21ம் நூற்றாண்டின் அடிமைத்தளைகளிலிருந்து தென்அமெரிக்க
மக்கள் விடுபட வேண்டுமானால் ஒவ்வொரு குடிமகனும் “தென்அமெரிக்க
மக்களின் கரங்களுக்கு ஸ்பெயின் நாட்டு ஆதிகக்க வர்க்கத்தினாரால் பூட்டப்பட்ட இரும்பு
வளையங்களை ஒடிக்கும் வரை,
அடிமைப்பட்ட மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்
வரை எனது கரங்களும்,
ஆன்மாவும் ஓய்வு பெறாது“ என்று உறுதி மொழியேற்க
வேண்டும் என சைமன் பொலிவர் கூறியது லத்தீன் அமெரிக்க மக்களை இன, நிற மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்க சுரண்டலுக்கு எதிராக
தட்டியெழுப்பியது.
ஏகாதிபத்தியம், நிதி
மூலதன சுரண்டல், வளர்முக நாடுகளின் இயற்கைவளங்களை கொள்ளையடித்தல் என அதற்காக கையாண்ட
வழிமுறைகளுக்கு எதிராக ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையை பொலிவரின் திட்டம் 200 என்ற
கொள்கையோடு வெனிசுலாவில் பொலிவரின் 200 வது பிறந்ததின ஆண்டில் நிகழ்த்தி காட்டினார்.
அந்த பாரம்பரியத்தில் நின்று சாவேஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும்
குழுமியுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 2006ம்
ஆண்டு பாலஸ்தீனம்,
வடகொரியா, ஈராக்
ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க செயல்பட்டபோது அமெரிக்காவை கடுமையாக சாடினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் “சகோதர சகோதரிகளே, நேற்று
இந்த அழகு மேடையில் இருந்து அமெரிக்க அதிபர் அதாவது நான் பிசாசு என்று அழைக்கும் கனவான்
இந்த உலகம் எனக்கே சொந்தம் என்பது போல பேசினார். மன நல மருத்துவரை அழைத்து அவரை பரிசீலிக்க வேண்டும். உலக மக்களின் மீது செய்துவரும் மேலாதிக்கம், சுரண்டல், கொள்ளை
ஆகியவற்றைத் தொடரப் போலி மருத்துவரின் மருந்துகளுடன் அவர் வந்தார். இந்த காட்சியை ஹிட்ச்காக் திரைப்படத்தில் காட்சிப்படுத்தலாம். அந்த திரைப்படத்திற்கு நான் ஒரு தலைப்பும் தருகிறேன். “பிசாசின் சமையல் குறிப்பு“ என்று பகிரங்கமாக அமெரிக்க ஆக்கிரமிப்பு கொள்கையை சாடிப்
பேசினார்.
சாவேசின் இந்த பேச்சு
பிடல் காஸ்ட்ரோவிற்கு பின் லத்தீன் அமெரிக்காவில் ஒரு ஒளிக்கற்றையாக நம்பிக்கையின்
கீற்றாக ஒளிர வைத்தது.
இதன் பின்னணில் அவரின் கோஷமும் மாறுபட ஆரம்பித்தது. சைமன் பொலிவரின்
முழக்கமான தென் அமெரிக்காவில் உள்ள ஒட்டு மொத்த
நாடுகளையும் ஒரு குடையின் கீழ் அமைத்து ஐக்கிய அமெரிக்க நாடுகளை காட்டிலும் மேலான ஆற்றல்
மிகு நாடுகளாக மாற்ற வேண்டும் என்ற விருப்பதை நிறைவு செய்யும் மகத்தான கடமையை முன்னின்று
துவக்கியவர் சாவேஸ்.
பொலிவியாவில் ஈரோமொரசல்ஸ்ன் வெற்றி அதை மேலும்
வேகப்படுத்தியது.அதன் துவக்கமாக அல்பா என்ற தென் அமெரிக்கவின் 8 நாடுகளை கொண்ட கூட்டமைப்பை உருவாக்கினார்.
அதே போல் கரீபியன்
நாடுகளையும், லத்தீன்
அமெரிக்க நாடுகளையும் இணைத்து செலாக் என்ற அமைப்பையும் முன்னின்று உருவாக்கினார்.
