மேற்குதொடர்ச்சி மலைக்கூட்டம்
“காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும், மலையும் எங்கள் கூட்டம்“ என்றான்
மகாகவி பாரதி..
![]() |
தேக்கடி |
உலகின் அற்புத மலைத்தொடர்களில் முக்கியமானது மேற்கு தொடர்ச்சி
மலையாகும்.
இந்தியாவின் மேற்கு பகுதியில் கடலையும் அதற்கு
இணையாக உயர்ந்த அரணைப்போல் இந்த மலைதொடரும் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது. குஜராத் மற்றும் மஹராஷ்டிரா எல்லைக்கருகிலிருந்து
உற்பத்தியாகும் தாபி நதிக்கு தெற்கே துவங்கி குமரி வரை 1600 கிலோமீட்டர்
நீளத்திற்கு பயணிக்கக்கூடியது. கர்நாடக காளி நதி வரையுள்ள இம்மலைத்தொடரின்
உயரம் 1500 மீட்டராகும். இந்த பகுதியில்
உள்ள பாறைகள் மிருதுவானவை. ஆனால் காளி நதிக்கு தெற்கே தமிழகம், கேரளத்திற்குள்
2000மீட்டர் உயரமும் கடினமான பாறைகளையும் உள்ளடக்கியுள்ளது. இதன் சாரசரி உயரம் 900 மீட்டர்களாகும்.
மேற்கு பகுதியில் பசுமைமாறா காடுகளையும், கிழக்கு பகுதியில் இலையுதிர்காடுகளையும்
கொண்ட மலைத்தொடராகும். வானைமுட்டும் மரங்கள் அரபிக்கடலின் ஈரக்காற்றை
தடுத்து நிறுத்தி ஆண்டுக்கு 9 மாதங்கள் மழையை பொழிய வைக்கவல்லது.
இதனால் 2000 டிஎம்சி நீர் வரை அரபிக்கடலுக்கு செல்கிறது.
ஏறத்தாழ 200 செ.மீட்டர் வரை
மழைபெய்த பகுதி. மழை மறைவு பகுதிகளாக கிழக்கு பகுதிகள் உள்ளது.
இங்கு 4 மாதங்கள் மட்டுமே மழை பெய்கிறது.
இதனால் நீர் அதிகம் சென்று சேர்ந்த மேற்குபகுதியில் துறைமுகங்களும்,
கிழக்கு பகுதி ஆற்றங்கரையில் தொழிற்சாலைகளும் உருவாகின.
![]() |
முதுமலை யானைக்கூட்டம் |
குஜராத், மஹராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, கோவா, தமிழ்நாடு
ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, வைகை, உள்ளிட்ட
வற்றாத நதிகளையும்,
பத்ரா, பீமா, சாலக்குடி, கபினி, கோய்னா, கல்லாயி, குண்டலி, மணிமுத்தாறு, நேத்ராவதி, பச்சையாறு, சரஸ்வதி, சாவித்திரி, ஷராவதிஆறு போன்ற நதிகளையும், அமைதிபள்ளதாக்குகளையும், 1500
தாவர வகைகளையும், 139 பாலூட்டி வகைகளையும், 508 பறவை வகைகளையும், 179 விலங்கின வகைகளையும் நூற்றுக்கணக்கான மூலிகைகளையும், அளவற்ற உணவுப்பொருட்களையும், உலகின் அழிந்து வரும் 325 வகையான பூச்சி, பறவை, விலங்கினங்கள்
வாழும் பகுதியாக என அற்புத உலகமாக கிழக்கு மேற்கு பகுதியாக 100 கி.மீட்டர் அகலமும், 62000 சதுர மைல் பரப்பளவும், சராசரியாக 2700
அடி உயரத்தையும் கொண்டு விளங்குகிறது.
