![]() |
புரட்சியாளர் சே, இந்தியா வந்தபோது, விவசாயிகள் மாலையிட்டு வரவேற்ற புகைப்படம் |
இலட்சக்கணக்கான பக்கங்களில் ஆயிரம் வருடங்கள் கூட சேகுவேராவைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கலாம் என்கிறார் எழுத்தாளர் கார்சியா மார்கோஸ். எந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அந்த ஏகாதிபத்தியம் தனது சந்தையை விரிவுபடுத்த வெட்கமில்லாமல் சேவின் புகைப்படத்தை தனது அனைத்துவிதமான உற்பத்தி பொருட்களின் முத்திரையிட்டு விற்றுக் கொண்டிருக்கிறது. அந்தளவிற்கு இன்றைய உலகின் இளைஞர்கள் அனைவரின் முன்மாதிரி அடையாளமாக மாறிப் போனவர் சே. “புரட்சி தானாக உருவாவதில்லை நாம் தான் உருவாக்க வேண்டும். தீப்பொறியை தூவி விடு நெருப்பென மக்கள் கிளர்ந்தெழுவார்கள்“ என்று புரட்சி குறித்த தனது பாதையை தெளிவாக வரையறுத்தவர் சே.
“வெறும் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மட்டும் புரட்சி நடைபெறுவதில்லை. சரியான தத்துவமும், மக்களின் பங்கேற்பும், போராட்டமுமே புரட்சிக்கான சாத்தியத்தை உருவாக்கும்“. அதுதான் மனிதகுலத்தின் இன்றைய வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது. இதனை சொல்லும் வரலாற்றினை உருவாக்குவர்கள் மனிதர்களே, அந்த மனிதர்களுக்கு வரலாற்றில் மகத்தான
பாத்திரம் உண்டென்றால், அப்படிப்பட்ட மனிதர்களில் சேவும்
ஒருவர். கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிறந்த
மனிதர்களில் முதலாமவர் மார்க்ஸ் என்றால் இளையதலைமுறையின் பிரதிநிதி தோழர்.சேகுவேரா. சே என அனைவராலும் அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) என்ற இயற்பெயர் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சிய-லெனினியவாதி, மிகச்சிறந்த கம்யுனிஸ்ட் கியூபா உட்பட பல நாடுகளின் விடுதலைக்கான புரட்சிகளில் தனது முத்திரையை பதித்த போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர்.
கியுப விடுதலைக்கு பின் லத்தீன் அமெரிக்க நிலை குறித்து “அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றியும், லத்தீன் அமெரிக்க அடிமைத்தனம் பற்றியும் விடுதலையின் தேவையைப் பற்றியும் அவர் மிகுந்த வேட்கையுடன்“ பேசி வந்தார். அந்த வேட்கைதான் இன்றைய லத்தீன் அமெரிக்க எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்த காரணிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
இளம்வயதில் சே
சே
குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜெண்டினாவிலுள்ள
ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இசுபானிய, பாஸ்க்கு, ஐரிசிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் இவரே. சேவின் குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இளம் வயதில் சே-வை தொற்றிய ஆஸ்துமா அவரது மரணம்வரை வாட்டி வதைத்தது. இருந்த போதும் தனது விடா முயற்சி,
தன்னம்பிக்கை காரணமாக ஒரு சிறந்த ரக்பி விளையாட்டு வீரராக விளங்கினார்.
கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா,
கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ,மார்க்ஸ்,
போல்க்னர், கைடே,
சல்காரி, வேர்னே,நேரு, ஏங்கெல்ஸ், வெல்ஸ்,
புரொஸ்ட், காப்கா,
காமுஸ், லெனின் மற்றும் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா,
டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய எழுத்துகளின் மீது ஈடுபாடும், ஆர்வமும் கொண்டு நிறைய படித்தார், குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன.
அதேபோல் தனது நாட்குறிப்பில் தான் கற்ற பல்வேறு விசயங்களை குறித்து வந்தார்.
