”செயல், அதுவே சிறந்த சொல்” - மார்த்தி.

இரத்தத் தான படையாக மாறுங்கள் !

 

 “நாம் மக்களிடம் போவோம், நோயுற்றவரின் ஒவ்வொரு வீட்டுக்கும் போக வேண்டும், நகரத்திலிருந்து கிராமத்துக்கு, ஒரு கதவிலிருந்து இன்னொரு கதவுக்கு.’’ என்ற தனது  திட்டத்தை அவர் மனைவியிடம் சொல்ல அவரது மனைவியோ அவருக்கு எதோ ஆகி விட்டது போல் பார்க்கிறார். 

அவரது செயல்களை பார்த்த நண்பர்கள் ’நீங்கள் கம்யூனிஸ்டா?’ என்று அவரிடம் கேட்க அப்படினா என்ன என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை.. ஆனால் என்னை சிகப்பின் சிகப்பு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.  பணக்காரர்கள் தங்களை தாங்களே கவனித்துக் கொள்வார்கள் ஆனால் ஏழைகளை யார் கவனிப்பது?  அது அரசாங்கத்தின் கடமையில்லையா? ஏழைகள் என்னை தோழர் பெத் என்று அழைக் கிறார்கள். மாளிகைகளில் புகுந்து வேலை செய்வதைவிட ஏழைக்களுக்காக நான் தெருவில் இறங்கி வேலை செய்வதே எனக்கு பிடித்துள்ளது.’’

தோழர் நார்மன் பெத்யூனின் சிந்தனையையும், கனவையும் நனவாக்கிய தேசமாக அன்று சோவியத் யூனியன் இருந்தது. 1935ல் சோவியத் சென்ற பெத்யூன் நேரில் கண்டார். அன்று உலகின் பெரும்பகுதி நாடுகளை அச்சுறுத்திய காசநோய் சோவியத்தில் பாதியாக குறைக்கப்பட்டிருந்தது. அனைத்து சுகாதார கடட்மைப்புகளிலும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமையும், கட்டணமின்றி சிகிச்சையும், அதைவிட காச நோய் இருக்கிறதா என்று இளம் வயதினர் கட்டாய பரிசோதனை செய்துக் கொள்வதை  உறுதி செய்து சோவியத் அரசு  பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தியிருந்தது.

நான் நினைப்பது போலவே சோவியத் இருக்கிறதே ! அதனால் தான் அவர்கள் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்கிறார்களா.. அப்படியானால் நான் கம்யூனிஸ்ட்தான்’ என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லிக் கொண்டாராம் நார்மன் பெத்யூன். ரஷ்யாவில் தான் கண்ட சானடோரியங்கள் உலக தரம் வாய்ந்தவை என அறிவித்தார்.

ஜப்பானுக்கு எதிரான சீன யுத்த களத்தில் பெரும் காயங்களால் ரத்த இழப்பு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வந்த தருணத்தில், இரத்த இழப்பு ஏற்பட்ட வீரனுக்கு  உடனே ரத்தம் வேண்டும்,  அதே ரத்த வகையுள்ள மருத்துவ ஊழியரின் ரத்தத்தை தானமாக கேட்க அந்த ஊழியர் தயங்குகிறார். அந்த நேரம் பெத்தயூனின் நண்பர் துங் தன் உடலிலிருத்து ரத்தம் வடித்து தருகிறார்.

பலத்த காயத்துடன் வந்த இன்னொரு வீரருக்கு ரத்தம் தேவைப்பட அவருக்கு பெத்யூன் தன் இரத்தத்தை தருகிறார். அதைப் பார்த்த செவிலியர், அந்த ஊரின் வயதான பெண்மணி உட்பட என் ரத்தத்தை எடுத்து மற்றவர்களை காப்பாற்றுங்கள் என்று அவர்கள் சொல்லியதை பார்த்த அந்த கிராமமே இரத்ததானம் செய்ய முன் வருகிறது.

நீங்கள் ரத்தம் தருவதை விட ரத்தம் கொடையாக பெறுவதற்கான ஒரு படையாக மாறுங்கள் நாட்டிலுள்ள கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் ரத்தத்தானம் செய்பவர்களின் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என அவர்களை பயிற்றுவித்தார்.

நார்மன் பெத்யூனுக்கு ஊதியமாக 100 டாலர் தர முன்வந்த போது அதை கண்டு கடுமையாக கோபம் கொண்டு அப்படியெல்லாம் எந்த ஊதியமும் எனக்கு வேண்டாம், உணவும் மற்ற தேவை களையும்  நிறைவாக நீங்கள் செய்கிறீர்கள் அது போதும் எனக்கு” என கூறுகிறார்.

            “ஒரு மருத்துவருக்கு சிங்கத்தின் இதயமும், பெண்களுக்கான கைகளும் இருக்கவேண்டும்” என்று தனக்கு பிடித்த பழமொழியை எப்போதும் நார்மன் பெத்யூன் கூறுவார்.

 மருத்துவர் நார்மன் பெத்யூன் நடமாடும் அறுவை சிகிச்சை அரங்கு, இரத்த தானம், காச நோய் உள்ளிட்டு பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளை கண்டறிந்தார். இது நவீன மருத்துவ உலகின் அச்சாரமாக திகழ்கிறது.

ஸ்பெயின் நாட்டு யுத்தத்தில் கிடைத்த அனுபவங்களை அவர் மாவோவிடம் எடுத்துக்கூறினார். மாவோ, உடனடியாக ஒரு நடமாடும் அறுவைச்சிகிச்சை அமைப்பை உருவாக்கும்படி பெத்யூனைக் கேட்டுக் கொண்டார். அது முதல் வடக்கு சீனாவின் உட்பகுதியில் அமைந்த யுத்தமையத்தில் மையத்திற்கே சென்றார்.