ஊட்டி, மஹாபலேஸ்வர், மடிகேரி, மூணாறும், பொதிகைமலைச்சாரலில் உள்ள குற்றலாமும்,
பாபநாசமும், மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி,
திற்பரப்பும், அய்யனார் அருவியும், தேனியின் சுருளியும், தேக்கடியும், அப்பே அருவி, சுஞ்சனாக்கட்டே அருவி, கல்கட்டி அருவி, சிவசமுத்திரம் அருவி, கேரளாவின் இடுக்கியும், பெரியாரும், குந்திபுழாவும், அமராவதியும், சோலையாறும்,
சிறுவாணியும், பவானியும், கன்னட குடகில் காவிரியும், ஒகேன்னகல்லும், என அருவிகளுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் மிகுந்த
மலைத்தொடராகும். அதிகமான மழைவளத்தையும், கனிமவளத்தையும், நீர்ம
வளத்தையும் அள்ளி தெளித்த பகுதி.. இம்மலைத்தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலையெனவும்,
தமிழகத்தில் ஆனைமலை, நீலமலை எனவும், கேரளத்தில் மலப்பார் மலை, அகத்திய மலை என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தின் எல்லைப்பகுதியான பாலக்காடு அருகாமையில் 1100மீட்டர் உயரத்தில் உள்ள பகுதி அமைதிபள்ளத்தாக்கு
ஆகும். மண்ணாற்காட்டின் வடக்கில் நீலகிரியும், நீலாம்பூர் காடுகளும், கிழக்கில் அட்டைப்பாடி மலைச்சாரலும்
என மொத்தமாக லட்சம் ஏக்கர் பரப்பளவு வெப்பமண்டல மலைக்காடுகளான இவை தட்பவெப்ப நிலையை
பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
![]() |
அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி கேரளா |
இந்த அமைதிப்பள்ளதாக்கைபோன்று
தமிழகத்தில் களக்காடு மலைபகுதியும், முதுமலைப்பகுதியும்,
தேனியின் மேகமலை உள்ளடக்கிய தூவானம், ஆனைக்கல் காடுகள், அன்சி தேசிய பூங்கா, அகத்திய மலை உயிர்காப்பகம், அகத்திய வனம் உயிரியல் பூங்கா,
பந்திப்பூர் தேசிய பூங்கா, பன்னார்கட்டா தேசிய
பூங்கா, பத்திரா காட்டுயிர் பூங்கா, பிம்காட்,
பிரம்மகிரு, சண்டோலி, சின்னார்,
தான்டலி, இரவிகுளம், கிராஸ்கில்ஸ் காட்டுயிர் பூங்காக்களும், களக்காடு, முண்டந்துறை
புலிகள் காப்பகம், குதிரைமுத் தேசிய பூங்கா, கர்நாலா பறவைகள் சரணலாயம், முதுமலை புலிகள் காப்பகம்,
நெய்யார், பெரியார், பெப்பாரா,
ரத்தனகிரி, செந்துரிணி, ஸ்ரீவில்லிபுத்துர்,
வயநாடு, தலைக்காவிரி உயிர் காப்பகம், கிருஷ்ணாபுரம், திருக்குறுங்குடி, கூந்தக் குளம் பறவைகள் புகலிடம், அரியகுளம் பறவைகள் புகலிடம்.என பறவைகள், விலங்குகள் உயிர் வாழிடங்களும் சுற்றுதலமாகவும்
உள்ளன. வானவில்லின் நிறங்களை போல வனங்களின் வண்ணமயமான பூக்களும், நீர் நிலைகளும், நீர்விழ்ச்சிகளும், சுற்றுதளங்களும் மிகுந்த பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி. யுனஸ்கோ இன்று உலகின் பாதுகாக்கப்பட
வேண்டிய பகுதியாகவும், மிகச்சிறந்த சுற்றுலா
தலமாகவும் அறிவித்துள்ள பகுதியாகும்.
இந்தியாவில் அதிகளவு மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு அடுத்தப்படியாக
மழைபெய்யுமிடம் கூடலூர் அருகிலுள்ள தோவாளா ஆகும்.,இந்த பகுதி முன்பு பசுமைமாறாகாடுகளாக இருந்தபோது ஆண்டுக்கு 123 நாட்கள் தொடர்ச்சியாக 6000 மி.மீட்டர்
மழை பெய்த இந்த பகுதி தற்போது தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டதன் பின்னணியில்
8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தாலே பெரிய விசயம் என்றாகிவிட்டது.
