சேது கால்வாய்
திட்டம் யாருக்கு லாபம் – மக்களுக்கு
இயற்கையை
நாசம் செய்த முதலாளித்துவம் வேலையில்லா திண்டாத்தினால் தனது லாபத்தை
வளர்த்தெடுக்கவும், உழைப்பையும், சுரண்டலையும் தனது உயிராக கொண்டு தன்னை
தற்காத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. இதன் எதிர்வினையாக இயற்கையும் மக்களின்
வாழ்வில் விளையாடத்துவங்கிவிட்டது. குறிப்பாக வானம் பார்த்தபூமியான கரிசல்காடுகள்
அதிகம் நிறைந்த தென் தமிழகத்தில் மழை பெய்யாமல் ஏமாற்றுவதால் விவசாயம் கடந்த கால்நூற்றாண்டுகளாய்
பொய்த்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், வேலைவாய்ப்புகள்
அருகி வருவதாலும் வாழ வழியில்லாமல் வாழ்வை தேடிய பயணத்தில் இடம்பெயர்வது ஆண்டுக்காண்டு கணிசமாக
அதிகரித்த வண்ணமுள்ளது.
அதே நேரத்தில்
இந்த பகுதி முழுவதும் அரசின் சரியான திட்டமிடலும், உறுதிமிக்க தெளிவான மக்கள் நலன்
சார்ந்த கொள்கையும் இருந்தால் ஏராளமான இயற்கை அன்னை கொடுத்த சீதனமான கனிமவளங்களை,
நீர் சார்ந்த ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்த முடியும். தமிழகத்தின்
தொழில்வளர்ச்சி, பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும்
திட்டமாக, தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்களான இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி,
விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை போன்ற மாவட்டங்களும்,
சென்னை, கடலூர், திருவாரூர், நாகபட்டிணம், புதுக்கோட்டை, புதுச்சேரி போன்ற கடலோர
மாவட்டங்களும் பயனடையும் வித்த்தில் ஏறத்தாழ 1050 கிலோமீட்டர் கடற்கரையை கொண்ட
தமிழகத்திற்கு பெரிதும் உதவிடும் திட்டமே சேதுசமுத்திர திட்டமாகும்.
7517 கிலோமீட்டர் நீளமும், 12 பெரிய மற்றும் 185 சிறிய துறைமுகங்களை கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அற்புதமான கடற்கரை
வளத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மேற்கு கடற்கரையை போல் கிழக்கு
கடற்கரையையொட்டிய பகுதி ஆழம் அதிகமில்லை. பாம்பனுக்கும், தலைமன்னாருக்கும்
இடையே ஆழம் குறைவாக உள்ளதால் மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் போன்ற மேற்குபகுதி துறைமுகங்களும்,
சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, தூத்துக்குடி போன்ற கிழக்குப் பகுதி துறைமுகங்களுக்கு வர
வேண்டுமென்றால் கூட இலங்கையின் கொழும்பு துறை முகத்தை சுற்றியே வரவேண்டிய நிலை
உள்ளது.