அமெரிக்க டாலருக்கு மாற்றாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான வளர்ச்சி வங்கியை “பேங்க்
ஆப் சவுத்“ என்னும் பொது கரண்சியை உருவாக்க முன்முயன்றார். இந்த அமைப்புகள் இன்று
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரண்டு நிற்கிறது,. அது மட்டுமல்லாது அணிசார
நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியையும் மேற்கொண்டார். அதன் பகுதியாக பிரிக்ஸ். இப்சா
போன்ற வளர்முக நாடுகளின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் தனது முன்முயற்சியையும், ஒத்துழைப்பையும்
செலுத்தினார்.
ஹியூகோ சாவேஸ் லத்தீன்
அமெரிக்க அரசியலில் தீர்மானகரமான பங்கை செலுத்தினார், தனது ஆட்சியை மக்களாட்சியாக மாற்றினார்.
மக்களின் பங்களிப்பை களமட்டம் வரை உறுதி செய்தார். “கியூபாவின் பிடலை தனது ஆதர்ச நாயகனாக
கொண்டவர். ஃபிடல் நீங்கள், எங்களுக்கு முக்கியமானவர். நீங்கள் இல்லாமல் எங்களால் இருக்க
முடியாது. நீங்கள் எங்களுடைய தந்தை, எங்களுடைய தோழன், எங்களுடைய சகோதரன்“,என்ற அளவிற்கு
பிடலோடு மட்டுமல்லாது கியூபாவோடு தோழமை பாராட்டினார். தனது நாட்டின் வறுமையை, சுகாதாரமின்மையை
போக்க கியூபா மருத்துவர்களை பயன்படுத்திக்கொண்டு கியூபாவிற்கு தனது பெட்ரோலிய எரிப்பொருட்களை
அனுப்பி இரண்டு நாடுகளின் வளர்ச்சியில் மையமான ஆளுமையை பிடலோடு சேர்ந்து செய்தார் என்றால்
மிகையாகாது.
அதுதான் அவர்கள் இருவரிடம்
வெனிசூலா ரேடியோ நிகழ்ச்சியில் சேர்ந்து பாடுவதில் இருந்து, பேஸ்பால் விளையாடுவது வரை
சேர்ந்து விளையாடினார்கள் இந்த வயதிலும். சாவேஸ் தனக்கு ஏதாவது ஒன்று என்றால் ஏறு வண்டி
என கியுபாவிற்கு போய்விடுவார். அதனால்தான் பிடல் ஒரு முறை சாவேசை கட்டி அணைத்து உச்சி
முகந்து சொன்னார், “எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது., இப்போதைக்கு உங்களை விட்டால்
வெனிசூலாவுக்கு வேறு ஒரு நல்ல தலைவர் கிடைக்க மாட்டார் என்று“.. அந்த அளவிற்கு கியூபா
மக்களின் மீதும், பிடலின் மீதும், தென் அமெரிக்க மக்களின் மீதும் பாசம் பொழிந்த தலைவர்.
இதனைக் கண்டு கொதித்துப்போன அன்பே கடவுள் என்று போதிக்க வேண்டிய அமெரிக்க கிறிஸ்தவ
பாதிரியார் ரிவரெண்ட் பாட் ராபர்ட்ஸன் என்பவர்.. பேசாமல் சாவேசைக் கொன்றுவிடலாம் அவர்
உயிருடன் இருப்பதால் தானே பிரச்சனை என்று கொக்கரித்தார். இதிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின்
கொலை வெறியை, நாடுகளை சுரண்டிக்கொழுக்கும் நரித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்,..
நரி செத்தாலும் கோழி மீது கண் வைத்திருக்கும் என்பார்கள். எத்தனை முறை சோசலிச சக்திகளால்
மூக்குடைப்பட்டாலும் புத்தி வராத ஏகாதிபத்தியம் தனி நபர்களை கொலை செய்வதன் மூலம் ஒரு
சிந்தாந்தை, சமூக அமைப்பு முறையை சீரழித்துவிடலாம் என விஞ்ஞானத்திற்கு விரோதமாக செயல்பட்டுக்
கொண்டிருப்பவர்கள்.