தென்மேற்குப் பருவகாற்று மேற்கு மலைத்தொடரின் உயர்ந்த மரங்களின் மீது
மோதி மழையாக பெய்கிறது. இதனை மலைகள் உறிஞ்சிவைத்துக் கொண்டு ஆறுகளாக
உற்பத்தியாகி மழையில்லா காலங்களிலும் ஓடுகிறது. இன்று வனங்கள்
அழிக்கப்பட்டு வரும் நிலையில் ஈரப்பதம் நிரம்பிய மேகங்கள் மேல் நோக்கி செல்கிறது.
தற்போது 925 மில்லிமீட்டர் மழை பெய்கிறது,
நதிகள் ஒருபோதும் சமவெளியில் உற்பத்தியாவதில்லை. மலைகளில்தான் உற்பத்தியாககிறது. அதற்கு காரணமான தட்பவெப்ப
நிலையை தரும் மரங்களும், வனங்களும் அரசாளும், கார்ப்ரேட் நிறுவனஙகளாலும் அழிக்கப்படுகிறது. இதனால்
மழையளவு ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த சிகரம் இருக்கும்
ஆனைமுடி, நீலகிரி ஆகிய பகுதிகளில் குறிப்பாக
நீலகிரி இங்கிலாந்தின் சீதோசண நிலைக்கு சமமாக இருந்ததால் வெள்ளையர்களால், உயர்ந்த மரங்களை கொண்ட வனங்கள் குட்டையான தேயிலை, காப்பி,
உருளைகிழங்கு, ரப்பர், மரவள்ளிகிழங்கு,முந்திரி போன்ற வணிகத்திற்கான பயிர்களால் நிரப்பப்பட்டு பசுமைமாற காடுகள் அழிக்கப்பட்டன.
மேற்கு மலைத்தொடரில் இரும்பு, பாக்சைட்டு, மேங்கனிசு,
மாலிபிடினம், வெண்பிளாட்டினம் உள்ளிட்டு ஏராளமான
தாதுக்கள் கிடைக்கின்றன. இவற்றை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அப்படி
ஒரு நிறுவனம் துங்கபத்திரா நதிக்கரையில் குதிரை மூக்கு என்னுமிடத்தில் ஒரு விளம்பரத்தை
வைத்துள்ளதில் இருந்து அவர்களின் லாபவெறியை புரிந்து கொள்ள முடியும். ( மலைகளை இடம் மாற்றி வைத்துள்ளோம், அதன் அழகை குலைக்கவில்லை
என்று..)
![]() |
பழங்குடியினரின் கைவினைப்பொருட்கள் |
இவற்றில் நீலகிரி மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு
நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு பெரும் பகுதி நிலங்களை தங்கள் வசப்படுத்தியுள்ளது. குறிப்பாக சில்வர் கிளவ்டு
3000 ஏக்கர், பிர்லா கம்பெனி 20000 ஏக்கர், புரூக்பாண்ட் கம்பெனி 20000 ஏக்கர், இந்துஸ்தான் லீவர் கம்பெனி 20000 ஏக்கர், பாரி
கம்பெனி 20000 ஏக்கர், கண்ணன் தேவன்,
டான் டீ உட்பட ஏராளமான நிறுவனங்கள் வளைத்துப்போட்டு மலைவளங்களை கொள்ளையடித்து
வருகின்றன. இந்த கம்பெனிகளின் அத்துமீறல் என்பது அரசுக்கு சொந்தமான
சாலைகளை கூட விட்டுவைக்காமல் கதவுபோட்டு பூட்டி வைத்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
தற்போதுதான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன்னி, வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளின் போராட்டத்திற்கு பின் அந்த கதவு அப்புறப்படுத்தப்பட்டு
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
சில்வர் கிளவ்டு என்ற கம்பெனியின் நதி மூலம் ரிஷி மூலம்
பார்த்தால் 50 ஏக்கர் பட்டாநிலத்தை வைத்திருந்தவர்கள்
ஆட்சியாளர்கள், வனத்துறையின் உதவியுடன் இன்று 3000 ஏக்கர் நிலத்திற்கு மேல் தேயிலை தோட்டத்தை வைத்துள்ளனர். அருகாமையில் ஓடும் ஆற்று நிரை உறிஞ்சி மர அறுவை மில்களுக்கும், தேயிலை தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தி சாக்கடை நீரை அதே ஆற்றுக்குள் விடும்
அவலம் நடந்தேறி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது, இது போன்ற நிறுவனங்களின்
மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வேறு
திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என வந்தனா சிவா என்ற சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர்
தெரிவிக்கிறார்.