தனது சொந்த
நாட்டின் வர்த்தகத்திற்கு கூட அந்நிய நாட்டின் துறைமுகத்தை சுற்றிவரும் நிலை
என்பது இருந்து வருகிறது. இதனால் இந்திய நாட்டின் கடல் வழி வர்த்தகத்தில்
நடைபெறும் மொத்த மதிப்பில் 70 சதவீதம் கொழும்பு துறை முகம் வாயிலாக நடக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, இறக்குமதி
துறையில் துாத்துக்குடி துறைமுகம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. இங்கு அதிகமான
எடையுள்ள ( 50000, 70000 டன்) கப்பல்கள் வந்தால் தரைதட்டிடும் நிலை
உள்ளதால் பெரிய கப்பல்கள் கூட குறைவான எடையளவோடே வரக் கூடிய சூழல் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின்
உள்நாட்டு கடல்வழியில் வேகமான சரக்கு போக்குவரத்து பரிவர்த்தனை நடைபெற
வேண்டுமானால் கூட சேதுசமுத்திர திட்டம் அமுலாவது உள்நாட்டு வளர்ச்சிக்கு பெரிதும்
உதவிடும். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் கூடுதல் ஆதாயம் பெறும். ஏனெனில் இந்த
திட்ட அமுலாகத்தின் மூலம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடலூர் பகுதியில்
ஏராளமான தொழிற்பேட்டைகளும், நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுக வளர்ச்சிக்கும்,
இயற்கை எரிவாயு உற்பத்தி பரிவர்த்தனைக்கும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை
மீன்பிடி துறைமுகமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உலகின் அபூர்வமான மீன்வகை
பிடிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு சிறு துறைமுகமும், சிவகங்கை மாவட்டத்தின் கிராபைட்
தொழில், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டத்தின் வர்த்தகங்கள் கூடுதலான வளர்ச்சியும், வேலை
வாய்ப்பும் பெறும். கடல் ஆழப்படுத்தப் படுவதால் மீன்வளமும் அதிகரிக்கும். இதனால்
மீன் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
இராமநாதபுரத்தில்
ராமேஸ்வரத்தில் மீன்பிடி வர்த்தக துறைமுகமும், இயற்கையில் ஆழமான கடற்கரை பகுதியை
கொண்ட வாலிநோக்கத்தில் கப்பல் உடைப்பு தொழிலோடு, வர்த்தக துறைமுகமாக
உயர்த்துவதுற்கும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தூத்துக்குடி துறைமுகமும்,
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வர்த்தக துறைமுகமும், மூட்டம், தேங்காய்பட்டிணம்
போன்ற சிறுதுறைமுகங்கள் என ஏராளமான சிறு, பெரு துறை முகங்களின் வளர்ச்சியோடு
அந்தந்த பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு, பெரு தொழிற்சாலைகளும் துவங்கப்படும்.
தற்போதைய
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி போன்ற வர்த்தக பெரு துறைமுகங்களின் செயல்பாடுகளால்
இந்த மாவட்டங்களில் வாகனம், மொபைல், உரங்கள், ஆட்டோமொபைல், சிமெண்ட், இரும்பு,
பெட்ரோலிய, உலோக உற்பத்தி, நிலக்கரி இறக்குமதி, கடல் உணவு வகைகள், துணிகள், எந்திரங்கள்
உள்ளிட்டு ஏராளமான தொழிற்சாலைகள் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டின் காரணமாக துவங்கப்பட்டு
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தூத்துக்குடியை
சுற்றி ஸ்பிக், அனல் மின் நிலையம், கனநீர் தொழிற்சாலை, டாக் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான கடல்வழி ஏற்றுமதி நிறுவனங்கள் உருவாயின. இந்தியாவிற்குள்ளேயே
உள்நாட்டு வர்த்தகத்திற்கு குறிப்பாக நிலக்கரி, சிமெண்ட், உரங்கள், ஆகியவற்றை கொண்டு செல்ல செலவினங்கள் சாலைப்போக்குவரத்து
நீர்வழி போக்குவரத்தைவிட கூடுதலாக உள்ளது.
.
தற்போதைய தமிழகத்தின்
மின் பற்றாகுறையை போக்க பல வழிகளில் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக
தமிழகத்தின் மொத்த மின்உற்பத்தியில் கணிசமான பங்கை நிலக்கரியை பயன்படுத்தி
உற்பத்தி செய்யப்படும் அனல் மின்நிலையத்தின் மூலம் நடைபெறுகிறது. உலகின் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது
இடத்தில் இருந்தாலும், தேவைக்கேற்ப இன்னும் நிலக்கரி வயல்களும், சுரங்கங்களும்
பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தற்போதைய தேவைக்கு இந்தியாவின் பல
மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து கொள்கிறது.