இவற்றுள், புத்தர்,
அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு,
தேசபக்தி குறித்த ஆய்வு,
ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் மனோவியலில் கவரப்பட்ட சே குவேரா பல தருணங்களில் தனது குறிப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவராக சே
படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1953ல் மருத்துவப்பட்டத்தை பெற்றார். இடைப்பட்டகாலத்தில் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு,
மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் தொழுநோயாளர்களின் குடியிருப்பில் தொழுநோயாளிகள் படும் அவஸ்தயை நேரில் பார்த்த சே அவர்களுக்காக சேவை செய்ய தனது மருத்துவப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என விரும்பியதோடு
சில நாட்கள் அங்கேயே தங்கி சேவையும்
செய்தார்.
மோட்டார் சைக்கிள் பயணம்
மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்த சே,
லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவலான வறுமை,
அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு,
ஏற்றத்தாழ்வு
போன்றவற்றை
கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா முடிவு செய்து தனக்கான பாதையை தேர்வு செய்தார். இப்பயணத்தை "மோட்டார்பயணக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் வெளியிட்டார். இது நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை
கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. 1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார்.
அப்போது குவாத்மாலா குடியரசுத்
தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் நிலச் சீர்திருத்தத்தின் மூலம் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்ததை கண்ட சே குவாத்மாலாவில் தங்கிட முடிவு செய்தார். அங்கு தான் ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினருமான பெண்போராளி யோடு நட்பு கொண்டார். ஹில்டாவுக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. அதனால் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடனும், கியூபாவை விட்டு வெளியே வாழ்ந்த கியூபர்களோடு சே குவேராவுக்கு தொடர்பு கிடைத்தன. அப்போதுதான் "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது.
வெற்றி அல்லது
வீரமரணம் - கியூபப்புரட்சியின் தளபதி
'கால்கள்தான் என் உலகம்' என 'சே' ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். 'என் கால்கள் பதியக்கூடிய பகுதிகள் அனைத்தும் என்னுடையது ! அங்கு வாழும் அனைவரும் என் சகோதரர்கள்' என்றார். இதனால்தான் காஸ்ட்ரோவிடம், 'கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க விடுதலைக்கான பயணத்தை நோக்கி வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்' என அழுத்தமாகக் கூறிய'சேவிடம்'. அதற்கு காஸ்ட்ரோ ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26ம் தேதி மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகளோடு, விடுதலையின் பாடலை முழங்கியபடி, வெற்றி அல்லது வீரமரணம் என்ற முழக்கத்தோடு கிரான்மா எனும் சிறுபடகு கியூபா விடுதலையை நோக்கிப்
பயணித்தது.
1957, ஜனவரி 17ம் தேதி,
தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. தொடர்ந்து மூன்றாண்டுகள் நடந்த கியூப கெரில்லா யுத்தத்தில் சே குழுவின் மருத்துவராகவும்
லெஃப்டினெட்டாகவும், பின்னர் கமாண்டட்டாகவும் இருந்த 'சேகுவேரா', தன் திறமை,
துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். அவரது திறமை கண்டு வியந்த சக கியூபா வீரர்கள் அவரை பிரியத்துடன் 'சே'
என அழைத்தனர்.
கடுமையான ஆஸ்துமா துன்புறுத்தியபோதிலும் வீரம் விளைந்தது நாவலை படித்து தனது மனதை திடப்படுத்திக்கொண்டு புரட்சியின் பாதையில் ஒரு கையில் துப்பாக்கியும், மறு கையில் ஸ்டெத்ஸ்கோப்பும், முதுகில் ஆயுதங்களோடு புத்தகங்களையும் சுமந்து அந்த கியூப காடுகளையும், மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்கு தெம்பூட்டி “சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறட்டும்'' என்ற அவரது முழக்கம் களத்திலிருந்த போராளிகளுக்கு மில்லியன் மெகா வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி சீற்றம் கொள்ள வைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில்லாக்களைக் கொண்டு வீழ்த்திய சேவின் யுத்த தந்திரமும், வீரமும் கியூபாவின் விடுதலைக்கு கட்டியம் கூறியது. தொடர்ந்த
ஆண்டுகளில் வெவ்வேறு நிலைகளில் புரட்சிப்படை, பாடிஸ்டா அரசை முழுவதுமாக விரட்டியடித்தது.
