”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

பின்னல் நகரின் கதை

 நாடதெது யாதெனில் !

”பசிப்பிணி என்னும் பாவி” என்று கொடிய பசியை ஒரு பாவமாக உருவாகப்படுத்தி மணிமேகலை காவியம்  கூறுகிறது.  அத்தகைய பசிப்பிணி மனித வாழ்க்கையின் நற்பண்புகளை அழித்து, அவனை தீய வழிக்கு அழைத்துச் செல்லும். அத்தகைய பசியை போக்க அரசு அம்மனிதனுக்கு உணவழித்து காப்பாற்ற வேண்டும். மகாகவி  பாரதி கூட ''தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என கோபத்தில் கொந்தளித்தார். திருவள்ளூவர் கூட ”உறுபசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” ஒரு நாட்டில் இருக்கக்கூடாத அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். 

இதனை போக்க  வேண்டுமென்றால் நாட்டில் அனைவரும் உழைப்பை கொண்டாட வேண்டும். நிலம், வேலை, உணவு என்பது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை உலகின் மூன்றில் ஒரு பகுதி நாடுகளில் உறுதி செய்துள்ளார்கள். இதனால் வேலையின்மை போக்கி, வாங்கும் சக்தியை அதிகரித்து வறுமையை ஒழித்துள்ளார்கள். இதனை சாதித்து காட்டிய ஊர்தான் திருப்பூர் என்றால் மிகையாகாது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர், திருப்புமுனைக்கு பெயர் பெற்றது ஆகும். 

நொய்யல் கரையின் வர்த்தகங்கள் 

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள புலம்  பெயர்ந்த தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாத்து உயர்த்தியதில் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1980 களுக்கு பின் ஏற்றுமதி வர்த்தகத்தில் படிப்படியாக இந்தியாவின் ஆயுத்த ஆடை ஏற்றுமதியில் தனித்துவத்தோடு முன்னேறிய திருப்பூர் இன்று 34 சதவீத பங்கை ( ரூ.44,747 கோடி மதிப்பில்)  வகிக்கிறது. உலகளாவிய பின்னலாடை சந்தையில் முக்கிய மையமாக திகழ்கிறது. தொழிலாளிகளாக வந்தவர்கள் கூட உழைப்பால் முன்னேறி தொழில் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்களாக மாறிய வரலாறு திருப்பூரில் ஏராளம். 

திருப்பூரின்  அருகாமை நகரமான நொய்யல் ஆற்றின்  கரையில் இருந்த சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் பதியப்பட்ட கொடுமணம் என்ற கொடுமணல் கிமு முதலாம்  நூற்றாண்டில் இரும்பை உருக்கும் ஆலையும்,  நகைக்கற்களை கொண்டு ஆபரணங்கள்  தயாரிக்கும் தொழில்நுட்பமும்  கொண்டு மேற்கு கடற்கரை வழியாக கிரேக்கம், ரோமப்புரிக்கு வர்த்தகம் செய்த தொடர்புகளை அகழ்வாயின் மூலம்  கொடுமணலில் கண்டறிந்துள்ளார்கள். 

இப்படி திருப்பூரை சுற்றி வரலாற்றின் அம்சங்கள் புதைந்து கிடக்கிறது. பொள்ளாச்சி சந்தையும், காங்கயம் சந்தையும், திருப்பூர் பருத்தி சந்தையும் வர்த்தகத்தில் பெயர் பெற்றவைகளாகும். 

போராட்டத்தின் வழியில் 

இத்தகைய திருப்பூர் பல்வேறு நெருக்கடிக்களை கடந்த 40 ஆண்டுகளில் சந்தித்துதான்  இன்று ரூ.44,747 கோடி மதிப்பில் ஏற்றுமதி, உள்நாட்டு வணிகத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் வர்த்தகம் என பிரமாண்ட  வளர்ச்சியை சந்தித்துள்ளது. குடிநீர் பற்றாகுறை, சாயக்கழிவு பிரச்சனை, மின்தட்டுப்பாடு, அரசின் வரிக்கொள்கை, உயர் பணமதிப்பு செல்லாது, ஜி.எஸ்.டி, பருத்தியின் நிலையற்ற விலை, நூல்விலையுயர்வு, கண்டெய்னர் தட்டுபாடு, அண்டைநாடுகளின்  வர்த்தக ஒப்பந்தங்கள் என பல தடைகளை கடக்க  போராடி வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இந்திய ஆடை ஏற்றுமதித் துறையின் போட்டித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் 3 கோடி தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்களுக்கான மிகப்பெரிய  ஏற்றுமதி சந்தையான அமெரிக்காவிற்கு கடந்த நிதியாண்டில் சுமார் ரூ 40,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும். 