குறிப்பாக
தமிழகத்தின் மின்உற்பத்தியில் தூத்துக்குடி 1050, எண்ணுர் 450, மேட்டூர் 840, வடசென்னை 630 என
2970 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு சுமார் 18 மில்லியன் டன் நிலக்கரி
தேவைப்படுகிறது. இதில் 13 மில்லியன் டன் வரை இந்தியாவின் கிழக்கு பிராந்திய
நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்த கடலோர அனல்மின்நிலையங்களுக்கு தேவைப்படும்
நிலக்கரியில் பெரும்பகுதி நீர்வழிப்போக்குவரத்தின் மூலம் பரிவர்த்தனை நடைபெறும்
போது மிகக்குறைந்த செலவையே உருவாக்கும். தூத்துக்குடியில் இயங்கும் அனல்மின்
நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை சென்னைத் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கு
கொண்டு செல்ல வருடத்திற்கு 24 கோடி ரூபாய் செலவாகிறது. ஆனால் சேது சமுத்திரக்
கால்வாய் திட்டத்தால் கப்பல் நேரடியாக தூத்துகுடி துறைமுகத்திற்கு வருவதால்
நிலக்கரியை கடத்தும் செலவு மிச்சம்.
· இதன் மூலம் ஏறத்தாழ 780 கிலோமீட்டர் (
424 கடல் மைல்) துாரமும், 30 மணி நேரமும் மிச்சமாகும். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 434 கி.மீ, விசாகப்பட்டினத்திற்கு
304 கி.மீ, கொல்கத்தாவிற்கு 265 கி.மீ, சிட்டகாங் 220 கி.மீ, இரங்கூன் 119 கி.மீ, சிங்கப்பூர் 42 கி.மீ என பயணத் தூரங்கள் மிச்சமாகும்.
· கணிசமான எரிபொருள் சேமிப்பு, அந்நியச் செலவாணி சேமிப்பு.
· கப்பல் வாடகைக் கட்டணத்தில் சேமிப்பு.
· கப்பல்கள் அதிகப் பயணம் மேற்கொள்ள முடியும்.
· கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் சென்னைக்கு அடுத்தப்படியாக
உள்ள தூத்துக்குடி துறைமுகம் சரக்குப் பெட்டகப் போக்குவரத்தில் கூடுதல் பங்களிப்பை செய்து வருகிறது.இதானல் இதனை ஒருங்கிணைப்புத் துறைமுகமாக
மேம்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களும்
வளர்ச்சி பெறும். இராமேஸ்வரத்தில் மீன்பிடித்
துறைமுகம் மேம்படுத்தப்படும்.
· கால்வாய்த் திட்டத்தால் சென்னையிலிருந்து
கொச்சி வரை இந்திய கடற்படையின் பெரிய கப்பல்கள் ரோந்து செல்வது தொடங்கும். இதனால்
தமிழகக் கடலோர பாதுகாப்பு பெருகும். கால்வாய் இந்திய கடல் எல்லை வழியே செல்வதால், அங்கு மிதவை ஒளி கம்பங்கள் நிறுத்தப்படும்.
இதனால் மீனவர்களும் எல்லை தாண்டி தவறுதலாக செல்ல வாய்ப்பில்லை, பாதுகாப்பும் அதிகம் இருக்கும்.
· தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்
சுட்டுக்கொல்லப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் கூட கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பு
ஏராளமாக உள்ளது.
இப்படிப்பட்ட ஏராளமான சாதக அம்சங்கள் இந்த திட்டத்தில் இருக்கிறது. அதே
நேரத்தில் கீழ்க்காணும் பாதகங்களும் ஏற்படும் என்ற சந்தேகமும் ஒரு பகுதியினரால்
கிளப்பப்படுகிறது.