1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது.
வரலாற் றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி,
உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த் தியது.
'டைம்' இதழ்
'சே' அட்டைப்படத்துடன் 'புரட்சி யின் மூளை'
யென கட்டுரை எழுதியது. 1959, பிப்ரவரி 16ல் கியூபாவின் ஜனாதிபதியாக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன், விவசாயத் துறையில் தேசியத் தலைவராக,
தேசிய வங்கியின் தலைவராக, தொழிற்துறை
அமைச்சராக பதவி வகித்தார். இருந்தாலும் 'சே'
தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார்.
1965ல் தனது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு காங்கோவிற்கு கொரிலாக்களோடு விடுதலைக்கான பயணத்தை துவங்கி பொலிவியாவின் விடுதலைக்கான யுத்தத்தை திட்டமிட்டார். அந்த போராட்டத்தில் அமெரிக்க சிஐஏ ஏஜெண்ட்களும், பொலிவிய இராணுவமும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பொலிவிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு அக் 9ம் தேதி அவரை சுட்டுக் கொன்றார்கள்.
அன்று பெரும் பகுதி லத்தீன் அமெரிக்க நாடுகள் இராணுவ ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இன்று அந்த ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டுள்ளன.
1997 சே அக்டோபர் 18.... கியூபா...
ஹவானாவில் பொலிவியா காட்டில் தோண்டி எடுக்கப்பட்ட சேவின் உடலை சுமந்து இரவு 7
மணிக்கு விமானம் தரையிறங்கிய நிலையில் லட்சக்கணக்கானோர் கூடிய மக்கள் கூட்டத்தில் தோழர் பிடல் “வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட 'சே' நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்'' என வேண்டுகோள் விடுக்கிறார். இறந்தபோது 'சே'வுக்கு வயது 40. உலகின் அனைத்து இதழ்களிலும் 'சே' குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், 'பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே!' என மகுடம் சூட்டினார். கியூபா அரசாங்கம் 'சே'வின் நினைவை வரலாறு தொடர்ந்து கொண்டு செல்லும் வகையில் தனது
கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும்
நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டா கிளாரா எனும் நகரில் 'சே'வின் மியூஸியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் பல லட்சம் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து
இந்த மியூஸியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவுக்கு வந்து செல்கின்றனர்.
உலகளாவிய
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம்
இன்றைய உலகமயச் சூழலில் முதலாளித்துவத்தின் சுரண்டல் இரு உலகங்களை உருவாக்கிவிட்டது. குறிப்பாக உலகின்
497 பெரும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு 5.3 டிரில்லியன் டாலர் சொத்து உலக வருவாயில் 7 சதம் குவிந்துள்ளது.
121 கோடி மக்களை கொண்ட இந்தியாவின் ஜிடிபி 1.16
டிரில்லியன் டாலர் என 2007-2008ம் ஆண்டில் இருந்தது. இந்திய மக்களின் சொத்தை விட 5
மடங்கு 497 உலக கார்ப்ரேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு கூடுதலாக உள்ளது.
இதுதான் முதலாளித்துவ உலகமயமாக்கலின் காட்டுமிரண்டிதனமான கொள்ளைக்கு உதாரணம்.
அதே சமயம் குறைந்த வருவாய் உள்ள நாடுகளின் 240 கோடி மக்களின் வருவாய் 1.6 டிரில்லியன் டாலர்.
இது உலக வருவாயில் 3.3 சதமாகும். ஒருபுறம் வளர்ந்த பணக்கார நாடுகளின் 100 கோடி மக்களிடம் 36.6 டிரில்லியன் டாலர் சொத்து குவிந்துள்ளது.
