”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.
கம்யூனிஸ்டாய் இருப்பது காலத்தின் தேவை’ - செ.முத்துக்கண்ணன் தீக்கதிர் நாளிதழ் மார்ச் 12, 2023 ‘‘நீங்கள் எந்த பக்கத்தில்... இரு வேறு உலகங்கள், இரு வேறு நீதிகள்; வாழ்வின் மதுரங்கள் அனைத்தும் ஒருபுறம், கசப்பும் தண்ணீரும் கலந்தொழுகும் இன்னொருபுறம்’’ - மாக்சிம் கார்க்கி வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்டுகளின் எதிரிகள் “எங்களுக்கு வாக்களிக்கவில்லை, உங்கள் வீடுகளைக் கொளுத்துகிறோம்; எங்களை வெற்றி பெற வைக்கவில்லை, உங்கள் வருமானத்தைத் தடுத்திட உங்கள் இரப்பர் தோட்டங்களை எரிக்கிறோம். இதையும் தாண்டி உங்கள் சித்தாந்தம் காப்பாற்றும் என்றால் அதன் அடையாளமான உங்கள் கட்சி அலுவலகங்களை உடைத்து நொறுக்கு கிறோம்..!” ஆம், 2023 மார்ச் 2 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி கடந்த முறை பெற்ற அதே அளவு வெற்றியைப் பெற முடிய வில்லை என்ற வெறித் தனத்தின் உச்சம். கடந்த 5 ஆண்டுகளாக திரிபுரா முழுவதும் கம்யூனிஸ்டு களை அழித்து விடுவோம் என்று கொக்கரித்து கடும் தாக்குதலை நடத்தி 25 கட்சி தோழர்களை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்கான தோழர் களுக்கு கொடுங்காயம் ஏற்படுத்தி, வீடுகளை நொறுக்கி, வாழ்வாதாரத்தின் மீது அரசு எந்திரத்தின் உதவியோடு தாக்குதல் நடத்திய பின்பும், அங்கு கம்யூனிஸ்டுகள் மீண்டெழுகிறார்கள் என்ற ஆத்திரமே, இப்போது கொலைவெறித் தாண்டவம் ஆடுகிறது. பாஜக குண்டர்கள், மார்ச் 2க்கு பின்னால் கடும் தாக்குதலில் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது பாஜக விற்கு எதிராக கருத்து சொன்ன, வாக்களித்த, போராடிய அனைவரையும் கூட தாக்கி வருகிறார்கள். விசாரிக்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இது நேற்று இன்று அல்ல, ஆளும் வர்க்கத்தை யும், முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அமைப்பை யும் எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் பிறந்தது முதலே இத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. இயந்திர இரைச்சலை மீறிய உரிமை முழக்கம் திருப்பூரில் 1978ல் விலைவாசி உயர்வுக்கேற்ப தங்களது குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும்; பண்டிகை விடுமுறை சம்பளம், இன்னபிற சட்ட சலுகைகளை கேட்டு சங்க வித்தியாசமின்றி ஒன்றுபட்ட போராட்டத்தை பனியன் அண்டு பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தலை மையில் 40 நாட்கள் நடத்தி போராடி வெற்றிபெற்றது. இதன் வெளிச்சத்தில் மங்கலம் பகுதியில் விசைத்தறிப் போராட்டம் சிஐடியு தலைமையில் போராடியது. இதில் அப்பகுதி கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணி திரண்டனர். குறிப்பாக பட்டியலின வகுப்பை சார்ந்த வர்கள் படிப்படியாக ஈர்க்கப்பட்டு போராட்டக் களத்தை நோக்கி வந்தனர். எம்ஜிஆரின் அபிமானி களாக அதிமுக வாக்கு வங்கியாக இருந்தது அன்று வர்க்கமாகத் திரண்டு செங்கொடித் தொழிற்சங்கத்தின் பின்னால் அணிவகுத்தது கடும் அதிருப்தியை அதிமுக விக்கு ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் கடும் ஆயுதங்களைக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான முன்னணி தோழர்களையும், வீடுகளையும் தாக்கினார்கள். இதில் 14 முன்னணி தோழர்களின் வீடுகள் கடும் தாக்குதலுக்குள்ளாகின. அன்று இந்தச் சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளி வர்க்க தோழர்கள் கண்டனம் முழங்கி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தியது, எச்சரித்தது. இருந்தும் ஆளும் வர்க்கத்தின் ஆத்திரமும், சுரண்டல் வேட்கையும், ஒரு சேர, இதன் தொடர்ச்சிதான் அன்புத் தோழர் சீராணம்பாளையம் பழனிசாமி எதிரிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட தோழர்களின் குடும்பங் களைப் பாதுகாக்க தொழிலாளி வர்க்கம் பொருளா தார உதவி செய்து வீடுகளை புனரமைத்தது. இந்த ஒற்றுமையும், வலுமிக்கப் போராட்டமும், வர்க்க உணர் வின் முன்பு முதலாளி வர்க்கம் பணிந்து வந்தது. வரலாற்றைக் கற்றறிதல் இந்த வரலாற்றை அறிந்து அதற்காக தன்னையும் இளமைக் காலம் தொட்டு அர்ப்பணித்துக் கொண்டு நற்பணியிலும், விளையாட்டிலும், எழுத்தறிவு புகட்டுவதிலும் இதர தோழர்களோடு இணைந்து தனக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொண்ட வர்தான் பாலரத்தினம் என அன்போடு அழைக்கப் பட்ட தோழர் இரத்தினசாமி. போராட்டத்தின் உறைவிட மாக இடுவாய் கிராமத்தை மாற்ற தோழர்களோடு ஒன்றுபட்டு போராடினார். கட்சியின் செல்வாக்கு நாள்தோறும் வளர்ந்து வந்த சூழலில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 1996ல் அனைத்து அரசியல் இயக்கங்களும், ஆதிக்க மும் ஒன்று சேர்ந்து ஒரே அணியாக நின்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இடுவாய், செட்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், முதலிபாளையம் பகுதிகளில் தனித்து நின்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றது. அப்போது இடுவாயில் ஊராட்சிமன்ற தலைவராக தோழர் கே.ரத்தினசாமியும் தேர்வு செய்யப்பட்டார். “கற்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக் கிறது, எனவே கற்றுக்கொள், சாதியின் தொடர் சங்கிலி அறு; பார்ப்பனீய வேதங்களைத் தூக்கி எறி; கல்வி பெற்றால் சாதியையும், வேதங்களையும் தூக்கி எறியும் அறிவும் வந்து விடும்” என்றார் சாவித்திரிபாய் பூலே. இதனைச் செயல்படுத்தும் விதமாக இடுவா யில் குமரன் நூலகத்தை துவங்கி “மனித சிந்தனை களை தளையிட்டு கட்டிய விலங்குகளை எல்லாம் தகர்த்தெறிய வேண்டும் என்பதற்காக எவர் ஒருவர் தன் வாழ்க்கையெல்லாம் பாடுபடுகிறாரோ அவரே மனிதர்” என நூலகத்தின் சார்பில் உதயம் இதழில் ஆசிரியர்குழு தலையங்கத்தில் எழுதினார்கள். அதன்படி நடந்தவர் இரத்தினசாமி. ஒரு கம்யூனிஸ்டுக்கு உண்டான எளிமையோடு, உழைக்கும் மக்களின் உற்ற தோழனாக, முன்வரிசை களப்பணியாளனாக, மக்களின் சேவக னாகப் பணியாற்றினார். கம்யூனிஸ்டாய் இருந்தது... விவசாயக் கிணறுகளில் தண்ணீர் விற்பனையை தடுத்து விவசாயத்தை பாதுகாத்தது; ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தை எடுத்து 1200 ஏழை எளிய குடும்பங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து பாரதிபுரம் என்ற ஊரை உரு வாக்கியது; பட்டியலின மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, தெருவிளக்கு, தொகுப்பு வீடு கட்டி சமத்துவ வாழ்க்கை யை உறுதி செய்தது; தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களின் வழிபாட்டு உரிமை யை பாதுகாத்தது; பாழ்பட்டிருந்த இடுவாய் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை புனரமைத்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது... - இப்படி கட்சியின் செல்வாக்கும், இரத்தினசாமி யின் பணியும் ஓங்கி வளர்வதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் 1998 ஏப்ரலில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவில் எழுத்துப்பணி செய்து கொண்டு இருந்த தோழர் இரத்தினசாமியை கத்தியால் குத்தி, வாயில் விஷத்தை ஊற்றி காட்டில் வீசிச் சென்றனர். உயிருக்கு போராடிய அவர் மருத்துவ சிகிச்சைக்குபின் மீண்டும் ஊராட்சித் தலைவராக பணியாற்றினார். இந்த நிலையில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், மக்கள் செல்வாக்கின் காரணமாக இரண்டாம் முறையும் ஒரு சேர எதிர்த்து நின்ற தரப்பினரை தோற்கடித்தார். முன்னிலும் ஆழமாக மக்கள் சேவையும், பணியும் தொடர்ந்தது. அயராது