அதனால் தான் மனிதவள
மேம்பாட்டில் உலகின் அசைக்க முடியாத சக்தியாக உள்ள கியூபாவின் பிடலை எதிர்த்து ஐசன்ஹோவர்
முதல் தற்போதைய ஒபாமா வரையிலான எல்லா அமெரிக்க அதிபர்களும் பிடலுக்கு எதிரான கருத்தியலை
கொண்டோதோடில்லாமல் தங்களின் கொலைகார நிறுவனமான சிஐஏ மூலம் 600க்கும் மேற்பட்ட முறை
கொலை முயற்சிகளை மேற்கொண்டனர். பிடல் அதனை வெற்றிகரமாக முறியடித்தார். அதன் வழியில்
தற்போது சாவேஸ் மீதும் அத்தகைய தாக்குதலை தொடுத்தனர். சாவேஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்
செயல்படாமல் கிடந்த வெனிசுலாவின் அரசியல் சாசனத்தை மாற்றியமைத்தார். நிர்வாக எந்திரத்தையும்,
இராணுவத்தையும் புரட்டிப்போட்டார். அரசியல், பொருளாதார, சட்ட வழியில் நாட்டை கொண்டு
செல்ல தடையாக இருந்தவற்றை நாட்டு மக்களின் கருத்தொற்றுமையோடு தகர்த்தெறிந்தார்.
ஆம், 1999 பிப்ரவரி
2ம் தேதி 56சதம் வெனிசுலா மக்களின் ஆதரவோடு நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். மக்கள்
முன்னால் தோன்றி தனது உரையை ஒரு பாடலுடன் இவ்வாறு துவக்கினார்.“இன்று போர் தொடங்குகிறது.
இந்த போர் லத்தீன் அமெரிக்க மண்ணில் அராஜகமாக அத்துமீறி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்
அமெரிக்க, ஐரோப்பிய, கரீபிய ஆட்சியாளர்களுக்கு எதிரானது. இந்த போரில் மடிவதை தவிர வேறு
வழியில்லை. இனியும் பணிந்து போவது இயலாது. புரட்சிகர மாற்றம் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்கப்புரட்சிக்கும்
முன்னோடியாக திகழும். தன்மானத்துடன் கூடிய சமாதானத்துக்கான போராட்டம் இது,. வறுமையை
பகிர்ந்துகொள்வோம், அதை கடந்து செல்ல“ என முழக்கமிட்டார்.
வறுமை, கல்வியின்மை,
பட்டினி, சுகாதார மின்மையில் சிக்கிய வெனிசுலாதான் உலக எண்ணெய் வளத்தில் 5 வது மிகப்பெரிய
ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தது. அப்போது வெனிசுலாவில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை
7 டாலர் அதாவது பீசா, பர்கர், ஒரு செய்திதாள் விலைதான் ஒரு பீப்பாயின் விலை.. அந்தளவு
வெனிசுலாவில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் 1919முதல் கொள்ளையடிக்க ஆரம்பித்தது.
1960களில் எண்ணெய்
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு மத்தியகிழக்கு நாடுகளில்
உருவாக்கப்பட்டது. அப்போது வெனிசூலா, இராக், இரான், குவைத், சவுதி, அல்ஜிரியா, இந்தோனேசியா,
லிபியா, ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், நைஜிரியா ஆகியவை அதில் உறுப்பு நாடுகளாக இருந்தன.
இந்த நாடுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு வடிவத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கைப்பாவை
அரசுகளை உருவாக்கிக் கொண்டு கொள்ளையடித்து வந்தது. அதனை எதிர்த்த ஈராக். இந்தோனேசியா,
இரான், லிபியா போன்ற நாடுகளில் எல்லாம் இராணுவ நடவடிக்கையிலும் அமெரிக்க தலைமையிலான
ஏகாதிபத்திய நிறுவனங்கள் ஈடுபட்டன. அதில் மண்ணை அள்ளி முதலில் போட்டவர் சாவேஸ். எண்ணெய்
வளம் கொள்ளை போவதை ஜனநாயக ரீதியில் அந்நிய நிறுவனங்களின் பங்கை குறைத்து அரசின் பங்கை
அதிகரித்தார். இதனால் பூனை தூங்கிகொண்டிருந்த அரசு கஜானா நிரம்ப ஆரம்பித்த்து.
