”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

தொழில் நெருக்கடி தீர்வுக்கான போராட்டங்களும்,. ஒற்றுமையும்.

தொழில் நெருக்கடி தீர்வுக்கான போராட்டங்களும்,. ஒற்றுமையும். இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடியது ஜவுளித்துறை. இந்தியா முழுவதும் 4.5 கோடி பேர் ஜவுளித்துறை மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்திய ஜவுளித்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.16.7 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.3.33 லட்சம் கோடியாக உள்ளது. பெரிய உள்நாட்டுச் சந்தையை கொண்டு உள்ள நிலையில் செலவு குறைந்த மனிதவளத்துடன் வேகமாக வளர்ந்து வந்த துறை ஆகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித்துறை பல்வேறு காரணங்களால் தற்போது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஜவுளித்துறையின் அடிப்படை மூலப்பொருளான பருத்தியின் விலையை சர்வதேச சந்தையை காரணம் காட்டி இந்திய பருத்தி சந்தை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்திய பருத்தி கழகம் மூலம் பருத்தி விவசாயிகளிடம் நியாமான முறையில் கொள்முதல் செய்யாமலும், இருப்பு வைத்த பருத்தியை மிகபெரும் கார்ப்ரேட் வியாபாரிகளின் நலனுக்காக ஊக வாணிகத்திற்கு அனுமதித்தது. இந்தியாவின் 90% பருத்தி உற்பத்தி பருத்தி சீசன் (டிசம்பர் - மார்ச்) காலகட்டத்தில்தான் நடைபெறும். இந்தாண்டு பழைய இருப்போடு சேர்த்து தேவைக்கேற்ப கூடுதலாக பருத்தி இருப்பு உள்ளது என இந்திய பருத்தி கூட்டமைப்பு கூறினாலும் உற்பத்தி செய்த விவசாயிக்கும், மூலபொருளாக தேவைப்படும் ஜவுளித்துறையினருக்கும் நியாயமான விலையில் கிடைக்காமல் இடையில் உள்ள பெரும் வர்த்தக சூதாடிகள் ஆதாயம் அடையும் நிலை உள்ளது. கடந்த ஓராண்டாக ஜவுளித் தொழிலின் நிலையற்ற தன்மைக்கு தங்களின் லாப வேட்கைக்காக உள்நாட்டு தேவையை கருத்தில் கொள்ளாமல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே காரணமாகும். நூல் விலை உயர்வினால் துவக்கத்தில் 50% அளவில் உற்பத்தி குறைய ஆரம்பித்தது. பின்னர் 90% உற்பத்தி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தான் நடைபெறுவதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வங்கதேசம் போன்ற இந்தியாவின் போட்டி நாடுகள் இந்தியாவைவிட 30% விலை குறைவாக பின்னலாடை தயார் செய்கின்றனர். இதனால் சர்வதேச ஆர்டர்கள் இந்த நாடுகளுக்கு அதிகம் செல்கிறது. அத்தோடு இந்திய உள்நாட்டு சந்தைக்குமே வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் போக்கு ( சுமார் ரூ 2800 கோடி ) மதிப்புக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகம், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிக கட்டணங்கள் விதிக்கப்படுவதும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் வரி சலுகைகளும் இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கிறது என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் 11 சதவீதம் இறக்குமதி வரி பருத்திக்கு இந்தியாவில் விதிக்கப்படுகிறது. இது பன்னாட்டு கார்ப்ரேட் பருத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதால் உள் நாட்டு ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பிற்கு செல்கிறார்கள். பருத்தி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பருத்திக்கு இறக்குமதி வரி கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ஏமாற்று வேலையே, ஏனெனில் பருத்தி விவசாயிகளிடம் பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டிய இந்திய பருத்திக் கழகம் இது தன் வேலையல்ல, தனியார் வர்த்தகர்கள் கொள்முதல் செய்வார்கள் என ஒதுங்கி கொண்டது. விவசாயியின் உற்பத்தி செலவுக்கு கூடுதலாக ஒன்ரை மடங்கு