இந்திய விடுதலைப்போரில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் பெண் வீரங்கனை வீரமங்கை வேலுநாச்சியார் ஆவார். தென்னிந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மகத்தான போர் நடத்தி வெள்ளையரையும், ஆற்காடு நவாப்பையும் புறங்காண செய்த வீரமங்கை வேலுநாச்சியார்தான்.
இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் தம்பதிகளுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் சுட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். வேலு நாச்சியார் கல்வி, ஆயுதப்பயிற்சி, நிர்வாகத் திறன் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலோடு விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கனையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கும் வேலுநாச்சியார் திருமணம் நடைபெற்று அவரது பட்டத்து ராணியானார்.
மன்னர் முத்துவடுகநாதத் தேவருக்கு பெரிதும் உறுதுணையாக பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், தளபதிகளாக மருது சகோதரர்கள் இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு “வெள்ளச்சி” எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச் சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.
இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோஉயிலில் தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப் படையின் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி கௌரி நாச்சியாரும் வீர மரணமடைந்தனர். முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார். பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரைச் சமாதானம் செய்து, இழந்த சீமையை எப்படியேனும் மீட்டுத் தருவதாக ராணிக்கு வாக்குறுதி வழங்கி வேலு நாச்சியாரை காத்தனர். சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கல்லுக்கருகிலுள்ள விருப்பாட்சிப் பாளையத்திற்குத் தப்பிச் சென்றார்.
விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர், விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார். அங்கிருந் ஆற்காடு நவாபின் பிடியிலிருந்து இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளை மீட்கவும், நவாப்பை விரட்டி அடிப்பதற்கும், ராணி வேலுநாச்சியார் திண்டுக்கல்லில் தங்கியிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் படை உதவி கேட்டார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க “விடுதலைப்படை” ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.பிரதானி தாண்டவராயபிள்ளை 8-12-1772 வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலிக்கு ஒரு கடிதமெழுதி ஐயாயிரம் குதிரை வீரர்களையும், ஐயாயிரம் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால், அவர்களுடன் இணைந்து போரிட்டு, இரு சமஸ்தானங்களையும் நவாபிடமிருந்து கைப்பற்ற இயலுமென்று, அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். துரதிஷ்டமாக தாண்டவராய பிள்ளையவர்கள் படை உதவி கேட்ட ஆறு மாதங்களுக்குள் 1773ம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக உயிர் நீத்தார்.
பின்னர் வேலு நாச்சியார் தனது படைகளை ‘சிவகங்கை பிரிவு”, ‘திருப்பத்தூர் பிரிவு”, ‘காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்பத்தூர் பிரிவிற்கு நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து வேலு நாச்சியார் அனுப்பி வைத்தார். வேலுநாச்சியார் அம்முப்படைப் பிரிவை அனுப்பி மும்முனைத் தாக்குதல் நடத்தி நவாபின் படைகளை எளிதில் வெற்றி கண்டார்
விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்த போது வேலு நாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார், மருது சகோதரர்கள் முதலியோர் திண்டுக்கல் கோட்டையிலிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியைச் சந்தித்தனர். அவர், அவர்களை வரவேற்று உபசரித்தார். ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். மேலும் ராணியுடனிருந்த சின்னஞ்சிறு சிறுமி வெள்ளச்சி நாச்சியாரைக் கண்டு மனமிரங்கி அனுதாபம் கொண்டார். அச்சிறுமி மேல் பரிவும், பாசமும், கருணையும் கொண்டார். அவர்களது தாய் நாட்டுப் பற்றையும், வீரத்தையும் கண்டு வியந்து அவர் மகிழ்ச்சியுற்று அவர்களுக்கு உதவி செய்வதாக ஆறுதல் கூறினார்.
பிரதானியின் மறைவிற்குப் பின்னர், வேலுநாச்சியார் தான் நேரடியாக அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டார். குறிப்பாக பிரதானி விட்டுச் சென்ற பணிகளில் சிவகங்கைச் சீமையின் நாட்டார்களுடன் கொண்ட ஓலைத் தொடர்புகளை, தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தமது கணவரிடம் மிகுந்த விசுவாசத்துடன் பணியாற்றிய மருது சகோதரர்களையும் இந்த அரசியல் பணியில் வேலுநாச்சியார் ஈடுபடுத்தினார்.