திருப்பூர், நொய்டா, குருகிராம், பெங்களூரு, லுாதியானா மற்றும் ஜெய்ப்பூர்  அமெரிக்க சந்தையை நம்பியுள்ளன. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பல லட்சம் தொழிலாளர்கள் இங்குவேலை செய்து வருகிறார்கள்.   கடந்த பல ஆண்டுகளாகவே, அமெரிக்க சந்தையின் வளர்ச்சி, இந்திய ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய்க்கு முக்கிய பங்களித்து வருகிறது. 

அமெரிக்க வரி பயங்கரவாதம்

ஏற்கனவே இந்திய ஆயுத்த ஆடைகளுக்கு அமெரிக்கா 16 சதவீதம்  வரியை விதித்துள்ளது. தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை காரணம்  காட்டி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் 66  சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கதேசம், வியட்நாம், சீனா, கம்போடியா, இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய ஆடைகள் போட்டித்தன்மையை இழக்கின்றன. இந்த  நாடுகள் 30 முதல் 35 சதவீத வரியை மட்டுமே எதிர்கொள்ளும்  நிலையில் இந்தியா 66  சதவீதம் வரியை எதிர்கொள்கிறது. அமெரிக்கா விதித்த 50% வரியால் மட்டும் மாதத்திற்கு ரூ.2,000 கோடி வர்த்தக இழப்பு திருப்பூருக்கு ஏற்படுகிறது

திருப்பூரில் அமெரிக்காவிற்கு 18000 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பகுதி நிறுவனங்களும்,  ஐரோப்பிய மற்றும் இதர நாடுகளுக்கு  ஒரு பகுதி நிறுவனங்களும் ஏற்றுமதி செய்கின்றன. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் வேறுநாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தை மாற்றும் போது அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த இதர பின்னலாடை  நிறுவனங்கள்  போட்டியை சந்திக்க வேண்டி வரும். பாதிப்பும்  ஏற்படும் நிலை உள்ளது. 

இதனால் சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சந்தை மாறுவதால்  நமக்கான இழப்பு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது மீளமுடியாத நஷ்டத்தையோ ஏற்படுத்தும். திருப்பூரில் பனியன் தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிலும், சார்பு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பயங்கரமாக பாதிக்கப்படும். 

மேற்படி  அமெரிக்கவரி விதிப்பு என்பது குறிப்பிட்ட பொருளின் மீதான வரியாக இல்லாமல் ஒரு  தேசத்தின் மீதும், நகரத்தின்  மீது போடபட்டுள்ள பேரழிவு வரி ஆயுதமாகும்.  ஏற்கனவே அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பின்பு,  2015  ஜனவரி முதல் ஜூன் வரை
யான காலத்தில் இந்திய ஏற்றுமதி அமெரிக்காவிற்கு 5.36 பில்லியன்  டாலராக இருந்தது. இதே காலத்தில் வியட்நாம்  8.59 பில்லியன் டாலராக 18.5 சதவீதம் கூடுதலாக இருந்தது.  இந்தியா மாதத்திற்கு 860 மில்லியன்  டாலர் அளவில் ஏற்றுமதி செய்து வந்த நிலையில்  2025 ஜூனில் 770 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. தற்போது வரிக் கொள்கையின்  காரணமாக மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது  ஏற்றுமதிக்கான ஆர்டர் கேட்பது சுமார் ரூ 4000 கோடி மதிப்பில் நின்றுபோயுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

வேலையிழக்கும் தொழிலாளர்கள் 

திருப்பூரின்  பனியன் கம்பெனிகளில் தற்போதே சில நிறுவனங்களில் 50 சதவீதம் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள தொழிலாளர்களை எப்படி பாதுகாப்பது என புலம்புகிறார்கள். ஏற்கனவே இங்கு கணிசமான நிறுவனங்களில் நிரந்தரமற்ற தன்மையில் தொழிலாளர்கள்  ஒப்பந்த அடிப்படையிலும், பீஸ்ரேட் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் ஒராண்டில் பல நிறுவனங்களுக்கு மாறிசென்று பணியாற்றும் சூழலே நிலவி வருகிறது. இதனால் சட்டசலுகைகளோ, உரிமைகளோ பெரும் பகுதி தொழிலாளர்களுக்கு  கிடைக்காத நிலையில் தொழிற்சங்கங்கள் உள்ள நிறுவனங்களில் மட்டும் ஒரளவு தொழிலாளர்கள் பாதுகாப்பு உள்ளது. 


பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய ஜாப் ஆர்டர்களுக்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகளை பாதிக்கு பாதி கொடுத்து நிறுவன செயல்பாட்டை நிறுத்தி விட்டார்கள். நிறுவனம் நடத்தி நஷ்டம் ஆவதைவிட நிறுத்திவிட்டால் நஷ்டம் குறைவு என்கிறார்கள். ஆனால் இதை  நம்பி பணியாற்றிய தொழிலாளர்கள், நிறுவன அலுவலக  ஊழியர்கள்  நிலைதான் பெரும் கேள்விகுறியாகியுள்ளது. 

இத்தோடு ஜவுளி சார்ந்த கார்பெட், பெட்சீட், திரைசீலை போன்றவை அமெரிக்காவிற்கு 60 சதவீதம்  இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 1.5 பில்லியன்  டாலர் மதிப்பில் ஏற்றுமதி ஆகிறது. தற்போதைய அமெரிக்க வரி விதிப்பால் இந்த ஏற்றுமதியில் 70 சதவீதம் மட்டுமே  செல்லும்  நிலை ( 920 மில்லியன்  டாலர் அளவில் ) ஏற்பட்டுள்ளது.  இந்த துறையில் அதிகளவில் பெண்கள்  பணியாற்றி வந்த நிலையில் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. 

தற்போதைய நிலையில் இந்திய அரசு, அனைத்து மூலப்பொருட்களுக்கும் இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பதும்,  பருத்தி விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்து ஆயுத்த ஆடை தொழிலுக்கு பருத்தியை கட்டுபடியாகும்விலையில் வழங்க வேண்டும். மேலும் மின்கட்டணம், போக்குவரத்து ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்க வேண்டும். வங்கிகளில் வாங்கிய கடனுக்கு என்பிஏ கால அவகாசத்தை நிலைமை சீரடையும்  வரை ஒத்தி வைக்க வேண்டும். உடனடி நிவாரணமாய் வட்டி மானியத்தோடு வங்கி கடன்களை நீண்ட கால தவணைகளில் வழங்குவது. ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பது. வேலை இழக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு நிதி உதவி, மற்றும் தேவையான உணவு பொருட்களை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. 

செ.முத்துக்கண்ணன்

*ஏகாதிபத்திய எதிர்ப்பின் முன்னணிப்படை - கியூபா*

‘’உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான். மாறாக, கடமையிருக்கும் பாதையைத் தான் தேடுவான். அவன்தான் செயல்திறனுள்ள மனிதன்; அவனது இன்றைய கனவுகள்தான் நாளைய நீதிகளாக மாறும் ஏனெனில் அவன் வரலாற்றின் முக்கிய நடப்புகளை அறியப் பின்னோக்கிப் பார்க்கிறான்; காலத்தின் கொப்பரையில் எரிந்துவரும் மக்கள் ரத்தம் தோய்ந்தபடி பொங்கி வருவதை அவன் காண்கிறான்; எனவே சிறிது கூடத் தயக்கமின்றி எதிர்காலம் கடமையின் பக்கத்தில் தான் இருக்கிறது என்பதை அறிகிறான்’’.  என்ற ஜோஸ் மார்த்தியின்  வார்த்தைகளில் தட்டியெழுப்பட்டது கியூபா விடுதலை இயக்கமும், புரட்சிகர உணர்வும்.  இதுபோன்ற உயர்ந்த குறிக்கோளே இளைஞர்களை தூண்டியது என்பதை உணரும்போதுதான், சாண்டியாகோவில் வீழ்ந்த இளைஞர்களின் வீர உணர்வை நம்மால் உணரமுடியும்.

