்கள். பல்வேறு சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிமையான வாழ்வியல் உதாரணங்களில் இருந்தும், சொலவடை களின் மூலம்  விளங்க வைப்பார்.  மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

தமிழகத்தில் புத்தகக் கண்காட்சி என்ற வடிவம் வந்தபின்பு தொடர்ந்து அவைகளுக்கு சென்று புத்தகங்களின் பிரியா காதலரானவர். வாங்கிய புத்தகங்களை பலரும் வாசித்து செல்கின்றனர். தோழர் கே.தங்கவேல் அவர்களோ கற்பது என்று மூன்று வகைகளில் மாற்றங்களை கொண்டு வரும் என்று சொல்வார்.                 

1.மனநிலையில் மாற்றம், 2. அறிவுநிலையில் உயர்வு. 3, திறனில் மேம்பாடு என ஆழமாக கற்றல் குறித்து அறிந்து அதன்படி நடந்தவர்.

படிப்பது கூட பலருக்கு மனதில் நிற்காது. மறந்துவிட்டேன் என சொல்பவர்கள் உண்டு.  அதற்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்திட முயற்சிகள் மேற்கொண்டே வாசிக்க வேண்டும் என்று சொல்வார். பதற்றம், விருப்பமின்மை, பயம், பயிற்சியின்மை, புரிந்து கொள்ளாமை, திருப்புதலற்ற படிப்பு, குருட்டு மனப்பாடம், கவனச் சிதறல், விழிப்புணர்வு இல்லாமல், இயந்திரத் தனமாக படித்தல் போன்ற அம்சங்கள் வாசித்ததை மனத்தில் நிறுத்த முடியாமல் மறந்து கொண்டே இருக்கும் என்று சொல்வார்.

கூட்டங்களுக்கு செல்வது என்றாலும், கலந்து கொண்டாலும் எதையும் முழுமையாக குறிப்பு எடுத்து அதன் அடிப்படையில் விடுபடாமல் ரத்தின சுருக்கமாக சொல்லுவார்.  பத்தாம் வகுப்பை தாண்டாத தோழர் கே.தங்கவேல், ஆட்சிப்பணி தேர்வுக்கான பயிற்சி மாணவர் களுக்கும், ஆசிரியர், பேராசிரியர், சமூக செயல் பாட்டாளர்களுக்கு தலைமைப் பண்பு, நேர நிர்வாகம் குறித்து வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ஆனார்.

மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாக, கட்சித் தலைவராக, வழிகாட்டியாக இருந்தவர். பதவிகளை கூட பொறுப்புகளாக உணர்ந்தவர். கம்யூனிஸ்ட்களின் அடிப்படை கோட்பாட்டிற்கு இலக்கணமாகவும், எளிமை, உண்மை, நேர்மை, மனிதாபிமானி என்ற நடைமுறைக்கு உதாரணமாக இருந்தவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் எந்த ஆடம்பரமற்று, மேற்படி இலட்சியத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டவர். பிரச்சனைகளை களத்தில் நின்று சந்தித்தவர்.

``வாழ்நாளில் பெரும்பாலும் மனித குலத்திற்காக சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால்  எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது'' -என்ற காரல் மார்க்சின் வார்த்தைக்கு வடிவம் கொடுத்து சம காலத்தில் வாழ்ந்தவர் தோழர் கே.தங்கவேல். அவர் விட்டு சென்ற பணியை தொடருவோம்.

தோழர் கே.தங்கவேல் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்  - செப் 13

                                              செ.முத்துக்கண்ணன்


No comments:

Post a Comment