பாடுபட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்தியினர் 2002 மார்ச் 12 இரவு தோழர் இரத்தினசாமி அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து, கொன்றதற்கான 8 காரணங்களை ஒரு அட்டையில் எழுதி அருகிலிருந்த மரத்தல் கட்டித் தொங்க வைத்துச் சென்றார்கள். அதில், “நீ கம்யூனிஸ்டாக இருப்பது, சக்கிலியர் களுக்கு சப்போர்ட் செய்தது, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்தது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது. மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது” என்பது உள்ளிட்டு 8 காரணங்களை எழுதி வைத்தனர். அவர்கள் சொன்ன காரணங்கள் கம்யூனிஸ்டுகளின் பாலபாடம். மக்களுக்கு பணியாற்றுவது; கடைசி சொட்டு குருதி உள்ளவரை போராடுவது; தேவையென்றால் தியாகம் செய்வது. “வாழ்நாளில் பெரும்பாலும் மனித குலத்திற்காக சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால் எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது’’ - என்ற காரல் மார்க்சின் வார்த்தையை அர்த்தப்படுத்தி யவர் தோழர் இரத்தினசாமி. மக்களிடம் அந்த மகத்தான பணியை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் விளைவு தான் 18 ஆண்டுகள் கழித்து 2019ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரத்தினசாமியின் வாரிசுகளாக கம்யூனிஸ்ட்கள் 1008 வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் தோழர் கே.கணேசனை வெற்றிபெறச் செய்து, கம்யூனிஸ்டு களின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை மக்கள் கட்டியெழுப்பினார்கள். உண்மையை உரக்கச் சொல்வது இதுவரை இல்லாத அளவு இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்களும், நிரந்தரமற்ற வேலையும் அதிகரித்து வருகிறது. அணி திரட்டப்பட்ட தொழில்களிலேயே ஒப்பந்தமுறை, தினக்கூலி என தொழிலாளர்கள் எந்த விதமான சட்ட சலுகையும், உரிமைகளும் இல்லாமல் பணியாற்றுகின்றனர். தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் உரிமை மீறல்களும், சுரண்டல்களும் அதிகரித்து வருகின்றன. முறைசார தொழிலாளிகளின் கோரிக்கைகளை உயர்த்தி பிடிக்க தடையாக, தொழி லாளிவர்க்கத்தின் மத்தியில் போலி தேசபக்தியும், மதவெறி சக்திகளின் தவறான பிரச்சாரங்களும், பொய் செய்திகளும், வதந்திகளும் கிளப்பி விடப்படு வதையும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை யில் பாஜக இரட்டை வேடம் போடுவதையும் திருப்பூரில் பார்த்து வருகிறோம். அதே போல் சமூக ஒடுக்குமுறையும் திட்டமிட்டு மனு (அ)தர்மத்தின் அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. உழைப்புச் சுரண்டலையும், பாலின சுரண்டலையும் வருணத்தின் பெயரில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். இதற்கெதிரான பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் செங்கொடி இயக்கம் வலுவாக முன்னெடுத்து வருகிறது. ஏப்ரல் 5ல் கிராமப்புற தொழிலாளிகள், விவசாயிகள், நகர்ப்புறத் தொழிலாளிகள் பெற்ற உரிமைகளை பாதுகாக்க தலைநகர் தில்லியில் அணிவகுக்க உள்ளார்கள். தொழிலாளி வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க தோழர் கே.ரத்தினசாமியைப் போன்று திரிபுராவின் தற்போதைய 3 தியாகிகள் போன்று நாடு முழுவதும் உள்ள தியாகிகளின் குருதி உரமாகட்டும். இவர்களது நினைவை நெஞ்சில் ஏந்தி களப் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்! கட்டுரையாளர் : சிபிஐ(எம்), திருப்பூர் மாவட்டச் செயலாளர்

தொழில் நெருக்கடி தீர்வுக்கான போராட்டங்களும்,. ஒற்றுமையும்.