 *கொடுங்கோலன் பாடிஸ்டா* 

அமெரிக்க பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் லத்தீன் அமெரிக்காவின் வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டுக் கொண்டு இருந்தது. பயிர் செய்யப்படாத ஒரு துண்டு நிலம் இருக்கும் போது பசியுடன் பல ஆயிரக்கணக்கானவர்கள் இரவு தூங்க செல்வது கொடுமையிலும் கொடுமை. போதுமான உணவோ, சுகாதாரவோ இல்லாத நிலையில் இது என்னவென்று அறியாத நிலையில் 90 சதவீதம் பேரும், தனது  பெயரைக்கூட எழுத தெரியாத 80 சதவீதம் மக்களும்  கொண்ட தேசமாக கியூபாவும் அன்றைய தென் அமெரிக்காவின் பூர்வகுடி கிராமங்களின் நிலை இருந்தது. கொலம்பஸ் கண்ட அமெரிக்கா நாகரிகத்தின் அடையாளம்  என உலகம் தூக்கிக் கொண்டாடுவது, செவ்விந்திய பூர்வகுடிகளின் இரத்தத்தில், உழைப்பில் உருவாக்கப்பட்ட உலகம் என்பதை மேற்கத்திய ஊடகங்கள் மறைத்தே வந்துள்ளன. இச்சூழலில் அமெரிக்காவின்  அடிமை பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆட்சியில் மக்களின் துன்ப துயரங்களை மார்த்தியின் வழியில் நின்று தூக்கி எறிய தூண்டப்பட்ட இயக்கமே ஜூலை 26 உருவான பாடிஸ்டாவிற்கு எதிரான போராட்டம். 

கொடுங்கோலன் பாடிஸ்டா மக்களிடம் அவதூறுகளை அள்ளி வீசவும், பயங்கரமான பொய்களை பரப்பவும் தயங்கியதில்லை. கியூபாவை இரத்த வெள்ளத்தில் குளிப்பாட்ட தயங்காத கொலைகாரனாக பாடிஸ்டா இராணுவத்தை கொண்டு தாக்கியபோது அதனை கியூபா இளைஞர்கள் எதிர்கொண்டார்கள். இந்த நிலைமைகளை ஆய்வு செய்த  பிடல், நகர்புற, கிராமப்புற பணி நிலைமைகளையும் நல்ல வாழ்வு நிலைமைகளையும் கோரும் வேலை நிறுத்தங்களையும், நிலம் கோரும் விவசாயிகளின் போராட்டத்தையும் ஒரு தேசத்தின் ஆழமான ஆசைகளையும் பலவந்தமாக அடக்கிவிட முடியும். எனவே தான் இத்தகைய அரசுகளை அமெரிக்க பெருமுதலாளிகள் தேர்வு செய்கிறார்கள். அதனால்தான் பலவந்தத்தின் அடிப்படையிலான அரசுகள் இவ்வளவு நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடிகிறது என பாடிஸ்டா அரசை சாடினார்..

 *ஜூலை 26 இயக்கத்தின் அறம் சார் நடவடிக்கை.* 

பிடல் தலைமையில் மொன்கடா ராணுவ முகாமுள்ள சாண்டியாகோ நோக்கி ஆயுதந்தாங்கிய புரட்சியை நடத்த ஜூலை 26ம் தேதியை தீர்மானித்தார். காரணம் ஜோஸ் மார்த்தி தனது முதல் சுதந்திரப்போராட்டத்தை தொடங்கிய நாள் ஜூலை 26 ஆகும். கியூபாவில் பற்றி எறிந்த தேசிய உணர்வை கணக்கில் கொண்டு இதை தீர்மானித்தார்.  மேலும்  ஜூலை மாதத்தில் இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்த பண்டிகை கொண்டாட்டத்தில் ஆடல், பாடல் விருந்துகளில் ராணுவ முகாமை விட்டு  நகருக்குள் ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் இருப்பார்கள். அந்த அதிகாலை நேரத்தில் தாக்குவது என முடிவெடுத்து துவக்கினார்கள். 

அதிகாலை 5 மணிக்கு பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் வீரர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். “நாம் சண்டையிடும் போது பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்க கூடாது. அவசியமில்லாமல் பொதுசொத்துகளை நாசப்படுத்தக்கூடாது, சரணடையும் வீரர்களை சுடக்கூடாது, கைது செய்யப்படும் வீரர்களை உரிய மரியாதையுடன் நடத்துவது, காயம் பட்டால் சிகிச்சை அளிப்பது, நமது போராட்டம் குறித்து அவர்களிடம் விளக்கி கூறுவது, அவர்கள் வீட்டிற்கு போக விரும்பினால் விடுதலை செய்து அனுப்பிட வேண்டும். இவற்றை மீறி அவர்கள்  தாக்கினால் தற்காப்பிற்காக நீங்கள் தாக்கலாம்“  போரில் அவர் காட்டிய அறமே இன்றும் கியூப மக்களை வழிநடத்துகிறது. 123 வீரர்கள் பிடலின் தலைமையில் அணிவகுத்தனர்.ஜூலை 29ம் தேதி இது தோற்கடிக்கப்பட்டு பிடல் உட்பட கைது செய்யப்பட்டனர்.  இதன் மீது பாடிஸ்டா அரசு தனி சட்டம் ஒன்று நிறைவேற்றி தனி நீதிமன்றம் அமைத்து அதன் தீர்ப்பே இறுதியானது. மேல் முறையீடு செய்ய சட்டப்படி வழியில்லை என்ற அளவில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.   