· மீன்பிடிப்பு பகுதி குறையக்கூடும் என்ற மீனவர்களின் அச்சம்.
· தோண்டப்படும் மணல் அப்புறப்படுத்தப்படுவது பற்றிய ஐயங்கள்.
· ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்கள் பயன்படுத்த முடியாது
என்பதால் பொருளியல் கோணத்தில் எதிர்ப்பார்த்த பலன் கிட்டுமா என்ற ஐயம்.
· இலங்கையின் கொழும்புத் துறைமுகம் பாதிக்கப்படும் என்பதால்
இலங்கை அரசு பெரும் கவலை கொண்டுள்ளது.
· இத்திட்டத்தால் பெரிய பொருளியல் நன்மைகள் எதுவும்
விளையப்போவதில்லை என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் செலவுகளோடு
ஒப்பிடும் போது கிடைக்கும் நன்மைகளும் இலாபமும் மிகக் குறைவு என்ற வாதம்
முன்வைக்கப்படுகிறது.
இதே வாதங்கள் தான் பனாமா கால்வாயை வெட்ட பிரான்சு
துவக்கியபோது முன்வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பனாமா கால்வாய் வெட்டுவதில்
தோல்வியும் ஏற்பட்டது. இதனால் இத்திட்டத்தை பிரான்சு கைகழுவியது. ஆனால் அமெரிக்க
அரசு உறுதியுடன் முயற்சி செய்து இந்த
திட்டத்தை செயல்படுத்தி காட்டியது. 100 ஆண்டுகளை கடந்து சிறப்பாக பனமா கால்வாய்
பயன்பாட்டில் இருந்து வருகிறது. தேவைக்கேற்ப நவீன வசதிகளை கால்வாயில் பயன்படுத்தி
கப்பல் போக்குவரத்தை செழுமைப்படுத்தியுள்ளனர். சூயஸ் கால்வாயும் இதே போன்ற
பங்களிப்பை இன்று வரை செய்து வருகிறது,. இன்று வரை சீனாவில் கடலில் பாலம், மும்பையில், கொல்கத்தாவில் என பல பகுதிகளில் கடலில் போக்குவரத்திற்கான பயன்பாட்டிற்கு நாம் அறிந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,.
சீனாவில் கிழக்கு ஷாங்டான் மாகாணத்தில் உள்ள ஜியாஷோவ் வளைகுடாவில் கடலுக்கு நடுவில் 42 கி.மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு குயிங்டோ என பெயரிட்டுள்ளனர். இது குயிங் மோவ் துறைமுக நகரையும், ஹங்டாவ் தீவையும் இணைக்கிறது.4 ஆண்டுகளாக இப்பாலம் கட்டப்பட்டது. இதற்காக ரூ.10,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. 5000-க்கும் மேற்பட்ட ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் 90-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நேற்று பொதுமக்கள் உபயோகத்துக்காக இது திறந்து விடப்பட்டது. இதன் மூலம் குயிங்டோ- ஹாங்டோ நகரங்களை சுமார் 20 முதல் 40 நிமிடங்களில் கடக்க முடிகிறது. இப்பாலம் கட்டியதன் மூலம் குயிங்டோ துறைமுகத்தின் வருமானம் பெருகும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக சீனா பல உலக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நேற்று திறந்து வைக்கப்பட்ட இந்த கடல் பாலம்தான் அதிக நீளமானது என்ற உலக சாதனையை படைத்துள்ளது. ஆறுவழிச்சாலையாக உள்ள இந்த பாலம் நிலநடுக்கம் ஏற்படும் காலகட்டங்களில் ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவு வரை தாங்கும் திறனை கொண்டுள்ளது எனவும், ஹதாங்காங்சுற்றுலாத்துறை, வர்த்தகம் மேம்பாடு அடையும் என்றும் ஹாங்காங் அதிகாரி டொனால்டு டிஷாங் கூறியுள்ளார்.