தொழில் நெருக்கடி தீர்வுக்கான போராட்டங்களும்,. ஒற்றுமையும். இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடியது ஜவுளித்துறை. இந்தியா முழுவதும் 4.5 கோடி பேர் ஜவுளித்துறை மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்திய ஜவுளித்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.16.7 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.3.33 லட்சம் கோடியாக உள்ளது. பெரிய உள்நாட்டுச் சந்தையை கொண்டு உள்ள நிலையில் செலவு குறைந்த மனிதவளத்துடன் வேகமாக வளர்ந்து வந்த துறை ஆகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித்துறை பல்வேறு காரணங்களால் தற்போது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஜவுளித்துறையின் அடிப்படை மூலப்பொருளான பருத்தியின் விலையை சர்வதேச சந்தையை காரணம் காட்டி இந்திய பருத்தி சந்தை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்திய பருத்தி கழகம் மூலம் பருத்தி விவசாயிகளிடம் நியாமான முறையில் கொள்முதல் செய்யாமலும், இருப்பு வைத்த பருத்தியை மிகபெரும் கார்ப்ரேட் வியாபாரிகளின் நலனுக்காக ஊக வாணிகத்திற்கு அனுமதித்தது. இந்தியாவின் 90% பருத்தி உற்பத்தி பருத்தி சீசன் (டிசம்பர் - மார்ச்) காலகட்டத்தில்தான் நடைபெறும். இந்தாண்டு பழைய இருப்போடு சேர்த்து தேவைக்கேற்ப கூடுதலாக பருத்தி இருப்பு உள்ளது என இந்திய பருத்தி கூட்டமைப்பு கூறினாலும் உற்பத்தி செய்த விவசாயிக்கும், மூலபொருளாக தேவைப்படும் ஜவுளித்துறையினருக்கும் நியாயமான விலையில் கிடைக்காமல் இடையில் உள்ள பெரும் வர்த்தக சூதாடிகள் ஆதாயம் அடையும் நிலை உள்ளது. கடந்த ஓராண்டாக ஜவுளித் தொழிலின் நிலையற்ற தன்மைக்கு தங்களின் லாப வேட்கைக்காக உள்நாட்டு தேவையை கருத்தில் கொள்ளாமல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே காரணமாகும். நூல் விலை உயர்வினால் துவக்கத்தில் 50% அளவில் உற்பத்தி குறைய ஆரம்பித்தது. பின்னர் 90% உற்பத்தி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தான் நடைபெறுவதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வங்கதேசம் போன்ற இந்தியாவின் போட்டி நாடுகள் இந்தியாவைவிட 30% விலை குறைவாக பின்னலாடை தயார் செய்கின்றனர். இதனால் சர்வதேச ஆர்டர்கள் இந்த நாடுகளுக்கு அதிகம் செல்கிறது. அத்தோடு இந்திய உள்நாட்டு சந்தைக்குமே வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் போக்கு ( சுமார் ரூ 2800 கோடி ) மதிப்புக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகம், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிக கட்டணங்கள் விதிக்கப்படுவதும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் வரி சலுகைகளும் இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கிறது என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் 11 சதவீதம் இறக்குமதி வரி பருத்திக்கு இந்தியாவில் விதிக்கப்படுகிறது. இது பன்னாட்டு கார்ப்ரேட் பருத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதால் உள் நாட்டு ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பிற்கு செல்கிறார்கள். பருத்தி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பருத்திக்கு இறக்குமதி வரி கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ஏமாற்று வேலையே, ஏனெனில் பருத்தி விவசாயிகளிடம் பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டிய இந்திய பருத்திக் கழகம் இது தன் வேலையல்ல, தனியார் வர்த்தகர்கள் கொள்முதல் செய்வார்கள் என ஒதுங்கி கொண்டது. விவசாயியின் உற்பத்தி செலவுக்கு கூடுதலாக ஒன்ரை மடங்கு கொள்முதல் விலை தருவதாக சொன்ன ஒன்றிய அரசு இதுவரை 8 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தவில்லை. மறுபுறம் மாநில அரசின் மின் கட்டண உயர்வும், சொத்து வரி உயர்வும் கடும் பாதிப்பை உற்பத்தி