நீதிமன்றத்தில் பிடல் 

வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற புகழ்  பெற்ற உரையை நீதிமன்ற விசாரணையின் போது நிகழ்ச்சினார். பிடல் காஸ்ட்ரோ.  1933ல் சிறை கைதிகளை படுகொலை செய்த கொடூரம் பாடிஸ்டாவோடு இணைந்தது. ஆவேசத்தின் உச்சகட்டத்தில் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. ஆனால் ஜூலை 26 துவங்கிய பாடிஸ்டாவுக்கு எதிரான புரட்சியை நசுக்க சாண்டியாகோ டி கியூபாவில் எல்லா வகையான அத்துமீறல்களையும், கொடூரங்களையும் அந்த வாரம் முழுவதும் நிகழ்த்தினான். சித்ரவதைகளின் பயிற்சிகூடமாக பயன்படுத்தினான். சித்ரவதை செய்து மாடியில் இருந்து தூக்கி எறிந்து சுட்டுக் கொன்றான். 

சித்ரவதைகளின் போது ஆண்களின் வீரத்தை கண்டு சலித்துபோன அவர்கள், பெண்களின்  தீரமிக உறுதியை குலைக்க முயற்சி செய்தார்கள். பாடிஸ்டாவின் ராணுவ வீரர்கள் இரத்தம் தோய்ந்த கண்னை எடுத்து ஒரு பெண்ணிடம் காட்டி இது உனது சகோதரனின்  கண், அவன் சொல்ல மறுத்ததை நீ சொல்லவில்லையென்றால் அவனது மறு கண்ணையும் தோண்டி எடுத்து விடுவோம் என சொன்ன போது, சகோதரியோ, நீங்கள் ஒரு கண்ணை பிடுங்கி எடுத்தபின்னும் அவன் பேச மறுத்த போதும் நான் மட்டும் பேசுவேனா? என பதிலுரைத்தாள். சற்று நேரத்தில் மீண்டும் வந்து உன் காதலனையும் சுட்டு கொன்றுவிட்டோம் என சொன்ன போது, என் காதலன்  சாகவில்லை, ஏனெனில் தனது நாட்டிற்காக உயிரை விடுவதென்பது எப்போதும் வாழ்வதற்கு சமமானது.  

”இறந்தவர்களின் சமாதியருகே கண்ணீர் சிந்துவதற்கும் ஒர் எல்லையுண்டு, தாய்  நாட்டின் மிதும் அதன் புகழின் மீதும் எல்லையற்ற அன்பு செலுத்துவதுதான் அந்த எல்லை. இந்த அன்பு என்றும் தோல்வியடைவதில்லை. நம்பிக்கை இழப்பதில்லை, சுருங்கிவிடுவதில்லை, தியாகிகளின் சமாதிகளே நமது ஆராதனைக்குரிய தேவாலயங்கள்“.  தாய் நாட்டின் மடியில் ஒருவன்  உயிர்விடும்போது துன்பம்  முடிகிறது. சிறைச்  சங்கிலிகள் தெறிகின்றன. இறுதியில் அந்த மரணத்தில் வாழ்வு துவங்குகிறது.  என்ற பிடலின் உரையின் அடிநாதம் புரட்சியின் தியாகத் தழும்புகளை தட்டி எழுப்புகிறது.

 *புரட்சியின்  போது கியூபா* 

1958 டிசம்பர் திங்களின் கடைசிநாட்களில் பாடிஸ்டா தனது மாளிகை பொருட்களோடு தங்கம், பணத்தை கடத்திக்கொண்டு ஓடிவிட்டான். 1959 ஜனவரி துவக்கநாளில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய  பிடல் ராணுவ சதியால் செய்யப்படும் மாற்றங்களை ஏற்க இயலாது, புரட்சியின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்படும் என அறிவித்து, ஹவானாவை கைப்பற்ற சேகுவேராவுக்கு உத்தரவிட்டார். புரட்சி வெற்றி பெற்றது. மக்களின்  பேராதரவோடு.. 