தனது முதல் இரண்டாண்டு
ஆட்சியிலேயே 49 சட்ட திருத்தங்களை கொண்டு வந்தார். “மீனுக்கு தண்ணீர் என்றால், இராணுவத்துக்கு
மக்கள்“ என்ற மாவோவின் முழக்கத்தை நடைமுறைப்படுத்தியவர். இராணுவத்தின்
நடவடிக்கையை நாட்டின் புனரமைப்பிற்கும், மக்கள் சேவைக்கும் பயன்படுத்தினார். இராணுவத்தின்
விமானங்கள், கப்பல்கள், டிரக்குகள், லாரிகள், வாகனங்கள் அனைத்தும் மக்களுக்காக பயன்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு திட்டத்துக்கும் பெயரிடப்பட்டு மக்கள் பங்கேற்பை நேரடியாக உறுதிப்படுத்தினார்.
நாட்டின் மக்கள் தொகையில் 5 சதமிருந்த நிலப்பிரபுகளிடம், நிறுவனங்களிடம், ஆலை முதலாளிகளிடம்
நாட்டின் மொத்த நிலத்தில் 85சதம் நிலம் பயன்படுத்தப்படாமல் குவிந்துகிடந்தது. நிலச்சீர்திருத்த
சட்டத்தை அமுல்படுத்தி நிலவிநியோகத்தை முறைப்படுத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதற்கு முன்னுதாரணம்
ஒன்னேமுக்கால் டாலருக்கு ஒரு ஏக்கரை குத்தகைக்கு பெற்று கொள்ளையடித்த அமெரிக்க நிறுவனங்களிடம்
பிடல் காஸ்ட்ரோ நாங்கள் ஒன்னே முக்கால் டாலரை தருகிறோம் பெற்றுக்கொண்டு நிலத்தை ஒப்படைத்துவிட்டு
ஓடிவிடுங்கள் என்று சொல்லி நிலவிநியோகத்தை முறைப்படுத்தினார். அதையே முன்மாதிரியாக
சாவேஸ் ம் மேற்கொண்டார். கல்வி, வேலை, சுகாதாரம், வாழ்வதாரம் அனைத்திலும் மாற்றத்தை
குறுகிய காலத்தில் நிகழ்த்தினார் சாவேஸ். இடையிலே இயற்கை சீற்றத்தில் கடலோர பகுதிகளில்
30000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த பேரிழப்பு ஏற்பட்ட போது, உடன் களத்தில் இறங்கி
மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணியை துரிதப்படுத்தினார். “ஒவ்வொரு வீட்டுக்கும் நாங்கள்
வருவோம், இடிந்து போன வீடுகளை கட்டித்தருவோம்“ என்று சொன்னதோடு நில்லாமல் தொலைகாட்சியில்
அறிவித்தார். “நாங்கள் பேரிழப்பை சந்திக்கவில்லை, பேரிழப்பை வெற்றிகொண்டிருக்கிறோம்“
என்று நேர்மறையான நம்பிக்கையோடு வெனிசுலாவின்
பாதுகாவலரானவர்.
ரஷ்ய கம்யூனிஸ்ட்
கட்சி தலைவர் கென்னடி சாவேஸ் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் போது சொன்னது முக்கியமானது.
ஏகாதிபத்திய எதிர்ப்பில் முன்னின்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களில் 5, 6 பேர்
புற்றுநோயால் சமகாலத்தில் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
சதியாக இருக்கலாம், விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றார். இது தற்போதைய நிகழ்வு மட்டுமல்ல..
கடந்த காலங்களில்
லத்தீன் அமெரிக்கா உள்ளிட்டு பல்வேறு ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையில் முன்னணியில்
நின்ற நாடுகளின் தலைவர்கள் நேரடியாகவே சிஐஏவால் அந்தந்த நாடுகளில் கலகங்களின் மூலமாகவோ,
நேரடியாகவோ, இராணுவத்தின் மூலமாக கொல்லப்பட்டனர். குறிப்பாக நிகரகுவாவில் 1850-57 வரையும்,
1856ல் பனாமாவில், 1898ல் ஸ்பெயினுடன், 1903ல்கியூபா, இதன் உச்சகட்டம் கியூபாவின் அரசியல்
சாசனத்தில் பிளாட் சட்டம் என ஒரு திருத்ததை கொண்டு வந்து அதன் மூலம் “நாங்கள் எப்போது
வேண்டுமானாலும் உங்கள் நாட்டு உள்விவாகரத்தில் தலையிடும், யாரும் எதிர்த்து கேள்வி
கேட்கக்கூடாது என்றனர்.