கொள்முதல் விலை தருவதாக சொன்ன ஒன்றிய அரசு இதுவரை 8 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தவில்லை. மறுபுறம் மாநில அரசின் மின் கட்டண உயர்வும், சொத்து வரி உயர்வும் கடும் பாதிப்பை உற்பத்தி நிறுவனங்களின் மீது உருவாக்கி உள்ளது. மின்சாரத்தை கொள்முதல் செய்யும் கேரளாவில் சிறு குறு உற்பத்தி நிறுவனங்களின் மின் கட்டணத்தைவிட மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் தொழில் மாநிலமான தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது பெரும் சீராழிவை தமிழக தொழில் துறையில் உருவாக்கும். இப்படி அதிகம் வேலைவாய்ப்பை தரும் விவசாயத்துறையையும் நாசம் செய்து, அதற்கு அடுத்துள்ள சிறு குறு நடுத்தர தொழில்களை சீர்குலைத்து கார்ப்ரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே சாமரம் வீசும் ஆட்சியாளர்களாக உள்ளனர். அதே போல் அதிக வேலைவாய்ப்பையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்க வாய்ப்புள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனையும், வரி வருவாய் மட்டுமே நம்பி இருக்கும், இதர மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் மாநிலமாக உள்ள மாநிலங்களின் நிலைமையும் வெவ்வேறு. இதனை கருத்தில் கொள்ளாமல் ஆட்சியாளர்கள் வரிக் கொள்கைகளை கட்டமைக்கின்றனர். திருப்பூரின் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு., இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், இந்திய பின்னலாடை உற்பத்தியின் மையமாகவும் திருப்பூர் மாநகரம், பெரு நகரமாக உருக்கொண்டு வருகிறது. ஆம், தமிழகத்தின் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர். வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். இதன் காரணமாக திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருவது நாம் அறிந்த்தே. 1924 ஆம் ஆண்டுகளில் திரு.அப்துல்நசீர், திரு.வெங்கிடசாமி அவர்கள் துவங்கி வைத்த இந்த பனியன் தொழில், எஸ்.ஏ.காதர் அவர்களின் வழியாக அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது. அன்று ஒரிரு நிறுவனங்களாக சிறிய அளவில் துவங்கி இன்று ஏறத்தாழ சிறு, குறு, நடுத்தர, பெரிய அளவிலான பனியன் நிறுவனங்களும், அதன் சார்பு நிறுவனங்களும் என சுமார் 6000க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், பல்லாயிரக்கணக்கான விசைத்தறிகள், கைத்தறிகள் என ஜவுளித் தொழிலில் சுமார் 7 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்று நவீன இயந்திரங்கள் மூலம் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. அதனை பயன்படுத்தும் தொழிலாளர்களின் உற்பத்தி திறனும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பனியனின் உப தொழில்களாக உள்ள சாயப்பட்டறைகள், பிரிண்டிங் பட்டறைகள், துணி அரவை, கேலாண்டரிங், எம்ப்ராய்டரிங் உள்ளிட்டு அனைத்தும் நவீனத்தன்மை கொண்டுள்ளது. 1990 வரை குடிசைத் தொழில் என்றழைக்கப்பட்ட பனியன் நிறுவனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்ட பாய்ச்சல் வேகம், ஒரே குடையின் கீழ் அனைத்து உப நிறுவனங்களையும் உள்ளடக்கிய தொழிலாக பல நிறுவனங்கள் முன்னேறின. இந்த முன்னேற்றத்திற்கு பின்னால் ஏராளமான போராட்டங்களும், வடுக்களும் நிறைந்ததாக திருப்பூர் உள்ளது. அன்றிலிருந்து இன்று வரை அரசின் கொள்கைகளால் பல தருணங்களில் வஞ்சிக்கப்பட்டு ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் மட்டுமே இத்தொழில் பாதுகாக்கப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது. கடந்த காலத்தில் 1990 களுக்கு பின்னால் புதிய பொருளாதார கொள்கையின் தாக்கமும், சுங்கவரி பிரச்சனை, சி-பாரம் பிரச்சனை, சென்வாட் வரி வந்த போது கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூரில் 