நிறுவனங்களின் மீது உருவாக்கி உள்ளது. மின்சாரத்தை கொள்முதல் செய்யும் கேரளாவில் சிறு குறு உற்பத்தி நிறுவனங்களின் மின் கட்டணத்தைவிட மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் தொழில் மாநிலமான தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது பெரும் சீராழிவை தமிழக தொழில் துறையில் உருவாக்கும். இப்படி அதிகம் வேலைவாய்ப்பை தரும் விவசாயத்துறையையும் நாசம் செய்து, அதற்கு அடுத்துள்ள சிறு குறு நடுத்தர தொழில்களை சீர்குலைத்து கார்ப்ரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே சாமரம் வீசும் ஆட்சியாளர்களாக உள்ளனர். அதே போல் அதிக வேலைவாய்ப்பையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்க வாய்ப்புள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனையும், வரி வருவாய் மட்டுமே நம்பி இருக்கும், இதர மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் மாநிலமாக உள்ள மாநிலங்களின் நிலைமையும் வெவ்வேறு. இதனை கருத்தில் கொள்ளாமல் ஆட்சியாளர்கள் வரிக் கொள்கைகளை கட்டமைக்கின்றனர். திருப்பூரின் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு., இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், இந்திய பின்னலாடை உற்பத்தியின் மையமாகவும் திருப்பூர் மாநகரம், பெரு நகரமாக உருக்கொண்டு வருகிறது. ஆம், தமிழகத்தின் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர். வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். இதன் காரணமாக திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருவது நாம் அறிந்த்தே. 1924 ஆம் ஆண்டுகளில் திரு.அப்துல்நசீர், திரு.வெங்கிடசாமி அவர்கள் துவங்கி வைத்த இந்த பனியன் தொழில், எஸ்.ஏ.காதர் அவர்களின் வழியாக அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது. அன்று ஒரிரு நிறுவனங்களாக சிறிய அளவில் துவங்கி இன்று ஏறத்தாழ சிறு, குறு, நடுத்தர, பெரிய அளவிலான பனியன் நிறுவனங்களும், அதன் சார்பு நிறுவனங்களும் என சுமார் 6000க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், பல்லாயிரக்கணக்கான விசைத்தறிகள், கைத்தறிகள் என ஜவுளித் தொழிலில் சுமார் 7 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்று நவீன இயந்திரங்கள் மூலம் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. அதனை பயன்படுத்தும் தொழிலாளர்களின் உற்பத்தி திறனும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பனியனின் உப தொழில்களாக உள்ள சாயப்பட்டறைகள், பிரிண்டிங் பட்டறைகள், துணி அரவை, கேலாண்டரிங், எம்ப்ராய்டரிங் உள்ளிட்டு அனைத்தும் நவீனத்தன்மை கொண்டுள்ளது. 1990 வரை குடிசைத் தொழில் என்றழைக்கப்பட்ட பனியன் நிறுவனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்ட பாய்ச்சல் வேகம், ஒரே குடையின் கீழ் அனைத்து உப நிறுவனங்களையும் உள்ளடக்கிய தொழிலாக பல நிறுவனங்கள் முன்னேறின. இந்த முன்னேற்றத்திற்கு பின்னால் ஏராளமான போராட்டங்களும், வடுக்களும் நிறைந்ததாக திருப்பூர் உள்ளது. அன்றிலிருந்து இன்று வரை அரசின் கொள்கைகளால் பல தருணங்களில் வஞ்சிக்கப்பட்டு ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் மட்டுமே இத்தொழில் பாதுகாக்கப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது. கடந்த காலத்தில் 1990 களுக்கு பின்னால் புதிய பொருளாதார கொள்கையின் தாக்கமும், சுங்கவரி பிரச்சனை, சி-பாரம் பிரச்சனை, சென்வாட் வரி வந்த போது கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூரில் 1995ல் பனியன் தொழில் பாதுகாப்பு மாநாட்டையும், சோமனூரில் விசைத்தறி பாதுகாப்பு மாநாட்டையும் நடத்தியது. நூல் விலை உயர்வுக்கு எதிராக தொழில் அமைப்புகளோடு அனைத்து