இது உலக வருவாயில் 76 சதமாகும். மறுபுறம் உலக மக்களில் 300 கோடி பேர் ஒரு நாளைக்கு வெறும் இரண்டு டாலருக்கு குறைவாகவே வருமானம் உடையவர்கள். ஏழ்மை நிலையில் உள்ள
40 சதம் மக்களுக்கு உலக வருவாயில் 5 சதம் மட்டுமே கிடைக்கிறது.
இந்த ஏற்றதாழ்வுக்கெதிரான போராட்டம் தான் இன்று முற்போக்கு சக்திகளால் வடித்தெடுக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இன்றும் பல்வேறு சமூக ஜனநாயகவாதிகளால் பிரபுத்துவ சோசலிசம், கிறிஸ்துவதுறவு சோசலிசம், குட்டி பூர்ஷவா சோசலிசம், கற்பனவாத சோசலிசம்,
முதலாளித்துவ சோசலிசம் என பல சோசலிசங்கள் பேசப்படுகிறது.
இந்தியாவிலும்
அனைத்து துறைகளிலும் அன்னியமுதலீடு,
பொதுத்துறையை விற்பது, சேவைத்துறைகளை தனியார்மயமாக்குவது, சமூகநலத்திட்டங்களை ரத்துசெய்வது என்ற தனது
நடவடிக்கைகைளை மறைக்க முதலாளித்துவம்
சமூக ஜனநாயகம், பின்நவீனத்துவம், அடையாள அரசியல் போன்ற கருத்துருக்களை உருவாக்கி தன்னை பாதுகாத்துக்கொள்கிறது.
மனிதமுகத்தோடு கூடிய சீர்திருத்தம் என்ற பெயரில் சோசலிசம் என்ற வார்த்தையை தனக்கான
வார்த்தைகளில் உருமாற்றி
ஆவடிசோசலிசம், காந்திய சோசலிசம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோசலிசம், என்று பலவை மக்களை திசைத்திருப்பவே நடைபெற்றது.
உண்மையான விஞ்ஞானபூர்வமான சோசலிச அமைப்பு முறையை நிறுவுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணமாக இது உள்ளது.
சோசலிசம் அல்லது வீரமரணம் என்ற போராட்ட களத்தின் நாயகனான தோழர் “சே”
வின் வழியில் முன்னேறுவோம்..அனைத்து சோசலிசத்திற்கெதிரான பிற்போக்கு சிந்தாங்களை துடைத்தெரிவோம்.
எந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சே உறுதியாக போராடினாரோ, அந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி பாத்திரத்தை வகிக்கும் நாடாக கியூபா இருந்து வருகிறது. . அதன் பின்புலத்தில் இன்றைய லத்தீன் அமெரிக்க எழுந்து நிற்கிறது. அதே போல் ஐரோப்பா,
ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் சமூக மாற்றத்திற்காக போராடும் இளைஞர்கள் “சே“வை தாங்கி வால்ஸ்டீரிட்டை கைப்பற்றுவோம், வசந்தத்திற்கான போராட்டம், நீதியை மீட்டெடுப்போம், இடங்கொள்ளலல் போராட்டம் என பல வடிவங்களில் கிளர்ந்தெழு போராடி வருகிறார்கள்.
சேவின் வழியில் நின்று நாங்கள் எதார்த்த வாதிகள் அதனால் அசாத்தியங்களை கனவு காண்கிறோம் என்று கியூபா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கல்வியின்மை, வேலையின்மை, வறுமை, பசி, பட்டினி, சுகாதாரமின்மை, சமூக பாதுகாப்பு போன்றவற்றிற்கு எதிராக மாற்று கோஷங்களை முன்வைத்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்றைய இளைய தலைமுறையும், நாளைய தலைமுறையும் கற்றுக் கொள்ள வேண்டிய விசய்ம்.. கியுபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு.
அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன்,
அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா?
''ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் 'சே'வைப் போல இருப்போம்!''
07 அக்டோபர், 2012
No comments:
Post a Comment