
இந்தியாவில் 18 லட்சம் குழந்தைகள் ஊட்டசத்து குறைவு காரணமாக உயிரிழப்பதாக சுகாதாரத்துறை கூறுகிறது. 38 சதம் பேருக்கு இந்தியாவில் இன்னும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.
குழந்தை பிறக்க ஆயிரம் தேவதைகளையும், தெய்வங்களையும் வேண்டி குடும்பமே தவமிருக்கும், அப்படிப்பட்ட பிரசவ காலத்தில் பெண்கள் படும் அவஸ்தை என்பது, ஆயிரம் தேள்கள் ஒருங்கே கொட்டியது போல் வலி இருக்ககூடிய காலம் பிரசவ காலம், அந்த பிரசவ காலத்தில் 1,80,000 பெண்கள் பிரசவத்தின் போது போதிய ஊட்டசத்து இல்லாத காரணத்தால் மரணமடைகின்றனர்.
பிறந்த குழந்தைகளில் 3 வயதிற்கு கீழே உள்ளவர்களில் 80 சதம் பேர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறந்த குழந்தைகளில் 42 சதம் எடை குறைவாக உள்ளனர். 1.5 மில்லியன் குழந்தைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் நீர் சம்மந்தபட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
30000 பேருக்கு ஒரு மருத்துவர் என தமிழக அரசு சொல்கிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனமோ 500 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை என்கிறது. தமிழக கிராமப்புறங்களில் இன்றும் 51 சதம் பேருக்கு தனி கழிவறைகள் கிடையாது. இதனால் ஏற்படும் நோய்களின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவின் ஒட்டுமொத்த சுகாதார துறை என்பது 81 சதம் தனியார்கள் கையில் உள்ளது. மீதம் உள்ள 19சதம் அரசு நிர்வாகத்திலும் பல்வேறு ஓட்டை உடைசல்களும், நிர்வாக கோளாறுகளும் உள்ளது.
அதனால் தான் 500 பேருக்குஒரு மருத்துவர் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் உள்ள 220 தாலுக்காக்களும், 12618 கிராம ஊராட்சிகளும் உள்ளன. இவற்றில் ஊராட்சிக்கு ஒரு மருத்துவமனை என்றால் கூட தமிழகத்தில் அனைத்து குடியானவனுக்கும் மருத்தவ வசதிகளை கொண்டு சேர்த்து விட முடியும். 220 தாலுக்கா மருத்துவமனைகளை தரப்படுத்தி இருதய அறுவை சிகிச்சைக்கான கருவி, சிறுநீர் கல் உடைப்பு கருவி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் என சுமார் 5 கோடி ரூபாய் செலவாகும், இதற்கான தொழில்நுட்ப உதவியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என நியமித்தாலும் சுமார் 10 கோடிக்குள் முடிந்துவிடும்.
இதனால் அரசுக்கு சுமார் ரூ 2200 கோடி செலவாகும். இது ஸ்டார் கெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகை 628+750+ 413 கோடிகளாகும். நான்கு ஆண்டுகளில் ஒரு தனி நிறுவனத்திற்கு கொடுத்த பணத்தை அரசு நேரடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியிருந்தால் இன்னும் பல லட்சக்கணக்கான மக்களுக்கும், நீண்ட காலத்திற்கும் பயன்பட்டிருக்கும். ஆனால் இதைபற்றிய சிந்தனை அரசிற்கு இல்லை என்பதே உண்மை.
இன்று தமிழக அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் ஆண்குழந்தை பிறந்தால் 3000 ரூபாய் நிர்வாக செலவும், பெண் குழந்தை என்றால் 1500 ரூபாயும் அன்பளிப்பாக வழங்கினால் தான் பிறந்த குழந்தையை தந்தையும், தாயும் பார்க்க முடியும் என்கிற புராண கால அரக்கர்களை போல மருத்துவமனை ஊழியர்கள் சிலர் பெரும் பகுதி மருத்துவமனையில் நடந்து கொள்கின்றனர். ( புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இராணியார் அரசினர் மருத்துவமனையில் தான் இந்த கொள்ளை )
அரசு பேறு கால மருத்துவ உதவித் தொகை என மாதம் ரூ 1000 வழங்கினாலும் ரூ 250 முதல் 400 வரை கமிஷனாக கொடுக்க வேண்டும். எதுக்கு இந்த திட்டம்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஓழுங்காய் பாடுபடு வயக்காட்டில் உன் மதிப்பு உயரும் அயல்நாட்டில் என்று திரைப்படத்தில் வாயசைத்தார் எம்ஜிஆர்.
ஆனால் காலத்துக்கும் உழைத்து உழைத்து கை காலும் தானே மிச்சம், கண்டது என்ன மாமா ? என்ற ஆதங்கத்தில் தான் இந்தியா நாட்டு உழைப்பாளிகளும், தமிழக ஏழை எளிய மக்களும் வாழ்ந்து வருகிறார்கள்.
அனைவருக்கும் சுகாதாரம், நல்ல வாழ்க்கை கேட்டும், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், மருத்துவமனைகளை தரம் மேம்படுத்த கேட்டு வாலிபர்கள் டிசம்பர் 8ல் மறியல் களம் காணப் போகிறார்கள்.