![]() |
குயிங் மோவ் துறைமுக நகரையும், ஹங்டாவ் தீவையும் இணைக்கும் 42 கீலோமீட்டர் நீளமுள்ள சீனாவின் 4 ஆண்டுகளில் கட்டப்பட்ட கடல்பாலம் |
அதே போன்று பெய்ஜிங், ஷாங்காய் இடையே 5 மணி நேரத்தில் கடக்க கூடிய புல்லட் ரெயில் இயக்கப்படுகிறது.மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரெயில் உலகிலேயே அதிவேகத்துடன் இயங்கும் ரெயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. உலகிலேயே மிக நீளமான இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு கொண்ட நாடு என்ற அந்தஸ்தையும் சீனா பெற்றுள்ளது. சீனா துர்மெனிஸ்தான் இடையே 8700 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கஜகஸ்தான் எல்லை வழியாக வருகிறது.
கடலில் தூர்வாரும் போது மணலை எங்கே கொட்டுவது, அலையின்
ஓட்டத்தில் மணல் மீண்டும் கால்வாயில் நிறைந்து பாதையை அடைத்துக்கொள்ளாதா? ஒவ்வொரு
ஆண்டும் மணலை தூர்வாற முடியுமா? இதற்கான பொருளாதார செலவிற்கு ஆண்டுக்கொரு முறை
நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுப்பப்படுகிறது? மேலும்
கால்வாய் வழியாக மிதமான வேகத்திலேயே கப்பல்கள் செல்ல முடியும், அனுமதி மற்றும்
வழிகாட்டும் கப்பல்கள் தேவைப்படும். இதற்கான கட்டணங்கள் கூடுதலாகும். இதற்கு பதில்
இலங்கையை சுற்றியே வந்துவிடலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இயற்கை
வளங்கள் அப்படியே விட்டுவைக்கப்படும் பட்சத்தில் அது சாதாரண, அடித்தட்டு மக்களின் சொத்தாக இருக்கும். அதையே பெரு
நிறுவனங்களின் தொழில்சார் தேவைகளுக்கான பெரிய திட்டங்களூடே அழிக்க முற்படும்போது
மிகக்குறைந்த விழுக்காட்டினரான பணக்கார வர்க்கத்துக்கே முழுமையாகப் பயன்படும்
என்கிற வாதம்.
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும்
இந்த அறிவு ஜீவிகள் கடந்த 15 ஆண்டுகளில் மத்தியில் பிஜேபி, காங்கிரஸ்
ஆட்சிக்காலத்தில் பஞ்ச பூதங்களும் பல லட்சம் கோடி அளவில் கொள்ளையடிக்கப்பட்டனவே
அது இவர்கள் கண்ணுக்கு தெரியாதா? இந்திய நாட்டின் பெரும் பகுதி இயற்கை வளங்களை
கார்ப்ரேட் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்துதான் கொள்ளையடித்துள்ளனர்.
ஆனால் சாதாரண ஏழை மக்களின் வாழ்வை தீர்மானிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இது
போன்ற திட்டங்களை நிறைவேற்றினால் அதில் பணக்கார வர்க்கத்திற்கு லாபமாக அமையும் என
திடீர் பாசத்தை பொழிந்து அதற்கு எதிராக நிற்பது எப்படி சரியாக இருக்கும் என்பது
அவர்களது மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.
அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் 21ம் நூற்றாண்டில்
பூமியைத் தாண்டி வேறு கிரங்கங்களில் மனிதன் வசிக்க முடியுமா? அதற்கான சூழல்கள்
நிலவுகின்றனவா? என்று ஆய்வுகளும், முடியும் என்ற கருத்தும் வலுப்பெற துவங்கியுள்ள
கட்டத்தில் சீனத்தில் பல மைல் தூரம் கடலிலேயே பாலம் அமைத்து ஒரு ஊரையே கடலுக்குள்
உருவாக்க முடியும் என்கிற அளவிற்கு இயற்கையை வெற்றி கொண்டவனாக மனித சமூகம்
முன்னேறி வருகிறது. சந்திரனை தொட்டதின்று மனித சக்தி, சரித்திரத்தை மாற்றியது மனித
சக்தி என்று வளர்ந்து வருகிறோம் நவீன அறிவியலின் உதவியோடு,..