1995ல் பனியன் தொழில் பாதுகாப்பு மாநாட்டையும், சோமனூரில் விசைத்தறி பாதுகாப்பு மாநாட்டையும் நடத்தியது. நூல் விலை உயர்வுக்கு எதிராக தொழில் அமைப்புகளோடு அனைத்து கட்சிகளோடும் சேர்ந்து ரயில் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திட முன்முயற்சி மேற்கொண்டது. குறிப்பாக 2000/2001ம் ஆண்டுகளில் கோழிப்பண்ணை பாதுகாப்பு மாநாடு, தென்னை மர விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக விசைத்தறி தொழில் பாதுகாப்பு மாநாடு, டிராபேக் குறைப்பு எதிராக கண்டன பந்த் அனைத்து வரையும் இணைத்து ஜவுளித் தொழில்களை பாதுகாக்க நடத்திய பல போராட்டங்களை பட்டியலிடலாம். அதே போல் சமீப ஆண்டுகளில் 2010க்கு பின்பு சாய ஆலை கழிவு பிரச்சனை, மின்சார தட்டுப்பாடு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, ரூ500, 1000 செல்லாதது, ஜிஎஸ்டி, கொரோனா பொது முடக்க காலங்களில் சிறு குறு உற்பத்தியாளர்களின் நெருக்கடியை போக்க கூடுதல் முயற்சியும், போராட்டங்களும் தனித்தும், கூட்டாகவும் கட்சி சார்பில் நடத்தப்பட்டது. தோழர் சீத்தாராம் யெச்சூரி, டி.கே.ரங்கராஜன், கே.தங்கவேல், தாமஸ் ஐசக் ஆகிய தலைவர்களை வர வைத்து தொழில் அமைப்புகளோடு கலந்துரையாடல், தொழில் பாதுகாப்பு மாநாடுகள் நடத்தியதோடு இறுதியாக நூல்விலை உயர்வுக்கு எதிராக 2021ல் கட்சியின் சார்பில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வரை பல கட்ட முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இதற்கான தீர்வுகளை, நிவாரணத்தினை அவ்வப்போது கூட்டு முயற்சியின் மூலம் பெற்றுள்ளோம் என்பதே திருப்பூர் தொழில் வளர்ச்சியின் அம்சங்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் பருத்தி சந்தையாக காட்சியளித்த்து திருப்பூர். கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. ஜின்னிங், பிளீச்சிங், ரைஸ்மில் போன்ற பல தொழில்கள் காணாமல் போய் கொண்டு இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டத்தில் பாரா 6.6ல், “ தொழில் மற்றும் தொழிலாளர் துறையில் விவசாயிகளின் குறைவான வாங்கும் சக்தியால் பிடி, அன்னிய மூலதன ஊடுருவல் அதிகரிப்பு, கிட்டத்தட்ட உற்பத்தியின் அனைத்து வடிவிலான ஆதிக்கம் ஆகியவற்றாலும் நமது தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. ஏகபோகங்களின் கையில் சொத்து குவிவதால், பொருளாதார வளர்ச்சி குலைக்கப்படுவதோடு, பரந்த அளவில் ஏற்றத் தாழ்வுகளும் வளர்கிறது“. “இதற்கு மாற்று கடன், கச்சாப்பொருள், நியாயமான விலை போன்றவற்றை அளிப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவி செய்யப்படும். சந்தைவசதி செய்து தருவதிலும் உதவப்படும். முன்னேறிய தொழில்நுட்பம் பெறவும், உற்பத்தி திறன்களை மேம்படுத்தவும், ஒட்டு மொத்த பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு நிதி மூலதனத்தின் தடையற்ற வருகை கட்டுப்படுத்தப்படும் “ மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டத்தின் அடிப்படையில் தொழில் மற்றும் தொழிலாளர் நலன் பாதிக்கப்படும் போது, மாநாடுகளையும், தொடர் போராட்டங்களையும் நடத்துகிறோம். இதன் மூலம் ஒன்றிய, மாநில அரசுகளின் மூலம் பனியன், பவர்லூம் மற்றும் அதன் சார்பு தொழில்களுக்கு நிவாரணங்களை பெற காரணமாக இருந்துள்ளோம். அதற்கான முன்முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக மாநாடுகளின் தொடர்ச்சியாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பை பயன்படுத்தி உரிய அவைகளில் பேசி தீர்வு காண முயற்சித்துள்ளோம். நூல்விலை உயர்வு, சி-பாரம், டிராபேக், டீசல் விலை உயர்வு, மின்தட்டுப்பாடு, இலவச மின்சாரம், சாய ஆலைப்பிரச்சனை, ஜிஎஸ்டி குறைப்பு போன்று பலவற்றில் நமது தலையீடும் இருந்துள்ளது. இச்சூழலில் நாம் இம்மாநாட்டை பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் வகையில் வெற்றிகரமாக நடத்துவது அவசியமாகிறது. இந்த நிலைக்கு காரணம் நவீன தாராளமய முதலாளித்துவ கொள்கைகளே. இதற்கு மாற்று கொள்ளைகளை முன் வைத்தே நாம் தற்போது மாநாட்டை நடத்துகிறோம். தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு செய்ய வேண்டியது பனியன், விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழிலை பாதுகாக்க, அடிப்படை மூலப் பொருளான பஞ்சு விலை மற்றும் பருத்தி நூல் விலையை சீராக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடு ! அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மீண்டும் பருத்தியை இணைத்திடு ! கார்ப்பரேட் இடைத்தரகர்களின் சூதாட்டத்திற்கு வழிவகுக்கும் முன்பேர வர்த்தக பட்டியலில் இருந்து பஞ்சை நீக்கு! இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ) மூலம் விவசாயிகளிடம் நியாயமான விலையில் கொள்முதல் செய்து உள்நாட்டு ஜவுளி தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து பஞ்சு, நூல் சீராக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்! உள்நாட்டு தேவைக்கேற்ப பருத்தி நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்திடுக !! பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்குக !! கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூபாய் 11 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு, நெருக்கடியில் சிக்கி இருக்கும் சிறு, குறு, நடுத்தர ஜவுளி உற்பத்தி நிறுவனங் களுக்கு தொழில் சார்ந்து வட்டியில்லா நீண்ட கால கடன்களை வழங்குக ! சிறு, குறு, நடுத்தர ஜவுளி தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால கடன் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடு! கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஜிஎஸ்டி வரி கொள்கையை மாற்றி அமைத்திடுக! சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ஆதரவாக வரிக்குறைப்பு செய்திடுக! உள்நாட்டு தொழில்கள் செழித்து வளர்வதற்கு, உள்நாட்டு சந்தையை பலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்க! குறிப்பாக விவசாயிகள், உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்து ! எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திடுக! தொழிலை பாதுகாக்க மாநிலஅரசு செய்ய வேண்டியது தமிழ்நாடு பருத்திக் கழகத்தை உருவாக்கிடுக ! சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை குறைத்திடுக ! மின் கணக்கீட்டு முறையை மாதம் மாதம் எடுத்திடுக ! கோழிப்பண்ணை, தேங்காய் எண்ணெய் உற்பத்தி, தென்னை மரத் தொழில் அரிசி ஆலை உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட தொழில்களை பாதுகாத்திட நடவடிக்கை எடு ! தொழிலாளர் நலன் பாதுகாக்க ! அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களுக்கும் கேரளாவைப் போல் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை உறுதியாக அமல்படுத்து ! தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26 ஆயிரம் வழங்குவதை உறுதி செய் ! சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கிடுக! முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தை உறுதியாக அமல்படுத்து ! ஒன்றிய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கி, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை உருவாக்குக ! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம்-1979 ஐ முறையாக அமல்படுத்து ! அனைத்து தொழிலாளர்களுக்கும் இ. எஸ்.ஐ., பி.எப்., கிடைப்பதை உத்திரவாதம் செய்க ! அதற்கேற்ப தொழிலாளர் துறையை இயங்கும் துறையாக மாற்றிடுக ! தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்தொழில்நுட்ப கல்லூரியை அமைத்திடுக !