அங்கே அவர் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். சில நேரங்களில் நாற்பது மணி நேரம் கூடத் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் அறுவைச்சிகிச்சை செய்தார். இந்த அசாதாரணமான அர்ப்பணிப்புத் திறனால் அவருடைய புகழ் சீனா முழுவதும் சென்று அடைந்தது.

கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். ஓவியராக, கவிஞராக, ராணுவ வீராக, விமர்சகராக, ஆசிரியராக, விரிவுரையாளராக, மருத்துவ எழுத்தாளராக மற்றும் கோட்பாட்டாளராகவும் மருத்துவர் நார்மன் பெத்யூன் விளங்கினார். அவர் 1930களில் கொள்கைப்பிடிப்புள்ள கம்யூனிஸ்டாக உருவெடுத்தார்.

யுத்த களத்தில் இருந்த வீரர்கள் இப்படி முழக்கமிட்டார்கள்.  நம்மோடு பெத்யூன் இருக்கிறார். தைரியமாக போராடுங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாய் போர்களத்தில் நின்றார்.
தாக்குங்கள் ! நமது காயப்பட்டவர்களைப் பராமரிக்கப் பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் !  தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் ! தாக்குங்கள் ! பெத்யூன் நம்மூடன் இருக்கிறார் !

மருத்துவர் பெத்யூனின் வாரிசாய் சீன மருத்துவக்குழுவுக்கு தலைமையேற்று 5 ஆண்டுகளே பணியாற்றினாலும் சீனாவின் அழிக்க முடியாத அடையாளங்களில் ஒருவராய் மாறிப் போனவர் மருத்துவர் கோட்னிக்ஸ்.

இந்தியாவில் இருந்து நேருவும், சுபாஸ் சந்திரபோசும் இணைந்து அனுப்பிய மருத்துவக்குழுவில் ஒருவராக சென்றவர்  மருத்துவர் துவாரகநாத்  சாந்தாராம்  கோட்னிக்ஸ் ஆவார். மற்றவர்கள் நாடு திரும்பிய நிலையில் கோட்னிக்ஸ் மட்டும் முழுமையான வசதிகள் இல்லாத சூழல், கடுமையான தட்பவெப்பத்துக்கு இடையில் பணிபுரிந்தார்.

சில நேரங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்குத் தூங்காமலும் இடைவெளி இன்றியும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் கோட்னிஸுக்கு ஏற்பட்டது. 1940-ல் போர் கடுமையாக நடந்துகொண்டிருந்தபோது, தொடர்ச்சியாக 13 நாட்களுக்கு இடையில் 72 மணி நேரம் தூக்கம் இல்லாமல் 588 அறுவை சிகிச்சைகளை கோட்னிஸ் மேற்கொண்டிருக்கிறார்.

மருத்துவமே வணிகமாக இன்று மாறியுள்ள நிலையில் கொரோனா தடுப்பு என்கிற பெயரில் தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைகளை பலவிதங்களில் பார்த்து வருகிறோம். ஆனால் அன்று சேவை நோக்கத்தோடு போர் முனையில் படைவீரர்களுக்குச் சிக்கலான அறுவை சிகிச்சைகளை உடனுக்குடன் செய்து, உயிரைக் காப்பாற்றிய அவருடைய பணியை என்னவென்று சொல்வது?

ஓய்வற்று பணியாற்றிதோடு மட்டுமல்லாமல் தனது உடல்நிலையில் கவனம் செலுத்ததால்  உடல்நலம் குன்றிய அவர், 1942 டிசம்பர் 9-ம் தேதி 32 வயதிலேயே காலமானார். அவரின் மகத்தான பணியை பெருமையோடு சீனர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்தியா வரும் அந்த நாட்டின் அதிபர்கள், அமைச்சர்கள் உட்பட அனைவரும் கோட்னிக்ஸ் நினைவு கூறாமல் உரையாற்றியதில்லை. 

சீனாவில் மூதாதையருக்கு ஆண்டுதோறும் மரியாதை செய்யும் சிங்மிங் பண்டிகையின்போது, இன்றைக்கும் கோட்னிஸின் கல்லறையில் மலர்கள் குவிந்துவிடுகின்றன. சீனாவுக்குப் பங்களித்த அயல்நாட்டவர்களின் வரிசையில் முதல் 10 பேரில் கோட்னிஸுக்கு சீன மக்கள் இடமளித்துள்ளனர்.

இவர்களை போன்ற மருத்துவர்கள் இந்தியாவிலும் பணியாற்றியுள்ளார்கள். குறிப்பாக அரவிந்த் மருத்துவமனை கண்சிகிச்சை மருத்துவர் வெங்கடபதி, அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா, ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம், சென்னையில் 10 ரூபாய் மருத்துவர் கோபால், 5 ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன் போன்று பல மருத்துவமுறைகளில் உள்ள ஏராளமான மருத்துவர்கள் மக்களுக்கான மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள். 

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இந்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து மக்களுக்கான மருத்துவத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்று கடமை ஆளும் அரசுகளுக்கு உள்ளது. இதனை  ஆளும் அரசுகள் செய்யுமா ? மக்கள் உயிர் காக்க செய்தே ஆக வேண்டும். இத்தகைய மருத்துவர்களை போல்  வளரும் மருத்துவர்களும் தேசம் என்பது மண் மட்டுமல்ல, மக்களும் கூடத் தான் என்ற புரிதலோடு சேவையாற்ற வேண்டும்..இன்றைய இளம் தலைமுறையின் ஆதர்ச சக்தியாக மாறுங்கள் மருத்துவர்களே !

இரா.மு. அரவிந்தன்.