கட்சிகளோடும் சேர்ந்து ரயில் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திட முன்முயற்சி மேற்கொண்டது. குறிப்பாக 2000/2001ம் ஆண்டுகளில் கோழிப்பண்ணை பாதுகாப்பு மாநாடு, தென்னை மர விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக விசைத்தறி தொழில் பாதுகாப்பு மாநாடு, டிராபேக் குறைப்பு எதிராக கண்டன பந்த் அனைத்து வரையும் இணைத்து ஜவுளித் தொழில்களை பாதுகாக்க நடத்திய பல போராட்டங்களை பட்டியலிடலாம். அதே போல் சமீப ஆண்டுகளில் 2010க்கு பின்பு சாய ஆலை கழிவு பிரச்சனை, மின்சார தட்டுப்பாடு, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, ரூ500, 1000 செல்லாதது, ஜிஎஸ்டி, கொரோனா பொது முடக்க காலங்களில் சிறு குறு உற்பத்தியாளர்களின் நெருக்கடியை போக்க கூடுதல் முயற்சியும், போராட்டங்களும் தனித்தும், கூட்டாகவும் கட்சி சார்பில் நடத்தப்பட்டது. தோழர் சீத்தாராம் யெச்சூரி, டி.கே.ரங்கராஜன், கே.தங்கவேல், தாமஸ் ஐசக் ஆகிய தலைவர்களை வர வைத்து தொழில் அமைப்புகளோடு கலந்துரையாடல், தொழில் பாதுகாப்பு மாநாடுகள் நடத்தியதோடு இறுதியாக நூல்விலை உயர்வுக்கு எதிராக 2021ல் கட்சியின் சார்பில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் வரை பல கட்ட முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இதற்கான தீர்வுகளை, நிவாரணத்தினை அவ்வப்போது கூட்டு முயற்சியின் மூலம் பெற்றுள்ளோம் என்பதே திருப்பூர் தொழில் வளர்ச்சியின் அம்சங்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் பருத்தி சந்தையாக காட்சியளித்த்து திருப்பூர். கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது. ஜின்னிங், பிளீச்சிங், ரைஸ்மில் போன்ற பல தொழில்கள் காணாமல் போய் கொண்டு இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டத்தில் பாரா 6.6ல், “ தொழில் மற்றும் தொழிலாளர் துறையில் விவசாயிகளின் குறைவான வாங்கும் சக்தியால் பிடி, அன்னிய மூலதன ஊடுருவல் அதிகரிப்பு, கிட்டத்தட்ட உற்பத்தியின் அனைத்து வடிவிலான ஆதிக்கம் ஆகியவற்றாலும் நமது தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. ஏகபோகங்களின் கையில் சொத்து குவிவதால், பொருளாதார வளர்ச்சி குலைக்கப்படுவதோடு, பரந்த அளவில் ஏற்றத் தாழ்வுகளும் வளர்கிறது“. “இதற்கு மாற்று கடன், கச்சாப்பொருள், நியாயமான விலை போன்றவற்றை அளிப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவி செய்யப்படும். சந்தைவசதி செய்து தருவதிலும் உதவப்படும். முன்னேறிய தொழில்நுட்பம் பெறவும், உற்பத்தி திறன்களை மேம்படுத்தவும், ஒட்டு மொத்த பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு நிதி மூலதனத்தின் தடையற்ற வருகை கட்டுப்படுத்தப்படும் “ மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டத்தின் அடிப்படையில் தொழில் மற்றும் தொழிலாளர் நலன் பாதிக்கப்படும் போது, மாநாடுகளையும், தொடர் போராட்டங்களையும் நடத்துகிறோம். இதன் மூலம் ஒன்றிய, மாநில அரசுகளின் மூலம் பனியன், பவர்லூம் மற்றும் அதன் சார்பு தொழில்களுக்கு நிவாரணங்களை பெற காரணமாக இருந்துள்ளோம். அதற்கான முன்முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக மாநாடுகளின் தொடர்ச்சியாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பை பயன்படுத்தி உரிய அவைகளில் பேசி தீர்வு காண முயற்சித்துள்ளோம். நூல்விலை உயர்வு, சி-பாரம், டிராபேக், டீசல் விலை உயர்வு, மின்தட்டுப்பாடு, இலவச மின்சாரம், சாய ஆலைப்பிரச்சனை, ஜிஎஸ்டி குறைப்பு போன்று பலவற்றில் நமது தலையீடும் இருந்துள்ளது. இச்சூழலில் நாம் இம்மாநாட்டை பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் வகையில் வெற்றிகரமாக நடத்துவது அவசியமாகிறது. இந்த நிலைக்கு காரணம் நவீன தாராளமய