எனவே உள்நாட்டு தேவையை முதலில் மையப்படுத்தி இந்த திட்டம்
நிறைவேற்றப்பட்டால் இன்னும் பல ஆண்டுகளில் தொழிற்துறையில் வல்லரசாக இந்தியா
மாறமுடியும்.. நீண்ட காலப்பார்வையோடு இதற்கான திட்டமாக இடையூறு இல்லாமல்
அமலாக்கினால் நிச்சயம் சாத்தியமான திட்டமாக இது பரிணமிக்கும்,. வீட்டை வீட்டு
கிளம்பும் போதே பூனை போனது என்று சகுனம் பார்க்கும் ஆசாமிகளிடம் எது செய்தாலும்
சொத்தையாகதான் இருக்கும்.
கடலில் அலைகள் இரண்டு புறமும் அடிக்கும் போது இயல்பாக
உருவாகும் மணல்மேட்டை விஞ்ஞானத்திற்கு புறம்பாக இராமர் என்கிற இன்ஜினியர் கடலில்
பாலம் கட்டினார், இதனை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வாக்குவங்கி
அரசியலுக்கு அச்சாரம் போட்டார்கள். இது எந்த இராமயாண அடிப்படையில் என்ற போது
வால்மீகி இராமயாணம் என்றனர். அதிலும் இராமன் போட்ட பாலத்தை இராமனே அழித்துவிட்டதாக
வருகிறது என்றபோது., இது நம்பிக்கை எனவே இதை இடிக்கக்கூடாது என்று கூக்குரலிட்டு
வருகின்றனர்.
இவர்கள் சொல்லும் பாலம் என்பது இயற்கையிலேயே
அமைந்துள்ள மணல்திட்டுகள் ஆகும். இதனைதான் ஆதம் அல்லது இராமர் பாலம் என்கின்றனர்.
சில நேரங்களில் கடல் மட்டத்தின் உயர்வு தாழ்வை பொறுத்து இது தரைப்பகுதியாக உயர்வதும், கடலில்
அமிழ்ந்து போவதும் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற மணல் திட்டுக்கள்
உலகம் முழுவதும் ஏராளமான இடங்களில் உள்ளன.
இந்த மணல் திட்டுக்களை அகற்றி விட்டு
பாம்பனுக்கும், தலைமன்னாருக் கும் இடையே கால்வாய் தோண்டினால் அதில் கப்பல் போக்குவரத்தை
நடத்திட முடியும் என 1860ம் ஆண்டு இந்திய கடற்படையின் கமாண்டராக இருந்த ஏ.டி. டெய்லர் திட்டத்திற்கான
பரிந்துரையை வழங்கினார். அதற்கு பின் 1922ம் ஆண்டு வரை 7 குழுக்களும், சுதந்திர இந்தியாவில் 7க்கும்
மேற்பட்ட குழுக்களும் பரிந்துரைகளை வழங்கி இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கான
சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்தின. 1955ம் ஆண்டு ஜவகர்லால் நேரு, இராமசாமி
முதலியார் தலைமையில் ஒரு குழு அமைத்து 998 லட்சம் ரூபாய்க்கான (சுமார் 10 கோடி ரூபாய்) மதிப்பீட்டில்
சமர்ப்பித்தது. அதன் பின்பு 1983ம் ஆண்டு இந்திராகாந்தி, லெட்சுமி
நாராயணன் தலைமையில் குழுவை நியமித்தது. அக்குழு ரூ.282 கோடி மதிப்பீட்டில் திட்டத்திற்கான
பரிந்துரையை வழங்கியது.