ஃபூஜென்ஸியோ பாடிஸ்டாவின் ஆட்சி கியூபாவிலிருந்து அமெரிக்க ஏகபோகங் களுக்குப் பொருந்தக் கூடிய ஆட்சி முறையாக இருந்தது. கியூப மக்களுக்குப் பொருந்தக் கூடியதாக அது இல்லை. கியூப மக்கள் ஏராளமான தியாகங்கள் புரிந்து, அந்த ஆட்சியைத் தூக்கியெறிந்தனர்.

கியூபாவில் புரட்சி வெற்றியடைந்த போது, அங்கிருந்த நிலை குறித்து பிடல் கூறுகிறார். அனைத்துக்கும் முதலாவதாக வேலை செய்யத் தயாராக இருந்த சுமார் 60,000 கியூபர்கள் வேலையின்றி இருந்தனர். இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் பெரும் பொருளாதார மந்தநிலை பேரழிவை உண்டாக்கிய சமயத்தில், அங்கிருந்த வேலையற்றோரின் எண்ணிக்கைக்கு சமமானது. வெறும் 60 லட்சம் ஜனத்தொகையில் பாதிக்கு மேல், 30 லட்சம் பேருக்கு மேல் மின்வசதி இல்லை. குறைந்த பட்ச சுகாதார வசதிகள் கூட இல்லாமல் 35 லட்சம் பேர் சேரிகளில் வசித்தனர். நகரங்களில் மக்களின் வருவாயில் சுமார் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகை எடுத்துக் கொண்டது. மின்சாரக் கட்டணமும் வாடகையும் உலகிலேயே அதிகமானவைகளில் ஒன்றாக இருந்தன.

70% கிராமப்புறக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை, 37% கல்வியறிவற்றவர்களாக, 2 சதவிதத்தினர் காசநோயால் துன்புற்றனர், 95 சதவிதக் குழந்தைகள் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். குழந்தை இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. வாழ்க்கைத்தரம் வருந்தத்தக்க அளவு கீழாக இருந்தது. எண்பத்து ஐந்து சதவீத விவசாயிகள் தமது நிலத்துக்கு தனது மொத்த வருவாயில் 30 சதத்தை வாடகையாக செலுத்தி வந்தனர். அதே சமயம் கிராமப்புறங்களில் 46 சத நிலத்தை மொத்த நிலஉடைமையாளர்களில் 15 சதவீதத்தினர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மருத்துவமனை படுக்கை வசதி நகைப்புக்கிடமானதாக இருந்தது. பொது உபயோக வசதிகள், மின்சார வசதி, தொலைபேசி வேலைகள் அனைத்தும் அமெரிக்க ஏகபோகங்களுக்கு சொந்தமாக இருந்தன. வங்கித்துறை இறக்குமதி வர்த்தகம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பெரும்பகுதி: சர்க்கரை உற்பத்தியில் கியூபாவில் சிறந்த விளைநிலங்களில் பெரும்பகுதி மற்றும் அனைத்து தொழில்களிலும் முக்கியமான தொழிற்சாலைகள் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமாக இருந்தன.

 *புரட்சிகர அரசின் முன்னுரிமைத்திட்டம்* 

புரட்சி அரசு தனது முதல் நடவடிக்கையாக வீட்டு வாடகையை 50 சத குறைத்தது. இரண்டாவதாக அமெரிக்க ஏகபோகத்துக்குச் சொந்தமான ஒரு தொலைபேசி நிறுவனத்துக்கு பாடிஸ்டா அளித்திருந்த சலுகையை ரத்து செய்தது அந்தச் சட்டம். மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால், மதிப்பு மிக்க சலுகைகள் பெறப்பட்டிருந்தன. புரட்சி அரசு இந்தச் சலுகைகளையெல்லாம் ரத்து செய்து தொலைபேசி சேவைகளுக்கு நியாயமான கட்டணங்களை மறுபடி நிர்ணயித்தது. இதனால் அமெரிக்க ஏகபோகங்களுடன் முதல் முரண்பாடு கிளம்பியது. 

மூன்றாவது நடவடிக்கை மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தது. அது உலகிலேயே அதிகமானவைகளில் ஒன்றாக இருந்தது. இது அமெரிக்க ஏகபோகங்களுடன் இரண்டாவது முரண்பாட்டுக்கு இட்டுச் சென்றது. 