விருப்பாட்சியிலிருந்து சிவகங்கைச் சீமைத் தலைவர்களுக்கு அனுப்பிய ஓலைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. சிவகங்கைச் சீமை மக்கள் பலர், சிறுசிறு குழுக்களாக ஆயுதங்களுடன் விருப்பாட்சி போய்ச் சேர்ந்தனர். அவர்கள் ராணி வேலுநாச்சியாரைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சிலர் அங்கேயே ராணிக்குப் பாதுகாப்பாகத் தங்கவும் செய்தனர். இதற்குள் எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
ராணி வேலு நாச்சியாரது முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களையும், ஆற்காடு நவாபையும், ஒருசேர அழித்தொழிக்கும் திட்டத்தை உருவாக்கி அதைச் செயல்படுத்துவதற்கு ஹைதர் அலி தயாரானார். சிவகங்கைச் சீமையை ஆற்காடு நவாபின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு உதவும் படைகளைத் திண்டுக்கல் கோட்டை வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஹைதர் அலி, ராணி வேலுநாச்சியாருக்கு செய்தி அனுப்பினார். அதன் படி 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.
ஆற்காடு நவாபின் படைகள் வழியில் பல்வேறு தடைகளை அமைத்தன. வேலு நாச்சியாரது குதிரைப் படைகள், அத்தடைகளைத் தகர்த்தெறிந்து, பெரும் தாக்குதலில் ஈடுபட்டன. மதுரைக்கருகில் ‘கோச்சடை” என்னுமிடத்தில் கம்பெனிப் படைகளும், நவாபின் படைகளும் தடைகள் ஏற்படுத்தித் தாக்கின. வேலு நாச்சியாரது படைகள், நவாபின் படைகளைப் பாய்ந்து தாக்கித் தவிடுபொடியாக்கின. மானாமதுரை வைகையாற்றுப் பகுதியில், வேலு நாச்சியாரது படைகள், கம்பெனி படைகளைத் தாக்கி அவை ஓடி ஒளியுமளவிற்குச் சண்டையிட்டு வெற்றி பெற்றன.
வேலு நாச்சியார் படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், வெள்ளைப்படையில் உருட்டல், மிரட்டலுக்கு பயப்படாமல் வேலு நாச்சியாரை காட்டிக்கொடுக்க முடியாது என சொன்னதால் வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். தற்போது இந்த இடம் கொல்லங்குடி வெட்டையார் 'காளியமாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்தது. சிவகங்கை அரண்மனை வாயில் முற்றத்தில் பரங்கிபடையின் ஆயுத கிடங்கு இருந்தது. அதனை அழித்தொழித்தால் எளிதில் அரண்மனையை முற்றுகையை தகர்த்துவிட முடியும் என்ற நிலையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். இந்திய சுதந்திரப்போரின் முதல் மனித வெடிகுண்டாக செயல்பட்டு வெள்ளையரை ஆட்டம் காண வைத்தார். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி
நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று பூமிதாயின் மடியை அரவனைத்துக் கொண்டார்.அந்த மகத்தான பெண் போராளி இந்திய சுதந்திரப் போரின் முதல் வீராங்கனையாக கும்பினிக்கு எதிராக போராடியவர் மட்டுமல்ல.. 1805 வேலூர் புரட்சி, 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் இவைகளுக்கு முன்பு வெகுமக்களை, விவசாயிகளை, பெண்களை திரட்டி மக்கள் பங்கேற்ற விடுதலைப்படை அமைத்து வெகுஜனபுரட்சி நடத்தியது மிக முக்கிய நிகழ்வாகும். உண்மையில் மக்களின் தலைவியாக இருந்து போராட்டத்தை நடத்திய வீரமங்கை வேலுநாச்சியார் என்றென்றும் நினைக்கப்பட வேண்டிய, கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய தியாகி ஆவார்.
No comments:
Post a Comment