முதலாளித்துவ கொள்கைகளே. இதற்கு மாற்று கொள்ளைகளை முன் வைத்தே நாம் தற்போது மாநாட்டை நடத்துகிறோம். தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு செய்ய வேண்டியது பனியன், விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழிலை பாதுகாக்க, அடிப்படை மூலப் பொருளான பஞ்சு விலை மற்றும் பருத்தி நூல் விலையை சீராக வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடு ! அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மீண்டும் பருத்தியை இணைத்திடு ! கார்ப்பரேட் இடைத்தரகர்களின் சூதாட்டத்திற்கு வழிவகுக்கும் முன்பேர வர்த்தக பட்டியலில் இருந்து பஞ்சை நீக்கு! இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ) மூலம் விவசாயிகளிடம் நியாயமான விலையில் கொள்முதல் செய்து உள்நாட்டு ஜவுளி தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து பஞ்சு, நூல் சீராக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்! உள்நாட்டு தேவைக்கேற்ப பருத்தி நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்திடுக !! பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்குக !! கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூபாய் 11 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு, நெருக்கடியில் சிக்கி இருக்கும் சிறு, குறு, நடுத்தர ஜவுளி உற்பத்தி நிறுவனங் களுக்கு தொழில் சார்ந்து வட்டியில்லா நீண்ட கால கடன்களை வழங்குக ! சிறு, குறு, நடுத்தர ஜவுளி தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால கடன் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடு! கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஜிஎஸ்டி வரி கொள்கையை மாற்றி அமைத்திடுக! சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ஆதரவாக வரிக்குறைப்பு செய்திடுக! உள்நாட்டு தொழில்கள் செழித்து வளர்வதற்கு, உள்நாட்டு சந்தையை பலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்க! குறிப்பாக விவசாயிகள், உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்து ! எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாய விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திடுக! தொழிலை பாதுகாக்க மாநிலஅரசு செய்ய வேண்டியது தமிழ்நாடு பருத்திக் கழகத்தை உருவாக்கிடுக ! சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை குறைத்திடுக ! மின் கணக்கீட்டு முறையை மாதம் மாதம் எடுத்திடுக ! கோழிப்பண்ணை, தேங்காய் எண்ணெய் உற்பத்தி, தென்னை மரத் தொழில் அரிசி ஆலை உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட தொழில்களை பாதுகாத்திட நடவடிக்கை எடு ! தொழிலாளர் நலன் பாதுகாக்க ! அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களுக்கும் கேரளாவைப் போல் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை உறுதியாக அமல்படுத்து ! தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26 ஆயிரம் வழங்குவதை உறுதி செய் ! சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கிடுக! முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தை உறுதியாக அமல்படுத்து ! ஒன்றிய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கி, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை உருவாக்குக ! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம்-1979 ஐ முறையாக அமல்படுத்து ! அனைத்து தொழிலாளர்களுக்கும் இ. எஸ்.ஐ., பி.எப்., கிடைப்பதை உத்திரவாதம் செய்க ! அதற்கேற்ப தொழிலாளர் துறையை இயங்கும் துறையாக மாற்றிடுக ! தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்தொழில்நுட்ப கல்லூரியை அமைத்திடுக !