மக்களுக்கு மிகவும் தேவையான, தவிர்க்க முடியாத சட்டம், உலக மக்களுக்கும் கூட விரைவிலோ, பின்னாலோ தேவையான, தவிர்க்க முடியாத சட்டம், இயல்பாகவே, கொள்கையளவில் எல்லோரும் நிலச்சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்றனர். அதை மறுக்க யாருக்கும் துணிவில்லை; கியூபாவில் நில உடைமையாளர்கள் கூட நிலச் சீர்திருத்தத்தை ஆதரித்தனர். 2 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் அமெரிக்க ஏகபோகங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. விவசாய சீர்திருத்தம் அதை 40 ஹெக்டேர்களாகக் குறைந்தது. இந்த ஏகபோகங்களுக்கும், நில உடைமையாளர் களுக்கும் பெருத்த அக்கிரமமாகத் தோன்றியது. இதனால் நிலமற்ற 2 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு மேல் கிராமப்புறத்தில் வசித்தன. அந்த நிலத்தில்தான் தேவையான உணவு வகைகள் பயிரிடப்பட்டன. அமெரிக்க ஏகபோகங்களிடம் வெறும் நிலம் மட்டும் இல்லை, சிறந்த சுரங்கங்களுக்கும் இருந்தன. கியூபா ஏராளமான துத்தநாகத்தை உற்பத்தி செய்கிறது. அவை அமெரிக்க நலன்களுக்காக சுரண்டப்படுகின்றன. அமெரிக்க நிறுவனமான மோவாபே நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் 120 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் அளவுக்கு ஏராளமான சலுகைகளைப் பெற்றிருந்தது. 

எனவே இந்த ஏகபோக நிறுவனங்கள் தாம் ஏற்றுமதி செய்யும் கனிமங்களுக்கு 25 சதவிகிதம் வரி கட்ட வேண்டுமென்று புரட்சி அரசு சட்டம் நிறைவேற்றியது. புரட்சி அரசின் அணுகுமுறை ஏற்கனவே மிகவும் துணிச்சலாக இருந்தது. அது சர்வதேச மின் டிரஸ்டின் நலன்களுடன் மோதியது சர்வதேச தொலைபேசி டிரஸ்டின் நலன்களுடன் மோதியது மொத்தத்தில், அமெரிக்காவின் மிகவும் வலிமையான நலன்களுடன் மோதியது.

 *மருத்துவத்துறையில் உலக சாதனை* 

பாடிஸ்டாவை விரட்டி புரட்சியின் மூலம் புதிய கியூபா அமைக்கப்பட்ட ஒராண்டடிற்குள் மருத்துவத்தை அனைவருக்குமானதாக மாற்ற அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 1960 ஆம் ஆண்டில் இருந்தே இதர நாடுகளுக்கான உதவியை செய்திட துவங்கிவிட்டது. 1960 ல் சிலியின் பூகம்ப பாதிப்பிற்கான மருத்துவ உதவியும் 1963ல் அல்ஜீரியாவிற்கும் உதவிகள் என செய்தது. 1960 களில் இருந்து ஆப்பிரிக்காவின் 39 நாடுகளில் கியூபாவின் 79000 மருத்துவ வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் உலகம் முழுவதும் 164 நாடுகளில் 4 லட்சம் கியூபா வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

2014ல் எப்லா வைரஸ் தாக்குதல் பரவிய காலத்தில் அமெரிக்கா அதிபராக இருந்த ஒபாமா “கியூபாவும், அமெரிக்காவும் இணைந்து ஒவ்வொரு பக்கமும் நோய் பரவலை தடுத்து நிறுத்து மக்களை காப்பாற்றும்” என கூறினார். கியூபாவின் இத்தகைய பணியின் காரணமாக உலகம் முழுவதும்  லட்சக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளது.  120 கோடி மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 22 லட்சம் குழந்தைகள் பிறப்பதற்கான பிரசவத்தை உறுதி செய்து பூமிப் பந்தில் ஆரோக்கியமாக வளர வழி வகுத்துள்ளது. ஏறத்தாழ 80 லட்சம் அறுவை சிகிச்சைகளை கியூப மருத்துவர்கள் செய்துள்ளனர்.  