தமிழகத்தில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர்
சங்கம் போன்ற இளைஞர் அமைப்புகள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டமும், அதனைத்
தொடர்ந்து 2000ம் ஆண்டு நவம்பர் 28 அன்று தலைநகர் தில்லியில் நாடாளுமன்றத்தின் முன்பு தமிழக இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோரை
திரட்டி பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி அன்றைய தினம் பிரதமராக இருந்த
வாஜ்பாயிடம் மனு கொடுத்து இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து
வற்புறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் இடதுசாரி கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களின் வற்புறுத்தலுக்குபின் 2002
ம் ஆண்டு வாஜ்பாய் அரசு இத்திட்டத்திற்கான
ஒப்புதலை அளித்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான
அரசு இதற்கான எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. இந்து மத அமைப்புகளும்
எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இன்று திடீரென்று எதிர்க்கிறார்.
இதன்
பின்னணியில் 2004ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு-1, இடதுசாரிகளின்
ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தபோது இந்த திட்டத்தை அமலாக்க நடவடிக்கை கொள்ளப்பட்டதன்
தொடர்ச்சியாக திட்டத்திற்கான அனைத்து வரைவுகளும் இறுதிப்படுத்தப்பட்டு 07.09.2004 முதல் 02.02.2005 வரை தமிழக
கடற்கரையோர மாவட்டங்களான கடலுார், நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவற்றில் பொதுமக்களை நேரில்
சந்தித்து கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களது சந்தேகங்களுக்கு உரிய
தெளிவான விளக்கங்களை அளித்த பின்னணியில் எந்தவித எதிர்ப்பில்லாமல் பொதுமக்கள்,
மீனவர்கள் உள்ளிட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இறுதியாக
தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு மையம் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, மீன்வள
பாதிப்பு, பவளப்பாறை பாதிப்பு குறித்து முன்னுக்கு வந்த அனைத்து கேள்விகளுக்கும் உரிய
ஆய்வை நடத்தி அது குறித்த அறிக்கையை அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் அளித்தது. மேலும்
இந்த திட்டத்தில் பொருளாதார பலன், 50000 டன் எடையுள்ள கப்பல்கள் செல்ல ஏற்பாடு என்ன
என்பது குறித் தெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கும் சேதுகால்வாய்த்திட்ட
நிறு வனம் உரிய பதிலை அளித்தது. 2005ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ரூ.2427
கோடி செலவில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி துவக்கி
வைக்கப்பட்டது. 60 சதவீதத்திற்கும் மேலாக மணல் தூர்வாரும் பணிகள் முடிந்தும், மொத்த திட்டத்தில்
80 சதவீதமான பணிகள் நிறைவு பெற்று முடிந்தது.
இந்த சூழலில்
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆதம் பாலம் குறித்து புகைப்படங்களை 2002ல் வெளி
யிட்டதை 2008ல் அமெரிக்காவில் உள்ள இந்து மத அமைப்புகள் இணையதள மான இந்தோலிங்
கடலுக்கடியில் உள்ள மணல் திட்டு இராமர் கட்டிய பாலம் என பொய் செய்தியை
வெளியிட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு ஊடகங் கள் இந்த செய்திகளை வெளியிட்டு புதிய
சர்ச்சைகளை கிளப்பிவிட்டன. 2002ல் அமெரிக்க நாசா நிறுவன அதிகாரிகள் இதனை மறுத்து இராமேஸ்வரப் பகுதியில்
எடுக்கப்பட்ட புகைப்படம் உலகின் இதர பகுதியில் உள்ள மணல்திட்டை போன்றதே என
தெளிவுபடுத்திவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா
போன்றோர் உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். இது தமிழகத்திற்கு
பயன்படாது என எதிர்வாதம் செய்து தமிழக நலனில் மண்னை அள்ளி போட்டார்கள்.