1905ல் ஹேண்டுரஸ்,
1915ல் ஹைத்தி, 1916, 1965 என டொமிக்னியன் குடியரசில் இரண்டு முறையும், 1917ல் மெக்சிகோ,
1961ல் ஈக்வடார், 1964ல் பிரேசில், 1967ல் பொலிவியாவில் சே குவேராவை கொன்றது, 1973ல்
சிலியின் அலெண்டாவை கொன்று ஆட்சியை கவிழ்த்தது, ப்யூர்டோ ரிகோ, 1954ல்குவாதிமாலா, பிலிப்பைன்ஸ்
என தலையிட்டது. அதன் தொடர்ச்சியாக வெனிசூலாவில் 28 மணி நேர இராணுவபுரட்சியை நடத்திட
எல்லா உதவிகளையும் நேரடியாக அமெரிக்கா செய்து சாவேஸ் அவர்களை பதவியிறக்கம் செய்தது.
ஆனால் உழைக்கும் மக்களின் தலைவரை மக்கள் கைவிடவில்லை.. இராணுவத்தோடு களத்தில் இறங்கி
மோதினார்கள். 28 மணி நேரத்தில் இராணுவத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் மக்களே கொண்டு
வந்து சாவேசை ஆட்சியில் அமர்த்தினர். வடவியட்நாம் யுத்தம் நடத்தி மூக்கை உடைத்து கொண்டது.
ஆப்கான், இராக், ஈரான், சிரியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம் என தொடர்ந்து பல நாடுகளின்
உள்விவகாரங்களில் தலையிட்டு லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துவிட்டு
இன்றும் நாட்டை மறுகட்டுமானம் செய்கிறோம் என்கிற பெயரில் அந்த நாடுகளின் வளங்களை அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நேட்டோ நாடுகளும் சேர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர்.
மனித உரிமை மீறலின்
அனைத்து வடிவங்களையும் பரிசோதித்து பார்த்த அமெரிக்க ஏகாதிபத்திய சாத்தான் இன்று வேதம்
ஒதுகிறது.. எந்தளவுக்கு என்றால் சாவேஸ் ன் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய ஒபாமாவின் வார்த்தைகளே
அதற்கு சாட்சி, “சாவேஸ் பதவியேற்ற 1999ல் இருந்து 2001க்குள் 280 சதமான அளவுக்கு வளர்ச்சியை
பொருளாதார நிபுணர்களே வாயடைத்து போகும் அளவுக்கு சாதித்து காட்டியவர்“.. ஒட்டு மொத்த
லத்தீன் அமெரிக்க மக்களின் தலைவராக இருந்தவர் இன்று வளர்முக நாடுகளின் தலைவனாக உயர்ந்தவர்.
அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த ஒபாமா சாவேஸ் மறைவுக்கு பின் வெனிசுலா ஜனநாயக பாதையில்
நடைபோடும் என்று சொன்னால் அதன் உள் அர்த்தம் என்ன? எவ்வளவு மோசமான அணுகுமுறை..

அவர் இறந்தவுடன் இயேசுநாதருக்கு
பின் எங்களுக்கு கிடைத்த மீட்பர் இவர் என அழுதுகொண்டே மக்கள் சொன்னார்கள். இதனால் தான்
பிடலோடு இணைந்து சாவேஸ் உரக்க சொன்னார் ஏகாதிபத்திய காட்டுமிரண்டிதனமா? மனிதநேய சோசலிசமா?
இரண்டில் எதை தென் அமெரிக்கா கண்டத்து மக்கள் தேர்வு செய்ய போகின்றனர் என்ற கேள்விக்கு
ஒரே பதில்தான்.. ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி விட்டு சோசலிசம் மலரும்.. எதிர்காலம் சோசலிசத்திற்கே..
சோசலிசம் நம்முடையதே என லத்தீன் அமெரிக்காவில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாக ஜோஸ்மார்த்தி,
சைமன் பொலிவர், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ வழியில் இதோ சாவேஸ்.