![]() |
தேயிலைத் தோட்டங்கள் |
இந்த நாட்டைவிட்டு வெள்ளையன் வெளியேறும்போது மொத்த வனப்பகுதி
24 சதம் இருந்தது. குறைந்தபட்சம் 33 சதமாவது வனம் என்பது இருக்கவேண்டும்
என்பது சர்வதேச பிரகடனம், 2000மாண்டு கணக்குப்படி, ஆனால் சுதந்திர இந்தியாவில் இது 17 சதமாக குறைந்து இன்று
செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் தெரிவது வெறும் 11 சதம் என்ற
மதிப்பீடு இந்த வனங்கள் எப்படி கொள்ளை போய்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம்.
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு குறைந்து 18 சதமாக
உள்ளது.
![]() |
நீலகிரி பழங்குடியினர் நடனம் |
ஆனால் இதே காலத்தில் அணைகள், சுரங்கங்கள்,
தொழிற்சாலைகள் அமைக்க என வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களின் எண்ணிக்கை
மட்டும் 5 கோடியை தாண்டும். வனங்களையும்,
மலைகளையும் காத்து வந்த வனங்களின் கடவுளான இந்த உண்மையான வனவாசிகளை வெளியேற்றிவிட்டு
கார்ப்ரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக இன்று மலையும், மலைசார்ந்த
பகுதிகளும் மாற்றப்படுகிறது. சமீபத்திய செய்தி ஜார்கண்ட் மாநிலத்தில்
மாநில அரசால் கார்ப்ரேட் நிறுவனங்களோடு 102 ஒப்பந்தங்கள்
4.60 லட்சம் கோடி மதிப்பிலான கனிம வளங்களை வெட்டியெடுக்க ஒப்பந்தங்கள்
போடப்பட்டுள்ளன. இதனால் 10ஆயிரம் ஏக்கர்
காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தின் வளம் மிக்க பகுதியான கடையநல்லுர், மேக்கரை, செங்கோட்டை,
குற்றாலம், பழைய குற்றாலம், கடையம், மத்தளம், பாலக்காடடு வாளையார்,
மன்னாற்காடு, மசினக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து
மூங்கில் உள்ளிட்டு வனப்பகுதி அழிக்கப்படுவதால் யானைகள் ஊருக்குள் நுழையக்கூடிய அபாயம்
நீடித்து வருகிறது.
இப்படி இயற்கையின் சுழற்சியை வளர்ச்சியின்
பெயரால் இடையூறு செய்வது விலங்கினங்கள், பறவைகள், தாவர வகைகள், பூச்சிகள் மற்றும் மனிதர்கள் என அனைவருக்கும்
பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. மேலும், வனங்களின் பாதுகாவலர்களாக காலம் காலமாக வசித்து, வனங்கள்
கொடுத்து வந்த பொருட்களை உண்டு வாழ்ந்து வந்த வனமக்களை இன்று நாகரிகத்தின் பெயராலும்,
யானைவழித்தடங்கள், புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு பகுதிகளை புலிகள், யானைகள் பாதுகாப்பு பகுதி என அறிவித்து அனைத்து
நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.

சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு
உருவாக்கப்பட வேண்டும். நாளைய சமூகம் சுரண்டலற்ற சமத்துவ சமூகமாக
உருவாகினாலும், அழிந்த இயற்கையை உடனே உருவாக்க முடியாது.
எனவே தேவை மனித வாழ்க்கைக்கான இயற்கை சூழல்.. அது
சமரசமில்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
நன்றி
2012 அக்டோபர் மாத இளைஞர் முழக்கம்