கியூபா மருத்துவ சேவைகளை உலக நாடுகளுக்கு ஆற்றுவது மட்டுமல்ல, அந்த நாடுகளே மருத்துவத்துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று திட்டத்தை வகுத்தது கியூபா. அதற்கான உடனடி தேவையாக வந்த பேரிடர்தான் ஹரிகேன் புயல். மத்திய அமெரிக்காவை கடுமையாக தாக்கிய பின்ணணியில் 30000 பொதுமக்கள் இறந்ததும், 25 லட்சம் பேர் வீடிழந்து பாதிக்கப்பட்ட நிலையில்தான் நிரந்தரமாக மருத்துவபணியை செய்வதற்கான திட்டமிடலையும் கியூபா உருவாக்கியது.

கியூபாவின் தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ 1999ல் லத்தின் அமெரிக்காவிற்கான மருத்துவப் பயிற்சி மையத்தினை கியூபாவில் துவங்கினார். 1959 முதல் பொருளாதார தடையை விதித்து கியூபாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என துடித்து வரும் அமெரிக்கா உள்ளிட்டு 105 நாடுகளை சேர்ந்த 29000 பேர் கியூப பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவர்களாக படித்து பட்டம் பெற்று வெளி வந்தனர். இன்னும் சிறப்பாக சொல்கிறார்கள் அதில் பாதி பேர் பெண்கள், 75 சதவீதம் பேர் அந்த நாடுகளின் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள் என்பது முக்கியமானது. அது மட்டுமல்ல 100 பழங்குடியின பிரிவினர்கள் வீட்டுக் குழந்தைகள் என்பது மேலும் சிறப்பானது. பிடல் என்ற அந்த மகத்தான மனிதன் மருத்துவர்களை கூட பணக்கார வீடுகளில் இருந்து தேர்வு செய்யவில்லை, பெண்களாக, பழங்குடியினராக, விவசாயத் தொழிலாளியாக தேர்வு செய்து மருத்துவர்களாக உருவாக்கியதே இன்றும் எந்த நாடுகள் பாதிப்பு என்றால் முதல் வரிசையில் கியூபாவின் மருத்துவர்கள் நிற்பதன் பொருள் புரியும். 

 *மானுடகுல காதலர்கள் நாங்கள்* 

பிடலின்  வார்த்தைகளில் சொல்வதென்றால் “புரட்சிகாரர்களும், சோசலிசவாதிகளும், மார்க்சிய-லெனினியவாதிகளுமாகிய நாங்கள் பகைமையை ஒரு கோட்பாடாக கற்பிப்பதில்லை. இப்படி சொல்வதால் எங்களுக்கு ஒடுக்குமுறை அமைப்போடு ஏதோவொரு இணக்க உணர்வு இருப்பதாலோ அதை எதிர்த்து எவ்வளவு வலுவாகப் போராட வேண்டுமோ அவ்வளவு வலுவாக நாங்கள் போராடவில்லை என்றோ அர்த்தமாகாது. ஏகாதிபத்தியத்தின் எல்லா கொடுஞ்செயல்களாலும் நாங்கள் பாதிக்கபட்டோம். ஆனாலும் ஒரு அமெரிக்கர் இந்த நாட்டுக்கு வருகிறார் என்றால் அவரை இங்கே ஒவ்வொருவரும் மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஏனென்றால் நாங்கள் அமெரிக்க மக்களை வெறுக்கவில்லை. நாங்கள் ஏற்க மறுப்பதும், வெறுப்பதும் எதுவென்றால் அந்த அமைப்பு முறையைதான். தனிப்பட்ட மனிதர்கள் மீது பகையில்லை. அநீதியான சுரண்டல் அமைப்பின் மீதுதான் பகை என்பதே உண்மை.” ஆம் மற்றொரு வார்த்தையில் சொல்வதென்றால் புரட்சி என்பதே அன்பு தான்., உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ள ஏகாதிபத்திய, முதலாளித்துவ அமைப்பின் மீதே பகை கொள்கிறோம். மனிதகுல விரோதி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மனித நேய சோசலிச கியூபாவை பாதுகாக்க கரம் கோர்ப்போம்… 

எனவே உலகிற்கு உரக்க சொல்லும் தருணமிது. ஒரு கடலின் அலைகள் நாம், ஒரு தோட்டத்தின் மரங்கள் நாம், ஒரு மரத்தின் பூக்கள் நாம் என்று சர்வதேசியம் சொல்லும் சோசலிசத்தின் புதல்வர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். பூமிபந்தில் உள்ள உயிர்களின் மீது பேரன்பு கொண்டுள்ளோம்.

செ.முத்துக்கண்ணன்

நன்றி தீக்கதிர் 26.7.25