1996,2001,2006 தேர்தல்களில் எல் லாம் சேது
கால்வாய்த்திட்டத்தை அம லாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து பேசிய அதிமுக, பகுத்தறிவு
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அவர் உருவாக்கிய திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல்
என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா போன்றோர் இன்று ’நம்பிக்கை’ என்ற பெயரால் உண்மைக்கு புறம்பாக, இயற்கையில்
உருவான மணல் திட்டை இராமர் கட்டிய பாலம், அதை நினைவுசின்னமாக மாற்ற வேண்டும் என
கோரிக்கை வைப்பது தமிழக மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். இதில் திமுக
மத்திய அமைச்சரவையில் இருந்த காலங்களில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல்
இருந்துவிட்டு தற்போது போர் நடத்த போகிறோம் என திமுக தலைவரின் பிறந்தநாள் சபதமாக
அறிவிப்பது கண்துடைப்பு நாடகமே.. திமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம்
என்பதாலேயே அதிமுக தலைவர் ஜெயல்லிதா எதிர்க்கிறார் என தமிழக நலனில் அக்கறை
இல்லாமல் இரண்டு திராவிட கட்சிகளும் வாக்கு வங்கி அரசியலுக்காக நாடகம் போட்டுக்
கொண்டிருக்கின்றனர் என்பதை தமிழக இளைஞர்கள் நன்கறிவார்கள்.
2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 தேதி முதல் 29ம் தேதிவரை கோவை, கன்னியாகுமரி, இராமேஸ்வரம்
ஆகிய மூன்று முனைகளில் இருந்து சைக்கிளில் நுாற்றுக்கும் மேற்பட்டடோர் 3300 கிலோ மீட்டர்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் கடந்து சென்னையில் பல்லாயிரக்கணக்கான
இளைஞர்களை திரட்டி சேது திட்டத்தை நிறை வேற்றக்கோரி பிரம்மாண்ட பொதுக்கூட்டமும்
நடத்தி அன்றைய ஆட்சியாளர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2009 பிப்ரவரியில் தலைநகர்
தில்லியில் தமிழக இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரம்
கொட்டும் மழையில் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டமும். அதைத் தொடர்ந்து மத்திய நிதி
அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் டிஒய்எப்ஐ சார்பில் மகஜர் அளிக்கப்பட்டது. இதன்
தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கான நிதியை முழுமையாக ஒதுக்கி அமலாக்க உரிய நடவடிக்கை
எடுப்பதாக உறுதி அளித்தார். 2012ம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 22 வரை தமிழகத்தின் 8
முனைகளில் இருந்து டிஒய்எப்ஐ சார்பில் 4075 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணமாக
தமிழகத்தின் அரைக்கோடிக்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து பல்வேறு
கோரிக்கைகளோடு தமிழக வேலைவாய்ப்புக்கான சேது சமுத்திர திட்ட அமுலாக்கம் குறித்து
விரிவான பிரச்சாரம் செய்தோம்.
மேற்படி
திட்டத்தை நிறைவேற்றுவது என்பது எந்த கட்சியின் சாதனையாக வேண்டுமானலும்
இருந்துவிட்டு போகட்டும். ஆனால் தமிழகத்தின் நலனுக்கான திட்டம் என்பது கவனத்திற்குரியது.
தென் தமிழகத்தின் பல்வேறு தருணங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்களில் இளைஞர்கள்
பங்கேற்றது குறித்து கவலையோடு சுட்டிக்காட்டி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும், தொழில்வளர்ச்சியையும்
உறுதிப்படுத்தினால் சாதிக் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என நீதிபதி
மோகன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் வற்புறுத்தியது. இது நடை முறைப்படுத்தப்பட வேண்டுமானால் சேது
கால்வாய்த்திட்டத்தை உறுதியாக அமலாக்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.